செவ்வாய், 14 மார்ச், 2023

சில்லு சில்லாய் - 7 - மாய வலைத் தொடர்பு உலகம்

 

என்னிடம் தொடர்பு எண்ணாக இருந்த என் தூரத்து நட்பு!!!!  (தூரத்து உறவு என்பது போலான பொருள்!!ஹிஹிஹிஹி) எப்போதேனும் உதவிக்கு அழைப்பதுண்டு. அப்படி ஓர் உதவிக்காக அழைத்தேன். இணைப்பு கிடைத்ததும்,

“ஹலோ”…. 

ஆ!!! ஆண் குரல். எனக்குத் தயக்கம். அமுதாவின் குரல் மாறிடுச்சோ அவள் கணவனாக இருக்குமோ என்றால் அவரது குரலும் பரிச்சயம்தான்…… தயக்கத்துடனேயே

“ஹலோ….நான்…….”......”. அமுதா இருக்காங்களா?”

“ஹலோ உங்களுக்கு யாரு வேணும்..” பேசியது ஆண் குரல்.

அமுதா

“அப்படில்லாம் யாரும் இல்லை.  நீங்க யாரு?”

நான் அழைத்த எண் சரியே. குழப்பம்…...இருந்தாலும்….

“ஓ! ஸாரி. தப்பா கூப்பிட்டுட்டேனு நினைக்கிறேன்...” என்று சொல்லி நான் இணைப்பைத் துண்டித்தேன்.

நான் ஒரு வேளை எண்ணைத் தவறாக அடித்துவிட்டேனோ? இல்லையே, அமுதா பெயரைத்தானே அழுத்தினேன். ஒரு வேளை அடுத்திருந்த என் தங்கை மகனின் எண்ணை  அழுத்திவிட்டோமோ…அவன் ஆங்கிலத்தில்தான் தொடங்குவான். அவனுக்கு என் குரல், எண் எல்லாம் தெரியும்.

சந்தேகத்தில் என் அலைபேசியிலிருந்து சென்ற அழைப்புகளையும் பார்த்தேன் சரியாகவே இருந்தது. அமுதாவின் கணவரை அழைக்கலாம் என்று அவரது எண்ணை எடுத்த போது, என் அலைபேசிக்கு அழைப்பு வந்தது. பார்த்தால் அமுதா. இப்போது அமுதாவாக இருக்கும் என்று பச்சையை அழுத்தினேன்.

“ஹலோ…..அமு…..

“நீங்க யாருனு கேட்டேன்...சொல்லாம வைச்சுட்டீங்க மீண்டும் அதே ஆண் குரல், எனக்கு சந்தேகம். ஒருவேளை அமுதாவின் சகோதரன் யாராவது வந்துருக்காங்களோ.  ஏனென்றால் அவள் கணவர், குழந்தைகள் எல்லோரது குரலும் நன்றாகத் தெரியும். அவர்களின் எல்லா அலைபேசி எண்களும் என்னிடம் உண்டு.

“ஹலோ நீங்க அமுதான்னு யாரும் இல்லைனு சொல்லிட்டீங்கல்ல.  அப்புறம் எதுக்கு நான் யாருனு சொல்லணும்?”

“நீங்க கூப்டீங்க. அப்ப நீங்க யாருனு சொல்லணும்ல?”

“அதான் நான் யாரு பேசறேன்னு சொல்லிட்டுத்தானே கேட்டேன்…..என்ன விளையாடறீங்களா? அமுதாவோட ரிலேட்டிவா நீங்க? எதுக்குத் திரும்ப கூப்பிட்டு பேசுறீங்க?

“நீங்க யாரு எங்க இருக்கீங்கனு சொல்லணும்?”

“ஹலோ மிஸ்டர், என்ன மிரட்டலா? நீங்க சொல்லுங்க நீங்க அமுதாவுக்கு யாருன்னு. அவங்க நம்பர்ல நீங்க பேசிக்கிட்டுருக்கீங்க...நீங்க யாருனு சொல்லுங்க.. முதல்ல.” காட்டமானேன்.

“ஐ யாம் செந்தமிழ்!!!!!!...சென்னை. இப்ப நீங்க சொல்லுங்க நீங்க யாருனு எங்கருக்கீங்கனு”.  இப்போது ஆங்கிலத்தில்.

செந்தமிழ்! ஆங்கிலத்தில் பேசியது! எனக்குக் கொஞ்சம் விளையாடிப் பார்க்கலாமோ என்ற எண்ணம் வந்தது.   

ஸாரி. மிஸ்டர் செந்தமிழ்! ஐ வோன்ட். அமுதா இருந்தா கொடுங்க….இல்லைனா கட் பண்ணுங்க” நானும் ஆங்கிலத்தில் பேசினேன்.

இணைப்பைத் துண்டித்தேன். எனக்குக் குழப்பம் ஒரு வேளை அவள் பையன்கள் விளையாடுறாங்களா? அப்படியான பையன்கள் இல்லையே…இல்லைனா இது தப்பாச்சே….என்று மீண்டும் அவள் கணவனின் எண்ணை எடுக்க முனைந்த போது அமுதா என்ற அதே எண்ணிலிருந்து அழைப்பு.

இந்த முறை சரியாக இருக்குமோ? உடனே அழுத்தினேன்….. மீண்டும் அதே ஆண்குரல், இந்த முறை தமிழில்…

“ஹலோ என்ன? நீங்க கூப்பிட்டுட்டு எதுவும் சொல்லாம கட் பண்ணுறீங்க. நான் செந்தமிழ்! நீங்க இருக்கற இடத்துக்குப் பக்கத்துல உள்ள கம்பெனிலதான் வேலை செய்யறேன். உங்களுக்கு யாருங்க வேணும்? நீங்க எதுவுமே சொல்லாம …..”

நான் இணைப்பைத் துண்டித்தேன். எனக்குக் கிலி. “நீங்க இருக்கற இடத்துக்குப் பக்கத்துல உள்ள கம்பெனிலதான் வேலை செய்யறேன்…” இந்த வரி என்னை ஜெர்க் ஆக்கியது. என்னை எப்படி அவனுக்குத் தெரியும்? என் நம்பர் எப்படி அவனிடம்….அதுவும் அமுதா எண்ணில்…..என்று பயம்.

இணையத்தில் https://www.whoseno.com ல் அமுதாவின் எண்ணை போட்டுப் பார்த்தேன். ஸ்பாம் எண் என்று வந்தது. பதிவு செய்யப்பட்ட எண் என்றால் இந்தச் சுட்டியில் 99% சரியாக இருக்கும். சில எண்கள் மட்டும் பெயர் இருக்காது.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த போதே அந்த எண்ணிலிருந்து தொடர்ந்து அழைப்புகள். சிறிது நேரம் கழித்து, அந்த அழைப்புகள் நின்று விடவே, அமுதாவின் கணவரைத் தொடர்பு கொண்டேன். விஷயத்தைச் சொன்னேன்.

“இல்லையேம்மா, அமுதா நம்பர் அதேதான்மா. அமுதா வேலைக்குப் போயிருக்கா. ஃபோனை எடுத்துட்டுப் போகலை. நான் வீட்டுலதான் இருக்கேன். இதோ எடுத்துப் பார்க்கறேன்” என்று ஃபோனை எடுத்துப் பார்த்துவிட்டு, “உங்ககிட்டருந்து எந்த அழைப்பும் வரலையே”

“இப்ப நான் கட் பண்ணுறேன். நீங்க அமுதா நம்பர்லருந்து கூப்பிடுங்க”

அழைத்தார். அமுதா என்றே அழைப்பு வந்தது. எடுத்தேன். ஆனால் ஆஆஆஆ!!! அதே செந்தமிழ்! கடவுளே! பயத்தில் இணைப்பைத் துண்டித்து, அந்த எண்ணை ப்ளாக் செய்துவிட்டு, அமுதாவின் கணவனை அழைத்தேன்.

“அம்மா இப்ப அமுதா நம்பர்லருந்து உங்களைக் கூப்பிட்டேனே…..ரெண்டு முறை. நீங்க எடுக்கலையேம்மா. என்னாச்சும்மா?” அவருக்கு வியப்பு.

நான் விஷயத்தைச் சொன்னேன். இணையச் சுட்டி சொன்னதையும் மீண்டும் சொன்னேன். அவருக்கும் கிலி பிடித்தது. அமுதாவின் எண் Pre-paid. எண். அந்த இணைப்பின் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளச் சொல்லி, என் விஷயத்தையும் அமுதாவிடம் சொல்லச் சொல்லி இணைப்பைத் துண்டித்தேன்.

இது நடந்து 2 வருடங்கள் மேல் இருக்கும். இது எப்படி என்ற குழப்பம் எனக்கு இன்னும் தீர்ந்தபாடில்லை. எனக்குப் பயமும் போகவில்லை. என்ன சொல்ல?

மாய வலைத் தொடர்பு உலகம்!


......கீதா


31 கருத்துகள்:

  1. இப்படி இணைய குழப்பங்கள் நிறைய நிகழ்கிறது.

    சர்வர் பிரச்சனைகூட இருக்கலாம்.
    பலகோடி இணைப்புகள் பெருகி விட்டதும் காரணம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கில்லர்ஜி.

      //சர்வர் பிரச்சனைகூட இருக்கலாம்.//
      ஓ அப்படியும் இருக்குமோ....

      //பலகோடி இணைப்புகள் பெருகி விட்டதும் காரணம்தான்.//

      எனக்கும் இந்தக் காரணம் தோன்றியது கில்லர்ஜி....

      மிக்க நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
  2. எனக்கும் இந்தமாதிரி அனுபவம் உண்டு. ஆனால் தொடர் அழைப்புகள் இல்லை. பெண் என்பதால் அந்த வீணாப்போனவன் திரும்பத் திரும்ப அழைத்தான்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா ஆமாம் இருக்கலாம் நெல்லை. பெண் ன்றதுனால இருக்கலாம்....

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  3. வணக்கம் சகோதரி

    இந்த மாதிரி இணைய தொடர்புகள் தினமும் வரத்தான் செய்கிறது.. நான் என ஃபோனில் எனக்கு சம்பந்தம் இல்லாத எண் என்றால், அதை எடுக்கவே மாட்டேன். நீங்கள் சமாளித்த விதம் சிறப்பானது. அந்த ஃபோன் காலை நீக்குவது எப்படியென்ற விபரங்களை தெரிந்து கொண்டும், மேலும் சம்பந்தபட்டவரிடம் தைரியமாக பேசியும் சமாளித்து இருக்கிறீர்கள்.

    தமிழுக்கு அமுதென்று பேர். இந்த செந்தமிழுக்கு அபாயம் என்ற பேர் போலும். :)))

    முன்பு பல வருடங்களுக்கு முன் இப்படித்தான் எங்கள் கைப்பேசியில், ஒரு ஆண் குரலும், பெண் குரலும்(பையன் அம்மா போலும்) மாற்றி, மாற்றி கால் செய்து அவர்களது ஏதோ ஒரு உறவைச் சொல்லி மிரட்டலான மிரட்டல். நாங்கள் அவர்களில்லை எனப்பலமுறை (பல நாட்கள்) சொல்லியும் தினமும் போராட்டம். அவர்கள் நம்பருக்கு பைத்தியம் என்றே பெயர் வைத்து விட்டோம்.:))) அப்போது இந்த மாதிரி நம்பரை ப்ளாக் செய்யும் வசதியில்லை. பிறகு எங்களுக்கு நட்பு மூலமாக தெரிந்த ஒரு காவல்துறையினரின் பெயரைச் சொன்னவுடன்தான் அவர்கள் அழைப்பு நின்றது. இப்படியும் சில மிரட்டல்கள். தகவல் தொடர்பில் வசதி இருப்பதை போல அவஸ்தகளும் உள்ளது போலும்.

    நீங்கள் சொல்வது போல் மாய வலைத் தொடர்பு உலகம்! பகிர்வுக்கு நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலாக்கா....நானும் தெரியாத நம்பர் என்றால் எடுக்கவே மாட்டேன். ஆனால் இது அப்படியான அழைப்பு இல்லை. தெரிந்த நம்பர். ஆனால் ஆள் மாறாட்டம்.

      //முன்பு பல வருடங்களுக்கு முன் இப்படித்தான் எங்கள் கைப்பேசியில், ஒரு ஆண் குரலும், பெண் குரலும்(பையன் அம்மா போலும்) மாற்றி, மாற்றி கால் செய்து அவர்களது ஏதோ ஒரு உறவைச் சொல்லி மிரட்டலான மிரட்டல். நாங்கள் அவர்களில்லை எனப்பலமுறை (பல நாட்கள்) சொல்லியும் தினமும் போராட்டம். //

      இப்படியும் வருவதுண்டு கமலாக்கா...தொல்லைதான்...

      ஒரு வேளை உங்கள் நம்பர் முன்பு வேறு யாருடைய நம்பராக இருந்திருக்கும் அந்த நபர் அவர்களுக்கு உறவினராக இருக்க வாய்ப்புண்டு. அவர்கள் அந்த உறவினரின் நம்பர் மாறியிருப்பது அறியாமல் இதே நம்பரை அழைச்சிருக்காங்களாக இருக்கும் ஆனால் அந்த நம்பர் இப்போது உங்கள் கையில்....இப்படி இருக்குமோன்னு சந்தேகம். இது லான்ட் லைன் நம்பரில் நடப்பது ரொம்ப சகஜம்

      தமிழுக்கு அமுதென்று பேர். இந்த செந்தமிழுக்கு அபாயம் என்ற பேர் போலும். :)))//

      ஹாஹாஹாஹா...

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
    2. பொதுவாக லேடீஸ், அடுத்தவங்களுக்கு வந்த callஐ அட்டென்ட் பண்ணி அரை மணி பேசுவாங்களே.. இந்தமாதிரி call வந்தா ie decent calls விடமாட்டாங்களே.. க ஹ எடுக்கமாட்டேன்றாங்க

      நீக்கு
    3. பொதுவாக லேடீஸ், அடுத்தவங்களுக்கு வந்த callஐ அட்டென்ட் பண்ணி அரை மணி பேசுவாங்களே//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......சரி இனிமே நீங்க கூப்பிடப்ப....பாத்துக்கிடுகேன்!!!!!!!!!!!!!!!!! ஹாஹாஹாஹா

      //இந்தமாதிரி call வந்தா ie decent calls விடமாட்டாங்களே//

      மேலே மேலே பாருங்க...ஹிஹிஹிஹி

      //.. க ஹ எடுக்கமாட்டேன்றாங்க//

      ??????????????????????//

      சிரித்துவிட்டேன் நெல்லை...முடியலைப்பா...

      கீதா

      நீக்கு
    4. வணக்கம் சகோதரரே

      உறவோ, நட்போ தெரிந்த நம்பரா இருந்தால் எல்லோரும் எடுத்துப்பேசுவது ஒன்றும் ஆச்சரியமான விஷயமில்லையே ... தெரியாத நம்பர்தான் பிரச்சனையே.. ஆனால் அப்போதைக்கு இப்போது இந்த மாதிரி தவறாள நம்பரை கண்டு கொள்வதிலும், அடிக்கடி தொந்தரவு தருபவர்களின் நம்பரை ப்ளாக் செய்யவும் வசதிகள் வந்துள்ளன.

      முன்பு லேண்ட் லைன் நம்பர்களின் கால்கள் எப்படி பிரச்சனைகளை சந்தித்துள்ளது என்பது அவ்வளவாக தெரியாது. அப்போது ஹலோ மை.... ராங் நம்பர் என்ற பாடலை ரேடியோவில் கேட்கக்கூட தடை உத்தரவுகள் வரும் குடும்பத்தில் நான் வளர்ந்திருக்கிறேன். ஹா ஹா ஹா. அப்படியிருக்கும் போது மணிக்கணக்கில் எப்படி பேசுவது? தங்கள் கருத்துக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  4. இனிமேல் :-

    "திருக்குறளில் ஒருமுறை பயன்படுத்திய இரன்டு எழுத்துக்களின் திருக்குறளை சொல்லு.. பிறகு பேசலாம்..."

    செந்தமிழ் திருந்தி விடுவான்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா நல்ல தெக்கினிக்கி டிடி....இனி இப்படிச் சொல்லிட்டா போச்சு ஆனா செந்தமிழ் வரமாட்டான்...வேறு யாராச்சும்!!

      மிக்க நன்றி டிடி

      கீதா

      நீக்கு
  5. இது என்ன ஒரு பக்கக் கதை போல் இருக்கிறதே. பெயர்கள் எல்லாம் ஒரிஜினல் இல்லை. நடந்தது நிஜமா?

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ!! ஜெகே அண்ணா ஒரு பக்கக் கதை போல இருக்கா...ஆ! ஸ்ரீராமுக்கு நான் என்ன பதில் சொல்லப் போகிறேன்....மாட்டிக்கப் போகிறேன். .நான் கதையாக எழுதத்தான் நினைத்தேன்...ஏன் அனுபவம் கூடக் கதையாகாதா...சுஜாதா எழுதியது போல்....ஆனால் இது கதை போல இருக்கான்னு ஒரு குழப்பம். தட்டிக் கொட்டவில்லை. அப்படியே வைத்திருந்தென்....நான் கதைன்னு எபி க்கு அனுப்பி அப்புறம் அங்கு இதெல்லாம் கதையான்னு நம்ம நட்புக் கூட்டம் கேட்டுவிட்டால்.....சொல்லிடுவாங்களோன்னு இங்கு இப்ப போட்டுவிட்டேன்...

      அப்போதைக்கு இப்போதே ஸாரி சொல்லிவிட்டேன் ஸ்ரீராமே!!! ஹாஹாஹா

      செந்தமிழ் ஒரிஜினல் பெயர்....

      மிக்க நன்றி ஜெகே அண்ணா

      கீதா

      நீக்கு
    2. ஹா..  ஹா..  ஹா...  எந்த ஒரு விஷயமாய் இருந்தாலும் அதற்கொரு தீர்வு உண்டு இல்லையா?

      நீக்கு
    3. ஓ அப்ப கொஞ்சம் தட்டிக் கொட்டி அனுபிருக்கலாமோ ஸ்ரீராம்....அப்படினா பார்க்கிறேன் வேறு ரெண்டு இருக்கு...

      கீதா

      நீக்கு
  6. அதெப்படி அந்த போனில் செந்தமிழ் பேசப்போச்சு?  அதைக் கண்டுபிடிக்க வேண்டாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் ஆச்சரியம் ஸ்ரீராம்.....அது என்னவோ இப்பல்லாம் இந்த ப்ரி பெய்ட் நம்பர்கள் முன்னர் யாரிடமோ இருக்கும்....அவங்க சிம் மாற்றும் போது இந்த நம்பர் வேறு ஒரு ப்ரி பெய்டுக்குப் போகுமாமே....அது கணினியில் சரியாகப் பதிவேறியிருக்காதோ என்னவோ....அப்படியும் ஒருவர் சொன்னார்....கண்டுபிடிக்கும் முன் நிலைமை வேறு மாதிரி ஆகிடுச்சே....இங்கு சொல்ல முடியாதே,,,

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  7. அதேபோல அவர் ஹஸ்பெண்டை போன் பனஞ்ச சொன்னீங்க சரி, அவரை வேற நம்பருக்கு அழைக்கச் சொல்லி இருக்கலாமே....  அல்லது அவர்தான் விளையாடினாரோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரை வேறு நம்பருக்கு அழைக்கச் சொன்னேன் அதாவது அவர் உறவினர் யாருக்கேனும்....அங்கு நம்பர் போகவே இல்லையாம்....அதைச் சொல்ல விட்டுப் போச்சு...அது அப்புறம் என்ன பிரச்சனைனு கேட்பதற்குள் நிலைமை வேறுமாதிரி போக....

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  8. நடந்து ரெண்டு வருஷமாச்சு..  அமுதா அப்புறம் பேசவே இல்லையா?  இப்போ உண்மையில் என்னதான் நடந்தது என்று நாங்க எப்படிதான் தெரிஞ்சுக்கறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் தொடர்பு எல்லைக்கு வெளியே போகும் நிலை வந்துவிட்டதே.. ஸ்ரீராம்.....

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. ஸ்ரீராம் அதென்னவோ அது ப்ரி பெய்ட் சிம் களில் இப்படி சிம் மாற்றும் போது இப்படி ஏற்படுவதுண்டுன்னு கேள்விப்பட்டேன். தெரியவில்லை ஸ்ரீராம். அவர்கள் வீட்டில் சிம் மாற்றிக் கொண்டே இருப்பாங்க.....இந்த சிம் ஒரு ஆறு மாசமா மாறாமல்தான் இருந்தது. அதன் பின் தொடர்பு இல்லாமல் போச்சு அதனால அவங்க என்ன ஆக்ஷன் எடுத்தாங்கன்னு தெரியல என் யூகம் சிம் மாத்திட்டாங்கன்னு.

      கீதா

      நீக்கு
  9. மாய வலைத்தொடர்பு தலைப்பு நன்றாக இருக்கிறது கீதா.
    நீங்கள் சொன்ன செய்தி மாதிரி போன் வரும் ஆனால் வேறு மொழியில் பேசுவார்கள்
    .தெரிந்த நம்பரிலிருந்து இப்படி பேசுவது இப்போதுதான் கேள்வி படுகிறேன்.

    யாரைத்தான் நம்புவதோ ! என்று இருக்கிறது. நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலம் போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதிக்கா, வேறு மொழியில் அழைப்புகள் வரும். நமக்கு ரொம்பத் தெரிந்தவங்க போலப் பேசுவாங்க....நான் சில வருடங்களாகவே தெரியாத நம்பர் என்றால் எடுப்பதே இல்லை. அது ப்ரி பெய்ட் சிம் களில் இப்படி சிம் மாற்றும் போது இப்படி ஏற்படுவதுண்டுன்னு கேள்விப்பட்டேன்.

      ஆமாம் கோமதிக்கா ரொம்பக் கவனமாக இருக்க வேண்டும்தான்...

      மிக்க நன்றி கோமதிக்கா.

      கீதா

      நீக்கு
  10. உங்கள் நட்பின் எண் clone செய்யப்பட்டு இருக்கலாம். அவர் கவனமாக இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ!!! வெங்கட்ஜி, இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதா....ஓ கடவுளே! இப்போதுதான் தெரிகிறது. cloning இதுலயுமா?!!!

      மிக்க மிக்க நன்றி வெங்கட்ஜி! இத்தகவல் மிகவும் உதவும்.

      கீதா

      நீக்கு
  11. முதலில் படிக்கும்போதும் எதோ "கிரைம்" நாவல் எழுத தொடங்கிவிட்டீர்களோ என்று பயங்கர சஸ்பென்சா இருந்துச்சு.... அந்த அளவிற்கு தொடக்கமே சும்மா "பக்" "பக்"ன்னு இருந்துச்சு.... சந்தேகமே இல்லாம இது "கிரைம்" நாவலேதான் என்று என்ட்ற மனசும் சத்தியமா நம்ப தொடங்கிச்சு...

    படிக்க.. படிக்க... நாவலோட முடிவு எப்படி இருக்கப்போகிறதோ என்று மனசுக்குள்ள ஒரே திக்... திக்...

    "ஹார்ட் பீட்" அப்படியே ரேஸ் குதிரையாட்டம் வேறு எகிறியது....

    முடிவில்....

    இது உங்கள் வாழ்வில் நடந்த ரியல் ஸ்டோரி என அறிந்ததும் சப்பென்று ஆகி விட்டது!

    பின் குறிப்பு :- "கிரைம்" நாவல் எழுதுவதற்கான சகல திறமைகளும் உங்களிடம் இருப்பதுபோல எனக்கு தோன்றுகிறதே சிஸ்டர்!!.... முயற்சிக்கலாமே!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாஞ்சில் சிவா, உங்கள் கருத்து பார்த்து சத்தியமா நானும் ரொம்ப உற்சாகமாகிவிட்டேன்!!! எனக்கு Crime, Suspense, Investigation கதைகள் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். எழுதும் ஆவலும் உண்டு. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் உங்களின் பின் குறிப்புப் படி ஒன்று கொஞ்சம் புதிய தொழில்நுட்பங்கள் வைத்துத் தொடங்கி பிள்ளையார் சுழி போட்டும் வைத்திருக்கிறேன் குறிப்புகளுடன். எழுதுவதற்கான அமைதியான சூழல் இல்லை என்பதோடு என் குறைபாடும் கலந்து தடைகள்.

      ஆனால் என்னுடைய ஒரு மிகப் பெரிய குறை, டக்கென்று எழுத முடியாதது. அதனாலேயே பல பதிவுகள் கதைகள் அப்படியே இருக்கின்றன. என் குறைபாட்டிலிருந்து நான் தான் மீள வேண்டும்.

      உங்கள் கருத்திற்கும், நீங்கள் சொல்லியிருக்கும் பின் குறிப்பிற்கும் மிக்க நன்றி மனமார்ந்த நன்றி, நாஞ்சில் சிவா.

      கீதா

      நீக்கு
  12. ஐயோ உங்கள் அனுபவத்தை படித்தால் பகீரென்கிறதே கீதா. 
      

    பதிலளிநீக்கு
  13. ஐயோ உங்கள் அனுபவத்தை படித்தால் பகீரென்கிறதே கீதா. 
      

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பானுக்கா, அப்போது கூடத் தெரியவில்லை. ஆனால் இப்ப வெங்கட்ஜி யின் கருத்து பார்த்ததும்....கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கிறது.

      மிக்க நன்றி பானுக்கா

      கீதா

      நீக்கு