வியாழன், 10 மார்ச், 2016

செல்ஃபி/க்ரூப்ஃபி – டைஃபி????!!!!!

செல்ஃபி! இது இப்போது பிரபலமாகி வைரல் ஆகி உள்ளதாக இருக்கலாம். ஆனால், செல்ஃபி 15 நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்தே இருக்கிறது என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் டாக்டர் டெர்ரி ஆப்டெர் சொல்லுகின்றார்.

தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுவதற்கு வழிமுறைகள் இருந்தால் அதை மக்கள் உபயோகப்படுத்துவதில் முனைப்புடன் இருப்பது என்பது காலம் காலமாக இருக்கிறது. இந்தவகையில் தங்கள் உருவப்படமும், அதனால் உருவாகும் தங்களைப் பற்றிய நடத்தைப் பண்பாட்டையும் முன்நிறுத்துவதை மட்டுறுத்த முடிவது மட்டுமல்லாமல் தங்கள் படம் வெளியாவதன் முக்கியத்துவமும், சமுதாயத்தில் தங்கள் பதவியும், படிநிலையும் (அந்தஸ்தும்) வெளியாவதாகவும் கருதுகின்றார்கள்.

பல கேள்விகளுக்கிடையில் சிக்கியிருந்தாலும், உலகின் முதல் செல்ஃபி என்று கருதப்படுவது, 1839 ஆம் வருடம், ஃபிலடெல்ஃபியாவைச் சேர்ந்த, அமெச்சூர் வேதியியலாளரும், புகைப்படக் கலையில் ஆர்வமும் கொண்ட, ராபெர்ட் கார்னிலியஸ் என்பவர் தன்னை எடுத்துக் கொண்ட புகைப்படம்.


தனது குடும்பத்துக் கடையின் பின்புறம் தனது புகைப்படக் கருவியை மேற்புறமாக வைத்துவிட்டு, அதன் லென்சின் மூடியை நீக்கிவிட்டு, மீண்டும் அந்த லென்சை மூடுவதற்குள், ஓடி வந்து அதன் ஃப்ரேமிற்குள் ஒரு நிமிடம் உட்கார்ந்து எடுத்திருக்கிறார். எடுத்து முடித்ததும், அதன் பின் புறம் இப்படி எழுதியிருந்திருக்கிறார். “The first light Picture ever taken. 1839.” இப்படி எடுப்பது, அதன் பின், அக் காலத்திலேயே பரவலாக இருந்திருக்கிறது.

இப்படி வெளிப்படுத்துவது என்பது, உளவியலில், நம்மை யார் என்று வெளிப்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது. “looking-glass self” என்பது உளவியலில் சொல்லப்படும் வார்த்தை. அதாவது, நாம் நம்மைப் பற்றிய நமது பார்வை, நாம் எப்படி இருக்கின்றோம் என்பதிலிருந்து வருவதில்லை. மாறாக இந்தச் சமூகம் நம்மை எப்படிப் பார்க்கிறது என்பதிலிருந்து வருவது.

நாம் பிறருடைய முகத்தைக் கவனிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள்தானே. பிறருடைய முகங்களைக் காண்பதில் ஆர்வம் இருப்பது போல் நம் முகத்திற்கு எத்தனை “லைக்ஸ்” வருகின்றது என்பதை அறியும் ஆர்வமும் மேலிடுவதால் சமூக வலைத்தளங்களில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறதாம். அதாவது சுய மரியாதையை மேம்படுத்துவதாக.

சுய மரியாதையை மேம்படுத்துவதால், இதன் பயன்பாடுகள் விற்பனைத்துறையில், ஊடகங்களில் அதிகம் இருந்தாலும், தற்போது பரவி வரும் வேகத்தைப் பார்த்து உளவியலாளர்கள் சொல்லுவது, செல்ஃபிக்கள் அதிகமாக வெளியானால், அது உறவுகளைக் கூடப் பாதிக்கலாம் என்றும் அதனை narcissism அதாவது “தற்காதல்” என்றும் சொல்லுகின்றார்கள்.


ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி “செல்ஃபி” என்ற வார்த்தையை 2013 ஆம் வருடத்து வார்த்தையாகச் சொல்லியிருக்கிறது. எல்லாம் இருக்கட்டும்.

தற்போது செல்ஃபி, க்ரூப்ஃபி என்று எல்லா தரப்பு மக்களிடையேயும் வைரலாகி உள்ளது என்றாலும் குறிப்பாக இளைஞர்களிடையே என்பது எல்லோரும் அறிந்ததே. 

அது தற்காதல் என்று என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும், செல்ஃபி/க்ரூப்ஃபி எல்லாம் ஜாலிதான். அதுவல்ல விபரீதம். ஆனால் எதுவரை? அதற்கும் ஓர் எல்லை உண்டல்லவா? கத்திக்கு இரு பயன்கள் இருப்பது போல்? ஆனால் இப்போது சமீபகாலத்தில் இந்த ஃபிக்கள், அதனால் விளையும் விபரீதம், உயிர் கொல்லியாகவும் உருவாகி வருகின்றது என்பதுதான் வேதனை. பயமுறுத்துவதும் அதுதான்.

மும்பையில் 14 வயதுப் பையன் ரெயிலில் செல்ஃபி எடுக்கப் போக ரயிலிலிருந்து விழுந்து இறந்திருக்கிறான்.  சில கல்லூரி மாணவிகள் கடற்கரையில் பாறையின் மீது நின்று செல்ஃபி எடுக்கப் போக கடலில் விழுந்து உயிரிழந்திருக்கிறார்கள்.

இதோ இந்தக் காணொளியில் பாருங்கள். பள்ளியில் ஒரு மாணவி செல்ஃபி எடுத்து மரணம்.


இந்தக் காணொளி க்ரூஃபி யினால் மரணம் ஏற்படுவது பற்றி. மொழி புரியாது என்றாலும் படங்கள் நமக்குச் சொல்லிவிடுமே.


மிக மிக மோசமான செல்ஃபி/க்ரூப்ஃபி புனேயில் நடந்த நிகழ்வு. மலை முகட்டில் ஒரு குழு அமர்ந்து கொண்டு ஒருவருக்கொருவர் இடுப்பில் கைகளிட்டு இணைந்து கொண்டு செல்ஃபி எடுக்கப் போகத் தவறி கீழே அனைவரும் விழுந்து இறந்திருக்கிறார்கள்.


உலகம் முழுவதும் இந்த செல்ஃபி வைரஸ் நோய் பரவியிருந்தாலும், 2015ஆம் வருடம் அதிகமாக செல்ஃபிக்கள் எடுக்கப்பட்டதாகவும், உலகிலேயே இந்தியாதான் செல்ஃபியினால் ஏற்படும் இறப்பு விகிதத்திலும் முதலிடம் வகிக்கின்றதாகவும் செய்தி சொல்லுகின்றது. இதோ இந்தக் காணொளியைக் காணுங்கள்.


இந்த நிகழ்வையும் பாருங்கள்.  நீங்கள் ஊடகங்களிலும் வாசித்திருக்கலாம். மனிதர்களின் முட்டாள்தனத்திற்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றது. முட்டாள்தனத்தால் ஆறறிவை எப்படியேனும் உபயோகித்துக் கொண்டுத் தங்கள் அழிவைத் தேடிக் கொள்ளட்டும். ஆனால், இந்தப் பாவப்பட்ட உயிரினம் என்ன பாவம் செய்தது? முட்டாள் மனிதர்களின் கையில் சிக்கி க்ரூப் செல்ஃபி/க்ரூஃபி என்ற பெயரில் உயிரை விடுவதற்கு?

மிகவும் அரிதாகிவரும், அழிந்துவரும் இனமான ஃப்ரான்சிஸ்கானா டால்ஃபின்களில் (Franciscana dolphins) இரு குட்டி டால்ஃபின்கள் கரையை நோக்கி வந்த போது இவர்கள் ஒன்றினை எடுத்துத் தங்களுக்குள் மாற்றி மாற்றிக் கொடுத்து செல்ஃபி எடுத்துக் கொண்டதில் டால்ஃபின் வெகு நேரம் தண்ணீரிலிருந்து வெளியில் இருந்ததால் உடம்பில் நீர் சத்துக் குறைந்து இறந்தே போனது. மனிதாபிமானமற்ற இந்தச் செயலை என்னவென்று சொல்ல?

இளம் பெண்கள், பையன்களை இந்தச் செல்ஃபி ஃபேய் பிடித்து ஆட்டிக் கொண்டு உயிரையும் மாய்த்து எத்தனைப் பெற்றோர்களைப் பரிதவிக்க வைத்திருக்கிறது! மும்பையில் பல இடங்கள் “நோ செல்ஃபி இடங்கள்” என்று பட்டியலிடப்பட்டு எச்சரிக்கைச் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

ஆன்ட்ராய்ட் ஃபோன்/ஸ்மார்ட் ஃபோன்களினால் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் எதிர்மறை மாற்றங்களைப் பற்றி எங்கள் ப்ளாகில் பல உண்மைகளைச் சொல்லியிருந்தார்கள். http://engalblog.blogspot.com/2016/02/blog-post_17.html அதில் இதையும் சேர்த்துக் கொள்ளலாம். 

சமீபத்தில் நடந்த திருமணத்தில் தாலி கட்டி முடிந்ததும், பையன், மற்றும் பெண்ணின் நண்ர்கள், தோழிகள் குழாம் மேடைக்கு ஓடிச் சென்று செல்ஃபி/க்ரூஃபி. மந்திரம் சொல்லிக் கொண்டிருந்த வாத்தியார் கொஞ்சம் சத்தம் போட, திடீரென்று ஒரு பையன், "ஹை மாமா உங்க கூட ஒரு செல்ஃபி" என்று சொல்லி எடுத்துக் கொள்ள, கோபக்கண்களின் சிவப்பு அவர் கன்னத்திற்கு வெட்கத்தின் அடையாளமாக மாறியது.

போகிற போக்கைப் பார்த்தால், ஒருவரின் மரணத்தின் போது கூட, ஐயையோ! இறந்தவருடன் இதுவரை புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லையே என்று செல்ஃபி எடுத்துக் கொள்வார்களோ??!!. (இதுவும் கூட நிகழ்ந்துவிட்டதாமே!!! ஒபாமா இப்படிச் செல்ஃபி எடுத்துப் பிரச்சனையில் சிக்கிக் கொண்டாராம். நன்றி மைதிலி!)

இறுதியாகச் சொல்ல விழைவது இதுதான்.  தொழில்நுட்பம் மிகவும் அவசியமே!. மாற்றுக் கருத்து இல்லை. தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் ஒரு புறம் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றாலும் மறுபுறம் அழிவிற்கும் வழிவகுக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. தொழில்நுட்பத்தில் தவறில்லை. அது நம்மை ஆட்சி செய்து அதற்கு நாம் அடிமையாவதை விட, அதனை ஆட்டுவிக்கும் சக்தி நம்மிடம், நம் கட்டுக் கோப்பிற்குள் இருக்க வேண்டும்.

வீட்டிலும், பள்ளியிலும் குழந்தைகளுக்கு இதனைப் பற்றி அறிவுறுத்தலாம் என்றும் தோன்றுகின்றது.

செல்ஃபி எடுத்துக் கொள்ளுங்கள். மகிழுங்கள். வாழ்க்கையைக் கொண்டாடுங்கள். அதே சமயம் நீங்கள் செய்ய வேண்டியது, அறிவுபூர்வமாக, அதற்கும் ஒரு எல்லை வகுத்துக் கொண்டு, ஆபத்தான இடங்களில் எடுப்பதைத் தவிர்த்துவிடுங்கள். உங்கள் பெற்றோரை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். உங்கள் எதிர்காலக் கனவுகள், இலட்சியங்களை ஒரு நிமிடம் மனதில் ஓட விடுங்கள். இந்த ஒரு நிமிட மகிழ்வு துன்ப நிமிடமாக மாறுவதை விட, இயற்கை அழைத்துக் கொள்ளும் நிமிடம் வரை, வாழ்க்கையைக் கொண்டாட இன்னும் பல நொடிகள், நிமிஷங்கள், நாட்கள், வருடங்கள் இருக்கின்றன என்பதையும் நினைவில் நிறுத்துங்கள். வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குங்கள்!

படங்கள், காணொளிகள் - நன்றி கூகுள், யூட்யூப்

------கீதா

(இது செல்ஃபிக்கு எதிரானக் கட்டுரை அல்ல.  அதனை விபரீதமாக்கி விடாமல் பாதுகாப்பாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுவதே)41 கருத்துகள்:

 1. ஒருவர் கண்ணாடி முன்பு போகும் போது தன்னை நோக்காமல் போவது மிகவும் அரிது கண்ணாடியில் காணும் பிம்பம் உடனே போய் விடும் செல்ஃபியில் எடுத்த படம் சேகரிக்கலாம் மேலும் செல்ஃபி எடுப்பவர்கள் தங்களை வித்தியாசமான கோணங்களில் கண்டுமகிழ விரும்புகிறார்கச்ள் இதுவே விபத்தில் சில நேரங்களில் முடிகிறது பெரிய ஆராய்ச்சியே செய்துள்ளீர்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சார்! கண்டு மகிழ்வது பிரச்சனை இல்லையே சார். இப்போது விபரீத கோணங்களில் கண்டு மகிழ விரும்புவது விபத்தில் முடிகிறதே. அதுதான் வருத்தியது சார்...மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.

   நீக்கு
 2. நல்லதொரு விஷயத்தை எடுத்து எழுதி இருக்கிறீர்கள். இது போன்ற இன்னும் நிறைய அபாய செல்பிக்கள் எடுத்து உயிரை விட்டவர்கள் பற்றிய படித்த நினைவு வருகிறது. பாவம் அந்த குட்டி டால்ஃபின்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஸ்ரீராம் நிறைய இருக்கின்றன. இங்கு சொல்லப்பட்டது ஒரு சில துளிகள்தான். ஆம் டால்ஃபின் என்ன பாவம் செய்தது சொல்லுங்கள் அது மனதை வருத்தவும், உங்கள் ஆன்ட்ராய்ட் பற்றிய பதிவும் படித்ததும் இந்தப் பதிவை முடித்து வெளியிட வேண்டும் என்று முடிவு செய்து முடித்துவிட்டேன். ஒரு மாதத்திற்கும் மேலாகிறது இதை எழுதத் தொடங்கி...

   மிக்க நன்றி ஸ்ரீராம்...

   நீக்கு
 3. செல்ஃபி மோகத்தினால் அறிவிழந்து - அப்பாவி டால்பின் குட்டியை கொன்றே போட்டார்கள்..

  முகநூலில் செய்தி கண்டு வருந்தினேன்..

  ஆனாலும் - ஆகக் கடைசி வரி.. அவசியம் தான்..

  இல்லாவிட்டால் ஆளாளுக்குக் கிளம்பிவிடுவார்கள்.. செல்ஃபி எங்கள் பிறப்புரிமை என்று!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அந்த நிகழ்வு என்னை வேதனைப்படுத்தியது ஐயா. அதனால்தான் எப்படியாவது இதை முடித்து வெளியிட வேண்டும் என்று முடித்துவிட்டேன் கிடப்பில் இருந்தக் கட்டுரையை.

   மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 4. பதில்கள்
  1. ஆமாம் கொடுமைதான் டிடி...நீங்க செல்ஃபி எடுத்துருக்கீங்களா டிடி??!!! மிக்க நன்றி டிடி..

   நீக்கு
 5. //இதுவும் கூட நிகழ்ந்துவிட்டதாமே!!! ஒபாமா விஷயத்தில்// - என்னது ஒபாமா செத்துட்டாரா!!!...... ;-)

  அந்தக் காலத்தில் தமிழுக்காக உயிரைக் கொடுத்தார்கள். இந்தக் காலத்தில் செல்பிக்காக! வாழிய மனிதகுலம்! இப்படிச் செத்துச் செத்து விளையாடுவது தேவையா என இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்!

  இந்த இலேனா தமிழ்வாணன் என்ன செய்து கொண்டிருக்கிறார்? 'பாதுகாப்பாக செல்பி எடுப்பது எப்படி?' என இன்னும் நூல் வெளியிடவில்லையா? ;-D

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயையோ இபுஞா அவரும் சிக்கலில் மாட்டிக் கொண்டார் இப்படி செல்ஃபி எடுத்து என்று சொல்லுவதை அப்படியே மைதிலியுடன் பேசியதை எழுதிவிட்டேன். இப்போது மாற்றிவிட்டேன் அர்த்தம் மாறுவதைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி சகோ....

   இந்தக் கட்டுரையை வெளியிடும் சமயம் மைதிலி கூப்பிட்டிருந்தார்கள். அவர்களிடம் கட்டுரை பற்றிச் சொல்லிய போது நான் "போகிற போக்கைப் பார்த்தால்" என்று எழுதியதும் நிகழ்ந்துவிட்டது என்று சொன்னார்கள். அதாவது ஒபாமாவும் மாட்டிக் கொண்டார் அப்படி என்றும் கண்டோலென்ஸ் செல்ஃபி என்று கூகுள் பண்ணினால் வரும் என்றும் சொல்ல அதையும் சேர்தேனா அப்புறம் வெளியில் சென்று விட்டேன். கட்டுரையை மீண்டும் வாசிக்காமல். இதை எழுத ஆரம்பித்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிவிட்டது...கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்வுகளைச் சேர்த்து செய்திகள் சேர்த்து என்று....ஒருவழியாக முடித்து வெளியிட்டேன்.

   நல்ல கருத்து சகோ. ஹஹஹஹ் அதானே! அட இலேனா இன்னும் வெளியிடவில்லையோ...ம்ம்ம்ம் ஆனால் சிறிய கைக்கு அடக்கமாக பல நல்ல கருத்துகள் அடங்கிய கட்டுரைகள் அடங்கிய புத்தகம் வெளியிடுவதில் அவருக்கு நிகர் அவரே!

   மிக்க நன்றி இபுஞா

   நீக்கு
 6. உண்மைதான் டெல்லியின் விபரீதங்கள் அதிகம் அருமையான ஆக்கபூர்வமான சிந்தனைப்பகிர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தனிமரம் நேசன் வருகைக்கும் கருத்திற்கும்..

   நீக்கு
 7. ஐய்போனும் சதி செய்கின்றதே))செல்பிஎன்று எழுதினால் டெல்லி என்று கருத்தையே மாற்றிவிட்டது மன்னிக்கவும் -

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹஹ ஆமாம் முதலில் எனக்குப் புரிந்தது விபரீதமாக நீங்கள் டெல்லி தலைநகரைச் சொல்லி இந்தியாவின் தலைமை அங்கு இருப்பதைச் சொல்லி உள் கருத்தோ என்று கூட நினைத்துவிட்டேன். நன்றி தனிமரம்

   நீக்கு
 8. மரணத்திலும் வாதிடும் போல செல்பிநினைப்பு)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அப்படித்தான் நிகழ்வதாகச் சொல்லப்படுகிறது தனிமரம்...மிக்க நன்றி கருத்திற்கு

   நீக்கு
 9. அருமையான செல்பி கட்டுரை...மொத்தத்தில் செல்ப் கண்ட்ரோல் வேணும்னு தெரியுது.. அருமை ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி செல்வா. அட செல்ஃபி - செல்ஃப் கன்ட்ரோல் நல்லாருக்கே...

   நீக்கு
 10. அருமையான பொதுநல சிந்தனையோடு உள்ள பதிவு விஞ்ஞான வளர்ச்சி மனிதனுக்கு என்றுமே வீழ்ச்சிதான் இப்படியான விடயங்களை இனைய சமூகத்தினர் புரிந்து கொள்வதில்லை.

  நாட்டை ஆளும் மோடிஜியும் செல்ஃபி எடுக்கின்றார் அவரு செத்தால் பிரச்சினை இல்லை காரணம் அவருக்கு பொண்டாட்டி பிள்ளைங்க இல்லை
  ஆனால் கில்லர்ஜிக்கு பிள்ளைங்க இருக்கு ஆகவே நான் கவனமாக இருக்கிறேன்

  பிலிப்பைன்ஸ் காணொளி கண்டேன்

  தமிழ் மணம் 4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விஞ்ஞான வளர்ச்சி என்றைக்குமே வீழ்ச்சி என்று அப்படிச் சொல்லிவிட முடியாது கில்லர்ஜி. விஞ்ஞானம் வளர்ந்திருக்கவில்லை என்றால், தொழில்நுட்பம் வளர்ந்திருக்கவில்லை என்றால், இதோ இப்போது நீங்களும் நானும் இப்படிப் பதிவு வழியாகப் பேசக் கூட முடிந்திருக்காது. நேரில் சந்தித்திருக்கவும், அவ்வப்போது நீங்கள் ஃபோனில் உரையாடவும் முடிந்திருக்காது இல்லையா ஜி?

   ஸொ நாம் அந்த டெக்னாலஜி/விஞ்ஞான வளர்ச்சியை எப்படித் திறம்படக் கையாள்கின்றோம் என்பதைப் பொறுத்துதான். அதற்குத்தான் நாம் நம்மைப் பழக்கிக் கொள்ள வேண்டும். அடிக்ஷன் இல்லாமல்...

   மிக்க நன்றி கில்லர்ஜி வருகைக்கும் கருத்திற்கும்

   நீக்கு
 11. எல்லாக் காலத்திலேயும் சொன்ன திருந்தாத பேர்வழிகள் ஒரு குருப் இருக்கத்தான் செய்யும் . நம்ம சொல்றதை சொல்லி வைப்போமே

  பதிலளிநீக்கு
 12. இவர்கள் எல்லாம் படித்தவர்கள் தானே ?ஏன் இப்படி மூளை மழுங்கி விட்டது :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படித்தவர்களுக்கு மூளை ஷார்ப்பாக இருக்கும் என்று யார் சொன்னது? படிப்பவர்களுக்கு செல்பி பற்றி ஒரு பாடம் கல்லூரியில் வைத்து இருந்தால் அவர்கள் படித்து அறிந்து இருப்பார்கள் அப்படி இல்லாது போனதால் இப்படி மழுங்கி இருக்கிறார்கள் நண்பரே படித்தவன் அந்த துறையில் மட்டும்தான் வித்தகன் எலக்ட் ரானிக்ஸுக்கு படித்தவனால் மருத்துவம் பார்க்க இயலுமா?

   நீக்கு
  2. பகவான் ஜி நான் சொல்ல வந்த முதல் வரியை மதுரைத் தமிழன் சொல்லிவிட்டார்.

   தமிழன் சொன்னதையே நான் சற்று வேறுவிதமாகச் சொல்லுவேன். நாம் கற்கும் கல்வி என்பது வேறு. இது அது சார்ந்ததல்ல கல்வி அறிவு வேறு, வாழ்க்கைப்பாட அறிவு என்பது வேறு. சமயோசிதப் புத்தி, விழிப்புணர்வு இல்லாதது, ஒரு தொழில் நுட்பம் அறிமுகமுகமாகும் போது ஏற்படும் அதீத ஆர்வக் கோளாறினால் அறியாமை, யோசிக்கும் புத்தி சில நாட்கள் மழுங்குதல்...இதனால் விளைவதே. அடுத்த தொழில்நுட்பம் வரும் போது இது மறைந்துவிடும். அதன் பின் ஆட்டும் மந்தை போல் கூட்டம் அலை மோதும். அவ்வளவே..

   மிக்க நன்றி பகவான் ஜி கருத்திற்கு

   நீக்கு
 13. செல்பி பற்றிய பதிவு நன்றாக வந்திருக்கிறது படங்களை தகுந்த இடத்தில் அழகாக வெளியிட்டு இருந்தது பதிவிற்கு மேலும் மெருகை கூட்டுகிறது. இந்த பதிவை பற்றி ஒரு குறை சொல்ல வேண்டுமானால் பதிவின் இறுதியில் நீங்கள் Bold பண்ணி சொல்லி இருக்கும் பாராக்கள்தான். மக்கள் என்று அறிவுரையை கேட்க விரும்புவதில்லை. அதனால் இப்படிபட்ட பதிவுகள் எழுதும் போது நாம் சொல்ல வந்த விஷயத்தை சொல்லிவிட்டு படிப்பவர்களை சிந்திக்கவிட்டுவிட வேண்டும் அல்லது முடிக்கும் போது கொஞ்சம் நக்லாக அல்லது நம்மை நாமே கலாய்த்து முடிக்க வேண்டும். நன்றி மைதிலியோடு முடித்து இருக்க வேண்டும். இது என்னுடைய கருத்து இதற்கு மற்றவர்கள் உடன்பட வேண்டிய அவசியம் இல்லை.என் மனதில் பட்டதை சொல்லி செல்லுகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தமிழா முதலில் பாராட்டிற்கு. உங்கள் கருத்தை வரவேற்கின்றேன். நல்ல கருத்து.

   ஹும் என்ன செய்ய ஆசிரியராக வரவேண்டும் என்ற என் ஆசை நிறைவேறாத காரணம் எண்ணம் என் அடிமனதில் புதைந்திருப்பதால் வெளிவந்துவிடுகின்றது...ஹஹ...உண்மைதான் அறிவுரைகள் எடுபடாது. சிந்திக்க விடுவதே நலல்து. வீட்டில் மகனிடத்தில் அப்படித்தான் தோழமையுடன். பதிவில்தான் இப்படி....ஹிஹி.

   இனி உங்கள் கருத்தையும் ஏற்றுப் பதிவை மேம்படுத்தி எழுத முயற்சி செய்கின்றேன். மிக்க மிக்க நன்றி தமிழா அழகான ஒரு பரிந்துரை இங்கு சொன்னதற்கு...

   நீக்கு
 14. இந்த் மைதிலி டீச்சரம்மா பிஸி பிஸி என்று பலர் சொல்லி கேள்விபடுகிறேன் ஆனால் பிஸியாக உள்ள டீச்சர் அம்மாவிற்கு இப்படி போனில் கதையடிக்க நேரம் இருக்கிறதா? என்னை போல உள்ளவர்கள் அவர்களுடன் பேசுவது உரையாடுவது அவரின் வலைத்தளத்தில் வரும் பதிவுகள் மூலம்தானே..அப்ப அவர்களுக்கு எங்களை போல உள்ள ஆட்களிடம் பதிவுகளின் மூலம் பேச விருப்பமில்லையா என்ன? ஐயாம் சோ சேடு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மைதிலி பிசிதான் தமிழா. பல நாட்களாயிற்று என்பதால் நேற்று நான் அவர்களைக் கூப்பிட அவர்களால் அப்போது பேச இயலவில்லை பள்ளியில் இருந்ததால். பின்னர் அழைக்கிறேன் என்றார். நான் வீட்டிற்கு வந்துக் கூப்பிடுகின்றேன் என்று சொல்லியிருந்தேன் ஆனால் நான் அவரை அழைக்க முடியவில்லை. அதன் பிறகு அவர்கள் நெருங்கிய உறவுக் குடும்பத்தில் ஒரு துக்கம் நிகழ்ந்துவிட்டது. அதைச் சொல்லத்தான் இன்று அவர் அழைத்திருந்தார்.

   கஸ்தூரியும் உங்கள் பதிவைப் பார்த்துவிட்டுச் சொல்லியிருக்கிறார் அவரிடம், நானும் அவரிடம் சொல்லியிருந்தேன். இன்று மாலை பார்க்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் தமிழா. ஹஹஹ் நோ சேடு ஃபீலிங்க் தமிழா. பாவம் அவங்க..

   நீக்கு
 15. இந்த செல்வியால் இவ்ளோ பிரச்சினையா ..எதை வேண்டுமானாலும் அஜாக்கிரதை என்று சொலி கடக்கலாம் ஆனால் அந்த வாயில்லா ஜீவனை இந்த எருமைக்கூட்டம்சாகடித்ததை மன்னிக்கவே முடியாது ..அந்த குழந்தை பாவம் எப்படி தவித்திருக்கும் ,அதுவும் இவற்றின் குணமே மனிதர்களை தேடி ஓடி வரும் ..கொலைகார ஜென்மங்க ..முடிஞ்சா காட்டுக்குபோய் உயிருள்ள சிங்கத்துடன் அல்லது புலியுடன் செல்பி எடுத்து காட்டட்டும் :(

  எங்க வீட்ல tablet /ஐ போன் எல்லாம் இருக்கு அனாலும் நாங்க இதுவரை எடுத்ததில்லை செல்பி :)
  மகள் பள்ளியில் போன்ஸ் அனுமதியில்லை.. .எந்த நவீன கண்டுபிடிப்பையும் கவனமுடன் கையாளவேண்டும் ..அருமையான பதிவு .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஏஞ்சல். ஆமாம் அந்த டால்ஃபின் நிகழ்வு மற்றும் ஸ்ரீராமின் ஆன்ட்றாய்ட் ஃபோன் அட்ராசிட்டிஸ் பதிவு பார்த்த பிறகு கிடப்பிலிருந்த இந்தக் கட்டுரையை முடித்து வெளியிட வேண்டும் என்று வீறு கொண்டு முடித்துவிட்டேன் எப்படியோ.

   ஹஹஹ் அதானே சிங்கத்துடன் புலியுடன் செல்ஃபி எடுத்துக் காட்டச் சொன்னால்..?? டால்ஃபின் பாவம் ஆம் அவர்கள் மனிதர்களுடன் மிகவும் நட்புடன் பழகும்.

   அட நீங்களும் எடுத்ததில்லையா ...என்னிடம் மிகவும் அரதப் பழசான ம்யூசியத்தில் வைக்க உதவும் செல்ஃபோன் தான் உள்ளது. என் கசின்ஸ் குழந்தைகள் அனைவரும் என்னிடம் மிகவும் ப்ரியமுடன் இருப்பதால் அவர்கள் எல்லோரும் என்னையும் அவர்களுடன் சேர்த்து எப்போதும் செல்ஃபி எடுத்துக் கொண்டே இருப்பார்கள். ஃபோட்டோவுக்கு நிற்க விரும்பாத நான் அவர்களது அன்பை நிராகரிக்க முடியாமல் எடுத்தாலும் சமூக வலைத்தளங்களில் வெளியிடக் கூடாது என்று சொல்லிவிடுவேன். அவர்களும் அதைக் காத்து வருகின்றார்கள்.

   மிக்க நன்றி ஏஞ்சல்..தங்களின் கருத்திற்கு

   நீக்கு
 16. பதில்கள்
  1. நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 17. ஒரு போதையைப் போல ஆக்கிரமித்துள்ளது...

  எமது அலுவலகத்திலுள்ள ஒருவருக்கு வலதுபக்க பின்னங் கழுத்தில் தொடர்ந்து வலி ஏற்பட அருகிலுள்ள எனது நண்பரான ortho மருத்துவரைப் பார்க்கச் சொன்னேன். குனிந்த படியே மிக அதிக நேரம் போனை நோண்டிக் கொண்டு இருப்பதால் வரும் வலியென்று சொல்லி அனுப்பி விட்டார். நண்பராயிருக்கப் போக scan செலவு மிச்சம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் மலர். நீங்கள் சொல்லியிருப்பது போல நிறைய இப்போது ஆர்த்தோ ப்ராப்ளங்கள் வருவதாக எங்கள் குடும்ப ஆர்த்தோ டாக்டர் சொன்னார். குறிப்பாக கணினியில் அதிக நேரம் வேலை செய்வது தட்டச்சுவது...அதனால் இப்போது எர்கோனாமிக்ஸ் ரொம்ப பிரபலமாகிவருகிறது. அதை பேஸ் செய்து உபகரணங்கள் வேறு...

   மிக்க நன்றி மலர் கருத்திற்கு

   நீக்கு
 18. செல்பியை தொடர்ந்து வாட்ஸ்அப்..... இதுதானே...அய்யா.. விஞ்ஞானத்தின் வளர்ச்சி இன்னும் சொல்லப்போனால் நாட்டின் வளர்ச்சி.......

  பதிலளிநீக்கு
 19. நல்ல அலசல் ... யோசிக்க வேண்டும்...

  பதிலளிநீக்கு
 20. இறந்த தாத்தாவுடன் செல்பி எடுத்து முகநூலில் பகிர்ந்த அரபிப் பையன் ஒருவன் குறித்து செய்தியில் படித்தேன்... அவனை சிறையில் போட்டிருக்கிறார்களாம்...

  சில நாள் முன்னர் ஒரு காணொளி பார்த்தேன்... ஒரு மலையின் கொண்டை ஊசி வளைவில் இருக்கும் தடுப்புச் சுவரின் மேல் நின்று செல்பி எடுக்க முனைந்து கால் தவறி விழுந்து உயிரை விடுகிறான் ஒரு இளைஞன்... அதை மொபைலில் பிடித்து முகநூலில் பகிர்ந்திருந்தார்கள்...

  எவ்வளவு முட்டாள்களாக இருக்கிறோம் பாருங்கள் துளசி சார்... செல்போனுடன் ஆன உறவை கொஞ்சம் குறைத்தால் உடல் நலம் பேணலாம்... 24 மணி பத்தாது போல... இதில் பிலிப்பைனிகள் ரெண்டு கையிலும் செல்போன் வச்சிக்கிட்டு ரெண்டையும் நோண்டிக்கிட்டு இருப்பானுங்க....

  பதிலளிநீக்கு
 21. வணக்கம்
  யாவரும் படித்து அறிய வேண்டிய தகவலை அழகாக சொல்லி பதிவிட்டமைக்கு நன்றி..
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 22. "செல்ஃபி எடுத்துக் கொள்ளுங்கள். மகிழுங்கள். வாழ்க்கையைக் கொண்டாடுங்கள். அதே சமயம் நீங்கள் செய்ய வேண்டியது, அறிவுபூர்வமாக, அதற்கும் ஒரு எல்லை வகுத்துக் கொண்டு, ஆபத்தான இடங்களில் எடுப்பதைத் தவிர்த்துவிடுங்கள். உங்கள் பெற்றோரை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். உங்கள் எதிர்காலக் கனவுகள், இலட்சியங்களை ஒரு நிமிடம் மனதில் ஓட விடுங்கள். இந்த ஒரு நிமிட மகிழ்வு துன்ப நிமிடமாக மாறுவதை விட, இயற்கை அழைத்துக் கொள்ளும் நிமிடம் வரை, வாழ்க்கையைக் கொண்டாட இன்னும் பல நொடிகள், நிமிஷங்கள், நாட்கள், வருடங்கள் இருக்கின்றன என்பதையும் நினைவில் நிறுத்துங்கள். வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குங்கள்!" என்ற வழிகாட்டலையே நானும் பகிருகிறேன்.

  செல்ஃபிப் பிரியர்கள் இப்பதிவைப் படித்தேனும் திருந்தி முன்னேற வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 23. நல்லவேளையா இந்த ஸ்மார்ட் ஃபோன் எல்லாம் இல்லை. செல்ஃபி எடுக்கும் வசதியும் இல்லை. :)

  பதிலளிநீக்கு