புதன், 15 பிப்ரவரி, 2017

விண்ணிலிருந்து வீழ்ந்த நட்சத்திரம் விண்ணிலே!

விண்ணிலிருந்து 30 வருடங்களுக்கு முன்பு இவ்வுலகில் வீழ்ந்த ஒரு நட்சத்திரம்! அது வீழ்ந்த இடம் தேவகோட்டை! 30 வயதானாலும் குழந்தை! ஆனால் நினைவாற்றல் மிக்க குழந்தை. ஊராருக்குச் செல்லக் குழந்தை. இந்த வயதிலும் தனது பெரிய வீட்டிலே உருண்டு, விளையாடி, வளர்ந்த குழந்தை. அப்பெரிய வீட்டில் தனக்கென ஒரு உலகில் வாழ்ந்த குழந்தை. அவ்வீடுதான் அவள் உலகம்! தன் மனதிற்கினிய சகோதரரின் அன்பினில் வளர்ந்த குழந்தை. தாயுடனேயே இருந்த குழந்தை.

அந்தச் சகோதரர் தன் குழந்தைகளையும் விட இவளைத்தான் அதிகமாக நேசித்தார். வெளிநாட்டிலிருந்தவரை அவர் ஒவ்வொரு முறை ஊருக்குப் பேசும் போதும் எல்லோரையும் விட அதிக முக்கியத்துவம் கொடுத்து தன் தங்கையிடம் பேசும் போது, அவளிடம் என்ன வேண்டும் என்றால் அக்குழந்தை கேட்பது ஒன்றே ஒன்றுதான் “நைட்டி”. அவள் உடுத்துவதற்கு எளிதாக இருந்ததால் வீட்டில் அதை மட்டுமே உடுத்தி வந்ததால் அவளுக்குத் தெரிந்த அதை மட்டுமே சொல்லத் தெரிந்த குழந்தை. அதற்காக, வித விதமாக வாங்கி வந்துக் குவித்தவர் அந்தச் சகோதரர். தனக்குத் தெரிந்த வரையில் வாசலில் ஒரு கோலம் என்று கிறுக்கினாலும், அழகான ஓவியம் என்று ரசிப்பார் அந்த சகோதரர். சகோதரராக, தந்தையாகப் பார்த்துக் கொண்டவர். தனது மனைவி இறந்த பிறகு தன் குழந்தைகளை விட, இக்குழந்தைக்காகவே இரண்டாவது திருமணம் பற்றி யோசிக்காதவர் அந்தச் சகோதரர். தன் தாயின் காலத்திற்குப் பிறகு அக்குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கனவு கண்டிருந்தவர்.


தன் வீடு என்று சொல்லிக் கொண்டு வீட்டில் வளைய வந்தவள். சென்ற 10, 15 நாட்களாக சகோதரரையே சுற்றிச் சுற்றி வந்தவள். அவர் தரையில் அமர்ந்தால் அவர் மடியில் படுத்து விளையாடிவள். அவர் மெத்தையில் அமர்ந்தால் அவர் அருகில் அவருடன் அமர்ந்து விளையாடியவள். இறுதி வரை அவரது கையைப் பற்றிக் கொண்டு “என்னை விட்டுப் போயிடாதண்ணா” என்று சொல்லிக் கொண்டிருந்த அந்த நட்சத்திரம் இறுதியில் ,பாசக்கார அண்ணனாய், தந்தையாய் இருந்தவரின் கையை விட்டுப் பிரிந்து மீண்டும் விண்ணிற்கே சென்று அங்கிருந்து ஒளி வீசத் தொடங்கிவிட்டது!

அவள் ஆசைப்பட்ட சிறு சிறு ஆசைகளைக் கூட ஒவ்வொன்றாக நிறைவேற்ற வேண்டும், காலம் இருக்கிறதே என்று கனவு கண்டு கொண்டிருந்தவர் இதோ இன்று தப்புக் கணக்குப் போட்டு விட்டதாக அழுது கொண்டிருக்கிறார். அவளின் ஆசைகளில் ஒன்றான ரயிலில் செல்லும் ஆசையை இராமேஸ்வரம் வரை அவளை அழைத்துச் சென்று நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்திருந்தது நிறைவேறாமல், எல்லோரையும் விட தன்னிடம் இத்தனை அன்பு கொண்டிருந்தவள் தன் குழந்தைகளின் திருமணத்தைப் பார்க்காமல் போய்விட்டாளே என்று அழுது கொண்டிருக்கிறார். அவள் அவரிடம், "இந்தா  இதை யாரிடமும் கொடுக்காமல் பத்திரமாக வைத்துக் கொள்" என்று கொடுத்த ஊக்கையும்(Pin), அவள் நெற்றியில் வைக்கப்பட்டிருந்த ஒரு ரூபாய் நாணயத்தையும், அவளுடனான ஒவ்வொரு கணப்பொழுதையும், நினைவலைகளையும் தன்னுடன் வைத்துக் கொண்டு மருகிக் கொண்டிருக்கும் அக்குழந்தையின் அன்பு சகோதரர் வேறு யாருமல்ல நம் அன்புப் பதிவர் கில்லர்ஜி.

இறுதிவரை விடை தெரியாமல் வாழ்கிறேன் என்று விழித்துக் கொண்டிருக்கும் கில்லர்ஜிக்கு “விடை” கொடுத்துச் சென்றுவிட்ட அவரது அன்புச் சகோதரியின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்! அவள் விண்ணிலிருந்து நட்சத்திரமாய் ஒளிர்வாள்!

அவர் கொடுத்திருக்கும் "விடை"யில் உங்களுக்கான, உங்கள் வாழ்விற்கான விடை இருக்கிறது கில்லர்ஜி! ஆம்! அவளைப் போன்ற குழந்தைகள் இவ்வுலகில், நம் அருகில் அதுவும் வசதியற்ற, ஆதரவற்ற நிலையில் ஏராளம் பேர், இருக்கின்றனர். அவர்களுடன் நீங்கள் வாழ்வின் ஒரு சிறு பகுதியைச் செலவிடலாம். உங்கள் அன்பை அவர்களுக்கு அளிக்கலாம்! உங்கள் தங்கை, அக்குழந்தை விரும்பிய, நீங்கள் நிறைவேற்றவில்லை என்று மருகும் அவ்வாசைகளில் ஒரு சிலதேனும் இந்த நட்சத்திரக் குழந்தைகளுக்கு நிறைவேற்றலாம். இந்த நட்சத்திரங்களில் உங்கள் தங்கையாகிய அக்குழந்தை நட்சத்திரத்தைக் காணலாம். விண்ணிற்குச் சென்ற அந்த நட்சத்திரம் இந்த நட்சத்திரங்களில் ஒளிர்கிறாள் என்று நீங்கள் கண்டு உணர்ந்து மகிழலாம்! உங்களுக்கும் மன நிறைவு கிட்டும்!

இதற்கு முன் இப்படிப்பட்டக் குழந்தைகளைப் பற்றி நான் இட்ட பதிவுகளில் ஒன்றிலேனும் கில்லர்ஜி இக்குழந்தை பற்றிக் குறிப்பிட்டிருந்தால், அக்குழந்தை இப்பூமியில் இருந்த போதே நான் நேரில் சென்று கண்டிப்பாகச் சந்தித்திருப்பேன். அதுவும் நான் 4 மாதங்களுக்கு முன் அவர் ஊராகிய தேவகோட்டையின் அருகிலிருக்கும் திருப்பத்தூர் வரை சென்றிருந்தேன். ஆனால், கில்லர்ஜியோ, அக்குழந்தையை என்னிடம் நேரில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று மனதில் நினைத்திருந்ததாகச் சொன்ன போது என் மனம் மிகவும் வேதனைப்பட்டது. இப்படிப்பட்டக் குழந்தைகள் என் மனதினை ஈர்ப்பதாலும், பாதிப்பதாலும், அதுவும் நம் அன்பர்களில் ஒருவரின் ரத்தபந்தம் என்பதாலும் விளைந்த ஒன்று!  

---கீதா37 கருத்துகள்:

 1. மிக்க நெகிழ்ச்சி அம்மா..
  ஒரு மரணத்தின் பின்னே தவிர்க்கமுடியாத சோகம் இருக்கத்தான் செய்யும்.
  காலம் நடத்திய ஒரு சக தோழரின் இல்ல துக்கம் என்று மட்டுமே வழக்கமான ஆழ்ந்த இரங்கல் என எழுதிவிட்டு இருந்தேன்.
  ஆனால் ஒரு குழந்தையான தங்கையின் அறியாத இழப்பாய் என் நண்பருக்கு நிகழ்ந்திருக்கும் இந்த இழப்பு கடவுளின் கருணையின்மைக்கு ஒரு சான்று..
  காலம் நம் தோழரின் கண்ணீரை ஆற்றட்டும்...
  தோழரின் ஆற்றவொண்ணா துயரை எழுத்தில் இறக்கிவைத்த உங்களுக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அக்குழந்தையின் மரணத்திற்கு மருத்துவ உலகும் ஒரு காரணமாக அமைந்திருப்பதைக் குறித்து கில்லர்ஜி எழுதுவார்.

   ஆம் மரணம் என்பது எல்லோருக்கும் வாழ்வில் நடப்பதுதான். ஆனால் இது நட்சத்திரக் குழந்தை என்பதுதான் இப்பதிவிற்கே காரணம். வயதானாலும் குழந்தையாக இருப்பதுதான்!! பதிவைப் புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி செல்வா!!

   நீக்கு
 2. கில்லர்ஜியின் சோகத்தில் பங்கெடுக்கிறேன். ஆறுதல் கொள்ளவேண்டியது, கடைசி நேரத்தில் கூட இருந்ததை நினைத்துத்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்! கில்லர்ஜி தங்கையின் அருகில் தான் இருந்தார் இறுதிவரை. அதுவும் அத்தங்கைக்கு மிகவும் பிடித்த சகோதரர்.

   நீக்கு
 3. சகோ ,தங்கையைப் பிரிந்து வாடும் கில்லர்ஜிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் !

  பதிலளிநீக்கு
 4. அடுத்து அடுத்து பல சோதனைகள் கில்லர்ஜி அவர்களுக்கு...

  தங்கையின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

  பதிலளிநீக்கு
 5. கில்லர்ஜி சகோதரி மறைந்து விட்டார் என்று மனசு குமாரின் தளத்தில் DD சொல்லியிருந்தார். அதன்பின் இவ்வளவு சோகம் இருக்கும் என்று நினைக்கவில்லை. கில்லர்ஜிக்கு எங்கள் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். சகோதரியின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எங்கள் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஸ்ரீராம். இப்போதுதான் கில்லர்ஜி வாட்சப்பில் அனுப்பியிருந்த புகைப்படத்தைப் பார்த்தேன். இணைத்துள்ளேன். புகைப்படத்தைப் பார்த்தால் தெரிகிறதா பாருங்கள் குழந்தை என்று!! இப்படித்தான் பல குழந்தைகள் இருக்கின்றார்கள்.

   நீக்கு
 6. மனம் கனத்தது கீதா..அந்த நட்சத்திரம் இவ்வுலகிலிருந்து மேலே இறைவனின் தோட்டத்தில் ஒளிவீச சென்று விட்டது :(
  இப்படிப்பட்ட குழந்தைகள் பற்றி வாசிக்கும்போதும் பார்க்கும்போதும் மனசு வலிக்கும் ..
  அந்த குழந்தைக்கு எனது அஞ்சலிகள் ..சகோதரர் இந்த கடினமான சூழலிலிருந்து வெளிவர குடும்பத்தாருக்கு ஆறுதலை தர இறைவனிடம் பிரார்த்திப்போம் ..Our thoughts and prayers are with you..

  பதிலளிநீக்கு
 7. வேதனை. சகோதரர் கில்லர்ஜி் அவர்களின் துயரம் ஆறிட பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
 8. மனம் மிக வேதனை கொள்கிறது
  அவர் ஆன்மா சந்தியடையவும்
  இந்த இழப்பைத் தாங்கும் வல்லமையை
  ஆண்டவன் கில்லர்ஜிக்கு வழ்ங்கவும்
  பிரார்த்தித்துக் கொள்வோமாக

  பதிலளிநீக்கு


 9. படித்ததும மனம் கனத்தது. கில்லர்ஜிக்கு ஆறுதல் என்று சொல்லத்தான் முடிகிறதே தவிர பக்கத்தில் இருந்து தோளைதட்டி கொடுத்து அவரின் சோகத்தில் பங்கு கொள்ள முடியவில்லை என்கிற போது மனம் வலிக்கிறது. காலம் ஒன்றுதான் அவரது சோகத்திற்கு மாற்று மருந்து

  பதிலளிநீக்கு
 10. மனசுக்கே வேதனையாக இருக்கிறது. கில்லர்ஜிக்கு அடுத்தடுத்துச் சோதனைகள்! என்ன செய்ய முடியும்! நம் கணக்கு ஒன்றாகவும் ஆண்டவன் கணக்கு வேறாகவும் இருக்கே! கில்லர்ஜிக்கும் அவர் குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

  பதிலளிநீக்கு
 11. ஓ உங்கள் தலைப்பைப் பார்த்து ஏதோ நிலவைப் பற்றி பூவைப் பற்றிய பதிவு என நினைத்து வந்தேன்ன்ன், மனம் மிகவும் வேதனையோடு திரும்புகிறேன்.

  இழப்புக்கள் என்றுமே ஈடு செய்ய முடியாதது... தாங்க முடியாத துயரம்தான்.. என்னைப் பொறுத்து எதையும் மீள நினைத்துப் பார்க்கக்கூடாது, முன்னே பார்த்தபடி போய்க்கொண்டிருந்தால் மட்டுமே வாழ முடியும்.

  கில்லர்ஜி க்கும் அவர் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.. அனைவரது மனதும் அமைதி அடைய ஆண்டவன் துணை நிற்பார்.

  பதிலளிநீக்கு
 12. பதிவைப் படித்ததும் மனது கனத்தது. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், இந்த வலைத்தளம் வழியே, எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது சகோதரி க.வனிதா அவர்களது ஆன்மா அமைதி அடையட்டும்.

  பதிலளிநீக்கு
 13. சோதனையே வாழ்வாகிவிட்ட நண்பருக்கு
  பேரிழப்பு
  வார்த்தைகளால் ஆறுதல்கூற இயலாத
  எதன் மூலமும் சமன் செய்ய இயலா பேரிழப்பு
  மனம் கணக்கிறது

  பதிலளிநீக்கு
 14. தேவகோட்டை ஜியின் தங்கையைப் ப்ற்றி அறிந்து மனம் கனத்து போனது.
  அவர் தங்கையின் இறுதிகாலத்தில் பக்கத்தில் இருந்தது ஆறுதல். அவர் வெளிநாட்டில் இருக்கும் போது ஏற்பட்டு இருந்தால் அவருக்கு மேலும் வருத்தமாய் இருந்து இருக்கும்.

  உங்கள் பதிவு தேவகோட்டை ஜியை ஆற்றுப்படுத்தும்.

  பதிலளிநீக்கு
 15. உண்மைகளை எதிர்நோக்க கில்லர்ஜிக்கு தெரியும் என்று நினைக்கிறேன் இனிய சம்பவங்களை நினைத்து தேற்றிக் கொள்ளலாம்

  பதிலளிநீக்கு
 16. கில்லர்ஜியைப் போன்ற சகோதரன்தான் நானும். உடலும் மனமும் முழுமை பெறாமல் நாற்பதாண்டுகள் வாழ்ந்து மறைந்தாள் என் இளைய சகோதரிகளில் ஒருத்தி. கடைசி ஆண்டுகளில், அவள்மீது இரக்கம் காட்ட விரும்பினவர்கள் கூட, அவளை வெறுக்கும்படியான நிலையில் தன்னை உணராமலேயே மறைந்து போனாள். யாரிடம் சொல்வது! கில்லர்ஜிக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
  -இராய செல்லப்பா நியூஜெர்சி

  பதிலளிநீக்கு
 17. சாதாரண மக்களைப்போல இவர்களைப்பற்றிய நினைவுகளை நம்மிலிருந்து அவ்வளவு எளிதில் பிரிக்க முடியாது. அவர்களின் கள்ளமில்லா பாசம் அப்படி.

  வனிதாவின் ஆன்மா சாந்தியடைய எனது வேண்டுதல்களும். சகோ கில்லர்ஜியும் அதிலிருந்து மீண்டு வெளியில் வரவேண்டும்.

  பதிலளிநீக்கு
 18. மனம் கனக்கிறது...

  சகோதரியின் ஆன்மா சாந்தி அடைய எனது பிரார்த்தனைகளும்..

  அண்ணாவிற்கும், அவரது குடும்பத்திற்கும்.. இறைவன் துணை இருப்பார்...

  பதிலளிநீக்கு
 19. நடுங்கிவிட்டது இதயம்
  கில்லர்ஜிக்கு இது பேரிழப்பு
  சொல்ல வார்த்தைகள் இல்லை தோழர்

  பதிலளிநீக்கு
 20. மிகவும் தாமதமாக இப்போதுதான், இந்தப் பதிவின் மூலமாகவே தகவல் அறிகிறேன். ஆறுதல் வார்த்தைகள் எத்தனை கொண்டு வந்து குவித்தாலும், இழப்பை ஒருபோதும் ஈடுசெய்யமுடியாது. இழப்பின் வலியில் இருந்து மீள, பாசத்திற்குரிய கில்லர்ஜி சகோதரருக்கு ஆன்ம பலம் அளிக்குமாறு பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 21. சில நாட்களுக்கு முன் திரு. குமார் அவர்களது தளத்தில் திரு DD அவர்கள் இச்செய்தியினை தெரிவித்திருந்தார்...

  சில தினங்களாக உடல் நலக்குறைவால் - தளத்திற்கு வரவேயில்லை..

  இன்று காலையில் இந்த விவரங்களையறிந்து தாங்கொணாத துயர் எய்தியது மனம்.

  சகோதரியின் ஆன்மா சாந்தி அடையட்டும்..

  திரு கில்லர்ஜி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும்
  ஆறுதலையும் தேறுதலையும் இறைவன் அளித்தருள்வானாக...

  பதிலளிநீக்கு
 22. ஒருவருக்கு மேலும் மேலும் சோகம் வந்து சேருவது என்பதானது வேதனை. நண்பர் கில்லர்ஜிக்கு இறைவன் உரிய தைரியத்தைக் கொடுக்க பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 23. பாசத்திற்குரிய சகோதரியை இழந்து தவிக்கும் சகோதரர் கில்லர்ஜிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். கில்லர்ஜி இந்த சோகத்தில் இருந்து மீள இறைவனை வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 24. படித்தேன்! யாருக்கோ, எங்கோ நடந்தது என்று நினைத்துப் படித்துக் கொண்டிருந்தவன் ‘அக்குழந்தையின் அன்பு சகோதரர் வேறு யாருமல்ல நம் அன்புப் பதிவர் கில்லர்ஜி’ என்ற வரியைப் படித்ததும் உறைந்து அங்கேயே தேங்கி விட்டேன்! மிகவும் அதிர்ச்சி! கில்லர்ஜி மிகவும் மென்மையான உள்ளம் படைத்தவர். அவருக்கு இப்படி மீண்டும் மீண்டும் சோதனைகள் வருவது கண்டு உண்மையிலேயே மிகவும் வேதனைப்படுகிறேன்.

  கில்லர்ஜி அவர்கள் தன் மனைவியார் பற்றியும், பிள்ளைகள் பற்றியும் எழுதியவற்றைப் படித்திருக்கிறேன். ஆனால், இந்த அம்மாவைப் பற்றி அவர் எழுதவில்லையா அலது அவர் எழுதி நான் படிக்கத் தவறி விட்டேனா எனத் தெரியவில்லை. இப்பொழுதுதான் அறிகிறேன்! என்ன சொல்வதெனவே புரியவில்லை. ப்ச்!...

  பதிலளிநீக்கு
 25. உள்ளம் சுட்டெரிக்கும் துயரம்
  படித்துத் தளர்ந்து விடுகிறேன் - நானும்
  தம்பி கில்லர்ஜி அவர்களின் துயரத்தில்
  பங்கெடுக்கின்றேன்! - அவரது
  குடும்பத்தாருக்கு - எனது
  துயரத்தையும் வெளிப்படுத்துகிறேன்!

  பதிலளிநீக்கு
 26. முழு விபரமும் தங்கள் பதிவைப் பார்த்தே அறிந்து கொண்டேன் ,அவருக்கு இறைவன் ஒரு மகிழ் வான வாழ்க்கையை அளிக்க வேண்டிப் பிரார்த்தனைகள்

  பதிலளிநீக்கு
 27. வணக்கம்

  துணைவியரைபிரிந்து வாழும் கில்லர்ஜி அண்ணா அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 28. இந்த பதிவை படிக்கும் போது மனம் கனத்தது என்னவோ உண்மை.

  பதிலளிநீக்கு
 29. கேட்கவே கஷ்டமாக இருக்கிறது. நண்பர் திரு Killerji அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  பதிலளிநீக்கு
 30. மனம் கனத்து விட்டது.

  இறைவனை இனியாவது அவருக்கு எந்த சோதனையும் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு