வியாழன், 18 நவம்பர், 2021

பெங்களூர் – நாகர்கோவில் (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 1

 

சாது பொங்கினால்……காடும் ஊரும் கொள்ளாது - 1

 

பெங்களூரிலிருந்து என் தாயக ஊராகிய நாகர்கோவிலுக்கு/திருவண்பரிசாரத்திற்குப் பயணம். கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் சென்று கடைசியில் திருப்பதிசாரத்திற்கு என்று திட்டமிட்டப் பயணம். 

பொதுவாகப் பயணத்தின் தொடக்கத்திலிருந்து நம் அனுபவங்களைச் சொல்வோம்.  ஆனால் நான் பயணத்தின் கடைசிப் பகுதியிலிருந்து தொடங்குகிறேன். அதாவது திருவண்பரிசாரத்து அனுபவங்களிலிருந்து குறிப்பாகச் சாது பொங்கிய கதையிலிருந்து தொடங்குகிறேன்.

சாது என்பதற்கு அப்பாவி என்று ஒரு பொருள் உண்டு. அப்பாவியாக இருக்கும் ஒருவர் திடீரென்று ஒரு நாள் பொங்கினால் அந்தத் தாக்கத்தை நம்மால் தாங்க இயலுமா?

சாது - ஞானி/அறிஞர் என்ற பொருளும் உண்டு. ஒரு சாதுவைப் பழித்தால் பின்விளைவுகளை நாம் எதிர்கொள்வது என்பது மிகவும் கடினமான காரியம். போட்டுப் புரட்டித் தள்ளிவிடும். 

இங்கு எதற்கு இதைப் பற்றிச் சொல்கிறேன் என்று உங்களுக்குத் தோன்றலாம். காரணம், என்னைப் பொருத்தவரை, இயற்கையும் சாதுதான். நமக்குப் பல தத்துவங்களை, பாடங்களை, அறிவைப் புகட்டும் சாதுவும் கூட.  

இயற்கை அமைதியாக இருக்கும் நேரத்தில் அது நமக்கு எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டேதான் இருக்கிறது. நாம் அதைக் கூர்ந்து நோக்கிப் படிக்கத் தவறி பழித்துப் பகைத்துக் கொள்ளும் போதும் கூட அது தன் எச்சரிக்கையை ஓங்கி அறிவிக்கிறது. அதிலிருந்தும் நாம் பாடம் கற்கத் தவறினால் நாம் அழிவை நோக்கி வெகு விரைவாகச் சென்று கொண்டிருக்கிறோம், நம் அழிவு நிச்சயம் என்பதையும் இப்போது எங்கள் நாஞ்சில் நாட்டில் ஏற்பட்ட தண்ணீரின் பாய்ச்சல் சொல்லிச் சென்றிருக்கிறது.

தொடர் மழையில் எங்கள் ஊர்ப் பகுதி ஆறுகள், குளங்கள் உடைந்து தண்ணீர்ப் பாய்ச்சலை நாங்கள் சிறு வயதிலிருந்தே பார்த்துப் பழகியிருக்கிறோம். பயந்ததில்லை. பழித்ததில்லை. ஆனால் சென்ற முறையும், இம்முறையும் எச்சரிக்கை மணியை பலமாக அடித்து எதிர்காலத்தின் பயத்தை எங்களுக்குள் விதைத்துவிட்டுச் சென்றுள்ளது.

இதைத் தான் கல்கி இதழ் நடத்திய போட்டிக்கு நான் எழுதிய கதையில் மறைமுகமாகச் சொல்லியிருந்தேன். அது எபி யில் வெளிவந்தது. அப்போது அதில் சொல்லப்பட்ட சில கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனால் அதுதான் இப்போது நடந்துள்ளது.

இயற்கையின் நீதிமன்றம், நம் நீதிமன்றம் போன்றதல்ல. அதன் நீதிமன்றத்தில் பணமோ, சட்டத்தின் பொத்தல்களோ பயன்படுத்தித் திறமையாக வாதிட்டு வெல்ல முடியாது. நீதியை மாற்ற முடியாது. இயற்கை தேவதை தன் கண்களைக் கட்டிக் கொள்ள மாட்டாள்.

இயற்கையைப் பழித்து, அதற்கு எதிராக, அதன் வழித்தடத்தை நாம் மாற்ற நினைத்து அதன் வழியில் நாம் எதிர்த்து நின்றால் அழிவு, மரணம் நிச்சயம் என்பதை நம் அரசிற்கும், அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் தற்போதைய நாஞ்சில் நாட்டு தண்ணீரின் பாய்ச்சல் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பதை சுட்டிக் காட்டி வலியுறுத்துகிறேன்.

கன்னியாகுமரி மாவட்டம் கேரளமா, தமிழ்நாடா என்ற குழப்பம் இன்னும் அவர்களுக்கு இருக்கிறது போலும்! கவனிக்கப்படாத மாவட்டம். அவர்கள் இதைக் கவனிப்பார்களா என்று தெரியவில்லை. என்றாலும் கவனிக்கக் கோரிக்கை விடுத்து, எங்கள் கிராமமும் சுற்றியுள்ள கிராமங்களையும் அமைப்பையும், காரணங்களையும் அனுபவங்களையும் அடுத்த பகுதியில் தொடர்கிறேன்.  

நன்றாகக் கவனியுங்கள், நான் ‘வெள்ளம்’ என்று சொல்லவில்லை. தண்ணீரின் பாய்ச்சல் என்றுதான் சொல்லியிருக்கிறேன். தண்ணீரின் பாய்ச்சலை வெள்ளமாக மாற்றிவிடாதீர்கள். அதைப் பின்வரும் பதிவுகளில் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

அதுவரை, எங்கள் ஊர் மாறிவிடும் முன் தற்போதைய இப்படங்களைப் பார்த்துக் கொஞ்சம் சந்தோஷப்படுங்கள். இயற்கையோடு ஒன்றுங்கள். (எபியில் ஞாயிறுகளில் எங்கள் ஊர்ப் பகுதி படங்கள் வருகிறதே!!!!)

முதல் படம் ரயில் நாகர்கோவில் ஸ்டேஷனை நெருங்கும் போது எடுத்தது. மற்ற மூன்று படங்களுமே எங்கள் கிராமத்தின் வீடுகளை ஒட்டி இருக்கும் பகுதிகள். அதிலும் கடைசிப் படம் நாஞ்சில் நாடன் அவர்களின் ஊரான வீரநாராயணமங்கலம் செல்லும் ரோடு

இந்த நான்கு படங்களுமும் கிராமத்தின் பகுதிகள். இரண்டாவது படத்தில் ஒரு கட்டுமானம் தெரிகிறது இல்லையா அது நாலுவழிச் சாலை/பைபாஸ் ஊர் வழியாகச் செல்கிறது. வீட்டிலிருந்து 5 நிமிட நடையில்


முதல் இரு படங்களும் நாகர்கோவில் பார்வதிபுரம் கிராமத்தைக் கடக்கும் போது.... அடுத்த இரு படங்களும் எங்கள் ஊரின் மிக அருகில் உள்ள பகுதி. 

-----கீதா



44 கருத்துகள்:

  1. இது தொடரும் என்று நினைக்கிறேன் நல்லதொரு கட்டுரை.

    ஆம் இயற்கையை எதிர்க்க அரசியல்வாதிகளால் இயலாது.

    தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது தொடரும் என்று நினைக்கிறேன் நல்லதொரு கட்டுரை.//

      ஆமாம் கில்லர்ஜி அப்படித்தான் எண்ணியுள்ளேன். கூடியவரை பயணம் முழுவதும் பதிவிட எண்ணம். பல வீடியோக்கள், புகைப்படங்கள் எடுத்துள்ளேன்.

      ஆம் இயற்கையை எதிர்க்க அரசியல்வாதிகளால் இயலாது.//

      ஆம் எதிர்க்க இயலாது ஆனால் பங்கம் விளைவிக்காமல் இருந்தாலே போதும்.

      மிக்க நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
  2. வணக்கம் சகோதரி

    தங்கள் தாயக பயணத்தின் ஊடே வந்த இடர்களை பற்றிய பதிவா? ஆம்.. இயற்கை எனும் சாதுவை நாம் நிறைய மனம் நோகும்படி செய்கிறோம். அதன் விளைவுகளால்தான் இந்த சாது மிரள்கிறது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது."எனும் பழமொழிகேற்ப இயற்கை பொங்கி எழுகின்றது. சாதுவை இயற்கையோடு இணைத்து கூறிய விளக்கங்களை ரசித்தேன்.

    /இயற்கையின் நீதிமன்றம், நம் நீதிமன்றம் போன்றதல்ல. அதன் நீதிமன்றத்தில் பணமோ, சட்டத்தின் பொத்தல்களோ பயன்படுத்தித் திறமையாக வாதிட்டு வெல்ல முடியாது/

    அருமையான வரிகள். அழகான இயற்கையுடன் கூடிய படங்கள் சட்டங்களுடன் (நான் சொல்வது, படங்களை சுற்றி அழகுபடுத்திய சட்டம்.) பசுமையுடன் கண்களை கவர்கிறது. மேலும் உங்கள் அருமையான எண்ணங்களை பின் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் தாயக பயணத்தின் ஊடே வந்த இடர்களை பற்றிய பதிவா? //

      ஆமாம் பயணத்தின் ஊடே என்பதை விட இறுதியில்!! ஹாஹாஹா...நமக்கு இடர் என்பதைவிட, எங்கள் ஊர்ப்பகுதிகள் அழியத் தொடங்கியிருக்கின்றனவே என்ற ஆதங்கம்தான் அதிகமாக உள்ளது கமலாக்கா. இனி ஊர்ப்பக்கம் செல்வேனா என்று தெரியவில்லை ஏனென்றால் என்னால் பல மாற்றங்களைப் பார்க்க மனம் ஒப்பவில்லை. அப்போதைய ஊர் மனதில் பதிந்து போய்விட்டதாலோ என்னவோ. ஆனால் மாற்றம் ஒன்றுதானே மாறாதது.

      நீங்கள் விளக்கங்களை, வரிகளை ரசித்தமைக்கு மிக்க நன்றி கமலாக்கா.

      அழகான இயற்கையுடன் கூடிய படங்கள் சட்டங்களுடன் (நான் சொல்வது, படங்களை சுற்றி அழகுபடுத்திய சட்டம்.) பசுமையுடன் கண்களை கவர்கிறது.//

      மிக்க நன்றி கமலாக்கா

      தொடர்வதற்கும் மிக்க நன்றி

      கீதா
      ,

      நீக்கு
  3. // அப்போது அதில் சொல்லப்பட்ட சில கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. //

    என்னென்ன என்று சொன்னால் நினைவுக்கு வருமே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது அந்த நாலுவழிச்சாலை குறுக்கே செல்வதும், வேறு சிலவும்.

      ஒரு வேளை நான் கதையில் அதைச் சரியாகச் சொல்லவில்லையாக இருக்கலாம் ஸ்ரீராம். அப்போது நேரில் பார்க்கவும் இல்லை. ஊருக்குச் சென்றவர்கள் சொன்னதுதான். ஆனால் இப்போது நேரில் பார்க்கும் போது ரொம்பவே மனம் வேதனை அடைந்தது என்பது உண்மை.

      அடுத்த பதிவில் சொல்லும் போது அதைச் சரியாகச் சொல்கிறேன்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  4. //இயற்கையின் நீதிமன்றம், நம் நீதிமன்றம் போன்றதல்ல. அதன் நீதிமன்றத்தில் பணமோ, சட்டத்தின் பொத்தல்களோ பயன்படுத்தித் திறமையாக வாதிட்டு வெல்ல முடியாது. நீதியை மாற்ற முடியாது. இயற்கை தேவதை தன் கண்களைக் கட்டிக் கொள்ள மாட்டாள்.//

    உண்மை. உண்மை...ஜனநாயகத்தின் பலமா, பலவீனமா என்று சொல்ல முடியாத விஷயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் ஜனநாயகம் வேண்டாத விஷயங்களுக்குப் பலமாக இருக்கிறது வேண்டும் என்ற விஷயங்களுக்குப் பலவீனமாக இருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  5. //இயற்கையைப் பழித்து, அதற்கு எதிராக, அதன் வழித்தடத்தை நாம் மாற்ற நினைத்து அதன் வழியில் நாம் எதிர்த்து நின்றால் அழிவு, மரணம் நிச்சயம் என்பதை நம் அரசிற்கும், அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் தற்போதைய நாஞ்சில் நாட்டு தண்ணீரின் பாய்ச்சல் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பதை சுட்டிக் காட்டி வலியுறுத்துகிறேன்.//

    யானைகளின் வழித்தடத்தை மனிதன் மறித்து அதைக் குறை சொல்வதும் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் எனக்கும் யானைகளின் வழித்தடத்தை மனிதன் மறித்துக் குறை சொல்வது நினைவுக்கு வந்தது இதை எழுதும் போது.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  6. நல்ல விளக்கங்கள். பல கன்யாகுமரி மாவட்ட நண்பர்களும் தமிழக அரசால் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் மாவட்டம் கன்யாகுமரி என்றே சொன்னார்கள். ஒரு விதத்தில் உண்மை தானோ என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதாக்கா அது உண்மைதான். நான் பதிவு கொஞ்சம் கொஞ்சமாக எழுத நினைத்துக் குறிப்புகளை பேப்பரில் எழுதிக் கொண்டிருந்த போது இதையும் எழுதியிருந்தேன்...அந்தச்சமயம் ஸ்ரீராம் கூட எனக்கு ஒரு பதிவை அனுப்பியிருந்தார். அதிலும் சொல்லப்பட்டிருந்தது. அப்போது நினைத்தேன் அப்ப இன்னும் அந்த நிலை மாறவில்லை நாம் எழுதுவது சரிதான் என்று. எனவே நான் எழுதியதை கட் செய்யாமல் அப்படியே போட்டுவிட்டேன்.

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  7. இயற்கையும் சாதுதான். நமக்குப் பல தத்துவங்களை, பாடங்களை, அறிவைப் புகட்டும் சாதுவும் கூட. //

    உண்மை உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதிக்கா.

      அகத்தியரின் கோபம், சாணக்கியரின் கோபம் கூட அரசாட்சியை வீழ்த்திய கதைகள் உண்டே...அது போலத்தான் இயற்கை எனும் சாதுவும்.

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  8. அழகிய இயற்கைக் காட்சிகள்.... மழை நீரால் மூழ்கின படங்கள் அடுத்த பகுதியில் வரும் என்று நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக வரும் நெல்லை. தண்ணீர் ஊருக்குள் பாய்ந்து கொண்டிருந்த போதும் கூட தண்ணீரில் நடந்து கொண்டே சில படங்கள், வீடியோக்கள் எடுத்துள்ளேன். இதில் ஒன்று...ம்ம் சரி அதை நான் பதிவில் சொல்கிறேன்.

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    2. திருப்பதியில் பெருக்கெடுத்தோடும் மழை வெள்ளம் பயமுறுத்துகிறது.

      நீங்க என்னடான்னா பதிவுக்குப் படங்கள் தேத்தியிருக்கீங்க

      நீக்கு
    3. ஹாஹாஹாஹா....

      நான் சிரித்துவிட்டாலும் மனதில் ஆதங்கம் ரொம்பவே இருக்கு நெல்லை. பதிவுக்காக இல்லை நெல்லை, எங்கள் ஊர் தண்ணீர் பயமுறுத்தும் ஒன்று கிடையவே கிடையாது. ஆனால் எடுத்ததன் காரணம் பயமில்லாமல் இருந்த ஊர்கள் எப்படி இப்போது பயத்தின் உள் வருகின்றன என்பதைச் சுட்டிக் காட்டத்தான். கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். தண்ணீர் வடிவதற்கான வடிகால்கள் எல்லாம் கட்டிடங்களாக மாறி இருக்கும் போது தண்ணீர் எங்கு பாயும்? கொஞ்சம் யோசிக்க வேண்டும் அது புகழ்பெற்ற இறைவன் கோயில்கள் இருக்கும் ஊராக இருந்தாலும் சரி. யோசிக்காமல் முன்னேற்றம் வசதிகள் எனும் பெயரில் இயற்கைக்கு எதிராக நாம் செய்வதன் பின்விளைவுகளை நாம் சந்தித்துத்தான் ஆக வேண்டும். இதில் வெள்ளம் என்று புலம்புவதில் அர்த்தம் கிடையாது. மலைகளையும், ஆறையும், குளங்களையும் குறுக்க மனிதன் நினைத்தால்....

      கீதா

      நீக்கு
  9. இயற்கையும் சாதுதான். நமக்குப் பல தத்துவங்களை, பாடங்களை, அறிவைப் புகட்டும் சாதுவும் கூட. //

    உண்மை உண்மை.

    //இயற்கை அமைதியாக இருக்கும் நேரத்தில் அது நமக்கு எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டேதான் இருக்கிறது. நாம் அதைக் கூர்ந்து நோக்கிப் படிக்கத் தவறி பழித்துப் பகைத்துக் கொள்ளும் போதும் கூட அது தன் எச்சரிக்கையை ஓங்கி அறிவிக்கிறது.//

    ஆமாம், சரியாக சொன்னீர்கள் கீதா.

    படங்கள் எல்லாம் அருமை.

    பச்சை பசேல் வயல்கள் எல்லாம் இப்போது நீரில் ழூழ்கி போய் இருக்கும் ! வேதனை தரும் விஷயம்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் எல்லாம் அருமை.

      பச்சை பசேல் வயல்கள் எல்லாம் இப்போது நீரில் ழூழ்கி போய் இருக்கும் ! வேதனை தரும் விஷயம்.//

      ஆமாம் கோமதிக்கா அடுத்த பதிவில் வரும்.

      மீக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  10. என் அம்மா ஊர் திருவனந்தபுரத்திற்கு ரயிலில் போன போது (மாமா வீட்டுக்கு 2015ல்) இப்படி அழகான பசுமையான வயல், மரங்களை படம் எடுத்து இருக்கிறேன். நாகர்கோவிலில் இருந்த போது சிறுமி. கன்னியாகுமரி அடிக்கடி போகும் ஊர் முன்பு. அப்போது இயற்கையை ரசித்துக் கொண்டே போவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹை!! கோமதிக்கா உங்களுக்கும் திருவனந்தபுரம் நாகர்கோவில் வேர்கள் இருக்கா ஹைஃபைவ்!!!

      அக்கா நானும் பதிவில் சொல்லியிருக்கிறேன் இனிதான் வரும் நாகர்கோவில் டு திருவனந்தபுரம் ரயில் பயணம் காட்சிகள் வீடியோக்களும் எடுத்துள்ளேன். ரயிலில் பயணம் செய்து கொன்டெ. சில பதிவில் சொல்கிறேன் என்பதால் இங்கு சொல்லவில்லை கோமதிக்கா..

      இப்போது கன்னியாகுமரி போக நினைத்துள்ளேன் வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. காளிகேசம் போக முடியாது, அது போல மாத்தூர் பாலம் எல்லாம் போக முடியுமா என்று தெரியவில்லை. முதலில் திட்டத்தில் இருந்தது ஆனால் இப்போது நிலைமை மாறியுள்ளதால். சுசீந்திரம் செல்ல ஆசையாக இருக்கிறது. சவேரியார் கோயிலும் செல்ல நினைத்துள்ளேன். இங்கிருக்கும் போதுதானே முடியும்.

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
    2. நான் பிறந்தது திருவனந்தபுரம்தான் கீதா. அப்பா ஊர் திருநெல்வேலி (பாளையம்கோட்டை)

      நீக்கு
    3. சுசீந்திரம் கோவிலுக்கு நாகர்கோவிலில் இருக்கும் போது அடிக்கடி போவோம். சுசீந்திரம் திருவிழாவில் சிறு வயதில் தொலைந்து போய் கிடைத்து இருக்கிறேன். முன்பு பகிர்ந்து இருக்கிறேன்.

      நீக்கு
    4. ஓ கோமதிக்கா நீங்கள் பிறந்தது திருவனந்தபுரமா...அட! அப்ப அம்மா மலையாளம் பேசுவாங்க இல்லையா! அட என்னைப் போல இரண்டு பக்கமும் கலந்தது...

      ஆமாம் நீங்க சுசீந்திரம் கோயில் திருவிழாவில் தொலைந்தது பற்றி சொல்லியிருக்கீங்க. நாங்களும் அப்போது செல்வது உண்டு. சுசீந்திரம் செல்வது என்றாலே அப்போது ஒரு டூர் போன்று எங்கள் வீட்டில் செல்வோம் கன்னியாகுமரிக்கு என்றாலும் அப்படித்தான் இரண்டையும் கம்பைன் செய்தும்...டூர் போன்று தயாராவோம். அத்தனை மகிழ்ச்சியாக இருக்கும்.

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  11. உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் சகோதரி... மேல கொடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களை பார்க்கும் போது இவ்வளவு அழகு பொங்கும் நாஞ்சில் நாட்டிலா நாம் வாழ்கிறோம் என பொறாமைப்பட வைக்கிறது. ஆனால் அதே வேளையில் கன்னியாகுமரி மாவட்டம் இயற்கை சீற்றங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிந்தேன். ஊரில் இல்லாததால் அந்த அவலங்களை பார்க்காமல் தப்பித்ததாக நினைத்திருக்கும் வேளையில்... தொடர்ந்துவரும் பதிவில் மழைநீரால் ஏற்பட்ட பாதிப்புகளையும், அதனால் மனிதர்கள் மற்றும் பிற ஜீவராசிகள் அடைந்த துன்பங்களையும் பதிவு செய்யப்போவதாக தாங்கள் கூறியுள்ளதை பார்க்கும்போது இயற்கையின் சீற்றத்தினால் என் உறவுகள் பட்டதுன்பங்களை கண்முன்னே கொண்டுவந்து காண்பித்து என்னை கண்ணீர்சிந்த வைக்காமல் விடமாட்டீர்கள் என்றே தோன்றுகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேல கொடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களை பார்க்கும் போது இவ்வளவு அழகு பொங்கும் நாஞ்சில் நாட்டிலா நாம் வாழ்கிறோம் என பொறாமைப்பட வைக்கிறது.//

      என்ன சகோ நீங்கள் நேரிலும் பார்த்திருப்பீர்களே.

      கன்னியாகுமரி மாவட்டம் தற்போது அதிகம் பாதிக்கப்பட்டதன் காரணங்கள் செய்தியிலும் சொன்னாங்களாமே.

      எனக்குத் தெரிந்து எங்கள் பகுதிகளில் ஒரு சில மணி நேரங்களில் தண்ணீர் வடிந்துவிட்டது. வீடுகளில் தண்ணீர் இம்முறை புகுந்ததால் கொஞ்சம் சுத்தம் செய்யும் வேலைகள். ஆனால் சிறிய வீடுகளில் வாழ்ந்து வருபவர்களுக்குக் கண்டிப்பாகச் சோதனைக்காலம்தான். தண்ணீர் பகுதிகளில் வீடு கட்டியவர்களுக்கும் சோதனையாக இருந்திருக்கும். அதற்குக் காரணங்கள் பல.

      நான் எங்கள் பகுதிகளில் மட்டுமே படங்களும் காணொளிகளும் எடுத்தேன் பிற நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகளில் அல்ல சகோ.

      மிக்க நன்றி நாஞ்சில் சிவா சகோ

      கீதா

      நீக்கு
  12. அன்பின் கீதாமா,
    மனதைக் கொள்ளை கொள்ளும் படங்கள்.

    இந்த மாதிரி ஊரை விட்டு விட்டு பட்டணம் வந்தது
    எதற்காகவோ தெரியவில்லை.

    இயற்கை சொல்லும் பாடங்களை உணர மறுக்கும்
    மக்களைத் தன் வழியே இயற்கை திருத்தும் என்று
    நினைக்கிறேன்.
    வயலை, நதியின் வழியை மறித்து
    சுயனலம் காட்டும் மக்கள் வேறிடத்தில் இருப்பார்கள்

    அவதிப்படுபவர்கள் அங்கு வசிக்கும் அறியா நெஞ்சங்களே.
    எய்தவன் எவனோ. அம்பு வாங்கியவர்களாக
    மக்கள் இருக்கிறோம்.
    முற்றிலும் புதிதாக இருக்கிறது உங்கள் பட ப்ரசண்டேஷன். தங்கச் சட்டம் இட்டப்
    பச்சைக் காட்சிகள். பொலிவு.!!! அதீதப் பொலிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஊரை விட்டு பட்டணம் வந்தது எதற்காக//- ரொம்பவே யோசிக்க வைக்கிறது. என்ன சாதித்தோம் எனவும் தோணுது

      நீக்கு
    2. வல்லிம்மா, இந்த மாதிரி ஊரை விட்டு விட்டு பட்டணம் வந்தது
      எதற்காகவோ தெரியவில்லை.//

      இதை நான் பலமுறை யோசித்திருக்கிறேன். இப்போது கூட இங்கேயே இருந்துவிடலாமோ என்றும் தோன்றுகிறது. ஆனால் என்ன, கிராமத்தில் இருந்த போதே எந்த வீட்டிற்கும் போக பாட்டி அனுமதித்ததில்லை என்பதால் அப்போதே நாங்கள் வம்பு குறைவுதான் அதன் பின் பல வருடங்கள் ஆகிவிட்டதால் இப்போது அதை எதிர்கொள்ள முடியவில்லை.

      கிராமத்தில் இருந்தால், ஒன்று வம்பில் சிக்காமல் ஒதுங்கி வாழ வேண்டும். நாம் சாதாரணமாகக் கூட எதுவும் பேச முடியாது. அல்லது வம்பை எதிர்கொள்ளத் தெரியவேண்டும். அப்படிப் பார்க்கும் போது நகர வாழ்க்கையே தேவலாம் என்றும் தோன்றுகிறது. இது என் சமீபத்திய அனுபவம்.

      இயற்கை சொல்லும் பாடங்களை உணர மறுக்கும்
      மக்களைத் தன் வழியே இயற்கை திருத்தும் என்று
      நினைக்கிறேன்.//

      இல்லை அம்மா. கண்டிப்பாக இல்லை. ஊரின் அழகும் கெட்டுவிடும் தூரம் அதிகமில்லை அம்மா..தண்ணீர் வடிந்ததுமெ மக்கள் குப்பைகளை ஆற்றில் கொண்டு கொட்டுகிறார்கள். வாழ்வியல் நிறைய மாறியிருக்கிறது. அவதிப்படுபம் அறியா நெஞ்சங்கள் மிக மிக குறைவே. எல்லார் விட்டிலும் டிவி கேபிள் இருக்கிறது. எனவே அறியா நெஞ்சங்கள் என்று சொல்வதற்கும் இல்லை. அதையும் ஒரு சிறு உதாரணத்துடன் சொல்கிறேன் பின்னர்.

      //முற்றிலும் புதிதாக இருக்கிறது உங்கள் பட ப்ரசண்டேஷன். தங்கச் சட்டம் இட்டப்
      பச்சைக் காட்சிகள். பொலிவு.!!! அதீதப் பொலிவு.//

      மிக்க நன்றி அம்மா. எல்லாம் கொலாஜ் டெம்ப்ளேட்ஸ் உபயம்!!!!

      கீதா

      நீக்கு
    3. நெல்லை வல்லிம்மாவுக்குக் கொடுத்திருக்கும் கருத்தைப் பாருங்க....

      கீதா

      நீக்கு
  13. ஐயன் இதை ஊழ் - வெல்லவும் முடியாது என பலவற்றையும் விவரிக்கிறார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! டிடி இயற்கையை வெல்ல முடியாது ஆனால் மக்களும், அரசும் அதிகாரிகளும் அதகேற்றாற் போல் வழிவகைகள் செய்யலாமே.

      மிக்க நன்றி டிடி

      கீதா

      நீக்கு
    2. ஓ! டிடி இயற்கையை வெல்ல முடியாது ஆனால் மக்களும், அரசும் அதிகாரிகளும் அதகேற்றாற் போல் வழிவகைகள் செய்யலாமே.

      மிக்க நன்றி டிடி

      கீதா

      நீக்கு
  14. தொடர் துவக்கம் நன்று. படங்களை தனித் தனியாக இட்டிருந்தால் படங்களை பெரிது பண்ணி பார்க்க ஏதுவாக இருந்திருக்கும்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜெ கே அண்ணா. நிறையப் படங்கள் ஆகிவிடுமே என்று தனிதனியாகத் தராமல் இப்படிப் போட்டுவிட்டேன் இனி தனிதனியாகத் தருகிறேன் அண்ணா.

      கீதா

      நீக்கு
  15. மிக அழகான படங்கள். மனிதனின் சுயநலத்தால் இயற்கையை சூரையாடி, அது சீறும் பொழுது அவதிக்குள்ளாகிறான். பிரச்சனை தீர்ந்த பிறகு மீண்டும் அதே சுயநலம்.

    பதிலளிநீக்கு
  16. அதே பானுக்கா. பிரச்சனையையும் சரியாகத் தீர்ப்பதில்லை...அதன் பின் அதை மறந்தே போய்விடுவார்கள். சுய்நலம் தான்.

    மிக்க நன்றி பானுக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  17. படங்கள் அருமை அதுவும் ஃபிரேம் போட்டு மாட்டியாயிற்று. இன்னும் சிலகாலம் கழித்து இத்தகைய இயற்கைக் காட்சிகளை நேரில் பார்க்க இயலாமல் போகலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் கோவிந்தராஜு ஐயா.

      ஆமாம் எதிர்காலத்தில் இந்தக் காட்சிகளைப் பார்க்க இயலுமா தெரியவில்லை.

      கீதா

      நீக்கு
  18. என்னைப் போன்ற நகரவாழ் ஜீவிகளுக்கு இந்த இயற்கை காட்சிகள் மிகவும் அரியதானவை. மலைநாட்டுத் திருப்பதிகளை சேவிக்கப் போயிருந்த போது அதிசயமாக இருந்தது. 3 முறை சேவித்திருந்த போதும் இன்னோரு முறை நிதானமாக சேவிக்க மாட்டோமா என்று இருக்கிறது.
    தொடருங்கள். நானும் தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு