சனி, 19 டிசம்பர், 2015

இதுவும் கடந்து போகும்?!

Image result for basic rights
நம் நாடு பலவிதமானத் தத்துவவங்கள் நிறைந்த நாடு என்று  மேலைநாட்டவர்களும் வியந்து பார்ப்பதுண்டு. அந்தத் தத்துவங்களுள் ஒன்றான “இதுவும் கடந்து போகும்” எனும் தத்துவம், இப்போதெல்லாம் எந்த ஒரு (வேதனையான) நிகழ்வுக்கும் கொடுக்கப்படும் அறிவுரையாக, அதிகமாகப் பேசப்படுகின்றது. ஒருவேளை, அதை நடிகர் சிவக்குமார் அவர்கள் மேடைப் பேச்சு ஒன்றில் கதை மூலம் சொல்லியதாலும் இருக்கலாம்.  நமக்குப் பழக்கமான ஒன்றாயிற்றே. படித்துத் தெரிந்து கொள்வதை விட, தெரிந்து கொண்டாலும், அந்த வார்த்தகளோ, வரிகளோ, புகழ்வாய்ந்த  ஒருவரால் சொல்லப்படும் போது எளிதாக மண்டையில் ஏறிவிடுகின்றதால் இருக்கலாம்.

எனக்கு இது சிறுவயதில் சொல்லப்பட்டது. நல்ல தத்துவம்தான் என்று எடுத்துக் கொண்டாலும், எல்லாவற்றிலும், “இதுவும் கடந்து போகும்” என்று கடந்து சென்றுவிட முடியவில்லை. ஏன்? விஷயத்திற்கு வரும் முன் இதையும் இங்கு சொல்லிவிடுகின்றேன். எப்போதுமே மூக்கைத் தலையைச் சுற்றித் தொட்டுப் பழக்கமாயிற்றே!. கேளுங்கள். சென்னையில் வெள்ளம் வந்து 19, 20 நாட்கள் ஆகின்றனவா? வெள்ளம் வந்து, தண்ணீர் வடிந்த ஒரு வாரத்தில் நான் நகர்வலம் சென்றேன். எனக்கு சுற்றுவது என்பது மிகவும் பிடித்த விஷயமாயிற்றே! 

இத்தனைக்கும் நான் இருக்கும் பகுதியில் ஒரு சில இடங்களில் வெள்ள பாதிப்பு இருந்தாலும், எங்கள் பகுதியில் மட்டும் ஒரு சொட்டு வெள்ளம் கூடத் தேங்கவில்லை என்பதையும் போகிற போக்கில் இங்கு பதிந்துவிடுகின்றேன். பாதிக்கப்படாத எங்கள் பகுதிக்கும் வெள்ள நிவாரணம் வழங்கப்படுகின்றது என்பது வேறு விஷயம். நீ வாங்கிக் கொண்டாயா என்று கேட்டால், முதலில் மனசாட்சியின் வடிவில், நேர்மை எட்டிப் பார்க்க வேண்டாம் என்று நினைத்தவள், பின்னர், நண்பர் ஒருவரின் பரிந்துரையால், திருவள்ளுவரை வணங்கிக் கொண்டு வாங்கி, மெய்யாலுமே கஷ்டப்படும் ஒருவருக்குக் கொடுக்கலாமே என்ற ஒரு நல்ல? எண்ணத்தினால்.

நிற்க! நடை, வழி தவறிவிடாமல் விஷயத்திற்கு வருகின்றேன். அப்படியாக நடந்து சென்ற வேளையில், வீட்டிற்குள் இருக்க வேண்டிய சாமான்கள் எல்லாமே தெருக்களில், தொலைக்காட்சிப் பெட்டிகளிலிருந்து, மெத்தைகள், தலையணைகள், ரேடியோக்கள், துணிகள், பள்ளிக் குழந்தைகளின் புத்தகங்கள், கூடைகள் வரை தெருவில் குவிந்து மலை போலக் கிடக்க, இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் செயலற்றுக் கிடக்க, கடைகளின் சாமான்கள் கூட வெளியில் குவிந்து கிடக்க, வெள்ளம் அடித்துச் சென்றது போக மிச்ச சொச்சங்கள் ஆங்காங்கே கிடக்க, இவற்றின் நடுவில் குடிசைப் பகுதிகள் உட்பட, ஒவ்வொரு வீட்டிற்கும், கடைக்கும் சராசரியாக 2 லட்சத்திற்கு இழப்பீடு இருக்குமோ என்று கணக்கிட்டபடியே, இவையேனும் மீட்டெடுக்க முடியும், ஆனால், அதைவிட முக்கியமாக மீட்டெடுக்க முடியாதபடி அடித்துச் செல்லப்பட்ட உயிர்களை நினைத்துப் பார்த்தேன். இதற்கு என்ன நிவாரணம் கொடுக்க முடியும் சொல்லுங்கள்? மனதை வேதனைப்படுத்தியது. வெள்ளம் நம்மை எல்லாம் கடந்து சென்றிருந்தாலும், இதுவும் கடந்து போகும் என்று ஏனோ என்னால் பாதிப்பைக் கடந்து செல்ல முடியவில்லை.

வியப்பு என்னவென்றால், மக்களின் முகத்தில் எந்தவிதத் துயர அடையாளங்களும் காணப்படவில்லை. எல்லோரும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி பலரும் வேலைகளில் மூழ்கிட, வீட்டு வாசற்படியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க, குழந்தைகள் தெருவில் கிரிக்கெட்டும், குடிசைப்பகுதிகளில் குழந்தைகள் கேரம்போர்டும் விளையாடிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த போது நம் நண்பர் மூங்கில் காற்று முரளிதரனின் கவிதை, “ஒரு மாணவனின்குரலில், இந்த மழை அறிவியலும், அரசியலும், மனிதநேயமும் கற்றுத் தந்ததே, இத்தனை பாடங்கள் போதாதா? இன்னொரு முறை சொல்லாதீர்! மழை விடுமுறையால், படிப்பு பாழாய்ப் போனதென்று!” என்று நினைத்து விளையாடுகின்றார்களோ என்று தோன்றியது.

சாலைகள் எல்லாம் வழக்கம் போல போக்குவரத்து நெரிசலில் திண்டாட, திநகர் உஸ்மான் சாலையும், பாண்டிபசாரும், ரங்கநாதன் தெருவும், துணிக்கடைகளும், நகைக்கடைகளும், உணவகங்களும், வரும் கிறிஸ்துமஸ், புதுவருட, பொங்கலுக்கான வியாபாரத்தில் மக்களின் திரளில் வழக்கம் போலத் திருவிழாக் கோலம் பூண்டிருக்கச் சாலையோரக் கடைகளிலும் கூடப் பேரங்கள் நடந்து கொண்டிருந்தன. இங்கும் மீண்டும் மூங்கில்காற்றின் கவிதை நினைவில் நிழலாடியது ஒரு பாமரனின் மழை நாட்களில், ஏழாம் நாள் (நிவாரணத்திற்காக) ஏக்கம், எட்டாம் நாள் எதிர்பார்ப்பு. ஒன்பதாம் நாள் ஒய்வு, பத்தாம் நாள் .....போங்கப்பா பொலம்பிகிட்டே இருக்க   முடியுமா? பொழைப்பை பாக்க வேணாமா? அதானே?!!!!

இந்த இடங்களிலா, 7 நாட்கள் முன்பு, அடையாறு பொங்கியது? கூவம் கரைபுரண்டது? மழையும் தாண்டவமாடி, எச்சரிக்கை மணி அடித்தது மட்டுமல்லாமல் வெள்ளமாய் வந்து ஓடுவதற்கு வழியில்லாமல் வீட்டில் ஒதுங்கி அவலத்தை ஏற்படுத்தியது? உயிர்கள் மிதந்தன? தெருக்களில் மலைபோல் குவிந்திருந்தப் பொருட்களும், குப்பைக் கூளங்களின் அடையாளமும், அரிப்பெடுத்தச் சாலைகளையும் தவிர வேறு எந்தச் சுவடும் கூட இல்லை. சூரியனுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அடையாறும், கூவமும் கூட, வெள்ளத்தில் தங்கள் அழுக்குகளையும், குப்பைகளையும் களைந்து, சுத்தமாக மாறியதாக ஊடகங்களாலும், மக்களாலும் மகிழப்பட்டவை தங்கள் பழைய நிலைக்குத் திரும்பியிருந்தன. முகவரி தொலைந்துவிடாமல் இருக்க அழுக்கு, குப்பை என்பதுதான் இவற்றின் அடையாளம் என்று ஆகிப் போனதால் இருக்கலாம்!

சென்னை, கடலூர், நாகை மற்றும் இப்போது தென்னகத்திலும் மழையின் பாதிப்பு. இந்த பாதிப்புகளின் விளைவுகளை எல்லாம் இப்போது பீப்பும், ராஜாவும் புறம்தள்ளி ஊடகங்களில் நிற்பதைப் பார்க்கும் போது தமிழகத்தின் முக்கியமான அடுத்தக் கட்ட, ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் பணிகள் முன்னிருத்தப்படுவது மக்களால் மறக்கப்பட்டுவிடுமோ என்ற ஆதங்கம் எனக்கு எழாமல் இல்லை.

ஊடகங்கள் பரபரப்பிற்காகவும், டிஆர்பி ரேட்டிற்காகவும், வியாபாரத்திற்காகவும் இயங்கும் நிலையில், நீரில் மூழ்கிய பல பள்ளிகளின் சீரமைப்பு,  பள்ளிக் குழந்தைகளின் தேவைகள், பல குடும்பங்களின் வாழ்க்கை, இழப்புகளின் மீட்பு, வெள்ளத்தில் அரிப்பெடுத்துக் கற்கள் சிதறிக் கிடக்கும் சாலைகள் செப்பனிடப்படுதல், மழையில் பாதிக்கப்பட்டப் பல காப்பகங்களின் தேவைகள், சென்னையைச் சுத்தப்படுத்துதல் முக்கியமாக நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகள் நீக்கப்பட்டு, தூர்வாரப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு விரிவுபடுத்தல் என்ற நீண்ட ஆக்கப்பூர்வமான பணிகள் புறந்தள்ளப்படாமல் இருக்க வேண்டுமே என்று தோன்றுகின்றது.  பீப், ராஜா செய்திகள் எல்லாம் கண்டிப்பிற்கு உரியவையே. மழைக்காளான்கள், புற்றீசல்கள் போல் தோன்றி, அடங்கிவிடக் கூடியவற்றைக் கண்டித்துக் குரல் கொடுத்துவிட்டு, மீண்டும், மீண்டும் வளர்த்து வருவதைவிட, இதுவும் கடந்து போகும் என்று கடந்துவிட்டால் அடங்கிவிடும். ஆனால், நமக்குப் பிடித்தது என்னவோ இரு கோடுகள் தத்துவம்தான் பெரும்பாலும்.

ஆனால், நமது நீண்டகால வளர்ச்சிப் பணித்திட்டங்கள் என்பவை மழைக்காளான்கள், புற்றீசல்கள் போல் அல்ல.  எதிர்கால சந்ததியினருக்கு வேண்டிய நிரந்தரமானத் தீர்வுகள். கல்வித்துறையில் உள்ள ஊழலுக்கும், பணம் விழுங்கிகளுக்கும் எதிராகக் குரல் கொடுத்து அரசு பள்ளி, கல்லூரிகளில் நல்ல தரமான தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை, அடிப்படைச் சுகாதாரம், அரசு மருத்துவமனைகளில் நல்ல மருத்துவம் நல்ல சாலைகள், நல்ல வாழ்க்கைத்தரம், என்ற நமது அடிப்படை உரிமைகள் அனைத்தையும் பெற ஒரு நல்ல தலைமை வேண்டும் என்று பொதுமக்கள், ஊடகங்கள், என்று எல்லோரும் ஒருங்கிணைந்து, பீப், ராஜா செய்திகளைக் குரல் கொடுத்துப் போராடி அடக்க முடியும் என்றால், அதே குரலால், போராட்டத்தால் நல்ல அரசை உருவாக்கி சாதிக்க முடியாதா என்ன?! மழைக்காளான் செய்திகளுக்கு நடக்கும் போராட்டங்கள் போல், விலைவாசி ஏற்றத்தைக் கண்டித்தோ, நல்ல ஊழலில்லா அரசிற்காகவோ, நமது அடிப்படை உரிமைகளுக்காகவோ குரல் எழுப்பி அதை அடையும் வரை குரல் கொடுத்துப் போராடுவது இல்லையே என்பது வேதனையே.

அடுத்த பருவ மழைக்குள், புயலுக்கு முன், சென்னையும், கடலூரும், நாகையும் ஏன் தமிழகம் முழுவதுமே வெள்ளப்பெருக்கு ஏற்படாமல், தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ளக் குரல் கொடுத்து இனியேனும் உயிர் இழப்புகள் இருக்கக் கூடாது என்று செயல்படலாம்.  தன்னார்வலர்கள் இந்தச் செய்திகளைப் பேசினாலும், அதிகம் பேசாமல், தங்கள் பணிகளில் குறிக்கோளாகப் பல திட்டப்பணிகளில் ஒன்றாகிய சென்னையைச் சுத்தப்படுத்தலில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது மகிழ்வாக இருக்கிறது. அதைப் போல, ஆக்கப்பூர்வமானச் செயல்களுக்குத் துணை நிற்கலாமே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே இது. இவ்விஷயத்தில் என்னால் இதுவும் கடந்து போகும் என்று எண்ண முடியவில்லை. என் ஆதங்கமும், நான் சொல்லியதும் தவறு என்றால் தயவாய் சொல்லிவிட்டு இதையும் கடந்து சென்றுவிடுங்கள்.

                        ---கீதா

படம்: இணையத்திலிருந்து


36 கருத்துகள்:

  1. நேர்கொண்ட பார்வை..... இது கடக்கக்கூடாது...நான் உங்கள் பக்கம்.....

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி செல்வா தங்கள் கருத்திற்கும் அதை ஆமோதித்ததற்கும்..

    பதிலளிநீக்கு
  3. அவரவர், அவரவரது வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
    அடுத்த மழை வரும் முன் செய்யவேண்டிய பாதுகாப்பு, முன்னெச்சரிக்கைப் பணிகளை செய்வார்களா?
    தெரியவில்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முஹம்மது நிஜாமுத்தீன் சகோ தங்களின் கருத்திற்கு. ஆமாம் அதுதான்...செய்ய நினைத்திருந்தால் இத்தனை வருடங்களுக்குள் செய்திருக்க வேண்டுமே..கடலூர் ஒவ்வொருமுறையும் அடி வாங்குவது தெரியாதா என்ன?

      நீக்கு
  4. //அடுத்த பருவ மழைக்குள், புயலுக்கு முன், சென்னையும், கடலூரும், நாகையும் ஏன் தமிழகம் முழுவதுமே வெள்ளப்பெருக்கு ஏற்படாமல், தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ளக் குரல் கொடுத்து இனியேனும் உயிர் இழப்புகள் இருக்கக் கூடாது என்று செயல்படலாம்.//

    ஆமாம். போர்க்கால அடிப்படையில் துரிதமாகச் செய்ய வேண்டிய இதுபோன்ற ஆக்கப்பூர்வமான செயல்களே இன்றைய அத்யாவஸ்ய தேவையாகும். உயிர் இழப்புகள் என்பது மிகவும் கொடுமையான விஷயமே. சமுதாய விழிப்புணர்வுப் பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வைகோ சார். தங்களின் விரிவான கருத்திற்கும் வருகைக்கும். துரிதமாகச் செயல்படவேண்டும் என்பதோடு, மக்களும் தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் அதை அடையும் வரை.நல்ல தலைமை வேண்டும்..

      நீக்கு
  5. நான் இரண்டு நாட்கள் சென்னையில் இருந்துவிட்டு நேற்றுதான் மதுரை வந்தேன். தாம்பரம் பகுதியில்தான் அலைந்து திரிந்தேன். வெள்ளம் வந்து போனதற்கான சுவடு எதுவுமே என் கண்ணில் படவில்லை. மக்கள் இயல்பாய் இருந்தார்கள்.
    வெள்ளத்தைப்பற்றி விசாரித்தபோது என்னை ஏற இறங்க பார்த்தார்கள். நான் ஏதோ கேட்கக்கூடாததை கேட்டதுபோல் உணர்ந்தேன். இத்தனை சீக்கிரம் சென்னை மீண்டது பெரும் மகிழ்ச்சிதான்.
    அதேவேளையில் இந்த விரைவு மறதி மீண்டும் நம்மை இயற்கையை சுரண்ட வைத்துவிடுமே என்ற பயத்தையும் தருகிறது.
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோ உங்கள் ஆதங்கம்தான் செந்தில்...மக்கள் திருந்தவே போவதில்லை என்பதும் தெரிகின்றது..

      நீக்கு
  6. நேர் கொண்ட பார்வை துளசி சார்/ கீதா மேடம்...
    ஆக்கப்பூர்வமான பணிகளே அத்தியாவசியமானது.
    இதை முதலில் செய்ய வேண்டும்...
    விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி குமார். தங்க்ளின் கருத்திற்கும் வருகைக்கும். மறக்கப்பட்டுவிடுமோ என்ற ஆதங்கம் உள்ளது

      நீக்கு
  7. உணர்வுபூர்வமாக எழுதப்பட்ட இத் தகவலுக்கு நானும் தலை வணங்குகின்றேன் சகோதரா ! எதிர் காலத்திலும் பாரிய உயிரிழப்புகளிற்கு வழி வகுக்கும் இந்நிலையைப் போக்குதலே அனைவரினது தலையாய கடமையாகும் .மிக்க நன்றி சகோதரா பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்.

      நீக்கு
  8. சீரமைப்பு மிகமுக்கியம் அரசு இனியும் காலம் தாழ்த்தக்கூடாது. சிந்திக்கும் பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தனிமரம் நேசன் ரொம்ப நாளாச்சு பார்த்து. மிக்க நன்றி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  9. துயரங்கள் கடந்து போகட்டும்.
    ஆனால் அதனால் ஏற்பட்ட வலிகள்
    என்றும் நினைவில் இருக்கட்டும்.

    இழப்புகளுக்கு எப்போதும் அடுத்தவர்மேல்
    குற்றம் சொல்லும் நம் குணம் மாறட்டும்
    தவறுகளிலிருந்தாவது பாடம் கற்று
    அடுத்த தலைமுறைக்கு நன்மை நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அன்பே சிவம் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்.

      நீக்கு
  10. 1961 ல் திருச்சியில் வெள்ளம்
    1977 ல் நாகையில் புயலின் கொடுமையை .
    2003 .ல்
    சென்னையில் சுனாமியை .
    2015 ல் கடந்த 74 வருடங்களில் காணா கோரத்தை.

    ஒன்று சொல்லவேணும். இனி மக்கள் பாவம் செய்வதற்கு அஞ்சமாட்டார்கள் என்று தோன்றுகிறது. நரகம் என்றால் எப்படி இருக்கும் என்று கண் கூடாக பார்த்துவிட்டார்கள் சென்னை மக்கள்.

    அதனால், தாம் நரகத்துக்குப் போனால் கூட சமாளித்துக்கொண்டு விடலாம் என்ற தன்னம்பிக்கையை இந்த வெள்ளம் அவர்கள் எல்லோருக்கும் கொடுத்து இருக்கிறது.

    இதுவும் கடந்து போகும் .என்று சொல்வதை ஒரு மேக்ரோ கோணத்தில் பார்த்தால்,
    ஒரு ஐம்பது வருடம் பின்பு, இப்போது இருக்கும் மக்களில் 50 விழுக்காடு இருக்கமாட்டார்கள்.
    நூறு வருடங்கள் பயன்பாடு, இப்போது இருக்கும் எவருமே இருக்கமாட்டார்கள்.

    எல்லாமே கடந்து போகும் என்பது தான் உண்மை.

    கடவாது நிற்பவன் கல்லாய் கர்பக்ருஹத்துக்குள் உட்கார்ந்துகொண்டு,
    நீ ,
    நான் யார் , நீ யார் எனக் கல்
    என்கிறான்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சுப்புத்தாத்தா தங்களின் விரிவான கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  11. சென்னை இயல்பு நிலைக்க திரும்பியது அறிந்து மகிழ்கின்றேன்
    சகோதரியாரே
    ஆனாலும் இந்தப் பேரழிவில் இருந்து
    ஏதேனும் பாடம் கற்றுக் கொண்டோமா
    இடையூறுகளை சீர் செய்வோமா
    அல்லது
    அதுவும் கடந்து போகும்
    என்று எண்ணி நமது வேலையைப் பார்த்துக் கொண்டு
    போய்விடுவோமா
    நன்றி சகோதரியாரே
    தம ’+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் ஆதங்கமே கரந்தை சகோ.. மக்களும் பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. ஆட்சி மாற்றத்திற்கு மட்டுமல்ல, விழிப்புணர்வு வந்ததாகவும் தெரியவில்லை.

      மிக்க நன்றி சகோ..தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  12. எதுவும் இயல்பாகிப்போகும் என்பதைவிட இயல்பாக ஆகித்தானே ஆகவேண்டும் என்ற நிலையும் இருக்கிறதல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா. இயல்புநிலைக்குத் திரும்புவதில் தவறு இல்லை ஐயா. ஆனால் கற்றப்பாடங்களை மறந்துவிடும் அபாயம் இருக்கின்றது என்பதுதான் ஆதங்கம்

      நீக்கு
  13. வணக்கம்
    அண்ணா

    எல்லாம் ஒரு வித அனுபவங்கள்தான்... அண்ணா.நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும்.த.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரூபன் தம்பி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  14. எதுவும் கடந்து போகத்தான் வேண்டும் கடந்தும் போகும் மாற்றம் தேவை அதுவும் நல்மாற்றம் தேவை நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் நடக்கப்போவது நல்லவையாக இருக்கட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். நடந்ததில் இருந்து கற்றதை மறந்துவிடக் கூடாது என்பதே..

      நீக்கு
  15. சரியானதொரு அலசல் இதை மக்கள் உடன் மறப்பது நன்றல்ல... இருப்பினும் மக்களுக்கு என்றுமே பரபரப்பு செய்திகளில்தான் நாட்டம் இருக்கின்றது நாளைய தேர்தலில் இதை நன்றாக நினைவு இருந்தால் அரசியலில் வேறு பரிமாணத்தை மக்கள் கொண்டு வரலாம் இல்லையெனில் இனியென்றும் இதே நிலையே...
    தமிழ் மணம் 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி சரியாகப் பரிந்து கொண்டமைக்கு. அதேதான் சொல்லிச் சென்றது...

      நீக்கு
  16. குறை சொல்லி படுத்தாமல். எதிர்க்கட்சிகள் எல்லாம் ஆட்சியைப் பிடிக்கும் எண்ணத்தில் இஷ்டத்திற்கு பேசாமல், எல்லோரும் ஒன்றுபட்டு, ஆக்கபூர்வமான சிந்தனையில் நல்ல எண்ணங்களோடு தொலைநோக்குப் பார்வையோடு திட்டங்கள் .வகுக்க வேண்டும். மக்களும் நடந்த பாதிப்புகளை உணர்ந்து பிடிவாதம் பிடிக்காமல் பொறுப்புணர்ந்து அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். இனியாவது நாம் மாற்றங்களை நம்மிலிருந்து தொடங்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச் சரியான வார்த்தைகள் ஸ்ரீராம். ஆனா, பாருங்க இப்பவே சைதாப்பேட்டை மக்கள் அந்த இடத்தைக் காலி பண்ண மாட்டோம்னு பிடிவாதம் பிடிக்கறாங்களே...இப்ப அரசியல் கட்சிகள் எந்த அதிரடியும் பண்ண மாட்டாங்க....ஓட்டு வங்கி. இன்னும் இன்று நேரடியாகத் தெரிந்து கொண்டது இருக்கு ஸ்ரீராம். பதிவுல வரும்...எனக்கு என்னவோ மக்கள் திருந்தப் போவதுமில்லை, மாறப்போவதுமில்லைனு தோணுது...சாரி இப்படி நெகட்டிவாகச் சொல்ல...ஒத்தையா ரெட்டையானு ரெண்டுதானே இருக்கு..இதுல எது உருப்படினு சொல்ல முடியும் சொல்லுங்க...

      நீக்கு
  17. மிக அருமையான பதிவு! மிருகங்களும் பறவைகளும் கூடத்தான் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன. அவை எந்த நிவாரணத்தை தேடுகின்றன? இயல்பிலேயே மனிதனும் இயற்கை பேரிடர்களை சமாளிக்க திறன் பெற்றிருப்பவன் தான். அவனுக்கு தேவை ஆறுதலான வார்த்தைகளும், ஊக்கமும்தான். கூடவே கொஞ்சம் சமாளிக்க உதவியும். அரசும் தன்னார்வலர்களும் எவ்வளவு கொடுத்தாலும் இழந்த அனைத்தையும் அவன் பெற முடியுமா? முடியாதல்லவா? வாக்குக்காக அரசியல் கட்சிகள் செய்யும் கூத்துக்கள் வெள்ள பாதிப்பை விட அதிகம் ரணப்படுத்துகின்றன. முறையாக தேவைப்படுவோருக்கு இந்த நிவாரணங்கள் சென்றடைந்தால் சிறப்பு. சிலருக்கு தேவைக்கு அதிகமாக கிடைத்து விற்றுவிடுவதாக நாளிதழில் படித்தேன். நம் மக்களை எந்த வெள்ளம் வந்தாலும் திருத்த முடியாது போலிருக்கிறது. உங்கள் வீட்டில் வெள்ள பாதிப்பு அதிகமா? போனில் அன்று சரியாக பேச முடியவில்லை! வருந்துகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சுரேஷ் தங்களின் விரிவான பின்னூட்டத்திற்கு. கற்ற பாடங்களையும் கடந்து செல்லாமல் இருந்தால் மிக்க மகிழ்வாய் இருக்கும்...

      நீக்கு
  18. நடந்தது நடக்காமல். இருக்க வேண்டுமானால் .மக்கள்அதிகாரம் செலுத்த வேண்டும்...

    பதிலளிநீக்கு
  19. மழைக்காளான்கள், புற்றீசல்கள் போல் தோன்றி, அடங்கிவிடக் கூடியவற்றைக் கண்டித்துக் குரல் கொடுத்துவிட்டு, மீண்டும், மீண்டும் வளர்த்து வருவதைவிட, இதுவும் கடந்து போகும் என்று கடந்துவிட்டால் அடங்கிவிடும்.

    மிகச் சரியான வார்த்தைகள்

    நாம் நம் நேரத்தினை செலவு செய்து குரல் கொடுக்க மட்டுமல்ல எழுத்தின் மூலமும் செய்ய ஆயிரம் காரியங்களிருக்க. தனிமனிதர்களை நோக்கி இகழ்ந்தும், புகழ்ந்தும் பேசி, எழுதி சீறிப்பாய்ந்து கொண்டிருக்கின்றோம். பொதுக்காரியங்கள் அப்படியே கிடப்பில் கிடக்கின்றது.

    படிக்காத பாமரர் செய்தாலும் பரவாயில்லை. அறியாமையினால் செய்கின்றார்கள் என சொல்லலாம். படித்து பலதும் அறிந்த நாமே இம்மாதிரி நம் சிந்தனையை திசை திருப்புவதும் இல்லாமல் மற்றவர்களையும் திசை திருப்புகின்றோம் என அறியாமலா இருக்கின்றோம்.


    பதிலளிநீக்கு
  20. இப்போதெல்லாம் உங்கள் பக்கத்தில் நீண்ட நெடிய கட்டுரைகள். பொறுமையாகவே படித்தேன். ஏழை மக்களுக்குத்தான் கடவுளின் சோதனை போல. எப்போதுமே அதிகார மையத்தில் இருப்பவர்கள் இவர்கள் மீது எல்லாப் பழியையும் போட்டுவிட்டு தப்பிக்க நினைப்பார்கள். இப்போதும் கூட அடையாறு கரையோர குடிசைக்காரர்கள் மீது மட்டுமே பழி. பெரும்புள்ளிகள் பற்றி பேச்சே இல்லை.

    பதிலளிநீக்கு
  21. 'இதுவும் கடந்து போகும்' எனும் அந்தக் கோட்பாடே தவறான ஒரு வழிகாட்டல் என்பது கடந்த வாரம் வேறொன்றைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும்பொழுது திடீரென்று தோன்றியது. இது பற்றி எழுதலாமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன், நீங்கள் முந்திக் கொண்டு விட்டீர்கள்!

    எப்படிப்பட்ட நிலைமையும் ஒருநாள் மாறித்தான் போகும் என்பது இன்ப வாழ்வில் இருப்பவனுக்கு நிலையாமையை உணர்த்த அருமையான ஒரு பொன்மொழி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், வாழ்வில் துன்பத்தையும் தேக்க நிலைமையையும் கொண்டிருப்பவனுக்கு இது சோம்பேறித்தனத்தைக் கொடுக்கும். நாம் முயன்றாலும் முயலாவிட்டாலும் இன்றைய நிலைமை நாளை இருக்கப் போவதில்லை என்கிற நினைப்பு புதிய முயற்சிகளில் இறங்க விடாமல் அவனைத் தடுக்கும்.

    ஆனால், தனி மனித வாழ்வையொட்டி நான் சிந்தித்த இந்தக் கோணத்தில் இல்லாமல், இதையே சமூக அளவில் பொருத்திப் பார்த்து - அதுவும், இன்றைய தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப - நீங்கள் எடுத்துரைத்த விதம் நன்றாக இருந்தது! கவலைப்படாதீர்கள்! அந்தப் பொன்மொழி, அந்தப் பொன்மொழியின் இன்றைய செல்வாக்குக்கும் பொருந்தும்! ;-)

    பதிலளிநீக்கு