செவ்வாய், 12 மே, 2015

POET THE GREAT - எங்களது ஐந்தாவது குறும்படக் குழந்தை - அனுபவம் பகுதி 2

முதலில், இதற்கு முந்தைய முதல் பதிவிற்குப் பின்னூட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும், சகோதரிகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி!  நாளை எல்லாவற்றிற்கும் தனித்தனியாகக் கருத்து இடுகின்றோம்.  நாளை முதல் வலைத்தள வருகை ஆரம்பம்.....

(நேற்றைய தொடர்ச்சி.....மறு நாள் காலை 6 மணிக்கு  நண்பர் விபினிடம் இருந்துதொலைபேசி அழைப்பு. கம்யூனிஸ்ட் கட்சித தொண்டர் ஆர்.விஜயன் வடக்கஞ்சேரியில் நேற்று  கொல்லப்பட்டதால், அன்று ஆலத்தூர் தாலுகாவில்   ஹர்த்தால்! நாங்கள் இருக்குமிடம் பாலக்காடு தாலுகா ...ஆனால் படப்பிடிப்பு நடக்குமிடம் ஆலத்தூர் தாலுகாவில் !.)   இனி தொடர்கின்றது....

நேபால் பூகம்பத்தை உடலாலும் மனதாலும் உணர்ந்தேன். சித்தூரில் படப்பிடிப்பு நடத்தலாம். ஆனால், 3ஆம் தேதி படப்பிடிப்பு நடத்திய,4 ஆம் தேதி படப்பிடிப்பு நடத்த வேண்டிய இடத்திற்குப் போக முடியாது. காலை மற்றும் மதிய உணவு தர வேண்டிய திரு கிருஷ்ணன் தன் கடைக்கு நடந்து வந்தால் உணவுப் பொருட்களைக் கொண்டு போகலாம் என்றார். வந்து கொண்டு வருகின்றோம் என்று என்ன தைரியத்தில் சொன்னேன் என்றே எனக்குப் புரியவில்லை. வருவது வரட்டுமென்று சோனி சார் தன் காரில் குடந்தையூராருடனும், ஆவி தன் பைக்கில் பாலகணேஷிடனும் படப்பிடிப்பு நடந்த இடத்திற்குச் செல்ல, நான் மேக்கப் மேன் மற்றும் காமேரா மேனுடன் சித்தூர் சென்றேன்.  7மணி முதல் அங்கு ராதாகிருஷ்ணன் சாரும், கோபாலகிருஷ்ணன் சாரும் காத்திருந்தார்கள்.  7.30 மணிக்குத் சோனி சாரின் ஃபோன். வழிமறியல் செய்தவர்களிடம் பேசி ஒரு வழியாக படப்பிடிப்பு நடந்த இடத்தை அடைந்தோம் என்றதும் அது வரை உயிரற்ற உடலுடன் திரிந்த எனக்குப் போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது. 

சித்தூர் படப்பிடிப்பு எதிர்பார்த்ததை விட சிறப்பாக எடுக்க முடிந்தது.  படப்பிடிப்பை முடித்து அடுத்த படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குச் செல்லும் வழியில் 3 இடங்களில் வழிமறியல் செய்தவர்களிடம் கெஞ்சி, 10.45 ற்கு படப்பிடிப்பு நடக்கும் இடத்தை அடைந்தோம்.  இதனிடையே பைக்கில் சென்று காலைச் சிற்றுண்டியை என் சகலை சோமனும், மகன் அருணும் கொண்டு வந்திருந்தார்கள்.  எத்தனை இட்லி எப்படிச் சாப்பிட்டேன் என்று எவ்வளவு மூளையைக் கசக்கிச் சிந்தித்தாலும், இப்போதும் நினைவுக்கு வர மறுக்கிறது.  இதற்கிடையில் கேமரா மேன் அஜித் முந்தைய நாள் நடனக் காட்சியை எடுத்த போது ஆலமரத்தடிக் கோவிலில், விளக்கு, பூக்கள் மற்றும் பூஜைப் பொருட்களை எடுத்த ஃபைலைக் காணவில்லை, எனவே அதை மீண்டும் எடுக்க வேண்டும் என்றதும் தலைச் சுற்றிக் கீழே உட்கார்ந்தே விட்டேன்.  உட்கார முடியாதே! உட்காரக் கூடாதே! கீதாவிடம் பேசி, முடியும் அளவில் அதை மீண்டும் அதே போன்று அமைக்கச் சொன்னேன்.  வழியில் கண்ணில் பட்டப் பூக்கடையில் இருந்து 20 முழம் பூவையும் வாங்கிச் சென்று ஓடினேன்.  பெர்முடா டைரக்டர் திவானின் உதவியுடன் கீதா மரத்தடிக் கோயிலை முதல் நாள் இருந்தது போல் உருவமைத்து விட்டார்! வாடிய பூக்களுக்கிடையே ஆங்காங்கே 20 முழப் பூவைச் செருகி அன்றைய படப்பிடிப்பைத் தொடங்கிய போது மணி 11.30.  இந்தக் காட்சிகள் முடிந்த பிறகு மதியச் சாப்பாடு.  அதன் பின்னும் அதன் தொடர் காட்சிகள் அங்கு எடுக்கப்பட்டது. 

அப்படி, அங்கு எடுக்க வேண்டியக் காட்சிகளை எல்லாம் எடுத்து முடித்த போது மாலை 5 மணி. கடைசிக் காட்சி எடுக்க வேண்டியது அங்கிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு பழைய வீட்டில்.  5 மணிக்குப் பின் அவ்வளவு தூரம் சென்று அங்கு எல்லாவற்றையும் அமைத்து எடுப்பது சிரமம் என்பதால் பக்கத்திலேயே எங்கேனும் அதை வைத்துக் கொள்ள முடியுமா என்று சிந்திக்கத் தொடங்கினோம்.  ஒரு காடு போன்ற தோற்றமுள்ள இடம் கிடைத்தால் நன்றாக இருக்கும், மட்டுமல்ல சிறிது நேரத்தில் இருட்டாகும் போது மின்சார விளக்குககும் தேவை.  இடையே அருகே மின் விளக்குகளுக்குத் தேவையான மின்சாரம் எடுக்க ஒரு வீடும் அக்காட்டிற்கு அருகே வேண்டும் என்றதும், காவில்பகவதி கோயிலில் எழுத்தாளரான சுஜித் தன் வீட்டிற்குப் பின்புறம் காட்சிக்குத் தேவையான காடு இருப்பதாகவும், தன் வீட்டிலிருந்து, மின் விளக்குகளுக்குத் தேவையான மின்சாரம் எடுக்கலாம் என்றதும் அங்கு ஓடினோம். 

அருமையான் இடம்! ஏற்ற இடம் காட்டிய இறைவனுக்கும், சுஜித்திற்கும் நன்றி கூறி பம்பரமாய் சுழன்று 6 மணிக்கு முதல் வசனத்தைப் படம் பிடிக்கத் தொடங்கியதும், தூரத்தில் கேட்ட இடி என் நெஞ்சுள் விழுந்தது போல் இருந்தது.  எல்லோரும் பரிதாபகரமாக விழித்தோம்.  மழை தூரத் தொடங்கியது.  எல்லாவற்றையும் எடுத்து பக்கத்தில் உள்ள சுஜித்தின் வீட்டிற்கு ஓடினோம்.  ½ மணி நேரம் பெய்த மழை ஓய்ந்தது.  பின் மின் விளக்குகளை எல்லாம் உரிய இடத்தில் வைத்து மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கிய போது 7 மணி.  குடந்தையூராருக்கு 8.30மணிக்கு இரயில்.  அவரும் பாலகணேஷும், என்னை மருத்துவமனை ஐசி யூனிட்டில் கிடப்பவரைப் பரிதாபகரமாய் பார்ப்பது போல் பார்த்து விட்டு, மனமில்லா மனதுடன் விடை பெற்றனர்.  அஜித்தின் காமேராவில் இடம் இல்லாததால் இடையிடையே எடுக்கப்படும் ஒவ்வொரு காட்சியையும் அவரது லேப்டாப்பில் பதிவு செய்ய வேண்டி இருந்தது. ஒவ்வொருவரும் நீண்ட வசனம் பேச வேண்டிய அந்த இறுதிக் காட்சி நேரமில்லாததால் ஒரே ஆங்கிளில் தான் அதிகமும் எடுக்க முடிந்தது.  அப்படி எடுத்து முடித்த பின் சொல்லப்பட்ட பேக்கப் தான் அது. மணி இரவு 11. அதற்கு நன்றி சொல்ல வேண்டியது இறைவனுக்கும், இத்தனைச் சிரமங்களையும் பொருட்படுத்தாமல் அதைப் படம் பிடிக்க உதவிய, அதன் பாகமாக மாறிய நம் நண்பர்களுக்கும் தான்.  கூடவே இதை வாசிக்கும் உங்களுக்கும் தான்.  உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும் இல்லாதிருந்தால் இத்தகைய இக்கட்டான சூழலில் என்னால் அந்தப் பேக்கப் சொல்லி இருக்க முடியாது.  நன்றி! உங்கள் வாழ்த்துக்களுக்கும், பிரார்த்தனைக்கும்!

முற்றும்.  அடுத்து எங்கள் பயணக் குறிப்பை கீதா தொடர்வார்....


42 கருத்துகள்:

  1. படிக்கும் போதே மலைப்பாக இருக்கிறது சகோ. வெற்றிகரமாக முடித்து விட்டீர்கள். வெற்றி அடைய வாழ்த்துக்கள். உங்கள் குழுவினர் அனைவருக்கும் வெற்றிக்கு அட்வான்ஸ் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். மிக ஆவலை தூண்டுகிறது சகோ படத்தை பார்க்க. படித்த எனக்கு உங்கள் கஷ்டங்கள் மூச்சையடைக்கிறது. நீங்கள் அனைவரும் ஓய்வெடுத்துக் கொண்டு நிதானமாக எங்கள் பக்கம் வாருங்கள் சகோஸ். நன்ரி

    தமிழ் மண இணைப்புடன் வாக்கு 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! தங்களின் வாழ்த்திற்கும், வாக்கிற்கும். வருகின்றோம் ஒவ்வொரு தளமாக....

      நீக்கு
  2. அடேயப்பா!!! அசத்துதே பணி! get up change வேறயா??? சகாஸ்!! சற்றே அவசரப்பணியில் இருக்கிறேன், வாழ்த்துகள்! பிறகு வந்து மீதம் பேசுவோம்:) வாழ்த்துகள் சகாஸ், கீத்து வின் பதிவா அடுத்து:)) வாங்க! வாங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி சகோதரி! பரவாயில்லை மெதுவாக வாருங்கள் தங்கள் பணிகளை முடித்துக் கொண்டு...நாங்களும் கொஞ்சம் பிசி......(ரொம்ப அலட்டல் இல்ல?!!!)

      நீக்கு
  3. வணக்கம்
    அண்ணா.

    ஒரு படம் எடுப்பதுஎன்றால் எவ்வளவு கஸ்டங்கள் துன்பங்கள் வருகிறது. என்பதை தங்கள் பதிவு வழி அறியக்கிடைக்கிறது. இந்தப்படமும் வெற்றிப்படமாக அமையவும் .. மேலும் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரூபன் தம்பி! கஷ்டங்கள் வரத்தானே அதுவும் எதிர்பாராதவை! தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி!

      நீக்கு
  4. எத்தனைத் தடைகள்! எத்தனைச் சிரமங்கள்... அத்தனையையும் தாண்டி மிகவும் பொறுமையுடன் பணியாற்றி இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படியோ முடித்துவிட்டோம்! இனிதான் எடிட்டிங்க், டப்பிங்க் எல்லாம்...நண்பர்கள் அனைவரும் மிகவும் பொறுமையுடன் உழைத்ததால் தான் முடிக்கவும் முடிந்தது. மிக்க நன்றி!

      நீக்கு
  5. ஆமாம் துளசி. அன்றைக்கு மழையில் வேறு வழியேயின்றி நானும் குடந்தையூராரும் ரயிலைப் பிடிக்கக் கிளம்பி விட்டாலும் கூட மனது உங்களுடனேயே படப்பிடிப்பு இடத்தில் தான் இருந்தது. அதுவும் 10 மணிக்கு ரயில் ஏறிவிட்டு ஆவிக்கு போன் செய்தால் இன்னும் படப்பிடிப்பு போய்க் கொண்டிருக்கிறது என்றான். மறுதினம் காலை மழையையும் தாண்டி சிறப்பாக முடிந்தது என்று ஆவி சொன்னதும்தான் நிம்மதியானது. மறக்க முடியாத தினங்கள் இந்த படப்பிடிப்பு தினங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பாலகணேஷ்....எப்படியோ ஒருவழியா முடிச்சுட்டோம்..என்னன்னா ஒரே ஆங்கிள்லதான் எடுக்க முடிந்தது....மனசுக்கு அவ்வளவாகத் திருப்தி இல்லைதான் ஆனால் வேறு வழியில்லை....அப்புறம் கொஞ்சம் க்ளோசப் ஷாட்டுகள் எடுத்து முடித்தோம்...வேறு வேறு ஆங்கிள் வைக்க முடியவில்லை....அதுதான் கொஞ்சம் கஷ்டமாகிவிட்டது....முடிந்தவரை நல்ல அவுட்புட் கொண்டுவரப் பார்க்க வேண்டும்....

      நீக்கு
  6. எத்துனை எத்துனை சிரமங்கள் தடைகள்
    வாழ்த்துக்கள் நண்பரே
    படம் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே தங்களின் வாழ்த்திற்கு. தங்கள் எல்லோரது வாழ்த்துகளும் எங்களுக்குத் துணையாகவும், ஊக்கமாகவும் இருப்பதால்தான் முடிகின்றது....

      நீக்கு
  7. மிகவும் அழகான அருமையான அனுபவங்களை பொறுமையாக விளக்கிச் சொல்லியுள்ளீர்கள். அனைவருக்கும் பாராட்டுகள். வெற்றிகளை எட்ட என் நல்வாழ்த்துகள். படங்களும் பதிவும் பார்க்க + படிக்க இனிமை. பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வைகோ சார்! தங்களது வாழ்த்திற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி சார்! தங்களின் பதிவுகளை இனிதான் தொடர வேண்டும். வாசிக்கின்றோம் சார்! மிக்க நன்றி!

      நீக்கு
  8. ரயிலுக்கு கிளம்ப வேண்டிய கமிட்மெண்ட் இருந்ததால் கிளம்ப வேண்டி வந்தது.மழை வந்தவுடன் ஷூட்டிங் எப்படி தொடரப் போகிறது என்று கவலை இருந்தது வெற்றிகரமாய் முடித்தமைக்கு வாழ்த்துக்கள் உங்களின் சிரமங்களுக்கு பரிசு இக்கோவில் குறும்படத்தின் வெற்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார்! அது தெரியும்தானே சார்! உங்கள் ஆர்வம், உழைப்பு, ஒத்துழைப்பு, டெடிக்கேஷன் எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி சார்!

      நீக்கு
  9. அன்புள்ள அய்யா,

    தங்களது ஐந்தாவது குறும்படக் குழந்தை பிறந்த விதத்தை... ஒரு தாய் கருக்கொண்டு... அந்த சிசுவை உருவாக்க... அதைப் பிரசவிக்க... பட்ட இன்னல்கள்...பிரசவித்த சேயைத் தாய் கையில் வைத்து கொஞ்சி மகிழ்கின்ற பொழுது பட்ட துன்னபங்களெல்லாம் பஞ்சாய் பறந்துபோகும்...அந்த மனநிலையில் இருக்கிறீர்கள். இந்த சேயைப் பெற்றெடுக்க தாய்பட்ட வேதனைகளை... வலிகளை...‘ தூரத்தில் கேட்ட இடி என் நெஞ்சுள் விழுந்தது போல் இருந்தது’ அருமையான அனுபவப் பதிவு.

    குறும்படம் எடுக்கவே இவ்வளவு சோதனைகளா...? நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை...! அப்போ திரைப்படம் எடுக்க வேண்டுமென்றால் எப்படித் திட்டமிடல் வேண்டும்...?

    மொட்டை போடுவது என்பது அவ்வளவு எளிதல்ல... முதலில் மனம் அதற்குச் சரிஎன்று ஆமோதிக்க வேண்டும்... அந்த கதையின் மீது நம்பிக்கை வைத்து ...ஒத்துழைத்துச் செயல்பட்டால் மட்டுமே இதெல்லாம் சாத்தியமாகும்.

    என்னுடைய குறுநாடகத்தில் ஒரு மாணவனை மொட்டை அடிக்கச் சொன்னேன். அவன், வெளிநாட்டில் இருக்கும் தந்தையிடம் அனுமதி பெற்று... தாயிடம் அனுமதி வாங்கி அதன் பிறகு மொட்டை அடித்தான். இரண்டு ஆசிரியர்களை மீசை எடுத்து நடிக்க வைத்திருக்கிறேன். இதற்கெல்லாம் எளிதில் சம்மதிக்கமாட்டார்கள் என்பதற்காகச் சொல்கிறேன்.

    தங்களுக்குக் கிடைத்திட்ட அன்பர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு உழைத்திருக்கிறார்கள் என்பது படம் காட்டும் பாடம்.

    குறும்படம் வெளியீடு எப்பொழுது? மிகுந்த ஆவலாக உள்ளோம்...?

    குறும்படம் கண்டிப்பாக வெற்றியடையும் என்பது திண்ணம்.

    நன்றி.
    த.ம.5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் எங்கள் குழுவிலுள்ள அனைவரையுமே பாராட்ட வேண்டும் நண்பரே! ஏனென்றால் எல்லோரும் மிகவும் ஒத்துழைக்கக் கூடியவர்கள். யாரும் எந்த வேஷத்திற்கும் மறுப்பதில்லை. மறுக்கவும் மாட்டார்கள். எல்லோருமே மிகவும் ஆர்வமுடன் செய்பவர்கள்! எனவேதான் எங்களாலும் முடிகின்றது. ஆவி அவர்கள் முதலிலேயே கேட்டுவிட்டார்....தான் மொட்டை போடுவதில் எந்தவித சிரமமும் இல்லை....குடந்தையூராரும் தானும் மொட்டை போடுகின்றேன் என்று சொல்லிவிட்டார்...இப்படி ஒவ்வொருவரும் அவரவர் கதாபாத்திரங்களை அனுபவித்தனர். அருமையான நண்பர்கள் குழு இது..எல்லோரது ஒத்துழைப்பும், தங்களின் வாழ்த்துகளும் எங்களை வழி நடத்திச் சென்றது என்றால் மிகையல்ல நண்பரே! மிக்க நன்றி விரிவான கருத்திற்கும் தங்களது அனுபவக் குறிப்பிற்கும்....

      நீக்கு
  10. அப்பாடா உங்க பதிவை படிக்க படிக்க உண்மையில் மூச்சு வாங்கியது சகோ உங்கள் பதட்டம் எனக்கும் தொற்றிக் கொண்டது. இங்க பார்த்தால் உமையாளுக்கும் மூச்சு வாங்கியிருக்கிறது பாவம். எவ்வளவு சிரமத்தின் மத்தியில் இவற்றை செய்துள்ளீர்கள் என்று புரிகிறது. நிச்சயமாக எல்லாம் நன்றாகவே வந்திருக்கும் என்று நம்புகிறேன். அனைவர்க்கும் என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் முன் கூட்டியே சொல்லி விடுகிறேன். ஆவலோடு காத்திருக்கிறேன். வெற்றி நிச்சயம் சகோ .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்திருக்கும் என்று நாங்களும் நம்புகின்றோம்! தங்களின் வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி சகோதரி!

      நீக்கு
  11. அஹா இவ்ளோ கஷ்டமா ஒரு குறும்படம் எடுப்பது. ஸ்ரீராம் கூட என்னுடைய சாட்டர்டே போஸ்டில் உங்கள் குறும்பட முயற்சிகள் பற்றிச் சொல்லவில்லையே எனக் கேட்டார். அது பற்றி உங்கள் ப்லாகில் நான் ( பழைய இடுகைகளைப் ) படிக்காததால் பகிர முடியவில்லை.

    கோபாலகிருஷ்ணன் சார் என்றதும் நம் கோபால் சாரோ என நினைத்தேன். சாயல் கூட ஒருவருக்கு அப்படி இருக்கிறது. :)

    வாழ்த்துகள் சகோ கோயில் வெற்றி பெறட்டும். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! ஆம் குறும்படம் எடுப்பதும் ஒரு சவால் தான் சில சமயங்களில்....வைகோ சார் அல்ல அது! நானும், கோவை ஆவியும், மற்றும் குடந்தை ஆர் வி சரவணன் அவர்களும் தான் மொட்டை.....பகிராததால் பரவாயில்லை சகோதரி! உங்கள் பதிவுகள் படித்து நாளாயிற்று. வாசிக்க வேண்டும்....வருகின்றோம்....மிக்க நன்றி சகோதரி தங்களின் வாழ்த்திற்கு...

      நீக்கு
  12. ஆகா எத்துனை அருமை, எவ்வளவு கஹ்டங்கள் பட்டு எடுத்துள்ளீர்கள்.இத்தனைச் சிரமத்தில் தாங்கள் எடுத்தது அத்துனையும் அருமயாக வந்து இருக்கும் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்து இருக்கும் என்று நாங்களும் நம்புகின்றோம். சில காட்சிகள் நாங்கள் எடுக்க நினைத்தது போல் எடுக்க இயலவில்லை பல யதார்த்த காரணங்களாலும், எதிர்பாராத நிகழ்வுகளாலும்....மிக்க நன்றி சகோதரி தங்களின் வாழ்த்திற்கு!

      நீக்கு
  13. வணக்கம் தங்களின் கடுமையான முயற்சிக்கு நிச்சயம் பலன் உண்டு வாழ்த்துகள்
    தமிழ் மணத்தில் நுழைக்க 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்கள் வாழ்த்திற்கும், தமிழ் மணத்தில் நுழைத்ததற்கும்! பார்ப்போம் எப்படி வந்திருக்கின்றது என்று....

      நீக்கு
  14. அருமையான வாய்ப்பு... ம்... மிகவும் வருத்தப்படுகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிடி நீங்கள் இல்லாததை உணர்ந்தோம். சொல்லிக் கொண்டோம்....தங்களின் சூழலையும் புரிந்து கொள்ள முடிந்தது....வருத்தம் எல்லாம் வேண்டாம். இனியும் அடுத்த வருடம் உள்ளதே! கலக்குங்கள் வந்து!

      நீக்கு
  15. இவ்வளவு கஷ்டப் பட்டும் ,அடுத்த பிள்ளையைப் பெற நினைக்கிறீங்களே,இதுக்கு பெயர்தான் பிரசவ வைராக்கியமோ :)

    பதிலளிநீக்கு
  16. குறும்படம் எடுப்பதிலுள்ள சிரமங்களை உங்கள் அனுபவத்தின் மூலம் தெரிய வந்தது. இவ்வளவு சிரமங்களுக்கிடையிலும் படத்தை எடுத்து முடித்த உங்கள் குழுவினரின் உழைப்பு மிகப் பெரிய வெற்றியாக மாற‌ வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! தங்களின் புரிதலுக்கும், வாழ்த்துகளுக்கும்!

      நீக்கு
  17. குழந்தை பெறுவதும் இலகுவானதல்ல
    குறும்படம் எடுப்பதும் இலகுவானதல்ல
    பங்குபற்றுதலும் பட்டறிவும் - பலருக்கு
    நல்ல வழிகாட்டலாக - தங்கள்
    பதிவு வெளிப்படுத்தி உள்ளதே!
    தங்கள் குறும்படம் வெற்றிநடை போட
    எனது வாழ்த்துகள்!
    தொடரட்டும் தங்கள் பணி!

    பதிலளிநீக்கு
  18. ஒவ்வொரு நிலையிலும் உங்கள் குழு பட்ட சிரமங்களை அறிந்தோம். ஒரு முயற்சி வடிவம் பெறுவது என்பது சாதாரண காரியமல்ல. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்

    பதிலளிநீக்கு
  20. பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் வாழ்த்திற்கு!

      நீக்கு
  21. இந்தப் பதிவின் இரண்டு பாகங்களையும் படித்துவிட்டே இதை எழுதுகிறேன்.

    குறும்படம் என்றாலே கலைஞர் தொலைக்காட்சியில் வரும் 'நாளைய இயக்குநர்' தொடரில் வரும் படங்களைப் போலத்தான் இருக்கும் என்று நினைத்திருந்தவன் உங்கள் உழைப்பை எண்ணி மலைக்கிறேன். நான் என் அத்தை மகன் நடத்தும் 'யுவா' எனும் இணையத் தொலைக்காட்சியில் பணிபுரிகிறேன். இதுவரை, கமல், ரஜினி ஆகிய இருவருக்காகவும் இரண்டு வாழ்த்து விழியங்களில் (tribute videos) பணியாற்றியது மட்டும்தான் என் குறும்பட (குறை)பட்டறிவு. இனிமேல்தான் கதை, திரைக்கதை, உரையாடல் எல்லாம் எழுதி முழுமையான குறும்படங்களை எடுக்க இருக்கிறோம். இந்த நேரத்தில் உங்களுடைய குறும்படத் துய்ப்புப் பற்றிய இந்தப் பதிவு என் பொறுப்புணர்வைக் கூட்டி உழைப்பூக்கத்தை அளிக்கிறது. நன்றி!

    ஒளிப்பதிவாளர் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டிருக்கிறீர்கள். அப்படிப்பட்ட இக்கட்டான தறுவாய் ஏதேனும் வந்தால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்! எங்கள் குழுவில் இரண்டு ஒளிப்பதிவாளர்கள் உள்ளனர். உங்கள் ஆட்கள் அளவுக்குக் குறும்படப் பட்டறிவு அவர்களுக்கு இருக்குமோ இல்லையோ தெரியாது, ஆனால், வேலை தெரிந்தவர்கள்தாம். என் கைப்பேசி எண்ணை உங்களுக்கு இதன் மூலம் அனுப்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் நண்பரே! குறைப்பட்டறிவு என்று எண்ண வேண்டாம். இது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை நண்பரே! என்ன இது போன்று வரும் தடங்கல்களைச் சமாளிக்க வேண்டும். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.

      நிச்சயமாக குறும்படம் எடுங்கள் எங்களின் மனப்பூர்வமான வாழ்த்துகள்! ஒளிப்பதிவாளர்கள் என்றால் அவர்களுக்கும் நன்றாகத் தெரிந்திருக்கும்...அப்படி இல்லை என்றாலும் அதுவும் பெரிய விஷயமல்ல அதுவும் ஏற்கனவே ஒளிப்பதிவாளர்களாக இருப்பவர்களுக்கு, ஃப்ரேம், லைட்டிங்க், ஆங்கிள் பற்றிய அறிவு நிச்சயமாக இருக்கும். அதனால் நீங்கள் பட்டறிவு இல்லை என்றெல்லாம் நினைக்க வேண்டாம் நண்பரே! நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள்.

      மிக்க நன்றி எங்களுக்கு உதவ நினைப்பதற்கு! நிச்ச்யமாகத் தொடர்பு கொள்வோம் இக்கட்டனாச் சூழல் தேவைப்பட்டால். மட்டுமல்ல நமது வலை நண்பர்கள் பலர் குறும்படம் எடுக்கின்றனர். எனவே வந்து கொண்டேதான் இருக்கும். தொடர்பு கொள்வோம். மிக்க நன்றி!

      நீக்கு