வியாழன், 11 ஜனவரி, 2024

சில்லு சில்லாய் - 18 - இந்தியாவின் சிலிக்கன் நகரம் உணவு நகரமாய் மாறி வருகிறதா - 3

சில்லு - 1 - சிலிகான் சிப் நகரம் சிப்ஸ் நகரமாக?!

இதற்கு முன் பெங்களூருக்கு வந்த போதும் சரி, இருந்த போதும் சரி சாப்பிட்டுப் பார்க்காத, ஆனால் நான் வீட்டில் அவ்வப்போது செய்து வந்த மத்துர் வடையை இப்போதைய பங்களூர் வாசத்தில் ஒரு சில கடைகளில், உணவகங்களில் சாப்பிட்டுப் பார்க்க விரும்பிச் சாப்பிட்டதுண்டு.  வடை என்ற பெயர் இருந்தாலும் வடையும் அல்ல, தட்டையும் அல்ல. இரண்டிற்கும் நடுவான ஒரு தின்பண்டம். ரவை, அரிசிமாவு, மைதா எல்லாம் ஒரு கணக்கு வைத்து கலந்து (செய்த படங்களுடன் பின்னர் வரும்) நிறைய வெங்காயம் போட்டு (இதுதான் இதில் முக்கியம்) எள்ளு, தேங்காய், நிலக்கடலை எல்லாம் போட்டு, தட்டி எண்ணையில் பொரிக்க வேண்டும்.

நன்றி விக்கிபீடியா

உணவகங்களில் என்றால் ஒரு வடை ரூ 30, 40 தேங்காய்ச் சட்னியோடு தருகிறார்கள். கடைகளில் என்றால் 3 அல்லது 6 வடைகள் ஒரு கவரில் இருக்கும். ஒரு வடை ரூ 10. கடைகளில் என்றால் மங்களூர் கடை மத்துர் வடை நன்றாக இருக்கும் 6 வடை 30ரூ. உணவகம் என்றால் நம் ஏரியாவில் இருக்கும் IDC இட்லி தோசா காஃபி உணவகத்தில் நன்றாக இருந்தது.

ஒரு சில கடைகள், உணவகங்களில் ஓரங்களில் மொறு மொறு என்றும் நடுவில் வரும் போது தட்டையும் இல்லை வடையும் இல்லை போன்று இருக்கும். சில இடங்களில் மட்டுமே வெங்காயத்தின் சுவை நன்றாகத் தெரியும்படி இருக்கிறது. இப்படிச் சாப்பிட்டுப் பார்த்ததில் வீட்டில் நான் நிறையவே வெங்காயம் போட்டு வெங்காயச் சுவையுடன் செய்கிறேன் என்று தெரிந்தது.

மங்களூர் பன் -  நன்றி இணையம்

அடுத்ததாக நான் இங்கு வந்து அறிந்தது மங்களூர் பன்கள்.  வழக்கமான பன்கள் அல்ல. இது பூரியின் ஒரு வடிவம்னு சொல்லலாம். மைதா வாழைப்பழம் கலந்து பூரி போன்று பொரிக்கப்படும் இந்த பன் சாப்பிடுவதற்கு மென்மையாக மிகவும் பஞ்சு போன்று இருக்கு. இங்க பெரும்பான்மையான ஹோட்டல்களில் இருக்கு. சட்னி மற்றும் சாம்பாருடன் தருகிறார்கள். ஆறிப் போனாலும் பரவால்ல நல்லாதான் இருக்கு.


புத்தரேகுலு - வெல்லம் போட்டதும், சீனி போட்டதும் -  நன்றி இணையம்

பெங்களூர் வந்த பிறகு புதிதாகத் தெரிந்து கொண்ட இன்னொரு ஸ்வீட் புத்தரேகுலு. இங்கு ரொம்ப ஃபேமஸான, ஒரு ஸாஃப்ட் இனிப்பு. பல லேயர்ஸ் இருக்கும். அரிசி மாவை கொஞ்சம் நீர்க்கக் கரைத்துக் கொண்டு அதில் சுத்தமான துணி அல்லது ப்ரஷ் போன்ற சாதனத்தை அதில் முக்கி தோசைக் கல்லில் மேலும் கீழும் ஓரிரு முறை இழுத்து ஓரிரு நிமிடத்தில் அப்படியே தோசை போன்று வந்ததும் அதைப் பொடிந்துவிடாமல் எடுத்து தனியாகத் தட்டில் வைக்க வேண்டும். அப்படி நாலைந்து லேயர்கள் செய்த பின் உள்ளே உலர் பருப்புகள் பழங்கள் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து வைத்து மடிக்க வேண்டும். புத்தரேகுலு நான் சுவைத்தது எங்கேனா ஜெயநகரில் உள்ள புல்லா ரெட்டி ஸ்வீட்ஸ் கடையில். சின்ன கடைதான்.  ஆனா செம டேஸ்ட். இப்ப வீட்டிலும் செய்வதுண்டு.

நன்றி இணையம்

என்னை மிகவும் கவர்ந்த ஒரு போளி/ஸ்வீட் கடை ஜெயநகரில் இருக்கும் ஃபேமஸ் மனே ஹோலிகே (போளி). நம்ம கண் முன்னேயே போளி தட்டிக் கல்லில் போட்டுச் சூடாகத் தருவாங்க. கிட்டத்தட்ட 20 வகை செய்யறாங்க. அன்னாசி, குல்கந்த் போளி சூப்பரா இருக்கும். Pocket friendly!

மெஜஸ்டிக்கில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்வீட் ஸ்டால் மைசூர் பாக்கு ஃபேமஸாம். வாயில் கரையுமாம். நான் முயற்சி செய்ததில்லை. விலையும் சல்லிஸாம். பழ சிப்ஸும் நல்லாருக்குமாம். பழ சிப்ஸாவது (ரொம்ப பிடிக்கும்) அடுத்த முறை வாங்கிப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

அது சரி உனக்கோ உடம்பு முழுக்க சர்க்கரையை வைச்சுக்கிட்டு ஸ்வீட்டா சாப்பிடறியான்னு இங்கு என்னைப் பத்தி தெரிஞ்ச நட்புகள் கேட்கலாம். நான் எங்க சாப்பிட்டேன்!!! வாங்கி ஒரு சின்ன குட்டியூண்டு பீஸ் டேஸ்ட் அம்புட்டுத்தான். மத்ததெல்லாம் நம்ம வீட்டு சீனி வாஸன் தான்! ஆனா இப்ப அந்த சீனி வாஸ்னும் சீனியை தீண்டுறதில்ல.

வித்யார்த்தி பவன் ரொம்ப ஃபேமஸ்னு சொன்னாங்களா, விலையும் நம்ம ஜேப்பிக்குச் சரிதான்னு ஒரு நாள் போய் சாப்பிட்டுப் பார்க்கலாம்னு பார்த்தா, ரசிக்கவில்லை. ஒரு தோசை சாப்பிடுவதற்குள் திகட்டிவிட்டது. பிழிந்தால் ஒரு செக்கு எண்ணை வரும் போல! அந்த அளவுக்கு நெய்யும் எண்ணையும்!

பெங்களூரில் சக்கைப் போடு போடுவது நடைபாதை உணவகங்களும், துரித உணவகங்கள் குறிப்பா சாட் கடைகள். அதுவும் சாலையோரங்களில் பானிபூரி, பேல் பூரி, மசாலா பூரி கடைகள் எக்கச்சக்கம். 10 அடிக்கு ஒன்று பார்க்கலாம். அடுத்தடுத்தும் கூடப் பாக்கலாம். அதிலும் பங்காருபெட் சாட் ரொம்ப ஃபேமஸ்.

முக்குக் கடைகள்ல கூட தேநீர், காஃபியோடு சமோசா, வடை, போண்டா ப்ரெட் சான்ட்விச் என்று எல்லாம் கிடைக்கின்றன. எங்கு திரும்பினாலும் சாப்பாட்டுக் கடைகள். 10 அடிக்கு ஒன்றென்று தீனிக் கடை இல்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்! நிலை !

பெங்களூரில் இந்த 5 வருடங்களில் நான் பார்த்த வகையில் தெரிந்து கொண்டது இதுதான். மக்கள் வெளியில் அதிகம் சாப்பிடுகிறார்கள். சாப்பாடும் அதிகம் சாப்பிடுகிறார்கள். என்ன சுவை என்பதெல்லாம் கணக்கில் இல்லை என்றே தோன்றுகிறது. ஏனென்றால் புகழ்பெற்ற உணவங்களும் சரி, சாதாரண உணவகங்களும் சரி கூட்டம் நிறைந்திருக்கின்றன. எந்த உணவகத்திலும், சாலையோரக் கடைகளிலும் கூட எந்த உணவை எந்தப் பெயரில் எப்படிக் கொடுத்தாலும் சாப்பிடுகிறார்கள். சாப்பிடுபவர்கள் அதிகமானதால் உணவகங்கள் பெருகினவா அல்லது உணவகங்கள் பெருகியதால் சாப்பிடும் மக்கள் கூட்டம் அதிகமானதா என்ற பட்டிமன்றம் வைக்கலாம் என்ற அளவு மொத்தத்தில் உணவு மேளா போல பெங்களூர் இருக்கிறது என்பதுதான் நான் கண்டது.

அளவுக்கு அதிகமானா அமிர்தமும் நஞ்சு! அதனால் சிலிகான் சிப் நகரம் சிப்ஸ் நகரமாக மாறும் பதிவுகளுக்கு முற்றுப் புள்ளி.

(பின் குறிப்பு - முரண் – பணக்கார ஹைடெக் சிப் நகரத்தின் மறுபுறக் காட்சி ஏரியா ஏரியாவாக நகரும் ஜிப்ஸி கூட்டத்தை (கழுதை வளர்க்கிறார்கள்) மேம்பாலங்களின் அடியில், கழுதைகளோடும், பன்றிகளோடும், நாய்களோடும் வாழ்க்கை நடத்துவதை பார்க்கலாம். 

மற்றொரு கூட்டம் கூலி வேலை செய்பவர்கள். கட்டிடத் தொழில், வீட்டு வேலை செய்பவர்கள், நடைபாதையில் பொருட்கள் விற்பவர்கள், வடை சுடுபவர்கள் என்று ரோட்டோரங்களில் அல்லது வெற்று நிலங்களில் ஓரமாகக் கூடாரம் போட்டுக் கொண்டு வாழ்வதையும் பார்க்கலாம். இவர்களுக்கும் சல்லிஸான விலையில் இந்த ஹைடெக் பணக்கார நகரம் உணவு அளிக்கிறது. கடையில் பொருட்கள் வாங்கிச் சமைப்பதை விட சாலையோரக் கடைகள் சிறிய உணவகங்களில் மிகவும் குறைந்த அளவில் சாப்பாடு கிடைப்பது ஒரு ப்ளஸ் பாயின்ட்! இவர்களின் வாழ்வாதாரத்திற்கு!)

(துளசியின் துபாய் பதிவு இரண்டாவது பகுதி வந்திருக்க வேண்டும். துளசியும் பிஸி,  பல்கலைக்கழக ஆங்கிலப்பாடத்திட்டம் தயாரித்தல், அவர் மனைவிக்குச் சில மருத்துவங்கள் என்று. எனக்கும் வேலைப் பளு. பதிவு படங்கள் வீடியோக்கள் எல்லாமே தயார்தான். துளசியின் குரல் பதிவு வந்ததும் கோர்க்க வேண்டும். அடுத்து வரும். எனவே என் தொடர் பதிவின் கடைசிப் பகுதியை போட்டு மங்களம் பாடியாச்சு!!)

சில்லு - 2 - துளசியின் இரண்டாவது மகன் விநாயக் வரைந்த படம் 



சில்லு - 3 - காஃபி இன் காபி ராகம் - சிக்கில் குருசரண்

https://www.youtube.com/watch?v=tfZcz-sBckM

நன்றி யுட்யூப்

வாட்சப்பில் வந்திருக்கலாம். கேட்காதவர்கள் கேட்டு ரசிக்கலாம்! பேஷ் பேஷ் காபி நன்னாருக்கு! கேட்டேளா!

lyrics by P R Sudarrsan - பாடல் வரிகள் எழுதியவர் பி ஆர் சுதர்சன்


--- கீதா

30 கருத்துகள்:

  1. மத்துர்  வடையா...   கேள்விப்பட்டதே இல்லையே...  செய் குறிப்பு வித்தியாசமாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம், இப்ப படம் இணைத்திருக்கிறேன். பதிவு போடும் போது விடுபட்டு விட்டது. இப்ப உங்க கமென்ட் பார்த்ததும் தான் போடலையான்னு நினைச்சு படம் சேர்த்திருக்கிறேன். இது இணையத்தில் எடுத்ததுதான்.

      நான் வீட்டில் செய்வதுண்டு. அடுத்து செய்யும் போது படங்கள் குறிப்புகளுடன் எபிக்கு அனுப்புகிறேன். எனக்கு ரொம்பப் பிடித்தது. வெங்காயம் நிறைய போடணும். நல்லாருக்கும்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. விக்கியிலிருந்து எடுத்து இணைத்திருக்கிறீர்கள்.  மசால் வடை ஷேப்பில் இருக்கிறது!

      நீக்கு
  2. கிர்ர்ர்ர்....  கீழே உள்ள படம்தான் அந்த வடை என்று நினைத்து அதை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே படித்தால் அது வேற!  மங்களூர் பன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா......இது முதன் முதலா இங்க வந்தப்புறம் தான் சாப்பிட்டுப் பார்த்தேன், ஸ்ரீராம். ஓகே ஆனால் ஒன்று சாப்பிடுவதே கஷ்டமாக இருந்தது எனக்கு. வயிறு நிறைந்துவிட்டது.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. நான் பன் பக்கமே போவதில்லை - எந்த ரூபத்திலும்!

      நீக்கு
  3. மங்களூர் பன்னுக்கு தொட்டுக்க சட்னி சாம்பாரா?  என்னங்க இது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா!!! வினோதமான காம்பினேஷன். கர்நாடகா காரங்க ஸ்வீட்டு மக்கள்! எங்க வீட்டுல ஓர் உறவினர் ஒருவர், மோர் சாதத்துக்கு பிஸ்கட் தொட்டுக் கொண்டு சாப்பிடுவார்!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    2. ஹாஹாஹா!!! புரிகிறது ஸ்ரீராம்!

      கீதா

      நீக்கு
  4. அப்பாடி...    கேள்விப்பட்ட பெயர் மைசூர் பாக்.  அங்கும் தெருவோர கதைகள்தான் பேமஸா?  சபாஷ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா ஆமாம் ஸ்ரீராம். எக்கச்சக்கம் இங்க...

      கீதா

      நீக்கு
  5. அட...  துல்ஹரை தத்ரூபமாக வரைந்திருக்கிறார் விநாயக்...  பாராட்டுகள்.  சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம். விநாயக் ரொம்ப அருமையாக வரைகிறார். இன்னும் வரைந்ததெல்லாம் அவர் ட்விட்டர் - எக்ஸில் போட்டிருக்கிறார். நான் ட்விட்டரில் இல்லை. எனவே துளசியிடம் கேட்டிருக்கிறேன்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  6. இப்போதான் ஒரு காபி சாப்பிட்டன்.  ச்சே..  குடித்தேன்.  இந்தக் காபி அப்புறமா ருசிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா...ஓகே ஸ்ரீராம் நிதானமாக, காலைல காபி குடித்துக் கொண்டே கேளுங்க!! நாவிற்கும் செவிக்கும் இனிய காபி!

      கீதா

      நீக்கு
  7. திண்பண்ட பதிவு சுவையாக இருந்தது.

    காணொளி பாடல் இரசித்தேன் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி.பதிவிற்கும் பாடலை ரசித்ததுற்கும்.

      கீதா

      நீக்கு
  8. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. பெங்களூர் உணவுகள் பற்றிய கட்டுரை நன்றாக சுவையுடன் உள்ளது. இந்த மதூர் வடை இங்கு வந்த புதிதிலேயே சாப்பிட்டு இருக்கிறேன். இப்போது மகனுடன் சென்ற ஒரு பயணத்தில், மாலை, மதூரிலேயே ஒரு பிரபல உணவகத்தில் இந்த வடையையும் காப்பியையும், சாப்பிட்டு வந்தோம். இதில் என்னவென்றால் அப்போது இந்த வடையை கடித்து சாப்பிடுவது எனக்கு மிக நன்றாக இருந்தது. இப்போதைய என் பற்களின் பலம் இதற்கு துணைப் போகவில்லை. கொஞ்சம் சாப்பிட்டு விட்டு மகனிடமே தந்து விட்டேன். நாம் தயாரிக்கும் ஆமைவடையைப் போன்றுதான் இருக்கும், (ஆனால் கொஞ்சம் கடினமாக..) நீங்கள் சொல்வது போல், நிறைய வெங்காயம் சேர்க்கிறார்கள். தாங்களும் விரைவில் பதிவாக தருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். குழந்தைகளுக்கு செய்து தரலாம்.

    இந்த பன்தான் என்னால் சாப்பிட முடிகிறது. ஆனால் இதையும் நிறைய சாப்பிட முடியாது. ஸ்வீட் நிறைய பிடிக்கும். இப்போது தடா எனினும் சாப்பிடுகிறேன். நீங்கள் கூறிய இடத்தின் மை. பா சாப்பிட்டதாக நினைவு.

    வித்யார்த்தி தோசை நாங்கள் இங்கு வந்த புதிதில், 2007ல் சாப்பிட்ட அப்போதைய ருசி நினைவுகளில் நிரந்தரமாக உள்ளது ஆனால், இப்போது எப்பவாவதுதான்.. (ருசியும் மிஸ்ஸிங்) செல்கிறோம். தவிரவும் அங்கு எப்போதும் போல், அங்கு ஒரே கூட்டம்.

    சகோதரர் துளசிதரன் அவர்களின் இளைய மகன் வரைந்த ஓவியம் மிக அருமையாக உள்ளது. அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவியுங்கள்.

    காஃபி குறித்த பாடல் மிக அருமையாக இருந்தது. முன்பு மார்கழி உற்சவ பாடல்கள் காலை, மாலையென தினமும் கேட்போம். இப்போது குழந்தைகளின், சின்னக்குழந்தைகள், படிப்பு, பள்ளியென டி. வி எங்களிடமிருந்து ஓய்வு பெற்று விட்டது. குழந்தைகளுக்கு விடுமுறை நாட்களில், எப்போதெல்லாம் மூவி பார்க்கத் தோன்றுகிறதோ அப்போது பார்ப்பார்கள். (பெரும்பாலும் இரவு நேரம்) நான் தூங்கி விடுவேன். எனக்கும் இப்போதைய படங்கள் பார்ப்பதில் ஆர்வங்கள் குறைந்து விட்டது. அனைத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலாக்கா ஆங்க ஓ நீங்களும் வித்யார்த்தியில் சாப்பிடுவதுண்டா. நான் இரு முறைதான் சாப்பிடிருக்கிறேன் அதுவே அந்த எண்ணை நெய் எல்லாம் பயமுறுத்திவிட்டது. எனவே அதன் பின் செல்ல வில்லை.

      மார்கழி மஹோச்வம் ஜெயா டிவி நடத்துவதற்கு சென்னையில் இருந்தவரை சென்றதுண்டு. அதன் பின் வாய்ப்பில்லை. கணினியில் கேட்பதோடு சரி. அதிலும் இப்போது பல இணையத்தில் பைசா கட்ட சொல்லுவதால் - கண்டிப்பாக அதுதவறு கிடையாது அவர்களது பிழைப்பு - நமக்கு முடியவில்லை என்பதால் கேட்க முடிவதில்லை. இலவசமாகக் கிடைப்பதைக் கேட்பதோடு சரி.

      உங்க வீட்டுல டிவி ஓய்வில் இருப்பது மிக நல்ல விஷயம் கமலாக்கா. குழந்தைகள் படிப்பு முக்கியமாச்சே.

      மத்துர் வடையை கடிக்க முடியாத அளவு உங்க பல்லு ஆகிவிட்டதா கமலாக்கா....ப்ளீஸ் அதை சரியா பாத்துக்கோங்க. பல் ரொம்ப முக்கியமாச்சே.

      இப்போதைய படங்களில் ஒரு சில நன்றாக இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் எனக்கும் பார்க்கும் ஆர்வம் இருந்தாலும் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  9. உணவுகள் பற்றிய பதிவு மிக அருமை கீதா! மதுர் வடை, மங்களூர் பன் செய்திருக்கிறேன். புத்தரேகுலு செய்ததில்லை. உணவு சார்ந்த தகவல்கள் யாவும் படிக்க மிக மிக சுவாரஸ்யமாக இருந்தன. பொதுவாய் மக்கள் இப்போதெல்லாம் சமைப்பதேயில்லை! ஸ்விகியும் zomatoவும் போட்டி போட்டுக்கொண்டு பிஸினஸ் பண்ணுகின்றன! அதனாலோ என்னவோ, வீட்டுக்கு வருபவர்களை உபசரிக்கும் பழக்கம் நிறையவே நின்று போய் விட்டது.

    //எங்க வீட்டுல ஓர் உறவினர் ஒருவர், மோர் சாதத்துக்கு பிஸ்கட் தொட்டுக் கொண்டு சாப்பிடுவார்!//
    என் உறவினர் ஒருத்தர் தயிர் சாதத்துக்கு வாழைப்பழமும் மாம்பழமும் மைசூர் பாக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடுவார்!!
    திரு.வினாயக்கின் ஓவியம் அட்டகாசம், அசத்தல் ரகம்! பாராட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை! ஓவியத்தை சில நிமிடங்கள் ரசித்துக்கொண்டேயிருந்தேன்! அவருக்கு என் பாராட்டுக்கள்! மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் மனோ அக்கா, ஸ்விக்கி, ஜொமாட்டோ போட்டி போட்டுக் கொண்டு பிஸினஸ். இங்கு எங்கள் வீட்டு மாடியில் உள்ள இளம் தம்பதிக்குப் பெரும்பாலும் ஸ்விக்கி வந்துவிடும்!

      தெருக்களில் சில வீடுகளுக்குக் காலை 2.30 மணிக்குக் கூட சப்ளை செய்கிறார்கள்! ஆச்சரியமாக இருந்தது. பயணத்திற்காக அதிகாலையில் எழுந்து பேருந்து நிலையம் சென்ற போது கண்ட காட்சி.

      //அதனாலோ என்னவோ, வீட்டுக்கு வருபவர்களை உபசரிக்கும் பழக்கம் நிறையவே நின்று போய் விட்டது.//

      உண்மை மனோ அக்கா. நாமே செய்த பண்டங்கள் போய் ஆர்டர் செய்து வாங்கும் நிலைமை வந்துவிட்டது. உறவினர் வந்தாலும்! நாமே செய்து கொடுக்கும் போது அதில் ஒரு ஆத்ம திருப்தி!

      எங்கள் வீட்டில் மோர் சாதத்திற்கு மாம்பழம் தொட்டுக் கொண்டு சாப்பிடுவதுண்டு. ஆனால் வாழைப்பழம், மைசூர்பாக்!! ஆ!

      ஆமாம், விநாயக் ரொம்ப திறமைசாலி, மனோ அக்கா. மருத்துவப்படிப்பு இறுதியாண்டு படிக்கிறார். திருவனந்தபுரத்தில். மேற்படிப்பும் படிக்க முயற்சி.

      துளசியின் மூன்று குழந்தைகளுமே திறமைசாலிகள்! மூவருமே மருத்துவம்!

      மிக்க நன்றி மனோ அக்கா

      கீதா



      நீக்கு
  10. மாத்தூர் வடை ரவாதோசை மாவை கட்டியாக பிசைந்து வெங்காயம் பாகிஸ்ஹேமிளகாய் சேர்த்து வடை போல் தட்டி எடுக்கிறார்கள் என்று தோன்றுகிறது.
    பூதரகுலு சாப்பிட்டிருக்கிறேன். ஹைதராபாதில் புல்லா ரெட்டி பிரபலம். நிறைய கடைகள் உண்டு.

    மங்களூர் பன் சாப்பிட்டதில்லை. நம்ம உன்னி அப்பம் போல் ஆனால் வாணலியில் பொரித்து எடுக்கிறார்கள் என்று தோன்றுகிறது. உன்னி அப்பத்திற்கு அரிசிமாவு வெல்லம் சேர்ப்பார்கள். இங்கே மைதா.

    விநாயக் வரைந்த படம் அபாரம். இவ்வளவு நுணுக்கமாக வரைய மிக்க பொறுமையம் நேரமும் வேண்டும்.

    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜெகே அண்ணா கிட்டத்தட்ட அப்படித்தான். தேங்காய் சேர்த்துக்குவாங்க நிலக்கடலை சேர்த்துக்குவாங்க.

      ஆமாம் புத்தரேகுலு புல்லா ரெட்டி பிரபலம் ஹைதையில் பிரபலம். இங்கு சில உணவுகள் தெலுங்கு கன்னட மிக்ஸாகவும் இருக்கு.

      மங்களூர் பன் உன்னி அப்பம் போல்னுதான் நானும் நினைத்தேன் ஆனால் கொஞ்சம் வித்தியாசம் உண்டு. இதில் வெல்லம் கிடையாது. கொஞ்சம் சீனி

      விநாயக் ரொம்ப நன்றாக வரைகிறார். அசாத்திய திறமை. உங்கள் எல்லோரது பாராட்டுகளையும் விநாயக்கிடம் சொல்கிறேன்.

      மிக்க நன்றி ஜெ கே அண்ணா

      கீதா

      நீக்கு
  11. போன பதிவில் கேட்டு இருந்தேன் அடுத்து பெங்களூர் சிறப்பு உணவு மதுர வடை வருமா? என்று வந்து விட்டது முதலில். கல்யாணம் ஆனவுடன் புதிது புதிதாக உணவுகள் செய்து கொடுத்து பாராட்டு பெற விரும்பி செய்தவற்றில் இந்த மதுர் வடையும் ஒன்று.

    அம்மா சமையல், மாமியார் சமையல், மற்றும் ஓர்படிகள் செய்யும் சமையல், மஞ்சரி
    மற்றும் தேவி, மங்கையர் மலர் பத்திரிக்கை, குறிப்புகள் இன்னும் என்னிடம் இருக்கிறது. எல்லாகுறிப்புகளில் இருக்கும் சமையல் பொருட்கள் வீட்டில் இருந்தால் செய்து விடுவேன்.
    இப்போது விரும்பி சாப்பிட, விரும்பி கேட்க ஆள் இல்லை.
    அப்படி வந்தாலும் உங்களை கஷ்டபடுத்திக்க வேண்டாம் வெளியில் சாப்பிடுவோம், ஆர்டர் செய்வோம், சாப்பாட்டு மாமாவிடம் வாங்கி விடுவோம் என்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா கோமதிக்கா நீங்க கேட்டிருந்தீங்க நினைவு இருக்கு. பதிவுல சொல்ல நினைத்து விட்டுப் போச்சு. கோமதிக்கா கேட்டதேதான் ந்னு

      ஆஹா பாருங்க நீங்க அப்பவே இதைச் செய்து பார்த்திருக்கீங்க. எவ்வளவு வகை வகையா செய்திருக்கீங்க கோமதிக்கா
      நானும் பல குறிப்புகள் எழுதி வைத்ததுண்டு. நானாகச் செய்து நல்லா வந்ததையும் எழுதி வைத்ததுண்டு. பல குறிப்புகள் வீடுகள் பல மாறியதில் போய்விட்டன. இப்ப சில இருக்குன்னு நினைக்கிறேன்.

      மகன் இங்கு இல்லாததால் இப்ப பல செய்வதில்லை ஆனாலும் நம்ம வீட்டில் புதிது சாப்பிடுவாங்க என்பதால் இப்பவும் சில சமயம் செய்கிறேன்,

      //அப்படி வந்தாலும் உங்களை கஷ்டபடுத்திக்க வேண்டாம் வெளியில் சாப்பிடுவோம், ஆர்டர் செய்வோம், சாப்பாட்டு மாமாவிடம் வாங்கி விடுவோம் என்கிறார்கள்.//

      அதுவும் சரிதான் கோமதிக்கா. உங்களுக்கும் கால் வலி என்று உடம்பு படுத்துகிறதே. அதனால் அவர்கள் அன்புடன் சொல்லும் போது மறுக்க முடியாது. தவிர்க்க முடியாத சமயங்களில், நம்மால் இயலாத சமயங்களில் வயதில் வாங்கிச் சாப்பிடுவதுதான் நல்லது.

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  12. கடையில் பொருட்கள் வாங்கிச் சமைப்பதை விட சாலையோரக் கடைகள் சிறிய உணவகங்களில் மிகவும் குறைந்த அளவில் சாப்பாடு கிடைப்பது ஒரு ப்ளஸ் பாயின்ட்! இவர்களின் வாழ்வாதாரத்திற்கு!//

    கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. நிறைய வேலை செய்பவர்கள் வீட்டுக்கு போய் சமைத்து சாப்பிட நேரம் இருக்காது இப்படி சாலையோர கடைகள் அவர்களுக்கு வரபிரசாதம்தான்.

    //பெங்களூரில் இந்த 5 வருடங்களில் நான் பார்த்த வகையில் தெரிந்து கொண்டது இதுதான். மக்கள் வெளியில் அதிகம் சாப்பிடுகிறார்கள். //

    பெங்களூர் என்று இல்லை பொதுவாக வெளியில் சாப்பிடுவது இப்போது அதிகரித்து இருக்கிறது.

    //சாப்பிடுபவர்கள் அதிகமானதால் உணவகங்கள் பெருகினவா அல்லது உணவகங்கள் பெருகியதால் சாப்பிடும் மக்கள் கூட்டம் அதிகமானதா என்ற பட்டிமன்றம் வைக்கலாம் என்ற அளவு மொத்தத்தில் உணவு மேளா போல பெங்களூர் இருக்கிறது என்பதுதான் நான் கண்டது.//

    வேலை வேலை என்று ஓடி கொண்டு இருப்பவர்கள், தினம் காலை எழுந்து சமையல் செய்து குழந்தைகளுக்கு , வீட்டில் உள்ளவர்களுக்கு என்று கொடுத்து விட்டு ஓடும் பெண்களுக்கு வார இறுதியில் ஒரு நாள் மாறுதலாக குழந்தைகளை அழைத்து கொண்டு வந்து ஓட்டலில் சாப்பிடுவது குதுகலத்தை தரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. நிறைய வேலை செய்பவர்கள் வீட்டுக்கு போய் சமைத்து சாப்பிட நேரம் இருக்காது இப்படி சாலையோர கடைகள் அவர்களுக்கு வரபிரசாதம்தான்.//

      ஆமாம் அக்கா. இங்கு தெருக்களைச் சுத்தம் செய்பவர்கள் கூலி வேலை செய்பவர்களுக்கு அது உதவியாக இருக்கு. வேறோன்றும் அது பற்றி அடுத்த சில்லு சில்லாய் பகுதியில் சொல்கிறேன்

      பெங்களூர் என்று இல்லை பொதுவாக வெளியில் சாப்பிடுவது இப்போது அதிகரித்து இருக்கிறது.//

      ஆமாம். உண்மைதான் கோமதிக்கா.

      ஆமாம் நேரம் காலம் இல்லாமல் உழைப்பவர்களுக்கு வார இறுதிகளில் இப்படிச் சாப்பிடுவது மகிழ்ச்சிதான் கூடவே இங்குப் பெரும்பான்மை உணவகங்கள் விலை மலிவு தரமாகவும் இருக்கின்றன.

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  13. சகோ துளசியின் இரண்டாவது மகன் விநாயக் வரைந்த படம் அருமை. நன்றாக அப்படியே தத்ரூபமாக வரைந்து இருக்கிறார், பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
    மார்கழி உற்சவ இசையை கொடுத்தது போல ஆச்சு, காபி மகிமையை பாடுவதை கேட்கும் முகங்களில் தான் எத்தனை சந்தோஷம்! பாடல் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதிக்கா. விநாயக்கின் படம் செமையா இருக்கு.

      உங்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் அவருக்குச் சொல்லிவிடுகிறேன்.

      ஆமாம் நானும் பார்வையாளர்களின் முகபாவங்களைப் பார்த்தேன் பரவசம்! பெரும்பாலோரின் விடியலே காபியில்தான்! நான் உட்பட! பாட்டை ரசித்தமைக்கு மிக்க நன்றி கோமதிக்கா

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு