திருப்பத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள சிவன்/பைரவர் கோயில்களுக்கு ஒரே நாளில் 9 கோயில்கள் வரிசைப்படி சென்றதைப் பற்றி இந்த இரு பகுதிகளில் ===> பகுதி 1 <=== ===>பகுதி 2 <=== 1வது கோயில் முதல் 6 வது கோயில் வரை சொல்லியிருந்தேன். அதே போன்று இப்ப இந்த மூன்றாவது பகுதியில் 7, 8, 9 வதாகச் சென்ற கோயில்கள் பற்றி. இடையில் மீண்டும் முதல் கோயில் வரும்!
வரிசையில் 7 - இலுப்பைக் குடி தான்தோன்றீஸ்வரர் கோயில்
6 வதாகச் சென்ற காரைக்குடி சுந்தரேஸ்வரர் கோயிலில் இருந்து 5.2 கிமீ தூரத்தில் உள்ளது. இலுப்பை வனம் நடுவில் சிவன் காட்சி தந்ததால் இலுப்பைக்குடி. 18 சித்தர்களில் ஒருவரான கொங்கண சித்தர் ரசவாதக் கலையில் தேர்ச்சி பெற - மூலிகைகளைக் கொண்டு இரும்பைத் தங்கமாக மாற்றி அதை மேலும் மாற்றுப் பொன்னாக்க ஈஸ்வரனை வழிபட சிவனுக்கு, சித்தர் இப்படி உலக விஷயங்களில் ஈடுபடுவது பிடிக்கவில்லை என்றாலும் அதை அவரே உணர்ந்திடட்டும் என்று, அவர் ஆயிரம் மாற்றாக உயர்த்திட இந்த இலுப்பை வன பைரவரை வேண்டச் சொல்லி அருள் புரிந்திட, பைரவரை வழிபட்டு ஆயிரம் மாற்றுப் பொன்னாக்கினார் என்றும், அது ஜோதி ஸ்வரூபமாகிட அதை சித்தர் எடுக்க முயன்றிட, பூமிக்குள் மறைந்ததாம் அந்த ஜோதி. அதனால்....
இறைவன் - சுயம்பிரகாசேஸ்வரர்/தான்தோன்றீஸ்வரர்; இறைவி - சவுந்தர்ய நாயகி. வபைரவர் இங்கு சொர்ண ஆகர்ஷண பைரவர். இரட்டை நாய் வாகனமாகக் கொண்ட பைரவர் தலம். வலப்புற நாய் அமர்ந்த நிலையில் இடப்புற நாய் நின்ற நிலையில். தேய்பிறை அஷ்டமியில் விசேஷ யாகம் செய்யப்படுகிறது.
வழிபாடுகளை முடித்துக் கொண்டு மாத்தூர் கோயில் சென்றோம்.
கோயில் கோபுரம் தாண்டி உள்ளே செல்லும் போது இரு புறமும் அழகான நந்தவனம். படங்கள் எடுத்திருந்தேன் ஆனால் எங்கு போச்சோ தெரியவில்லை!
இத்தலத்து தீர்த்தம்
***************
8 - மாத்தூர் (முன்பு வீரபாண்டியபுரம்) ஐந்நூற்றீஸ்வரர் கோயில்
ஏழாவது கோயிலான இலுப்பைக்குடி கோயிலில் இருந்து 2.2 கிமீ தூரமே. அருகருகே இருக்கும் இந்த இரு கோயில்களுக்கும் புராணக் கதையில் தொடர்பு உண்டு. கொங்கண சித்தர், இக்கோயிலுக்கு வந்து இங்கு ரசவாதத்தால் ஐந்நூறு தங்க மாத்திரைகள் தயாரிக்கும் போது தண்ணீர் குடிப்பதற்காகத் தன் வேலையை நிறுத்தினார். சிவன் அவர் முன்னில் சாதாரண மானிட ரூபத்தில் வந்து அவரைத் தடுத்தாட்கொள்ள சித்தரும் தெளிந்தார். சிவ தியானத்தில் மூழ்கினார். தங்கத்துக்கு மாற்றுரைத்ததால் இறைவனுக்குக் காரணப் பெயர் ஐந்நூற்றீஸ்வரர்!
இறைவன் - ஐந்நூற்றீஸ்வரர்; இறைவி - பெரியநாயகி; இங்கும் இரட்டை நாய் வாகன பைரவர்
பாண்டியர்கள் காலத்தில் எழுப்பப்பட்ட கோயிலாம். அப்போது வீரபாண்டியபுரம் இப்போது மாத்தூர். அழகான சிற்பங்களையும் தூண்களையும் கொண்ட பெரிய கோயில். 150 வருடங்களாக நகரத்தார் இக்கோயிலைப் பராமரித்து வருகிறார்கள். இப்படத்தில் கோபுரம் தெரிகிறது இல்லையா அதுதான் கோயிலின் கோபுரம். நுழைவுப்பகுதியாக இருந்தது. நகரத்தார் பராமரிக்கையில் இதன் முன் பெரிய மண்டபத்தைக் கட்டியிருக்கிறார்கள் எனவே இதோ கீழே உள்ள படத்தில் இருப்பதுதான் நுழைவு வாயில். இங்கு கோபுரம் இல்லை. பிற்பகுதியில் கோயில் பராமரிப்பு நகரத்தார் கீழ் என்பதால் செட்டிநாட்டுக் கலைவடிவங்களையும் பார்க்கலாம் கோயிலினுள்.
கோயில் வாயில் இதுதான் தற்போது. பெரிய அழகான மண்டபம்.
மண்டபத்தின் மேற்கூரையில் இக்கோயிலின் புராணக் கதையின் படங்கள். கதை மேலே சொல்லியிருக்கிறேன்
இந்த புதிய மண்டபம் தாண்டினால் பண்டைய கோயில் நுழைவு வாயில்
மண்டபத்தின் வழியே செல்லும் போது இடப்புறம் வெளியே உள்ள பெரிய பகுதியில் இப்படி ஒவ்வொரு நட்சத்திரத்திற்குமான மரம் என்று குறிப்பிட்டு வளர்த்திருக்கிறார்கள். இதெல்லாம் இப்போது செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.
மண்டபத்தின் சுவற்றில் இந்தத் தகவல். கேரள சிங்கவள நாடாகிய பிரம்பூர் நாட்டில் மாற்றூரான வீரபாண்டியபுரத்தில், உறையூர், அரும்பாக்கூர், மணலூர், மண்ணூர், கண்ணூர், கருப்பூர், குளத்தூர் - 7 பிரிவைச் சார்ந்த மாற்றூர் கோயில் நகரத்தார்களுக்கு இது மிக முக்கிய முதன்மைத் தலம். இக்கோயிலுக்கு அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் செய்திருக்கிறார்கள்.
கோயிலை விட்டு வெளியே வரும் போது கோயிலின் முன் பகுதி. கிழக்கு நோக்கி விநாயகரும், தெற்கு நோக்கி மாரியம்மனும். இந்த இரு கோயில்களின் முன்பகுதி எடுத்திருந்தேன். காக்கா உஷ்!
கோயிலில் இருந்து இடதுபுறம் திரும்பியதும் நம் ஆட்டோ இருந்த இடத்துக்கு வந்த போது எதிரே இப்படி அழகான செட்டிநாடு வீடு! கொட்டாரம் போன்று!!
மாத்தூர் கோயிலிலேயே 12.30 மணிக்கு மேலாகிவிட்டது. அதன் பின் மாலை மீண்டும், காலையில் சென்ற முதல் கோயிலான திருக்கோட்டியூர் வைரவன்பட்டி திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று பைரவ அஷ்டமி பூஜைக்கு வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்ததால், ஆட்டோக்காரரிடம் திருப்பத்தூர் பேருந்துநிலையத்துக்கு அருகில், தங்கியிருந்த இடத்திற்கு அருகே செட்டிநாட்டு சைவ உணவு கிடைக்கும் ஒரு உணவகத்தில் நிறுத்தச் சொன்னாள் என் தங்கை. மதகுபட்டி ஐயர் ஹோட்டல் முன் எங்களை இறக்கிவிட்டதும், ஆட்டோ நண்பர் தன் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டு வருகிறேன் என்றதும் மீண்டும் மாலை 4.30 மணி அளவில் வரச் சொல்லி அனுப்பிவிட்டு நாங்கள் சாப்பிட்டுவிட்டுத் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றோம்.
*************
மாலை நாலரை மணிக்கு ஆட்டோக்காரர் வந்ததும், அறையை காலி செய்துவிட்டு எங்கள் உடைமைகளுடன் கிளம்பிவிட்டோம். பைரவ அஷ்டமி பூஜைக்கான பூக்கள் போன்ற சாமான்கள் வாங்க திருப்பத்தூர் பேருந்துநிலையம் அருகே உள்ள திருத்தளிநாதர் கோயில் (காலையில் 2வதாகச் சென்றது) முன் உள்ள கடையில் வாங்கிக் கொண்டு மீண்டும் திருமெய்ஞாநபுரீஸ்வரர் கோயில் (காலையில் 1வதாகச் சென்ற கோயில்) சென்று பூஜைக்கான சாமான்களைக் கொடுத்து வழிபாடு செய்து தரிசித்தோம்.
திருமெய்ஞானபுரீஸ்ஸ்வரர் கோயிலில் இருக்கும் யானை அலங்காரத்துடன்
************
கடைசி ஒன்பதாவது கோயில்
9 - பெரிச்சி கோயில் சுகந்தவனேஸ்வரர் கோயில்
தி-வைரவன்பட்டி திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் இருந்து 9 கிமீ தூரம்.
இறைவன் - சுகந்தவனேஸ்வரர் (மிகச் சிறிய மூர்த்தி); இறைவி - சமீபவல்லி அம்பாள்; நவபாஷாண ஸ்ரீ காசி வயிரவர்
இதுதான் நுழைவு வாயில்
திருச்சுற்றில்...தல தீர்த்தமாக அழகான கிணறு உள்ளது. படம் எடுத்திருந்தேன். பழைய ஹார்ட் டிஸ்கிலிருந்து External drive க்கு மாற்றும் போது ஒரு சில படங்கள் விட்டுப் போயிருக்கின்றன
மூலவர் சன்னதி விமானம்
ஒன்று ஒற்றை ஸ்ரீ சனைஸ்வரர் மற்றொன்று நவபாஷாண காசி வயிரவர் சன்னதி
நான் கவனித்த விஷயங்கள் - நகரத்தார் பராமரிக்கும் இக் கோயில்களில் உண்டியல்கள் இல்லை. அர்ச்சகர்கள் நம்மை ஜருகண்டி சொல்வதில்லை. நின்று நிதானமாகத் தரிசிக்க முடிகிறது. கோயில்கள் முழுவதும் சுற்றிப் பார்த்திட எங்களுக்குத்தான் நேரமில்லை என்றாலும் கிடைத்த நேரத்தில் சொல்லப்பட்ட வழிபாடுகளை நல்ல தரிசனத்துடன் செய்ய முடிந்தது.
கடைசி கோயிலைத் தரிசித்துவிட்டு, மதியம் உண்ட அதே உணவகத்தில் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு அன்றைய கோயில் அனுபவங்களைப் பேசிக் கொண்டே பேருந்து நிலையத்திலிருந்து நடக்கும் தூரத்தில் தனியார் பேருந்துகள் நிற்கும் இடம் வந்து நாங்கள் பதிவு செய்திருந்த பேருந்து வந்ததும் ஏறி சென்னைக்கு வந்து சேர்ந்தோம்.
ஒரு வழியாக திருப்பத்தூர் கோயில்கள் பயணத்தை முடித்துவிட்டேன்!
வாசித்தவர்கள், வாசித்துக் கருத்து சொன்ன, சொல்லும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!
------கீதா
என் மீது ஆசைப்படும் நீ பொன்மீது ஆசைப்படாதே என்று அறிவுறுத்தி விட்டாரோ ஈசன்? - கொங்கண சித்தர்.
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம் அதேதான்... ஸ்ரீராம். அந்த சித்தருக்குத் திடீரென்று ரஸவாத ஆசை. நிறைய பொன் ஈட்டும் ஆசை. மெய்ஞானத்தில் ஈடுபட வேண்டியா நீ இதற்கெல்லாம் ஆசைப்படக் கூடாது என்பதுதான்.
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு மரமா? அப்படி ஒன்று இருக்கிறதா? அந்தப் படத்தில் முதலில் அஸ்வினி என்று பார்த்ததும் இரண்டு நாட்களுக்கு முன் பார்த்து நொந்த அஸ்வின்ஸ் படம் நினைவுக்கு வந்து விட்டது!
பதிலளிநீக்குமயிலை கபாலீஸ்வர்ர் கோவில் வெளிப்புறத்தில் உள்ள தோட்டத்தில் அனைத்து நட்சத்திரங்களுக்கும் மரங்கள் உண்டு.
நீக்குஸ்ரீராம் இந்த நட்சத்திரம் மரம் விஷயம் எல்லாம் எனக்கு சுத்தம்! ஹாஹாஹாஹா...அங்கு பார்த்தேன் சுவாரசியமாக இருந்தது. எல்லா நட்சத்திரங்களையும் பிடித்துப்போட்டுடலாம் என்று பார்த்தால் நேரம் ஆகிவிட்டது.... சரி நம்ம மக்களில் சிலருக்கு இதில் ஆர்வம் உண்டு என்பதால் முடிந்ததை படம் எத்தேன் பகிர்ந்திருக்கிறேன். எனக்குமே இது புதுவிஷயம்தான்.
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
திருக்கோஷ்டியூர் என் சித்தப்பா குடும்பத்தின் குலதெய்வம் அமைந்துள்ள கோவில் இருக்கும் ஊர். கோவில் எது என்று தெரியவில்லை.
பதிலளிநீக்குஓ! அப்பாவின் தம்பியா? அப்படி என்றால் அப்பாவுக்கும் அதே கோயில்தானே குலதெய்வமாக இருக்கும் இல்லையோ? இல்லை அம்மாவின் தங்கை கணவரா?
நீக்குகீதா
பாவம் யானைக்கு முதுகில் பளபள ஜரிகை துணியைப்போர்த்தி கசகசவென இருக்க வைத்திருக்கிறார்கள்!!
பதிலளிநீக்குஹாஹாஹா அது சரிகைத் துணி இல்லை. சாட்டின் துணி. அதுக்கு எப்படி இருந்ததோ தெரியலை. பாவம் கழுத்தில் மணிகள் கோர்த்த சங்கிலி வேற மாட்டி விட்டிருக்காங்க பாருங்க பாவம் அதுக்கு உறுத்துமோ என்று தோன்றியது.
நீக்குஎதுக்கு இப்படி அலங்காரம் என்று தோன்றியது. அதுங்க பாட்டுக்கு இருக்கட்டுமேன்னு
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
சிரத்தை எடுத்து எடுத்திருக்கும் படங்கள் அருமை. கோவில் பற்றி விவரம் சொன்ன நீங்கள் அந்த மகுடபதி அய்யர் (பெயரே வித்தியாசமாக இருக்கிறது!) ஹோட்டல் பற்றி கொஞ்சம் சொல்லி இருக்கக் கூடாதோ...!!!
பதிலளிநீக்குகோயில் படங்களைப் பற்றிச் சொன்னதற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஸ்ரீராம் அது மகுடபதி இல்லை - மதகுபட்டி. கண்ணில் டக்கென்று அப்படிப் பட்டிருக்கிறது. நானும் அப்படித்தான் அன்று பார்த்ததும் வாசித்தேன்!!!!!!!
மதகுபட்டி என்பது சிவகங்கையில் இருக்கும் ஊர்.
என் தங்கைக்கு செட்டிநாட்டு உணவு எப்படி இருக்கும் என்று ருசி பார்க்க ஆசை. சோம்பு, பூண்டு இருக்கும் என்று அவளிடம் சொல்லியிருந்தேன் அவள் அதெல்லாம் பரவாயில்லை என்றதால் மதியம் சாப்பாடு ஆர்டர் செய்தோம். முழு இலை போட்டு பரிமாறுகிறார்கள். பழம் வைக்கிறார்கள். கேட்டு கேட்டுத்தான் பரிமாறுகிறார்கள் அதாவது சாதம் அளவு. வத்தக்குழம்பு, தயிர், சேமியா பாயாசம், இதை சின்ன கப்பில் வைத்தார்கள். எனவே வீணாகும் வாய்ப்பு குறைவு. இப்போது எப்படியோ தெரியாது. அங்கு போர்டில் வத்தக் குழம்பு ஸ்பெஷல் என்று போட்டிருந்தது. வத்தக்குழம்பு செம டேஸ்ட். சுண்டைக்காய் வத்தலும் மிதுக்கு வத்தலும் போட்டிருந்தாங்க. ஆனால் அந்த வத்தக்குழம்பு செட்டிநாட்டு ஸ்டைல். தங்கைக்கும் ரொம்பப் பிடித்திருந்தது. (என்னைப் போல் இல்லை. என் தங்கை ருசி ரொம்ப பார்ப்பாள். அவளுக்கு எல்லாம் சரியாக சுவையோடு இருக்க வேண்டும்.). நான் அவளுக்குக் குறிப்பு கொடுத்து அவள் வீட்டில் செய்து பார்த்து அப்படியே வந்தது என்றாள்.
சாம்பார், பொரியல், ஒரு கூட்டு (கூட்டிலும் சோம்பு தாளித்திருந்தாங்க), காரட் பச்சடி, ரசம், அப்பளம் ஜவ்வரிசி வற்றல், பருப்பு மசால் வடை, இரண்டு ஊறுகாய் அதுவும் கேட்டுப் பரிமாறினாங்க....எல்லாமே நன்றாக இருந்தது. என் தங்கைக்கு ரொம்பப் பிடித்திருந்தது...அன்று நன்றாக இருந்தது. அதன் பின் இப்போது எப்படி என்று தெரியாது ஸ்ரீராம்.
மாலை செட்டிநாட்டு சேவை சாப்பிட்டோம். தேங்காய், எலுமிச்சை சேவை ஆர்டர் செய்து சாப்பிட்டோம். தங்கை செட்டிநாட்டு பால் கொழுக்கட்டையும் சாப்பிட்டாள். அவளுக்கு ரொம்பப் பிடித்திருந்தது.
உணவு பற்றி சொல்லி ஒரு பத்தி எழுதியிருந்தேன். முன்னோட்டம் பார்த்ததில் - எல்லாரும் மயங்கிவிழுந்துடுவாங்க பதிவை பார்த்துன்னு எடுத்துவிட்டேன். எப்படியும் நீங்க அல்லது நெல்லை கேப்பார்ன்னு நினைச்சு கருத்துப்பெட்டியில் சொல்லிக்கலாம் என்று எடுத்துவிட்டேன். நெல்லை என்னவோ கேட்கலை. நீங்க கேட்டிட்டீங்க!!! இங்கு கருத்தாகச் சொல்லிவிட்டேன்.
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
என் தங்கை வத்தக்குழம்பு மீண்டும் கேட்டாள் பரிமாறினாங்க.
நீக்குகீதா
விஜயகாந்த் முன்ன மதுரை போகும் போதெல்லாம் இந்த ஹோட்டலில் சாப்பிடுவாராம்!!!! இதைச் சொல்ல விட்டுப் போச்சு.!! அங்கிருந்தவர் சொன்ன தகவல்,
நீக்குகீதா
கோவில் படங்கள் மிக அழகு.
பதிலளிநீக்குபுதிய கோவில்கள் பற்றித் தெரிந்துகொண்டேன்.
தமிழகத்தில்தான் எத்தனை எத்தனை பழைமை வாய்ந்த கோவில்கள் இருக்கின்றன. விவரங்களுக்கு நன்றி
மிக்க நன்றி நெல்லை.
நீக்குஆமாம் நிறைய பழைமையான கோயில்கள் இருக்கின்றன. எனக்குமே இவை எல்லாம் புதியவைதான். இப்ப அங்கு மீண்டும் போனா நல்லாருக்கும்னு தோன்றுகிறதுதான்....எங்க வாய்ப்பு? ம்ம்ம்
மிக்க நன்றி நெல்லை.
கீதா
அவசரமாக முடித்தது போல் உள்ளது. கோபுரங்கள் படம் பரவாயில்ல்லை. விதானம் படம் ரொம்ப சிரமம் கொடுத்திருக்கும். படுத்துக்கொண்டு எடுத்தால்தான் கோணல் மானல் இல்லாமல் எடுக்க முடியும்.
பதிலளிநீக்குஅடுத்த தொடர் பற்றிய அறிவிப்பைக் காணோமே!
hint : விதானம் படம் எடுக்க காமெராவில் frame செட் செய்துவிட்டு கீழே தரையில் காமிராவை வைத்து automatic shutter இல் செட் செய்துவிட்டால் அருமையான படம் கிடைக்கும். ஆட்டோ போகஸ் வேண்டும்.
Jayakumar
அவசரமாக முடித்தது போல் உள்ளது.//
நீக்குஇந்த வரியை நீங்க சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன் அண்ணா!!!!!!! ஹாஹாஹாஹா
பதிவின் கடைசியில் அடைப்புக் குறிக்குள் கொடுத்து எழுதியிருந்தேன். ஜெ கே அண்ணா இப்படிச் சொல்வார் என்று......ஷெட்யூல் செய்யும் போது எடுத்துவிட்டேன்!!!
மாத்தூர் கோயில் கோபுரம் அவ்வளவுதான் அதுவும் பக்கவாட்டில் சென்று எடுத்தால் இவ்வளவுதான் தெரியும் வரும் அண்ணா. முழு கோபுரம் எடுப்பது சிரமம்.
நீங்கள் சொல்லியிருப்பது போல் ஃப்ரேம் செட் செய்துவிட்டு கீழே தரையில் அதுவும் காமராவை சரித்து வைக்க வேண்டும் ....எடுக்க வேண்டும். என் கே௳ராவில் ஆட்டோமேட்டிக் ஷட்டர் இல்லை.... நான் அப்படி தரையில் சரிந்து உட்கார்ந்து அல்லது கருடாழ்வார் ஆஞ்சு வாகனம் போல உட்கார்ந்து கேமராவை கொஞ்சம் டில்ட் பண்ணி 4, 5 தென்னை மரங்கள் மேலே அவற்றின் ஓலைகள் குவிந்து நடுவில் வானம் தெரியுமே அதை எடுத்திருக்கிறேன். பதிவில் முன்பு பகிர்ந்த நினைவு...துளசியின் வீட்டிற்குச் சென்ற போது.
//அடுத்த தொடர் பற்றிய அறிவிப்பைக் காணோமே!//
ஹாஹாஹாஹாஹா....பறவைகள் படங்கள்....காணொளிகள் தொகுக்க வேண்டும். ஈரோட்டிற்குத் தங்கை வீட்டுக்குப் போனப்ப பார்த்தவை தொகுக்க வேண்டும் அதை பகுதிகளாகப் பிரித்துப் போட வேண்டும். நகாசு வேலைகள் இருக்கின்றன அதன் முன்னோட்டம் மட்டும் ஒரு சில பதிவுகளுக்கு முன் கொடுத்தேனே அதுதான். வேலைகள் இருக்கின்றனவே...கொஞ்சம் நேரம் எடுக்கும். பெரும்பாலும் ஈரோட்டில் பார்த்தவை, (சுற்றுலா அல்ல. போன இடத்தில் பார்த்தவை அதுவும் நானாகச் சென்றவை...) மற்றும் பறவைகள்....
என் கேமராவின் சக்திக்கு ஏற்ப எடுத்தவைதான். மிகவும் சாதாரணக் கேமராதானே...
மிக்க நன்றி ஜெ கே அண்ணா
கீதா
hint : விதானம் படம் எடுக்க காமெராவில் frame செட் செய்துவிட்டு கீழே தரையில் காமிராவை வைத்து automatic shutter இல் செட் செய்துவிட்டால் அருமையான படம் கிடைக்கும். ஆட்டோ போகஸ் வேண்டும்.//
நீக்குஎனக்கு ரொம்பப் பிடிக்க்ம் அண்ணா இப்படி எடுப்பது. பல இடங்களில் எடுத்திருக்கிறேன். ஆட்டோ ஃபோக்கஸ் இருக்கு இப்போது எல்லாமே பெரும்பாலும் ஆட்டோ ஃபோக்கஸ்தானே வருது கேமராவோடு..manual உம் இருக்குதான். ஆனால் automatic shutter option இல்லை. நாம் தரையில் உட்கார்ந்து கேமராவை டில்ட் செய்து எடுக்கலாம்...ஆனால் முதலில் எப்படி வருகிறது என்று பார்த்துவிட வேண்டும்...சரித்து வைத்து ஸ்க்ரீனை...
கீதா
கோவில்கள் பயணம் அருமை... இதுவும் ஒரு சாதனை தான்...
பதிலளிநீக்குமிக்க நன்றி டிடி கருத்திற்கு..ஹாஹாஹா சாதனை எதுவும் இல்லை டிடி
நீக்குகீதா
தல வரலாறுகளும், படங்களும் மிகவும் அழகு.
பதிலளிநீக்குமதகுபட்டி ஐயர் உணவகத்தில் நான் சாப்பிட்டு இருக்கிறேன்.
அருகில் மருது சகோதரர்களை தூக்கிலிட்ட. இடம் இருக்குமே...
அதாவது பேருந்து நிலையம் எதிரில்....
கில்லர்ஜி, முதல் வரி கருத்திற்கு மிக்க நன்றி.
நீக்குஆஹா நீங்களும் மதகுபட்டி ஐயர் உணவகத்தில் சாப்பிட்டுருக்கீங்களா...மகிழ்ச்சி. உங்க ஊர் ஏரியாதானே!!
ஆமாம் மருது சகோதரர்கள் தூக்கிலிட்ட இடம் - ஆட்டோக்காரர் சுட்டிக்காட்டிச் சொல்லிக் கேட்டார்...ஆனால் நாம கோயிலுக்குப் பரிகாரம் தரிசனம் என்று போயிருக்கறப்ப இப்படியான விஷயங்கள் வேண்டாமேன்னு என் தங்கை அவரிடம் சொல்லிவிட்டாள் அந்தப் பக்கம் வண்டியை நிறுத்தவும் வேண்டாம்னு...பதிவும் கோயிலைப் பற்றி நல்லது சொல்லி வந்ததால் இதைப் பற்றி சொல்லவில்லை கில்லர்ஜி.
மிக்க நன்றி கில்லர்ஜி
கீதா
கோவில் படங்கள் எல்லாம் அருமை.திருமெய்ஞானபுரீஸ்ஸ்வரர் கோயிலில் போய் இருக்கிறோம். அங்கு ஒரு மரத்தடியில் பெரிய உருண்டை கல் இருந்தது, அதை பற்றியும் எழுதி இருந்தேன். (ஆணின் வீரத்தை காட்ட தூக்க சொல்வார்களே! அந்த இளவட்ட கல் படம் எடுத்தேன்.)
பதிலளிநீக்குமதகுபட்டி ஐயர் ஹோட்டல் பார்த்த நினைவு இல்லை.திருப்பத்தூர் நிறைய தடவை காரில் போய் இருக்கிறோம்.
செட்டிநாட்டு வீடு யானை படங்கள் அருமை.
//நான் கவனித்த விஷயங்கள் - நகரத்தார் பராமரிக்கும் இக் கோயில்களில் உண்டியல்கள் இல்லை. //
உண்டியல் வைத்தால் அறநிலைய துறை உள் நுழைந்து விடும்.
கோவில் படங்கள் எல்லாம் அருமை.//
நீக்குமிக்க நன்றி கோமதிக்கா.
//திருமெய்ஞானபுரீஸ்ஸ்வரர் கோயிலில் போய் இருக்கிறோம். அங்கு ஒரு மரத்தடியில் பெரிய உருண்டை கல் இருந்தது, அதை பற்றியும் எழுதி இருந்தேன். (ஆணின் வீரத்தை காட்ட தூக்க சொல்வார்களே! அந்த இளவட்ட கல் படம் எடுத்தேன்.)//
நான் இந்தப் பதிவு வாசித்த நினைவு இருக்கிறதே. இளவட்ட கல்....நினைவு இருக்கிறது கோமதிக்கா.
மதகுபட்டி ஐயர் ஹோட்டல், திருப்பத்தூர் பேருந்து நிலையத்துக்கு எதிரில். நீங்களும் இக்கோயிலை தரிசித்திருப்பது மகிழ்ச்சி, கோமதிக்கா
.//உண்டியல் வைத்தால் அறநிலைய துறை உள் நுழைந்து விடும்.//
ஹாஹாஹாஹாஹா...கோமதிக்கா சிரித்துவிட்டேன். உண்மைதானே. அந்தந்த ஊர் மக்களே அவர்கள் ஊர் கோயிலை மிக நன்றாகப் பரமாரிக்கறாங்க.
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
ஒவ்வொரு நட்சத்திரத்திற்குமான மரம் ஆத்தி மரத்தை மட்டும் காணோம். மாயவரம் பக்கத்தில் ஒரு கோவிலில் இருந்ததை பதிவு செய்து இருக்கிறேன். ஒரு சாய் கோவிலில் வைத்து இருந்ததையும் பதிவு செய்து இருக்கிறேன்.
பதிலளிநீக்குஆமாம் ஆத்தி மரத்தையும் காணும் அதன் குறுக்கே நேரே இருக்கும் தொட்டியிலும் உள்ள மரத்தையும் காணும். அது என்ன நட்சத்திரம், மரம் என்று தெரியவில்லை.
நீக்கு//மாயவரம் பக்கத்தில் ஒரு கோவிலில் இருந்ததை பதிவு செய்து இருக்கிறேன். ஒரு சாய் கோவிலில் வைத்து இருந்ததையும் பதிவு செய்து இருக்கிறேன்.//
நான் இப்பதிவுகள் பார்க்கலையோ கோமதிக்கா?
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாகத்தான் உள்ளது. நீங்கள் சென்ற அவசரத்திலும் பொறுமையாகவும், நன்றாகவும் படங்கள் எடுத்து ஒவ்வொன்றிக்கும் விளக்கமான விபரங்களை எழுதியுள்ளீர்கள்.
இலுப்பைகுடி கோவிலின் விபரம் நன்றாக உள்ளது. அத்தனையையும் பொன்னாக மாற்றி அதை வைத்துக் கொண்டு அந்த சித்தர் என்ன செய்வார்? ஆயினும், அதிக ஆசை இன்னலில் முடிந்து போகாமல், இறைவனின் தரிசனம் பரிபூரணமாக அவருக்கு கிடைத்துள்ளது. எ. பியில் இந்த மாதிரி ரசவாதம் செய்த கதை ஒன்றை சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்கள் பகிர்ந்து படித்தது நினைவுக்கு வருகிறது.
மாத்தூர் கோவிலின் அமைப்பும், முன்மணடபமும், அதன் விதானத்தின் அழகும், நன்றாக உள்ளது. 27 நட்சத்திரங்களுக்கும் உரிய மரங்கள் படம் அழகாக உள்ளது. இரு மரங்கள் மட்டும் காணவில்லை. அதற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டு விட்டதோ என்னவோ.? அதற்கும் கன்றுகள் கிடைத்தால் அதையும் நட்டு விட்டால் வளர்ந்து விடும்.
கோவில் யானை படமும், மற்ற கோவில்களின் கோபுர படங்களும் நன்றாக உள்ளது.
சாப்பிட்ட உணவு மெனு அருமை. சில உணவகத்தில் மட்டுமே இப்படி. நினைவில் இருக்கும்படியாக அமைந்து விடும். நல்லபடியாக பரிகார கோவில்களை ஒரே நாளில் சுற்றி வந்து பிரார்த்தனை செய்வித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. உங்களால் எங்களுக்கும் அனேக கோவில்கள் தரிசனம், மற்றும் விபரங்கள் கிடைத்தன. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆமாம் கமலாக்கா...இன்னும் நேரம் இருந்திருந்தால் கொஞ்சம் கோயிலின் உட்புறம் எல்லாம் எடுத்திருக்கலாம்தான். இலுப்பைக்குடி/மாத்தூர் கோயில் கதைகள், நாம் உலக விஷயங்களில் ஈடுபடும் போது ஆன்மீகச் சிந்தனை தடுமாறுவதைச் சொல்லும் நல்ல கதை.
நீக்குஆமாம் ஜெகே அண்ணா பகிர்ந்திருந்த கதை நினைவிருக்கிறது கமலாக்கா.
மாத்தூர் கோவிலில் இரு மரங்களைக் காணவில்லை ஒரு வேளை அந்த மரங்கள் பட்டுப் போயிருக்குமோ என்னவோ...வேறு நடுவார்களாக இருக்கலாம் கிடைக்க வேண்டுமே...
ஆமாம் சில உணவகங்களில் உணவு நினைவிருக்கும் அளவு சுவையாக இருக்கும்.
மிக்க நன்றி கமலாக்கா படங்களையும் பதிவையும் ரசித்துச் சொன்ன கருத்துக்கு
கீதா