புதன், 20 மே, 2015

அந்நியன் கணக்கு

     கணக்கு என்பது எல்லோரும் அறிந்ததே!  அதென்ன அந்நியன் கணக்கு?  அது வேறு ஒன்றுமில்லை.  அந்நியன் படத்தில், (அந்த அம்பி அந்நியனாக மாறும் போது கேட்கும் கணக்கைப் போன்ற ஒன்றுதான் நான் இங்கு பகிர்ந்து கொள்வது.  சுஜாதா அவர்கள் தான் வசனம்.  எனவே அந்த வசனம் கூட சுஜாதாவின் வசனம்...ஸாரி கணக்காகத்தான் இருக்குமோ?! அப்படித்தான் இருக்க வேண்டும். அவர்தான் இப்படி எல்லாம் எழுதக் கூடியவர்!) 

 அஞ்சு பைசா திருடினா தப்பா?”
‘‘தப்பில்லைங்க’’
அஞ்சு கோடி பேர் அஞ்சு பைசா திருடினா தப்பா?”
‘‘தப்பு மாதிரிதாங்க தெரியுது...’’
அஞ்சு கோடி பேர், அஞ்சு கோடி தடவை அஞ்சு பைசா திருடினா தப்பா?”
‘‘அய்யோ... பெரிய தப்புங்க...’’           

என் சிறு வயதில், 5 பைசா, 10 பைசா, 20, 25 பைசா இருந்த காலத்தில் எல்லாம், பெட்டிக் கடைக்காரர் கூட நாம் 10 பைசா கொடுத்து 5 பைசாவிற்கு மிட்டாய் வாங்கினால் 5 பைசா மீதி தருவார். ஒரு பைசா கூட மீதி பெற்றது உண்டு. சில்லறைகள் புழங்கிய காலகட்டம் வரை.  இப்போது 50 பைசா வழக்கில் இருந்தாலும் கூட, அது மதிக்கப்படுவதில்லை.  ஏன் 1 ரூபாய்க்கே மதிப்பில்லை என்றாகிப் போனது.  பல கடைகளில் மீதம் 1 ருபாய், 2 ரூபாய் மீதி தரவேண்டும் என்றால் கூட தருவதில்லை.  சில சமயங்களில் 5 ருபாய் கூட தருவதில்லை.  அதற்குப் பதிலாக நமக்கு உபயோகமே இல்லாத, வேண்டாத பொருள் வாங்கச் சொல்லுவார்கள். ஐயையோ இல்லைங்க ஸாரி.... நம் மீது திணிக்கின்றார்கள்! அந்தப் பொருள் பெரும்பாலும் சாக்கலேட், மிட்டாய்கள்! இதைப் பற்றி நம் நண்பர் விசு அவர்கள் கூட மிகவும் நகைச் சுவையாக ஒரு பதிவு போட்டிருந்தார் அவரது வலைத்தளத்தில்.

நான் அந்த மாதிரி மிட்டாய் கொடுத்தால் வாங்குவதில்லை.  நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் மிட்டாய்களை.  நான் ஏற்கனவே என் உடம்பில் நிறைய மிட்டாய்கள் வைத்திருக்கின்றேன்.  உங்களுக்கு வேண்டும் என்றால் எடுத்துக் கொள்ளுங்கள் என்னிடமிருந்து என்று சொல்லிவிட்டு சில்லறை தரவேண்டும் என்று உறுதியாக இருப்பேன்.  அப்படித் தரவில்லை என்றால், தெரிந்த கடை என்றால், அப்புறம் வந்து வாங்கிக் கொள்கின்றேன் என்று சொல்லி விடுவேன்.  அப்படி இல்லை என்றால் ஏதாவது வாங்கிய பொருளைக் குறைத்தால், விலை முழுமையாக வருமா என்று பார்த்துவிட்டு குறைத்து விடுவேன். அப்படியும் இல்லை என்றால் விட்டுவிடுவேன். வேறு வழி?! ஆனால், அவர்களுக்கு அதனால் ஒன்றும் மனசாட்சி அவர்களை வறுத்தெடுக்கப் போவதில்லை.  லாபம்தான் அவர்களுக்கு. அப்படிச் சில்லறைகளை நாம் விடுவது தவறு என்பதைச் சுட்டிக் காட்டி ஒரு அந்நியன் ஸ்டைல் கணக்கு ஒன்று எனது மின் அஞ்சலில் வந்தது. எனது மனதைப் பிரதிபலிப்பதாக.  அதைப் பாருங்கள் இங்கே அப்போது உங்களுக்கே புரியும்!  (இது வெளி நாடுகளில் நடப்பதில்லை! சரியாக நமக்குச் சில்லறை கிடைத்துவிடும். அதனை கில்லர் ஜி அவர்களிடமும் உறுதி செய்து கொண்டேன். இரண்டாவது நாம் இங்கு கார்டு தேய்த்தால் சரியான பில் தான் கழிக்கப்படும்.  ஆனால் சர்வீஸ் சார்ஜ் என்று பேங்கிற்கு அழ வேண்டுமே!

சரி இப்போது அந்த அந்நியன் கணக்கிற்கு வருகின்றேன்!  ஆங்கிலத்தில் வந்ததை எனக்குத் தெரிந்த விதத்தில் தமிழில் மொழி பெயர்த்துத் தந்திருக்கின்றேன். நாம் ஏன் சில்லறைகளையும், ரூ 1 யும் சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து நிச்சயமாகப் பெறவேண்டும்.

நாள் ஒன்றிற்கு 500 பேர் ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு வருகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம்.  அவர்கள் ஒருவர் கூட மீதி ரூ 1 ஐ பொருட்படுத்தவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்

500 x  1 = Rs 500

365 நாட்களுக்கு  500 X 365 = Rs. 1, 82,500

இது ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கானது.  இப்படி 1500 சூப்பர் மார்க்கெட்டுகள் நமது நாட்டில் இருக்கின்றன.

Rs. 1, 82,500 x 1500 =  Rs. 273,750,000  ஐயோ இப்படி பெரிய, பார்க்காத நம்பர் எல்லாம் சொன்னா நமக்குப் புரியாதுங்கோ!  நாம அப்பாவிங்கோ!  அதனால் ஒரு சாமானியனுக்குப் புரியும் வகையில் சொல்ல வேண்டும் என்றால் 27 கோடி ஒரு வருடத்திற்கு! இது சூப்பர் மார்க்கெட்டுகள் என்று சொல்லப்படுபவை மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது.  இதில் மற்ற பெரிய கடைகளும் அடக்கம். உலகமயமாக்கலின் விளைவினால் முளைத்திருக்கும் பெரிய பெரிய துணிக்கடை ஷோரூம்கள், மால்கள் என்று சொல்லப்படுபவையும் இதில் அடக்கம்.

வேதனை என்னவென்றால் இதற்கு வரி கிடையாதாம்! (அமெரிக்க கணக்குப் பிள்ளை! உங்களுக்குப் புரிந்து இருக்குமே! கணக்குப் பிள்ளைகள் இதற்குப் பதில் சொல்லவும், முடிந்தால்!)  ஏனென்றால் விலைச் சீட்டு இந்த 1 ரூபாயைக் கணக்கில் கொள்ளாதாம். நுகர்வோர்கள் எல்லாரும் பணக்காரர்கள் ஆகிவிட்டதால் அவர்களுக்கு இந்த சில்லறை, 1 ருபாய் பெரியது அல்ல.  அதனால் தான் பெரும்பான்மையான பொருட்களின் விலை பேட்டா கணக்கு போல (ரூ,100.99) -49, -50, -69, -99, -999 ஒன்லி  என்றிருக்கின்றது! ஆனால், நான் பணக்காரி அல்ல.  சாதாரண சாமானிய மக்களில் அடக்கம்.  யாசிப்பவர்கள் கூட இப்போதெல்லாம் ரூ 1 ஐ ஏற்றுக் கொள்வதில்லை.  நம்மைத் திட்டுகின்றார்கள். சாதாரண பலசரக்குக் கடைகள், மொத்த வியாபாரக் கடைகள் இதில் வருவதில்லை.

நுகர்வோர்கள் ராஜாக்கள்! (Consumers are the king! consumer sovereignty) என்று பொருளாதாரத்தில் சொல்லப்படுவதுண்டு. அதாவது நுகர்வோர்களின் தேவைக்கேற்பதான் பொருட்களின் உற்பத்தியும், விலையும் நிர்ணயிக்கப்படும். இது மேலை நாடுகளுக்குப் பொருந்தும். நம் நாட்டிற்குப் பொருந்தாது. ( நுகர்வோர்களில் ஆண்களும், பெண்களும் தானே அடக்கம்? அது என்ன கிங்க்?  அப்போ க்வீன் இல்லையா? ம்ம் அந்தக் காலத்தில் பெண்கள், ராணிகள் வீட்டை விட்டுச் செல்லாமல், சமையலறையிலும், அந்தப்புரத்திலுமே இருந்ததால் ஆண்கள் தான் வெளியில் சென்று பொருட்கள் வாங்கியதால் கிங்க் என்று சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் இப்போதெல்லாம் பெண்கள் தான் அதிகமான நுகர்வோர் பட்டியலில் வருகின்றார்கள்.  பெண்களால்தான், துணிக் கடைகள், நகைக்கடைகள், பாத்திரக் கடைகள், ஃபேஷன் கடைகள் எல்லாம் இப்படி அள்ளிக் குவிக்கின்றதாக ஒரு உபரித் தகவல் கிடைத்தது. அதனால் நுகர்வோர்கள் ராஜா/ராணி.  Consumers are the Kings and Queens!

இந்த 1 ரூபாய்க்கு மதிப்பு இல்லை என்றால் ஏன் கடைக்காரர்கள் மட்டும் நம்மிடம் அந்த 1 ரூபாயைத் தர வேண்டும் என்று நிர்பந்திக்கின்றார்கள்?  இல்லை என்றால் நம்மீது ஏதேனும் ஒரு மிட்டாயைத் திணிக்கின்றார்கள்?  அவர்கள் தருவதில்லை.  மதிப்பு என்பது இருவருக்கும் பொதுதானே! அப்போ இங்கு நுகர்வோர்களுக்கு உரிமை இல்லை என்றாகின்றதல்லவா. மதிப்பு இல்லாத அந்த 1 ரூபாயை நமது ரிசர்வ் வங்கி இன்னும் ஏன் புழக்கத்தில் வைத்துள்ளது? 1ரூபாய் மட்டுமல்ல. 2 ரூபாய் கூட.  ஏன் சில சமயங்களில் 5 ரூபாயும். அதுவும் சில்லறைத்தனமாக, கஞ்சத்தனமாக? 50 பைசா இன்னும் ஏன் புழக்கத்தில் இருக்கின்றது என்று தெரியவில்லை? அதற்கு மதிப்பே இல்லாத போது  ஏனென்றால் 1 ரூபாயை இரண்டு 50 பைசாக்ககளாகக் கொடுத்தால் பெரும்பான்மையோர் வாங்குவதில்லை. விலைப் பட்டியல்கள் ஏன் முழுமையாக நிர்ணயிக்கப்படுவதில்லை?  எங்கு ஊழல் தொடங்குகின்றது? நண்பர்களே!  இது அந்நியன் கணக்குதானே!  உங்களுக்குப் பதில் தெரிந்தால் என் மனதில் எழும் இந்தக் கேள்விகளுக்கு விடை கொடுங்களேன்!  நானும் எனது மிகச் சிறிய அறிவை விரிவாக்கிக் கொள்வேன்!
--கீதா

(பயணக் குறிப்புதான் தொடரும் என துளசி சொல்லி இருந்தார். ஆனால் வேலைப் பளு.  அதை இன்னும் எழுதி முடிக்காத காரணத்தால் அடுத்து....அதற்கு முன் இந்தப் பதிவு...) 

30 கருத்துகள்:

  1. மிகவும் யோசிக்க வேண்டிய பயனுள்ள கட்டுரை. சிறுதுளி பெருவெள்ளம் என்பதுபோல ஒரு ரூபாய் என்று நாம் நினைப்பது சாதாரணமானதல்ல.

    நாடு பூராவும் எல்லா வியாபாரத்திலும் இதனைக் கணக்குப்பார்த்து கூட்டினால் அது தினமும் பல கோடி ரூபாயாகத்தான் இருக்கும். எவன் உழைப்பையோ எவனோ காரணமின்றி மறைமுகமாகக் கொள்ளை அடிக்கிறான்.

    இதே போல கியாஸ் சிலிண்டர் விலைகளும் XX7 அல்லது XX8 அல்லது XX9 இல் முடிவதாகவும், சமயத்தில் பைசாவுடனும் முடிவதாகவும் பில் போட்டு அனுப்பப்படுகிறது. விலைகள் அவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன.

    ஆனால் [சட்டப்படி குற்றம் என்றாலும்] சிலிண்டர் சப்ளை செய்ய வருபவருக்கு ஏற்கனவே நாம் அழ வேண்டியிருக்கும் ரூ 30, 40, 50 லஞ்சத்துடன் இந்த ரூ. 1, 2, 3, 4 கூடுதலாக அழத்தான் வேண்டியுள்ளது. இதுபோல பகற்கொள்ளைகள் எங்கும் நடக்கவே நடக்கின்றது என்பதை மறுக்க முடியுமா?

    இதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தால் நல்லது. Gas Cylinder Bill ஐ Nearest ரூ. 10 க்கு Round ஆகப்போட்டால்தான் என்னவாம்? இடையில் எவனோ கொள்ளை அடிக்கும் இந்த சில்லறைகளை உற்பதியாளனோ அல்லது அரசாங்கமோ அடையட்டுமே.

    சிலிண்டர் கொண்டு போடுபவனுக்கு மாதச் சம்பளம் உண்டு. அதைவிட கூடுதலாக இதுபோன்ற கிம்பளங்களால் கட்டாய வசூல் செய்யப்படுகின்றன. கேட்டால் புகார் அளிக்கச்சொல்லுகிறார்கள். புகார் கொடுத்தால் அடுத்த முறை கேஸ் சிலிண்டரே நமக்கு ஒழுங்காக வந்து சேராது. அப்படியே வந்தாலும் ஏதாவது பாடாவதியாக உயிருக்கே உலைவைப்பதாக வந்து சேரக்கூடும்.

    விழிப்புணர்வு ஊட்டும் நல்ல கட்டுரைதான். ஊழல் .. எங்கும் ஊழல் எதிலும் ஊழல் ஊறி புரை ஏறிப்போய் உள்ளது. மாற்றங்கள் தேவை தான். பூனைக்கு யார் எப்படி மணி கட்டுவது என்பதுதான் புரியாமல் தவிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //விழிப்புணர்வு ஊட்டும் நல்ல கட்டுரைதான். ஊழல் .. எங்கும் ஊழல் எதிலும் ஊழல் ஊறி புரை ஏறிப்போய் உள்ளது. மாற்றங்கள் தேவை தான். பூனைக்கு யார் எப்படி மணி கட்டுவது என்பதுதான் புரியாமல் தவிக்கிறோம்.//

      அதுதான் சார்! நாம் பயனீட்டாளர்கள்தான் இதற்கு முடிவு கட்ட வேண்டும். ஆனால் நாம் எல்லாவற்றையும் அப்படியே எடுத்துக் கொண்டு போவதால், சந்தைக் காரர்களுக்கு கொள்ளை லாபம்...நம் மீது மரியாதை இல்லாமல் போதல்....

      மிக்க நன்றி சார் தங்களின் விரிவான கருத்திற்கு...

      நீக்கு
  2. இந்த கணக்கு ஒரு மனக்கணக்கு .. எப்படியும் நுகர்வோர ஏமாத்தலாம்னு முடிவு பண்ணியாச்சி.. இதை நிறுத்தவே முடியாது. இதுக்கு அமெரிக்க கணக்கு ஆப்ரிக்க கணக்கு யாருமே பதில் சொல்ல முடியாது.

    பதிலளிநீக்கு
  3. நாணயமான நாணயம் பற்றிய சிந்தனை!
    பாராட்டுக்கள் !
    அதேசமயம்!
    கிரடிட் கார்டு வந்து விட்ட பிறகு
    கையில் பணப் புழக்கம் குறைந்து விட்டதே!
    அதுவும் சூப்பர் மார்க்கெட் என்னும்போது
    சொல்லத் தேவை இல்லை!

    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  4. அந்நியன் கணக்கு - என்றவுடனேயே இது இங்கே தீர்க்கப்பட முடியாத கணக்கு என்பதனை புரிந்து கொண்டேன். 1 ரூபாய் அலட்சியத்தில், நன்றாகவே புள்ளி விவரக் கணக்கு தந்தீர்கள் சகோதரி. அந்த ஒவ்வொரு ரூபாயையும் தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு எவ்வளவு? ஆயுளுக்கு எவ்வளவு என்றும் கணக்கிட்டால் இன்னும் தலையைச் சுற்றும்.

    முன்பு தூக்குப் பையை (Carry Bag) கடைகளில் இலவசமாக கொடுத்து வந்தார்கள்; பிளாஸ்டிக்கை ஒழிப்பதாகச் சொல்லி அவற்றிற்கும் விலையை வைத்து கட்டாயம் ஆக்கி விட்டார்கள் இந்த சமூக ஆர்வலர்கள் (!). ஆனாலும் பிளாஸ்டிக்கை ஒழித்தபாடில்லை.

    அந்நியன் (ஸ்ரீ கருடபுராணம்) கணக்குப்படி இவர்களுக்கு என்ன தண்டனை? உண்டா என்பதும் தெரியாது.

    த.ம.2

    பதிலளிநீக்கு
  5. மிச்ச காசுக்கு பதிலாக அவர்கள் தரும் சாக்லேட்டை, இரண்டு நான்கு எனச் சேர்ந்ததும் அவர்களிடமேத் திரும்பக் கொடுத்து பாருங்கள்! எவ்வளவு பேர் வாங்குவார்கள் என்று தெரியும்? 70 பைசா அடக்கவிலை பெரும் சாக்லேட்டை ஒரு ரூபாய்ச் சில்லறைக்கு மாற்றாக வியாபாரம் செய்து விடுகிறார்கள்!

    இந்த அடக்கவிலை கூட எதை வைத்து நிர்ணயம் செய்கிறார்களோ! ஒவ்வொன்றுக்கும் அவர்கள் சொல்வதுதானே விலை? ஏதோ ஒரு துணி, 'மீட்டர் இவ்வளவு விலை' என்று அவர்கள் சொன்னால், அது அவ்வளவு பெறுமா என்று நமக்கு எப்படித் தெரியும்?

    சுவையான பதிவு.

    பதிலளிநீக்கு
  6. ஆட்டோக்காரர்களிடம் பேரம் பேசி (மீட்டர் எங்கே, எத்தனை பேர்கள் போடுகிறார்கள்? அப்படியே போட்டாலும் அங்கும்) 100 ரூபாய் என்பதை எண்பத்தைந்து என்றோ தொண்ணூறு என்றோ பேசி, ஏறி அமர்ந்து பயணம் செய்து வந்து சேர்வோம். இறங்கிப் பார்த்தால் நம்மிடம் சில்லறை இருக்காது. நூறு ரூபாய் நோட்டை நீட்டுவோம். பேரம் பேசியபடி மிச்ச சில்லறை தருவார் அந்த ஆட்டோக்காரர்? 'சில்லறை இல்லீங்க' என்றபடி அவர் மிச்சம் தருவதுதான், நாம் வாங்குவதுதான்!

    :)))))))))

    பதிலளிநீக்கு
  7. ஒரு ரூபாயில் ஆரம்பித்து மிட்டாயுடன் ஒப்புநோக்கி அலசிய விதம் நன்றாக இருந்தது. நாம் சின்ன விஷயம் என்று நினைப்பதை இவ்வாறு படித்துப் பார்க்கும்போது மலைப்பாக இருக்கிறது. இந்த அந்நியன் கணக்கு நம்மிடம் பரவலாகக் காணப்படுகிறது. இக்கணக்கினை ஒழிப்பது என்பது இயலாத காரியமே.

    பதிலளிநீக்கு
  8. எப்படி கூட்டிக் கழிச்சிப் பார்த்தாலும் கணக்கு தப்பாகவே வருகிறது...! ஹிஹி...

    பதிலளிநீக்கு
  9. அய்யா வணக்கம்,
    இப்ப கொஞ்சா நாளைக்கு முன் ஒரு செய்தி பார்த்தேன். 10 பைசா க்கு உருளைக்கிழங்கைக் கொள்முதல் செய்து 10 ருபாய்க்கு விற்கும் முதலாளிகளைப் பற்றி ரொம்ப கவலைப் பட்டார் புகழ் உள்ள கட்சிக்காரர்.
    காரணமான இவர்கள் நம்மை காப்பாற்றவா போகிறார்கள்.
    விலைப் பட்டியல்கள் ஏன் முழுமையாக நிர்ணயிக்கப்படுவதில்லை? அப்படி சரியாக செய்தால் கொள்ளைக் கூட்டம் குறைந்து விடும் என்பதை அறியாதவர்களா? அவர்கள். சிந்திக்க வேண்டியவர்கள் நாம் தான். தங்கள் கட்டுரை அதைத் தொடங்கட்டும். நன்றி.

    பதிலளிநீக்கு
  10. சிந்திக்க வேண்டிய ஒரு பதிவு! ஒரு ரூபாய் என்றில்லை சில சமயங்களில் 10, 5 ரூபாய் கூட தருவதில்லை. அதையும் கணக்குப் பார்த்தால் வருமானம் விண்ணை தொட்டுவிடும் போல. விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி. இந்த தகவலை 'தினம் ஒரு தகவல்' பகுதிக்கு பயன்படுத்திக் கொள்ளலாமா? பெரும்பான்மையான மக்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பதாக இருக்கும்.

    த ம 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே நிச்சயமாக! நீங்கள் கேட்கவே வேண்டாம்..பயன்படுத்திக் கொள்ளுங்கள்! ஒரு செய்தி பெரும்பான்மையோருக்குச் செல்லும் என்றால் எவ்வளவு நல்ல ஒரு விசயம்! உடனே நிறைவேற்றுங்கள்!

      மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
    2. மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  11. பெரும்பாலான சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் ப்லாஸ்டிக் அட்டையில்தான் பணப் பரிவர்த்தனை நடக்கிறது. நான் சொல்லும் இந்தக் கணக்கைப் பாருங்கள் வங்கிகளில் சேவிங்ஸ அக்கவுன்ட்களுக்கு நான்கு சதவீதமே வட்டி. வைப்பு நிதிகளுக்கு எட்டு சதவீதம் வரை உண்டு. செக் வசதி தேவௌஇ என்றால் கணக்கில் குறைந்தது ரூபாய் ஆயிரம் இருக்க வேண்டும் ஆக செக் வசதி உள்ளவர்களின் சேமிப்பும் நான்கு சதவீத வட்டியே பெற்றுத் தருகிறதுஅவர்களுக்கு குறைந்த பட்ச வைப்பாக இருக்கும் ரூபாய் ஆயிரத்துக்கு எட்டு சதவீத வட்டி கொடுக்கப் பட வேண்டும் இப்படிக் கொடுக்காமல் நான்கு சதவீத வட்டி கொடுப்பதன் மூலம் வங்கிகள் எவ்வளவு லாபம் பெறுகின்றன என்று கணக்குப் போட முடியுமா?

    பதிலளிநீக்கு
  12. அன்புள்ள சகோதரி,

    ‘அந்நியன் கணக்கு’ ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்று நாம் சூப்பர் மார்க்கெட்டில் ஒரு ரூபாயை அளந்து போட்டோமென்றால்... 27 கோடி ஒரு வருடத்திற்கு வருமானமாகக் கிடைக்கிறது என்று அதிர்ச்சி தகவலை அளித்திருக்கிறீர்கள்.

    ‘சிறு துளி பெரு வெள்ளம்’ என்பது இது தானோ?

    இந்த 1 ரூபாய்க்கு மதிப்பு இல்லை என்றால் ஏன் கடைக்காரர்கள் மட்டும் நம்மிடம் அந்த 1 ரூபாயைத் தர வேண்டும் என்று நிர்பந்திக்கின்றார்கள்? நியாயமான கேள்வி.

    சமீபத்தில் ஒரு பரிசுபெற்ற குறும்படம்: சில்லரையைப் பற்றி எடுக்கப்படம் பார்த்தேன். அதில் தன் மகனிடம் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கிவரச் சொல்கிறாள் தாய். அந்தச் சிறுவனும் மிதிவண்டிய ஓட்டிக்கொண்டு கடைக்குச் சென்று பொருட்களை வாங்குகிறான்... மீதி சில்லரையைக் கொடுக்காமல் மிட்டாயைக் கொடுக்கிறார். இது போல பல தடவைகள் சென்று அந்தக் கடையில் பொருள் வாங்குகின்ற பொழுதுதெல்லாம் அவர் சில்லரை தராமல், ஏதாவது பொருள்களைத்தான் சில்லரைக்காக தருகிறார். இவனோ கோபப்படாமல் அதை வாங்கிக்கொண்டே வருகிறான். இறுதியில் ஒரு தடவை பொருளைக் கேட்கிறான்... அவரும் அந்த பொருளைக் கொடுக்கின்ற பொழுது... தன்னிடம் இருக்கும் அவர் சில்லரைக்காக கொடுத்த பொருட்களையெல்லாம் எடுத்து கணக்கிட்டு அவரிடம் கொடுத்துவிட்டு மிதிவண்டியில் ‘டாடா’ காட்டிச் செல்கிறான். மிகவும் நன்றாக எடுக்கப்பட்ட குறும்படம். இதில் சிறப்பு என்னவென்றால் அந்த சிறுவன் ஒருவன் மட்டுமே கதாபாத்திரமாக காட்டப்படுகிறான். தாயின் குரல், கடைக்காரரின் கைமட்டும் காட்டப்படும்.

    சில்லரைபற்றி சொல்ல வேண்டும் என்றால் ... நாங்கள் கேரளாவிற்குச் சுற்றுலா சென்றிருந்த பொழுது... ஆட்டோவில் அங்கு பயணிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது... ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் தனக்கு முன்னால் ஒரு சிறிய பையை தொங்கவிட்டு இருந்தார்கள். அதில் அவர்கள் சில்லரைக் காசுகளை வைத்திருந்தார்கள். மீட்டர் போட்டு ஓட்டினார்கள்; மீதிச் சில்லரையைச் சரியாகக் கொடுத்தார்கள். நாங்கள் வியந்து போனோம். உண்மையில் அவர்களின் நேர்மையைப் பாராட்டியே ஆகவேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் மீட்டர் கிடையாது.... சில்லரையெல்லாம் எதிர்பார்க்க வேண்டாம். இங்கே ஆட்டோ டிரைவர்கள் நோட்டுகளை அபகரிப்பதிலேதான் குறியாக இருப்பார்கள்.
    யாரும் இங்கே சரியாக இருப்பது இல்லை... மேல் மட்டத்திலிருந்து... கீழ்மட்டம் வரை... எல்லாம் மட்டம்தான்... எல்லாம் கீழ்தான்...!

    நன்றி.
    த.ம. 6.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சகோதரர் மதி .சுதா இயக்கிய //மிச்சக்காசு //குறும்படம் அய்யா ..

      நீக்கு
    2. தமிழ் நாட்டுக்கு வெளியே ஒரு நாட்டின் சிறு மூலைக்குள் இருந்து வெறும் கைப்பேசியால் எடுக்கப்பட்ட எனது படம் ஒன்று தங்களை சேர்ந்ததும் அல்லாமல் இந்தளவுக்கு கவர்ந்திருக்கிறது என்பதை நினைக்க எனக்குமு் எனது படக்குழுவுக்கும் மிகவும் சந்தோசமாக இருக்கிறது. மிக்க நன்றிகள் ஐயா...

      நீக்கு
  13. அந்நியன் கணக்கு அநியாய கணக்குபோல் தெரிகிறது இதை மாற்றுவது 80 இயலாத நிலைக்குள் வந்து விட்டோம் தாங்கள் சொல்வதுபோல் மதிப்பில்லாத ரூபாயை அரசாங்கமே ஒழித்து விடுவதுதான் உத்தமம்

    இங்கு அரபு நாட்டிலும் 1ஃபில்ஸ் 2 ஃபில்ஸ் (பைசா) சொஸைட்டிகளில் மிச்சம் தருகின்றார்கள்
    இன்றொன்று 99 மட்டுமே இந்த வகை ஏமாற்றுகளும் தடுக்கப்படவேண்டும் நாணய மதிப்பு இருவருக்கும் பொதுதானே.....

    தமிழ் மணத்தில் தள்ளி விட்டேன் ஏழு.

    பதிலளிநீக்கு
  14. நன்றாகக் கேட்டீர்கள்! நியாயமான கேள்வி! இதுவரை இந்தக் கோணத்தைச் சிந்தித்துப் பார்த்ததில்லை. நன்றி!

    இப்படி நாம் விட்டுக் கொடுக்கும் சில்லரைகளுக்கு வரி கிடையாது என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால், என் அரைகுறைப் பொருளியலறிவின்படி பார்த்தால் இவை உண்மையில் கறுப்புப் பணத்தை உருவாக்குவதாகத் தோன்றுகிறது. எந்த ஒரு பொருளும் அதன் உயரளவுச் சில்லரை விலைக்குத்தான் (M.R.P) விற்கப்பட வேண்டும்; அதுதான் சட்டம். அதற்கு மேலாக நாம் தரும் ஒரு பைசாவானாலும் அது கணக்கில் வராத, கணக்கில் காட்டப்பட முடியாத கூடுதல் தொகைதான். அஃது எந்தக் கணக்கிலும் பதிவு செய்யப்படப் போவதில்லை.

    ஆக, 'மிச்ச அந்த ஒரு ரூபாயைப் போய் அற்பத்தனமாகக் கேட்டு வாங்குவதா' என்கிற நம் வறட்டுப் பெருமிதத்தினால் நாம் கறுப்புப் பணத்தை உருவாக்கும் ஒரு பெரும் குற்றத்துக்கே துணை போகிறோம் என்பது இதன் மூலம் புரிய வருகிறது. கண்டிப்பாக இனி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

    ஆனால், நாம் எச்சரிக்கையாக இருந்தாலும், கடைக்காரர்கள் மிச்சச் சில்லரை கொடுப்பார்களா என்ன? எனக்கு மாதவன் நடித்த 'எவனோ ஒருவன்' படத்தின் சில்லரைத் தகராறு காட்சிதான் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  15. சிறு துளி பெரு வெள்ளம் என்பது இதுதானோ
    சிந்திக்க வேண்டிய கட்டுரை சகோதரியாரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  16. இப்பதிவு அனைவரையும் சிந்திக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை!

    பதிலளிநீக்கு
  17. நியாயமான கேள்வியும் ஆதங்கமும் தான் என்ன செய்யமுடியும் சிறு துளி பெருவெள்ளம் ஏன்று தெரியாமலா சொன்னார்கள். குறும்படம் பற்றி சொல்ல வந்தால் முன்னரே சொல்லிவிட்டார் சகோதரர் மணவையார் மிக்கநன்றி தோழி வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் ஆசானே!

    என் அனுபவம் ஒன்று.

    அருகில் உள்ள பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வழங்கும் போது இப்படித்தான் சாக்லேட் கொடுப்பார்கள்.

    வேண்டாம் என்றால் சில்லறையாகக் கொடுங்கள் என்பார்கள்.

    அவர்களிடம் இருந்தும் கொடுக்கமாட்டார்கள்.

    நான் பொறுமையாய் ஒவ்வொரு முறையும் அவர்கள் தரும் சாக்லேட்டுகளைச் சேர்த்துக் கொண்டே வந்தேன்.

    இருபது சாக்லேட் சேர்ந்ததும் பத்து பென்சில் வாங்கிவிட்டு பத்து ரூபாய் கொடுங்க என்ற கடைக்காரரிடம் இருபது சாக்லேட்டுகளைக் கொடுத்தேன்.

    அதிர்ந்து போனார் அவர்.

    முடியாது என்று மறுத்துப் பார்த்தார்.

    நான் விடாப்பிடியாக இருக்கவே, இன்னும் சில வாடிக்கையாளரும் கூடி எனக்கு ஆதரவாக நிற்க வேறு வழியின்றி சாக்லேட்டுகளை வாங்கிப் போட்டுவிட்டு பென்சில்களைக் கொடுத்தார்.

    அப்போது அவர் முகத்தைப் பார்க்க வேண்டுமே...!!!

    அதன்பின், நான் அங்குச் சென்றால், சில்லறை சரியாக இருக்கிறதா என்று கேட்பார்.

    இல்லை என்றால் பொருள் தரமாட்டார்.

    பின் வேறு கடை மாறினேன்.

    உங்கள் பதிவு பார்க்கத் தோன்றிதோர் மலரும் நினைவு......!


    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரே அவர் தங்களது பெயரை வைத்து பேச தெரியாதவர் என்று சாதாரணமாக நினைத்து விட்டார் போல... ஐயா போவம்.... அந்த கடைக்காரர்.....

      நீக்கு
  19. பஸ்ஸிலே நடத்துனர் மீதியை தரவில்லை என்றால் சண்டை போடுவார்கள் ,மால்களில் நடக்கும் கொள்ளையைக் கண்டு கொள்ள மாட்டார்கள் ,இதுதான் நம்ம மக்களின் பாலிஸி:)

    பதிலளிநீக்கு




  20. மிச்சக் காசு கொடுக்க முடியாமைக்கு
    மாற்று வழியாக
    வேண்டாம் வேண்டாமென
    இனிப்பை இடிக்கிறாங்க...
    இதெல்லாம்
    எப்ப இருந்து என்றால்
    அந்தக் காலத்து
    கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்து
    என்கிறாங்க,,,
    ஈழத்தில இப்படி
    இனிப்பை இடிக்கிற வழக்கம்
    தொடங்கின காலத்தில
    கருணாநிதி ஆட்சிக் காலச் செய்தி
    நாளேடு ஒன்றில் படித்த நினைவு!
    இப்ப என்னவென்றால்
    இனிப்பை இடிக்கிற வழக்கம் போய்
    எங்கள் வயிற்றிலடிக்கிற கதை
    தொடங்கிற்று...
    சில்லறை இல்லை - அடுத்த
    வருகையின் போது தரலாமென
    சிலர் சுருட்டுறாங்க...
    ஈழத்தில...
    இந்தியாவில...
    உலகத்தில...
    இது உலாவுவதாகத் தகவல்!

    சிறப்பாக அலசிய - தங்கள்
    பதிவைப் படித்ததும் - இப்படி
    என் எண்ணத்தைப் பகிர்ந்தேன்!

    பதிலளிநீக்கு
  21. அந்நியன் கணக்கு அனகோண்டா கணக்கா இருக்கே !
    முன்பு நான் சின்னபிள்ளையா இருந்தப்போ எங்க தெரு கடைக்காரர் மீதி காசை தராம //காந்தி கணக்கு என்பார் //பின்பு தான் விளங்கித்து ...திரும்பி வரா பணத்துக்கு அப்படி சொன்னார்னு

    ஒரு பைசாவுக்கும் வெளிநாடுகளில் மதிப்புண்டு ..இங்கே 2பவுண்ட் கொடுத்தா மீதி ஒரு penny ரசீதுடன் தருவாங்க ..
    சில்லரை பெட்டியில் அடுக்கி வைச்சிருப்பாங்க இங்கே ..

    பதிலளிநீக்கு
  22. நல்ல பதிவு
    நானும் சாக்லேட்தான் வாங்கி வருகிறேன்..
    ஒரு நாளைக்கு அவருக்கு குறைந்தது ஐம்பது ரூபாய் மிச்சம்..
    வாழ்க
    வேறு என்னத்தை சொல்வது
    சில்லறை கொண்டுபோகவிட்டால் இப்படித்தான்

    பதிலளிநீக்கு
  23. காந்தி கணக்கு என்றுதான் கேள்விபட்டு இருக்கிறேன்... தங்கள் மூலம அந்நியன் கணக்கை பற்றியும் தெரிந்து கொண்டேன் அய்யா....த.ம.+16

    பதிலளிநீக்கு