கீதாவின் “அந்நியர்கள்” இடுகைக்கு வந்த
சகோதரி இளமதியின் பின்னூட்டத்தில், அவர், பிறந்த மண்ணையும், சொந்த பந்தங்களையும்,
நண்பர்களையும் இழந்து தூர தேசங்களில் மாறுபட்ட மத, மொழி, கலாச்சாரத்தை உடைவர்கள்
இடையே வாழ வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுத் தவிக்கும் தமிழினத்தவர்கள்
அங்கெல்லாம் “அந்நியர்களாய்” வாழ்வதைப் பற்றி எழுதியிருந்தது கண்களில் நீர் நிறைய
வைத்தது. பிரிவு தரும் வேதனை எத்தகையது என்பதை பிரிந்து வாழ்பவர்களால்தான்
முழுமையாக உணரமுடியும் என்றாலும், அவர்களது வேதனையை இது போல் துன்பத்தில் தோய்ந்த
அவர்களது வார்த்தைகளிலிருந்து அறிய நேரும் போது நம் கண்களில் கசியும் நீர் ஏனோ
உடனே நிற்பதில்லை. நீண்ட நேரம் மனதிற்கு
வலி தந்த பின்னும் அவ் எண்ணங்கள் நம் மனதை விட்டுச் செல்வதும் இல்லை. அவர்களது அச்சத்தையும், வேதனையையும் போக்கி
புதிய வாழ்வையும் சுற்றத்தையும் நட்புகளையும் தந்து அவர்களது வாழ்வை வளமாக்கி,
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனும் மன
நிலையுடன் அவர்களை அவர்கள் வாழும் தேசங்களில் தமிழை சுவாசித்து வாழ வைக்க எல்லாம்
வல்ல இறைவனிடம் வேண்டுவோம். இப்படி அந்நியர்களாக வாழ்பவர்களை நினைக்கையில், சில
நாட்களுக்கு முன் நான் வாசிக்க நேர்ந்த ஒரு செய்தி மனதை விட்டகலாமல் அலை மோதிக்
கொண்டே இருக்கின்றது. அதை இங்கு உங்களிடம்
பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று தோன்றுகின்றது.
2010 செப்டம்பர் 28. நம்
எல்லோருக்கும் எல்லா நாட்களையும் போல், வழக்கம் போல் ஒரு நாள். ஒரு செவ்வாய் கிழமை
அவ்வளவே. ஆனால், பனாமா நாட்டின் எம் வி
ஆஸ்பால்ட் வென்சர் எனும் சரக்குக் கப்பலில் தங்கள் பணிகளைச் செய்து
கொண்டிருந்தவர்களுக்கும், பணிக்குப் பின் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கும்
அவர்களது வாழ்வை விதி பந்தாடிய நாள் அது. கப்பலைத் துபாயை மையமாகக் கொண்ட
குஜராத்தைச் சேர்ந்தவர்களின் ஒஎம்சிஐ ஷிப் மேனேஜ்மென்ட் கம்பெனி இயக்குவதால்,
கப்பலில் உள்ள ஊழியர்கள் எல்லோருமே இந்தியர்கள்.
காப்டன் சுரேஷ்குமார், ரேடியோஆஃபீசரும், செகண்ட் ஆஃபீசருமான கோட்டயம் அருகே
உள்ள முல்லப்பள்ளியைச் சேர்ந்த பரியாரம் தாழத்து வீட்டின் டிபி உன்னிக் கிருஷ்ணன்,
செகண்ட் இஞ்சினியரான கூத்தாட்டுக் குளத்தைச் சேர்ந்த புதியாகுன்னு, ஜார்ஜ் ஜோசஃப்,
இவர்களுடன் வேறு 12 பேர்கள்.
ஆஃபிரிக்கா, கென்யாவில் உள்ள மோம்பாசாவில் சரக்குகளை இறக்கிய பின், தென்
ஆஃபிரிக்காவில் உள்ள டர்பனுக்குப் போய்க் கொண்டிருந்த கப்பலில் இயங்க வேண்டிய 8 சிலிண்டர்களில் ஒன்று பழுதடைந்ததால், கப்பலின்
வேகம் குறைவாகவே இருந்தது. மடகாஸ்கர் தீவை
நெருங்கிக் கொண்டிருந்த போது திடீரென ஸ்பீட் போட்டில் வந்த ஏகே47 துப்பாக்கிகள்
ஏந்திய கடல் கொள்ளைக் கார்ர்கள் கப்பலைச் சூழ்ந்து கயிற்று ஏணிகளை எறிந்து
கப்பலில் ஏறி கப்பலை அவர்கள் சொந்தமாக்கிவிட்டதாகச் சொல்லி, எல்லோரையும் ஒரு
அறையில் கட்டி இட்டனர். இடையிடையே சாட்டையால் அடித்து, அவர்களது கதறல்களை
சாட்டிலைட் ஃபோன் வாயிலாக கப்பலின் உரிமையாளர்க்ளைக் கேட்க வைத்துக் கப்பலையும்
ஊழியர்களையும் விடுவிக்க 5
மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும் என்று மிரட்ட்த் தொடங்கினார்கள்.
மிரட்டல்களுக்கு கப்பல் உரிமையாளர்கள் உடனே
மசியாததால், மிரட்டல்கள் 6 மாதம்
வரை நீண்ட்து. கூடவே அடியும்
கதறல்களும். இறுதியாக கப்பல் உரிமையாளர்கள்
3 1/2 மில்லியன் டாலர் கொடுத்து கப்பலையும்,
ஊழியர்களையும் மீட்க முடிவு செய்தனர். இது சோமாலியாவின் அடுத்த கடற் பகுதிகளில்
இடையிடையே ஏற்படும் சம்பவமே. 6 மாதமாக எஞ்சின் இயக்கப்படாமல் கப்பல் கடலில்
மிதந்து இருந்த்தால், கப்பலின் இஞ்சின் சத்தம் கேட்ட பின் தான் பணம் தருவோம் என்று
உரிமையாளர்கள் சொல்ல, கடல் கொள்ளையர்கள் உடனே செகண்ட் இஞ்சியரான ஜார்ஜ் ஜோசஃபை
அழைத்துக் கப்பலை 10 நிமிடம் இயக்க வேண்டும் என்றும்,
இயங்காமல் போனாலோ, இடையே நின்றாலோ ஜோசஃப் கொல்லப்படுவார் என்று மிரட்டி இருக்கிறார்கள். ஜோசஃப்
எப்படியோ டீசலுக்குப் பதிலாக பெட்ரோலை உபயோகித்து ஒரு வழியாய் எஞ்சினை இயக்கித்
தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டார்.
ஏப்ரல் 15, 2011 அன்று பணத்தைப் பெற்றுக் கொண்டு கப்பலுடன்
காப்டன் உள்ளிட்ட 8 ஊழியர்களை மட்டும் திரும்ப அனுப்பியக்
கொள்ளைக்கார்ர்கள் மீத்முள்ள 7 பேரை
இரண்டுக் குழுக்களாக்கி ஒன்றில் உன்னிக் கிருஷ்ணனையும், மற்றொன்றில் ஜார்ஜ்
ஜோசஃபையும் உட்படுத்தி சோமாலியாவில் உள்ள பாலைவனத்தில் சிறை வைத்தனர். அவர்களை
மீட்க இந்தியா இந்தியச் சிறைச்சாலையில் உள்ள 147 சோமாலியக் கொள்ளைக்காரர்களை விடுதலை செய்ய
வேண்டுமாம். அச் சிறை வாசம் 2014, அக்டோபர் 28 வரை நீடித்த்து. பாம்புகளும், பூரான்களும், விஷச் சிலந்திகளும்,
கீரிகளும், ஓநாய்களும் நிறைந்த பாலைவனப்பகுதியில் அவர்கள் ஒவ்வொரு நாளும் செத்துப்
பிழைக்க வேண்டியிருந்தது. பசியைப் போக்க
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கிடைக்கும் கொஞ்சம் அரிசியை, சுற்றுப் புறங்களில் இருந்து
சேகரிக்கும் காய்ந்த கம்புகளை உபயோகித்து சமையல் செய்து சாப்பிட்டு உயிர்
வாழ்ந்தார்கள். எப்போதாவது, கோதுமை மாவு
கிடைக்கும் அவ்வளவே. இப்படி ½ வயிற்றையும், ¼ வயிற்றையும் நிரப்பி, அவர்கள் விடுதலை ஆகும் நாட்களுக்காகக்
காத்திருந்தனர்.
கொள்ளைக் காரர்களின் தலைவனான காப்டன்
டேவிட் எப்போதாவது அங்கு வருவதுண்டு. டேவிட்டிற்கு
ஓரளவு ஆங்கிலம் பேச வரும். டேவிட் வரும் போது, சிறை வைக்கப்பட்ட எல்லோரையும்
அவர்களது வீட்டில் உள்ளவர்களுடன் தன் கையில் உள்ள மொபைல் வாயிலாகப் பேச வைப்பதுண்டு. அப்படி ஒரு முறை உன்னிக் கிருஷ்ணன்
வீட்டார்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென அவர் அழ ஆரம்பிக்க, காரணம் வினவிய டேவிடிடம் , அழுத படி உன்னிக்கிருஷ்ணன் 2012 அக்டோபர்
18 ஆம் தேதி தன் மகளுக்குக் கல்யாணம்
நடக்கவிருக்கிறது என்றிருக்கின்றார். '' அதற்கு என்ன? கல்யாணம் நடக்கட்டும். அதற்கு நீ ஏன் அழுகிறாய்”
என்றிருக்கிறார் டேவிட் . இந்தியர்களின்
திருமணத்தின் போது பெற்றோர்களிடம் பிள்ளைகள் ஆசிர்வாதம் பெற வேண்டிய அவசியம் பற்றி
உன்னிக் கிருஷ்ணன் சொல்லி அழுதிருக்கிறார்.
அது அந்தக் கல்நெஞ்சுக்குள் ஈரத்தை வரவழைத்திருக்கிறது. அக்டோபர் 18, 2012 காலை அங்கு வந்த டேவிட் உன்னிக் கிருஷ்ணனை
அழைத்துச் சென்று ஃபோனைக் கொடுத்து நேரம் பாராமல் பேச வேண்டியதை எல்லாம் பேசச்
சொல்லி இருக்கிறார்.
விடுவிக்கப்பட்டவர்கள்-படத்தில் உள்ளவர்களுக்கும் செய்தியில் உள்ளவர்களுக்கும் சம்பந்தம் இல்லை
உன்னிக் கிருஷ்ணனின் மனைவி சோபாவின் விடா
முயற்சியாலும், மேரிட்டைம் பைரசி ஹுமானிட்டேரியன் ரெஸ்பான்ஸ் ப்ரோக்ராமின்
உதவியாலும் அவர்களது விடுதலைக்கான முயற்சிகள் பலன் கண்டது. அத்துடன் இண்டெர்நாஷனல்
ட்ரான்ஸ்போர்ட் ஃபெடரேஷனும் –ஐடிஎஃப்- இந்திய வெளிநாட்டுத் தூதரகமும் இறுதியாக
இணைந்து எடுத்த முயற்சியின் பலனாக, அக்டோபர் 28, 2014 அன்று விடுதலை செய்யப்பட்ட 7 பேரையும், டேவிட் புதிய ஆடைகள் அணியச் செய்து
இந்தியன் எம்பசிக்கார்ர்களிடம் ஒப்படைக்க, நைரோபியிலிருந்து மும்பை வந்தடைன்ந்த
உன்னிக் கிருஷ்ணனைக் காண மனைவி ஷோபா, மகள் மீரா, மருமகன் கோபக்குமார், மற்றும் 6 மாதப் பேரனும் காத்திருந்தனர். அப்படி, 4 ஆண்டுகள் சோமாலியக் கடல் கொள்ளையர்கள் நடுவே
உயிருக்குப் பயந்து காலம் கழித்த உன்னிக் கிருஷ்ணன் தன் குடும்பத்தினருடன் மறு
ஜென்மம் எடுத்து வாழத் தொடங்கியிருக்கிறார்.
சிறிதளவு மன நிலை தடுமாறிய நிலையில் இருக்கும் அவர் விரைவில் அவர் பழைய
நிலைக்கு வர நாம் எல்லோரும் வேண்டிக் கொள்வோம்.
அது மட்டுமல்ல அவருடன் விடுதலை பெற்ற மற்ற 6 பேர்களுக்காகவும் வேண்டிக்
கொள்வோம். இது போன்ற சம்பவங்களைப் பற்றி அறியும் போது நமக்கு அதைத்தானே செய்ய
முடியும்.
பின் குறிப்பு: இந்த இடுகையை வாசிப்பவர்கள் இதற்கு வந்த மதுரைத் தமிழனின் நேர்மறைக் கருத்தை வாசிக்க வேண்டுகின்றோம். அவர் சொல்லுவது மிகவும் யதார்த்த வாழ்வுக்கு வேண்டிய ஒரு நல்ல சிந்தனை பாராட்டிற்குரியதும். எல்லோருக்குமே பொருந்தும் என்பதால் அதை வாசிக்க வேண்டுகின்றோம்.
பின் குறிப்பு: இந்த இடுகையை வாசிப்பவர்கள் இதற்கு வந்த மதுரைத் தமிழனின் நேர்மறைக் கருத்தை வாசிக்க வேண்டுகின்றோம். அவர் சொல்லுவது மிகவும் யதார்த்த வாழ்வுக்கு வேண்டிய ஒரு நல்ல சிந்தனை பாராட்டிற்குரியதும். எல்லோருக்குமே பொருந்தும் என்பதால் அதை வாசிக்க வேண்டுகின்றோம்.
//பிறந்த மண்ணையும், சொந்த பந்தங்களையும், நண்பர்களையும் இழந்து தூர தேசங்களில் மாறுபட்ட மத, மொழி, கலாச்சாரத்தை உடைவர்கள் இடையே வாழ வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுத் தவிக்கும் தமிழினத்தவர்கள் அங்கெல்லாம் “அந்நியர்களாய்” வாழ்வதைப் பற்றி எழுதியிருந்தது கண்களில் நீர் நிறைய வைத்தது.////
பதிலளிநீக்குஅந்நியர்களாக வாழ வேண்டிய அவசியமில்லை நாம் எங்கே செல்கிறோமோ அங்கே அவர்களுடன் கலந்து வாழ ஆரம்பித்தால் வேதனை பட அவசியமீல்லை. உதவும் மனப்பான்மையும் விருந்தோம்பல் மனப்பான்மையும் இருந்தால் எங்கும் நாம் சந்தோஷமாக வாழ முடியும்
நீங்கள் சொல்லுவது மிகவும் சரிதான் தமிழா! சரியான கருத்தே. ஆனால், பொதுவாக நாடு கடந்து வாழ்வதற்கும், இது போன்று அகதிகளாகச் சென்று வாழ வேண்டிய சூழ்நிலைக்கும் வித்தியாசம் இருப்பதை அவர்கள் வருத்தப்பட்டுச் சொல்வது வருத்தமாகத்தானே இருக்கின்றது தமிழா.
நீக்குதங்கள் கருத்து மிகவும் நேர்மறையானக் கருத்து...நல்ல கருத்தும் கூட...
மிக்க நன்றி தமிழா.
அகதிகளாக இந்தியாவிற்கு வந்தால்தான் நிலமை மோசம். மேலை நாடுகளில் அகதிகளிடம் பாரபட்சம் யாரும் பார்ப்பதில்லை ஏன் இவர்கள் அகதிகளாக வந்தவர்கள் என்று கூட யாருக்கும் தெரியாது இவர்கள் உழைக்க வந்தவர்கள் என்றுதான் எடுத்து கொள்வார்கள்
நீக்குஅவர்கள் வருத்தப்படுவது எனக்கும் வருத்தம்தான் ஆனால் அப்படி அவர்கள் வருத்தப்பட்டே காலத்தை கழித்துவிடக் கூடாது என்பதால்தான் நான் என் கருத்தை சொன்னேன். ஏதோ சூழ்நிலையில் வந்துவிட்டோம் அதனை நினைத்து வருத்தப்பட்டு கொண்டி இருக்க கூடாது.கஷ்டம் இல்லாமல் இருப்பவன் என்று ஒருத்தரையாவது காட்ட முடியுமா என்ன>
நானும்தான் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன் ஆனால் என் கஷ்டத்தை யாரிடமும் சொல்லாமல் மற்றவர்களை சிரிக்க வைத்து கொண்டுதான் இருக்கிறேன்.
நீக்குஎனது பதிவுகளோ கருத்துக்களோ யாரையும் காயப்படுத்தும் நோக்கில் என்றும் போடப்படுவதில்லை. "எனது மனதில் என்ன தோன்றுகிறதோ" அதை அப்படியே போடுகிறேன். அது தவறாக இருந்தால் சுட்டிக்காட்டப்பட்டால் அதையும் திருத்தி கொள்வேன்
அது அரசியல் வாதிகளாக இருந்தாலும் சரி நண்பர்களாக இருந்தாலும் சரி உறவினர்களாக இருந்தாலும் சரி எல்லோரும் எனக்கு சரி சமமே அது போலதான் அனைத்து மதங்களும் சாதிகளும் எனக்கு சரி சமமே
தமிழா ! வெரி வெரி பாசிட்டிவ் எண்ணம். கருத்து. சிந்தனை. இதை எல்லோரும் வாசிக்க வேண்டும். ஆம் இந்தியாவில் அகதிகளின் நிலைஅமை மிகவும் மோசம்தான். அவர்களுக்கு நாட்டு உரிமை வழங்கப்படுவதிலிருந்து, தினப்படி வாழ்க்கையும் கடினம்தான். னீங்கள் சொல்லும் கோணத்தில் ஆராய்ந்து பார்க்கும் போது மிகவும் சரியே...இங்கு நம் நாட்டில் நாமே பல சமயங்களில் சமூக அவலங்களைக் காணும் போது நாம் நம் சொந்த மண்ணில் தான் வாழ்கின்றோமா என்று எண்ணத்தான் தோன்றுகின்றது. அப்படி இருக்கும் போது யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று வாழ்ந்தால் நேர்மறை எண்ணத்தோடு வாழ்ந்தால் நல்லதே. எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கருத்து.
நீக்குதாங்கள் யாருடைய மனதையும் புண்படுத்தவில்லையே! தமிழா! உங்கள் பதிவுகளும் அதைத்தானே சொல்லுகின்றன. மட்டுமல்ல மற்றவர்களையும் சிரிக்க வைக்கின்றீகள். அது எவ்வளவு கஷ்டம் தெரியுமா தமிழா?!! மற்றவர்களை நம்முடன் இருப்பவரை மட்டுமின்றி, நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்விப்பது, நம் கஷ்டத்தையும் மறந்து, என்பது எவ்வளவு பெரியகலை! அதற்கு உங்களை மனமார்ந்து பாராட்டுகின்றோம் தமிழா!
பின் குறிப்பு: //நானும்தான் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன்// பூரிக்கட்டை அடியா?!!!!! அஹஹஹஹஹஹ.....
உன்னி கிருஷ்ணன் விரைவில் நலம் பெற பிரார்த்திப்போம் ..
நீக்குசகோ மதுரை தமிழன் //கஷ்டம் இல்லாமல் இருப்பவன் என்று ஒருத்தரையாவது காட்ட முடியுமா என்ன// மிக சரியாக சொன்னார் ..பிரசினை இல்ல வாழ்க்கை கஷ்டமில்லா மனிதன் ..ஒருவருமில்லை .
உங்களுக்கு NICK என்பவரை பற்றி தெரிந்திருக்கும் A man born with no arms and legs makes the best of his life and encourages others to be grateful for //
அவர் சொல்வது இதுதான் No Arms, No Legs, No Worries!. //
மிக்க நன்றி சகோதரி! ஆம் மதுரைத் தமிழன் சொல்லியது மிக மிக சரியே. னிக் ஆம் ! தெரியும். அந்த வார்த்தைகளில் எத்தனை எத்தனை அர்த்தங்கள்!! வாழ்க்கையே அதில் அடங்கி ருக்கு.....மிக மிக நல்ல கருத்துக்களையும், தகவல்களையும் தருகின்றீர்கள் சகோதரி! மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது..தங்களின் வரவும், கருத்துக்களுக்கும்....
நீக்குவேற்று மண்ணில் அன்னியப்படுவதை பற்றி நானே எனது பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தாலும் " அவர்கள் ஊமைகள் " சொல்வதில் உண்மையிருக்கிறது. ஆனாலும் அதையும் தாண்டிய இனவெறி கொடுமையானதுதான் !
பதிலளிநீக்குஇந்த பதிவின் மூலம் கொள்ளைக்காரர்களுக்கும் இன்னொரு இரக்க மனமும் புரிகிறது.
இங்கு இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன்...
இதயமற்ற மத அடிப்படைவாத கொடியவர்களுக்கும் சோமாலியாவின் கடற்கொள்ளையர்களுக்கும் சில வித்யாசங்கள் உண்டு. இந்த கொள்ளைக்காரகளுக்கு பணமே பிரதானம். இவர்கள் பணயக்கைதிகளை கொல்வது அறிது. இவர்களில் பெரும்பான்மையானவர்கள் சோமாலியா போன்ற நாடுகளின் வறுமை நிலையால் வேறு வழியின்றி இத்தொழிலில் ஈடுபடுபவர்கள். இவர்களுக்கு பின்னால் அங்கும் அரசியல் மற்றும் மாபியா கும்பல்களும் உண்டு ! எளிதாக சொல்வதானால் சந்தன வீரப்பனை போல சமுத்திர வீரப்பன்கள் !!!
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
ஆம் நண்பரே! தங்களின் கருத்து சரியே!. வறுமையினால் தான் இவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றார்கள். ஆம் கும்பல்கள் உண்டு...ஹஹ் அட!! நல்ல பெயர் சந்தன வீரப்பன்...சமுத்திர வீரப்பங்கள்......
நீக்குமத வெறி சார்ந்த தீவிரவாதத்தில் கூட ஒரு கூட்டம் இந்த வறுமையின் காரணமாக பல இளைஞர்கள் மூளைச்சல்வை செய்யப்பட்டு ஈடுபடுத்த்டப்படுகின்ரார்கள் பணம் பேரம் பேசப்பட்டு என்று பல ஆய்வுகள் சொல்லுகின்றன.
மிக்க நன்றி நண்பரே நல்ல கருத்துக்களை முன் வைத்தமைக்கு
மனதை பாரமாக்கியது.
பதிலளிநீக்கும்ம்ம் ஆம்! இது போன்றவை சில சமயங்களில் அப்படித்தான் ஏற்படுத்துகின்றது. ஆனால் இதுதானே தினமும் தலைப்புச் செய்திகளாகவும் வருகின்றன...
நீக்குமிக்க நன்றி நண்பரே!
கேள்விப்படாத தகவல்கள். படித்ததும் மனது ஏனோ சஞ்சலப்பட்டது. அவர்களுக்காக பிராத்திப்போம்.
பதிலளிநீக்குநிச்சயமாக நண்பரெ! பிரார்த்திப்போம். வேறு என்ன செய்ய முடியும். தினமும் இது போன்ற எதிர்மறைச் செய்திகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன....
நீக்குமிக்க நன்றி நண்பரே!
வணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா
நாம் பிறந்த மண்ணில் நாம் பிறக்கும் போது எமது பண்பாடு கலாசாரம் எல்லம் ஒட்டிக்கொள்கிறது. எங்கு வாழ்ந்தாலும்இவற்றை தொலைக்க முடியாது... .
மற்றும் கடல் கொள்ளையர்கள் பற்றி சொல்லிய தகவலை படித்த ஒரு கனம் மனம் பதைபதைத்தது
விடுலையாகிய அனைவரும் சுக தேகத்துடன் வாழ இறைவனைப் பிராத்திப்போம் பகிர்வுக்கு நன்றி
த.ம2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்கள் மன நிலை புரிகின்றது. உங்கள் கருத்தும் புரிகின்றது. அவற்றைத் தொலைக்காமலும் வாழ முடியும் என்பதும் உறுதிப்படுகின்றது.
நீக்குஆம் பிரார்த்திப்போம் ரூபன் தம்பி! மிக்க நன்றி தம்பி!
ஒவ்வொரு முறையும் இளமதி போன்ற ஈழதமிழ் சொந்தங்கள் கண்ணீர்விடும் போதும் குற்றுணர்வே குத்திக்கிழிக்கிறது. எப்போ ஓட்டுக்கு நம்மை விற்கத் துணிந்தோமோ, அப்போதே நம் மானம், மரியாதையை அவர்கள் விலையில்லா அல்லது இலவசப்பொருளாய் பெற்றுக் கொண்டார்கள். நம்மை ஒரு ஆளாகவே மதிக்காத மோடி, ராஜபட்சேவுக்கு வாழ்த்துத் தெரிவித்துகொண்டிருக்கிறார்:(( சரி பேசி,பேசி தானே தமிழர்கள் வீணாபோறோம், உன்னிக்ரிஷ்ணனின் நிலையை கண்ணீர்வர மிக தெளிவாய், நுணுக்கமாய் விளக்கியிருகிறீர்கள். அருமை சகாஸ்:)
பதிலளிநீக்குவாய்ச்சொல்லில் வீரரடி! இதுதான் நினைவுக்கு வருகின்றது நீங்கள் சொல்லி இருப்பது போல். அதற்கானத் தீர்வுகள்?!! தீர்வுகள் கிடைக்கும் நாள் வரை மதுரைத் தமிழனின் வார்த்தைகள் சரிதானே!
நீக்குநாம் வாசிக்கும் போதுதான் அந்த உணர்வு,,,ஆனால் உன்னிக் கிருஷ்ணன் மற்றும் அவருடன் இருந்தவரின் நிலை அவர்கள் அந்தக் கொள்ளையர்களிடம் இருந்த போது..எப்படி இருந்திருக்கும்?! நல்ல காலம் கொல்ல வில்லை! அதை நினைத்து மகிழ வேண்டியததுதான்..சகோதரி! மிக்க நன்றி
உன்னிக் கிருஷ்ணன் அவர்களின் நிலை இனி யாருக்கும் வரக் கூடாது...
பதிலளிநீக்குஆம் டிடி! அப்படித்தான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்...ஆனால் தினமும் இதைப் போன்ற ஏதாவது ஒரு செய்திதான் முதல் பக்கம் வருகின்றது....ஒரு நேர்மறைச் செய்தியாவது முதல் பக்கம் பெரிதாக வர வைக்கலாமே ...
நீக்குநன்றி டிடி!
உன்னி கிருட்டினன் நல்ல ஆரோக்கியத்தினை மீண்டும் அடைந்து, நல் வாழ்வு வாழட்டும்.
பதிலளிநீக்குஆம்! பிரார்த்திப்போம் அவருக்கு மட்டுமல்ல அவருடன் இருந்த அனைவருக்கும் சேர்த்து!
நீக்குமிக்க நன்றி நண்பரே!
அவர்கள் உண்மைகள் அவர்களுக்கு தாங்கள் அளித்த பதில் சரிதான் நண்பரே.
பதிலளிநீக்குநல்ல ஊதியம் வேண்டி வெளிநாடு சென்று வசிப்பதற்கும்,
சொந்த நாட்டில் வாழவே வழியின்றி,அகதியாக வெளிநாடு சென்று வசிப்பதற்கம் வேறுபாடு உண்டுதான்
நன்றி நண்பரே
மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு!
நீக்குதம 4
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே!
நீக்குதாயகத்தை விட்டு நீங்கி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த நெஞ்சங்களின் நிலையை எண்ணினால் மனம் துடிக்கின்றது. என்னதான் அந்த தேசத்துடன் ஒட்டி உறவாடி வாழ்ந்தாலும் - தாயகம் போல் ஆகுமா?.. எல்லாம் அவரவர் மனநிலையைப் பொறுத்ததே!..
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா! தங்கள் கருத்திற்கு! ஆம்! அவரவர் மன நிலையும் இதில் அடங்கும்.
நீக்குகடற்கொளையர்களிடம் சிக்கித் தவித்து - மீண்டும் நாடு திரும்பியோர் நலமுடன் வாழட்டும்.
பதிலளிநீக்குஆம்! பிரார்த்திப்போம். நலல்தையே நினைப்போம்!
நீக்குதம 5
பதிலளிநீக்குமனம் கனமாகி விட்டது.
பிரார்த்திப்போம்.
மிக்க நன்றி சகோதரி! ஆம்! அதை விட வேறு என்ன செய்ய முடியும்!
நீக்குவணக்கம் சகோதரரே!
பதிலளிநீக்குதங்களின் ”அந்நியர்கள்” பதிவிற்கிட்ட எனது கருத்து தங்களையும்
இன்னும் பல அன்பு உறவுகளையும் கலங்க வைத்துவிட்டதே...! :(
புரிதல்கொண்ட அன்புள்ளங்களுக்கும் தங்களுக்கும்
என் அன்பு நன்றியைக் கூறிக்கொள்கின்றேன்!
அன்றைய பதிவிற்கு எனக்குத் தெரிந்த பல எம்நாட்டவர்கள் கண்ட
மனநிலைப் பிறள்வையே அன்று நான் குறிப்பிட்டேன்.
மனம் மகிழ்வாக இருப்பதற்கு இருக்குமிடத்தில் அயலில் உள்ளவர்களிடம் தொடர்பாடல்
மிக முக்கியம்! அதற்கு இந்நாட்டு மொழியறிவு முதலில் பிரச்சனையாகிறது..!
உண்மை கசக்கத்தான் செய்யும்! நான் கண்ட, அறிந்த சில உறவுகளின்
நிலையைத் தான் இங்கு குறிப்பிட்டேன்! ஆங்கிலம் போன்று ஜேர்மனிய மொழி
எம் நாட்டவர்க்கு அத்தனை இலகுவானதோ அன்றிப் பரீட்சயமானதோ அல்லாமல்
முற்றிலும் வேறுபட்ட மொழியாகியதும் ஒரு காரணம். பிள்ளைகள் பாடசாலைக்குச் சென்று முறைப்படி கற்றுத்தேறிவிடப் பெரியவர்கள் அரைகுறையாகவே அதனைக் கற்கும் நிலையாவதால் தொடரும் துயரங்கள்!...
கடற்கொள்ளையரால் தாக்கப்பட்டு கொடுந் துயர்கண்டவர்களின் செய்தி
மனதைக் கலங்க வைத்தது!
அனைவரும் நலம் பெற நானும் வேண்டுகிறேன்!
த ம.6
ஆம்! சகோதரி! நாங்கள் அந்நியர்கள் என்று னினைத்து எழுதிய போது அதற்கு இப்படி ஒரு அர்த்தம் உள்ளது என்பது நினைவில் வரவில்லை. தங்களின் மன நிலை மிகவும் புரிகின்றது. ஜெர்மனியில் எங்கள் உறவினர் 2 வருடங்கள் இருக்க வேண்டிய சூழல் வந்தது. அப்போது அவர்களது மகள் 5 ஆம் வகுப்பு. சிறிது நிறம் குறைவாக இருப்பாள். பள்ளியில் அவளுடன் சக மாணவ மாணவியர் அமர்ந்து உணவு உண்ண மாட்டார்களாம். பேசவும் மாட்டார்களாம். ஒதுக்கப்பட்டாளாம். இத்தனைக்கும் இவள் ஒதுங்குபவள் அல்ல. மிக நன்றாகப் பழகுவாள். ஆனால் அது எல்லா இடங்களிலும், பள்ளியிலும் இல்லை என்பதும் தெரிந்து கொண்டோம்.
நீக்குஜெர்மானிய மொழ் பற்றி அவர்களும் சொல்லி யிருக்கின்றார்கள். நீங்கள் சொல்லுவது போலத்தான்.புரிந்தது உணர்வுகள். ஆனால் அதற்கு இயைந்து வாழும் நிலை வரும் போது என்ன செய்ய முடியும் சகோதரி. தங்களுக்காகப் பிரார்த்திக்கின்றோம். மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள். வலையில் இத்தனை அன்பு உள்ளங்கள் இருக்கின்றனவே! அதுவே பெரிய சந்தோஷம்தானே சகோதரி. அனைவரும் நலம் பெற பிரார்த்திப்போம்.
மிக்க நன்றி சகோதரி!
அன்பு மகள் இளமதியின் துயரை நான் அறிவேன்! நான் ஜெர்மன் சென்ற போது தொலைபேசி வாயிலாகவே தொடர்பு கொள்ள முடிந்தது
பதிலளிநீக்குமிக்க நன்றி புலவரே! ஆம்! எல்லோருக்குமே அறிவோம். அவர்களுக்காகப் பிரார்த்திப்போம்.!
நீக்குகடல் கொள்ளையர்களிடம் சிக்கிய உன்னிக்கிருஷ்ணன் மற்றும் நண்பர்களின் நிலையை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. பத்திரமாய் திரும்பியதில் மகிழ்ச்சி! என்னதான் மனதை திடப்படுத்திக் கொண்டாலும் பிறந்த இடம் விட்டு அன்னிய மண்ணில் வாழும் போது ஒரு சோகம் இருக்கத்தான் செய்யும். அதே சமயம் அதையே நினைத்து வருத்தப்படக்கூடாது. இருக்கும் இடத்தில் கலந்து முன்னேற்ற பாதையை வகுத்துக்கொள்ள வேண்டும் என்ற மதுரை தமிழன் கருத்துக்களோடு உடன்படுகிறேன்! நன்றி!
பதிலளிநீக்குஆம்! சுரேஷ்! நண்பரே! அவர்கள் பத்திரமாய் திரும்பியது மிகவும் மகிழ்வே! ஆம்! மதுரைத் தமிழனின் கருத்து சரியே! மிக்க நன்றி நண்பரே!
நீக்குமிகுந்த வேதனையைத் தந்த பதிவு..
பதிலளிநீக்குஇறைவன் அவர்களுக்கு அருளட்டும் இனியாவது நிம்மதியாக இருக்கட்டும்.
ம்ம் ஆம் தோழரே! நாமும் அவர்களுக்கு ந்ல்லதையே நினைத்துப் பிரார்த்திப்போம். மிக்க நன்றி தோழரே!
நீக்குமனம் கனக்க வைத்த பதிவு.
பதிலளிநீக்குமிக்க நன்றி வெங்கட் ஜி! ஆம் செய்தி வாசித்த போது அப்படித்தான் இருந்தது. ஆனால் நம்மால் எதுவும் செய்ய முடியாது! பிரார்த்தனையைத் தவிர!
நீக்குஈழத் தமிழர்களை தாய் தமிழகம் கூட சமமாக மதிக்காத சூழ்நிலையில் ,மொழி புரியாத நாட்டில் வாழ நேர்வது துக்கம் தரக் கூடியதே !
பதிலளிநீக்குத ம +1
சரிதான் ஜி! ஆனால் வாழ வேண்டியய் சூழம் வரும் போது ?!! மதுரைத் தமிழனின் கருத்தைத்தான் பின்பற்ற வேண்டும்! மிக்க நன்றி ஜி!
நீக்குகீதாவின் “அந்நியர்கள்” இடுகைக்கு வந்த சகோதரி இளமதியின் பின்னூட்டத்தில், அவர், ****பிறந்த மண்ணையும், சொந்த பந்தங்களையும், நண்பர்களையும் இழந்து தூர தேசங்களில் மாறுபட்ட மத, மொழி, கலாச்சாரத்தை உடைவர்கள் இடையே வாழ வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுத் தவிக்கும் தமிழினத்தவர்கள் அங்கெல்லாம் “அந்நியர்களாய்” வாழ்வதைப் பற்றி எழுதியிருந்தது கண்களில் நீர் நிறைய வைத்தது.***
பதிலளிநீக்குநாமா விரும்பி என்னைப்போல் அயல்நாடுகளில் வாழுவது வேறு. ஆனால் இதுபோல் வேறு வழியில்லாமல் வாழும் நிலைமை வேறு. என்ன செய்வது? வாழும் நாட்டை நமது நாடாக நினைக்க பழகிக்கொள்ள வேண்டியதுதான்.
மிகவும் சரியே! நண்பரே! தங்கள் கருத்து. மதுரைத் தமிழனும் அதையேதான் சொல்லி உள்ளார்..
நீக்குமிக்க நன்றி நண்பரே!
மனம் முழுவதும் பாரம்
பதிலளிநீக்குபதிவினை படித்ததும்
துயரத்தின் உயரத்தை எட்டிப் பிடித்த பதிவு!
புதுவை வேலு
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.FR
இயக்குனர் சிகரம் கே.பி அவர்களுக்கு கவிதாஞ்சலி!
நீக்குபங்கு பெற வாருங்கள்!
குழலின்னிசை வலைப் பூ பக்கமாய்!
நன்றியுடன்,
புதுவை வேலு
ப்ச்சி.... கவலையான பதிவு...
பதிலளிநீக்குஅவர்களின் இடத்திலிருந்து பார்க்கும் போது... மனம் வலிக்கிறது.
ஆம்! மிக்க நன்றி சகோதரி!தங்கள் கருத்திற்கு!
நீக்குஉன்னி கிருஷ்டினன் மீண்டும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குதமிழ் மணம் 9
ஆம்! நண்பரே! பிரார்த்திப்போம்!
நீக்குபடிக்கவே மனம் பாடாய்ப்படுகிறது
பதிலளிநீக்குஅனுபவித்தவரும் அவர் குடும்பமும்
என்ன பாடுபட்டிருக்கும்
வேலைக்கென பிற தேசம் செல்பவர்களுக்கும்
அகதிகளுக்குமான வித்தியாசம் மதுரைத் தமிழன்
அவர்களால் மிகச் சரியாகப்
புரிந்து கொள்ளப்படவில்லையோ ?
ஆம்! கொள்ளையர்களிடம் இருக்கும் போது மனம் எப்படி இருந்திருக்கும்...கொஞ்சம் நடுக்கமாகத்தான் இருக்கின்றாது. உயிர் தப்பினரே!
நீக்குஇல்ல ரமணி சார்! மதுரைத் தமிழன் அதையும் சரியாகத்தான் புரிந்து கொண்டிருக்கின்றார். அவரது இரண்டாவது கருத்தைப் பாருங்கள்! புரியும்! அதையும் வாசித்துவ் விட்டுத்தான் இடுகையும் இறுதியில் சேர்த்தோம்.
அவர் சொல்லுவது மிகவும் சரியே! அகதிகளின் நிலைமை கஷ்டம்தான். இல்லை என்று சொல்ல வில்லை. ஆனால் அந்தக் கஷ்டத்தை நினைத்து இருந்தால் நம்மால் வாழ்க்கையில் மேலே வர முடியாது இல்லையா? அந்தக் கஷ்டம் ஒரு புறம் இருந்தாலும் னாம் அடுத்தது என்ன என்று எண்ணி மேலே சென்று நம்மை மகிழ்வுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் நேர்மறை எண்ணத்துடன் சொல்லி இருக்கின்றார்.
மிக்க நன்றி ரமணி சார்!
இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன்.
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.in/2015/01/blog-post.html
முடிந்த போது பார்த்து கருத்திடுங்களேன்.