வெள்ளி, 5 ஜனவரி, 2024

துபாய் நாட்கள் - முதல் நாள் - 26-10-2023

 

கரிப்பூர் (கோழிக்கோடு) விமான நிலையத்திலிருந்து துபாயில் இறங்கிய

முதல் நாள் – 26-10-2023

Travel is recess and we need it. ஆம்! பயணங்கள் என்பது ஒரு இடை ஓய்வு. அது நம் ஒவ்வொருவருக்கும் மிக மிக அவசியம். பல முறை ஏதேனும் ஒன்றைப் பற்றிக் கேட்கும் போது ஒரு முறை அதைப் பார்க்க ஆவல் உண்டாகும் தானே! 1

 

சஃபாரி யுட்யூப் சானல் நடத்தும் சந்தோஷ் ஜார்ஜ் குளங்கரா - படங்களுக்கு நன்றி - இணையம்

அப்படித் துபாய் பயணத்தைப் பற்றிப் பலரும் சொல்லக் கேட்டு (முக்கியமாக Safari சானல் நடத்தும் Santhosh George Kulangara - சந்தோஷ் ஜார்ஜ் குளங்கரா – இவரைப் பற்றித் தெரிந்து கொள்ள கூகுளில் இவர் பெயரைப் போட்டுப் பார்த்தால் நிறைய தெரிந்து கொள்ளலாம்) கூடவே படங்கள் மற்றும் காணொலிகளைக் கண்டு, ஒரு முறை அங்கு போகும் ஆவல் தொற்றிக் கொண்டது. 2


என் மனைவியின் (1980 களின்) கல்லூரி நண்பர்களின் ஒரு வாட்சப் குழுவில் உள்ள சிலர் அதற்கான முயற்சிகள் எடுத்தனர். அதிலுள்ள ஜமாலுதீன் என்பவர், ‘நாங்களிருக்க பயமேன்! விமானமேறுங்கள்’ என்று தைரியமூட்டினார். 3

என் மனைவி அதில் இணைந்ததுடன் என்னையும் இணைத்ததும், அதுவரை இதெல்லாம் தேவையா என்றிருந்த நான் ‘தேவையே’ என்று சொல்லி பயணத்திற்குத் தயாரானேன். 4

நண்பர் ஜமாலுதீன் அவர்கள் இந்தப் படத்தில் 

துபாயில் குடும்பத்துடன் கடந்த 30 ஆண்டுகளாகத் தங்கியிருக்கும் ஜமாலுதீன், அவரது நண்பரான பயண ஏற்பாட்டு முகவரைப் (Travel Agent) பார்த்து, பயணச் சீட்டு, விசா, தங்கும் ஹோட்டல் போன்றவற்றை உறுதிப்படுத்தச் சொன்னார். சொன்னபடி செய்தோம். மனைவியின் தோழிகள் (எல்லோரும் 55 ஐக் கடந்தவர்கள்) 5 பேர். கூடவே நானும். அப்படியாக நாங்கள் 6 பேர். 5

கரிப்பூர்/கோழிக்கோடு விமான நிலையம்

விமானத்தில் போக வர - 26-10-2023 காலை இங்கிருந்தும் 31-10-2013 மதியம் அங்கிருந்து விமானமேறுவது வரை - ஹோட்டலில் தங்க, விசா இவற்றிற்கு, நபர் ஒருவருக்கு ரூ 38,500. கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி காலை 5.40க்கு கரிப்பூர் (கோழிக்கோடு) விமான நிலையத்தை அடைந்தோம். செக்யூரிட்டி செக் -  பாதுகாப்பு பரிசோதனை பிரச்சனை இல்லை. இமிகிரேஷன் செக்கில் பரிசோதித்தவர் வரிசையில் நின்ற எங்களைப் பார்த்து “வாட்சப் குரூப் டூரா”  என்று கேட்டு ஒரு நமட்டுச் சிரிப்பும் சிரித்தார். 6

ஏர்இந்தியா எக்ஸ்ப்ரஸ் விமானம் 8.30க்கு எங்களை ஏற்றிப் பறந்தது. 21/2 மணி நேரப் பயணத்திற்குப் பின் ஆகாயத்திலிருந்து கீழே அதிசய பூமியான துபாயைக் கண்டோம். (விமானத்திலிருந்து இறங்கி ஏர்போர்ட் ஷட்டிலில் நிலையத்திற்குள் வந்ததை காணொளியில் காணலாம்.)

நண்பர் ஜமாலுதீன் துபாய் விமான நிலையத்திற்கு வெளியில் எங்களை வரவேற்க வந்த போது

நண்பர் ஜமாலுதீன் அவரது மகன் பணி புரியும் Dive Tech - டைவ் டெக்கிற்குச் சொந்தமான 10 பேர் பயணம் செய்யக் கூடிய ஒரு வேனுடன் காத்திருந்தார். 7 (கார் பகுதி காணொலியில்)


நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் மெலடி க்வீன் நுழைவாயில்
இதன் மேலே, கீழே இருக்கும் படங்கள் அப்பகுதியில் Deira பகுதியில் எடுத்த படங்கள் 


Deira பகுதியில் உள்ள Baniyas Square – பனியாஸ் ஸ்கொயர் எனும் பகுதியில் Melody Queen Hotel ல் எங்கள் 6 பேருக்கும் 2 அறைகள் பதிவு செய்திருந்தோம். சிக்கனமாகப் போய்வர விரும்புபவர்களுக்கு ஏற்ற 3 நட்சத்திர ஓட்டல். அங்குத் தங்கியிருந்தவர்கள் 90% ஆப்பிரிக்க நாட்டவர்கள். 8

பொருட்களை அறையில் வைத்தபின் நடந்து அருகிலுள்ள தலசேரி ஓட்டலில் சாப்பாடு சாப்பிட்டோம். இலையில் பரிமாறப்பட்டது, மிகவும் அதிசயமாக இருந்தது. 9

கடந்த தினம் வரை தாங்கமுடியாத வெப்ப நிலையில் இருந்த துபாய், நாங்கள் போகும் முன்னும், போன தினமும் மழை பெய்ததால் துபாய் வீதிகளில் நடந்த எங்களுக்குச் சுகமான கால நிலை. 10 இப்பகுதி காணொலியில்

துபாய் க்ரீக் -  காணொலியில் பார்க்கலாம்

க்ரீக்கில் படகில் சென்றதை காணொலியில் காணலாம்

ஜமாலுதீன், அருகிலுள்ள (Creek) க்ரீக்கிற்குச் சென்று போட்டிங்க் போய் விடுவோம் என்றார். (Baniyas Square Metro) பனியாஸ் ஸ்கொயர் மெட்ரோ ரயில் நிலையம் வழியாகச் சிறிது நடந்ததும் Creek ஐ அடைந்தோம். 100 அமீரக திர்ஹாமிற்கு (United Arab Emirates Dirhams – அமீரகத்தின் திர்ஹாம் ஏறத்தாழ 1 திர்ஹாமிற்கு 22 ரூ கொடுக்க வேண்டும்) ஒரு படகில் நாங்கள் 7 பேர். ஏறக்குறைய ½ மணி நேரம் (Creek)- க்ரீக்கி ல் பயணித்தோம். இடையிடையே மழையும் பெய்தது.11

மனிதன் உருவாக்கிய Creek ன் இரு கரைகளிலும் துபாய், வானளாவிய கட்டிடங்களுமாய்ப் பரந்து கிடந்தது காணக் கிடைக்காத கண் கொள்ளாக் காட்சி. இடையிடையே Creek ஐக் கடந்து போகும் பாலங்கள். 12 (காணொலி)

அதன் பின் துபாய் வீதிகளில் நடந்து, காட்சிகள் பலதும் கண்டபின் அறையை அடைந்து தூங்கினோம். ஜமால் அவரது வீட்டுக்குச் சென்றார். 13(இதுவும் காணொலியில்)

இரண்டாம் நாள் எங்கு சென்றோம் என்பது அடுத்த பதிவில். பதிவின் வழி முதல் நாள் என்னோடு பயணித்த அனைவருக்கும் நன்றி. அடுத்த பதிவில் சந்திப்போம்.

(உங்கள் பதிவுகளுக்கு வர முடியாமல் வேலைப்பளு. ரப்பர் பணிகள், பயணங்கள், எதிர்பாரா பயணங்கள், பல்கலைக்கழக ஆங்கில துறைக்கான பாடங்கள் திட்டம் தயாரித்தல், தேர்வுத்தாள்கள் திருத்துதல் என்று இடைவிடாத பணிகள். இடையில் சில பதிவுகள் வாசிப்பதுண்டுதான்.)

https://youtu.be/U5JTCeu-pC8
7 நிமிடம் 22 நொடிகள் தான் முடிந்தால் பாருங்கள்

-----துளசிதரன்

36 கருத்துகள்:

  1. துபாய் பயணவிவரங்கள் , படங்கள் எல்லாம் அருமை. காணொளியும் உங்கள் குரலும் அருமை. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்திற்கும் பதிவையும் காணொலியையும் ரசித்ததற்கும் மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு.

      துளசிதரன்

      நீக்கு
  2. தெய்ரா/தேரா... 93ல் நான் இருந்த பகுதி. தேரா டவரில்தான் என் ஆபீஸ். கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் பணி. க்ரீக்கில் படகில் அக்கரை பர்துபாய்க்குச் செல்ல ஐம்பது ஃபில்ஸ். நான் சென்றதற்கு ஒரு வருடம் முன்னால் 25 ஃபில்ஸ். பர்துபாயில்தான் (அக்கரையில்) கோயில்கள் உண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! நாங்கள் சென்று தங்கிய பகுதியில்தான் உங்கள் ஆஃபீஸ் இருந்ததா. அருமை. நீங்கள் எங்கள் ப்ளாகில் வெளிநாட்டு அனுபவங்கள் எழுதலாம் என்றிருப்பதாக நீங்கள் சொல்லியிருந்ததை வாசித்த நினைவு. படங்கள் இருந்தால், பகிர்ந்து கொள்ளுங்கள். அந்த இடம் மிக அருமையாக இருந்தது.

      கோயில்கள் இருக்கும் அப்பகுதிக்கு எல்லாம் செல்ல முடியவில்லை. வெளியில் அதிகம் சுற்றியதால் துபாய்க்குள் உள்ளே ரொம்ப போக முடியாத சூழல்.

      மிக்க நன்றி நெல்லைத்தமிழன்

      துளசிதரன்

      நீக்கு
    2. இதை எழுதும்போது மனைவி இந்த அறையில்தான் இருக்கிறாள். Such lovely days. யாரையும் எதையும் பாராட்டாத என் குணத்தால் நான் இழந்தது அதிகம். மனதுக்குள் மெச்சி என்ன பிரயோசனம்?

      நீக்கு
    3. இளம் வயதில் அதுவும் மணமான புதிதில் நாட்கள் இனிமையாக இருந்திருக்கும். இப்போது நினைத்துப் பார்க்க இனிமையாகவும் இருக்கும்.

      நாம் பாராட்ட நினைப்பவற்றை, பாராட்ட நினைப்பவர்களை மனதாரப் பாராட்டிவிட வேண்டும். அது உறவை மிகவும் வலுப்படுத்தும்.

      மீண்டும் வந்து கருத்திட்டதற்கு நன்றி நெல்லைத்தமிழன்.

      துளசிதரன்

      நீக்கு
    4. நெல்லை, பாராட்டுவதற்கும் ஒரு மனசு வேண்டும். அதுவும் வெளிப்படையாகப் பாராட்ட. எல்லாரும் பாராட்டறாங்கன்னு பாராட்டாம நம்ம மனசுல நிஜமாவே ஆஹா என்றுதோன்றினால் உடனே பாராட்டிவிட வேண்டும்.
      பாராட்டு என்பது நாம் செய்யும் மிகப் பெரிய சேவைன்னு சொல்லுவேன். Its a positive stroke, you know! ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை ஒருத்தரை மேல உயர வைக்கவும் உதவும்....ஒரே ஒரு வார்த்தை ஒருவரைக் கீழே தள்ளவும் செய்யும். ஆனால் ஒன்னு சொல்லுவேன், பாத்திரமறிந்து பிச்சை இடு என்பது போலத்தான் பாராட்டு வழங்குதலும்!

      கீதா

      நீக்கு
  3. தேரா பஸ் ஸ்டான்ட், அங்கிருக்கும் ஈரானிய நட்ஸ் சாக்லேட் கடைகள், பெங்களூர் ரெஸ்டாரன்ட் எனப் பலவும் நினைவுக்கு வருகின்றன. கடைசி ஆறு மாதங்கள் புதிதாக்க் கல்யாணம் ஆகி மனைவியுடன் வாழ்க்கை ஆரம்பித்தது அங்கேதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! வெரி நைஸ் வெரி நைஸ். நிறைய அனுபவங்கள் உங்களுக்குக் கிடைத்திருக்கும் இல்லையா?
      உங்கள் மண வாழ்க்கை அங்குதான் தொடங்கியது என்று சொல்லுங்கள்! அருமை அருமை. அதை எல்லாம் பகிர்ந்துகொள்ளலாமே.

      மிக்க நன்றி நெல்லைத்தமிழன்

      துளசிதரன்

      நீக்கு
    2. ஒரு நாள் எழுதுவேன். May be as a 3rd party. புனைவும் நிகழ்வுமாக. எதையும் புகைப்படம் எடுப்பது என் வழக்கம். அதனால் எழுதும்போது படங்களுடன்

      நீக்கு
  4. இப்போதைல்லாம், மெட்ரோ அல்லது பேருந்தில் தேரா பர்துபாஞ், ஏர்போர்டிலிருந்து செல்வது குறைந்த செலவு (நிறைய பேர்கள் இருந்தால் கார் ஓகே)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் நினைவுகள் வருகின்றது இல்லையா? அங்கு நீங்கள் இருந்த அந்த மூன்று வருடங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பதிவாகப் போடலாமே. நாங்கள் எல்லோரும் தெரிந்து கொள்வோம்.

      மிக்க நன்றி நெல்லைத்தமிழன் உங்களின் ஒரு சில அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு

      துளசிதரன்

      நீக்கு
    2. அது ஒரு கனாக்காலம். அப்போதைய துபாய், எமிரேட்ஸுக்கும் இப்போது உள்ளதற்கும் பெரும் வித்தியாசம். ஒருநாள் எல்லாம் எழுதுவேன்

      நீக்கு
    3. எழுதுங்கள் நெல்லைத்தமிழன். ஆமாம் உலகம் முழுவதுமே மாற்றங்கள் வந்துகொண்டேதானே இருக்கின்றன. துபாயும் விதிவிலக்கல்லதானே.

      நன்றி நெல்லைத்தமிழன்

      துளசிதரன்

      நீக்கு
  5. பயண விவரங்கள் சுவாரஸ்யம். காணொளி நல்ல முயற்சி. நிதானமாக பேசுகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்திற்கும் காணொளி பார்த்ததுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      எபியில் வியாழன் பதிவு, துரை செல்வராஜு ஸாரின் கதைகள் இரண்டு, சனிக்கிழமை ஜெ கே ஸாரின் நான் படிச்ச கதைக்கான கருத்து, ஞாயிறு நெல்லைத்தமிழனின் பதிவுக்கான கருத்துகள் நான் கொடுத்தவை விடுபட்டுவிட்டன என்று தெரிகிறது.

      துளசிதரன்

      நீக்கு
    2. ஸ்பாமில் கூட இல்லையே...  

      நீக்கு
    3. ஸ்ரீராம், ஸாரி, நான் தான் போடாம மறந்து போய்ட்டேன். இன்று கூட பாருங்க இப்பதான் கருத்துகளை வெளியிடறேன். ப்ளாக் பக்கம் போகக் கூட முடியலை. மறந்தே போய்ட்டேன். வேலைப்பளு.

      கீதா

      நீக்கு
  6. படங்கள், விவரணங்கள் விளக்கிய விதம் சிறப்பாக இருக்கிறது.

    காணொளி அருமை தொடர்ந்து வருகிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி. நீங்கள் அங்குதான் இருந்தீர்கள் இப்போதும் இருக்கின்றீர்கள். நேரிலேயே பார்த்த இடங்களாகத்தான் இருக்கும்.

      துளசிதரன்

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அழகான நகரமாகிய துபாய் பயண விபரங்கள், துபாய்க்கு புறப்பட்டு சென்ற விபரங்கள் அங்கு சென்றவிடங்கள், தங்கிய இடங்கள் என விபரமாக சொல்லியிருக்கிறீர்கள்.

    காணொளியும் நன்றாக உள்ளது. அதிலும் தங்களது விளக்கமான உரை மூலம் அத்தனையையும் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. விளக்கமான பயண கட்டுரைக்கு மிக்க நன்றி.

    அங்கு தங்கியிருந்த இரண்டாம் நாள் வேறு பல இடங்களுக்கு சென்ற விபரத்தையும் படிக்க, காண ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவை வாசித்ததோடு காணொளியும் கண்டு கருத்திட்டதற்கு மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்.

      கட்டுரை முழுவதும் தயார்தான் படங்கள் காணொளிகள் எல்லாமே. அடுத்து அதுதான் வரும்.

      மிக்க நன்றி சகோதரி

      துளசிதரன்

      நீக்கு
    2. கமலாக்கா.....என்னை நம்பி பதிவு!!!! ஹாஹாஹாஹாஹா...என்னைப் போல இல்லை துளசி. தொடர் பதிவு முழுவதும் எழுதிட்டுதான் எனக்கு அனுப்புவார் டைப்ப. நானும் தட்டி வைத்துவிட்டேன். துளசியின் குரல் பதிவு வர வேண்டும். காணொலி தயார் செய்ய வேண்டும்.
      நான் தான் தொடர் பதிவு என்றால் பகுதிஎ ழுதிவ்ட்டு தொடரும் போட்டுவிடுவேன் அதன் பின் தொடர்வதுதான்....வரும் வராது என்றாகிவிடுகிறது. முன்பெல்லாம் அப்படி இல்லை. சமீபகாலமாகத்தான் இப்படி.
      ஒரு சில பணிகளில் மும்முரமாக இருப்பதால் இரண்டாவதுக்கான் காணொலி தாமதமாகிறது.

      கீதா

      நீக்கு
  8. சில நாட்களாக வலைப்பக்கம் வர முடியவில்லை. வந்து பார்த்தால் துபாய் பற்றிய பதிவு! என் ஏரியா! எனக்கு தகவல் தெரிவித்திருந்தால் வந்து பார்த்திருப்பேனே என்று கேட்டிருப்பேன். ஆனால் அந்த சமயம் தஞ்சை சென்றிருந்தேன். அதனால் தான் அந்த கேள்வியைக் கேட்க முடியவில்லை!
    துபாயில் 48 வருடங்கள் வாழ்க்கை !! இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது! துபாயை ரசித்து பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்! முழுவதுமாக துபாயின் அழகை, அதிசயங்களைப்பார்க்க இந்த நாட்கள் போதாது. 15 நாட்களில் தான் ஓரளவாவது பர்க்க முடியும்.
    நீங்கள் குறிப்பிட்டுள்ள BANIYAS SQUARE பகுதி பகலிலும் இரவிலும் மிகவும் பிஸியான பகுதி. தமிழர்கள் நிறைய பேரைப்பார்க்கலாம். நிறைய பொருள்களை அங்கு வாங்கலாம்.
    வரப்போகும் பகுதிகளைக் காண, படிக்க ஆவலாக உள்ளேன்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் தஞ்சையில் இருப்பதாகக் கீதா சொன்னார். அதனால்தான் நானும் உங்களைத் தொடர்பு கொள்ளவில்லை. உங்களைப் பற்றிய விவரங்கள் எல்லாம் கீதா சொல்லியிருக்கிறார்.
      அபுதாபியில் இருக்கும் பரிவை சே குமார் அவர்களைச் சந்திக்க நினைத்து தொடர்பு கொண்ட போதிலும் சந்திக்க இயலவில்லை. அவர் சந்திக்கும் இடமும் கூடச்சொல்லியிருந்தார். நாங்கள் அபுதாபியில் சென்ற பகுதிக்கும் (நேரமும் சரியாகச் சொல்ல முடியவில்லை குழுவாகச் சென்றதால்) அவர் இருக்கும் பகுதிக்கும் கொஞ்சம் தூரம் என்பதோடு நேரமும் இல்லை என்பதால் சந்திக்க முடியவில்லை.

      ஆமாம் துபாயில் பார்க்கும் இடங்கள் நிறைய இந்த நாட்கள் பத்தாதுதான்.

      நீங்கள் 48 வருடங்கள் அங்கு வாழ்க்கை. ஒவ்வொரு 5, 10 வருடங்களில் ஏற்படும் மாற்றங்கள் எல்லாம் நீங்கள் கண்டு கொண்டிருப்பீர்கள். நீங்கள் பகிர்ந்திருந்த பல நாடுகள் எக்ஸ்போ காட்சிக்ளைப் பார்த்திருக்கிறேன் உங்க்ள் வலைத்தளத்தில். துபாய் பற்றி நீங்களும் எழுதலாமே. நாங்களும் தெரிந்துகொள்வோம்.

      ஆமாம் நாங்கள் தங்கியிருந்த பகுதி பிசி யான பகுதி. அங்கு பொருட்களும் வாங்கினோம்.

      உங்கள் கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி, சகோதரி மனோ சாமிநாதன். மிக்க நன்றியும்.

      துளசிதரன்

      நீக்கு
  9. பாராட்டு பற்றி அழகாய் எழுதியிருக்கிறீர்கள் கீதா! முக்கியமாக பெண்களுக்கு இந்த ' பாராட்டின் ' அருமை அதிகமாகவே புரியும்! குழந்தை முதல் பெரியவர்கள் வரையிலுமே அந்த இதமான gesture மனதை குளிவிக்கும்!
    எங்கள் உணவகத்தில்கூட நான் எங்கள் வெயிட்டர்களிடம் ' யார் எந்த உணவைப்பாராட்டினாலும் அதை சமைத்தவர்களிடம் உள்ளே போய் மறக்காமல் தெரிவித்து விடுங்கள். சமைத்தவர்கள் மனம் குளிரும்' என்று சொல்லியிருக்கிறேன்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் மனோ அக்கா மிகச் சரியாகச் சொன்னீர்கள். பெண்களுக்கு இது மிக மிக மிக அவசியம். ஆமாம் பெண்களுக்கு இதன் அருமை ரொம்பவே புரியும்!

      //எங்கள் உணவகத்தில்கூட நான் எங்கள் வெயிட்டர்களிடம் ' யார் எந்த உணவைப்பாராட்டினாலும் அதை சமைத்தவர்களிடம் உள்ளே போய் மறக்காமல் தெரிவித்து விடுங்கள். சமைத்தவர்கள் மனம் குளிரும்' என்று சொல்லியிருக்கிறேன்!!//

      மிக மிக அருமையான விஷயம் மனோ அக்கா.ஆமாம் மனம் மிகவும் மகிழ்ச்சியுறும் என்பதோடு அவர்கள் வேலையிலும் மிகவும் கவனமாக இருப்பாங்க!பொறுப்பும் கூடும்.

      அக்கா துளசி சுற்றுலாவுக்குக் கிளம்பிய போது நீங்கள் தஞ்சையில் இருந்தீர்கள் என்பது தெரியும் எனக்கு. அதனால்தான் அவரிடம் நான் மனோ அக்கா அங்கிருந்திருந்தால் சொல்லியிருப்பேன் அவங்க இப்ப தஞ்சையில் இருக்காங்கன்னு சொன்னேன்.

      அக்க்ருத்துக்கு துளசி வந்து பதில் சொல்வார்

      மிக்க நன்றி மனோ அக்கா.

      கீதா

      நீக்கு
    2. இதற்கு முந்தைய பதிவைப் பார்த்தீங்களா!!!! நீங்கள் வரைந்த ஒரு படம் அங்க் இருக்கும்!

      கீதா

      நீக்கு
  10. ​துபாயில் எந்த இடத்தில் என்ன பெயரில் ஹோட்டல் அக்கா?

    பதிலளிநீக்கு
  11. துபாயில் அல் கூஸ் என்னும் ஏரியாவில் எங்களின் ' மீனாட்சி செட்டிநாடு உணவகம் ' இருக்கிறது ஸ்ரீராம்! எங்கள் வீடு துபாயின் முக்கியமான பகுதியான ' கராமா' வில் உள்ளது. இந்த உணவகம் எங்கள் இல்லத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் தொழிலாளர்கள் நிறைந்த ஏரியாவில் அமைந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மனோ அக்கா...  கொரோனா காலத்தில் எனக்கு மிகவும் உதவிய என் நண்பர் துரை இப்போது துபாயில்தான் இருக்கிறார்.  அதனால் கேட்டேன்.

      நீக்கு
  12. கீதா! இதற்கு முந்தைய பதிவைப்பார்க்க முடியவில்லை நான்! பார்த்திருந்தால் அவசியம் கருத்திட்டிருப்பேன்!!
    என் ஓவியம் பற்றிய பாராட்டுரைகளுக்கு அன்பு நன்றி கீதா! பாராட்டிய அன்புள்ளங்களுக்கும் இங்கே என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மனோ அக்கா. அட்டகாசமான ஒவியம் அது! எவ்வளவு திறமைகள் உங்களிடம்! பராவாயில்லை அக்கா எல்லோருக்கும் நிகழ்வதுதானே. பல சமயங்களில் வலைக்கு வர முடியாம ஆகிறதுதான்.

      மிக்க நன்றி மனோ அக்கா

      கீதா

      நீக்கு
  13. துபாய் பயணம் - ஆஹா… மகிழ்ச்சி. பயணம் நல்லது - ஆதலால் பயணம் செய்வோம். பகிர்ந்து கொண்டிருக்கும் தகவல்கள், படங்கள் என அனைத்தும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட்ஜி. ஆமாம் பயணங்கள் மிக நல்லது.

      உடல் நலமா? எங்கள் அனைவரது பிரார்த்தனைகளும் உங்களுக்கு எப்போதும் உண்டு.

      மிக்க நன்றி வெங்கட்ஜி உங்கள் கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
  14. நீண்ட நாள்களுக்குப் பின் வலைப்பக்கம் வருகிறேன் அண்ணா.. பயணங்கள் குறித்து எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன்..இங்கு பார்த்தால் உங்கள் துபாய் பயணம். அருமை அண்ணா. காணொலிகள் பார்த்துவிட்டுக் கருத்திடுகிறேன்.

    உங்களுக்கும் கீதாவிற்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு