சனி, 3 பிப்ரவரி, 2024

சில்லு சில்லாய் - 20 - பரவசம் - கட்டிடக் காடாய் மாறிவரும் பெங்களூர் - Kempe Gowda பன்னாட்டு விமான நிலையம்

வேறொரு பதிவை தயார் செய்து கொண்டிருந்த வேளையில் இன்று வெங்கட்ஜியின் பதிவில் காங்க்ரீட் காடுகள் என்பதைப் பார்த்ததும் இதைப் பற்றியும், இதற்கு முன்பு அவர் எழுதியிருந்த கங்கா ஆரத்தி பார்த்த கமயம் உணர்வுபூர்வமாகக் கண்களில் நீர் வந்ததையும் எழுதியிருந்ததை வாசித்த போதும் என் அனுபவத்தை எழுதி வைத்திருந்தேன். மற்ற பதிவை அடுத்த பதிவாக ஓரங்கட்டிவிட்டு இன்று இதை தட்டிக் கொட்டிப் போட்டுவிடலாம் என்று இதோ.... 

சில்லு - 1 - பரவசம் 

வெங்கட்ஜியின்  கங்கா ஆரத்தி பதிவை வாசித்து வந்த போது //“ஹர் ஹர் Gகங்கே”, “Gகங்கா மையா கி ஜெய்” என்ற கோஷ சொற்களும் ஆரத்தி பத்தி வாசிக்கும் போதே என்னை அறியாமல் கண்களில் நீர்! ஜனகணமன என்று தொடங்கினாலே என் கண்களில் நீர் வந்துவிடும்! அதுவும் ஜெயஹே எனும் போது! 

உங்களிலும் சிலருக்கு இது நேர்ந்திருக்கலாம். அல்லது மயிர்கூச்சம் புல்லரித்தல் என்று சொல்வோமே அது போன்றும். எனக்கு இப்படிச் சில இடங்களில், நேரங்களில் நேர்ந்ததுண்டு.

ஆனால், நான் வியந்த தருணம் - எந்தவித சத்தமும் இல்லாமல், கோஷங்கள் இல்லாமல்,  கண்களில் கண்ணீர் துளிர்த்ததும், புல்லரித்ததும் என்றால் ஷிம்லா, மணாலி சென்றிருந்த போது இமயமலையைப் பார்த்ததும் கண்களை விரித்துக் கொண்டு இரு  கன்னங்களிலும் கைகளை வைத்துக் கொண்டு அப்படியே ஸ்தம்பித்து நின்றேன். ஹையோ என்ன பிரம்மாண்டம்! நாம் எல்லாம் ஒன்றுமே இல்லை என்ற ஆனந்தக் கண்ணீர். மணாலி போகும் போது பியாஸ் நதியையும் சுற்றிலும் இமயமலைத் தொடரையும் கண்டு பரவச நிலை. சுற்றிலும் மலைத்தொடரும் நதியும் மட்டுமே

சலசலவென்று துள்ளி ஓடும் பியாஸ் நதி. வழி முழுவதும் ஆங்காங்கே மலைகளின் நடுவில் ஆழத்திலும் சில இடங்களில் சாலைக்குச் சமமாகவும் பயணிப்பதைப் பார்க்கப் பார்க்க ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வுடனான மன நிலை. அந்த அமைதி, இயற்கை, இயற்கையின் ஒலிகள் அனைத்தும் இயற்கையை நினைத்துப் பேரானந்தம் கொடுத்த ஒரு ஆன்மீக உணர்வை இங்குச் சொல்லிட வார்த்தைகள் இல்லை. ஆனந்த நிலையிலான கண்களின் நீர் தளும்பல்! 

பனி மூடிய சிகரங்கள். நம் நாட்டின் பெருமை! அழகு! கம்பீரம். எவ்வளவு பார்த்தாலும் அலுக்காத அழகு. பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்ற உணர்வு.காட்சிகளோடு என்னை இணைத்துக் கொண்டு அதில் மூழ்கி ரசித்துக் கொண்டே சென்ற அனுபவம் இன்னும் பசுமையாக மனதில் இருக்கிறது. அங்கு நாம் கொஞ்ச நாட்களேனும் இருந்துவிட மாட்டோமா என்ற ஏக்கமும், ஆசையும், கற்பனையும் இடையே. இரண்டு முறை அப்படிக் கிடைத்த அனுபவங்கள். இனியும் அந்த வாய்ப்பு கிடைத்திடாதா என்ற ஏக்கம் மனதில் இருக்கிறது.


சில்லு - 2 - கட்டிடக் காடாய் மாறி வரும் பெங்களூர் 

சமீபத்தில் கனகப்புரா சாலையில் கண்டது. தில்லி குருகிராமம் போன்று வானைத் தொடும் அளவு பல அடுக்குமாடிகள்! ஒரே வளாகத்தில் 25 அடுக்கு மாடிகள் கொண்ட குடியிருப்புகள், A-Z, அதாவது ஒவ்வொன்றிலும் 25 அடுக்குகள் அப்படி 26!!!  தெய்வமே! 25 மாடிகள்!  மற்றொரு இடத்தில் 15 ஆயிரம் Flat களாம்!  இவ்வளவு குடும்பங்களுக்கும் தண்ணீர் கொடுக்க வேண்டுமே! எங்கிருந்து கொண்டு வருவார்கள்? Bore?

ஒரு காலத்தில் கனகபுரா சாலை முழுவதும் காடுகள். பார்த்துக்கோங்க எவ்வளவு அழிஞ்சுருக்கும்னு. ஆச்சரியம், அரசு எப்படி இப்படியான இடங்களை வழங்குகிறது என்பதும். ஒரு நகரம், மாநகரம், நாடு எனும் போது இவ்வளவுதான் குடியிருப்பிற்கு, இவ்வளவு நிலம் முன்னேற்றங்களுக்கு என்று ஒதுக்கித்தானே திட்டமிட வேண்டும்? நான் ரொம்ப Idealistic ஆகப் பேசுகிறேனோ?! யோசித்துக் கொண்டே பார்த்த போது புரிந்தது. அரசு அங்கு Metro போட்டிருப்பதால் இருபுற நிலங்களும் தனியார் Real Estate Rவிற்கப்பட்டிருக்கும் என்று தோன்றியது.

இயற்கை தெய்வம்! அவ்வப்போது கோபத்தில் சிறு சிறு பகுதிகளாகத் தேர்ந்தெடுத்து தாண்டவம் ஆடுகிறதுதான்! மாபெரும் சக்தி! மனிதர்கள் நாம் அதற்கு எதிராகச் செய்யும் ஒவ்வொன்றையும் கணக்கில் வைத்துக் கொண்டு, தெய்வம் நின்று கொல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறதோ?!


சில்லு - 3 - பெங்களூர் Kempe Gowda பன்னாட்டு விமான நிலையம் / Terminal 2

யுனெஸ்கோவின் Prix Versailles 2023 இன் சமீபத்திய அறிவிப்பு - Kempe Gowda பன்னாட்டு விமான நிலையம் தனித்து நிற்பதாகவும், "உலகின் மிக அழகான விமான நிலையமாக" இருப்பதாகவும் அறிவித்தது. இதன் உட்புற அழகிய பூங்கா போன்ற வடிவமைப்பிற்காக 2023ல் உலகின் சிறப்புப் பரிசும் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பின் முன்னரே நான் இந்த விமான நிலையத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. செடிகள், செயற்கை அருவி, சிற்பங்கள் என்று நிஜமாகவே விமான நிலையமா இல்லை பூங்காவா என்ற வியப்பு!  கீதாவின் மைன்ட் வாய்ஸ். ஹூம், ஒரு காலத்து Garden City இப்ப வெளிய எல்லாத்தையும் அழிச்சுட்டு உள்ளார இப்படி வைச்சு என்ன பயனோ? அதுவும் செயற்கையாக! அப்படிச் சொல்லிக் கொண்டே ஒரு காணொளியும் எடுத்தாச்சு! 

https://youtube.com/shorts/YCehAezCIt4


சில்லு - 4 -  கை வண்ணம்
எப்பொழுதோ போட்ட எம்ப்ராய்டரி - சிறு பகுதி இங்கு - Warli - வார்லி ஓவியம் தெரிந்து கொண்ட புதிதில் வரைந்ததும், அதைச் சுற்றி பாசி வைத்துத் தைத்ததும் இங்கே. இப்போது எல்லாம் எதன் மீதாவது விரிப்பாகக் கிடக்கிறது. அழுக்காகி தோய்த்து தோய்த்து வரைந்தவை இளித்திட நூல்களும் விரிந்து அந்தத் தையலே கோணலாகி....இதை எல்லாம் இப்ப பார்க்கும் போது விவேக்கின் புகழ்பெற்ற வசனம்தான் நினைவுக்கு வரும். இப்போதும் செய்யலாம் தான். யாருக்காக? எதற்காக என்ற கேள்விகளும் கூடவே! பராமரிப்பது சிரமமாக இருப்பதாலும். சமீபத்தில் தைத்ததை வேறொரு பதிவில் படம் எடுத்துப் போடுகிறேன்.

Double herringbone Stitch
Feather Stitch 

வேறொரு பதிவில் நான் கற்றுக் கொண்டவற்றைச் சொல்கிறேன். வேலைப்பாடுகள், வீட்டில் கண்ணில் பட்டால் பகிர்கிறேன். 

முந்தைய பதிவுகளை வாசித்த, கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி! 


----கீதா

 


36 கருத்துகள்:

  1. பெரிய பெரிய கட்டிடங்களை அருகருகே கட்டுவது நல்லதல்ல அது பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும் ஒரு தீவிபத்து ஏற்பட்டால் அதை சமாளிக்க ஃபயர் எஞ்சின் உண்டா? அவ்வளவு உயரத்தில் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி சமாளிப்பார்கள்? அதற்கான தண்ணீர் எங்கே இருந்து கிடைக்கும்? என்பதை எல்லாம் யோஸ்த்து பார்த்துதான் அனுமதி கொடுத்து இருப்பார்களா என்பது சந்தேகமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மதுரை. நலமா?

      இங்கு பல கட்டுமானங்கள் பாதுகாப்புகளைப் பரிசீலிக்காமல்தான் கட்டுகிறார்கள் அனுமதியும் அப்படித்தன வழங்கப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன்னர் இங்கு ஒரு உணவகத்தில் தீ விபத்து நடந்தது. இப்படி விபத்துகள் நடக்கும் போதுதான் துருவி துருவிப் பார்த்து யாரெல்லாம் பணம் வாங்கிக் கொண்டு அனுமதி கொடுத்தாங்கன்னு பார்த்து உடனே சஸ்பென்ட் பண்ணுவாங்க அந்த அதிகாரியை. அது ஓரிரு நாட்கள் அப்புறம் அந்தத் தீ அணைக்கப்பட்டுவிடும்!!! இது தொடர்கதை.

      மிக்க நன்றி மதுரை

      கீதா

      நீக்கு
    2. இந்த மதுரை எங்க போனாரு? எங்கயுமே பார்க்க முடிவதில்லையே... பில்கேட்ஸ் அளவுக்குப் போனதால் எல்லோரையும் மறந்துவிட்டாரா?

      நீக்கு
    3. ஹாஹாஹா நெல்லை, மதுரை பக்கத்துலதானே இருக்கீங்க! ஹிஹிஹிஹி

      அவர் அப்பப்ப காணாமப் போவார் அப்புறம் வருவார்....இப்படித்தான்...

      கீதா

      நீக்கு
    4. மதுரைத் தமிழரின் கருத்து உண்மை.

      நீக்கு
    5. ஆமாம் கில்லர்ஜி இங்கு நம் நாட்டில் கட்டிடம் கட்டும் போது பாதுகாப்புகளை மனதில் கொள்வதே இல்லை. அதற்குக் காரணமும் நீங்கள் அறிந்ததுதான்

      மிக்க நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
  2. பல இடங்களில் இப்படி அடுக்கு மாடி கட்டிடங்கள் - எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் வந்து கொண்டே இருக்கின்றன. அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து இருந்தாலும் கொடுக்க வேண்டியதை கொடுத்தால் அதிகாரிகள் கண்களை மூடிக்கொண்டு அனுமதி கொடுத்துவிடுகிறார்கள் என்பதும் வேதனையான உண்மை.

    எனது பதிவுகள் உங்களுக்கு இப்பதிவின் சில பகுதிகளை எழுத தூண்டி இருப்பது அறிந்து மகிழ்ச்சி. ஆனந்தக் கண்ணீர் - சில சமயங்கள் இப்படித்தான் - இதற்கு விளக்கம் தர முடிவதில்லை.

    பதிவின் பகுதிகள் அனைத்தும் ரசித்தேன். விதம் விதமான கைவேலைகள் - ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வெங்கட்ஜி, ஊழல் மலிந்திருக்கு இந்தக் கட்டுமானத் துறையில். வேதனையான உண்மை. அதனால்தான் இயற்கைக் காட்சிகளை படம் பிடித்து வைத்துக் கொண்டுவிடுகிறேன், ஒரு வேளை அப்பகுதிகள் கட்டிடங்களாகிவிட்டால்?

      ஆஅமாம் அப்படிக் கண்ணீர் வருவதற்குக் காரணம் விளக்கம் சொல்ல முடிவதில்லை. ஆனால் உளவியலில் ஒன்று சொல்கிறார்கள். அதை இன்னும் ஆழமாகத் தெரிந்து கொண்டு இங்கு பதிவில் சொல்கிறேன். அது சரியா என்று நம்மை நாமே தெரிந்து கொள்ளலாம்.

      பதிவின் பகுதிகளை அனைத்தையும், கைவேலைகளையும் ரசித்ததற்கு மிக்க நன்றி வெங்கட்ஜி

      கீதா

      நீக்கு
  3. எனக்கு கண்களில் நீர் ததும்பும் தருணங்கள் 1) நகுமோமு பாடலில் கடைசி சரண வரிகளின் உச்சம், 2) சின்னஞ்சிறு கிளியே பாடலில் கன்னத்தில் முத்தமிட்டாள் பாடலின் 'என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா' பாடலைப் பாடும்போது 3) திருப்பதி பெருமாளின் முன் நிற்கும்போது 4) சமீபத்தில் இரண்டு உறவுகளின் செய்கை கண்டு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் எனக்கும் சில பாடல்கள் கேட்கும் போதும் ஏற்படும் அதைச் சொல்ல விட்டுப் போச்சு. திருப்பதி பெருமாள் முன் நிற்கும் போதும் எனக்கு வந்திருக்கிறது. அதையும் சொல்ல விட்டுப் போச்சு. ஏனென்றால் இமயமலை என்னை ஆட்கொண்டதால்!

      ஓ இரண்டு உறவுகளின் செய்கை - பதிவு வரும்?

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  4. ஆ... இமயமலையைப் பார்த்தீர்களா? பொறாமையோடு வியக்கிறேன், பாராட்டுகிறேன். எப்போது கிடைக்கும் எனக்கு அந்த காட்சி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் இரு முறை பார்த்திருக்கிறேன்....அதன் அருகில் அதன் மேல் பரவசத்துடன் நடந்திருக்கிறேன். காடுகளுடனும், காடுகள் இல்லாத வெறும் மலையாகவும்...பனிச் சிகரங்களுடன்...என்று எப்படிப் பார்த்தாலும் வசீகரிக்கும் மலை. ஆட்கொள்ளும் மலை. எனக்கு அங்கிருந்து வரவே மனதில்லை. அது போன்று Silent valley இங்கு மேற்குத் தொடர்ச்சி மலையில்...மேற்குத் தொடர்ச்சி மலையும் அழகு கம்பீரம் என்றாலும் இமயமலை தனி.

      உங்களுக்கும் சீக்கிரம் கிடைத்துவிடும் ஸ்ரீராம். கொஞ்சம் முயற்சி போடுங்க கிடைச்சிரும்!

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  5. உங்கள் பதிவின் முதல் பகுதியின் கடைசி பாரா முதல் வரியைப் படித்ததும் எனக்கு உடனே 'பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில் திருக்குறள் படிக்கட்டுமா' பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன!

    பதிலளிநீக்கு
  6. சென்னையில் கட்டப்பட்டிருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட அடுக்குகளைக் கொண்ட பெரிய பெரிய காம்ப்ளக்ஸ் வீடுகளைக் காணும்போது மனதுக்குள் பயம் வருகிறது.  'நாம் பெருகிக் கொண்டிருக்கிறோம்;  நாம் படர்ந்து கொண்டிருக்கிறோம்...  இயற்கையை மீறிக் கொண்டிருக்கிறோம்.  !  இவ்வளவு பேர்களுக்கும் தண்ணீர் வேண்டுமே.. நாமோ வான் கொடுக்கும் கொடையை ( வான் கொடுத்ததோ கண்ணில் காணும் ஈரம் என்னும் SPB  பாடல் கேட்டிருக்கிறீர்களோ!) அப்படியே மதிக்காமல், உபயோகிக்காமல் கடலுக்கு அனுப்புபவர்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் பல அடுக்கு மாடிகளைக் காணும் போது மனதிற்குள் பயம் வருகிறது இங்கும் எனக்கு வருகிறது. ஆமாம் அதைச் சொல்லுங்க...வான் கொடை கொடுப்பது போல் தண்ணிய கொடுக்கிறது ஆனா நாம அதை எல்லாம் கடல்ல தள்ளிட்டு அப்புறம் புலம்பல். ஆனா இப்படியே கட்டிடங்கள் பெருகிடுச்சுனா மழையும் நின்றுவிடுமோ என்ற பயமும் இருக்கு ஸ்ரீராம்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  7. விமான நிலைய அழகின் காணொளி கண்டேன். உலகின் அழகிய விமானதளம் என்று பெயர் வாங்கி இருக்கிறதா? பலே!

    எம்ப்ராய்டரி வேலை சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பெங்களூர் டெர்மினல் 2 அப்படிப் பெயர் வாங்யிருக்கிறது.

      //எம்ப்ராய்டரி வேலை சிறப்பு...//

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  8. பதிவின் அனைத்துப் பகுதியும் ரசிக்கும்படி இருந்தது.

    ஒவ்வொன்றும் பல எண்ணங்களை வரவழைக்கிறது. பெங்களூரின் காலநிலை, வெப்ப அளவு வெகுவாக மாறிவிட்டது. இமயமலை... இதோ ஒரு ஞாயிறு பதிவு தயார் செய்துவிடுகிறேன்.

    கைவண்ணம் அருமை.

    பெங்களூர் டெர்மினல்... புதிய உறவை முதன் முதலில் காணச் சென்றிருந்த சமீபத்தைய நினைவு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நெல்லை முதல் வரிக்கு

      பெங்களூருக்குக் குளிர் விட்டுப் போச்சுன்னு ஒரு பதிவுவுக்குப் பிள்ளையார்ச் சுழி போட்டு வைச்சேன். ரொம்பவே மாறிவிட்டது நெல்லை. அதுவும் இப்ப நான் இங்கு வந்த பிறகு இந்த 5 வருடங்களில் அதுவும் போன வருடத்தை விட இந்தவ் வருடம் இப்படி மாறியதில் ரொம்ப ஆச்சரியம். எங்க போய்ட்டிருக்கோம் என்று தெரியலை.

      இமயமலை - ஞாயிறு தயார் செய்துடுங்க ....நான் எடுத்த படங்கள் மேலே பரணில் இருக்கின்றன. அதை எடுத்து புகைப்படம் எடுத்து ஒரு நாள் பகிர வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். பார்ப்போம்.

      கைவண்ணம் அருமை//

      மிக்க நன்றி நெல்லை

      பெங்களூர் டெர்மினல்... புதிய உறவை முதன் முதலில் காணச் சென்றிருந்த சமீபத்தைய நினைவு வருகிறது.//

      ஓஹோ!!! புரிகிறது!!!

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    2. என்னது...நீங்களும் இமயமலைக்குப் போயிருக்கீங்களா? இது என்ன புதுச் செய்தி... முன் ஜென்ம நினைவுகள்லாம் ஒவ்வொண்ணா வருதா?

      நீக்கு
    3. ஹாஹாஹா நெல்லை பல கருத்துகளிலும் குறிப்பா வெங்கட்ஜி பதிவுகளில் கூவிட்டே இருந்தேனே....அதெல்லாம் ஆச்சு பல வருஷங்கள்....Rohtang tunnel - Keylong ஐ இணைத்து இப்ப வந்திருக்கே....அதெல்லாம் வரும் முன்னரே....அது போல முதன் முறை மணாலி போனப்ப, Kullu Manali tunnel இல்லை. ஷிம்லா மணாலி போய்ப் பாருங்க நெல்லை. செமையா இருக்கும். முதல் முறை இந்த குகை எல்லாம் இல்லாததால் முழு காட்சிகள். இரண்டாமுறை போனப்ப அப்பதான் கட்டிட்டுருந்தாங்க ஒரு பகுதி கட்டிய பகுதி வழியா போனாக் கூட எனக்கு சுற்றிலும் காட்சிகள் காண முடியலையேன்னு வருத்தமாக இருந்தது. இந்த டனல் இல்லாமல் போகும் பாதை இருக்கா என்று தெரியவில்லை. ஆராய வேண்டும்.

      அது போல இப்ப Rhotang tunnel வந்திருப்பது போக்குவரத்திற்கு மிகவும் சௌகரியமா இருக்கும் நிறைய கட்டுப்பாடுகள், இத்தனை வண்டிகள்தான் செல்லலாம் என்று இருப்பதாகத் தெரிகிறது இன்னும் விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். கீலாங்க் பகுதிக்குச் சட்டென்று சென்றுவிட முடியும் என்று தெரிகிறது. ஆனால் எனக்கு ப்ழைய சாலை வழி என்றால் சுற்றிலும் காட்சிகளைக் கண்டு கொண்டே செல்லலாம். இப்போது எப்படி போக்குவரத்து என்று தெரியவில்லை.

      இரண்டாவது முறை சென்ற போது நாங்க மட்டும் என்பதால் நானும் மகனும் யாரும் டக்கென்று சுற்றுலாப்பயணிகள் போகாத பகுதிகளைத் தேர்ந்தெடுத்துச் சென்றோம். இப்ப அவை எல்லாம் சுற்றுலாத்தலங்களாகிவிட்டன.

      என்னை மிகவும் ஈர்த்தது ஹிமாச்சலப்பிரதேசம் மாநிலம் மட்டுமல்ல - இமயமலைப் பகுதிகள் அனைத்தும். பல ரகசியங்களை, பொக்கிஷங்களைத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் பகுதி! அழகு எவ்வளவோ அவ்வளவு ஆபத்தும் நிறைந்த பகுதி!

      கீதா

      நீக்கு
  9. ஹலோ எப்.எம் பண்பலையில் கேல்வி கேட்டார்கள் சமீபத்தில் நீங்கள் போன சுற்றுலா தளம் என்ன , வேறு எங்கு போக பிரியபடுகிறீர்கள் என்று. ஒவ்வொருவரும் அழகாய் சொன்னார்கள். நிறைய பேர் கொடைக்கானல், ஊட்டி சொன்னார்கள்.
    உங்களை கேட்டு இருந்தால் இப்போது இங்கு சொன்னதை மீண்டும் சொல்லி
    இனியும் அந்த வாய்ப்பு கிடைத்திடாதா என்ற ஏக்கம் மனதில் இருக்கிறது. என்று சொல்லி இருப்பீர்கள்.
    கற்பனையில் உங்கள் இனிமையான குரலில் கேட்டு மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக கோமதிக்கா...இமயமலையின் கம்பீர அழகை ஒரு சிறு பகுதிதான் பார்த்திருக்கிறேன். இன்னும் இருக்கிறதே அங்கு. ஹிமாச்சல் மாநிலத்திலேயே பார்க்க நிறைய இருக்கு. அதோடு ஹரித்வார், ரிஷிகேஷ் கங்கோத்ரி அப்பகுதிகளில்....பார்க்க ஆசை. அப்பகுதிளோடு சற்று தள்ளிச் சென்று பார்த்து அனுபவிக்க ஆசை. அதே போன்று கைலாயம் மானச்ரோவர் ஆசை உண்டு. அதுக்கென்ன நீண்டு கொண்டே செல்லும். ஆனால் எதிர்பார்ப்புகள் இல்லா வாழ்க்கையையும் பழகிக் கொள்ளும் பயிற்சியும்....

      நீங்க கேதார்நாத் பக்கம் போயிருக்கீங்களே...அப்பகுதி படங்கள் கூடப் போட்டிருந்தீங்க....

      //கற்பனையில் உங்கள் இனிமையான குரலில் கேட்டு மகிழ்ந்தேன்.//

      ஆஹா, மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
    2. ஹரித்துவார், ரிஷி கேஷ் கங்கோத்திரி , யமுனோத்திரி கைலாயம், மான்சோரவர் எல்லாம் இறைவன் அருளால் பார்த்து விட்டோம். கேதார்நாத் போய் வந்து விட்டோம்.

      நீக்கு
    3. ஆமா கோமதிக்கா நீங்க போய்ட்டு வந்திருக்கீங்கன்னு தெரியும். பதிவுகளில் சொல்லியிருக்கீங்க கருத்திலும்.

      மீண்டும் வந்ததுக்கு மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  10. காடு எல்லாம் கட்டிங்களாய் மாறி வருவ்தால் காட்டு யானைகள் நாட்டுக்குள் வந்து விடுகிறது. நேற்று ஏதோ ஊரில் யானை கூட்டமாக வந்தையும் விரட்டிய பின் ஒரு யானை மட்டும் அனைத்தையும் சேதபடுத்தியதை தொலைக்காட்சியில் காட்டினார்கள். அடுக்கு மாடி குடியிறப்பைப்பார்த்தால் தலை சுற்றுகிறது எனக்கு. எங்கள் குடியிருப்பு நான்கு மாடி தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், யானைகள், புலிகள், சிறுத்தைகள் எல்லாம் உள்ளெ வரத்தானே செய்யும் கோமதிக்கா. இங்கும் இப்போது வருகின்றன. பாவம் அவை சேதப்படுத்தின என்றால் அவற்றிற்குக் கோபம் அவங்க இடம்தானே ...

      ஆமாம் அடுக்கு மாடிக் குடியிருப்பைப் பார்த்தால் எனக்கும் தலை சுற்ற்ம்..கூடவே பயமாவும் இருக்கும். குருகிராமில் என் தங்கை வீட்டு மாடி 14 வது மாடி. பால்கனியில் நின்றால் சுற்றிலும் இன்னும் உயரமான மாடிகள் கொண்டவற்றைப் பார்க்கறப்ப அதுவும் அடர்த்தியாகச் சுற்றிலும் மாடிகள்...பார்க்கறப்ப ஒருவித பயம் வரும்...இவங்க பால்கனில ருது கீழ பார்க்கவும் பயமா இருக்கும்..திறந்த பால்கனி.ஆனா அங்குதான் துணி உலர்த்த வேண்டும் பால்கனியிலிருந்து வெளிப்புறம் நீண்ட கம்பிகளில் துணி உலர்த்தும் கம்பி இருக்கும் அதில் உலர்த்த வேண்டும் பயமா இருக்கும். அந்த பால்கனி எத்தனை பேரைத்தாங்கும் என்றெல்லாம் கற்பனை வரும்.

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  11. காணொளி அருமை. இயற்கையை அழித்து செயற்கை செடி வளர்ப்பு என்ன செய்வது! Feather Stitch பள்ளியில் கற்றுக் கொண்டேன், அம்மாவும் சொல்லி தந்தார்கள் உங்க்ள் கைவேலை நன்றாக இருக்கிறது. பன்முக திறமையானவர் கீதா நீங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளியை ரசித்ததுக்கு நன்றி. ஆமாம் வெளியில் அழிச்சிட்டுருக்காங்க. உள்ளே இப்படி. முரண் இல்லையா..

      ஆமாம் கோமதிக்கா அப்போ எல்லாம் பள்ளியில் இப்படி தையல்கலைகள் கற்றுக் கொடுத்ததுண்டு. இதெல்லாம் நம் மனம் relaxed ஆக வழி வகுத்த வகுப்புகள். ஓவியம் வரைதல் இப்படி எல்லாம் இருக்குமே. உங்க அம்மாவும் சொல்லிக் கொடுத்தது நல்ல சந்தோஷமான விஷயம் என்பதோடு நல்ல நினைவுகள் இல்லையாக்கா.

      பன்முகத் திறமை எதுவும் இல்லை கோமதிக்கா. அது உங்களின் அன்பின் வெளிப்பாடு.

      நான் உண்மையா சொல்லணும்னா ஒரு வசனம் சொல்வாங்களே தமிழில் நுனிப்புல் மேய்தல் என்று அப்படித்தான். ஆங்கிலத்தில் சொல்வதென்றால் jack of all trades and master of none அப்படின்னு அப்படித்தான்.

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
    2. ஆம் நாம் இயற்கையை அழித்து விட்டு செயற்கையை உருவாக்கி அதற்கு பரிசு பெறுவது வேடிக்கைதான்...

      நீக்கு
    3. ஆமா கில்லர்ஜி. அதேதான்.

      மிக்க நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
  12. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தங்கள் எண்ணங்களாய் சில்லு, சில்லுக்கள் கலகலவென சலசலத்த விதம் அருமை.

    எனக்கும் நாட்டுப்பண் பாடும் போது இறுதியில் கண்கள் கலங்கும்,. மனதாற இறைவனை காண வேண்டுமென நினைக்கும் போது அவ்விதமே சந்திக்கும் பாக்கியம் கிடைக்கும் போது மெய்சிலிர்த்த அனுபவங்களும் உண்டு. சென்ற தடவை ஸ்ரீ ரங்கநாதனை தரிசித்த அனுபவத்தை இன்னமும் மறக்க இயலவில்லை. நினைக்கும் போதெல்லாம் மெய்சிலிர்க்கிறது.

    தாங்கள் இமயமலை பகுதிகளுக்கு சென்று வந்த அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி. பனி சூழ்ந்த இடங்களை தங்களின் அருமையான எழுத்தினால், எங்களுக்குள்ளும் நினைவுகளாக கொண்டு வந்து விட்டீர்கள். மறுபடியும் தங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கட்டும்.

    பெங்களூரில் அடுக்கு மாடி கட்டிடங்கள் நிறைய வந்து விட்டன. எங்கு போனாலும், கட்டுமானங்கள் கட்டி முடித்த அடுக்கு குடியிருப்புக்கள் என மக்கள் வெள்ளந்தான். நீங்கள் சொல்வது போல் தண்ணீர் தட்டுப்பாடு கூடிய விரைவில் ஆக்கிரமித்து கொண்டு
    விடும் போலும்..! .என்ன செய்வதோ ?

    விமான நிலைய காணொளி கண்டேன். இப்போது முன்னை விட அழகாக உள்ளதென சென்ற வாரம் சென்று வந்த என் மகன் குடும்பம் சொன்னார்கள்.

    /கீதாவின் மைன்ட் வாய்ஸ். ஹூம், ஒரு காலத்து Garden City இப்ப வெளிய எல்லாத்தையும் அழிச்சுட்டு உள்ளார இப்படி வைச்சு என்ன பயனோ? அதுவும் செயற்கையாக!/

    ஹா ஹா ஹா.. அதானே...! பெங்களூரில் வெளியில் இருந்த குளுமைகள் எப்போதோ போயாச்சு.. இனி இதற்காக தினமும் ஏர்போர்ட் செல்ல முடியுமா.. ?

    உங்கள் கைவண்ணங்கள் மிக அருமையாக உள்ளது. பாராட்டுக்கள். இவ்வளவு திறமைகளை கற்று உள்ளீர்கள் என நினைக்கும் போது வியப்பாக உள்ளது. தொடர்ந்து எம்பிராய்டரி செய்யலாமே.... கை தேர்ந்த தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வதில் தவறில்லையே.. தங்களின் தொடர்ந்த கைவண்ணங்கள் காண ஆவலாக உள்ளேன். பகிருங்கள். தொடர்கிறேன் சகோதரி.

    இந்தப்பதிவுக்கு வருவதில் கொஞ்சம் தாமதமாகி விட்டது. தவறாக நினைக்க வேண்டாம்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கமலாக்கா எனக்கும் பல தருணங்கள் அப்படிக் கண்ணில் நீர் துளிர்த்து மெய் சிலிர்த்து...இங்கு ஒரு சிலதுதான் சொல்லியிருக்கிறேன்,

      பன்னாட்டு விமான நிலையம்தானே ஆமாம் தொடங்கிய போதே நம்ம நடிகர் மாதவன் அதைக் காணொளி எடுத்துப் போட்டிருந்தார். அதன் பின் தான் எனக்குக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அடிக்கடிச் சென்று வருபவர்களுக்கு வித்தியாசம் தெரியும்தான்.

      அக்கா அங்கு அடிக்கடி சென்றாலும் கூட அது செயற்கைக் குளிரூட்டப்பட்ட இடம் தானே. பங்களூர் இயற்கைக் குளிரிலிருந்து விலகி விட்டது என்றே சொல்லலாம். அது பற்றி வேறொரு பதிவில் சொல்கிறேன்.

      கைவண்ணங்களை ரசித்ததுக்கு மிக்க நன்றி கமலாக்கா. போட்டாலும் பராமரிக்க வேண்டுமே....அதனால்தான் போடுவதில்லை. நேரம் அதற்கு நிறைய ஆகும் அக்கா.

      அக்கா தாமதமாகிவிட்டதுன்னு எல்லாம் எதுவும் சொல்லவேவேண்டாம் இங்குதானே பதிவு. அதனாலென்ன,

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  13. எங்கள் டவர் (இப்போல்லாம் இப்படித்தான் குறிப்பிடுகிறார்கள்) 18 மாடி. இப்படி 3. பிறகு வந்ததெல்லாம் 24, 28, 32 என்று கூடிக்கொண்டுபோகிறது.

    இன்றைக்கு வெளியில் பயங்கர வெயில் (உடனே சென்னை ஆட்கள் வந்துடப் போறாங்க. உங்களுக்கு வருஷம் முழுவதும் வெயில்). இனி 3 மாதம் ரொம்பவே கஷ்டமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா!!ஹாஹாஹாஹா நெல்லை கோபுரம் கோபுரமா கட்டினா டவர்னுதானே சொல்வாங்க...ஆமாம் கூடிக் கொண்டே போகிறது.

      பங்களூருக்குக் குளிர் விட்டுப் போச்சு வெயில் தான் அதிகமா இருக்கு. சென்னை ஆட்கள் உள்ளூர கொஞ்சம் ஹப்பா பெங்களூரும் அப்படி ஆகிவருதேன்னு கொஞ்சம் திருப்திப்பட்டுப்பாங்க!!!!!!!! ஆமாம் இந்த கோடைகாலம் கொஞ்சம் பயமதான் இருக்கு

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  14. தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய காவிரித் தண்ணீரைத் தானே இப்போது பெங்களூர் நகரத்துக்கு செலவழிக்கிறார்கள்!

    பதிலளிநீக்கு