வெள்ளி, 8 ஏப்ரல், 2022

கடம்போடுவாழ்வு - 4

வணக்கம்! வந்தனம்! சுஸ்வாகதம்! 

இன்னும் பசுமையான வளமான படங்கள் எல்லாம் அடுத்த பதிவில் என்று சென்ற பதிவில் சொல்லி முடித்திருந்தேன்.  சென்ற பதிவைப் பார்த்த, வாசித்த, கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. 

இதோ 4 வது பகுதி. கடம்போடுவாழ்வின் பசுமையான படங்கள்.  கூடவே ஒரு சிறு முன்ஜாமீன்!!! எடுத்து வைத்துக் கொள்கிறேன்!!!!!!! என் மூன்றாவது விழிக்காக!  

பாருங்கள் இந்த இரு படங்களிலும் கொக்குகள் இருப்பது தெளிவாகத் தெரியவில்லை.  இத்தனைக்கும் சாலையிலிருந்து கூப்பிடு தூரம்.  கொஞ்சம் கிட்டப்பார்வையாக்கி எடுத்ததுதான்....

என் மூன்றாவது விழிக்குக் கிட்டப் பார்வை ஓகே என்றாலும், சிறிய உருவங்கள் 10 அடி தூரத்தில் இருந்தாலும், கொஞ்சம் கிட்டப்பார்வையாக்கித்தான் (ஜூம் in) எடுக்க வேண்டும். சூரியனார் சரியா லைட் அடிக்கலைனா அதுவும் போச்சு!

எங்கு திரும்பினாலும், எந்தப் பக்கம் போனாலும் ....மொட்டை மலை ஒவ்வொரு கோணத்தில்

தூரத்துப் பார்வையில் பெரிய உருவங்கள் மட்டுமே வரும். அதைக் கொஞ்சம் கிட்டப்பார்வை ஆக்கினால், சூரியனார் நன்றாக லைட்  அடித்தால் மலைகள், மரங்கள் போன்ற பெரிய உருவங்கள் கிட்டப்பார்வையில்  வந்துவிடுகின்றன.

பாருங்க இங்கும் மொட்டை மலை!!!

இந்த இரு படங்களும் நான் ஒரே இடத்தில் நின்று கொண்டு எடுத்தவை, ஆனால் வேறு வேறு கோணம். காட்சிகள், லைட்டிங்க் மாறுபடுகிறது பாருங்க.  வாத்துகள் அதிக தூரத்திலில்லை. என்றாலும் கிட்டப்பார்வையாக்கி எடுத்தவை. இவ்வளவுதான் வந்தது.  அவ்வளவா தெரியலை.  

தூரத்துப் பார்வையில் உள்ள சிறிய உருவங்கள் வருவது ரொம்ப ரொம்பச் சிரமம். கிட்டப்பார்வையாக்கினாலும் கூடச் சில சமயம் சில தெளிவாக வராது. அதுவும் கையளவே உள்ள உருவங்கள், பறவைகள் எல்லாம். என் மூன்றாவது விழிக்கு அம்புட்டுத்தான் பவர். பாவம்...

சரி.. விழிக்குக் கண்ணாடி (எஜ்ஸ்ட்ரா ஜூம் லென்ஸ்) போட்டாலோ? தேவைப்படும் போது பொருத்திக் கொள்ளலாமேன்னு ஒரு ஆர்வத்தில்  ஆராய்ச்சி செய்ததில் முடியாது என்று தெரிந்தது.  உள்ளதை வைத்துத் திருப்திப்பட்டுக்குவோம். 

புகைப்படங்கள் கூட, சூரியனார் மனம் வைத்து கரெக்ட்டா லைட் அடித்தால், ஆட்டோ மோடில் எடுத்துவிடலாம். இல்லை என்றால் நாமே செட்டிங்க்ஸ் செய்து, சூரியனாரின் உதவியுடன் ஏதோ வந்துவிடும்.

ஆனால் காணொளிகளுக்கு செட்டிங்க்ஸ் செய்ய முடியவில்லை. ஆட்டோமோட்தான். பெரிய உருவங்கள், சூரியனார் சரியா லைட் அடித்தால் கிட்டப்பார்வையாக்கினால் ஓரளவு வந்துவிடும்.  இல்லை என்றால் வராது. 

சிறிய உருவங்கள்? நோ சான்ஸ்!

இதுல வெளிச்சம் குறைந்தாலும் சரி, இரவுக் காட்சிகள், ஃப்ளாஷ் போட்டாலும் கோவிந்தா! நானும் கலைஞி இல்லையே!!

அது எப்படி வந்திருந்தாலும், கீதாவுக்கு, தான் எடுத்ததைப் போடலைனா இருப்புக் கொள்ளாதே! என்ன செய்ய! அதுக்குத்தான், அதுக்குத்தான் இந்த முன்ஜாமீன்!!!!!!!!!! அதான் சொல்லி வைத்தேன்!

ஆனால் இவை எல்லாம் ஒரு எனர்ஜி டானிக். ஊக்கம் தருபவை. நினைவுப் பொக்கிஷங்கள் சந்தோஷம் தருபவை. ரசிப்பவற்றை சேமித்து வைத்துக் கொள்ள நினைப்பவள் நான். ஒரு வேளை மூப்பாகி இருந்தேன்னு வைங்க, வெளியில் செல்ல முடியாமல் போனால், நினைவுத்திறன் ஓரளவு இருந்தால், சேமித்ததைப் பார்க்கும் போது ஒரு உற்சாகம் வரும்.  

இங்கு நம் சீனியர் மோஸ்ட் பதிவர்கள் சிறந்த உதாரணங்கள். சேமித்த படங்களைப் போட்டு நினைவு வைத்துச் சொல்லுதல், வாசித்தல், காணொளிகள் பார்த்துக் கேட்டுப் பகிர்தல், சமையல் குறிப்புகள் சொல்லுதல் இவை எல்லாமே சிறந்த பயிற்சி எனலாம். 

வயதானாலும் தங்களை உற்சாகமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பு!  இது இது இதுதான் மிக மிக முக்கியம்.

இந்தப் பசுமைப் படங்களும், இயற்கைப் படங்களும் எனக்கு ஒரு வேளை பின்னாளில் பார்க்கும் போது, 'அட! கீதா நீயா இதை எல்லாம் எடுத்தே!' என்று என்னை நானே உற்சாகப்படுத்திக் கொள்ளலாம். இப்போது பழைய பதிவுகளைப் பார்த்து, "அட கீதா நீயா இப்படி எழுதினே" என்று வியப்பது போல! அதனால்தான் எப்படி வந்தாலும், ரசிக்கும் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்துச் சேமித்து இங்குப் பகிர்ந்து வைத்துக் கொள்ள முயற்சி! என் மகன் பார்க்கும் போது அம்மாவின் பொக்கிஷங்கள் என்று ஒரு சந்தோஷம் வருமே! அவ்வளவே.

(இந்தக் கீதாவுக்குப் பட்டு, நகை,  இவற்றில் சுத்தமாக ஆசையே கிடையாது என்றுமே. வாங்கியதும் இல்லை. ஆனால், பிடித்தவை ரசிப்பவை நிறைய. அதில் ஒன்று பயணமும் மூன்றாவது விழியும் ரொம்பப் பிடித்த சமாச்சாரங்கள். எனவே மகனிடம் ஒரு வார்த்தை சொல்லி வைத்திருக்கிறேன். மூன்றாவது  விழிக்கும் சேர்த்து.)


ஊர் முழுவதும் வாழையும், வயலும்தான்...இடையில் பனை....செழிப்போ செழிப்பு.  விவசாயிகளின் உழைப்பு!




மரச்சீனிக் கிழங்குச் செடியும் இருக்குல்லா...நடுக்க முருங்கை தெரியியா...தின்னவேலிக்காரங்களுக்கு முருங்கக்கா இல்லாம சாம்பாரோ, கூட்டாஞ்சோறோ வைக்கமாட்டாங்க பாத்துக்கிடுங்க...

 இந்தா இருக்குல்லா களக்காடு மெயின் ரோடு போற ரோடு. இந்தால ஒரு அரைக் கிமீ போனா ரைட்டுல வடக்கு கடம்போடுவாழ்வு வந்திரும்...ஹையோ ரோடு முழுக்க ரெண்டு பக்கமும் பச்சைதான் போங்க!





உழவர் ட்ராக்டர் ஓட்டி உழுது கொண்டிருக்கிறார். அவர் ஓட்ட ஓட்ட கொக்குகள் அங்குமிங்கும் பறந்து உட்காருவது அழகு! பின்னணியில் கோயிலில் போட்ட ஏதோ பாட்டு கேட்கிறது
Heronry of Egrets 
https://youtu.be/ctMPDbsF1IY

பதிவில் சேர்க்காத படங்களுடன் ஒரு படத் தொகுப்பு - சுட்டிகள் 

https://youtu.be/aQ20IOwWLBc


கொக்குகள், நீர்க்காகங்கள் பறக்கும் காணொளிகளின் சுட்டி இதோ நேரமிருந்தால், விருப்பமிருந்தால் பாருங்கள்



கடம்போடுவாழ்வின் பசுமைப் படங்கள் இன்னும் வரும். அதற்கு முன் எங்கள் பகுதி ஏரியில் எடுத்த படங்கள் வரும்!!!! அதுக்கும் சேர்த்துதான் மேல பதிவுல சொன்னது.  அடுத்த பதிவில் சந்திப்போம்!


------கீதா


28 கருத்துகள்:

  1. கொக்குகள் ஏதோ செடியில் பூத்த வெண்மலர்கள் போல காணப்படுகின்றன.   மொட்டை மலையானாலும் அழகுதான்.  ஆனால் பசுமை கண்ணில் படாதது ஏமாறமாயிருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம். ஆமாம் இதைப் படத்தின் கீழ் அடித்துவிட்டு அப்புறம் நீக்கிவிட்டேன். உங்களில் யாராவது ஒருவர் சொல்ல கருத்தாக இருக்கட்டுமே என்று.

      மொட்டை மலை அது ஒரு வித அழகுதான் ஸ்ரீராம் அதன் மேல் பசுமை இல்லைதான்...அதைச் சுத்தி பச்சை ஊருக்குள். நெடுஞ்சாலைலருந்து பார்த்தா (அதை முதல் பதிவுல போட்டிருக்கேன்) அது வேற மாதிரி இருக்கும்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  2. ஏரியோடு கண்ணில் படும் மொட்டைமலைகள் ரசிக்க வைக்கின்றன.  அங்கில்லாத குளிர்ச்சியை இது ஈடுகட்டி விடுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் பெரிய குளம்னு சொல்றாங்க...நமக்கு அது ஏரி போல இருக்கு. ரொம்பப் பெரிசு. மலை கொஞ்சம் தள்ளிதான் இருக்கிறது . ஜூம் பண்ணி எடுத்தேன்.

      ஆமாம் சுற்றி குளிர்ச்சியைத் தரும் தான் அதுவும் நல்லகாற்று. மழை பெய்த சமயம் இல்லையா அதனால குளங்கள் ரொம்பி வழிந்தன.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  3. கேமிரா பற்றி ஏதேதோ சொல்கிறீர்கள்.  நமக்கு அதெல்லாம் தெரியாது.  எடுத்தோமா, கண்ணில் வைத்தோமா, க்ளிக்!  அவ்வளவுதான்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா ஸ்ரீராம், கேமரா எனக்கு ரொம்பப் பிடித்த விஷயம். அதனால் ஆர்வத்தில் கூகுள் ல தெரிந்து கொண்டு கொஞ்சம் சோதனை பண்ணிப் பார்த்து கற்பது. அவ்வளவுதான் ஸ்ரீராம்...

      நான் ஒண்ணும் புதுசா சொல்லலை உங்களுக்கும் தெரிந்ததுதான் இது. ஜூம் இன் ஜூம் அவுட் அதை கிட்டப் பார்வை தூரத்துப்பார்வைனு சொல்லிருக்கேன் அவ்வளவுதான்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  4. பசுமைப் படங்கள் எல்லாமே அழகு.  குறிப்பாக குழந்தை வாழைத்தோட்ட படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தை வாழைத்தோட்ட படம்.//

      ஹாஹாஹா ரசித்தேன்! மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  5. படங்கள் மிக அழகாக வந்திருக்கின்றன.

    கிராமத்தைத் தேடிப் பயணித்த உணர்வு.

    அழகான இரட்டை (மொட்டை) மலை, வாழைக்கன்றுத் தோப்புகள் என மிகமிக அழகாகவும் கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நெல்லை. இந்தப் பகுதி கிராமங்கள் குறிப்பா மகேந்திரகிரி மலைத்தொடர் அடிவாரக் கிராமங்கள் எல்லாமே அழகுதான். நான் போனது மழை சீசன்...கோடையிலும் போய்ப் பார்க்க ஆசை உண்டு..

      மிக்க நன்றி நெல்லை.

      கீதா

      நீக்கு
  6. படங்களின் பசுமை காட்சிகள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கிறது காணொளி கண்டேன்.

    தின்னவேலி ஸ்லாட் சூப்பர்

    தொடர்ந்து படங்கள் வரட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பசுமைக் காட்சிகளை ரசித்தமைக்கு மிக்க நன்றி கில்லர்ஜி!

      //தின்னவேலி ஸ்லாட் சூப்பர்//

      ஹாஹாஹாஹாஹா....

      தொடர்ந்து வரும்.

      மிக்க நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
  7. //இவை எல்லாம் ஒரு எனர்ஜி டானிக். ஊக்கம் தருபவை. நினைவுப் பொக்கிஷங்கள் சந்தோஷம் தருபவை. //

    உண்மை.


    அருமையான படங்கள்.
    மலைகள், வாழைத்தோப்பு, ஆறு , வயல்கள் என்று பார்க்க அழகு.
    வெள்ளை கொக்குகள் பறப்பதும் தெரிகிறது.

    காணொளி அருமை.
    பாடல் என்ன என்று தெளிவாக கேட்கவில்லை, காற்றின் ஒலி அதிகமாக இருப்பதால் கேட்கவில்லை.
    கொக்கு பறப்பதும், உழுது கொண்டு இருப்பதும் நன்றாக தெரிகிறது.

    எங்கள் மாமியார் வீட்டில் அந்த மொட்டை மலை போலவே ஒரு கல் இருக்கிறது, அதில் மாமியார் வெல்லம் தட்டுவார்கள்.(உடைப்பார்கள்).
    பெருமாள் மலையில் மூலவர் பெருமாள் இந்த மொட்டை மலை போலவே காட்சி அளிப்பார்.

    இயற்கையை நன்றாகவே உங்கள் மூன்றாவது கண் படம் எடுத்து இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெள்ளை கொக்குகள் பறப்பதும் தெரிகிறது.//

      தெரிந்ததா கோமதிக்கா....ஹப்பா மிக்க நன்றி கோமதிக்கா..

      ஆமாம் பாடல் கேட்கவில்லை காற்றுச் சத்தம் ....

      உழும் போது நாரைகள்/கொக்குகள் பறந்து பறந்து ஹையோ அதை நேரில் பார்க்கறப்ப அத்தனை அழகு கோமதிக்கா. அதுக்காகவே அதை காணொளி எடுத்து இங்கு சேமித்து வைப்போம் எப்ப வேணாலும் பார்த்துக்கலாமே என்று.

      //எங்கள் மாமியார் வீட்டில் அந்த மொட்டை மலை போலவே ஒரு கல் இருக்கிறது, அதில் மாமியார் வெல்லம் தட்டுவார்கள்.(உடைப்பார்கள்).//

      அக்கா என் பிறந்த வீட்டிலும் அதே கல் உண்டு தட்டுவதற்கு அந்தக் கல்லைத்தான் பயன்படுத்துவாங்க. மாமியார் வீட்டிலும் உண்டு.

      //பெருமாள் மலையில் மூலவர் பெருமாள் இந்த மொட்டை மலை போலவே காட்சி அளிப்பார்.//

      ஓ அப்படியா. இந்தக் கோயில் சென்றதில்லை.

      //இயற்கையை நன்றாகவே உங்கள் மூன்றாவது கண் படம் எடுத்து இருக்கிறது.//

      மிக்க நன்றி கோமதிக்கா ரசித்தமைக்கு

      கீதா

      நீக்கு
  8. முதல் சுட்டியில் பாலசுப்பிரமணியன் பாடும் சினிமா பாடல் கேட்கிறது, பல்லவி ஒன்று கூறு என்று கேட்கிறது. பற்வைகள் நன்றாக தெரிகிறது.
    அடுத்த பட தொக்குப்பு சுட்டியில் வெண்மேகம் மறைத்த மலைகள், வான் நீலம் , வெண்மேகம் மற்றும் வாழைத்தோப்பூ எல்லாம் அருமை.
    மீதியை வந்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் சுட்டியில் பாலசுப்பிரமணியன் பாடும் சினிமா பாடல் கேட்கிறது, பல்லவி ஒன்று கூறு என்று கேட்கிறது. பற்வைகள் நன்றாக தெரிகிறது.//

      கண்மணி கண்மணி பாடல் இல்லையா? அது எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை கோமதிக்கா. எனக்குக் கேட்கவில்லை அங்கு எடுக்கும் போது. ட்ராக்டர் சத்தம் தான் கேட்டது. கேமராவில் வீடியோவில் பதிருந்தது.

      பறவைகள் பறப்பது தெரிகிறது ..சொன்னது சந்தோஷம் கோமதிக்கா

      எல்லாம் ரசித்தமைக்கு மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  9. படங்கள் எடுத்த வரையில் ஓகே. எங்கெங்கு நோக்கினும் வாழை. ஒரே ஒரு படம் அது என்ன கப்பையா?

    தமிழ் நாட்டில் ஏரி குளம் நிரம்பி இருப்பதைக் காண கண் கோடி வேண்டும்.  நீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்கும். 

    P & S நைட் வியூவுக்கு சரியில்லை. இது (P & S ) சுற்றுலா போகிறவர் களுக்கானது. DSLR விலை அதிகம்.மேலும் நமக்கு அதிகம் உபயோகம் இல்லை. ஆகவே இதை வைத்தே நீங்கள் சமாளிக்கலாம். போதாதற்கு editor உதவும். 

    பெற்றோர் கடம் போடு வாழ்வில் தற்போதும் உள்ளனரா? மருத்துவ வசதிகள் போதுமான அளவில் உண்டா? 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் நாட்டில் ஏரி குளம் நிரம்பி இருப்பதைக் காண கண் கோடி வேண்டும். நீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்கும். //

      ஆமாம் ஜெகே அண்ணா. அப்போது மழை நேரம் அதுவும் மழை கொட்டியதே சென்ற நவம்பரில். அப்போதுதான் இதெல்லாம். இந்தக் கிராமத்திற்குத் தண்ணீர்ப் பஞ்சம் இருந்ததாகத் தெரியவில்லை இதுவரை.

      ஆமாம் பி & எஸ் சரியாவதில்லை. அண்ணா, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் பயணம் செய்வதுண்டு எனக்கு ரொம்பப் பிடித்த விஷயம். சமீபகாலமாகத்தான் போகவில்லை. என்ட்ரி டிஎஸ்எல்ஆர் கூட இருக்கு. எனக்குச் சில ஆர்வங்கள், செய்ய வேண்டும் என்று இருக்கு சில ஐடியாக்கள். மகனுக்கும் ஆர்வம் உண்டு.

      எடிட்டர் நான் எல்லாப் படங்களுக்கும் பயன்படுத்துவதில்லை. சிலதுக்கு....க்ராப் பண்ணும் போது கொஞ்சம் சிறிய உருவங்கள் ப்ரொஜெக்ட் ஆகி முன்னர் வந்து கொஞ்சம் க்ளியராகத் தெரியும். லைட்ட்ங்க் என்ஹேன்ஸ்மென்ட் வேண்டும் என்றால் செய்வேன் இல்லை என்றால் செய்வதில்லை.

      கடம்போடுவாழ்வு என் பிறந்த ஊர் இல்லை. அது என் அப்பாவின் சித்தி வசிக்கும் ஊர். என் ஊர் திருவண்பரிசாரம், நாகர்கோவில்.

      கிராமத்திலிருந்து 6 கிமீ தூரத்தில் தூரத்தில் ஏர்வாடி. வள்ளியூரிலும் மருத்துவமனைகள் இருக்கின்றன. பெரிய ஆப்பரேஷன் என்றால் நாகர்கோவில் அல்லது திருனெல்வேலிக்குத்தான் செல்கிறார்கள். அல்லது மதுரை.

      மிக்க நன்றி அண்ணா.

      கீதா

      நீக்கு
  10. என்னே அழகான காட்சிகள்... அதிலும் இரண்டாவது படம் மிகவும் ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் டிடி! இரண்டாவது படம் நான் ரொம்ப ரசித்து எடுத்த படம். கொஞ்சம் வித்தியாசமாக என் கண்ணில் பட்டால் உடனே மூன்றாவது அகப்படுத்திவிடும்!! ஹாஹா

      மிக்க நன்றி டிடி

      கீதா

      நீக்கு
  11. காமிரா பற்றிச் சொன்ன தொழில் நுட்ப விஷயங்கள் மண்டையில் ஏறவே இல்லை. படங்கள் எல்லாம் ரொம்ப அனுபவித்து ரசித்து எடுத்திருக்கீங்க. எல்லாமே நன்றாக உள்ளன. இரண்டாவது படத்தை மறுபடி போய்ப் பார்த்துக் கொக்குகளையும் ரசித்துவிட்டு வந்தேன். இந்த மட்டும் பசுமை காப்பாற்றப் படுகிறதே அதுவே பெரிய விஷயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா அது ஒன்றும் பெரிய நுட்பம் எல்லாம் இல்லை. ஜூம் செய்து எடுப்பதும் ஜூம் செய்யாமல் எடுப்பது நான் வைத்திருக்கும் காமெராவில் எப்படி வருது என்பது மட்டும்தான். லைட்டிங்க் சரியா இல்லைனா வ்ராது, சின்ன உருவங்கள் எப்படி வருது என்று. அவ்வளவுதான் கீதாக்கா.

      ரசித்தமைக்கு மிக்க நன்றி கீதாக்கா.

      ஆமாம் இந்தப் பசுமை இதுவரை காப்பாற்றப்படுகிறது. ஊரில் விவசாயம்தான் முக்கியத் தொழிலாக இருப்பதால். அடுத்த தலைமுறை என்ன செய்யுமோ...இப்ப சில இளைஞர்களும் விவசாயத்தில் இருப்பது தெரிகிறதுதான் இருந்தாலும்.

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  12. பனைமரங்கள் எனக்கு நுங்கை நினைவுபடுத்துகிறது

    இங்கு மகள் ஒரு நுங்கு (3 உள்ளது) 40 ரூபாய் என்று நிறைய வாங்கினாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் எனக்கும் அங்கு சென்ற போது சாப்பிட ஆசை ஆனால் அப்போது சீசன் இல்லையே. இப்போது நிறைய கிடைக்கும். எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

      இங்கும் நீங்கள் சொல்லியிருக்கும் அதே விலைதான். 3 சுளையுடன் இருப்பது.

      போன வருடம் 30 ரூ பாயாக இருந்தது. போன வருடம் சிலர் 20க்குக் கொடுத்தாங்க. 2 சுளை இருந்தது 15க்குக் கிடைத்தது.

      சென்னையில் என்ன விலை என்று தெரியலை.

      கீதா

      கீதா

      நீக்கு
  13. ரசித்து, அனுபவித்து எழுதியதைப் போல் உள்ளது. எங்களையும் ஈர்த்துவீட்டீர்கள். இதுபோன்ற உங்களின் பதிவுகளை அதிகம் விரும்பிப்படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா தங்களின் ரசனைக்கும்,

      //இதுபோன்ற உங்களின் பதிவுகளை அதிகம் விரும்பிப்படிக்கிறேன்.//

      ஊக்குவித்தலுக்கும் மிக்க நன்றி ஐயா

      கீதா

      நீக்கு
  14. படங்களும் தகவல்களும் சிறப்பு. சேமிக்கும் காட்சிகள் அனைத்தும் பொக்கிஷங்கள். தொடரட்டும் உங்கள் சேமிப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வெங்கட்ஜி பொக்கிஷங்கள்தான்.

      மிக்க நன்றி வெங்கட்ஜி! உங்கள் பிஸி பணிகளுக்கிடையிலும் வந்து கருத்து சொன்னமைக்கு.

      கீதா

      நீக்கு