வெள்ளி, 18 மார்ச், 2016

நானும் எனது எஜமானியம்மாவும்

எனக்கு 62 வயது ஆகின்றதாம். பேசிக் கொண்டிருக்கின்றார்கள். சமீபகாலமாக வராதவர்கள் வந்திருந்தார்கள். 62 வயது ஆகிவிட்டதா அதற்குள்? என் எஜமானியம்மாவும் அவரது கணவரும் அப்போது சிறியவர்கள். அவர்களது மூத்த மகளின் கல்யாணம் இப்போதுதான் நடந்தது போல் இருக்கின்றது. கொள்ளுப் பேரனே பிறந்தாயிற்று. முன் வாசலில் பந்தல் போட்டு அமர்க்களமாக நடந்தது. இப்போது அப்படி நடக்குமா?

அதன் பிறகும் பல நல்ல நிகழ்வுகள் பல, துக்கம் சில நடந்திருந்தாலும், எனக்குப் பல நல்லவையே நினைவில் உள்ளன. எஜாமானியம்மாவின் இரு மகள்களின் கல்யாணம், குழந்தைகள், மகன்களின் கல்யாணங்கள், புதுவரவுகள், சீமந்தம், குழந்தைகள், அவர்களது பிறந்தநாள் விழாக்கள் என்று எப்போதும் ஏதேனும் ஒரு நிகழ்வு, மகிழ்வாக இருக்கும். நானும் இளமையுடன், பொலிவுடன் மகிழ்வாக இருந்தேன்.

ஒவ்வொரு பண்டிகைக்கும், வெளியூரில் வசித்துவந்த மகன்களும், குழந்தைகளும் சிறியவர்களாக இருந்ததால், குடும்பத்துடன் வந்துவிடுவார்கள். எல்லோரும் சேர்ந்துதான் தீபாவளி, பொங்கல் என்று கொண்டாடுவார்கள்.

சுற்றிலும் மாமரங்கள், வேப்பமரம், தென்னை மரங்கள், கொய்யா மரம், சப்போட்டா மரம், மாதுளை மரம், வாழைமரம், நெல்லிக்காய் மரம், அடுக்கு மல்லி, மல்லி, கனகாம்பரம்,  செம்பருத்தி, மஞ்சள், இஞ்சி, கறிவேப்பிலை, எலுமிச்சை மரம், பவழமல்லி, தித்திப்பூ, பன்னீர்பூ, மருதாணி என்று. கிணற்றில் வற்றாத நீர். இப்போதும் கிணறு உள்ளது நீருடன். சேந்துவார் இல்லாமல்.

பண்டிகைகள் மட்டுமின்றி, கோடை விடுமுறையிலும் வெளியூரிலிருந்த குழந்தைகள் வந்துவிடுவார்கள். உள்ளூர் குழந்தைகளும் சேர்ந்து கொள்ள, குழந்தைகள் தோட்டத்தைச் சுற்றிச் சுற்றி ஓடியாடி விளையாடுவார்கள். குழந்தைகள் கிணற்றினை வியப்பாகப் பார்ப்பார்கள். மரங்களில் ஏறி விளையாடுவதும், குளிர்சாதனப் பெட்டியிலிருந்து பழரசத்தை எடுத்துக் குடித்துவிட்டுப் பாட்டிலில் நீரை நிரப்பி வைத்துவிடுவதும், ஒளிந்து விளையாடுகின்றோம் என்று தலையணைகள், மெத்தைகள், போர்வைகள் எல்லாம் கலைத்து விடுவதும், வாசலில் இலைகள், மண், தீப்பெட்டிகள், விளையாட்டுச் சாமான்கள் என்று பரப்புவதும் அதகளப்படும். தாத்தாவுடன் சீட்டு விளையாட்டும், கேரம் போர்டும் அமர்க்களப்படும்.

அவர்களின் குறும்புகள், சேட்டைகளைப் பெரியவர்கள் சமாளிப்பதும், கண்டிப்பதும், சிரிப்பும், கும்மாளமும் என்று பொழுது போவதே தெரியாது. எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். எனக்கும் மிகவும் மகிழ்வாக இருக்கும். குழந்தைகள் அனைவரும் ஒரே குடும்பம் போலத்தான் இருந்தார்கள். எல்லோரும் கிளம்பியதும் எனக்கும் வெறிச்சென்று இருக்கும். களை இழப்பேன்.

எல்லா குடும்பங்களிலும் இருப்பது போல், மாமியார், மருமகள்கள், மகன்கள் குடும்பத்திற்கிடையில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது நிகழ்ந்து வந்தாலும் பெரிதாக ஏதுமில்லாமல் எல்லோரும் குழந்தைகளால் மகிழ்வாகவே இருந்து வந்தார்கள். வருவோரும், போவோரும் என்று பல நாட்கள். 

நவராத்திரி கொலுவே திருவிழா போல நடந்துவந்த நாட்களும் நினைவில் நிழலாடுகின்றது. வாசலடைத்துப் பெரிய கோலம் போடப்படும். பொங்கல் என்றால் பல நிறங்களில் பொடிகள் தூவிய கோலங்கள் அழகுபடுத்தும். நானும் அலங்காரத்துடன் மிக அழகாக இருப்பேன்.  எல்லோரும் என்னை அப்படி ரசிப்பார்கள். வாஞ்சையுடன் இருப்பார்கள்.

இப்படி இருந்தால் கண் பட்டுவிடும் போல. குழந்தைகளும் வளர்ந்தார்கள். பெரிய வகுப்புகளுக்குச் சென்றதால், படிப்பின் சுமை கூடியது. மகன்களும் வேலை மாற்றம், ஊர் மாற்றம், பதவிகள் என்று, கூடுவது சற்றுக் குறைந்தது. என்றாலும் குழப்பங்கள் ஏதும் இல்லாமல் இருந்து வந்தது.
தனித் தனிக் குடும்பங்களாக வாழ்ந்ததால், எல்லோரது சிந்தனைகளும், பழக்கவழக்கங்களும், அவரவர் இருந்த ஊர்கள், அனுபவங்கள், சூழல்களுக்கு ஏற்ப மாறத் தொடங்கின. குழந்தைகளின் சிந்தனைகள் உட்பட.

வருடங்கள் செல்லச் செல்ல வீட்டு நிகழ்வுகள் பலவும், பெரியவர்களுக்குள் கருத்து வேறுபாடுகளை வரவழைத்தன. குறிப்பாக..

4, 5 வருடங்களுக்கு முன் எஜமானியம்மாவின் ஒரு மகன் திடீரென்று இறந்துவிட மெதுவாகப் பிரச்சனைகள் தலை தூக்கத் தொடங்கின. அப்போதுதான் எனக்குத் தெரிந்தது, இவர்கள் மனதில் இத்தனை நாட்கள் எரிமலை போல் கனன்று கொண்டிருந்த எண்ணங்கள் குழம்பாக வெளிவரத் தொடங்குகிறது என்று.

இப்போது வீட்டை என்ன செய்வது? தங்கம், வெள்ளி எல்லாம் பிரிக்கலாமே. அப்பெண்ணிற்குப் பாகம் கொடுக்க வேண்டாமா? வயதான பிறகும் எஜமானியம்மா இன்னும் காதிலும், மூக்கிலும், கழுத்திலும் இத்தனை நகைகள் எல்லாம் போட்டுக் கொண்டிருக்க வேண்டுமா? பிரித்துக் கொடுக்க வேண்டியதுதானே என்று இறந்து போன மகனின் மனைவியை மையமாக வைத்து, இந்த நிகழ்வைச் சாக்காக வைத்து, மற்றவர்கள் தங்கள் பங்கிற்காகப் பேசத் தொடங்கினர்.

மற்றொரு மகனின் குடும்பத்தில் பிரிவினை ஏற்பட, குடும்பங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகமாகி, சண்டைகள் என்று இடைவெளி ஏற்படத் தொடங்கியது. பிரிய நினைத்தப் பெண் குட்டையில் கல்லை எறிந்துவிட்டுப் போய்விட்டாள். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில், இரு குழுவானார்கள் குடும்பத்தார்கள். எஜமானியம்மாவும், பிரிவு ஏற்பட்டக் குடும்பத்து மகனும் குறியானார்கள் ஒரு குழுவிற்கு. இதற்கிடையில் எஜமானியம்மாவின் கணவர் இறைவனடி சேர்ந்தார். எரிமலையாய் கனன்று கொண்டிருந்த பிரச்சனைகள் வெளிப்படையாக வெடிக்கத் தொடங்கின. குடும்பங்களுக்குள் இடைவெளி அதிமாகியது.

தற்போது என் எஜமானியம்மாவுக்குச் சதம் அடிக்க இன்னும் 10 வருடங்கள் உள்ளன. இந்தப் பங்குப் பிரிப்பில் எல்லாம் தன்னை இணைத்துக் கொள்ளாத மருமகளை எஜமானியம்மா அழைத்து, “நீ பல வருடங்களுக்கு முன், எதிர்காலத்தில் இந்தக் குடும்பத்தில் பிரிவினை வரும். வராமல் இருக்க என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள், பிரார்த்தித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியது இப்போது நடக்கின்றதே.  எப்படிக் கணித்தாய்?”

“இது ஒன்றும் பிரம்ம சூத்திரம் இல்லை. மனித மனங்கள், எண்ணங்கள் வெளிப்படும் போது அவற்றைப் படிக்கத் தெரிந்தால் போதும்.” இது இப்போதுதான் எனக்குத் தெரியவந்தது. அப்போதே தெரிந்திருந்தாலும் என்னால் ஒன்றும் செய்திருக்க முடியாதுதான். 

என் எஜமானியம்மா ராணி போன்று கம்பீரமாக எல்லோரும் அவரது சொல்லின் கீழ் இருந்த காலம் அது.

என் எஜமானியம்மாவின் கணவர் உயிரோடு இருந்த போது அவர்கள் இருவரையும் பார்த்துக் கொள்ள மாட்டோம் என்று சொன்னவர்கள், கணவர் இறந்த பிறகும் எஜமானியம்மாவைப் பார்த்துக் கொள்ள மனமில்லாதவர்கள், இதுவரை வராதவர்கள் இப்போது வந்திருந்தார்கள். அம்மாவின் பொருட்களைப் பிரித்து எடுத்துக் கொண்டார்கள். அவரது கணவரின் பணமும் பிரிக்கப்பட்டது.  என் எஜமானியம்மா பேச்சற்று பரப்பிரம்மம் போல் பார்த்துக் கொண்டிருந்தார். அடுத்து என்னைப் பற்றிப் பேசினார்கள்.

இருவர் மட்டும் - தனியான மகனும், கணித்துச் சொன்ன மருமகளும் (அவர் குடும்பம்) மட்டும் இவற்றிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டார்கள் எதுவும் வேண்டாம் என்று.

இப்போது புரிந்தது. பொலிவிழந்து, களை இழந்து, மயான அமைதியுடன் யாருமற்ற அனாதையாக இருக்கும் எனது மரணம் நெருங்கிவிட்டதாக. நல்ல நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருக்கின்றேன். இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். நான் யாரென்று. ஆம்! என் எஜமானியம்மாவையும், அவரது குடும்பத்தாரையும் காத்து வந்த, இப்போது எனது மதிப்பால் காக்ககப்போகும் வீடு. என் மீது அவர்களுக்கு வாஞ்சை அல்ல. என்னால் வரும் பணம்தான் வேண்டும் என்பதும் புரிந்து போனது.

எல்லோரும் சென்ற பிறகு, என் எஜமானியம்மா மெதுவாகக் கேட்டார், தனியாக இருக்கும் மகனைப் பார்த்து.

“எல்லோரும் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போகிறார்களே. இந்த வீட்டையும் விற்கப் போகிறார்களா? யார் என்னைப் பார்த்துக் கொள்வார்கள்?  யாருடன் இருக்கப் போகிறேன்? அதைப் பற்றி யாரும் பேசவில்லையே”

நான் அமைதியாக இருக்கின்றேன் என் மீது இறங்கப் போகும் புல்டோசரின் கரங்களை எதிர்நோக்கி.

---கீதா 28 கருத்துகள்:

 1. வேதனைதான்.

  தன் கதையைத் தானே பார்க்கிறதோ!

  பதிலளிநீக்கு
 2. யதார்த்த உலகின் கோர முகங்களைத்
  தெளிவாகக் காட்டும் அற்புதமான பதிவு
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ரமணி சார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 3. பதில்கள்
  1. ஓ அப்படியா...தமிழ்மணம் இருக்கிறதே. சில சமயங்களிள் அப்படித்தான் ஓட்டுப்பெட்டி காணாமல் போய்விடுகிறது...வந்துவிட்டுப் பாருங்கள் ஜி..

   நீக்கு
 4. சற்றொப்ப இதுபோன்ற நிகழ்வினை எனது வாழ்வில் எதிர்கொண்ட அனுபவம் உள்ளது. சொந்த மற்றும் வாழ்ந்த வீட்டை விற்பது, வீட்டைவிட்டுச் செல்வது என்பதற்கான இழப்பிற்கு எதையும் ஈடர்கக் கூறமுடியாது. அவ்வாறு ஏற்படுகின்ற மனப்புண்ணை ஆற்றுவதற்கு மருந்தே கிடையாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் ஐயா. மிக்க நன்றி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

   நீக்கு
 5. தன் கதையை சொல்லி கலங்க வைத்து விட்டது வீடு !!..ஒரு மரம் வெட்டப்படுவதையே சகிச்சிக்க முடியாது என்னால் ... எத்தனை சந்தோஷ அனுபவங்களை தன்னுள் அடக்கி சேமித்து வைத்திருக்கும் அந்த வீடு !!

  பதிலளிநீக்கு
 6. எனக்கும் பிறந்து வளர்ந்த வீடு அடிக்கடி ஞாபகம் வரும் ,அந்த வீடு கைமாறி ,இடிக்கப் பட்டு மாடி வீடு கட்டப்பட்ட பின்பும் !அந்த இனிய வசந்த காலம் திரும்பி வராவா போகிறது ?

  பதிலளிநீக்கு
 7. எதையும் கொண்டு வரவில்லை.
  எதையும் எடுத்துப்போகவும் யாராலும் முடிவதில்லை.
  யாரை நம்பியும் வரவில்லை.
  யார் துணை இருந்தாலும் போவதிலிருந்து விலக்கு இருக்கப்போவதில்லை.

  உயிருக்கு உடல் சொந்தமா?
  உடலுக்கு உயிர் சொந்தமா?

  இரண்டுமே தற்கால பந்தம்.

  நடப்பது நடக்கட்டும்.
  நாராயணன் பார்த்துக்கொள்வான் என்ற எண்ணமிருப்பின்
  நிம்மதி பிறக்கும்.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 8. எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் வீட்டை ஒரு பாகம் இடித்துப் புதுப்பிக்க துவங்கினார்கள் அப்போது அவர் சொன்னது நினைவுக்கு வருகிறது வீட்டை இடிக்க விழும் ஒவ்வொரு அடியும் என் நெஞ்சில் அடிப்பது போல் இருக்கிறது என்றார்

  பதிலளிநீக்கு
 9. ம்ம்ம்ம்ம், என்ன சொல்வது என்றே தெரியவில்லை! என்னைப் பொறுத்தவரை வீட்டிற்கும் உணர்வுகள் உண்டு. அவையும் வாழவே நினைக்கும்.

  பதிலளிநீக்கு
 10. வேதனைதான் சகோதரியாரே
  வீட்டின் நினைவுகள் அழிக்க இயலாதவை.
  நாங்கள் முப்பது வருடங்களாக வாழ்ந்த வீட்டைப் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டது,
  காரணம் உறவின் பண ஆசை
  நாங்கள் குடிவரப் போகிறோம் என்றனர்,அவசரம் அவசரமாய் ஒரு காலிமனை வாங்கி,வீடு கட்டிக்கொண்டு குடி பெயர்ந்து வந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனாலும்இன்றும் கனவு வருமேயானால்,பழைய வீட்டில்தான் நிகழ்வுகள் நடப்பது போல் கனவு வருகிறது
  நினைவில் இருந்தும் கனவில் இருந்தும் வாழ்ந்த வீட்டை
  பிடுங்கி எறிய இயலவில்லை
  நன்றி சகோதரியாரே
  தம +1

  பதிலளிநீக்கு
 11. பல்லாண்டுகள் மிகவும் கெளரவமாக வாழ்ந்துவந்த பல குடும்பங்கள், கடைசியில் இதுபோன்றதோர் வேதனையையும் சோதனையையும்தான் சந்திக்க நேர்கிறது என்பதே இன்றைய யதார்த்தமாக உள்ளது.

  வீடு பேசுவதுபோல எழுதி முடித்துள்ளது மிக அருமையான நடை. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 12. எனது தாத்தாவின் பாரம்பரிய வீட்டை இடித்த நினைவலைகள் வந்து மனம் கலங்கியது.
  தமிழ் மணம் 8

  பதிலளிநீக்கு
 13. வயது ஏற ஏற முடிவு நெருங்கிக் கொண்டிருக்கிறதுன்னு தானே அர்த்தம். இதுல மரம் என்ன மனிதன் என்ன, வீடென்ன நாடென்ன?!

  பதிலளிநீக்கு
 14. மிக உருக்கம்..உங்கள் எழுத்துகள் நல்ல மெருகேறி வருகிறது...

  பதிலளிநீக்கு
 15. வேதனை... வலி...

  அருமையான கதை கீதா மேடம்...
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 16. எங்கள் பக்கத்து வீடு அந்த வீட்டின் தலைவர் மறைவுக்கு பின் இடிக்கப்பட்டது. அது இடிபடும் போது என் மனது வேதனை பட்டது. அந்த வீடு எவ்வளவு நல்லது கெட்டதைப் பார்த்து இருக்கும் என்று.

  வீடு அழகாய் தன் கதை சொன்னது. சொல்லவைத்த உங்களுக்கு பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 17. வீடு - திரைப்படம் பார்த்து தான் ஒரு வீடு கட்ட எவ்வளவு சிரமப்படணும்னு உணர்ந்தேன். உங்க வீடு சொல்வதும் சரிதான். வேதனை, அச்சம் கலந்த தவிப்பு.. அருமை!

  பதிலளிநீக்கு
 18. மனம் கனத்துப் போகிறது. வீடே, கவலைப்படாதே! உன் மடியில் வளர்ந்த ஒவ்வொரு பிள்ளையும் இதேபோல் ஏதாவது ஒரு வீட்டில் குடியிருந்து, பல்கிப் பெருகி, அந்த வீட்டையும் முடிவில் சோகத்திற்கு உள்ளாக்கிவிட்டுத் தான் போவான்! இது நிதரிசனம். இதை யாராலும் தடுக்கவே முடியாது.

  பதிலளிநீக்கு