வியாழன், 24 டிசம்பர், 2015

உண்மை உறங்காது!...சில நேரங்களில், சிலரை உறங்கவும் விடாது.!!

Image result for truth never sleeps
ரசதந்திரம் எனும் சத்தியன் அந்திக்காடு இயக்கிய, மோஹன்லால், மீராஜாஸ்மின், இன்னெசென்ட் நடித்த, சிலவருடங்களுக்கு முன் வெளியான நல்ல ஒரு திரைப்படம். அதில், மோஹன்லால், மீரா ஜாஸ்மினை ஆண்வேடமிட்டுத் தன்னுடன் தங்க வைத்திருக்கிறார். 
Image result for rasathanthram malayalam movie
நண்பரான இன்னெசெண்டிடம் மட்டும் ஒரு நாள் அவ்வுண்மையைச் சொல்லி யாரிடமும் சொல்லக் கூடாது என்று எச்சரிக்கவும் செய்கிறார். காணாமல் போன மீரா ஜாஸ்மின் கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் பலரையும் கைதுசெய்துத் தீவிரமாக விசாரித்துக் கொண்டுவேறு இருக்கிறார்கள்.  அந்த உண்மையை விழுங்கி ஜீரணிக்க முடியாத பாவம் இன்னெசென்ட் உறக்கமின்றித் தவித்து அன்றிரவே படுக்கையிலிருந்து எழுந்து ஒரு மலையடிவாரத்திற்கு ஓடிச் சென்று யாரும் இல்லை என்ற தைரியத்தில் உறக்க அவ்வுண்மையைச் சொல்லி முடித்து நிம்மதியுடன் திரும்ப, இரவு ரோந்து சுற்றிய இரு காவல்துறையினர் அவரது பின்னால்!...

சில உண்மைகளை அவ்வளவு எளிதாக விழுங்கி ஏப்பம் விட்டுவிட முடியாது.  சினிமாவில் மட்டுமல்ல, நிஜவாழ்விலும் ஏராளமான இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 

Naxal Varghese.jpg
வர்கீஸ்
கேரளாவின் செகுவேரா என்றழைக்கப்படும் வயநாடு நக்சலைட் வர்கீஸ் கொலை சம்பந்தப்பட்ட வழக்கும் அது போலத்தான். காவல்துறையினருக்கும், வயநாடு ஆதிவாசி மக்களுக்காகப் போராடிய வர்கீசுக்கும் 18.02.1970 ல் நடந்த துப்பாக்கி மோதலில் வர்கீஸ் கொல்லப்பட்டார் என்று சொல்லப்பட்டு முடித்த அந்த வழக்கை, இராமச்சந்திரன் எனும் போலீஸ்காரர், 28 ஆண்டுகளுக்குப் பிறகு, தான் இறப்பதற்குச் சிலவருடங்களுக்கு முன், அதாவது 1998 ல், தன்னால் விழுங்கி ஜீரணிக்க முடியாத அந்த உண்மையை வெளிப்படுத்தினார். இறந்த உடலின் மீது துப்பாக்கி ஒன்று வைக்கப்பட்டு, துப்பாக்கி மோதலில்தான் கொல்லப்பட்டதாக ஜோடனை செய்யப்பட்டதாம்.

உண்மை என்னவென்றால், சரணடைந்த வர்கீசை, டிஎஸ்பி இலட்சுமணன் வற்புறுத்தியதால் வேறு வழியின்றி, தான் சுட்டுக் கொன்றேன் என்று கூறி அவ்வழக்கை சிபிஐ மீண்டும் ஏற்றெடுத்து நடத்தச் செய்துவிட்டார் இராமச்சந்திரன். அவ்வாறு நடந்த வழக்கில் 28.10.2010 ல், அதாவது 40 ஆண்டுகளுக்குப்  பிறகு, அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பலரும் 80 வயதைத் தாண்டிய நிலையில் சக்கர நாற்காலியில் நீதிமன்றத்திற்கு விசாரணைக்குக் கொண்டுவரப்பட்டனர். அதில், இலட்சுமணனுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது!

சிலமாதங்களுக்கு முன் இது போல் புத்திசாலித்தனமாய்ப் புதைக்கப்பட்ட ஓர் உண்மை, அவ்வுண்மை அறிந்த ஒருவரை உறங்கவிடாமல் செய்து போலீசாருக்கு அவரைக் கொண்டே ஒரு மொட்டைக் கடிதத்தை எழுத வைத்து அதன் வாயிலாக குற்றவாளிகளைக் கைதுசெய்ய வைத்திருக்கிறது. அக்டோபர் மாதம் 2015 ல் அஞ்சாலுமூடு காவல் நிலையத்திற்கு வந்த ஒரு மொட்டைக் கடிதத்தில், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கொல்லப்பட்ட, வெட்டுவிளை தன்யாநிவாஸ் ஸ்ரீதேவியம்மா (52) என்பவரின் உடல், திருக்கடவூர் குப்பனபொங்கும்தாழத்து எனும் இடத்திலுள்ள, ஆளில்லா வீட்டில், கழிவறைத் தொட்டியில் இருப்பதாகவும், அவரைக் கொன்றவர்களின் ஒருவரான ராஜேஷ் (42) கண்ணூர் முழப்பிலங்ஞாடியில் இருப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது. காவல் துறையினர் கழிவறைத் தொட்டியைப் பரிசோதித்த போது, ஸ்ரீதேவி அம்மாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ராஜேஷைக் கைது செய்து விசாரணை செய்ய, ஒரு வருடத்திற்கு முன் நடந்த கொலையைப் பற்றிய உண்மையும் வெளியானது.

ஸ்ரீதேவி அம்மாவின் வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்த ராஜெஷுக்கும் ஸ்ரீதேவியம்மாவுக்கும் இடையே ஏற்பட்ட நட்பு தகாத உறவு கொள்ளும் வரை சென்றுவிட்டது.  இடையில் வேறு வீட்டிற்கு ராஜேஷ் குடி போன பின்னும் அவர்களது உறவு தொடர்ந்தது. ஒரு நாள், ராஜேஷ் தன் நண்பன் வினோதிடம் குடி போதையில் இருந்த போது இதைப்பற்றிப் பேச, வினோதின் வற்புறுத்தலுக்கு இணங்கி ஸ்ரீதேவியம்மாவை ராஜேஷ் இடையிடையே சந்திக்கும் குப்பனபொங்கும்தாழத்தில் உள்ள அந்த ஆளில்லாவிட்டிற்கு வரச் சொல்ல, ஸ்ரீதேவியம்மாவும் அங்கு வந்திருக்கிறார்.

தகாத உறவு கொள்ளும் ஆணுக்கும், பெண்ணிற்கும் உள்ள வித்தியாசம் இதுதான். பெரும்பான்மையான ஆண்களுக்கு அப்பெண்களிடம் உள்ள ஆர்வம் நாள்பட குறைந்து கொண்டே போகும். ஆனால், பெரும்பான்மையான பெண்களுக்கு அவ் ஆண்களிடம் அன்பு மட்டுமல்ல, அசட்டு நம்பிக்கையும் கூடிக் கொண்டே போகிறது. பெண்கள், ஆண்களைக் கண்மூடித்தனமாக நம்பும் போது ஆண்களோ மனிதாபிமானமே இல்லாமல் இது போல் தங்களது நண்பர்களுக்குத் தங்களை நேசிக்கும், தங்களை நம்பும் பெண்களைத் தானம் செய்து நட்பைப் பலப்படுத்தவோ, பணத்திற்காகவோ முற்படுகின்றார்கள். பெரும்பாலும் இக்கட்டானச் சூழல்களிலும் சிறந்த முடிவெடுக்கும் விவேகசாலிகளான பெண்கள் கூட இது போன்ற சந்தர்ப்பங்களில் விவேகம் இழந்துச் சிந்திக்காமல் செயல்பட்டுத் தங்களது அழிவைத் தாங்களே தேடிக் கொள்கிறார்கள்.

தன் நண்பன் வினோதின் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று சொன்ன ராஜேஷின் சுயரூபத்தைக் கண்ட ஸ்ரீதேவியம்மா கோபத்துடன் அங்கிருந்து போக முயல, வேலியாய் நின்று தன்னை நம்பிவந்த பெண்ணைக் காக்கவேண்டிய ராஜேஷ், பயிரை மேயவந்த காளை முன் வேலியே பயிரைப் பிடுங்கி எறிந்து கொடுப்பதைப் போல் ஸ்ரீதேவியம்மாவை.......உங்களால் யூடிக்க முடியாதா என்ன? கொலை! கூச்சலிட்டு ஆட்களை வரவழைக்காமல் இருக்க ஸ்ரீதேவியம்மாவின் வாயை இருவரும் பொத்திப் பிடிக்க அவரது உயிர் போனதாம். உடனே, இருவரும் ஆளில்லா அவ்வீட்டின் பின்புறமுள்ள கழிவறைத் தொட்டியை மூடியிருந்த சிமென்ட் ஸ்லாபை நகர்த்தி, அதனுள் ஸ்ரீதேவியின் உடலைத் தள்ளியிட்டு அதன் மேல் ஒருசில கற்களையும் போட்டு ஸ்லாபை மூடியிருக்கிறார்கள்.

மூவரது சிம்கார்டுகளையும் ஃபோனிலிருந்து எடுத்து அடுத்துள்ள ஓர் ஏரியில் எறிந்த பின் இருவரும் அங்கிருந்துத் தப்பி ஓடிவிட்டார்கள். வினோத் வளைகுடா நாட்டில் எங்கோ இருக்கிறாராம்.  கைது செய்யப்பட்ட ராஜெஷ் இப்போது சிறையில். வினோதும் விரைவில் பிடிக்கப்படலாம். அப்படி, உண்மை தெரிந்த ஒருவரை உறங்கவிடாமல் நச்சரித்த ஓர் உண்மை ஒரு வருடத்திற்குப் பிறகு, அவரைக் கொண்டு ஒரு மொட்டைக் கடிதம் எழுதவைத்துக் குற்றவாளிகளைக் கண்டுப்பிடிக்க உதவியிருக்கிறது. ஆண், பெண் நட்பில் தவறில்லை.  ஆனால், பெண்கள் ஆண்களுடன் பழகும் சந்தர்ப்பங்களில், கவனத்துடன் இருப்பது மட்டுமல்லாமல், தங்கள் நட்பின் எல்லையைப் புரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியமாகிறது.

படித்தவர்கள் அதிகம் வாழும் மாநிலம் எனச் சொல்லப்படும் கேரளத்திலும் இப்படி. கொலைக்குற்றம் புரிந்த இருவருக்கும் கிடைக்கவிருக்கும் தண்டனையை விட மிகப்பெரிய தண்டனையான மரண தண்டனை ஸ்ரீதேவியம்மாவிற்குக் கிடைத்ததற்குக் காரணம், அவர் ராஜேஷ் போன்ற மனித மிருகத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் போன அவரது அறிவின்மைதான் காரணம் என்பதா? இல்லை இது போன்ற தப்புத் தாளங்களுக்கும் வழி தவறிய பாதங்களுக்கும் இப்படிப்பட்ட முடிவுதான் வேறென்ன? என்பதா?....உங்களுக்கு என்ன தோன்றுகின்றது?... இது போன்ற சம்பவங்களைப் பற்றி எல்லாம் எழுதி வீணாக எங்களிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டாம் நண்பரே என்றும் சொல்லத் தோன்றுகிறதோ?!!!!!!

படங்கள் : இணையத்திலிருந்து



20 கருத்துகள்:

 1. உண்மைகள் என்றுமே உறங்குவதில்லை என்பதற்க்கு இது ஒரு எடுத்துக்காட்டு
  சமீபத்தில் நண்பர் ‘கோ’ எழுதி இருந்தார் அண்ணனையே மிரட்டி கொலைப்பழியை ஏற்றுக்கொள்ளச் சொல்லி சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்ட தம்பி இந்த உண்மையை எழுதி வைத்து செத்தானாம் பிறகு அண்ணன் விடுதலை செய்யப்பட்டாராம்
  രസതന്ത്രം நானும் பார்த்திருக்கிறேன்
  பெரும்பாலும் தகாத உறவுகளின் முடிவு உலகம் முழுவதுமே இப்படித்தான் இருக்கின்றது உகாண்டாவில்கூட இப்படித்தானாம்.
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்! கில்லர்ஜி கோ அவர்களின் பதிவையும் வாசித்தோம். மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் கருத்திற்கும். தமிழ்மணத்தில் இணைத்ததற்கும்...

   நீக்கு
 2. தப்புச் செய்தவன் ஒருநாள் அனுபவிக்கத்தான் வேண்டும்...
  ஆனால் பெண்கள் யோசிக்காமல் சில காரியங்களில் முடிவெடுத்து விடுகிறார்கள்.
  அதுதான் அவர்களுக்கு பிரச்சினையைக் கொண்டு வருகிறது...
  அப்படித்தான் இவரும் இறந்திருக்கிறார்... இதில் கொடுமை என்னவென்றால் கொலை செய்தவனை சில மாதங்களிலோ வருடங்களிலோ வெளியில் கொண்டு வந்துவிடலாம்... அதுவும் மைனர் என்றால் மக்களுக்காக முதல்வரான எல்லாரும் விரும்புற கெஜ்ரிவால் போன்றோரே பணம் கொடுத்து உதவுவார்கள். இதுதான் இன்றைய நம் நாட்டின் நிலை துளசி சார்.

  கேரளத்தில் என்று இல்லை... எல்லா இடத்திலும் இந்த கதைகளும் கொலைகளும் இருக்கத்தான் செய்கிறது...

  நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் குமார். இதில் கொடுமை என்னவென்றால் கொலை செய்தவனை சில மாதங்களிலோ வருடங்களிலோ வெளியில் கொண்டு வந்துவிடலாம்...// வெளியில் கொண்டுவந்திவிடலாம் அதை விட தப்பு செய்யாதவர்கள் உள்ளிலும் கொலை செய்தவர்கள் வெளியிலும் அலைந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். உண்மை இவர்களுக்கெல்லாம் என்று வெளியில் வருமோ ..
   மிக்க நன்றி வருகைகும் கருத்திற்கும்

   நீக்கு
 3. உண்மை உறங்காது!...சில நேரங்களில், சிலரை உறங்கவும் விடாது.!!
  என்ற தலைப்பும் தகவல்களும் படித்ததும் மனதுக்கு வேதனையாக உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வைகோ சார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 4. இம்மாதிரியான உண்மைக் கதைகளில் சிறிது கற்பனை கலந்து சிறு கதையாக்கலாம் முடிந்தால் சில குறிப்புகளைக் கொடுத்துவிட்டு முடிக்கச் சொல்லிக் கேட்டு பரிசளிக்கவும் தயார் என்று சொல்லலாம் புரிகிறதா? இது ஒரு வாலறுந்த நரியின் பின்னூட்டம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சார் தங்களின் கருத்திற்கும் பரிந்துரைக்கும். நிச்சயமாக முயற்சி செய்கின்றோம் சார். புரிந்தது சார். தாங்கள் தங்கள் பதிவு ஒன்றில் பரிசு அறிவித்தது பற்றி என்பது...

   நீக்கு
 5. சுவாரஸ்யமான சம்பவங்கள். உண்மை எப்படியாவது ஒருநாள் வெளி வந்தே தீரும். ஒரு நாடோடிக் கதை ஒன்று உண்டு உங்களுக்கும் நினைவிருக்கும். ரகசியம் தெரிந்த மனைவி ஒருத்தி தனக்குள்ளே அதை வைத்துக் கொள்ளாமல் திண்டாட, கணவன் யோசனைப்படி தோட்டத்திற்குச் சென்று மண்ணைத் தோண்டி அதற்குள் அந்த ரகசியத்தை (ராஜா காது கழுதைக் காது) சொல்ல என்று நீளும் கதை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஸ்ரீராம்! அந்தக் கதை தெரியும்...மிக்க நன்றி கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 6. //இது போன்ற சம்பவங்களைப் பற்றி எல்லாம் எழுதி வீணாக எங்களிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டாம் நண்பரே என்றும் சொல்லத் தோன்றுகிறதோ?!!!!!!//
  நிச்சயமாகச் சொல்ல மாட்டோம்;மாறாக வரவேற்போம்.அருமையான பகிர்வே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி செபி சார் கருத்திற்கும் வருகைக்கும். மற்றும் வரவேற்பிற்கும்...

   நீக்கு
 7. அன்புள்ள அய்யா,

  உண்மைகள் உறங்காது. தப்புத்தாளங்கள் வழி தவறிய பாதங்களாய் ஊர் போய்ச் சேர்வதில்லை. ஆசை வெக்கம் அறியாது என்று சொல்வது போல ஸ்ரீதேவி தன் ஆசையால் நம்பியவராலேயே மோசம் போன துயரம்.

  காமம் கண்களை மறைத்து உயிரை எடுத்துச் சென்று விட்டது... கொடுமை.

  த.ம.4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மணவையாரே தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 8. இந்த தகவல்களை இதற்கு முன்பு கேட்டதில்லை.. கல்வியறிவு அதிகம் உள்ள கேரளாவிலும் தான்.. குறைவான பீகாரிலும் தான்! இந்த விஷயத்தில் எல்லா ஊரும் ஒரு போலத் தான் இருக்கிறது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஆவி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்.ஆம் அதுவும் சரிதான்..

   நீக்கு
 9. தப்பு செய்தவன்(ள்)
  தண்டனை
  பெற்றே ஆகவேண்டும்!
  அதைத்தான் இச்சம்பவம்
  உறுதிப்படுத்துகிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி முஹம்மது நிஜாமுத்தீன் தங்களின் வருகைக்குக்கும் கருத்திற்கும்

   நீக்கு
 10. பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பர் கரந்தையாரே தங்களின் வருகைக்குக்கும் கருத்திற்கும்

   நீக்கு