வெள்ளி, 4 மார்ச், 2016

கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும்??!!!!....நமது ஊடகங்களின் நம்பகத்தன்மை?

Sataparna Mukherjee
படம்-நன்றி டைம்ஸ் ஆஃப் இண்டியா

தங்கள் பெயர் ஊடகங்களில் வரவேண்டும் என்பதற்காக மக்கள் ஊடகங்களை அணுகிச் சில செய்திகளை, பெருமைகளைக் கொடுக்க, நம் ஊடகங்களும், பரபரப்பிற்காகவும், பரபரப்புச் செய்திகளை முதலில் யார் வெளியிடுகின்றார்கள் என்ற போட்டியிலும், விற்பனைக்காகவும்  செய்திகளை ஆராய்ந்து உறுதிப்படுத்தாமல் வெளியிட்டு விடுகின்றார்கள். பின்னர் அது தவறான செய்தி என்றவுடன், அதை யார் கண்ணிலும் படாதவாறு ஒரு சிறு குறிப்பாக வெளியிடுதல் என்பதும் நடக்கின்றது. உட்டான்ஸ் செய்திகளுக்குப் பஞ்சமே இல்லை போலும்.

அப்படிப்பட்டச் செய்தி ஒன்று 4 தினங்களுக்கு முன் அதாவது ஃபெப்ருவரி 29 அன்றிலிருந்து மார்ச் 2 ஆம் தேதி வரை சாதாரண ஊடகங்கள் என்றில்லாமல் கொஞ்சம் புகழ் வாய்ந்த ஊடகங்களிலும் வெளியானது.

டிஎன்ஏ இண்டியா, த டைம்ஸ் ஆஃப் இண்டியா, மும்பை மிரர், ஜீ ந்யூஸ், த பெட்டர் இண்டியா, டெக்கான் க்ரோனிக்கிள், ஹிந்துஸ்தான் டைம்ஸ்

செய்தி இதுதான். மேற்கு வங்காளத்திலுள்ள, மத்யாம்க்ராம் எனும் கிராமத்தில் உள்ள செயின்ட் ஜூட் எனும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியான சத(ட)பர்னா முகர்ஜிக்கு நாசாவின் கோடார்ட் இன்டெர்ன்ஷிப் ப்ரோக்ராம், கோடார்ட் இன்ஸ்டிட்யூட் ஃபார் ஸ்பேஸ் ஸ்டடிஸில் ( NASA Goddard Internship Programme under the Goddard Institute for Space Studies (GISS).) கிடைத்துள்ளதாக அந்தப் பெண் தெரிவித்ததாகச் செய்தி வெளியாகியிருக்கிறது.

அந்தப் பெண் டைம்ஸ் ஆஃப் இண்டியாவிற்கு அளித்த பேட்டியில், இந்த நிகழ்வின் ஆரம்பம் சென்ற வருடத்து மே மாதம் என்றும், தான் சமூகவலைத்தளம் ஒன்றில் ஒரு குழுவில் இருப்பதாகவும், அதில் பல விஞ்ஞானிகளும் இருப்பதாகவும், ஒரு நாள் அந்தக் குழுவில் தான் “ப்ளாக் ஹோல் தியரி” பற்றித் தனது கருத்துகளைப் பகிர்ந்ததாகவும், உடன் அதிலிருந்த விஞ்ஞானி ஒருவர் நாசாவின் அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தைத் தந்து அதில் அவளது ஆய்வுக் கருத்துகளைப் பதிவிடச் சொன்னதாகவும், அதன் அடிப்படையில் தனது ஆய்வுக் கட்டுரை, 'Black Hole Theory' and how it could be used to make a 'time machine'  ஐப் பதிந்ததாகவும் அதனால் இந்த இன்டெர்ன்ஷிப் கிடைத்ததாகவும் சொல்லியிருக்கிறாள்.

NASA's GIP ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதுமுள்ள மாணவ மாணவிகளில் மிகச் சிறந்த, 5 மாணவ, மாணவிகளைப் பள்ளிக் கல்விக்குப் பிறகுத் தேர்ந்தெடுத்து அவர்களதுக் கல்விச் செலவுகள் முழுவதும் ஏற்றுக் கொள்கின்றது. அந்த வகையில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவள் ஆராய்ச்சிப் பட்டம் பெறும் வரையிலான அனைத்துச் செலவுகளையும் நாசா ஏற்றுக் கொண்டதாகவும்,  ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்துள்ளதாகவும், அதனால் லண்டனிலுள்ள நாசா சென்டரில் ஆராய்ச்சி மாணவியாக வேலை செய்யப்போவதாகும் அதற்காக, வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி பயணம் செய்ய இருப்பதாகவும் சொல்லியிருக்கிறாள். இப்படிப் பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால், இது ஒரு தவறான பொய் செய்தி என்று அப்போதே ஊடகங்களின் இணையதளத்தில் இதை வாசிக்க நேர்ந்த வாசகர்கள் பலரும் பல ஆதாரங்களைத் தெரிவித்துள்ளார்கள். தற்போது நாசாவின் நிதி நிலைமை இது போன்று வெளிநாட்டு மாணவ மாணவிகளை எடுக்கும் நிலையில் இல்லை என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்தச் சுட்டியைச் சொடுக்கினால் இதைப் பற்றிய செய்திகள் கிடைக்கும்.


மறுப்புச் செய்தி. on March 3, Huffington Post India had it: “We have no record of [the girl in question] being granted an internship, scholarship or any form of academic or financial assistance from our institute. Furthermore, the Goddard Institute for Space Studies has no facilities in London and all of our internships are awarded to students who live within 50 miles of our location in New York City. The application deadline for our 2016 students closed March 1. We have not made any selections yet.”

செய்தி மறுக்கப்பட்டப் பின்னும் அந்தப் பெண் தான் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவே சொல்லுவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. எதற்காக இந்தப் பெண் இப்படிச் செய்ய வேண்டும்? அறியாமையா இல்லை அறிந்தே செய்கின்றாளா? ஒரு சிலர் தனது லட்சிய கனவு உலகில் இருக்கும் போது இது போன்று சில பிரமைகளில் பேசுவதுண்டு. அது போன்றா? எதுவாக இருந்தாலும், எங்கள் ப்ளாகின் பாசிட்டிவ் செய்திகளில் இடம் பெறும் வாய்ப்பு இல்லாமல் போனது அந்தப் பெண்ணிற்கு.

இது போன்று, “த ஹிந்து”வில் கூட 2014 மே மாதம் வெளியாகியிருக்கிறது ஒரு செய்தி. அதாவது தமிழ்நாடு அண்ணா பல்கல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், தனக்கு, அமெரிக்காவிலுள்ள, கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள பெர்க்லி பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ள, இளம்கலை பொறியியல் படித்து முடிக்கும் முன்பே கிடைத்துவிட்டதாகவும் அந்தப் பெருமைக்குக் காரணம் தனது ஆய்வான, "inner structure of the electron” என்பதுதான் என்றும் சொல்ல அந்தச் செய்தி வெளியானது. பின்னர், அந்தச் செய்தி, which isn’t possible because the electron is a fundamental particle and doesn’t have an inner structure”  என்றும் மறுக்கப்பட்டிருக்கிறது.

இப்படித்தான், எனது மகனின் கல்லூரி வகுப்பில் படித்த ஒரு மாணவி, பாடங்கள் ஆங்கிலத்தில் இருந்ததால் கற்க முடியாமல், தேர்ச்சிப் பெற முடியாமல் முதல் வருடத்திலேயே இருக்க நேர்ந்ததால், (கால்நடைப் படிப்பில் அரியர்ஸ் வைத்துக் கொண்டு அடுத்த வருடத்திற்குச் செல்ல முடியாது.) தற்கொலை செய்து கொண்ட போது, நம் ஊடகங்கள், அவள் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு புதுக் கதையே புனைந்திருந்தார்கள். அவளது பெற்றோர் எவ்வளவு வருத்தப்பட்டார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். பாவப்பட்ட அந்தப் பெற்றோர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

இப்படித்தான் ஊடகங்கள் பல செய்திகளை உறுதிப் படுத்திக் கொள்ளாமல், பரபரப்பிற்காக ஊடகத் தர்மத்தை மீறி வெளியிட்டு விடுகின்றன. இதன் அடிப்படையில் ஒரு சில திரைப்படங்கள் கூட மலையாளத்தில் வந்திருக்கின்றன. இப்படியிருக்க, நாம் ஊடகச் செய்திகளை, எப்படி, எவ்வளவு நம்புவது?  என்பது மிகப் பெரியக் கேள்விக்குறியே. ஹும் ஒன்றும் புரியவில்லை. அனுபவமுள்ள சகோக்கள்/நண்பர்கள் சே குமார், கூட்டாஞ்சோறு செந்தில் போன்றோர் சொல்லலாம்.

(பின் குறிப்பு: சென்னையில் தரமணியில் வசிக்கும் கீதா என்பவரின் நாலுகால் செல்லம் கண்ணழகியும், கேரளா மாநிலத்து நிலம்பூர், கருநேச்சியைச் சேர்ந்த துளசிதரன் என்பவரின் நாலுகால் செல்லம் டைகரும், கரந்தையைச் சேர்ந்த ஜெயக்குமார் அவர்களின் செல்லம் ஜூலியும், லண்டனைச் சேர்ந்த ஏஞ்சலின் அவர்களின் செல்லம் ஜெசியும், அமெரிக்காவின் நியூஜெர்சியில் வசிக்கும் மதுரைத் தமிழனின் நாலுகால் செல்லமும் நாசாவின் செவ்வாய் கிரகப் பயணத்திட்டத்தில் இடம் பெறப் போவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கானப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். நாசாவின் இந்தத் தேர்ந்தெடுப்பிற்கு, இந்தச் செல்லங்களின் குறும்புகள், சேட்டைகள், துருதுருப்பு மற்றும் ஆரோக்கியம்தான் காரணங்களாம். ஒரு கொசுறுச் செய்தி. மதுரைத் தமிழன் தமிழக அரசியல் கட்சிகளைக் கிழி கிழி என்று கிழிப்பதால், இங்குள்ள கட்சிகள் அவரதுச் செல்லத்தை அனுமதிக்கக் கூடாது என்று தடை கோரியிருக்கின்றனவாம். ஆனால், மதுரைத் தமிழன் அவரது செல்லத்தை, தான் பயணம் செய்வது போன்று, பெயரை மாற்றி மாறு வேஷத்தில் அனுப்பிவிட வாய்ப்புண்டு என்றும் சொல்லப்படுகிறது.)


 ------கீதா


39 கருத்துகள்:

  1. நானும் ஒரு 4 கால் செல்லம் யானையை வாங்கி வளர்த்து இருந்தால் இந்த மாதிரி எனது பெயரும் வந்துருக்கும் ச்சே கோட்டை விட்டுட்டேனே....

    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி முதல் வருகைக்கு மிக்க நன்றி வாக்கிற்கும்..இனியும் வளர்க்கலாம் ஜி...

      நீக்கு
    2. கில்லர்ஜி உங்கள் கருத்தை வாசித்துவிட்டுச் சிரித்துவிட்டோம். அதைக் குறிப்பிட மறந்துவிட்டேன்.

      நீக்கு
  2. நாசாவுக்கே நிதி நெருக்கடியா ?இதுவும், பொய் என்று மறுப்பு செய்தி வரலாம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம். ஆனால் இப்போது அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் பல ப்ராஜெக்டுகளை நிதி நிலைமை சரியாக இல்லாததால் செய்ய இயலாமல் இருப்பதாகவும், இன்டெர்ன்ஷிப் கிடைப்பதும் அரிதாக இருப்பதாகவும் தெரிகின்றது. மகன் போய் வந்ததால். பகவான் ஜி மிக்க நன்றி வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  3. பொதுவாக பாஸிட்டிவ் செய்திகள் பகுதியில் முடிந்தவரை இது போன்ற செய்திகளை எடுப்பதில்லை. நான் கூட எங்கள் பாஸிட்டிவ் பகுதியைப்பற்றி நினைத்த வண்ணமே படித்து வந்தால் நீங்களும் எங்களை வம்புக்கு இழுத்துருக்கிறீர்கள்!!!!! ஊடக வியாபாரம் பற்றி நாம் அறியாததா என்ன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்! ம்ம்..ஹஹஹ்ஹஹ்... உண்மையாகவேதான் சொன்னேன். நல்ல செய்தியாக, சாதனையாக இருந்தால் உங்கள் மூலம் தெரியவருமே என்றுதான்..ஆமாம்..ஊடகம் வியாபாரம்தான் ஸ்ரீராம்...அதுவும் செம வியாபாரம்...மிக்க நன்றி கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
    2. முதலில் மொபைலில் இருந்து கருத்திட்டதால் தம வாக்கு இட முடியவில்லை. சில தளங்களில்தான் மொபைலில் இருந்தும் தம வாக்கிட முடியும். உங்கள் தளத்தில் முடியாது என்பதால் கணினிக்கு வந்ததும் தம வாக்கிட்டு விட்டேன்!!

      நீக்கு
  4. நல்ல பகிர்வு சகோ, ஊடகங்கள் எதை வேண்டுமானாலும் கொளுத்திப் போடும்,, தங்கள் தொகுப்பு நல்ல அலசல் சகோ,

    பின்குறிப்பு சூப்பப்,,, நடக்கட்டும் நடக்கட்டும்,, அவர் செல்லத்திற்கே மாறுவேஷமா,,,(பாட்டா பாடிக்கனும்)
    தொடர்கிறேன் சகோ,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மகேஸ்வரி. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்...கொளுத்திப் போடுவதிலும் வல்லவர்கள்தான் ஆம்...

      நீக்கு
  5. உண்மைதான். ஊடகங்களின் நம்பகத்தன்மை கொஞ்சம் குறைந்துதான் வருகிறது. நீங்களாவது மென்மையாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். 'விமரிசனம்' காவிரிமைந்தன் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் அளவுக்கு இழிவான வார்த்தைகளால் வசை பாடுகிறார்.

    மக்களாட்சியின் நான்கு தூண்களுள் ஒன்று என ஊடகத்தை வருணிப்பார்கள். மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்குமான தொடர்பே ஊடகங்கள்தாம். அவையே நம்பத்தன்மை இழந்து போனால் மக்கள் திக்குத் தெரியாத காட்டில் கண்ணைக் கட்டி அமாவாசை இருட்டில் விடப்பட்டது போலத்தான். ஆனால், எனக்கென்ன தோன்றுகிறது என்றால், இந்தப் பிரச்சினை இப்பொழுதுதான் தொடங்கியிருக்கிறதா?... அண்மையில் இதழ்களில் வெளியான உறுதிப்படுத்தப்பட்ட இரண்டு செய்திகள் அந்தக் கால ஊடகங்கள் மீதான நம்பிக்கையையும் ஆட்டம் காண வைக்கின்றன.

    ஒன்று - ஊடகங்கள், விளம்பரங்கள் போன்றவற்றில் கடிகாரங்கள் எப்பொழுதும் 10:10 என்று காட்டும்படியே வெளியிடப்படக் காரணம், ஆபிரகாம் இலிங்கன் (அல்லது, அவர் போன்ற வேறு யாரோ ஒரு பெரிய தலைவர்) இறந்த நேரம் அஃது என்று வெகு காலமாக நம்பப்பட்டு வருகிறது. அது தவறு! அந்த நேரத்தில் கடிகாரம் பார்ப்பதற்கு சிரித்த முகம் போல் காணப்படும். அந்த அழகுக்காகத்தான் கடிகாரங்கள் எப்பொழுதும் அந்த நேரத்திலேயே படம் பிடிக்கப்படுகின்றன.

    இரண்டு - இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்று இந்தியாவின் எந்தச் சட்டத்திலும் குறிப்பிடப்படவில்லை.

    மேற்கண்ட தவறான தகவல்கள் இரண்டும் எனக்குத் தெரிய வந்ததே புகழ் பெற்ற இதழ்கள் வாயிலாகத்தான். ஒன்றோ, இரண்டோ அல்ல. பலமுறை பல இதழ்களில் நான் இந்தத் தகவல்களைப் பார்த்திருக்கிறேன். ஊர், உலகம் முழுவதும் இந்தத் தகவல்களை நம்பியிருப்பதையும் அறிவேன். சொல்லப் போனால், தகவல் எனக் குறிப்பாக வெளியிடும் அளவுக்குக் கூட அல்லாமல் இவை இரண்டும் உலகறிந்த செய்திகளாக நம்மிடையே பல காலம் உலா வந்தன. ஆனால், எத்தனையோ ஆண்டுகள் கழித்து இப்பொழுதுதான் இந்த உண்மைகள் தெரிய வருகின்றன. ஆக, அந்தக் காலத்திலும் ஊடகங்கள் அவ்வளவு ஒன்றும் பொறுப்புப் பொன்னுச்சாமிகளாக இல்லை என்பதே என் கருத்து. இப்பொழுது தனியாள் ஊடகங்களான சமூக வலைத்தளங்களின் செல்வாக்குப் பெருகியிருப்பதால் ஊடகங்கள் தவறு செய்தால் உடனே தெரிந்து விடுகிறது. அந்தக் காலத்தில் இப்படித் தனியாள் ஊடகம் என்கிற ஒரு வசதியே இல்லை என்பதால் எல்லாரும் ஊடகங்களில் வரும் எல்லாவற்றையும் அப்படியே நம்பிக் கொண்டிருந்திருக்கிறோம் போல. என்ன நான் சொல்வது?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லுவது மிகவும் சரியே சகோ! அந்தக் காலத்தில் இப்போது போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாததால் பல செய்திகள் அப்படியே நம்பப்பட்டு வந்தது என்பதுதான் உண்மை.
      நீங்கள் சொல்லியிருக்கும் அந்த இரு தகவல்களும் அதாவது சரியான தகவல்கள் உங்கள் மூலமே அறிகின்றோம். மிக்க நன்றி அதற்கு.

      அந்தக் காலத்திலும் உறுதிப் படுத்தாத செய்திகள் வரத்தான் செய்தது. அப்படித்தானே வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. அதில் எத்தனை முரண்பாடுகளை நாம் காண்கின்றோம். இப்போது தனியாள் ஊடகங்கள் பெருகிவிட்டனதான். அதனால் ஏதேனும் ஒரு ஊடகத்தில் வெளி வந்து விடுகின்றது.

      மட்டுமல்ல மற்றொன்று பதிவில் எழுத நினைத்து விடுபட்டுவிட்டது. சுனாமி வந்த போது சன் தொலைக்காட்சியில் செய்திகளில் ஒரு சிறுவனின் படம் காட்டி அந்தச் சிறுவன் சுனாமி எச்சரிக்கை செய்யும் கருவி தொழில்நுட்பம் ஒன்றை உலகிலேயே யாரும் கண்டுபிடிக்காத ஒன்றைக் கண்டு பிடித்திருப்பதாகவும் காட்டி வாசித்தார்கள். அவர்கள் காட்டிய கருவி ஏற்கனவே அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் வைத்திருப்பவைதான். ஆச்சரியப்பட்டுப் போனோம். பாருங்கள் அதன் பின் அந்தச் சிறுவனைப் பற்றி எந்தச் செய்தியும் இல்லை. அப்படி அவன் கண்டு பிடித்திருந்தால் இப்போது எவ்வளவோ பேசப்பட்டிருக்கும். இப்படி யார் வேண்டுமென்றாலும் எதை வேண்டுமென்றாலும் ஊடகத்திற்குத் தெரிவித்து செய்தி வெளியிட முடியும் என்றால் ஊடக நீதி, தர்மம் என்ன? என்ன அளவு கோல்? எல்லாமே வியாபரம்தான்...

      நான்காவது தூண் ஆம்! தூண் நிலையாக இருக்க வேண்டுமல்லவா? அந்தத் தூணே ஆட்டம் காணும் போது....அஸ்திவாரம் சரியாக இல்லை என்றால்? இந்தத் தூண்கள் நினைத்தால், நல்ல வழியில் பயணித்தால் நாட்டை நல்ல முறையில் வழி நடத்தி, புரட்சி செய்யலாம். இதையும் எழுதி பின்னர் நீளம் கருதி வெட்டிவிட்டேன்.

      மிக்க நன்றி சகோ தங்களின் விரிவான நல்ல விளக்கத்துடன், அறியாத செய்திகளும் தந்தமைக்கு...

      நீக்கு
    2. நீங்கள் கூறிய கடற்கோள் (tsunami) கருவிக் கண்டுபிடிப்புப் பற்றிய செய்தி நானறியாதது. ஆனால், ஒருவேளை அஃது உண்மையாகவும் இருக்கலாம் சகோ! காரணம், இப்படி நிறையக் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவர்கள் இருக்குமிடமே தெரியாமல் இருக்கிறார்கள். இதழ்களில் இவர்கள் பற்றிய தகவல்கள் நிறைய, தொடர்ச்சியாக வருகின்றன. இவற்றை நாம் புறக்கணிப்பதற்கில்லை. இந்தியாவில் கண்டுபிடிப்பாளர்களுக்கு மதிப்பின்மை, புதிய முயற்சிகளுக்கு ஆதரவின்மை, காப்புரிமை பெறுவதில் உள்ள சிக்கல் முதலான பல காரணங்களால் இவர்கள் இன்னும் இருட்டிலேயே இருப்பது உண்மைதான்.

      நீக்கு
    3. உண்மைதான் சகோ. நீங்கள் சொல்லுவதை நான் முழுவதும் ஏற்றுக் கொள்கின்றேன். நம் ஊரில் ஊக்குவிப்பு என்பதே கிடையாது. எங்கள் ப்ளாக் எனும் வலைத்தளத்தில் சனிக்கிழமை தோறும் பாசிட்டிவ் செய்திகள் என்று வெளியிடுவார்கள். அதில் இது போன்ற நம் குழந்தைகளின் கண்டுபிடிப்புகள் பல துறைகளிலும் கண்டுபிடிப்பதை, உருவாக்குவதை, வெளியிடுவார்கள். அந்தக் குழந்தைகள், இளைஞர்களை நினைத்து மிகவும் பெருமையாக இருக்கும். ஆனால் அதன் பின் அவை எல்லாம் எவ்வளவு தூரம் சந்தைக்கோ இல்லை மக்களின் உபயோகத்திற்கோ வருகின்றன என்பது கேள்விக்குறியே. அப்படியே வந்தாலும் எத்தனை பேரால் அதனைத் தொடர முடிகின்றது நட்டமில்லாமல் என்பது அடுத்த படி. அதன் பின் அதற்கான காப்புரிமை. இப்படி நம் இளைஞர்களையும் சிறுவர்களையும் சுயமாகச் சிந்திக்கவிடாமல், நல்ல தொழிலதிபர்களாக வர விடாமல் முட்டுக் கட்டைகள் நீங்கள் சொல்லியிருப்பது போல்.

      ஆனால் இந்தக் கடற்கோள் கருவிக் கண்டுபிடிப்புப் பற்றிய செய்தி ஏனோ என்னால் பிற கண்டுபிடிப்புகளைப் போல்...உதாரணத்திற்கு, ராமர் பிள்ளையின் மூலிகைப் பெட்ரோல் போல் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உங்களுக்கே தெரியும் இன்வென்ட்ஷனுக்கும் இன்னோவேஷனுக்கும் உள்ள வித்தியாசம். இவை இரண்டுமே இல்லை. அவர்கள் காட்டியது ஏற்கனவே இருக்கின்ற தொழில்நுட்பத்தைத்தான். கடற்கோள் வந்த பிறகு பல ஊடகங்களிலும் அந்தத் தொழில்நுட்பம் மற்றும் கருவி பற்றிப் படங்களுடன் பேசப்பட்டது. எனவேதான் அந்தச் செய்தியை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

      இங்கு நான் சொல்ல வருவது குழந்தைகளைப் பற்றி அல்ல. குழந்தைகள் பாவம். அவர்களது சிந்தனைச் சக்தியை நாம் ஊக்குவித்துக் கொண்டுவரவேண்டுமே அல்லாமல் புகழின் வெளிச்சத்திற்கு உட்படுத்திவிடக் கூடாது. இதுவரை நாம் அறிந்த பல கண்டுபிடிப்புகளுக்குக் காரணக்கர்த்தாக்களான விஞ்ஞானிகள் பெரும்பான்மையோர் பல வருடங்கள் உழைத்துக் கண்டு பிடித்தவையே. பல தோல்விகளைச் சந்தித்து ராபர்ட் ப்ரூஸ் போன்று எத்தனை சறுக்கல்கள் வந்தாலும் விடாது மனம் ஒருமித்து கருமமே கண்ணாயினார் போன்று தங்கள் வாழ்வையே தொலைத்தும் கூட கண்டுபிடித்தவர்கள் இல்லையா? அதனால் தான் நான் சொல்ல வருவது, ஊடகங்களில் வருவதை விட குழந்தைகளின் கண்டுபிடிப்புகளை, சிந்தனைகளை ஊக்குவித்து அதை வளர்த்துப் பெரிய நிலையில் வந்து சமூகத்திற்கு அதை உதவும் வகையில் அமைத்த பிறகு வெளிப்படுத்தலாமே. விட்டில் பூச்சிகளாய் மாறுவதை விட. வள்ளுவரின் குறள் நினைவுக்கு வருகின்றது அதையும் சொல்ல நினைத்து பதிவில் சொல்லாமல் விட்டுவிட்டேன். புகழைத் தேடி நாம் செல்லக் கூடாது. அது தானாக வர வேண்டிய ஒன்று என்பது.

      மிக்க நன்றி சகோ தாங்கள் பதிவுகளை உள்வாங்கிக் கருத்துகளை முன் வைப்பதற்கு. நாங்கள் மிகவும் மகிழ்வடைகின்றோம் இந்தக் கருத்துப் பரிமாற்றத்திற்கு.

      உங்கள் தளத்தில் கட்டுரையை வாசித்துக் கொண்டிருக்கின்றோம்.

      நீக்கு
    4. //கடற்கோள் வந்த பிறகு பல ஊடகங்களிலும் அந்தத் தொழில்நுட்பம் மற்றும் கருவி பற்றிப் படங்களுடன் பேசப்பட்டது. எனவேதான் அந்தச் செய்தியை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை// - புரிகிறது! அப்படியானால் தவறுதான்.

      //குழந்தைகள் பாவம். அவர்களது சிந்தனைச் சக்தியை நாம் ஊக்குவித்துக் கொண்டுவரவேண்டுமே அல்லாமல் புகழின் வெளிச்சத்திற்கு உட்படுத்திவிடக் கூடாது// - ஆழமாகச் சிந்தனை தூண்டும் கருத்து! மிக்க நன்றி!

      //மிக்க நன்றி சகோ தாங்கள் பதிவுகளை உள்வாங்கிக் கருத்துகளை முன் வைப்பதற்கு. நாங்கள் மிகவும் மகிழ்வடைகின்றோம் இந்தக் கருத்துப் பரிமாற்றத்திற்கு// - மிக்க நன்றி சகோ! எனக்கும் மிக்க மகிழ்ச்சி!

      நீக்கு
  6. அவசரக்கார மீடியாக்கள் :( ..sensation வேண்டும் எனவே இப்படி அவசரப்பட்டு செய்திகளை ஆராயாமல் வெளியிடுகின்றனர் ..அந்த பெண்ணுக்கு எதோ ஆர்வகோளாறு என்று சொன்னாலும் அவளின் பெற்றோர் கவனமுடன் இருந்திருக்கணும் இப்போ பெருத்த அவமானம்தானே ..இப்பதான் ப்ளஸ்டூ எழுத போகிறாள் அப்பெண் இந்த சம்பவத்தால் நாலு சக மாணவர்கள் கிண்டல் கேலி செய்யக்கூடும் அவளை பாவம் ....பின் விளைவுகளை யோசிப்பதில்லை அவசரக்கார கூட்டம் ..
    ஹா அஹா :) நாலு கால் செல்லங்கள் விஷயம் உண்மைதான் இங்கே பேப்பரில் வெளி வந்தாச்சு விவரங்களை விரைவில் confirm செய்து வெளியிடுகிறேன் :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக மிகச் சரியே. நான் எழுத நினைத்து பதிவின் நீளத்தினை மனதில் கொண்டு விட்ட கருத்து. இபுஞாவிற்கு அளித்த பதிலிலும்.

      நாலுக்கால் நண்பர்கள் போக இருக்கிறார்கள் என்பதை அறிந்தேன் ஆனால் அது உறுதிப்படுத்தப்பட்டதை அறியாததால் உட்டான்ஸ் என்று சொல்லியிருந்தேன். உங்கள் செய்தி அதை உறுதிப்படுத்திவிட்டது ஏஞ்சல். அதுவும் நீங்கள் அட்டகாசமாக எல்லா செல்லங்களையும் குறிப்பிட்டு ரசிக்கும் வகையில் சொல்லியிருந்தீர்கள். மிகவும் ரசித்தோம்..உங்கள் பதிவில்

      மிக்க நன்றி ஏஞ்சல்..கருத்துப் பரிமாற்றத்திற்கு

      நீக்கு
  7. இதையும் சொல்லணும் ..டிசம்பர் மாதம் மழை வெள்ளம் வந்த நேரம் இந்த முகநூலில் நடந்த கூத்துக்கள் அளவில்லா !..ஒரு பெண்மணி மழை பாதிகப்பட்ட இடத்துக்கு சென்று அங்குள்ள குழந்தையுடன் படம் எடுத்து தந்து பேஜ்ல போட்டார் ..அது அடுத்த நாளில் //இந்த குழந்தையை பெற்றோருடன் சேர்க்க உதவுங்கள் ..அதிகம் சேர் செய்யவும்னு பரவி தட்ஸ் தமிழ் வரைக்கும் போச்சு ......இப்படி புரளிகளை பரப்பரத்தில் மீடியாக்கள் முதலிடத்தில் இருக்கிறர்களே :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் முகநூலில் இல்லை என்றாலும் (துளசி இருக்கிறார். ஆனால் ஆக்டிவ் இல்லை) இப்படி நடப்பது பல அவ்வப்போது பேசப்படுகின்றது. சமூக வலைத்தளங்கள் நல்ல விஷயங்களைச் செய்யும் அதே நேரத்தில் ரொம்பவே விஷ விதைகளை ஊன்றுகின்றனதான் என்பதும் அறிய முடிகின்றது.

      நன்றி ஏஞ்சல்

      நீக்கு
  8. அண்மையில் ஜவஹர்லால் யூனிவர்சிடியில் நடந்த களேபரங்களின் காணொளிகள்சில டாக்டர்ட் என்னும் செய்தியும் பார்த்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்தி தெரியும் ஜிஎம்பி சார். மிக்க நன்றி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  9. நல்ல பகிர்வு. இன்றைய ஊடகங்களில் வரும் பல செய்திகள் இப்படித்தான்.... எதுவும் சொல்வதற்கில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்...

      நீக்கு
  10. இவைகளாவது பரவாயில்லைமா! யாருக்கும் கெடுதல் தராமல் தங்களை குறித்த மேன்மைக்காக சொல்கின்றார்கள் என விட்டு விடலாம், சில பாலியல் வன்முறைசம்பவங்களின் பின் இந்த பத்திரிகைகள் செய்யும் அசமந்தம் இருக்கின்றதே அவைகளின் தகிடுத்தத்தங்களை என்றும் மன்னிக்க முடியாது, தங்கள் வீட்டுப்பெண்ணுக்கு நடந்தால் அப்படித்தன பொய்யாய் இட்டுக்கட்டுவார்களா எனும் படி பத்திரிகைகளை விற்க செய்திகளை போட்டி போட்டு தருவதாய் சொல்லி உயிரோடிருப்பவர்களை வதைப்பார்கள்? ஒன்றைப்பத்தாகும் வல்லமையை எங்கே இருந்து தான் கற்பார்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் கொடுமயானதுதான் ஆமாம் மிக்க நன்றி நிஷா வருகைக்கும் விரிவான கருத்திற்கும்

      நீக்கு
  11. மா.மி.த.தா.த.மு.இ.தெ.பு.த.டா.அ. அவர்களின் ஆணைக்கிணங்க நாசாவில் இந்திய மாணவிக்கு-ன்னு வராத நியூஸ் எல்லாம் ஒரு நியூஸா!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாண்பு மிகு தங்கத் தாரகை தமிழக முதல்வர் இதயதெய்வம் புரட்சித்தலைவி டாக்டர் அம்மா ......அஹஹஹஹஹ் சரிதானே மலர்!!

      நீக்கு
  12. ஊடகங்களின் பொறுப்பற்ற செயலால்
    பாதிப்புற்றவர் அதிகம்...

    "நம் ஊடகங்களும், பரபரப்பிற்காகவும், பரபரப்புச் செய்திகளை முதலில் யார் வெளியிடுகின்றார்கள் என்ற போட்டியிலும், விற்பனைக்காகவும் செய்திகளை ஆராய்ந்து உறுதிப்படுத்தாமல் வெளியிட்டு விடுகின்றார்கள்." என்ற
    கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.

    சமூகம் மேம்பட உதவவேண்டிய ஊடகங்கள்
    சமூகத்தைச் சீரழிக்காமல் இருந்தால் சரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி யாழ்பாவாணன் சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும். ஆம் சீரழிக்காமல் இருந்தால் நல்லதே...

      நீக்கு
  13. ஆறயாமல் பரப்பும் அறிவுகெட்ட ஜென்மங்கள் என்று திட்டுவது இந்த ஊடகங்களுக்கே பொறுந்தும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  14. சமூகப்பொறுப்பு இல்லாமல் செயல்படும் நிலைக்கு ஊடகங்கள் வந்ததுதான் நமது வீழ்ச்சியின் ஆரம்பம்.

    கட்டுரையின் முதல் பகுதி கொடுத்த அழுத்தம் நாலுகால் செல்லங்களின் மார்ஸ் பயணத் திட்டத்தில் காணாமல் போய்விட்டது!

    செம !
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கஸ்தூரி. ஆமாம் முதல் பகுதியின் சீரியஸ்னெஸ் பி கு வில் இல்லை. அதைத் தெரிந்தேதான் கொடுத்தேன். முதலில் அதைத் தனிப்பதிவாகவே போடலாம் என்று நினைத்தேன். உள்ள பதிவுகளையே இன்னும் முடிக்காமல் காத்திருக்க வைத்திருக்க ஏனோ சட்டென்று ஏதோ தோன்ற அப்படியே போட்டுவிட்டேன்...

      இனி அப்படிச் செய்யாமல் இருக்க வேண்டும் என்றும் தீர்மானித்துள்ளேன். மிக்க நன்றி கஸ்தூரி.

      நீக்கு
  15. மிக்க நன்றி நாகேந்திர பாரதி சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

    பதிலளிநீக்கு
  16. ஊடகம் ...நிறைய ஊறுகளையே விளைவிக்கின்றன...என செய்வது...

    தம 8

    பதிலளிநீக்கு