இந்த இடங்கள் நாங்கள் செல்லவில்லை. ஆனால் இவை எல்லாம் இங்கு எல்லோரும் பார்க்க வேண்டிய இடங்கள் என்று வாசிப்பவர்களுக்கான குறிப்புகள் படங்களாய்
அடுத்த நாள் காலை 8 மணிக்கு எல்லோரும் கிளம்பி தயாராக இருக்க வேண்டும் என்று நடத்துனர் சொன்னதால் தயாரானோம். மூணாறில் பார்த்தே தீர வேண்டும் என்று எல்லோரும் பார்க்க நினைக்கும் இடங்களான மாட்டுபெட்டி அணை, இரவிகுளம் தேசியப் பூங்கா, ஆனைமுடி, குண்டலா, ஆட்டுக்கல் நீர்வீழ்ச்சி, Echo Point – எதிரொலி முனை, டாப் ஸ்டேஷன் – Top Station, டாட்டா தேயிலை அருங்காட்சியகம், சுப்பிரமணியர் கோயில் என்று பல உள்ளன. ஆனால், நாங்கள் வேறு சில அருமையான இடங்களுக்குத்தான் போனோம்.
கே எஸ் ஆர் டி சி பேருந்து நிலையத்திற்கு முன் விளையாட்டு கவுன்சிலின் கட்டிடமும் மைதானமும். (காணொளியில்) அங்கு ஓடும் பயிற்சி செய்யும் பலர். இப்படி, ஒரு மைதானத்தை அங்கு உருவாக்கியிருப்பது மனதிற்கு இனிமையாய் இருந்தது. இல்லையேல் அங்கும் கான்க்ரீட் காடுகள் நிறைந்திருக்கும்.
மலையின் பாதியிலிருந்து அடிவாரம் வரை பச்சைக் கம்பளம் விரித்தாற் போல்
சமீபத்தில் இடப்பட்ட கொச்சி – தனுஷ்கோடி நெடுஞ்சாலையில் அருமையான காட்சிகளைக் காணும் இடங்கள் - View Points – உள்ளன. அங்கிருந்து பார்க்கையில் மலையின் பாதியிலிருந்து அடிவாரம் வரை பச்சைக் கம்பளம் விரித்தாற் போல் அருமையான காட்சிகளைக் கண்டோம்.
அதன் பின் பயணமான வண்டி தங்கையன் குகைக்கு (மலையில் கள்ளன் குகை) அருகில் நின்றது. 70 ஆண்டுகளுக்கு முன் மூணாறில் வாழ்ந்திருந்த தங்கையன் வாழ்ந்த குகை. கள்வனாக்கப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டத் தங்கையன். வீரப்பன், மலையூர் மம்பட்டியான் போல், தங்கையனுக்கும் ஒரு கதை இருந்திருக்கலாம். தங்கையனைத் தொட்டறிந்த இந்தக் குகைக்குத் தெரியும், தங்கையனின் உண்மையான வாழ்க்கை வரலாறு.
குகைக்கு அருகே கொச்சி – தனுஷ்கோடி நெடுஞ்சாலை பணியின் போது ஒரு நிலச்சரிவு நிகழ்ந்து பலரது உயிரும் பலியானது. எப்படியோ அதனருகே இருந்த தங்கையன் குகைக்குச் சேதமேதும் ஏற்படவில்லை. அதனருகே ஒரு டீக்கடை. ரதீஷ் சங்கர் எனும் பெயருடைய ஒரு இளைஞரின் டீக்கடை. மூணாறுக்குக் குடியேறிய தமிழினத்தின் மூன்றாவது தலைமுறை. அருமையாக மலையாளமும் தமிழும் பேசினார். அவரது தாய் பிறந்ததே மூணாறில்தானாம்.
நான் 70 களில் போடியில் ZKM பள்ளியில் பயின்ற போது, துரை விடுதி (முன்பு வெள்ளைக்காரர் ஒருவர் நடத்திவந்த ஒரு விடுதி) அரசு விடுதியில் தங்கி என்னுடன் படித்த சண்முகய்யா, முருகேசன் போன்றவர்கள் மனத்திரையில் தோன்றினார்கள். திருநெல்வேலி வட்டார வழக்குத் தமிழில் பேசும் நல்ல நண்பர்கள். அவர்களது பெற்றோர்கள் மூணாறு எஸ்டேட்களில் பணிபுரிந்தவர்கள். அப்படிப்பட்டவர்கள் எல்லோரும் இங்கேயே தங்கியிருந்திருக்க வேண்டும். இப்போது அதன் விளைவாகத்தான் பதினாயிரக் கணக்கான தமிழ்க்குடிகள் இன்று மூணாறில் இருக்கிறார்கள். அதனால்தான் அங்கிருந்து தமிழினத்தைச் சேர்ந்த ஒரு எம் எல் ஏ நிரந்தரமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
பெரியகானல் நீர்வீழ்ச்சி இடப்புறம் உள்ள படத்தில் அது விழும் பாறை சற்றே தெரிகிறதா? படத்தைப் பெரிது பண்ணிப் பார்த்தால் தெரியும். தள்ளி ஒரு கார் நிற்கிறதே அந்த இடத்தில்......வலப்புறம் இடத்தில் தண்ணீர் கொஞ்சமாக வீழ்வது படத்தின் இடப்புறம் கோடாகத் தெரியும்
தங்கையன் குகையைக் கண்டபின் பெரியகானல் நீர்வீழ்ச்சியைக் கண்டு களித்தோம். கோடையானதால் நீர்வீழ்ச்சியில் தூர நின்று காணுமளவு நீரில்லை. ஆனால், அதன் இடப்புறம் தெளிந்த நீரோடை. சுத்தமான அந்நீர் குடிநீராகப் பயன்படுத்தப்படுகிறது. நாங்களும் அதைக் குப்பிகளில் நிரப்பி எடுத்துக் கொண்டோம்.
ஆனையிரங்கல் அணை
அதன்பின் ஆனையிரங்கல் எனும் பெயருடைய அணையை சென்றடைந்தோம். பார்க்கும் போது கைவிடப்பட்ட ஒரு அணை போல் காட்சியளித்தது. நீரைத் தேக்கி வைத்து படகோட்டும் வசதிகள், மற்றும் பூங்காக்களை அமைத்தால் நல்ல சுற்றுலா மையமாக்க முடிகின்ற இடம்.
சிறிது தூர பயணத்திற்குப் பின் Chirackal Spices எனும் ஒரு நிறுவனத்தின் முன் நின்றது. Spices – மசாலா நறுமணப் பொருட்கள் (ஏலக்காய், கிராம்பு முதலியன) வாங்கலாம் என்று நடத்துனர் சொன்னார்.
அருகே இருந்த ஏலக்காய்த் தோட்டம் என்னை ஈர்த்தது. ஏலச் செடி, பூக்கள், காய்களைக் கண்டிராத நம் நட்புகளுக்குக் காண்பிக்க பல நாட்களாக ஆவலாய், அதற்கான நேரம் வாய்க்காமல் இருந்த எனக்குப் பழம் நழுவி பாலில் விழுந்தது போல் இருந்தது. அதிகம் வீடுகள் இல்லாத நெடுஞ்சாலை என்பதால், ஏலக்காய்களை யாரும் பறிக்காமல் பாதுகாக்க வேலி அமைத்திருந்தார்கள்.
ஏலத்தோட்டம் இப்படித்தான் பெரிய மரங்களை நிழலுக்காகத் தன்னுடன் வளர அனுமதிக்கும்
ஏலத்தோட்டத்தை களை எடுத்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஏலம் பூக்கும் போது எப்போதும் பூச்சரம் வேருக்கு அருகிலிருந்து மேல் நோக்கி நீண்டு வரும்
ஏலத்தோட்டத்தை களை எடுத்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஏலம் பூக்கும் போது எப்போதும் பூச்சரம் வேருக்கு அருகிலிருந்து மேல் நோக்கி நீண்டு வரும்
ஏலத்தோட்டம் இப்படித்தான் பெரிய மரங்களை நிழலுக்காகத் தன்னுடன் வளர அனுமதிக்கும், ஏலத்தோட்டத்தை களை எடுத்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். (காணொளியில் நன்றாகத் தெரியும்) ஏலம் பூக்கும் போது எப்போதும் பூச்சரம் வேருக்கு அருகிலிருந்து மேல் நோக்கி நீண்டு வரும். அதிலுள்ள பூக்கள் காயாகி மாறுவதைப் பார்க்கிறீர்கள், இங்கு படத்தில், காணொளியிலும் தெரியும். காயின் நுனியில் பூவின் பாகம் தெரிகிறதா? முதிர்ந்த காயைப் பறித்து வெயிலிலும் அதன் பின் பரண் கட்டி அடியில் தீமூட்டிக் காய வைத்தும் நாம் உபயோகிக்கும் ஏலக்காய் வடிவில் ஆக்கித்தான் ஏல விவசாயிகள் விற்பார்கள்.
அதன் பின் பூப்பாறை வழியாக சாந்தாம்பாறையை அடைந்து அங்கு மதிய உணவு உண்டோம். அதன் பின் வண்டி சதுரங்கப்பாறை எனும் இடத்தை அடைந்தது. காற்றாலைகள் நிறைந்த ஓரிடம்.
சதுரங்கப்பாறை இடத்திலிருந்து பார்த்தால் கீழே தேவாரம் எனுமிடம்
தூரத்தில் நான் பிறந்த ராசிங்கபுரத்திற்குக் கிழக்கே உள்ள மல்லிங்கேஸ்வரர் குன்று.
அங்கிருந்து பார்த்தால் கீழே தேவாரம் எனுமிடம். மதிகெட்டான்மலை. தூரத்தில் நான் பிறந்த ராசிங்கபுரத்திற்குக் கிழக்கே உள்ள மல்லிங்கேஸ்வரர் குன்று. அருமையான காட்சி. அதுதான் சதுரங்கப்பாறை View Point. அங்கிருந்து உயர்ந்த ஒரு இடத்திற்குச் செல்ல ஜீப் இருக்கிறது. ஒருவருக்கு ரூ 200. சிலர் அங்கு போனார்கள். நான் அங்கேயே நின்று நான் பிறந்த மண்ணை ஏக்கத்துடன் பார்த்துப் பூரிப்படைந்து கொண்டிருந்தேன்.
பிறகு வண்டி சாந்தாம்பாறையிலிருந்து சேனாபதி, ராஜகுமாரி, ராஜாக்காடு வழியாகப் பயணமானது. அந்தப் பெயர்களைப் பாருங்கள்! அரசர், அரசி, தளபதி போன்றோர்களின் பெயரைக் குறிக்கும் இடங்கள். அதற்கும் வரலாறு இருக்க வேண்டும்.
பொன்முடி தொங்கு பாலம்
தொங்கு பாலத்தின் கீழே பாறைகள் நிறைந்த இடங்கள். தூரத்தில் தெரியும் பொன்முடி அணையிலிருந்து கசியும் நீர்
தொங்கு பாலத்தின் கீழே பாறைகள் நிறைந்த இடங்கள். தூரத்தில் தெரியும் பொன்முடி அணையிலிருந்து கசியும் நீர்
பின், வண்டி பொன்முடி தொங்கு பாலத்தின் அருகே நின்றது. பாலத்தில் வாகனங்களுக்கு அனுமதியில்லை. 50 பேருக்கு மேல் பாலத்தில் நடக்கவும் அனுமதி இல்லை. தொங்கு பாலத்தின் கீழே பாறைகள் நிறைந்த இடங்கள். தூரத்தில் தெரியும் பொன்முடி அணையிலிருந்து கசியும் நீர். காண்பதற்கரிய காட்சி.
அணையை ஒட்டி செங்குத்தான, ஆபத்தான சரிவு
அதன் பின் பொன்முடி அணையை அடைந்தோம். மூணாறிலிருந்து 25 கிமீ தூரத்தில் இருக்கிறது. அணையை ஒட்டி செங்குத்தான, ஆபத்தான சரிவு. பொன்முடி அணை, 1963ஆம் ஆண்டில், கேரளாவின் மிக நீளமான ஆறாக விளங்கும் பெரியார் ஆற்றின் துணை ஆறான பன்னியார் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு நீர்மின் திட்டம். பெரியார் ஆற்று பள்ளத்தாக்கில் மூணாறு அருகே உள்ளது. படகுச் சவாரி செய்வதற்கான இடம் கொஞ்சம் தள்ளி இருப்பதால் அதற்குத் தனியாக ஜீப்பில் தான் செல்ல வேண்டும். நாங்கள் சென்ற சமயம் கோடைகாலம் என்பதால் அணையில் தண்ணீர் வரத்தும் குறைவாக இருந்ததால் சுற்றுலா பயணிகளைக் கவரும் படகுச் சவாரி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
அருமையான காட்சிகள். இயற்கை அன்னை நமக்குக் காண்பிக்கும் அதிசயங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். தூரத்திலிருந்து அணைக்குக் கீழே இரு புறமும் அடுக்கிய கற்களுக்கு இடையே முளைத்த செடிகளைப் பார்த்த போது இதுவரை கண்டிராத ஓர் அழகு. மூடுபனி அந்த மலைகளையும் அடிவாரத்தையும் மெதுவாக மூடுவது கண்கொள்ளாக் காட்சி. (இப்பகுதியை காணொளியில் முழுவதும் நன்றாகப் பார்க்கலாம்)
சுற்றுலா முடிந்து நிலம்பூர் நோக்கிப் பயணம் - நடுவில் நடத்துனர்
பொன்முடி அணையையுடன் எங்கள் சுற்றுலா இனிதே நிறைவுற்றது. இந்த மலைகளின் மீது படர்ந்திருந்த பசுமையைப் போன்று பசுமை மாறா நினைவுகளைச் சுமந்து கொண்டு, ஆடிப்பாடி நாங்களும், எங்களைச் சுமந்து கொண்டு KSRTC பேருந்தும் நிலம்பூர் நோக்கிப் பயணமானது. அதிகாலை 3 மணிக்கு அதே நிலம்பூர் பேருந்து நிலையத்தை அடைந்து வீடு நோக்கிப் பயணமானோம். நன்றி! வணக்கம்!
https://youtu.be/zI1pFGcP1ps
நேரம் இருந்தால், முடிந்தால் பாருங்கள். 13:36 நிமிடங்கள். பதிவில் சொல்லப்பட்டிருக்கும் இடங்களின் காட்சிகள் காணொளிகளாக
நேரம் இருந்தால், முடிந்தால் பாருங்கள். 13:36 நிமிடங்கள். பதிவில் சொல்லப்பட்டிருக்கும் இடங்களின் காட்சிகள் காணொளிகளாக
------துளசிதரன்
நீங்கள் செல்லா விட்டாலும், ஆர்வமுள்ளவர்களுக்காக நீங்கள் சொல்லும் குறிப்புகளுக்கு ஆஹா...
பதிலளிநீக்குஆம் அங்கு பார்க்க வேண்டிய இடங்களைச் சொல்லாமல் இருந்தால் சரி வராதே. எல்லோரும் பார்க்க வேண்டிய இடங்கள் அங்கு ஏராளமாக உள்ளன. அங்கெல்லாம் நாம் சென்றால் ட்ராஃபிக் பிரச்சனை வரும் நாங்கள் சென்ற வண்டி பெரிய வண்டி கே எஸ் ஆர் டி சி... இல்லையா ட்ராஃபிக்கில் சிக்கிக் கொண்டால் கடினம். அதனால் அவற்றைத் தவிர்த்து இப்படியான இடங்களுக்கு அழைத்துப் போனார்கள்.
நீக்குஉங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்
துளசிதரன்
மலைப்படுகைகளின் படங்கள் வெகு ழகு. [ மலைச்சாரலில் இளம் பூங்குயில் எனும் பாடல் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை] என்ன அழகான காட்சிகள்.. பசுமை.. கண்ணை நிறைக்கிறது.
பதிலளிநீக்குஆமாம். மிக அழகான இடங்கள். பசுமை என்றாலே மனதைக் கவருமே. ஓ உங்களுக்கு இந்தப் பாடல் நினைவுக்கு வந்ததா? எனக்கு அந்த நேரத்தில் பாடத் தோன்றிய பாடல் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா. சரத்பாபு ஷோபாவுடன் அந்த ஜீப்பில் மலைப்பாதையில் போகின்ற அந்தக்காட்சி அந்த நேரத்தில் நினைவுக்கு வந்தது. அந்தப் பாட்டு இங்குப் பொருந்துமா இல்லையா என்பதை விட அந்தப் பாட்டு இப்படியான மலைப்பாதையில் யாத்திரை என்பதால் டக்கென்று நினைவுக்கு வந்தது.
நீக்குஅழகான பாடலை நினைவு கொண்டு காட்சிகளை ரசித்துக் கொடுத்திருக்கும் கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்
துளசிதரன்
நீங்கள் பிறந்த ஊர் அங்கேதானா? எத்தனை காலம் அந்த ஊரில் இருந்தீர்கள்? அங்கு ஊருக்குள் ஒருநடை சென்றுவர நேரமில்லையா? முடியவில்லையா? ஏலக்காய் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குஆம், ஸ்ரீராம் நான் பிறந்த ஊர் ராசிங்கபுரம், அந்த சதுரங்கப்பாறைக்குக் கீழே தெரியும் தேவாரத்திலிருந்து ஒரு 10 கிமீ தூரத்தில்தான் இருக்கிறது. அங்கு 82 ஆம் வருடம் வரை அங்குதான் இருந்தேன் இடையிடையே கேரளத்திற்கு வந்து போய் வருவதுண்டு என்றாலும், 78 வரை அந்த ஊரிலேயே பிறந்தது முதல் அங்கிருந்து 10 கிமீ தொலைவில் இருந்த பள்ளியில் படித்து வளர்ந்தேன். ஆனால் இப்போது அங்கு செல்லும் போது, நாம் கண்ட காட்சிகள் இல்லை. நாம் கண்ட மனிதர்கள் இல்லை. ஏராளமான மாற்றங்கள். நமக்கென்னவோ அந்த பழமையான இடம், மனிதர்கள் எல்லாரும் பசுமையாக மனதில் இருப்பதால் அங்கு செல்லும் போது மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது. இருந்தாலும் வரும் போது ஒரு சின்ன வேதனை அந்தப் பழைய காட்சிகள், மனிதர்கள் இல்லையே என்ற வேதனை வருகிறதுதான்.
நீக்குநாங்கள் சென்றது குழு இல்லையா? அது தமிழ்நாடு. நாங்கல் நின்று பார்த்த இடம் கேரளா. அங்கிருந்து அப்படித் தெரிந்தது என்றாலும் சுற்றியல்லவா செல்ல வேண்டும். இது சுற்றுலா குழு எனவே செல்ல முடியவில்லை.
ஏலக்காய் பற்றிய தகவல்கள் உங்களுக்கு சுவாரசியமாய் இருந்தது மகிழ்ச்சி.
கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்
துளசிதரன்
தங்கையன் நல்லவனா கெட்டவனா என்கிற சர்ச்சை அங்கு இன்னமும் இருக்கும் என்று நினைக்கிறேன். வீரப்பன் கூட்டாளா?
பதிலளிநீக்குதங்கையனின் காலகட்டம் 1950களில்...வீரப்பனின் காலகட்டம் வேறு இல்லையா. இருவரின் இடங்களும் வேறு. தங்கையன் மூணாறுக்குக் கீழே என்று சொல்லும் போது போடிநாயக்கனூர், தேனி, பெரியகுளம், இந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று எனக்குத்தோன்றுகிறது. தங்கையன் நல்லவரா கெட்டவரா என்று எனக்குத் தோன்றியதே அல்லாமல் தங்கையனுக்குப் பிறகு பலர் வந்துவிட்டதால் இங்கு பெரிதாகப் பிரச்சனை இருப்பதாகத் தெரியவில்லை.
நீக்குகருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.
துளசிதரன்
படங்களும், பயண விவரணங்களும் சொன்ன விதம் அருமை.
பதிலளிநீக்குகாணொளி பிறகு காண்கிறேன் நன்றி
நேரம் கிடைக்கும் போது பாருங்கள் கில்லர்ஜி.
நீக்குகருத்திற்கு மிக்க நன்றி கில்லர்ஜி.
துளசிதரன்
அழகான படங்கள்..
பதிலளிநீக்குரசனையான குறிப்புகள்..
வெளியுலகம் அதிகம் அறிந்திராத அற்புதம்!...
வாழ்க நலம்...
அழகான இடங்கள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன. அவற்றைக் காணும் போது அதன் அழகு நம் கண்களில்தானே இருக்கிறது.. அதைச் சொல்லும் போது அதன் அழகு இன்னும் கூடிப் பிறக்கிறது. வெளியுலகிற்கும் தெரியவருகிறது.
நீக்குஉங்கள் கருத்திற்கு மிக்க நன்றி துரைசெல்வராஜு சார்
துளசிதரன்
ஏலக்காய் பற்றிய தகவல்கள் அருமை..
பதிலளிநீக்குஏலக்காய் பற்றிய தகவல்கள் பற்றிய உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி துரை செல்வராஜு சார்
நீக்குதுளசிதரன்
ஏலக்காய் செய்டி, பூக்களின் சரம் எல்லாம் நம் நட்புகள் அதிகம் கண்டிருந்திருக்கமாட்டார்கள் என்பதால்தான் அதை இப்போது வாய்ப்பு கிடைத்ததும் படங்கள் காணொளிகள் எடுத்துக்க் கொடுத்திருக்கிறேன்.
நீக்குநன்றி துரைசெல்வராஜு சார்
துளசிதரன்
அற்புதமான காட்சிகள் (படங்கள்)
பதிலளிநீக்குவிளக்கங்கள் அருமை..
படங்களை பதிவை ரசித்ததற்கு மிக்க நன்றி டிடி.
நீக்குதுளசிதரன்
இது கும்பக்கரை தங்கையாவா? திரைப்படமும் வந்த நினைவு.
பதிலளிநீக்குஆம் நெல்லை ஒரு வேளை கும்பக்கரை தங்கராசுவாக இருக்க வாய்ப்பு உள்ளது. அந்தப் படத்திலும் பிரபு கிட்டத்தட்ட அது போல் இருக்கும் ஒரு கதாபாத்திரம் சம்பவங்கள் எல்லாம். கும்ப்பக்கரை, பெரியகுளம் எனும் இடத்திற்கு அருகே உள்ள இடம். பெரியகுளம், தேனி Bபோடிநாயக்கனூர் எல்லாம் மூணாறுக்குக் கீழே உள்ள இடங்கள்தான். அதனால் கும்பக்கரை தங்கையா பெரும்பாலும் தங்கையனாக இருக்க வாய்ப்பு. அவரும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். ஆனால் படத்தில் அவரை கைது செய்து கொண்டு போவதுப் போல் காட்டியிருப்பார்கள். அதனால் ஒரு சந்தேகம்.இருந்தாலும் அந்தப் பகுதியில் ஒரு தங்கையாதான் இருக்க வாய்ப்புண்டு...கும்பக்காய் தங்கையாவாகக் கூட இருக்கலாம். வேறு யாருக்கேனும் தெரிந்தால் உறுதியாகச் சொல்லலாம். நமக்கு அதைப் பற்றி உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
நீக்குகருத்திற்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன்
துளசிதரன்
கும்பக்காய் தங்கையாவாகக் கூட இருக்கலாம். - கும்பக்கரை தங்கையனாகக் கூட இருக்கலாம். தட்டச்சுப்பிழை.
நீக்குகீதா
காட்சிகள் அனைத்தும் அழகு. நீங்கள் செல்லா இடங்கள் பற்றியும் இங்கே சொல்லி இருப்பது சிறப்பு. ஒவ்வொரு படமும் கவனைத்தை ஈர்க்கிறது. தங்கையன் குகை... இப்படியான பகுதிகளுக்கான கதைகளும் இருக்க வேண்டும். நிச்சயம் மூணார் செல்ல வேண்டும் என்று இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது தோன்றுகிறது. வாய்ப்பு அமைய வேண்டும். காணொளியில் உங்கள் குரல் மிக மெதுவாகக் கேட்கிறது. பிறகு தான் head phone உதவியுடன் கேட்க வேண்டும்.
பதிலளிநீக்குஆமாம் வெங்கட்ஜி. காட்சிகள் எல்லாம் மிக அழகாக இருக்கும். வாருங்கள் மூணாறுக்கு. பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளமாக இருக்கின்றன. நீங்கள் இமயமலைக்கே போனவர். தென்பகுதியிலுள்ள இப்படியான காட்சிகளைக் காண்பது வித்தியாசமாக சிறப்பாக இருக்கும். உங்கள் அனுபவங்களையும் எழுதலாம். வரும் போது சொல்லுங்கள்.
நீக்குஆமாம் இம்முறை குரல் எடிட்டிங்கில் குறைந்துவிட்டதாக அதுவும் சில இடங்களில் என்று தெரிகிறது. அடுத்த முறை அதையும் கவனத்தில் கொள்கிறோம்.
ஆமாம் கதைகள் இருக்கும்தான், தங்கையன் குகைக்கு. நெல்லை சொல்லியிருக்கும் ப்டம் கூடக் கிட்டத்த்ட்ட என்றாலும் இதே கதைதானா இதே ந்பர்தானா என்ற் சந்தேகமும் வருகிறது.
உங்களுக்கும் விரைவில் வாய்ப்பு கிடைத்திடட்டும்.
பயணக்காதலராகிய உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி வெங்கட்ஜி
துளசிதரன்
மூணார் பயண கட்டுரை நன்று. கொஞ்சம் நீளம் அதிகம். இரண்டு அல்லது மூன்று பகுதிகளாக வெளியிட்டிருக்கலாம். காணொளி விடியோவும் ஸ்லைடு ஷோவும் கலந்து காட்டியது சரிப்படவில்லை. இரண்டு காணொளி ஆக்கி இருக்கலாம்.
பதிலளிநீக்குகொஞ்சம் திருத்தங்கள் தேவையான பயண கட்டுரை.
வாஸ்தவம்தான். கொஞ்சம் நீண்டுவிட்டதுதான். ஆனால் இதை இன்னும் பிரித்துப் போட்டால் எங்களுக்கு யதார்த்த சிரமங்கள் நிறைய உண்டு சார். கீதாதான் வலைத்தளத்தை மேனேஜ் செய்வது எல்லாம். நான் பதிவுகள் படங்கள் காணொளிகள் அனுப்பிட அவர் டைப் செய்து எல்லாம் எடிட் செய்து மெர்ஜ் செய்து என்னோடு கலந்துரையாடி சந்தேகங்கள் தெளிவு செய்து இப்படி எங்கள் இருவரது நேரமும் ஒத்து வந்து என்று யதார்த்தப் பிரச்சனைகள் நிறைய இருக்கின்றன, கொஞ்சம் சிரமமாகிவிடும் என்பதால் இரண்டாகப் போட்டுவிட்டோம். படங்களும் நிறைய பகிர்ந்திருப்பதால் நீளம் தோன்றியிருக்கலாம்,
நீக்குபடங்கள் எல்லாம் என் கையிலுள்ள மொபைலில் என்னால் முடிந்த அளவு எடுபப்வைதான். அதன் பின் கீதாவின் சிஸ்டத்தில் எடிட்டிங்க். அது நாம் லிமிட்டட் அளவு செய்யும் ஆன்லைன் வீடியோகட்டரில் செய்வதுதான் அதுவுமே 4 வீடியோக்கள் செய்ததும் ப்ரீமியம் கட்டச் சொல்லும். எனவே மறுநாள் அதாவது 24 மணி நேரம் காத்திருந்து அதன் பின் மீண்டும் அதில் சென்று எடிட்டிங்க் வாய்ஸ்ச் கோர்த்தல் என்று யதார்த்த பிரச்சனைகள். பெரிய அடோப் போன்ற கட்டணம் கட்டும் சாஃப்ட்வேர் எதுவும் நாங்கள் பயன்படுத்துவது இல்லை. நமக்குக் கிடைக்கும் சாதாரணமானவற்றில்தான் செய்கிறோம், சார். எனவே குறைபாடுகள் இருக்கலாம். இருக்கத்தான் செய்யும்.
ஒவ்வொரு முறையும் எங்களால் முடிந்த அளவு நிவர்த்தி செய்யப் பிரயத்தனம் செய்கிறோம்.
நீங்கள் சொல்வதை எல்லாம் நாங்கள் நோட் செய்து கொள்கிறோம்.
சுட்டிக்காட்டியதற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜெயகுமார் சந்திரசேகரன் சார்
துளசிதரன்
பல படங்கள் மிகச் சிறப்பாக வந்திருக்கின்றன. பிரயாணத்தை நன்கு எழுதியிருக்கின்றீர்கள்.
பதிலளிநீக்குஉணவைப் பற்றியும் எழுதியிருக்கலாம். பேருந்து நன்றாகவே இருக்கிறது (குளிர் காலம் என்றால் நன்றாகவே இருக்கும்).
நீங்கள் ஸ்பைஸஸ் வாங்கினீர்களா? விலை ரொம்ப அதிகமாக இருந்ததோ? ஏலச்செடி விளக்கமும் நன்றாக இருந்தது.
ஆம் நீங்கள் சொன்னது போல் உணவைப் பற்றிச் சொல்லவில்லைதான்.
நீக்குஉணவகங்கள் அங்கு ஏராளமாக இருக்கின்றனதான். ஆனால் காலை நேரத்தில் வடையும் டீயும் தான் கிடைத்தது. ஒரு வேளை 9 மணிக்குத்தான் திறப்பார்களாக இருக்கலாம். ஆனால் இரவு நேரத்தில் 10 மணி வரை கடைகள் திறந்து உணவு கிடைத்தன. சைவ உணவகங்கள் நிறைய இருக்கின்றன. அசைவ ஹோட்டல்களும் உண்டு கேரளா என்றால் இவை நிறைய. இரண்டும் இருக்கும் உணவகங்கள் பெரும்பான்மை. எனவே கேரளாவுக்கு வந்தால் ஆரியபவன், சரவணபவன் போன்ற ஹோட்டல்களுக்குச் செல்வதுதான் நல்லது. அங்குதான் சைவம் மட்டும்.
நெல்லைத்தமிழன், ஸ்பைஸஸ் என்பது அந்த இடத்தில் கொஞ்சம் விலை கூடுதல்தான். பிறகு ஸ்பைஸஸ் என்பதில் ஏலக்காய் எல்லாம் நம் உறவுகள் வரும் போது கொண்டு தருவதுண்டு. அதனால் ஏலக்காய் வாங்கவில்லை. அங்கு டீத்தூள் மட்டும் வாங்கினோம். ஆனால் மற்றுள்ளவர்கல் பலவிதமான ஸ்பைஸஸ் வாங்கினார்கள். எல்லாமே விலை கூடுதல் என்றாலும்.
ஏலச்செடி விளக்கம் பற்றிய கருத்திற்கும் மற்ற எல்லா கருத்துகளுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்
துளசிதரன்
பொதுவா காணொளி சிறியதாக இருந்தால் சிறப்பாக இருக்கும் (அதாவது பிரித்து மூன்று பகுதிகளாக இருந்திருக்கலாம்).
பதிலளிநீக்குவீட்டிலே இருப்பதற்குப் பதில், இந்த மாதிரி அவ்வப்போது சிறிய சுற்றுலா சென்றுவருவது உறவினைப் பலப்படுத்தும், வீட்டில் உள்ளவர்களுக்கும் கொஞ்சம் ரிலாக்சேஷன் கிடைக்கும்.
ஒரு பகுதி நீளம் என்பதால் இரண்டாக்கினோம். மூன்று என்பது இன்னும் நாட்கள் நீண்டுவிடுமோ பதிவு வருவதற்கு என்று இரண்டாக்கிவிட்டோம். நான் எழுதி காணொளிகள் எடுத்திருந்தாலும் அதை எல்லாம் டைப் செய்து காணொளிகள் எல்லாம் நான் அனுப்பும் குரலுக்கு ஏற்ப எடிட் செய்து கோர்த்து என்னுடன் சந்தேகங்கள் கேட்டு சரி செய்து போடுவது கீதா என்பதால் நாட்கள் அதிகமாகிவிடுமே என்று சுருக்கிவிட்டோம். அதனால் இரண்டாக்கிவிட்டோம்.
நீக்குநான் ரிட்டையர் ஆன பிறகும் காலேஜில் வேலை செய்கிறேன். விடுமுறையில் ஆமாம் இப்படி சிறிய சுற்றுலாக்கள் செல்வது மிக நல்லதுதான். மனதிற்கும் ரிலாக்சேஷந்தான். இப்போதெல்லாம் இப்படிக் கிடைக்கும் வாய்ப்பை மிஸ் செய்யாமல் இருக்க வேண்டும் அந்த மாதிரிதான்
நன்றி நெல்லைத் தமிழன்
துளசிதரன்
ஏதேனும் விலங்குகளைப் பார்த்தீர்களா? தேயிலை வாங்கினீர்களா (நினைவுக்காக). அங்கு வெறும் மாமிச உணவுகள் (பொரித்த மீன் போன்று) மாத்திரம்தான் கிடைத்ததா?
பதிலளிநீக்குஅங்கு விலங்குகள் எதுவும் பார்க்க முடியவில்லை. பெரும்பாலும் யானைக்குளத்தில் யானைகள் பார்க்கலாம் ஆனால் மாலைதான் 6 மணிக்கு மேல் பார்க்கலாம் என்றார்கள் ஆனால் அது ரொம்ப தாமதமாகிவிடும். கிளம்பியிருக்கவில்லை என்றால் மூணாறு போகும் வழியில் அருமையான தேயிலைத்தோட்டக் காட்சிகளைக் கண்டிருக்க முடியாது. காணொளியில் போட்டிருந்தேனே முதல் காணொளியில். பார்த்திருப்பீர்கள்,
பதிலளிநீக்குஉணவு பற்றி முந்தைய கருத்தில் சொல்லிவிட்டேன். நாங்கள் சென்றது அசைவ உணவகங்கள் தான், ஆனால் சைவ உணவகங்களும் இருக்கின்றன.
கருத்திற்கு மிக்க நன்றி நெல்லைத் தமிழன்
துளசிதரன்
அங்கு வெறும் மாமிச உணவுகள் (பொரித்த மீன் போன்று) மாத்திரம்தான் கிடைத்ததா?//
நீக்குஇல்லை நெல்லைத்தமிழன், சைவமும் இருந்தன. ஆனால் என்னவென்றால் மீன் தவிர்த்து மற்ற சைவ உணவுகளைத் தருவார்கள். மாமிசம் சாப்பிடாதவர்களுக்கு ஒரே ப்ளேட், ஒரே ஸ்பூன் என்று எடுக்கும் போது கொஞ்சம் நமக்கு சிரமமாக இருக்கும். கேரளத்தவர்களுக்கு அது பிரச்சனை இல்லை. அசைவம் சாப்பிடாதவர்கள் இப்படியான ஹோட்டல்களைத் தவிர்த்து வெஜ் மட்டும் இரூக்கும் ஹோட்டல்களுக்குச் செல்வது ரொம்ப நல்லது. இல்லை என்றால் நமக்குக் கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும்.
துளசிதரன்
வளைவுப்படம் மிக அருமையாக இருக்கிறது. தனுஸ்கோடி என்பது இலங்கைப்பக்கமாகத்தானே இருக்கிறது?
பதிலளிநீக்குபெயர்கள் வித்தியாசமாக அழகாக இருக்கு. மாட்டுப்பட்டி அணை, தங்கைய குளம்...
வளைவுப்படம் மிக அருமையாக இருக்கிறது.//
நீக்குமிக்க நன்றி அதிரா.
தனுஷ்கோடி தமிழ்நாட்டைச் சேர்ந்தது. இராமேஸ்வரம் தாண்டி அத்தீவின் முனையில் இருக்கிறது. அங்கிருந்து இலங்கையின் தலைமன்னார் பகுதி மிக அருகில்தான் கடல்மார்கம். இந்தச் சாலை கேரளத்தின் கொச்சியிலிருந்து, மூணாறு, - இதுவரை கேரளா - அதன் பின் தமிழ்நாடு போடிநாயக்கனூர், தேனி, மதுரை வழியாக இராமேஸ்வரம் சென்று தனுஷ்கோடி வரை செல்கிறதுதான் இந்த நெடுஞ்சாலை.
நீங்கள் கூகுளில் மேப் போட்டுப் பார்த்தால் தெரிந்துவிடும். குறுக்கில் நேராகச்செல்லும் மேற்கிலிருந்து கிழக்காக.
மாட்டுப்ப(பெ)ட்டி எனும் பெயர் தமிழோடு தொடர்புடைய பெயர்தான். தங்கையன் குகை அதுவும் அப்படியே.
கருத்திற்கு மிக்க நன்றி அதிரா
துளசிதரன்
ஆவ்வ்வ் நீங்கள் படிச்ச ஸ்கூலோ? பார்த்ததும் பழைய நினைவுகள் வந்து கவலையாக இருக்குமே. எனக்கும் படிச்ச இடங்களைத் திரும்பப் பார்க்க விருப்பமில்லை, ஏனெனில் சரியான கவலையாக இருக்கும், காலம் கடகடவென உருண்டோடிவிட்டதே என....
பதிலளிநீக்குஆம், நான் படித்த ஸ்கூல்தான். போடிநாயக்கனூர் எனும் இடத்தில். ஆமாம் வேதனைவரத்தான் செய்தது. ஸ்ரீராமிற்கு சொல்லியிருக்கும் அதே பதில்தான். அந்தப் பழைய நினைவுகள் மனதில் பசுமையாக இருப்பதால் என்னதான் அந்த மண்ணை மிதிக்குப்போது ஒரு சந்தோஷம் வந்தாலும் அந்த மண்ணின் இப்போதைய மாற்றங்களை மனம் ஏற்பதில்லை. ஆமாம், வருடங்கள் உருண்டோடிவிட்டனவே என்ற வருத்தம் வரும்தான்.
நீக்குகருத்திற்கு மிக்க நன்றி அதிரா
துளசிதரன்
ஏலக்காயோ அது, மஞ்சள், இஞ்சிபோல இருக்கு இலைகள். அழகாக இருக்கு.
பதிலளிநீக்குஹா ஹா ஹா மதிகெட்டான், தேவாரம்,,, ஆர் இப்பூடிப் பெயர் வச்சினமோ ஹா ஹா ஹா..
ஆமாம் ஏலக்காய் தான் இலைகள் அப்படி இருந்தாலும் இச்செடி பெரிதாக வளரும்.
நீக்குஹா ஹா ஹா மதிகெட்டான், தேவாரம்,,, ஆர் இப்பூடிப் பெயர் வச்சினமோ ஹா ஹா ஹா..//
உங்கள் கருத்தை வாசித்ததும் சிரிப்பு வந்துவிட்டது. ஆமாம் தேவாரம் (தமிழ்நாட்டில் வால்டேர் ஐச தேவாரம் சுருக்கமாகத் தேவாரம் எனும் பெயருடைய மக்கள் பலருக்கும் பரிச்சயமான போலீஸ் ஐஜியாக இருந்து ரிட்டையர் ஆனவர். அவரும், மூணாறின் அருகில் உள்ள தேவிகுளத்தைச் சேர்ந்தவர்தான்) திருவாசகம் என்பது போலும் நேர்மறையாக வைக்கப்பட்டதாக இருக்கும்.
மதிகெட்டான் மலை - இப்படியான பல பெயர்கள் சிரிப்பை வரவழைக்கும் அல்லது இப்படி எப்படி இப்பெயர் வந்திருக்கும் என்று யோசிக்க வைக்கும் பெயர்கள் நிறைய இருக்கின்றன. ஒரு வேளை முன்பு இப்பகுதிக் காடுகள் மிகவும் அடர்த்தியாக இருந்து அங்கு சென்றவர்களின் மதி கலக்கம் அடைந்து வழி தவறிப் போயிருக்கலாம் அதனால் இப்படியான பெயர் வந்திருக்குமோ?
கருத்திற்கு மிக்க நன்றி அதிரா
துளசிதரன்
தொங்குபால இடங்கள் மிக அழகு. அத்தனை படங்களும்... இயற்கைக் காட்சிகள்தானே.. அழகோ அழகு.
பதிலளிநீக்குகாணொளியையும் கண்டேன்.
தொங்குபாலம் சுற்றிலும் இயற்கைக்காட்சிகள், பாறைகள் தூரத்தில் தெரியும் பொன்முடி டாம் எல்லாம் மிக அருமையான இடங்கள்.
நீக்குபொன்முடி என்றால் திருவனந்தபுரத்தில் இருக்கும் பொன்முடி மலைவாசஸ்தலம் தான் டக்கென்று நினைவுக்கு வரும் அதுதான் பொன்முடி. ஆனால் இடுக்கியிலும் (மூணாறு இடுக்கி மாவட்டம்) மூணாறில் இப்படி இப்பெயருடன் அணை இருப்பது தெரியவந்தது. இருக்கிறது என்று.
அருமையான இடங்கள். கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடங்கள்.
கருத்திற்கும், காணொளியும் கண்டதற்கு மிக்க நன்றி அதிரா
துளசிதரன்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்கள் அனைத்தும் பிரமாதமாக அமைந்துள்ளது. மூணாறு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் என பட்டியலிட்டு தாங்கள் தந்துள்ள படங்கள், இடங்களின் பெயர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.
தாங்கள் சென்ற இடங்களின் தொகுப்பையும், இயற்கை வனப்புடைய படங்களையும் கண்டு ரசித்தேன்.
ஏலக்காய் செடிகள், காய்கள் என அதை விபரமாக சொன்ன தையும் படித்து தெரிந்து கொண்டேன்.
நல்ல விபரமாக நீங்கள் பதிவை தந்ததில் உங்களுடனேயே நாங்களும் பயணித்த ஒரு மகிழ்வை தந்தது பதிவு.
அதுவும், இப்படி நீங்கள் சொல்லி அதன்படி சகோதரி கீதாரெங்கன் அவர்கள் எழுதி தொகுப்பது மிகவும் சிரமமாக இருப்பினும், அங்கெல்லாம் செல்ல முடியாத என்னைப் போன்றவர்களுக்கு பதிவுடனேயே கற்பனையில் பயணித்த திருப்தி வருகிறது. இதற்காக உங்களுக்கும், சகோதரி கீதா ரெங்கன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
காணொளி பிறகு கண்டிப்பாக பார்த்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆமாம், மூணாறில் நிறைய இடங்கள் இருக்கின்றன பார்த்து மகிழ. இன்னும் கூட சில இடங்கள் மலையேற்றத்திற்கு என்று இருக்கின்றன. இயற்கைக் காட்சிகளுடன் அத்தனையும் பார்க்க வேண்டிய இடங்கள்.
நீக்கு//நல்ல விபரமாக நீங்கள் பதிவை தந்ததில் உங்களுடனேயே நாங்களும் பயணித்த ஒரு மகிழ்வை தந்தது பதிவு.//
மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்
நீங்களும் சென்று வர முடியுமான இடங்கள் இருக்கின்றன சகோதரி. உங்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கட்டும்.
மெதுவாகப் பாருங்கள் காணொளியை சமயம் கிடைக்கும் போது.
உங்கள் விரிவான கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்
துளசிதரன்
கமலாக்கா நீங்கள் இப்படிச் சொல்லும் போது சிரமமாவது ஒன்றாவது, நீங்கலாம் பார்த்து மகிழ்வீங்கன்னு நிறைய போட்டுவிட்டால் போச்சு!
நீக்குமிக்க நன்றி கமலாக்கா
கீதா
படங்கள் அனைத்தும் அருமை. அந்த "பொன்முடி தொங்கு பாலம்" மிகவும் அழகு.
பதிலளிநீக்குஆமாம் ஆழகான இடம். உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நாஞ்சில் சிவா
நீக்குதுளசிதரன்
படங்கள், செய்திகள் எல்லாம் அருமை.
பதிலளிநீக்குகாணொளி பார்த்தேன்.
வந்து பார்த்து ரசித்து கருத்தும் சொன்னதற்கு மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு
நீக்குதுளசிதரன்
கொடுத்து வைச்சிருக்கீங்க. எப்படியான அழகுள்ள இடங்களுக்கு அபூர்வமான இடங்களுக்குப் போயிட்டு வந்திருக்கீங்க. படங்களைப் பார்க்கப் பார்க்க மனம் பரவசம் அடைந்தது. விபரங்களுக்கும் நன்றி. ஏலக்காய்ச் செடிகளை இந்தப் படத்தின் மூலம் தான் பார்க்கிறேன்.
பதிலளிநீக்குநட்புகள் ஏலக்காய்ச் செடிகளைப் பார்த்திருப்பது அபூர்வம் என்பதால்தான் பகிர்ந்தேன். அதைக் குறிப்பிட்டுச் சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
நீக்குலேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக என்ற வசனம் போல் நீங்கள் தாமதமாக வந்தாலும் என் பயணப் பதிவுகளையும் மற்ற எல்லாப் பதிவுகளையும் வாசித்து கருத்து சொன்னதும் மிக்க மகிழ்ச்சி தருகிறது.
மிக்க நன்றி சகோதரி கீதா சாம்பசிவம்
துளசிதரன்