திங்கள், 19 செப்டம்பர், 2016

பொன்மகள்

நண்பர் ஸ்ரீராம் அவர்கள், கேவாபோக (கேட்டு வாங்கிப் போடும் கதை) விற்காக என்னைத் தொடர்பு கொண்டதும், “நான் இப்போதுதான் ஒரு கதை எழுதி முடிக்கும் தருவாயில் இருக்கிறேன். அதையே உங்கள் “எங்கள் ப்ளாகில் வெளியிட அனுப்புகிறேன். அதன் பின் எங்கள் தில்லைஅகத்திலும் போட்டுக் கொள்கிறேன்” என்றேன். ஓகே என்றார்.

கதை பிறந்த கதை. வண்டியில் சென்று கொண்டிருந்த போது “குழந்தைகள் விற்பனை. ரூ 6,00,000  என்று பிரபல இதழின் பரபரப்பான பெட்டிச் செய்தி தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும், ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த ஓர் உண்மைச் சம்பவத்தையும் இணைத்துக் கொஞ்சம் டச்சப் செய்ததில் “பொன்மகள்” பிறந்தாள். இதோ அவளை உங்களிடம் அறிமுகப்படுத்துகிறேன்.

இதை “எங்கள் ப்ளாகில்” வெளியிட்டதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அவர்கள் மிகச் சிறந்த எழுத்தாளர்களின் கதைகளை எல்லாம் வெளியிட்டு வரும் சமயத்தில் எனதும் வருவதில் மகிழ்ச்சி!  சாதாரணமான என்னையும் கௌரவப்படுத்தும் “எங்கள் ப்ளாகிற்கு” மனமார்ந்த நன்றிகள் பல.

எங்கள் ப்ளாகில் வெளியிட்டு அங்கு விமர்சித்துக் கருத்து சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி. அங்கு "ஜீவி" சார் அவர்கள் சொன்ன பின்னூட்டக் கருத்து எனது மனதிற்கும் ஏற்புடையதாகவும், முதலில் இப்படி எழுதி, பின்னர் மாற்றி எங்கள் ப்ளாகிற்கு அனுப்பினேன். எனவே இங்கு நான் முதலில் இதை முடித்த விதத்தில் தருகிறேன். ஜி எம் பி சார் சொன்ன 600000 தவறையும் திருத்தியிருக்கிறேன்.


                                   பொன்மகள்


என் நண்பன் கார்த்தியிடமிருந்து அலைபேசி அழைப்பு.

“அக்கா எப்படி இருக்க? வெளியே இருக்கியா? பிஸியா? ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.”

இப்படித்தான் அடுத்தடுத்து கேள்வி கேட்டு, பிசியா என்றும் கேட்டுவிட்டு முற்றுப் புள்ளி வைக்காமல் தொடர்ந்து பேசுவான். அன்றைக்கு முக்கியமான விஷயம் என்று சொல்லி முற்றுப் புள்ளி வைத்தான்.

“நல்லாருக்கேன் கார்த்தி!. கடைக்கு வந்தேன். என்ன விஷயம் சொல்லுடா” என்று சொல்லிக் கொண்டே கடையை விட்டு வெளியில் வந்து, யாரும் இல்லாத இடம் பார்த்து ஒதுங்கி நின்றேன்.

“எனக்குப் பெண் குழந்தைனா ரொம்பப் பிடிக்கும் உனக்குத் தெரியும்ல.. இப்ப எங்க வீட்டுக்கு ஒரு “பொன்மகள்” வந்தால்?!.….ஒரு பக்கம் சந்தோஷம்…இன்னொரு பக்கம்… அக்கா என் வயசு என்ன? 47. என் வீட்டுக்காரி வயசு 45. அக்கம் பக்கம் என்ன சொல்லும்னு ஒரு வெட்கம்….அதான் உங்கிட்ட ஒரு ஆலோசனை கேட்கலாம்னு”

இப்படிப் பேசிக் குழப்புவதும் அவன் வழக்கம்.

“ஓ! கார்த்தி! புரியல.. இருந்தாலும் என் யூகம் இது…..சந்தோஷமான விஷயம்தான்….. உனக்கும் உன் மனைவிக்கும் இந்த வயசுலயும் பெத்து, வளக்க ஆரோக்கியமும், பொறுமையும் இருக்குன்னா எதுக்கு எங்கிட்ட கேக்கணும்? அக்கம் பக்கத்துக்குப் பயப்படணும்டா?

“ஐயோ! அக்கா….போதுமே உன் யூகம்….”பெத்து”ல “பெ” எடுத்துட்டுத் “த” போட்டுக்க…
“அட! “ தத்து” அதுவும் நல்ல விஷயம்தான். ஆனா, நல்லா யோசிச்சுச் செய்யணும்.. சரி விஷயத்தைச் சொல்லு.”

அவன் விவரித்தான். அவனது மனைவியின் தூரத்து உறவினரான பெண்ணிற்கு மூன்றாவதாகப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இவர்கள் இருவரும் பார்க்கச் சென்ற போது அந்த வீடு இழவு வீடு போல் துக்கத்தில் ஆழ்ந்திருந்ததைக் கண்டதும் இவர்களுக்குக் குழப்பம்.

ஒரு வேளை குழந்தை?……என்று மனதில் தோன்றிய எதிர்மறைச் சிந்தனையைப் புறம் தள்ளிவிட்டு மெதுவாக உள்ளே சென்றால், அங்கே அந்தப் பெண், “ஏற்கனவே ரெண்டு பொண்ணுங்க. தினப்படி வாழ்க்கையே கஷ்டமா இருக்குது, இதுல மூணாவதும் பொண்ணு”. என்று அழுது கொண்டே இருந்திருக்கிறாள். இரு வீட்டாரும் பெண் குழந்தை என்று வசை பாடிக் கரித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

கார்த்திக்கும், அவனது மனைவிக்கும் என்ன சொல்வது என்று தெரியாமல், குழந்தைக்கான பரிசுப் பொருளைக் கொடுப்பதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கையில், வாசலில் மூன்று பேர் புதிய முகங்களாகத் தோன்றவே, கார்த்தி எட்டிப்பார்த்திருக்கிறான்.

அப்பெண்குழந்தையை விற்பதற்கான ஏற்பாடு என்பதை அறிந்ததும் கார்த்திக்கும் அவனது மனைவிக்கும் பதட்டம். வெளியில் விற்கப்பட்டுத் தவறான இடத்திற்குப் போய்விட்டால்?…என்ற பயம் தோன்ற, தாங்களே அக்குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ளலாமா என்று ஆலோசனை கேட்கத்தான், வெளியில் வந்து என்னை அழைத்திருக்கிறான்.

எனக்கோ கோபம்! வீட்டு நிலைமை சரியில்லை. மூன்றாவதாக ஆண் குழந்தை பிறக்காதா என்ற ஆசை…. சரி… தவறில்லை....ஆனால் மூன்றாவதும் பெண் என்றால் ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லாதபோது எதற்கு இப்படி? அப்படியென்றால், இனியும் ஆண் குழந்தை ஆசையில் பெற்றுக் கொள்ள நினைப்பார்களோ? நான்காவதும் பெண் ஆகிப் போனால் மீண்டும் இப்படித்தானோ?……இப்படியே தொடர்ந்தால்…

.ஹும். என்ன உலகம் இது? நம் மக்களின் பாமரத்தனமான, மூட நம்பிக்கை நம் மக்களை அறிவிலிகள் ஆக்குகிறதே என்ற எண்ண அலைகளுடன், கார்த்தியிடம் எனது கோபத்தையும் வெளியிட்டுவிட்டு…

“கார்த்தி, அனாதைக் குழந்தைன்னா மறுவார்த்தை சொல்லாம “தத்தெடு” னு சொல்லிடுவேன்.. ஆனா இது அப்படி இல்லையே. கார்த்தி! ஒரு குழந்தை அதோட அம்மா அப்பாகிட்ட வளர்ரதுதான் நல்லது. அம்மா அப்பா இருக்கும் போது விற்க நினைக்கறது ரொம்ப அதிச்சியா இருக்கு. உனக்குத் தைரியம் இருந்தா போலீஸ்ல புகார் கொடு….

இல்லைனா வேறு வழி?....ம்ம்ம் உங்க வயசு, உங்க மகன்களின் சம்மதம், அந்தக் குழந்தைக்குப் பருவ வயசு வரும் போது உங்க ரெண்டு பேர் வயசும் 60 ஆகியிருக்கும். அந்த வயசுல கவனமா பாத்துக்க முடியுமா, படிப்பு, எதிர்காலம், உங்க காலத்துக்குப் பிறகு உங்க பசங்க தங்கச்சியா நினைச்சு அன்போடு பாத்துக்குவாங்களா… எல்லாம் நல்லா கலந்தாலோசிச்சு, சட்டரீதியா தத்தெடு”

என்று அரைகுறை மனதோடு சொன்னதும் கார்த்திக்கும் கொஞ்சம் வருத்தம்தான். நான் என் வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டேன். போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டு நின்ற போது, பெட்டிக்கடையில், பரபரப்புச் செய்தியுடன்  பிரபல இதழின் தாள் தொங்கிக் கொண்டிருந்தது. “குழந்தைகள் விற்பனை. ரூ 6,00,000” என்ற செய்தியைப் பார்த்ததும் மனம் பரபரத்தது. வீட்டை அடைந்ததும் முதல் வேலையாக கார்த்தியை அலைபேசியில் அழைத்தேன்.

“கார்த்தி! தத்தெடுக்கறதுக்கு உண்டான வேலைய உடனே தொடங்கு” என்றதும்

“அக்கா, அதுக்கு அவசியமே இல்லைக்கா. நான் உன்னைக் கூப்பிட உன் நம்பர ட்ரை பண்றேன்…… நீ கூப்பிடற… “

அவன் குரலில் மகிழ்ச்சி. “உன் முதல் விருப்பம்தான் நிறைவேறியிருக்குக்கா”

“அக்கா, உன்னக் கூப்பிட்டுத் தத்தெடுக்கறத சொல்லிட்டு அவங்க வீட்டுக்குப் போனேனா…….அப்போ அவங்க வீட்டு ஜோசியர் வந்திருந்தாரு. அவரு, இந்தக் குழந்தை நல்ல நாள்ல பிறந்திருக்கு. இந்த வீட்டுக்கு நல்லதே நடக்கும். உங்க வீடு லட்சுமிகரமாகும். சுபிட்சம் வரும். இவ பெண்குழந்தை மட்டுமில்ல….”பொன்குழந்தை”, உங்க வீட்டு “பொன்மகள்” னு சொன்னதும், அவங்க முடிவ மாத்திக்கிட்டாங்கக்கா.”

என்றதும், “ஹும்! பாரு கார்த்தி! நம் சமூக அவலத்தை. ஜோசியர் சொன்னதும், அதுவும் பொன்குழந்தைனு சொன்னதும் அதுவரை திட்டு வாங்கின குழந்தைக்குக் கிடைக்கும் மரியாதையைப் பாரு. இல்லைனா அந்தக் குழந்தையோட மதிப்பு சில லட்சங்கள், இல்லைனா குப்பையோடு குப்பையாய்த் தடம் மாறிப் போயிருக்கும்.”

“அக்கா இன்னொரு ரகசியத்தையும் சொல்றேன்” என்று விவரித்தான்

கார்த்தி வெளியில் வரவும் அந்த ஜோசியரும் வெளியில் வந்திருக்கிறார். வந்தவர் கார்த்தியிடம், ”ஹப்பா! தம்பி மனசு என்னமா நிறைஞ்சுருக்கு! ஆண்டவன் உங்க மூலமா வந்து என் கண்ணைத் தொறந்துட்டான். தொழில்ல முதல் முறையா ஒரு பெரிய நன்மை செஞ்சுருக்கேன். இவங்க சொல்லி அனுப்பி அஞ்சு நாளாச்சு, தம்பி. ஆனா இன்னிக்குத்தான் வந்தேன். நான் இன்னும் குழந்தையோட ஜாதகம் கூட குறிக்கல. வந்தப்ப, நீங்க யார்கிட்டயோ பேசிக்கிட்டுருந்ததைக் கேட்டேன். மனசு சங்கடமாகி நான் குழந்தையைப் பத்தி அப்படிச் சொன்னேன். தப்போ, ரைட்டோ ஒரு பெண் குழந்தைய காப்பாத்த முடிஞ்சுச்சு. அப்படிக் கேட்டுருக்கலைனா?? கேக்க வைச்ச அந்த ஆண்டவனுக்கு நான் நன்றி சொல்லணும். தம்பி உங்களுக்கு ரொம்ப நன்றி தம்பி. நீங்க நல்லாருக்கணும்!” என்று கார்த்தியின் கைகளைப் பிடித்துக் கண்கள் பனிக்க நன்றி சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.

விவரித்தவன், “பரவாயில்லைக்கா. ஏதோ, இப்படியாச்சும் அவங்க முடிவு மாறிச்சே! உன் விருப்பப்படியே அந்தக் குழந்தை அதோட அம்மா அப்பாகிட்டயே வளரப் போகுதேனு நினைச்சுச் சந்தோஷப்படுவோம்.”

“பொன்மகள்” என்ற ஜோசியரின் வாக்கினால் குழந்தை காப்பாற்றப்பட்டது என்ற நேர்மறை எண்ணமாய் என் மனதையும் சமாதானப்படுத்திக் கொண்டு ஜோசியருக்கும் மனதிற்குள் நன்றி சொன்னேன்! எப்படியோ என் எண்ணம் ஈடேறியதை நினைத்தும் மகிழ்ந்தேன்.

பெண்மகள் “பொன்மகள்” ஆனது பொன்னான ரகசியமாகவே இருக்கட்டும்! பொன்மகளாகவே திகழட்டும்! 

----கீதா 


14 கருத்துகள்:

  1. எங்கள் ப்ளாக்கிலும் படித்தேன்.
    பெண்மகள் பொன்மகள் ஆனது மனதுக்கு சந்தோஷமே!

    பதிலளிநீக்கு
  2. எங்கள் ப்ளாகில் படித்து விட்டேனே

    பதிலளிநீக்கு
  3. மீண்டும் ஒரு முறை படித்து இரசித்தேன்
    இந்த முடிவுஅமைப்பாக உள்ளது
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  4. எங்கள் ப்ளாகில் படிக்க தவறி விட்டேன். இப்போது தான் படித்தேன். நல்ல கற்பனை! நல்லவர்கள் நிறைய இந்தக் கதையில்! அதனால் படிக்க சுகமாக இருக்கிறது கீதா! ஆனால் நிகழ்காலத்தில்..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மனோக்கா இங்கு படித்திக் கருத்திட்டமைக்கு. உண்மைதான் அக்கா! ஆனால் அக்கா இந்தச் சமூகத்தில் "பொன்" என்றதும் தங்கள் முடிவையே மாற்றிக் கொள்ளும் மக்கள், மூடநம்பிக்கைகளில் மூழ்கி இருக்கும் மக்கள் தானே இருக்கிறார்கள், பெண் குழந்தைகள்கு விற்பனை இப்போதும் நடப்பது மனதை வேதனைப் படுத்தியதால் அதைச் சொல்ல விரும்பி... ஒரு சில உண்மை நிகழ்வுகள் கொஞ்சம் கற்பனை என்று பொன்மகள் பிறந்தாள் மிக்க நன்றிக்கா...

      நீக்கு
  5. நல்ல முயற்சி சகோ!

    கதை எழுத வேண்டும் எனும் உங்கள் ஆர்வத்துக்கும் அதற்கு ஊக்கம் கொடுத்த சிறீராம் ஐயா அவர்களுக்கும் என் பணிவன்பான பாராட்டுக்கள்! ஆனால், கதை சொல்லும் விதம், நடை, பிழையில்லாமல் எழுதுதல் ஆகியவற்றில் இன்னும் நீங்கள் பற்பல படிகள் முன்னேற வேண்டியிருக்கிறது என்பதையும் உற்ற நண்பன் எனும் முறையில் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். தரமான சிறுகதைகளைத் தொடர்ந்து படிப்பதன் மூலம் அந்தக் கலை கைவரப் பெறும். தொடர்ந்து எழுதுங்கள்! படிக்கவும் ஊக்கம் அளிக்கவும் நாங்கள் இருக்கிறோம்!

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான கதை! எங்கள் ப்ளாக்கிலும் வாசித்தேன்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. பெண்மகள் “பொன்மகள்” ஆனது பொன்னான ரகசியமாகவே இருக்கட்டும்!---வாழ்த்துக்கள!!

    பதிலளிநீக்கு
  8. நல்ல கதை. பாராட்டுகள். நல்லெண்ணம் கொண்ட மனிதர்கள் கதையில் மட்டுமல்லாது நிஜத்திலும் பெருகட்டும்.

    பதிலளிநீக்கு