வெள்ளி, 30 டிசம்பர், 2016

சமையலறை ஊழலும், புரியாத பெயரும், மோடியும்

ஒரு மாதம் முன், எனது கணவரின் தம்பி மகள் அவள் படிக்கும் நடனத்தில் முதுகலைப் பட்டப்படிப்பின் ஒரு பகுதியாக, ஆய்வு ஒன்றிற்காக எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள்.

எங்கள் குடும்ப வீட்டில் ஒரு சிறு விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் குடும்பத்துடனான விருந்து அது. இதில் சில வயதானவர்களும் இருந்ததால் வட இந்திய உணவு வகைகளுடன் தென்னிந்திய உணவு வகைகளும் செய்திருந்தேன். குழுவில் மற்றொருவரும் சப்பாத்தி கொண்டு வந்துவிட்டதால் சப்பாத்தியும், அதற்குத் தொட்டுக் கொள்ளச் செய்தவையும் மீந்து விட்டது. அன்று இரவும், மறு நாளும் ஏதோ நாள், கிழமை, திதி அது இது என்று சொல்லி யாரும் பகிர்ந்து எடுத்துச் செல்லவில்லை. என்னைப் போன்றவர்கள் “நீங்க ஏதாச்சும் செய்வீங்க” என்று சொல்லி, இந்தச் சமாச்சாரங்கள் எதுவும் பார்க்காத, பின்பற்றாத என் தலையில் கட்டப்பட்டது!

20 சப்பாத்தியை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன். சப்பாத்திகள் என்னைப் பார்த்து, நீதான் ஏதேதோ உரு மாற்றிப் பெயர் வைத்து காமா சோமானு என்னவோ செய்வியே அப்படி உனக்கு ஒரு சவால் என்று என்னை ஏளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தன.

“ஓ பெரிம்மா…ப்ளீஸ் இப்போ சப்பாத்தி வேணாம் பெரிம்மா”

“அடப்பாவி நானும் அப்பாவும் மட்டுமே இத்தனையும் வைத்துக் கொண்டு என்ன செய்வது? அதுவும் நாங்க ரெண்டு பேரும் ச்ச்ச்ச்ச்சோ ச்வீட்”

ஊழல்களின் செல்ல நோட்டுகளான 500ம், 1000மும் செல்லா நோட்டுகளாகியிருக்கும் நேரத்தில்....

ஹும், மோடி இப்படியான செல்லா சப்பாத்திகளுக்கும், உணவுவகைகளுக்கும் அபராதம் ஏதும் விதித்துவிடுவாரோ? உணவு வங்கி என்று ஆரம்பிப்பாரோ? யார் வீட்டிலேனும் உணவு மீந்தால், க்ளீன் இந்தியா அதனால் அதைத் தெருவில் எறியக் கூடாது. குளிர்சாதனப்பெட்டியில் பதுக்கக் கூடாது! தனியொருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம், நமக்கு எதிரியான பாக்கிஸ்தானிலேயே ஒன் டிஷ் லா போட்டான். நாம் மட்டும் சளைத்தவர்களா என்ன? அதனால் அதிகமாக மீறும் உணவினை அழகாக பேக் செய்து, காலாவதியாகும் தேதி எழுதி, உடனே உணவு வங்கியில் கொண்டு சேர்க்கவும் என்று திடீரென்று ஓர் ஆணை இட்டால்? சென்னை முழுவதும் பெரிய வரிசை நிற்குமே! என்று அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் முடிச்சுப் போட விபரீதமான எண்ணங்கள் தோன்றியது.

மகனிடம் பேசினேன். உடனே அவன் பேசாம மோடிகிட்ட, மருந்துக்கெல்லாம் காலாவதியாகும் தேதி கொடுக்கறா மாதிரி நோட்டுலயும் காலாவதி தேதி அடிக்கச் சொல்லிடு, நீயும் சப்பாத்தில காலாவதி தேதி போட்டு தப்பிச்சுருலாம்….அதுவும் சப்பாத்திய நீ பதுக்கினா மோடி என்ன வந்து பார்த்துட்டா இருக்கப் போறாரு” என்று என்னைக் கலாய்த்தான்.

டேய் என்னடா இந்தச் சப்பாத்திய என்ன பண்ணுறதுனு ஐடியா கொடுனா இப்படி ஏடாகூடமா சொல்ற..ஏதாவது ஐடியா கொடுடா

ம்மா அந்த 2000 ரூபாய் நோட்டைக் கொஞ்சம் பாரு……நல்லா பாருமா…”

அட பரவாயில்லையே..…முன்னாடில்லாம் மில்க்மெய்ட் டின்னோட ஒரு பேப்பர் வித வித ரெசிப்பியோட வரும். நான் கூட ரெசிப்பி பார்த்துதான் வாங்குவேன். அது மாதிரி….நோட்டுல ஏதாவது ரெசிப்பி வந்துருக்கோ லென்ஸ் வைச்சுப் பார்க்கணுமோ?!

“ஐயோ அம்மா 500, 1000 ஒழிச்சுட்டு, ரெண்டையும் கலக்கி 2000 ஆக்கிருக்கார்ல புதுசா அதச் சொன்னேன்….…….ம்மா…ம்மா வெயிட்….2000…நோட்டுல ரெசிப்பியா நல்ல ஐடியா……நல்ல டிமான்ட் இருக்குமே.. போணியாகுமே..….”

“என்னடா நீ... அது ஜனகராஜ் ஸ்டைல்டா…எல்லா ஸ்னாக்ஸ்லயும் 100 கிராம் போட்டு நல்லா கலக்கி அதுல 100 கிராம் கேப்பாரு..காலாவதியானது! ஹும் அதே மாதிரி சமையல்ல மீந்தத செஞ்சா.. ஏண்டா அது அரதப் பழசு எரிச்சகறிடா…”

“போம்மா எது சொன்னாலும் ஒரு பேரைச் சொல்லிடற.. ஆள விடு…”

முதலில் முந்தைய தினம் கலந்து கொண்ட உறவினரில் என்னைப் போன்று ஜாலியாக, எந்த மீன மேஷமும் பார்க்காமல் ருசித்துச் சாப்பிடுபவர்களுக்கு அழைப்பு விடுத்தேன்.

‘ஹேய் புதுசா ஒன்னு ட்ரை பண்ணறேன்… ஸோ வந்துருங்கப்பா.”

சோதனை எலிகள்?…..ம்ம்ம் அப்படியும் வைத்துக் கொள்ளலாம்!

எப்போதுமே இப்படித்தான். நான் புதிதாக ஏதேனும் செய்வதாக இருந்தால் இவர்களுக்குக் கண்டிப்பாக அழைப்பு உண்டு.

குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தேன். ‘குளிர் தாங்கல….குளிரிலிருந்து எப்போது எங்களை வெளியில் எடுப்பாய்’ என்று என்னை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தன சன்னா மசாலா, கோஃப்தா, வெந்த வேர்க்கடலை காய் சாலட், கொத்தமல்லி புதினா சட்னி.

எல்லாவற்றையும் வெளியில் எடுத்தேன். என்னவோ செய்தேன். அது ஊழல் ரகசியம்! வெளியில் சொல்ல முடியுமா? மோடியிடம் நீங்கள் போட்டுக் கொடுத்துவிடுவீர்கள்!

உருவை மாற்றிய பிறகு, அதற்கும் மேலே உரு தெரியாத அளவிற்குப் பச்சைப் போர்வை போல் கொத்தமல்லி தூவினேன். கோ க்ரீன்!! ஆங்காங்கே பொடியான வெங்காயம் தூவினேன். மேலே ஆங்காங்கே ஒரு ஸ்பூன் கெட்டித் தயிர் விட்டேன். வெள்ளைத் தயிரை அப்படியே வைத்தால் அழகாய் இருக்குமோ? அதனால், தயிரின் மேல் தக்காளி சாசை ஒரு பொட்டு போல் வைத்து, நடுவில் ஒரு சப்பாத்தியை கோன் போல சுருட்டி நுனி பாகத்தை நடுவில் செருகி, வைக்க அது அதிசயமாய் நிற்க, அதன் மேல் பாகத்தில் பூ சாடி போல் இருந்த வாயில் கொத்துமல்லித் தழைகளைக் காம்புடன் நிற்க வைத்து…அலங்காரமாக வைத்தேன்.
எப்போதுமே புதிதாய் ஒன்று செய்ததும் அதற்குப் புரியாத மொழியில், புரியாத வகையில் ஒரு பெயர் சூட்டும் நிகழ்வை மனதில் நடத்துவது போல் அன்றும் அவர்கள் வரும் முன் மனதிற்குள் நிகழ்த்தினேன்! சூட்டினேன்!

இந்த மீந்ததற்கு மாறுவேடம் இட்டு இப்படி அலங்காரமாக்கி, புரியாத பெயர் வைத்து சேல் போட முயன்றேன். அப்படியேனும் போணியாகுமா என்ற நப்பாசைதான்!

ஒவ்வொருவராக வந்து எட்டிப் பார்த்தார்கள்.

“ஹும் என்னத்தெல்லாமோ கலந்து காமா சோமானு வைச்சுருக்கா” இது என் அப்பா…

“வாவ்! அண்ணி கலக்கிட்டீங்க போங்க. என்னென்னவோ கலர் கலரா இருக்கே ஸ்பீக்கர் ஷேப்பை பூச்சாடியாக்கி….ம்ம்ம்”

“ஓ! பெரிம்மா யு ரியலி ராக்! ஒல்ட் வைன் இன் ந்யூ பாட்டில்! ஆம் ஐ ரைட்” என்று சில கிளிக்ஸ் எடுக்க முயன்றாள்.

ஐயோ ரகசியம் வெளியாகிடுச்சே! “ஹேய் உன் ஃபேஸ்புக்ல எல்லாம் போட்டுறாத”

“ஓ! அண்ணி அப்ப நேத்து மீந்ததா…..” என்று அவர்கள் முகங்கள் அஷ்ட கோணலாக...

“ஹேய் அப்படில்லாம் இல்லப்பா…….”

பெண்ணின் நண்பன் வந்தான்.  நேரே வந்து இதன் அழகில் மயங்கி(??!!!) ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டான்! ரியலிட்டி ஷோவில் முடிவுகளை வெளியிடத் தாமதிக்கும் அந்தக் கடைசி தருணங்களில் பின்னணியில் ஒரு இசை ஒலிக்குமே, பார்வையாளர்கள் ஒருவித டென்ஷனில் முகத்தை வைத்துக் கொள்வார்களே, அப்படி நானும், என் முகத்தைக் கைகளால் மூடிக் கொண்டு காதுகளை தீட்டிக் கொண்டு……
அவன் வாயில் ஸ்லோ மோஷனில் போட்டு, ஸ்லோ மோஷனில் மெல்ல….வந்தன வார்த்தைகள், “வாவ் ஆண்டி ஆசெம்! கலக்கிட்டீங்க போங்க”

“ஹே’…..

மெய்யாலுமே “கலக்கல்”தாம்பா!!! என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்! சரி அதன் திருப்பெயரைச் சொல்லவே இல்லையே…….“லெங்லுஓ ஷிப்பின் சாட்” (கில்லர்ஜி, அபயா அருணா சுப்!).

---கீதா






வியாழன், 29 டிசம்பர், 2016

வாட்சப்பில் தமிழ்ப் பதிவர்களுக்குத் திரட்டி!!!!

Image result for tamil language pictures
படம் இணையத்திலிருந்து

நாம் ஒவ்வொருவருக்கும் நம் எழுத்துகள் ஏதேனும் மாத இதழிலோ, வார இதழிலோ வெளிவராதா என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது. நம் பதிவர் நண்பர்கள் பலரும் அதனைத் தீவிரமாக முயற்சி செய்து வெற்றியும் கண்டுள்ளனர். என்றாலும் அப்படி முயற்சி செய்யாமலும், முயற்சி செய்து, வெளிவராமலும் ஏக்கத்துடன் இருப்பவர்களுக்கு, நாமே அரசன், நாமே மந்திரி என்று உதவும் வகையில் வலைத்தளம்/வலைப்பூ இருக்கிறது. அதுவும் இலவசமாகத் தொடங்கி எழுதலாம் என்றால் மகிழ்ச்சிதானே! அப்படித்தான் நாம் அனைவரும் நமது அனுபவங்களையும், நாம் கற்றவற்றையும், உணர்ந்தவைகளையும், தேடல்களையும், கற்பனைகளையும், புனைவுகளையும், சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தும், நல்லது நடந்தால் பாராட்டியும் எழுதி வருகிறோம்.

அதுவும் நம் வலைப்பதிவர்கள் ஒருவருக்கொருவர் அவரவர் திறமையை வெளிப்படுத்தியும், நட்புடனும், அன்புடனும், எதிர்மறைக் கருத்தானாலும் சரி, நேர்மறைக் கருத்தானாலும் சரி அதனை வெளிப்படுத்திக் கொண்டும் வருகிறோம். கருத்துப் பரிமாற்றங்களினால் நாம் பல கற்க முடிகின்றது. பிறர் அனுபவங்களையும் அறிய முடிகிறது. அதிலிருந்து பாடங்களும் கற்று வருகிறோம் என்றால் மிகையல்ல.

அப்படி நாம் எழுதுவது இவ்வுலகம் முழுவதும் இருக்கும் தமிழன்பர்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்றால் அதற்கு ஒரு திரட்டி இன்றியமையாததுதானே! பல திரட்டிகள் இருந்தன என்றாலும் அனைத்தும் வெகு சில நாட்களில், மாதங்களில் செயலற்றுப் போயின என்பது மிகவும் வருந்தத் தக்கதே. திரட்டிகளில் தமிழ்மணம்தான் சிறப்பான திரட்டியாக இருந்து வந்தது என்றாலும், அதில் தரம் என்பது குறைந்து வரத் தொடங்கியது. அதன் செயல்பாடு பல சமயங்களில் புரியாமல்தான் இருந்து வந்தது. நல்ல திரட்டியாக இருந்து வந்த தமிழ்மணம் திரட்டி சமீபகாலமாகச் சரியாகச் செயல்படவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஏனோ அதில் பல சிக்கல்கள் இருந்து வருகின்றன. அதனைப் பற்றி தெரியாததால் இங்கு குறிப்பிடவில்லை. நமக்குக் கவலையில்லை.

ஏன் கவலையில்லை? இதோ நம் தமிழ் வலையுலகிற்கான, தமிழ் எழுத்தாளர்களுக்கான, நமக்கே நமக்கான ஒரு திரட்டி உருவாகி வருகிறது. அதற்காக நமது புதுக்கோட்டை வலையுலக அரசர்களான முத்துநிலவன் ஐயா/அண்ணா, மற்றும் செல்வா அவர்களும் வலைச் சித்தர், சுறு சுறுப்புத் தேனீ என்று செல்லமாகப் பெயர் சூட்டபெற்ற டிடி அவர்களும் இணைந்து தமிழ்வலையுலக பதிவர்கள் அனைவரையும் ஒரே குடும்பமாக்கிடவும், நம் பதிவுகளை அதில் இணைக்கும் திரட்டியாகவும், அனைவரையும் ஒரே இடத்தில் சந்திக்கும் படியுமாக காண்செவிக் குழுவில் தமிழ் வலைப்பதிவகம் என்ற திரட்டி ஒன்றை முன்னோட்டமாகத் தொடங்கிட இதோ வெற்றி நடை போட்டு வருகிறது.

நிர்வாகக் குழுவினர் அனைவரது உழைப்பிற்கும், அதனைச் செயல்வடிவமாக்கியதற்கும் பதிவர்கள் அனைவரும் சிரம் தாழ்த்தி வணக்கம் கூறுகிறோம். எங்கள் அனைவரது பாராட்டுகளும், வாழ்த்துக்களும்!

இப்போது இது வரை அறிந்திராத பல வலைப்பதிவர்களையும், புதிய வலைப்பதிவர்களையும் இதில் காண முடிகிறது. பலரது படைப்புகளும் பலரையும் சென்றடையும் என்பதும் உறுதி. அதற்கு உதவும் காண்செவி தொழில் நுட்பத்தையும் பாராட்டுவோம்! நம் எல்லோரையும் இணைக்கும் இணையத் தொழில்நுட்பத்தையும் பாராட்டுவோம்! என்னே ஓர் அருமையான வாய்ப்பு!

அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை அளித்த நம் அன்பர்கள், நிர்வாகக் குழுவினருடன் நாம் விதிமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும்தானே! எனவே நாம் அனைவரும், அதில் தேவையற்ற செய்திகளைப் பரப்பாமல், பகிராமல், நாம் எழுதும் இணைப்புகளை மட்டுமே அதில் இணைத்துப் பகிர்ந்து, பிற பதிவர்கள் எழுதும் பதிவுகளையும் முடிந்தவரை, நேரம் உள்ள போது வாசித்துக் கருத்திட முடிந்தால் கருத்திட்டு, இல்லை என்றால் வாசித்து அவர்களை ஊக்கப்படுத்தாலாமே! தமிழ்வலையுலக ஒற்றுமை தழைத்தோங்கிடுமே!

இணையாத வலைப்பதிவர்கள் இணையுங்கள். தங்கள் திறமையை, எழுத்தாற்றலை வெளிப்படுத்துங்கள். புதிதாய் எழுத வருவோருக்கும் இது பொருந்தும்! தமிழ் எழுத்தாளர்கள் பெருக வேண்டும். மேன்மேலும் சிறப்படைய வேண்டும். தமிழ் மொழி! தமிழ் எழுத்துக்கள் இவ்வுலகம் முழுவதும் சென்றடைந்து சிறக்கட்டும்! தழைக்கட்டும்! தமிழின் மணத்தைப் பரப்புவோம்.

தயவான வேண்டுகோள்! நம் பதிவர் நண்பர்கள் அதில் தங்கள் படைப்புகளை மட்டுமே இணைத்துப் பயன் பெறுங்கள். தங்கள் பெயர், ஊர், தளத்தின் பெயர், மற்றும் அலைபேசி எண் அல்லது மின் அஞ்சல் முகவரி கொடுத்து அறிமுகப்படுத்திக் கொள்ளலாம். வேறு செய்திகள், தகவல்கள் வேண்டாமே! அவற்றைப் பகிர பல குழுக்கள், நம் நண்பர்களின் தனிப்பட்ட காண்செவி எண் உள்ளதே! அதில் பகிர்ந்து கொள்ளலாம் இல்லையா! தேவையற்றவை வரும் போது நாம் இணைக்கும் பதிவுகளின் இணைப்புகள் எங்கோ காணாமல் நம் கண்களில் படாமல் போகும் வாய்ப்பும் உண்டுதானே!

எனவே நாம் அனைவரும் நிர்வாகக் குழுவுடன் ஒத்துழைப்போம், மேலும் சிறக்கச் செய்வோம்! முத்தாய்ப்பாக, நம் அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய புகழ்பெற்ற வலைப்பதிவர் தேனம்மை அவர்கள் தன் தளத்தில் இட்டிருக்கும் வார்த்தைகளுடன்

வலைப்பதிவர்  ஒற்றுமை  ஓங்கட்டும்.!
என்றும்  நம்முள்  வலிமை  பெருகட்டும்.!

துளசிதரன்,  கீதா




ஞாயிறு, 25 டிசம்பர், 2016

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 4 - நவராத்திரி கொலு

இந்த வருட நவராத்திரி கொலு - என் பார்வையில் பட்டதை மூன்றாவது விழியிலும் சேமித்தேன். கொலு முடிந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. தாமதமாகத்தான் வெளியிடுகின்றேன். ஒரு வழியாக இன்று வெளியிட்டுவிடலாம் என்று இதோ உங்கள் பார்வைக்கு....கொலு மட்டும்தான் சுண்டல் எதுவும் கிடையாது! ஊசிப்போய்விட்டது. 

நல்ல காலம்! அந்த நேரத்தில் மோடியின் திட்டம் அறிவிக்கப்படவில்லை! .....பட்டிருந்தால் பல பொம்மை வியாபாரிகளுக்கும், கலைஞர்களுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கும்!  இப்போது டிசம்பர் மாத இசை விழா சோக கீதம் பாடுவது போல் அப்போதே நவராத்திரி பொம்மைகள் எல்லாம் சோகமே வடிவாக இருந்திருக்கும். மக்கள் எல்லோரும் ஏடிஏம் வாசலிலும், வங்கிகளின் வாசலிலும் தவமிருந்திருப்பார்கள்! 

இதோ புகைப்படங்கள்..













கும்பகர்ணன் செட் 

















-----கீதா




சனி, 17 டிசம்பர், 2016

வார்த - என் பார்வையிலும், எனது மூன்றாவது விழியின் பார்வையிலும் -3

சென்னையின் இயல்பு வாழ்க்கையையே ஒரு சில மணி நேரங்களில் வாரிக் கொண்டுச் சென்ற வார்த. ஒரு சில மணி நேரங்கள்தான்! ஆனால், சுழற்றிச் சுழற்றி அடித்து வாரி ஆட்டம் போட்டது. இயற்கை அன்னையின் சிக்சர் பௌன்சர்! இயற்கை அன்னை எவ்வளவு அழகானவளோ, எவ்வளவு அமைதியானவளோ, எவ்வளவு நன்மை தருவாளோ, அத்தனைக்கும் நிகராக, அந்த அன்னை சீற்றம் கொண்டால் பெரும் சீற்றத்துடன், பேரிசைச்சலுடன், தாண்டவம் ஆடி எல்லாவற்றையும் புரட்டியே போட்டும் விடுவாள். எங்கள் வீட்டின் - முதல் மாடி - பால்கனி வழியாகத் தண்ணீரை அறைக்குள் தள்ளிக் கொண்டே இருந்தாள். நாங்களும் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் தள்ளி விட்டுக் கொண்டே இருந்தோம். அன்னையின் இந்தச் சீற்றத்திற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டே, பல எண்ணங்களுடன், நான் வார்த புயலையையும் , மழையையும் ரசித்தேன்.


புயல் காற்று நின்றதும் நான் எங்கள் பகுதியைப் பார்வையிடச் சென்றேன். புயல் கரையைக் கடந்து சென்றதும், போருக்குப் பின் அமைதி என்பது போல் அப்படியொரு அமைதி. ஆனால் நிலமோ, போருக்குப் பின் வீரர்களும், யானைகளும், குதிரைகளும் மடிந்து இரத்த வெள்ளத்தில் பிணக்குவியல்கள் மலை போல் காணப்படுவது போல், மரங்கள் வேரோடும், ஒடிந்தும் வீழ்ந்து, சாய்ந்திருக்க, நின்றிருந்த மரங்களில் பல, கணவரைப் போரில் இழந்த விதவைகள் போல் இலைகள் உதிர்ந்து மொட்டையாய், ஒரு போர் பூமி போல் காட்சியளித்தது. அளிக்கிறது. ஆடி அடங்கியபிறகு சிறிது நேரத்தில் வருடிக் கொடுக்கும் சிறிய காற்று!

“அடிப்பாவி! நீயா சற்று நேரம் முன்பு இப்படித் தலைவிரித்தாடியது? ஒன்றுமே நடவாதது போல் இப்படி வருடிக் கொடுத்துக் கொண்டு அமைதி காக்கிறாயே! பிள்ளையையும் கிள்ளி விட்டுத் தொட்டிலையும் ஆட்டுவது போல் அல்லவா இருக்கிறது உன் செயல்! உன் சீற்றத்திற்கான காரணம்தான் என்னவோ?” என்றும் என் மனம் கேட்டது.

“ஏய் மனிதா நீ உன் பேராசையில், உனக்கு நிழல் கொடுத்த, கனிகள் கொடுத்த, மண் அரிப்பைத் தடுத்த, நிலத்தடி நீரை சேமிக்க உதவிய என் மரங்களை வெட்டி வீழ்த்தி அதில் அடுக்கடுக்காய் கட்டிடங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் என்று கட்டினாயே! இப்போது பார் அதே மரங்களை நான் வீழ்த்துகிறேன்! இப்போது பார் நீ வசிக்கும் நிலத்தை. வெட்ட வெளியாகிவிட்டது இல்லையா? ஒவ்வொரு மரத்தையும் வளர்க்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை உற்றுக் கவனித்துக் கற்றுக் கொள்! இனி வரும் கோடை மேலும் கடும் கோடையாக இருக்கும் என்பதை நினைவில் நிறுத்திக் கொள். அத்தண்டனையை அனுபவி. இனியேனும் உனக்குப் புத்தி வரட்டும்!” என்று சொல்கிறாளோ என்பது போல் தோன்றியது.

"சரி மனிதனைத் தண்டிக்க நினைக்கிறாய்! மிகவும் சரியே! ஆனால், வாயில்லா உயிர்களான பறவைகளும், குஞ்சுகளும், இன்னும் குஞ்சுகள் வெளிவராத நிலையிலான முட்டைகளும் அல்லவா  அன்று இறந்தன." என்ற என் கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை. இல்லை இல்லை என் மூளைக்குள் அதற்கான பதில் இல்லை!
 
இந்திராநகர் பேருந்து நிறுத்தம்
நான் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பகுதி
எங்கள் பகுதி முழுவதும் நிழற்சாலைகள். பசுமை நிறைந்த இடம். ஆனால், நான் கண்டதோ? நான் நடைப்பயிற்சி செய்யும் மரங்கள் அடர்ந்த நிழற்சாலைகள் அனைத்தும் வெட்டவெளியாய், வேரோடு சாய்ந்த பெரிய மரங்கள், இலைகள் இழந்து மொட்டையாய் மரங்கள், கிளைகள் ஒடிந்து ஊனமுற்ற மரங்கள் என்று சாலையில் குவிந்து இருந்தக் காட்சியைக் கண்டு என் மனம் வெம்பி, விக்கித்து நின்றுவிட்டேன், இனி எத்தனை வருடங்கள் ஆகும் மீண்டும் இச்சாலைகள் அனைத்தும் முன்பு போல் நிழல் தருவதற்கு?

மறு தினமே அடித்த வெயிலின் கடுமை தெரிந்தது! பல இடங்கள் சென்றேன். அனைத்துச் சாலைகளிலும் மரங்கள் வீழ்ந்து போக்குவரத்தைத் தடுத்திட போக்குவரத்து நெரிசல். போக்குவரத்தை ஒழுங்கு படுத்திட நிறையக் காவலர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். பல இடங்களில் கார்களும், கட்டிடங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பேருந்து ஒன்று கவிழ்ந்தது என்று சொல்லப்பட்டு விழுமியம் பகிரப்பட்டது. எனக்குக் கிடைக்கவில்லை.

எல்லா இணையத் தொடர்புகளும் அற்று, அலைபேசிகள் தொடர்புச் சேவையும் செயலிழந்து, மின்சாரம் தடைப்பட்டு, தண்ணீரில்லாமல் என்று இதுவரை இன்னும் முழுவதும் மீண்டபாடில்லை. இணையத் தொடர்பும், அலைபேசித் தொடர்புகளும், மின்சாரமும் அவ்வப்போது செயலிழந்து விட்டுவிட்டுத்தான் வருகிறது.

அன்று புயல் நின்றதும், அந்தந்தப்பகுதியைச் சேர்ந்த மக்களே, பொதுச் சேவையை எதிர்பார்க்காமல் மரங்களை வெட்டி அகற்றிச் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தத் தொடங்கிவிட்டனர். தற்போது பொது மக்களுடன், பொதுச் சேவைப் பணியாளர்களும், மலை போல் குவிந்து கிடக்கும் மரங்களையும், குப்பைகளையும் அகற்றிடத் துப்புரவு பணியாளர்களும் இணைந்து கொண்டு மீட்புப் பணிகள் நடக்கின்றது, என்றாலும், சென்னை முழுவதும் இயல்பு நிலைக்குத் திரும்பிட இன்னும் பல நாட்கள் ஆகலாம் என்றே தோன்றுகின்றது. கட்டிடக் காடாக இருந்த சென்னை இப்போது காடு போல் காட்சியளிக்கிறது. கட்டிடங்கள் பெருகிவரும் சென்னையில் இத்தனை மரங்களா என்ற வியப்பு ஒரு புறம். ஐயகோ! இருந்த மரங்களும் இப்படி வீழ்ந்துவிட்டனவே என்று வேதனை மறுபுறம். என்ன செய்வது? நம்மை எல்லாம் மீறிய வலுவாய்ந்த இயற்கையின் சீற்றத்தை எதிர்க்க முடியுமா!!! 

நான் எடுத்த சில புகைப்படங்களுடன் எனது உறவினர் அனுப்பிய மூன்று புகைப்படங்களும்.

 
படத்திலேயே எந்த அலுவலகம் என்று தெரிந்துவிடும். டைடல் பார்க்கிற்கு அடுத்திருப்பது
 டைடல் பார்க் முன் - புயல் நின்றதும் எடுத்த படம்மேலே நந்தனம் சிக்னலில்  
கீழே கோடம்பாக்கம் பகுதி
 மறுதினமே வெயில் சுளீரென்று அடித்தது
 
 கீழே நீலாங்கரையில்
 


----- கீதா
படங்கள் எல்லாம் புயல் அன்றும் அடுத்தும் எடுத்து, பதிவும் எழுதியிருந்தாலும் இணையத் தொடர்பு சரியாக இல்லாததால் இன்றுதான் வெளியிட முடிகிறது. இன்னும் முழுவதும் சரியாகவில்லை.





வெள்ளி, 9 டிசம்பர், 2016

தமிழகத்திற்குத் தாயாகிய அம்மு

Image result for jayalalitha as ammu
படம் இணையத்திலிருந்து

கோமளவல்லி! பாட்டியின் பெயர் சூட்டப்பட்டவர. 1948 ஆம் வருடம், ஃபெப்ருவரி மாதம் 24 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள மேலக்கோட்டையில் பிறந்தார்.. பெற்றோர் வேதவல்லி-ஜெயராம். கோமளவல்லி, ஜெயலலிதா ஆன பிறகும், அம்மு என்று அவரது அம்மாவாலும், சுற்றத்தாராலும், பின்பு அவருடன் நடித்தவர்களாலும், நட்பு வட்டத்தாராலும் அழைக்கப்பட்டவர்.

சிறு வயதில் தாத்தா பாட்டியால் வளர்க்கப்பட்டவர். அன்னையின் அருகாமைக்கும், அன்பிற்கும் ஏங்கியவர். அன்னை வேதவல்லி, சந்தியா எனும் பெயரில் வெள்ளித் திரையில் நடித்துவந்ததால், அம்மு சென்னைக்கு வந்து அவருடன் இருந்த போதும், மிகவும் நன்றாகப் படித்து 10 வது வகுப்பில் மாநிலத்தில் முதல் மாணவியாக வந்தாலும் அந்த மகிழ்வைப் பல குழந்தைகளைப் போல், தன் தாயுடன் நேரம் செலவிட முடியாததால் கொண்டாடிட முடியவில்லை. பள்ளியில் நட்புகள் வட்டத்தில் இவரை நடிகையின் மகளாகச் சற்று ஏளனமாகப் பார்த்ததால் நட்புகள் இல்லை. கல்லூரியில் தொடர்வதற்கான உதவித் தொகை கிடைத்தும் தொடர முடியவில்லை. விருப்பமானதைச் செய்ய முடியவில்லை.

பதின்ம வயதில், அவருக்குப் பிடிக்காத திரை உலகில் அவரது தாயாரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். பிடிக்கவில்லை என்றாலும், பல்வகை நடனக் கலையிலும், இசையிலும் சிறந்து விளங்கியதாலும், தான் எடுத்துக் கொண்ட தொழிலைச் சீராகச் செய்ததாலும், தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பல படங்களில் நடித்து அத்துறையில், அப்போதைய காலக்கட்டத்தில், முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்தவர்.

அவரது 23 வது வயதில் தாய் சந்தியாவை இழந்திட, அதுவரை எந்தவிதப் பொறுப்புகளும் கையாண்டிராத அவர் என்ன செய்வதென்று அறியாமல் தவித்திருக்கிறார். பள்ளிக்காலம் முதல் எப்போதும் தனிமையிலேயே இருந்ததால், பல கசப்பான அனுபவங்களுக்கும் உட்பட்டு அதனால் நேர்ந்த பல அனுபவங்கள் அவரது அமைதியான,  அச்சத்துடன் இருந்த இயல்பை மாற்றத் தொடங்கியிருக்கிறது.
Image result for jayalalitha as ammu
படம் இணையத்திலிருந்து

பல படங்களில் எம்ஜிஆருடன் நடித்திருக்கிறார் என்பது மட்டுமின்றி ஜெயலலிதாவின் திறமைகளால் கவரப்பட்ட அவர், ஜெயலலிதாவை அரசியலில் அறிமுகம் செய்தார். ஜெயலலிதாவிற்கு அதில் விருப்பமில்லை என்றாலும் ஜெயலலிதாவிற்கும் அவரிடம் ஈர்ப்பு இருந்திருக்கிறது. விரைவிலேயே புகழ்பெறத் தொடங்கிக் கொள்கைப் பரப்புச் செயலாளராகவும், ஆங்கிலப் புலமையினால் ராஜ்யசபா உறுப்பினராகவும் ஆனார். தமிழ் மொழி தவிரப் பிற தென்னிந்திய மொழிகளும் அறிந்தவர்.

மக்கள்திலகத்தின் மறைவிற்குப் பிறகு எம்ஜிஆரின் வாரிசாக அடையாளப்படுத்தப்பட்டுக் கட்சியில் பல போராட்டங்களைச் சந்தித்து, கட்சியின் தலைவராகி, முதன் முதலாக எதிர்க்கட்சித் தலைவரானார். பின்னர், தமிழ்நாட்டின் முதல் இளம் வயது முதல்வராகி 3 முறை முழுமையாகத் தமிழகத்தின் முதல்வராக இருந்தார். பல தவறுகள் நேர்ந்ததும், சிறைக்குச் சென்றதும் எல்லோரும் அறிந்ததே!.

இப்போது பரவலாகப் பேசப்படும் பெற்றோர் குழந்தை வளர்ப்பு - உளவியல் வழியாகப் பார்த்தால், சிறு வயது, பருவ வயதில் எற்பட்ட தனிமை, தனது இளமைக்கால வாழ்வு குறித்து நிறைவேறாத சில ஏக்கங்கள், அம்மாவின் அன்பு, கூடப் பிறந்த சகோதர, சகோதரி என்ற குடும்ப வாழ்வு இல்லாமை (அவருக்கு ஒரு சகோதரி இருக்கிறார் என்ற செய்தி 2014ல், பங்களூர் தொலைக்காட்சிகளில் பரபரப்பாக வெளிவந்தது. இதைக் குறித்து “நமது” வலைத்தளத்திலும் உள்ளது.), சட்டசபையில் ஏற்பட்ட அவமானம்,  என்று பல காரணங்கள்தான் அவரது கர்வம், பிடிவாதம், மன உறுதி, ஆண்களின் மத்தியிலும், எல்லோரது மத்தியிலும், எல்லாவற்றிலும் தானே முன்னிற்க வேண்டும் என்ற தீவிரம் மற்றும் தன்னை யாரும் நெருங்கவிடாமல் வட்டம் இட்டது என்று அவரது இயல்பிற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், கல்லிற்குள் ஈரம் போன்று அவருள்ளும் அன்பு இருந்தது என்பதற்கான நிகழ்வுகளும் இருக்கத்தான் செய்கிறது.

தவறுகள் பல செய்தாலும், காவேரி நீர் விவகாரம், முல்லைப்பெரியாறு அணை விவகாரம், சமீப காலத்தில் தமிழீழம் என்று இவற்றில் உறுதியாகவும், சில நல்ல திட்டங்கள், அம்மா நலத்திட்டங்கள் என்று அறிமுகப்படுத்தியும் அதைச் செயலாக்கவும் செய்தார். நடுவண் அரசின் சில சட்டங்களைத் துணிச்சலுடன் எதிர்கொள்ளவும் செய்தார்.
அவரைச் சுற்றி ஒரு முகத்துதிக் கூட்டம். அவரைச் சுற்றி, அவர் நம்பிய ஒரு கூட்டம் அவருக்கு எதிராக விளையாடுகிறது என்பதை அவர் அறிவதற்கு ஏனோ தாமதமாகியது. அறிந்த நேரத்தில் காலம் கடந்து போனது. இறுதியில் எல்லோரையும் கடந்தே போனார். எதிர்க்கட்சியினர் கூட நேர்மறை எண்ணத்தில் கவிபாடினர். அவரது மரணத்தில் பல மர்மங்கள் உள்ளன என்று இப்போது பேசப்பட்டாலும், அவர் மறைந்து இதோ 4 நாட்கள் ஆகிவிட்டன.
Image result for jayalalitha as ammu
படம் இணையத்திலிருந்து

குன்றின் மேல் வைத்த விளக்காய்த் திகழ்ந்து வரலாறாய் மாறிய ஜெயலலிதாவை, அம்முவை அம்மாவாக மாற்றிய தமிழ் இதயங்கள் உண்மையிலேயே அவ்விளக்கை ஒளிர உதவிய குன்று என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். தமிழினத்தின் பண்பும். அன்பும் அப்படி என் நாட்டவராயினும், எவினத்தவாராயினும், எம்மதத்தவராயினும் அவர்களை எல்லாம் தமிழ் இனத்தின் அன்பிற்கு அடிமை ஆக்கிவிடும். 
செய்நன்றி மறவா தமிழினத்தின் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் - பென்னி க்விக்கிற்குத் தமிழினம் கொடுத்த இடத்தைப் பாருங்கள்! குல தெய்வத்திற்கும், திருவள்ளுவருக்கும் இணையான ஓரிடம்!!! குமுளிக்குச் சென்றிருந்த போது அண்ணன் வீட்டில் கிடைத்தது இந்த அழைப்பிதழ்.

அதனால்தானே, இங்கிலாந்திலிருந்து வந்த கிழக்கிந்தியக் கம்பெனியின் பொறியியலாளரான பென்னி க்விக், ஆங்கிலேய அரசு வேண்டாம் என்று சொல்லியும் கேளாமல் தன் சொந்தச் சொத்துக்களை விற்று பாலைவனமாய் மாறவிருந்த அன்றைய மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களை விளைநிலமாக்க முல்லைப்பெரியாறு அணையைக் கட்டி முடிக்க முடிவு செய்தார்.

நடிப்பார்வத்தில் கேரளாவிலிருந்து வந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் அதனால்தானே மரணம் வரை தமிழ் இனத்தின் இதயக்கனியாய் நின்று ஆட்சி புரிந்தார். அப்படித் திறமை உள்ளவர்களின் திறனைக் கண்டறிந்து, அவர்களைத் தன்னலமில்லா பொது நலவிரும்பிகளாக்கி, உலகளாவிய பேரையும், புகழையும் அவர்களுக்குத் தேடிக் கொடுத்துத் தானும் பயன் பெறும் இனம்தான் தமிழினம். வந்தாரை வாழவைக்கும் இனம்தான் தமிழ்னம். ஊரார் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளைகள் தானே வளரும் என நம்பும் இனம் தான் தமிழினம். அதுமட்டுமல்ல, நன்மையும், உண்மையும் எங்கிருந்தாலும் எவரிடத்திலிருந்தாலும் அவர்களை எல்லாம் தலை மேல் ஏற்றிக் கொண்டாடும் இனம்தான் தமிழினம்.

அப்படித்தானே “கல்விச் சாலையைத் தந்த ஏழைத் தமிழனாம்” பெருந்தலைவர் காமராசரை அரியணை ஏற்றியது. அப்படித்தானே சாதியும் மதமும் தீண்டாமையும் இறைவனின் தோளிலேறி அட்டகாசம் செய்த போது, சாதிக்கும், மதத்திற்கும் முன் மௌனமாகும் இறைவன் திராவிடர்களுக்குத் தேவை இல்லை என்ற புரட்சித் தலைவர் பெரியாரின் பின்னால் தமிழினத்தவர் அணிவகுத்தார்கள். அதனால்தானே அவ்வழி வந்த அண்ணாவையும், கலைஞரையும், எம்ஜிஆரையும், ஜெயலலிதா பார்ப்பனர், ஐயங்கார் என்பதையும் புறம்தள்ளி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்பித்து முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போட்டு அரியணை ஏற்றி அரசாள வைத்தார்கள். தமிழினத்திற்குத் தெரியும் பிறப்பால் பிராமணக் குலத்தவரான அவர் தமிழினத்துடன் திராவிட வாழ்க்கை வாழ்ந்து இறப்பால் திராவிடக் குலத்தவர் ஆவாரென்று.

அதன் பின், பொறுக்க முடியாதவை நிகழும் போது மட்டும் அரசாளும் பொறுப்பை மாற்றி மாற்றி கலைஞருக்கும், ஜெயலலிதாவிற்கும் கொடுத்ததும் அதனால்தானே. ஆனால், இப்போது இருவரில் ஒருவர் தமிழகத்தை விட்டுச் சென்று விட்டார். மற்றொருவரின் உடல் நலன் குன்றி வருகிறது. இனி யார்? எப்படி என்ற குழப்பம் தமிழ் இனத்தின் இதயத்தைத் துளைக்கிறது. இதே குழப்பம் பேரரறிஞர் அண்ணாவின் மரணத்தின் போதும் மக்கள் திலகம் எம்ஜிஆரின் மரணத்தின் போதும் உண்டானதுதானே. அரியணை ஏற தகுதி உள்ளவர்களைத் தமிழினம் கூடியவிரைவில் கண்டெடுக்கும். கண்டெடுத்து, பாறையிலும் வேர் இறக்கி கல்லுக்குள்ளும் ஈரம் காணும் தமிழினம், அவர்களைப் புடம் செய்து, தமிழினத்திற்கும் அவர்களுக்கும், நன்மையும், பேரும், புகழும் சேர்க்கும் வகையில் மாற்றியெடுக்கும் என்பது உறுதி.

(பின் குறிப்பு: சிற்றின்ப விரும்பிகளே நீங்கள் பேரின்ப விரும்பிகளாகத் தயாராக இருந்தால் மட்டும், செல்வம் சேர்ப்பதை விட - அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் போல, அப்படியே சேர்த்தாலும், மக்களுக்கும் சேவை செய்து, மக்கள் திலகம் எம்ஜிஆர், அம்மா போன்றவர்களைப் போல மக்களை ஈர்க்கும் சக்தியும், நாடே அழுது கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வகையில் ஆட்சி செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டும் அரியணைப் பக்கம் செல்லுங்கள். இல்லையேல், அவ்வரியணை உங்களை அதிகக்காலம் சுமக்காது. அப்படிச் சில காலம் உங்களைச் சுமக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் உங்கள் மறைவு இது போல் வரலாற்றுச் சம்பவமாக ஆகாது.)






சனி, 3 டிசம்பர், 2016

மாவோவாதிகள் தீவிரவாதிகளா?!!

கடந்த வியாழன் அன்று (24-11-2016) தண்டர் போல்ட்ஸ் கமாண்டோக்களுக்கும், நிலம்பூர் வனத்தில் தங்கியிருந்த மாவோவாதிகளுக்கும் இடையே நிகழ்ந்த போராட்டத்தில் இரண்டு மாவோவாதிகள் உயிரிழந்த செய்தி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. மார்க்ஸிஸ்ட் கட்சி ஆளும் கேரளாவிலுள்ள காடுகள் தங்களுக்குப் பாதுகாப்பான இடம் என்று மாவோவாதிகள் நினைத்திருக்கலாம். போராட்டத்தில் கொல்லப்பட்டவர்கள் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த குப்பு தேவராஜ் என்றழைக்கப்படும் குப்புசாமியும்(60) தமிழ்நாட்டைச் சேர்ந்த அஜிதா என்றழைக்கப்படும் காவேரியும்(40). இதில் குப்புதேவராஜிற்கு எதிராக முன்பு மதுரை வங்கிக் கொள்ளை சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாம். ஆனால், அஜிதாவிற்கு எதிராக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லையாம்.
Image result for maoist shot dead in nilambur
படம் இணையத்திலிருந்து

சமூகத்தில் நிகழும் அநீதிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும் என்ற தத்துவத்தை மேற்கொண்டு போராட்டத்தில் இறங்கிய மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் போராளிகள் இப்போது மாவோயிஸ்டுகள் என்று அழைக்கப்படுகின்றனர். 1976ல் மறைந்த சீனாவின் கம்யூனிஸ்ட் தலைவரான மாவோ சேதுங்கின் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் இப்பெயர் அவர்களுக்கு இடப்பட்டதாகவும் அல்ல இப்பெயரை அவர்களே தேந்தெடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இப்போதைய சிபி(P)ஐ (மாவோயிஸ்ட்) பொதுச்செயலாளர் கணபதி என்றழைக்கப்படும் முப்பளா லக்ஷமணராவ்(67) என்பவர். இவர் கொண்டப்பள்ளி சீதாரமய்யா போன்ற நக்சலைட்டுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் என்றும் சொல்லப்படுகிறது.

 எப்படியோ மாவோவாதிகள் இந்தியாவில் அங்கிங்காய் தங்களது இயக்கத்தை நலிய விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்பதென்னவோ உண்மைதான். ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒரிஸா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் வேரூன்றியிருக்கும் மாவோவிஸ்டுகளுடன் இந்திய அரசு நீண்டகாலமாகவே போராடி வருகிறது. சத்தீஸ்கர் மாவோவாதிகளிடம் 7000 கோடி ரூபாய் இருப்பதாகவும், ஜார்க்கண்டிலுள்ள மாவோவாதிகள் வருடா வருடம் 200 கோடிக்கும் மேல் பல வழிகளில் சேகரிக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. சட்டத்தைக் கையிலெடுத்து பல நிரபாராதிகளையும் கொன்று குவித்து நாட்டில் அராஜகத்துவம் நிகழ்த்தும் மாவோவிஸ்டுகளை அழிக்க மத்திய அரசு சில வருடங்களுக்கு முன் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உதவியுடன் ட்ரான் டெக்னாலாஜி போன்றவற்றைப் பயன்படுத்தி மாவோவாதிகளுடன் போராடி வருகிறார்கள். மத்திய அரசின் “க்ரீன் ஹன்ட்” தனது மூன்றாம் கட்டத்தில் பல மாவோயிஸ்டுகளையும் சுட்டுக் கொல்வதில் வெற்றிக் கண்டிருக்கிறது. அதில் இறுதியாகக் கொல்லப்பட்டவர்கள்தான் குப்பு தேவராஜும், அஜிதாவும்.

இருவரும் படித்தவர்கள். பொறியியலாளராகவும், வழக்குரைஞராகவும், ஆந்திராவிலும், தமிழ்நாட்டிலும் குடும்பமும் குழந்தைகளுமாக வாழ வேண்டியவர்கள் இவர்கள். நிலம்பூர் காடுகளில், நீரழிவு நோயாலும், மஞ்சள் காமாலை நோயாலும் பாதிக்கப்பட்ட அவர்கள், “தண்டர் போல்ட்” சேனையால் சுற்றி வளைக்கப்பட்ட போது, உடனிருந்த மற்ற மாவோவாதிகளைப் போல் தப்பி ஓட முடியாமல் ஒன்பது முதல் பதினெட்டு வெடிகுண்டுகள் வரை உடலைத் துளைத்துச் செல்ல அனுமதித்து உயிரிழந்தவர்கள். அவர்களது உடல்களை போஸ்ட்மார்ட்டம் நடத்த கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதுதான், ஓர் உண்மை எல்லோருக்கும் தெரிய வந்தது. இருவரும் அவர்களது உற்றார் உறவினர்களை முறையே 30, 25 வருடங்களுக்கும் மேலாகப் பிரிந்து வாழ்ந்து வந்தவர்களாம்.

பணமும், சுகமான வாழ்வும்தான் அவர்களது இலட்சியம் எனில் அவர்கள் இப்படி இத்தனை காலம் மறைந்து வாழ்ந்து உயிர்நீக்க வேண்டிய தேவையே இல்லையே. சமூகச் சேவைதான் அவர்கள் இலட்சியம் என்றால் இப்படி ஆயுதமேந்திப் போராடாமல், அமைதி வழியிலும், அரசியல் வழியிலும் போராடலாமே!

அஹிம்சையிலும், அரசியலிலும் நம்பிக்கை இல்லாததால்தானே  நாங்கள் இப்படி ஆயுதமேந்த வேண்டியதானது?!

குடியரசு நாடான இந்தியாவில் ஆயுந்தமேந்திப் போராட வேண்டிய அவசியமே இல்லையே!

காடுகளையும், தாதுவளத்தையும் கொள்ளையடிப்பவர்களையும், தொழிலாளர்களைச் சுரண்டி வாழும் தொழிலதிபர்களையும், பதுக்கல்காரர்கள் மற்றும் கடத்தல்காரர்களையும் தண்டிக்காத இக்குடியரசு நாட்டில் எங்களைப் போன்றவர்கள் ஆயுதமேந்திப் போராடத்தான் வேண்டும்!

ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும், ஒரு நிரபராதியும் தண்டிக்கப்படக் கூடாது எனும் கொள்கையைப் பின்பற்றும் இக்குடியரசு நாட்டில், சரிவர விசாரணை செய்யாமல் சிலரைக் கொல்வதும், சிலரைக் கொள்ளையடிப்பதும் தண்டனைக்குரிய குற்றமே.

மூக நன்மை கருதி போராடும் எங்களுக்கு இடையூராக வருபவர்கள் எவராயினும் அவர்களை நாங்கள் எதிரிகளாகத்தான் காண்போம்!

இப்படி, மாவோவாதிகள் அவர்களுக்குத் தவறல்ல என்று தோன்றியதைச் செய்கிறார்கள். அரசின் பார்வையில் அது தவறானதால், அரசு அவர்களுடன் போராடி அவர்களை ஒடுக்கப் பல வழிகளில் முயற்சி செய்கிறது. முன்பெல்லாம் இது போன்ற போராட்டக்காரர்களை ஆதரித்துவந்த ஏழைகளும், வனவாழ் மக்களும் இப்போதெல்லாம் மாவோவாதிகளைவிட, காவல்துறை மற்றும் வனஇலாகா துறையினருக்குத்தான் ஆதரவு தருவது போல் தோன்றுகிறது. ஒருவேளை, அரசு அவர்களுக்காகச் செய்யும் பல நல்ல திட்டங்களும், உதவிகளும் அவர்களை அப்படிச் செய்யத் தூண்டி இருக்கலாம். எப்படியோ மாவோவாதிகள் யாருக்காகப் போராடுவதாகச் சொல்லிக் கொள்கிறார்களோ, அவர்களது முழுமையான ஆதரவும், ஒத்துழைப்பும் இப்போதெல்லாம் அவர்களுக்குக் கிடைப்பதே இல்லை என்பதுதான் உண்மை.

உலகிலுள்ள மொத்த நிலப்பரப்பில் இரண்டு சதவிகிதம் மட்டுமுள்ள இந்தியாவில் உலக மக்கள் தொகையில் 18% மக்கள் வாழ்வதாகச் சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட இந்தியாவிலுள்ள காடுகளில் வாழும் வன விலங்குகளுக்கே வாழத் தேவையான இடமில்லாத சூழலில், ஆயுதமேந்திய மாவோவாதிகள் அக்காடுகளில் அதிகக் காலம் மறைந்து வாழ இனியும் முடியுமா என்பது சந்தேகமே. போதாதற்கு அவர்கள் கையில் உள்ள 1000, 500 ரூபாய் நோட்டுக்களை மாற்ற வழியின்றி ஜார்க்கண்டிலும், சட்டீஸ்கரிலுமுள்ள ஏழைகளின் ஜனதன் வங்கிக் கணக்குகளில் முதலீடு செய்வதாகவும் செய்தி வருகிறது.

இப்படி மாவோவாதிகள் இயக்கத்திற்கு எல்லாப் பகுதிகளிலிருந்தும் பிரச்சனைகள் முளைப்பதால் இதையெல்லாம் முறியடித்து இனி எத்தனை காலம் மாவோவாதிகள் எதிர்நீச்சல் போடுவார்கள் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
Image result for kanam rajendran
படம் இணையத்திலிருந்து - கானம் ராஜேந்திரன்


கேரளாவில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும் மாவோவாதிகள் நிலம்பூர் காடுகளில் சுட்டுக் கொல்லப்பட்டதை ஆதரித்துப் பேசினாலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) செயலாளரான கானம் ராஜேந்தின், “மாவோவாதிகளைச் சுட்டுக் கொல்வது சரியான செயலல்ல. இதையும் சமூக மற்றும் அரசியல் பிரச்சனையாக மட்டுமே பார்த்து கையாள வேண்டும். உச்சநீதி மன்றம் இது பற்றி வெளியிட்ட அறிக்கையைப் பின்பற்றித்தான் மாவோவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.” என்று சொன்ன வார்த்தைகளைத்தான் இங்கு எனக்கும் சொல்லத் தோன்றுகிறது. மாவோவாதிகளின் பலரது தலைக்கும் இலட்சக்கணக்கான தொகை பரிசாக வழங்கப்படும் என அறிக்கைகள் பல வெளியிடப்பட்டிருந்தாலும், வங்கிக் கொள்ளை, ஆக்கிரமிப்பு, மிரட்டல், கொலைக்குற்றம் போன்றவற்றைச் செய்திருந்தாலும், அவர்களைத் தீவிரவாதிகளைப் போல் கண்ட இடத்திலேயே சுட்டுக் கொல்லாமல் சரணடைய விரும்பினால் அவர்களுக்கு அதற்கான வாய்ப்பும், அதன்பின் அவர்களுக்குரிய தண்டனையை அனுபவித்தபின் அவர்களையும் வாழ அனுமதிக்கத்தானே வேண்டும், குடியரசு நாடான நம் இந்தியாவில்?