செவ்வாய், 30 ஜனவரி, 2024

துபாய் நாட்கள் - மூன்றாம் நாள் - 28-10-2023

====> துபாய் நாட்கள் முதல் நாள் - துபாய் நாட்கள் இரண்டாம் நாள்<==== 

கில்லர்ஜி இந்தியாவிற்கு வந்துவிட்டதால், (இந்தப் பயணத்தின் போது இந்தியாவில் இருந்தார். தற்போது இதை எழுதும் சமயம் அபுதாபியில் இருக்கிறார் என்பதை அறிகிறேன்) நம் சகோதரி பதிவர் மனோ சாமிநாதன் அவர்கள் அச்சமயம் தஞ்சையில் இருந்ததாக அறிந்து கொண்டேன். இறை அருள் கிடைத்தால் அபுதாபியிலுள்ள தம்பி பரிவை சே குமாரைக் காண வேண்டும் என்ற ஆவல். அலைபேசியில் பேசினோம். அபுதாபி நகரத்திற்கு வரும் போது கூப்பிட்டு அவருக்கு வரவோ, எனக்கு அவர் இருக்கும் பகுதிக்குப் போகவோ முடிந்தால் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து கிளம்பினேன். 1

ஜமால் வீட்டிற்கு மெட்ரோவில் சென்ற போது

மெட்ரோவில் யூனியன் ரயில் நிலையத்திலிருந்து சிவப்பு நிற வழித் தடத்தின் இறுதி மெட்ரோ நிலையமான சென்டர் பாயின்ட் அருகில்தான் எங்களுக்கு அங்கு உதவிய நண்பர் ஜமால் அவர்களின் வீடு. மெட்ரோ நிலையத்தில் இறங்கி அவரது மகன் ஆமீர் ஓட்டி வந்த வேனில் ஏறி அவரது வீட்டை அடைந்தோம். 2

அவரும் அவரது மனைவி ஹஸீனாவும் அரசு மருத்துவ மனையில் பணிபுரிகிறார்கள். மகள் ஹன்னா தன் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அங்குதான் இருக்கிறார்கள். மூத்த மகனும் இரண்டாவது மகனான ஆமீரும், ஜமால் அவர்களது சகோதரர் நடத்தும் “Dive Tech” – டைவ் டெக் எனும் கப்பல் பராமரிப்பு நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள். (அதைப் பற்றி அடுத்த 4 ஆம் நாள் பகுதியில் சொல்கிறேன். அன்றுதான் Dive Tech – டைவ் டெக் பார்த்தோம்) இரண்டு கடைக்குட்டிகள் 10 மற்றும் 9 ஆம் வகுப்பில் அங்கு பயில்கிறார்கள். 3

அன்று எங்களுடன் ஜமால், ஹஸீனா, மகள் ஹன்னா அவரது இரண்டு குழந்தைகள் கூடவே தேரோட்டியாக ஆமீர் எல்லோருமாக அபுதாபி கிரான்ட் மசூதிக்குப் பயணமானோம். 4

ஜமால் அவர்களின் மகன் ஆமீர் ஓட்டி வந்த Van

துபாய் நகரின் வானளாவி நிற்கும் கட்டிடங்கள் - கீழே பதிவின் தொகுப்புக் காணொளியில் இப்பகுதி ஏதோ 3D படம் போன்று இருப்பதைக் காணலாம்

Van ல் பயணித்த போது துபாய் நகரின் வானளாவி நிற்கும் கட்டிடங்களைக் காணத்தான் எத்தனை அழகு! ஏதோ ஒரு கவிஞர் கற்பனையில் கண்ட கான்க்ரீட் காடுகள் போல்தான் இருக்கிறது. 5

தூரத்தில் தெரியும் துபாய் Frame - ஃப்ரேம் - 2 செகன்ட் காணொளிதான்

வழியில் 150 மீ உயரமுள்ள துபாய் Frame - ஃப்ரேமை தூரத்தில் காண நேர்ந்தது. அதன் மேல் ஏறினால் இரண்டு Tower களுக்கும் இடையிலான கண்ணாடிப் பாதையில் நடக்கலாம். ஒரு சாதாரண மீனவர்களின் கிராமமாய் இருந்த துபாய் எப்படி உலக வியாபார மையமாக மாறியது என்பதை விளக்கும் கண்காட்சி மையமும் உண்டென்று சொல்லப்படுகிறது. அங்குச் செல்ல முடியுமா என்று தெரியவில்லை.  - 6

Grand Mosque போகும் வழியில் தொழிற்சாலை

Last Exit – Mad X

“Last Exit – Mad Xவித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட சுற்றுலாத்தலம் போன்ற நெடுஞ்சாலை உணவகம். 

போகும் வழியில், “Last Exit” எனும் ஓரிடம். பாலைவனத்தின் நடுவே உள்ள இந்த “Last Exit – Mad X எனும் இடம் நம் ஊரில் நெடுஞ்சாலைகள் ஓரத்தில் இருக்கும் உணவகம் போன்ற ஒன்றுதான். ஆனால் மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட சுற்றுலாத்தலம் போன்ற உணவகம். ஏதோ ஹாலிவுட் படத்துக்கான ஒரு படப்பிடிப்பு இடம் போல் காட்சியளித்தது. சாப்பாடு Truck-ட்ரக்குகளும், ராட்சச வாகனங்களும் நிறைந்த ஏதோ ஒரு மாயாஜால இடம் போல் இருந்தது. அது ஒரு வித்தியாசமான அனுபவம். சுவர் நிறைய ஒட்டப்பட்ட வித்தியாசமான போஸ்டர்களும், தொங்கவிடப்பட்ட வாகனங்களும் வாகனங்களின் பாகங்களும் காணவே ஒரு திகில் காட்சி அமைப்பு போன்று இருந்தது. 7

மதியம் போல் அபுதாபி Grand Mosque (கிரான்ட் மசூதி) அடைந்தோம். பாதுகாப்பு பரிசோதனை முடித்து காண்பதற்கறிய காட்சிகளைக் கொண்ட அந்த மசூதியைக் கண்டு வியந்தோம். 8

அபுதாபியிலுள்ள, 2007 ல் திறக்கப்பட்ட Sheikh Zayed Grand Mosque ஷேக் சையது கிரான்ட் மாஸ்க், 40,000 பேர் தொழுகை நடத்த வசதியுள்ள ஒரு மசூதி. 107 மீட்டர் உயரமுள்ள நான்கு minarets மினாரெட்களை (கோபுரங்கள்) கொண்டது. 1,80,000 சதுர அளவு பரப்பளவைக் கொண்டது. 33 அடி விட்டமும் 49 அடி உயரமுள்ள அலங்கார விளக்கின் அழகை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவ்வளவு அழகு. 8 (காணொலியில்)

அதன்பின் அபுதாபியின் அழகை காரிலிருந்தே கண்களிலும் மனதிலும் சேமித்தோம். என் அலைபேசியிலும். (காணொளியில் Van ல் நகர உலாவைக் காணலாம்)

வித்தியாசமான வடிவில் இருந்த பைன் ஆப்பிள் கட்டிடம், நாணய வடிவில் இருந்த Coin கட்டிடம் இவற்றைக் கீழே காணொளியில் காணலாம்.

காலிகட் உணவகத்தில்

அபுதாபி டவுனில் 3 மணியளவில் ஒரு காலிகட் உணவகத்தில் நல்ல உணவு உண்ட பின் பரிவை சே குமார் அவர்களை அழைத்தேன். இருவருக்கும் இடையே உள்ள தூரமும், நாங்கள் பயணம் செய்ய வேண்டிய நீண்ட தூரமும், இடைப்பட்ட நேரமும் சதி செய்தது. மிகவும் வருத்தத்துடன் இயலாமைக்கு வருந்தி அலைபேசியில் நானும் குமாரும் விடை பெற்றோம். 12

Jebel Hafeet - மலையின் இரவுக் காட்சிகள்

Jebel Hafeet - மலையின் இரவுக் காட்சிகள்

மூன்று மணி நேர பயணத்திற்குப் பின் அல் அயின் – Al ain ல் உள்ள Jebel Hafeet (Al Ain Part of Abu Dhabi) ஜெப்பல் ஹஃபிட் (அல் எய்ன் அபுதாபியின் ஒரு பகுதி) ஐ அடைந்தோம். மலை உச்சியில் ஆக்ரோஷத்துடன் வீசும் காற்று கீழே விண்மீன்கள் சிதறிக் கிடப்பது போல் நகரங்களின் மின் விளக்குகள். காண்பதற்கு அரிய காட்சி. 13

1959 ஆம் ஆண்டு டென்மார்க்கைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி 5000 ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் செம்மையாக வாழ்ந்த இடமாம் அது. ஜெப்பல் ஹஃபிட் மலை உச்சியில் அதிக நேரம் செலவிடவில்லை. 14

மலையிலிருந்து இறங்கி கிரீன் முபர்ஜராஹ் Green Mubarzzarah எனும் இடத்தை அடைந்தோம். ஒரு சிறிய நீரோடை ஹஃபீத் மலையிலிருந்து உற்பத்தியாகி ஓடும் நீரோடை. அரபு நாட்டவரின் சுற்றுலா மையம் என்று தோன்றியது. குடும்பத்துடன் இருக்கைகள் மற்றும் உணவுடன் வந்து அவரவர்களது வாகனத்திற்கு அருகிலும், கிடைத்த இடத்திலெல்லாம் அமர்ந்து மகிழும் மக்கள் வெள்ளம். நீரோடை என்னவோ மிகச் சிறியதுதான் என்றாலும் அதற்கு மக்கள் கொடுக்கும் முக்கியத்துவம் அளவற்றது. 15 (இப்பகுதி காணொளியில். இரவு என்பதால் தெளிவாக எடுக்க முடியவில்லை)

ஜமால் அவர்களின் குடும்பத்தினருடன் நாங்கள்

அதன் பின் ஜபல் ஹஃபீத்துக்கும் – Jabal Haffeeth, கிரீன் முபாஜராஹ் – Green Mubazzarah கிற்கும் விடை சொல்லி, ஜமாலவர்களின் குடும்பத்தினரை அவர்கள் வீட்டில் இறக்கிய பின் ஆமீர் எங்களை நாங்கள் தங்கியிருந்த மெலடி க்வீனில் – Melody Queen – சேர்த்தார். 16

காலை 9 முதல் இரவு 1 மணி வரை வாகனத்தை ஓட்டிய ஆமீரின் உதவி பேருதவி. மறு நாள் காலை மீண்டும் எங்கள் பயணம் வேறு திக்கில். எங்கு? காத்திருங்கள். வருகிறேன் உங்களையும் என்னோடு அழைத்துச் செல்ல. 17



https://youtu.be/7APRT4dBbBU



----துளசிதரன்

29 கருத்துகள்:

  1. UAE என்றால் துபாய்-அபுதாபி சாலைப் பயணம், பாலைவனத்தில் கார் பயணம், இரவு பெண்களின் இடை ஆட்டம், தேரா -பர்துபாய் இடையே போக்குவரத்துப் படகு, இரவு பெரிய படகுப்பயணம், தங்கக் கடைகள், உலகின் பெரிய கட்டிடம், துபாய் மால், அங்கு பேருந்துப் பயணம், கோவில்கள் என எத்தனையோ முக்கியமான இடங்கள் துபாய் மியூசியம் உட்பட இருக்கின்றன. அலைன் போன்றவை முக்கிய இடங்கள் அல்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத்தமிழன் நீங்கள் சொல்லியிருக்கும் இடங்களுக்குப் போக முடியவில்லை. 5 நாட்களில், இரண்டு நாட்கள் தூர யாத்திரை செய்து, சில இடங்கள் துபாயிலுள்ள இடங்கள் மூன்று நாட்கள் என்று அவ்வளவுதான் முடிந்தது. துபாய்க்கு மட்டுமே 5 நாட்கள் போதாது என்பதுதான் உண்மை அல்லவா. பல இடங்களும் மிஸ் ஆகிவிட்டது.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன்

      துளசிதரன்

      நீக்கு
    2. அல் அயின் க்குப் போனால் பல இடங்களைக் காணலாம் என்று நினைத்துதான் அல் அய்னுக்குப் போக முடிவு செய்தோம். ஆனால் இரவாகிவிட்டதால் பல இடங்களும் பார்க்க முடியாமல் போய்விட்டது. போகும் போதும் அபுதாபியிலிருந்து கிளம்ப ஏறத்தாழ மாலை 6 மணி ஆகிவிட்டது. 9 மணி போல அந்த மலைக்குச் சென்று அங்கு 1 மணி நேரம் செலவிட்டு திரும்ப வரும் போது இரவாகிவிட்டதால் ஒன்றும் பார்க்க முடியாமல் ஆகிவிட்டது.

      துளசிதரன்

      நீக்கு
  2. டிராகன் மால் துபாய் முக்கிய இடம். முத்து போன்றவை குறைந்த பணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், ஆனால் டிராகன் மாலுக்குச் செல்ல முடியவில்லை. இது மாதிரியான பல இடங்களும் மிஸ் ஆகிவிட்டன. என்ன செய்ய?

      கருத்திற்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன்

      துளசிதரன்

      நீக்கு
  3. எல்லாம் நான் பார்த்த இடங்கள் என்றாலும் தங்களது வர்ணனையில் புதிதாக தோன்றுகிறது.

    படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது. தொடர்ந்து வருகிறேன்....

    அபுதாபிக்கு வந்தும் நமக்கு அலைபேசியில் அழைக்கவில்லையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன செய்ய கில்லர்ஜி, நீங்கள் ஒரு வாரம் முன்பு கிளம்பிச் சென்றிருந்தால் நம் சந்திப்பு நிகழ்ந்திருக்கும். இருப்பினும் நீங்கள்தானே குமார் அவர்களின் அலைபேசி எண் கொடுத்து உதவினீர்கள். இல்லையேல் குமாரிடம் பேசும் வாய்ப்பு கூடக் கிடைத்திருக்காது.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி கில்லர்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அழகான படங்கள், துபாயை பற்றிய நல்ல விவரணைகளுடன் பதிவை நன்றாக ரசித்துப் படித்தேன். நிறைய விஷயங்களை தங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன்.

    துபாயில் தங்கள் நண்பர் மற்றும் அவர் குடும்பத்தினர் உதவி தங்களுக்கு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. நட்புகளுடன் எடுத்துக் கொண்ட படங்கள் நன்றாக உள்ளது. அவ்வளவு தூரம் சென்றும், பதிவுலக நட்பான சகோதரர் பரிவை. குமார் அவர்களை தங்களிருவரின் நேரமின்மை காரணமாக சந்திக்க முடியாமல் போனது கொஞ்சம் வருத்தம்தான்.

    அங்குள்ள உயரமான பிரமாண்ட கட்டிடங்கள் திகைக்க வைக்கின்றன. அந்த ஊரின் சுத்தமும் உணவகத்தின் பிரம்மாண்டமும் மனதை கொள்ளை கொள்ளும் அழகு. காணொளிகளிலும் துபாயை உங்களுடன் சுற்றிப் பார்த்த உணர்வு கிடைத்தது. பதிவை தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன செய்ய? அந்தச் சந்திப்பு நிகழ்ந்திருந்தால் அந்தக்காணொளியும் படமும் வந்திருக்கும். நாம் நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே. ஆம் நீங்கள் சொல்வது போல் அந்த ஊர் வித்தியாசமானதுதான் அதன் அழகும். மகிழ்ச்சிநீங்களும் காணொளியில் அதைக் கண்டு களித்தது மகிழ்ச்சி. ஆம் எங்களுக்கு அங்கு உதவி கிடைத்ததால் எளிதாகச் சுற்றிப் பார்க்க முடிந்தது என்றும் சொல்வேன்.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்

      துளசிதரன்

      நீக்கு
  5. நீங்கள் பார்த்த இடங்களை விளம்பரத்தில் காட்டுவது போல அல்லது ட்ரெய்லர் ஓடுவது போல புகைபபடங்களுடன் அறிமுகப் படுத்தி செல்கிறீர்கள்.  பார்த்த உங்கள், நெல்லை, தேவகோட்டைஜி கண்களுக்கு விவரம் புரியும்.  நான் ஆ வென்று வாய் பிளந்து பிரமித்துப் பார்த்து வருகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி காணும் போது ஓர் உணர்வு ஏற்படும்தானே. நாம் நேரில் காண்பது போன்ற ஓர் உணர்வு. அதன் பின் நேரில் காணும் போது அதுதனி உணர்வு.

      காணொளியில் புகைப்படங்களுடன் காணொளிகளும் கொடுத்திருக்கிறேன் அதையும் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்

      துளசிதரன்

      நீக்கு
  6. பாலைவனப் பிரதேசமாக இருந்தாலும் ஏதோ கேரளாவுடன் நெருங்கிய தொடர்புடைய இடம் போல தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சலாலா (ஓமன்) க்குப் போய்ட்டீங்கன்னா, கேரளா மாதிரியே அச்சு அசலா இருக்கும். பொதுவா எமிரேட்சில், மலையாளிகள் அதிகம், அதனால் அவங்களுடைய உணவகங்களும் அதிகம்.

      நீக்கு
    2. ஆமாம் நீங்கள் சொல்வது போல அங்கு ஒரு நல்ல சதவிகிதத்தில் கேரள மாநில மக்கள் அங்கு இருப்பதும் ஒரு காரணமாக இருக்குமோ என்னவோ.எங்கும் மலையாளம் பேசுபவர்கள் நிறைய இருக்கிறார்கள். அதுவும் காரணமாக இருக்குமாம்

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்

      தூளசிதரன்

      நீக்கு
    3. ஓ சலாலா அப்படிப்பட்ட இடமா? அரபு நாடுகளில் அப்படிப்பட்ட நாடும் உண்டு இல்லையா? செழுமயான இடங்கள்.

      துளசிதரன்

      நீக்கு
  7. மீனவர்களின் மீன்பிடி துறைமுகம்-கிராமமாக இருந்த இடம் வளர்ந்து இபப்டி ஆனது என்கிற வரி பிரமிப்பைதான் தருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1971ல்தான் அது நாடாக ஆனது. (அபுதாபியின் ஷேக் சயிது அவர்கள் ப்ரெசிடண்ட்). கத்தார், ஒரு சாதாரண, பலராலும் புறக்கணிக்கப்பட்ட இடம். ஆரம்பத்தில் அதையும் UAEஉடன் எடுத்துக்கோங்க என்ற ஆஃபர் வந்தபோது அப்படிச் செய்யவில்லை. இப்போ கத்தாரும் வளர்ந்த நாடு.

      நீக்கு
    2. ஆமாம் 1950க்குப் பிறகு அரபு நாடுகள் எண்ணை வளச் செழிப்பு நாடுகளாகிவிட்டனவே. பாலைவனத்தில் கிடைத்த பொக்கிஷம்தான் இந்த எண்ணை. அதோடு அரேபியர்கள் இறையருள் பெற்றவர்கள். அவர்களுடைய பிரார்த்தனை வீண்போகவில்லை.

      கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்

      துளசிதரன்

      நீக்கு
    3. //அதோடு அரேபியர்கள் இறையருள் பெற்றவர்கள். அவர்களுடைய பிரார்த்தனை வீண்போகவில்லை.//
      ரொம்ப நல்லாச் சொல்லியிருக்கீங்க. இருந்தாலும், சில தேசத்தவர்கள் கொஞ்சம் கர்வம் பிடித்தவர்கள்.

      நீக்கு
    4. மனிதர்களுக்கு அளவுக்கதிகமாகச் செல்வம் வந்துவிட்டால், நீங்கள் சொல்வது போல கர்வம் வந்து ஒட்டிக் கொள்ளும் தானே.

      துளசிதரன்

      நீக்கு
    5. கத்தர் நாட்டிற்கு இப்படி ஒரு வரலாறு இருக்கிறது என்பதை உங்கள் கருத்தின் மூலம் அறிகிறேன் நெல்லைத்தமிழன்.

      எப்படியோ எண்ணை வளம் 20 ஆம் நூற்றான்டின் பிற்பகுதியில் அவர்களுக்குக் கிடைத்த புதையல் என்றுதான் சொல்ல வேண்டும். அதிர்ஷ்டக்காரர்கள்.

      துளசிதரன்

      நீக்கு
    6. இதுபற்றியும் நிறைய எழுதலாம் (எண்ணெய் வளம்). சில கிணறுகள் (அல்லது ஊற்றுகள்), இரண்டு நாடுகளுக்கும் பொதுவாக அமைந்துவிடும். அப்படி பஹ்ரைனுக்கும் சௌதிக்கும் இடையில் அமைந்துவிட்டதால், நாளொன்றுக்கு 40,000 பேரல் எண்ணெய் பஹ்ரைனுக்குக் கொடுத்துவிடுவோம், நீங்கள் அந்தக் கிணறிலிருந்து எண்ணெய் எடுக்கக்கூடாது என்ற ஒப்பந்தம் சௌதிக்கும் பஹ்ரைனுக்கும் இடையே இருந்தது. (40,000 என்பதில் தவறு இருக்க வாய்ப்பு இருக்கிறது)

      நீக்கு
    7. எண்ணெய் முதன் முதலில் பிரிட்டிஷாரால் பஹ்ரைனில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகுதான் அவங்க வந்து செல்வதற்கு ஏர்கிராஃப்ட் என்ற ஒன்று வந்தது. அப்போதெல்லாம் துபாய் மீன்பிடி கிராமம்தான். அப்புறம் ஒவ்வொரு இடமாக எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட, எல்லோருமே பணக்காரர்களாக ஆகிவிட்டனர். சௌதியில், ஆரெம்கோ என்ற அமெரிக்க நிறுவனம் வந்து எண்ணெய் சுத்திகரிப்பு என்றெல்லாம் பரந்து விரிந்து, சௌதியின் கட்டுப்பாடான சமூக மற்றும் பொதுச் சட்டங்கள், ஆரெம்கோ வளாகத்தில் மாத்திரம் நடைமுறை கிடையாது என்றும் மாறியது...

      நீக்கு
    8. ஆரம்பத்தில் (ஏன் இப்போதும் ஓரளவு) சௌதியில் வெஜ் என்ற கான்சப்ட் கிடையாது. அதாவது வெஜிடேரியன் ஒன்லி என்று எந்த ரெஸ்ட்ராண்டுமே இருக்கக்கூடாது என்பது சட்டமாகக் கடைபிடித்தார்கள். அது பத்து வருடங்களுக்கு முன்பாகத்தான் விதிவிலக்குகளாக மாற ஆரம்பித்தது.

      நீக்கு
    9. பஹ்ரெய்னுக்கும் சவுதிக்கும் இடையில் எண்ணைக் கிணறுகள் சண்டை என்றால் அது கடலில் உள்ள கிணறுகளுக்கா?

      ஓ! முதலில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணைக் கிணறு பஹ்ரெய்னிலா! சிறிய பகுதி ஆனதால் பஹ்ரெய்னுக்கு மற்றவர்களுடன் போட்டி இட முடியாது இல்லையா.

      சைவ உணவகங்கள் கூடாது என்பது சட்டமாக இருந்தது என்பது புரிந்து கொள்ள முடிகிறது. விதிவிலக்குகள் 10 வருடங்கள் முன்புதான் தொடங்கியது எனும் போது இப்போது மாற்றங்கள் வந்திருக்கும். அது தனி நாடாயிற்றே! எமிரெட்ஸ் போல இல்லையே.

      சுவாமி நாராயணன் கோயில் எமிர்ட்ஸில் - அபுதாபியில் வருகிறது என்று கேள்விப்பட்டேன்.

      மேலதிகத் தகவல்களுக்கு மிக்க நன்றி நெல்லைத் தமிழன்

      துளசிதரன்

      நீக்கு
  8. நெடுஞ்சாலை உணவகம். கிரான்ட் மசூதி எல்லாம் அருமை. மசூதி மிக அழகு.
    அன்பான நட்புகளுடன் எல்லா இடத்தையும் சுற்றிப்பார்த்து விட்டீர்கள்.
    காணொளி நன்றாக இருக்கிறது. குமார், தேவகோட்டை ஜி, மனோ இவர்களை சந்திக்க நேரம் கிடைத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் சந்தோஷபட்டு இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோதரி, அவர்களைக் காண முடியாதது, துபாயில் பல இடங்களைக் காண முடியாமல் போனதை விட வருத்தம்தான். என்ன செய்ய? இறையருள் கிடைக்கவில்லை.

      ஆமாம் எல்லாமே அழகாக இருந்தன. அதுவும் நட்புகளுடன் சுற்றிப் பார்ப்பது எனபதும் மகிழ்வான விஷயம்தானே. காணொளி கண்டதற்கும் மிக்க நன்றி.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு.

      துளசிதரன்

      நீக்கு
  9. தகவல்கள் அனைத்தும் அருமை. சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து தந்தவர்களுக்கும் பாராட்டுகள். உங்களால் நாங்களும் துபாய் சுற்றிப் பார்க்க முடிகிறது. நன்றி - வெங்கட் நாகராஜ்.

    பதிலளிநீக்கு
  10. பயணத்தில் பார்த்த இடங்கள் குறித்த குறிப்புகள் நன்று. உங்கள் மூலம் நானும் துபாய் பயணித்த உணர்வு. நன்றி. தகவல்கள் அனைத்தும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு