செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

மஞ்ஞும்மேல் பாய்ஸ் - குணா குகை உண்மை நிகழ்வு

 

கடந்த ஆண்டு வெளிவந்த ஜூட் ஆண்டனியின் 2018 எனும் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட அருமையான படம். புதிய திரைப்படக் கலைஞர்களும் நடிக நடிகையர்களும் டெக்னாலஜியும் ஒன்றுபட செயல்படும்போது மிக அருமையான படங்கள் நம் கண்களுக்கு விருந்தாகி மனதில் பதிவதுண்டு. கடந்த தினம் அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் பார்க்க நேர்ந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தான் இந்தப் பதிவு.

1992ல் வெளிவந்த கமலஹாசனின் குணா திரைப்படம் ஏராளமான புதுமைகளை சுமந்து வந்த அருமையான படம். அதில் கதாநாயகியைக் கடத்திச் சென்று ஒரு குகையில் தன் காதலை வெளிப்படுத்துவார் கமலஹாசன். படப்பிடிப்பு நடந்த கொடைக்கானலில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Devil's Kitchen என்று பெயருடைய, 1821 இல் பிரிட்டிஷ்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அந்த குகை அதன் பின் குணா குகை என்ற பெயரில் பிரபலமானது.

பலரும் ஆபத்தான அந்த குகைக்குச் சென்று ஆபத்தில் மாட்டி இறந்திருக்கிறார்கள். ஏறத்தாழ 13 பேர்களின் துர்மரணத்திற்குக் காரணமான குகை அது. அங்கு 2006 இல் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் தான், சிதம்பரம் எனும் இயக்குனரின் மஞ்ஞும்மல் பாய்ஸ். சௌ பின், ஸ்ரீநாத் கணபதி, பாலு வர்கீஸ் மற்றும் தீபக் போன்றவர்கள் நடித்துள்ள படம்.

10 பேர் அடங்கிய ஒரு நண்பர்களின் குழு எர்ணாகுளம் மஞ்ஞும்மல் என்னும் இடத்திலிருந்து பழனி வழியாக கொடைக்கானல் செல்கிறார்கள். எல்லா இடங்களையும் கண்டு களித்த பின் இறுதியாகக் குணா குகைக்குச் செல்கின்றனர். தடை செய்யப்பட்ட குகைக்கு இறங்கிச் செல்லும் வழியில் சிலர் நிற்பதைப் பார்த்ததும் இவர்களும் கீழே இறங்கி குணா குகைக்குச் செல்கிறார்கள்.

அப்போதெல்லாம் வனஇலாக்காவின் காவலர்கள் கண்ணில் படாமல் சிலர் இப்படி போவதுண்டாம். பல இடங்களிலும் இரும்பு கிரில் போடப்பட்டிருந்தது. பிளவு பட்ட நீண்ட பாறைகளுக்கு இடையே உள்ள குகை பக்கவாட்டிலும் கீழுமாக அமைந்த Pit Caves எனும் வகையைச் சேர்ந்தது. அருகில் உள்ள Suicide Point  மேலிருந்து கீழ் 5000 அடி என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த குகைகளின் கீழே காணப்படும் இடைவெளி குழிகளின் ஆழம் எவ்வளவு என்று இதுவரை கணிக்கப்படவில்லையாம். மட்டுமல்ல விழுந்தவர்கள் யாரும் மீட்கப்பட்டதாக தகவல்களும் இல்லை.

Devil’s Kitchen குகை கண்டுபிடிக்கப்பட்ட 1821க்குப் பிறகு பலரும் இறந்திருக்கலாம். அதனால் தானோ என்னவோ வெள்ளையர்கள் அப்படி ஒரு பெயரை அந்த குகைக்கு இட்டு விட்டார்கள். Devil’s Kitchen. சாத்தானின் சமையலறை.

இதைப் பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாத மஞ்ஞும்மல்லைச் சேர்ந்த இளைஞர்கள் குகைக்குள் நுழைந்து வரிசையில் ஒருவர் பின் ஒருவராக நடக்கையில் அபிலாஷ் எனும் ஒரு இளைஞன் திடீரென நடுவில் இலைகளால் மூடப்பட்ட ஒரு குழியில் விழுந்து விடுகிறான். திகைத்துப் போன மற்ற நண்பர்கள் இலைகளை நீக்கி பாறை இடுக்கைக் கண்டு திகைத்துப் போகிறார்கள். அந்தப் பிளவு வழியாகக் கத்தி அபிலாஷைக் கூப்பிட்டும் பலன் இல்லை. இறங்கவும் பயம். உள்ளே ஒன்றும் தெரியாத அளவு இருட்டு. அதன் வழியே ஏராளமான வவ்வால்கள் பறந்து வந்ததும் பயந்தே போகிறார்கள்.

பின்னர், ஓடி பலரையும் உதவிக்கு அழைக்கிறார்கள். காவல் துறையினர், வனக்காவலர்கள், தீயணைப்புப் படையினர், அருகே கடைகள் நடத்துபவர்கள், டூரிஸ்ட் கைட் மற்றும் புகைப்படம் எடுப்பவர் என்று எல்லோரும் கூடி கயிறு கட்டி உள்ளே இறக்கி அபிலாஷைக் கூப்பிட்டு கயிற்றைப் பிடித்து ஏறி வர சொல்லி குரல் கொடுக்கிறார்கள். பதில் குரல் கேட்டதும் கயிற்றில் பிடித்து இறங்கத் தீர்மானிக்கிறார்கள்.

ஆனால், அதற்கு, அங்கு உள்ள யாரும் தயாராகாத நிலையில் நண்பர்கள் குழுவில் உள்ள சிஜு டேவிட் எனும் குட்டன் தயாராகிறார். உயிரைப் பணயம் வைத்து தன் நண்பனை தன்னுடன் சேர்த்துக் கட்டி மேலே கொண்டு வருகிறார். மருத்துவமனையில் மருத்துவர்களின் ஆலோசனையின்படி எர்ணாகுளத்திற்கே அடுத்த நாள் கொண்டு செல்கிறார்கள்.

ஊரில் யாரிடமும் நடந்ததைச் சொல்லாமல் பாறையில் வழுக்கி விழுந்ததாகச் சொல்கிறார்கள். இந்தச் சம்பவம் தமிழகத்தில் நாளிதழ் மற்றும் டிவி சேனல்களில் வந்ததை அறிந்த ஒருவர் ஊரில் உள்ளவர்களிடம் அறிவித்திட இந்த அதிசய சம்பவம் எல்லோருக்கும் தெரிய வருகிறது.

அதைத்தொடர்ந்து சிஜு டேவிடிற்குக் கேரள முதல்வரின் பரிசும் ஜனாதிபதி விருதும் வரை கிடைக்கிறது. 18 ஆண்டுகளுக்குப் பின் இது திரைப்படமாகும் போது அதை அருமையாகத் திரைக்கதை, நடிப்பு, கேமரா, இசை. செட்டிங்ஸ் என்று ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவரும் அவரவர் திறமைகளைக் காண்பித்திருக்கிறார்கள். ஷிஜூ காலித்தின் படப்பிடிப்பு பிரமாதம். சுஷின் ஷ்யாமின் இசை பிரமிக்க வைக்கிறது. விவேக் ஹரிஹரனின் படத்தொகுப்பும் அருமை. புரொடக்ஷன் டிசைனர் அஜயன் சாலிசேரி பெரம்பாவூரில் உள்ள உபயோகிக்கப்படாத ஒரு Godown ஐ குணா குகையின் செட்டாக மாற்றி இருக்கிறார். இதற்காக உள்ளே போக வழி உள்ள மூன்று 50 அடி குழிகளை தோண்டி எடுத்து செட் அமைத்திருக்கிறார். பார்த்தால் குணா குகைக்குச் சென்று படமாக்கியது போல்தான் தோன்றும். அவ்வளவு துல்லியமாக செட்டும், கேமரா இசை மற்றும் நடிப்பும் கை கொடுத்திருக்கிறது.

கேரளம் எங்கும் படத்துக்கு நல்ல வரவேற்பு. மட்டுமல்ல உண்மை நாயகர்களான மஞ்ஞும்மல் பாய்ஸை நேர்முகக் காணலில் காண்பித்து அவர்களிடம் நிகழ்வுகளைப் பற்றிக் கேட்டு அறிந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கும் நல்ல வரவேற்பு.

அவிலாஷுக்குக் கிடைத்தது போல் உயிரை பணயம் வைத்து தன் நண்பனைக் காக்கும் நண்பர்கள், அதில் இறந்த பலருக்கும் கிடைத்திருந்தால் அவர்களில் பலரும் இப்போதும் உயிருடன் இருந்திருப்பார்கள் என்று எண்ணும் போது மனம் வலிக்கிறது.

மட்டுமல்ல அபிலாஷ் விழுந்தது 300 அடி ஆழத்தில் கொஞ்சம் முன்னோக்கித் தள்ளி நின்ற ஒரு பாறையிலாம். அங்கிருந்தும் நழுவி அவர் அன்று கீழே போயிருந்தால் விஜுவால் காப்பாற்றி இருக்கவும் முடியாதுதான். இடைவேளைக்குப் பின் திரைப்படம் நம்மை இருக்கையில் நுனிக்குக் கொண்டு சென்று படம் முடியும் வரை மூச்சடக்கிப் பார்க்க வைக்கும் அளவு அருமையாக உருவாக்கிய சிதம்பரத்திற்குப் பாராட்டுகள். கூடவே அதில் நடிக்காமல் வாழ்ந்த நடிகர்களுக்கும்.


-----துளசிதரன்


(படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. Picture courtesy - internet)

19 கருத்துகள்:

 1. OTT யில் கிடைத்தால் பார்க்கிறேன்.  குணா குகை அவ்வளவு பயங்கரமா?  கமல் எப்படி அங்கு படம் எடுத்தார்?  அதுவும் செட்டிங்கோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படம் தியேட்டரில் ரிலீஸ் ஆயிருக்கு. அனேகமா ஏப்ரலில் ஹாட்ஸ்டாரில் வரும். நான் அப்போதான் பார்க்கலாம்னு இருக்கேன், பக்கத்துத் தியேட்டரில் இப்போ ஓடுதான்னு பார்க்கணூம்.

   நீக்கு
  2. கமல் சிலவற்றை அங்கு எடுத்திருக்கலாம். மீதமுள்ளதை இப்படத்தில் போல செட் போட்டு எடுத்திருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. அந்தக் குகைக்குச் செல்லவே 80 அடி கீழே இறங்கிச் செல்ல வேண்டுமாம். அப்போதுதான் குகையை அடையமுடியும் என்கிறார்கள். சிரமமான செயல்தான். கமல் எப்படியோ அந்தக் குகையில் சில பாங்களுக்கேனும் எடுத்திருப்பார். அதனால்தான் அந்தக் குகைக்குக் குணா குகை என்று பெயர் வந்தது என்று தோன்றுகிறது.

   மிக்க நன்றி ஸ்ரீராம், உங்கள் கருத்திற்கு

   துளசிதரன்

   நீக்கு
  3. ஸ்ரீராம், கமல் ரிஸ்க் எடுத்துதான் (அவர் ரிஸ்க் எடுப்பவர்தானே!!) அங்கு ஷூட்டிங்க் நடந்த பிறகு அங்கு சென்றவர்களில் விபத்து ஏற்பட்டதாகவும் அதன் பின் அந்தக் குகைக்குச் செல்லத் தடை விதித்து வேலி போட்டதாகவும் எங்கேயோ வாசித்த நினைவு. அப்ப எல்லாம் அனுமதி இருந்தது என்றே தோன்றுகிறது.

   கீதா

   நீக்கு
  4. இந்தப் படத்தில் நடிகர்கள் தேர்வும் மிக அருமையாக இருக்கிறது. சாதாரணமாக நல்ல தமிழ் பேசும் நடிகர்கள் இது போன்ற மலையாளப் படத்திற்குக் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைத்தாலும் இங்குள்ளவர்கள் எழுதும் வசனங்களைப் பேசும்போது அதனுடன் ஒன்றிப் போக முடியாது. ஆனால் இப்படத்தில் அப்படி இல்லை. அருமையாக நடிகர்களைத் தேர்வு செய்திருக்கிறார்கள். அவர்களின் நடிப்பும் மிகவும் சிறப்பாக இயல்பாக அமைந்திருக்கிறது. பிரமாதமாக அமைந்திருக்கிறது.

   துளசிதரன்

   நீக்கு
 2. நாங்களும் குணா குகை இருக்கும் இடம் போய் பார்த்தோம். கம்பி வேலி போட்டு இருந்தார்கள். மூன்றாவது படத்தில் உள்ளது போல வேர்கள் நிறைய இருக்கும் இடத்தில் படம் எடுத்து கொண்டோம். இளம் வயதில் பயம் தெரியாது ஆவலால் போய் மாட்டி கொண்டு இறந்தவர்கள் அவர்களை காப்பாற்ற போராடும் வீரர்களையும் பாராட்ட் வேண்டும்.
  பட விமர்சனம் பார்க்க தூண்டுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ அங்கு வேர்கள் உள்ள பகுதி உண்டு இல்லையா? அருமையான காட்சி அது. ஆம் இளங்கன்று பயமறியாது என்பது போல இளைஞர்கள் உயிரழந்ததை எண்ணும் போது மனம் பதைக்கிறது. நீங்களும் அங்கு படம் எடுத்துக் கொண்டது மிக்க மகிழ்ச்சி.

   மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு, உங்கள் கருத்திற்கு

   துளசிதரன்

   நீக்கு
 3. பட விமர்சனம் நன்று. படத்தைப் பார்க்கிறேன்.

  குணா குகையின் படத்தைத் தந்திருப்பேனே.

  நாங்கள் சென்றிருந்தபோது இதன் ஆபத்தை அறிந்திருக்கவில்லை. குற்றாலத்தின் பொங்குமாங்கடல் போல ஆபத்தானது போலிருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்தால் பாருங்கள், நெல்லைத்தமிழன். இடைவேளைக்குப் பின் ஒன்றிப் போய்விடுவோம். மலை இருக்கும் இடத்தில் ஆபத்தும் உண்டுதானே.
   குற்றாலத்திலும் இது போன்ற உயிர்பலியாகும் இடங்கள் உண்டு இல்லையா?

   உங்களிடம் குணா குகை படம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியாதே.

   மிக்க நன்றி நெல்லைத்தமிழன், உங்கள் கருத்திற்கு.

   துளசிதரன்

   நீக்கு
 4. தங்களது விமர்சனம் படத்தை காணும் ஆவலைத் தூண்டுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்தால் பாருங்கள் கில்லர்ஜி. இப்போதைய டெக்னாலஜியின் உதவியால் வெளியிடப்படும் படங்கள் சிறப்பாக எல்லாவற்றையும் நமக்குக் காண்பிக்கிறது. அப்படிப் பார்க்கையில் டெக்னாலஜியின் ஒரு பக்கம் அழிவை நோக்கி என்று சொல்லும் சமயம் இப்படியான திறமைகளும் வெளிப்படுகின்றனதான்.

   மிக்க நன்றி கில்லர்ஜி உங்கள் கருத்திற்கு.

   துளசிதரன்

   நீக்கு
 5. தங்களது தகவல்கள் நன்று..

  மனதை பரபரப்புக்கு உள்ளாக்குகின்ற்ன..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆபத்து யாருக்காக இருந்தாலும் வேதனைதானே. நினைத்தாலே மனம் பதறுகிறது.

   மிக்க நன்றி துரை செல்வராஜு சார், உங்கள் கருத்திற்கு

   துளசிதரன்

   நீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. குணா குகை பற்றிய திகில் செய்தியை அறிந்து கொண்டேன். அப்போது குணா படத்தை பார்த்த போதே அந்த இடத்தின் தன்மைகள் நெஞ்சில் பயத்தை உண்டாக்கும். இப்போது நீங்கள் தந்த இந்த படத்தின் விமர்சனம் மேலும் பயம் கலந்த ஆவலை உண்டாக்குகிறது. படம் காணும் சந்தர்ப்பம் வந்தால் கண்டிப்பாக இந்தப் படத்தை பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் படம் பல காட்சிகள் செட் போட்டுத்தான் எடுத்திருக்கிறார்கள் என்றாலும் மிக அருமையாக எடுத்திருக்கிறார்கள். சந்தர்ப்பம் கிடைக்கும் போது கண்டிப்பாகப் பாருங்கள். உண்மைச் சம்பவத்தினை எடுத்திருப்பதால் அதுவும் இடைவேளைக்குப் பிறகு மிக நன்றாக இருக்கிறது.

   மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன் உங்கள் கருத்திற்கு

   துளசிதரன்

   நீக்கு
 7. சிறப்பான விமர்சனம். பார்க்க முயல்கிறேன். குணா குகை பகுதிக்குச் சென்றதுண்டு. அப்போது வெளியே கம்பி வலைத் தடுப்புகள் இருந்தன. மலைப்பகுதிகள் எவ்வளவுக்கு எவ்வளவு அழகோ அங்கே ஆபத்தும் உண்டு என்பதை உணர்ந்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், ஆபத்தும் நிறைய உண்டுதான். படம் மிக நன்றாக எடுத்திருக்கிறார்கள் முடிந்தால் பாருங்கள். நீங்களும் குணா குகை பகுதிக்குச் சென்றிருக்கிறீர்களா கம்பி வலைத் தடுப்புகள் போட்ட பிறகு இல்லையா?

   மிக்க நன்றி வெங்கட்ஜி உங்கள் கருத்திற்கு

   துளசிதரன்

   நீக்கு
 8. மலையாளப் படங்கள், சீரீஸ் எப்போதுமே கதை அம்சத்துடன் இருக்கும். பெரும்பாலும் bankable artistsக்காக கதை பண்ண மாட்டார்கள், அளவுக்கு மீறிய யதார்த்தம் இல்லாத காட்சிகள் இருக்காது. இந்தப் படத்தைப் பார்க்க முயல்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருப்தி தரும் வகையில் எடுத்திருக்கிறார்கள். உண்மைச்சம்பவம். உண்மைச்சம்பவத்தில் நடந்த சில டார்ச்சர்களைக் குறைத்தே எடுத்திருக்கிறார்கள் என்று சம்பவத்தின் உண்மையான பாய்ஸ் அப்படித்தான் சொல்கிறார்கள். முடிந்தால் பாருங்கள்.

   துளசிதரன்

   நீக்கு