வெள்ளி, 23 செப்டம்பர், 2016

திரைப்படங்களாகும் திருமணங்கள்??!!

சமீப காலமாக நான் கலந்து கொள்ளும் திருமணங்கள் எல்லாமே எனக்கு ஒரு புறம் பிரமிப்பையும், மறுபுறம் வருத்தம், ஆதங்கம் என்று இன்னபிற உணர்வுகளையும் ஏற்படுத்துகிறது. ஆடம்பரம், உதட்டளவுப் பேச்சுகள், குடும்ப உறவுகள் வலுவிழந்து வருவது மற்றும் இத்தனை ஆடம்பரத் திருமணங்கள் நடந்து சில மாதங்களிலேயே முறிவது.ம் குடும்ப வாழ்வு தொலைந்து வருவதும் என்று அந்த இன்னபிற உணர்வுகளை வகைப்படுத்தலாம்.
மண்டப வளாகம் மிகப் பெரியது-நுழைவு வாயில் தோரணங்களுடன்

அன்றைய திருமணங்கள் என்று பழம் பஞ்சாங்கம் பேசக் கூடாதுதான். காரணம் நமது வாழ்க்கை முறை முழுவதுமே மாறிவிட்டது, மாறி வருகின்றது. என்றாலும், அன்றைய திருமணங்கள் பல நாட்கள் நடந்த போதிலும் எல்லா பொறுப்புகளும் குடும்ப அங்கத்தினருக்குள் பகிர்ந்து கொள்ளப்பட்டு கல்யாணத்திற்குத் தேவையான பலகாரங்கள் உட்பட, ஆடம்பரம் இல்லாமல், ஆடம்பரச் செலவுகள் இல்லாமல், குடும்பத்தின் ஒற்றுமையையும், உறவையும் வளர்த்தது என்பதை இங்கு மறுக்க இயலாது.

கிராமம் என்றால் அந்தக் கிராமம் முழுவதும் பெரும்பாலும் உறவினர்களாகத்தான் இருப்பார்கள். தெரு முழுவதும் அடைத்துப் பந்தல் போடப்பட்டு, தோட்டங்களில் இருக்கும் மருதாணி பறிக்கப்பட்டு பாட்டம் பாட்டமாக அரைக்கப்பட்டு எல்லோரும் கூடி உட்கார்ந்து அதை பெரியவர்கள் சிறியவர்களுக்கு இட்டு விடுவது என்று பல நிகழ்வுகள் ஒரு குடும்பத்திற்குத் தேவையான அன்பு, பாசம் எல்லாவற்றையும் உறுதிப்படுத்தியது. இப்படியான நிகழ்வுகள் திருமண உறவின் புனிதத்தையும் வளர்த்ததுவே அல்லாமல் பணவிரயமோ இல்லை அதீதமான செலவையோ ஏற்படுத்தியது இல்லை.  கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பழமொழிக்கு ஆதாரமாக இருந்து வந்தது.
இவை என்னவென்று தெரிகிறதா? பூக்கள் அல்ல. ஒப்பனை செய்து கொண்ட முள்ளங்கி. நாங்கள் அழகுக் காட்சிக்குத் தயாராகின்றோம்

இப்போது அதே மருதாணி இடும் நிகழ்வு சமீப காலங்களில் வட இந்திய கலாச்சாரப்படி “மெஹந்தி பார்ட்டி” என்று தமிழ்நாட்டுக் கல்யாணங்களில் நடைபெறுகின்றது. இதற்கென்று ஒரு நாள் தனியாக ஒதுக்கி விடுகிறார்கள். மிக மிக எளிமையாக நடந்து வந்த கேரளத்து மேல்தட்டு, நடுத்தர வர்கத்துக் கல்யாணங்கள் கூட சமீப காலமாக மாறி வரத்தொடங்கியிருக்கின்றன. அங்கும் இப்போது “மைலாஞ்சி பார்ட்டி” என்று நடத்தத் தொடங்கிவிட்டார்கள். இதற்கென்று தொழில் ரீதியாக பல வடிவங்களில் மிக அழகாக வரையும் கலைஞர்களும் இருக்கின்றார்கள். கலை மிக அழகான கலைதான். அதைச் செய்யும் பெண்களுக்கும், ஆண்களுக்கும் வருமானமும் கிடைக்கிறதுதான். தமிழகத்தில் சமூக அந்தஸ்தாகவும் மாறிவருகிறது.
இங்கு பாருங்கள் எத்தனையோ ஏழைகள் ஒரு வேளைச் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் இருக்க, எத்தனை காய்கறிகள் ஒப்பனைகளுடன் காட்சியில்! இதற்குப் பதிலாக 50 ஏழைகளுக்கு உணவு அளித்திருக்கலாம். பதிவர்களே நீங்களேனும் உங்கள் வீட்டுக் கல்யாணங்களில் தவிர்க்க முயலுங்களேன்

இது ஒரு புறம் இருக்க, திருமணங்கள், மிகவும் ஆடம்பரமாக, தற்போது சினிமா ஷூட்டிங்க் போல் ஆகிக் கொண்டிருக்கின்றன. ஃபோட்டோ ஷூட் என்று ஒரு தனி நிகழ்வே நடக்கிறது.

திரைப்படத்தில் வருவது போன்று கல்யாணப் பெண்ணை, பையன் தூக்கித் தட்டாமாலை சுற்ற, பெண் தனியாகத் தட்டா மாலை சுற்ற, அவளது பாவாடை குடை போல விரிந்து சுற்றி அமரும் போது அவளைச் சுற்றி அந்தப் பாவாடை விரிந்து இருப்பது என்று பல பல கோணங்களில், விதம் விதமாக இருவரையும் வைத்து படம் பிடித்தார்கள்.

இனி எதிர்காலத்தில் சினிமா தியேட்டரில் படமாக ஒரு திருமணத்தைப் போட்டாலும் போடுவார்கள். வழ வழ என்று வருமே சில புத்தகங்கள் அழகான புகைப்படங்களுடன் அப்படி வரவேற்பு ஆல்பம், புத்தகம் போல் பெரியதாக இருந்தது. அதற்கு 1.50 லட்சமாம். அப்புறம் மற்ற ஆல்பங்களைக் குறித்துக் கொள்ளுங்கள். இதற்காக கல்யாணத்திற்கு முன்பே ஏதேனும் ஒரு வெளியிடத்திற்குச் சென்று புபைப்படம், காணொளிகள் எடுப்பதும் ஆரம்பித்திருக்கிறது.

மட்டுமல்ல சமீபத்தில் நான் பங்கெடுத்த திருமணங்களில், ஒன்றில் முன்னோட்டம் என்று சினிமாவிற்கு முன்னோட்டம் போடுவது போல் போட்டார்கள், கட்செவி (Whatsapp) குழுமத்திலும் பகிர்ந்தார்கள்! அதுவும் பஞ்ச் டயலாக்குடன், இசையுடன். இப்போது இத்தகைய ஆடம்பரத் திருமணங்கள் சமூக அந்தஸ்தாகிவிட்டது. திருமணங்கள் ஆடம்பரமாகி வருகிறது ஆனால் புனிதமான உறவுகளைக் களைந்து வருகிறது. இப்படிச் செய்யப்படும் திருமணங்கள் ஒரு சில மாதங்களில் முறிந்தும் விடுகிறது என்பது மனதிற்கு வேதனையும் தருகிறது.

கடலூரில் நான் கலந்து கொண்ட என் நெருங்கிய உறவினரின் மகனின் திருமணத்தில் நான் கண்ட புகைப்பட, காணொளிக் குழு ஸ்வாரஸ்யமாக இருந்தது. மொத்தம் புகைப்பட, மற்றும், காணொளிக் குழுக்காரர்கள் 7 பேர். அதில் ஒன்று “ஹெலி கேம்” எனப்படும் புகைப்பட, காணொளிக் கருவி. திரைப்படங்களில் கழுகுப் பார்வையில் பிரம்மாண்டமானக் காட்சிகளைக் கூட பறந்து பறந்து, மிக துல்லியமாகப் படம் பிடிக்கும், தொலையியக்கி - ரிமோட் கன்ட்ரோலில் இயங்கும் ஹெலிக்காப்டர் புகைப்படக் கருவி.  

ஹெலி கேம் பறந்து பறந்து புகைப்படம்-காணொளி எடுக்கின்றது
ஹெலி கேமை இயங்க வைக்கும் ரிமோட்
இப்போது இந்த ஹெலிகாப்டர் போன்று இருக்கும் இந்த புகைப்பட/காணொளிக் கருவி பறந்து பறந்து பல கோணங்களில் புகைப்படம் காணொளி எடுப்பது என்பது திருமணங்களில் பிரபலமாகி வருகிறது. ஒருவர் ரிமோட்டைக் கையில் வைத்துக் கொண்டு நடந்து கொண்டே இயக்குகிறார். நான் இதைப் பற்றி அறிந்திருந்தாலும் இது தான் முதல் முறையாக இந்தக் கல்யாணத்தில் நேரில் பார்த்தேன். நம் அருகில் நம் தலைக்கு மேலே உயரத்தில் பறந்த போது காற்று அடித்து, மெல்லிய சத்தத்துடன் பறந்தது ஸ்வாரஸ்யமாக இருந்தது. நான் அதை இயக்குபவரிடம் பேச்சுக் கொடுத்தேன். அதன் விலை 1.5 லட்சம். இந்த வகையில் நிழற்படம் மட்டும் எடுக்கும் வகையிலும், அதன் செயல்பாடுகளுக்கு ஏற்ப மிகக் குறைந்த விலையிலும், சாதாரண மனிதர்கள் வாங்கும் விலையிலும் இருக்கிறது. (வெங்கட்ஜி, மற்றும் செந்தில் குமார் அவர்கள் நினைவுக்கு வந்தார்கள். எனக்கும் ஆசை இருக்கிறது என்பது வேறு விஷயம்.)

பெண்கள் பொதுவாகப் புகைப்படக் கலையில் இறங்குவது குறைவுதான். நான் இதுவரை எந்தத் திருமண நிகழ்வுகளிலும் தொழில் முறை பெண் புகைப்படக் கலைஞரைக் கண்டதில்லை. இந்தப் புகைப்பட குழுவில், ஒரு குட்டிப் பெண், சுறு சுறுப்பாக ஓடி ஓடி, கூட்டத்திற்குள் புகுந்து புகுந்து, பல கோணங்களில் ஒரு ஆண் எடுப்பது போன்று எடுத்துக் கொண்டிருந்தார். எனக்கு மிகவும் ஆர்வமுள்ள புகைப்படக் கலையில் ஒரு பெண் இப்படித் தொழில்ரீதியாக இயங்கியதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக பெருமையாக இருந்தது. ஏனென்றால், நிகழ்ச்சிகளுக்கு எடுப்பது என்பதற்கு நேரம் காலம் பார்க்காமல் இயங்க வேண்டும். பல வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிவரும்; அடிக்கடிப் பிரயாணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆண்களுடன் பணியாற்ற வேண்டிவரும். தைரியம் வேண்டும். எல்லாம் அவரிடம் இருக்கிறது.

அந்தப் பெண்ணிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியதில். அழைக்கப்படும் போது இப்படிக் குழுவுடன் இணைந்து கொள்வதும் உண்டு என்றாலும் அவர் தனிப்பட்ட முறையிலும் இயங்குவது தெரிந்தது. தொழில்ரீதியான டிப்ளமோ பட்டம் பெற்றிருக்கிறார். படிக்கும் போதே நிகழ்வுகளைப் படம் பிடிக்கத் தொடங்கினாலும், தொழில்ரீதியாக இயங்க ஆரம்பித்து ஒரு வருடத்திற்கும் மேலாக ஆகிறதாம்.

ஜிங்கல் டேபி (Jinkal Dabi) புகைப்படக் கலைஞர் முகநூல் முகவரி. Jinksphotography265

அவர் பெயர் ஜிங்கல் டேபி (Jinkal Dabi) அவரது அனுமதியுடன் அவரது புகைப்படத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இதுதான் அவரது முகநூல் முகவரி. Jinksphotography265 அதில் அவர் கடலூர் திருமணத்தில், தான் எடுத்த திருமணப் பெண்ணின் புகைப்படங்களையும் பதிந்திருக்கிறார். அருமையாக எடுக்கிறார். தவிர ஒரு சில அழகான படங்களையும் பகிர்ந்திருக்கிறார். ஆத்மார்த்தமாக, அர்ப்பணிப்புடன் சுறுசுறுப்பாக இயங்குகிறார். தோழமை உணர்வுடன், சிரித்த முகத்துடன் அன்பாக, இனிமையாகவும் பழகுகிறார். எனக்கு நல்ல தோழியாகி விட்டார். அவரும் இங்கு நான் திருமணங்களைப் பற்றிச் சொல்லியிருக்கும் அதே கருத்துகள் அவருக்கும் இருப்பது வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

வாழ்த்துகள் ஜிங்கல்! அவர் மேலும் பல நிகழ்வுகளுக்குப் பணியாற்றி, பெண் புகைப்படக் கலைஞராக வெற்றி பெற வாழ்த்துவோம்! 

----கீதா
51 கருத்துகள்:

 1. திருமணம் என்று ஆங்காங்கு நடைபெறும் இன்றைய ஆடம்பர யதார்த்தங்களை அப்படி அப்படியே படம் பிடித்துச் சொல்லியுள்ள மிக அற்புதமான பகிர்வு.

  அனைத்துப்படங்களும் அருமை.

  செய்திகளும் சுவையாகவும், அதே சமயம் நம்மை சிந்திக்க வைப்பதாகவும் உள்ளன.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 2. மிக்க நன்றி வைகோ சார். வெகுநாட்களாயிற்று. முதன் முதலில் வந்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி சார்

  பதிலளிநீக்கு
 3. இருக்கப்பட்டவர்களின் ஆடம்பர திருமணங்கள் பதிவு அருமை...

  பதிலளிநீக்கு
 4. இப்போது கல்யாணம் இப்படி ஆடம்பரமாய்தான் மாறி விட்டது.

  பதிலளிநீக்கு
 5. வாழ்க்கையில் ஒரு முறைதான் திருமணம் என்பதை என்றும் மறக்காமல் இருக்கப் பதிவு செய்து கொள்கிறார்கள் பதிவுகளில் பலவகை. பொருள் இருப்பவன் செய்யும் செலவு ஆடம்பரமாகத் தெரிகிறது இம்மாதிரிய திருமணங்களால் பலருக்கும் வருவாய் வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது காலம் மாறி வருகிறது என்பதையே உணர்த்ட்க்ஹுகிறது ஒரு பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தாலேயே திருமணம் செல்லுபடியாகும் செலவும் குறைவு. ஆனால் இவையெல்லாம் ஒவ்வொருவர் பார்வையிலும் மாறும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் சார் நீங்கள் சொல்லுவது புரிகிறது. திருமணம் மறக்காதுதான். ஆனால் இந்த நிகழ்வுகள் பொருள் இருப்பவர்கள் மட்டுமல்ல சார். எனக்குத் தெரிந்து எனது உறவினர்கள் பெண் குழந்தைகள் இருப்பவர்கள் பலரும் கடன் வாங்கித்தான் செய்கிறார்கள் சார். படிக்க வைக்க கடன், இல்லை என்றால் மணம் செய்ய கடன். மணம் செய்து கொடுக்கும் கடன் படிக்க வைப்பதையும் விட கூடுதலாகி விடுகிறது. சரி அப்படியே போனாலும் அந்த வாழ்க்கை நீடிக்கிறதா அதுவும் இல்லை ...எனக்குத் தெரிந்து பல மண முறிவுகள், முறிவுகள் என்றில்லையானாலும், தனியாக வாழ்தல் என்று எவ்வளவோ ...
   சாதாரண குடும்பங்களும் இப்போது சமூக அந்தஸ்தில் மாட்டிக் கொண்டு திணறுகின்றார்கள் சார் ஈவென்ட் மானேஜ்மென்ட் என்பதில் சிக்கி....இங்கு நான் சொல்லியிருக்கும் அந்த புகைப்படக் கலைஞர் பெண்ணே சொல்லி இருக்கிறார்.

   காய்கறிகள் வீணாவதைத் தடுக்கலாம்...பலருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது தான் ஆனாலும் சில வற்றைத் தவிர்க்கலாம் இல்லை என்றால் நடுத்தர வர்கத்தினர் செலவுகளைக் குறைக்கலாம் கடன் வாங்கிச் செய்யாமல்...

   மிக்க நன்றி சார் கருத்திற்கு.

   நீக்கு
 6. ஒரு திருமண வீடியோ வைப் பார்த்தேன்.
  மேலை நாட்டுத் திருமணங்களில் தம்பதிகள் ஆடுவது
  பார்த்திருக்கிறேன்.
  இந்தத் திருமணத்தில் சம்பந்திகள், சித்தப்பா சித்திகள் அனைவெரும் குத்துப் பாடல்கள் என்னும் பாடல்களுக்கு ஆடினர். எனக்கு திகைப்புதான் மேலிட்டது.
  வெள்ளைவேட்டி,நீல சட்டை என்று ஒரு குழுவே திரைப்படம் போல ஆடினார்கள்.
  இதுதான் இப்போதைய ட்ரெண்ட். சொல்ல வரும் நாம் தான் பத்தாம்பசலிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வல்லிம்மா ஆமாம்..அதை ஏன் கேக்கறீங்க விளையாடல் எல்லாம் இப்படி ஆகிப் போச்சு. குழந்தைகள் கூட ..நல்லவிதமாக ஆடினால் ரசிக்கலாம் தான். எங்கள் உறவினர் கல்யாணத்தில் கேரளத்தில் அந்தக் குடும்பத்துக் குழந்தைகள் எல்லோரும் சேர்ந்து பரத நாட்டிய்ம், நல்ல சங்கீதம்...என்று 2மணி நேரம். அப்புறம் 3 மணி நேரம் பஜனை..அதுவும் ரொம்ப அழகாக பஜனை பண்ணுவார்கள். பஜனை மண்டலி போன்று. நல்ல பாசிட்டிவ் ஆக இருக்கும். அந்தக் குடும்பத்துக் கல்யாணம் என்றாலே நாங்கள் மிகவும் சந்தோஷமாய் சென்று வருவோம்.

   மிக்க நன்றிம்மா..

   நீக்கு
 7. இப்போது ஆடம்பரத் திருமணங்களே அதிகம்... எல்லா இடத்திலும் இப்படித்தான்...
  இந்த ஹெலிகாப்டர் கேமராவை எங்க சொந்தக்காரர் இல்லத் திருமணத்தில் இந்த முறை ஊருக்குப் போனபோது பார்த்தேன்.... வித்தியாசமாய்... கீழிருந்து மாடிப்பக்கம்... அங்கிருந்து கீழே என பறந்து கொண்டே இருந்தது...

  ஆடம்பரத்துக்கான சினிமா போல் திருமணம் செய்வது தேவையில்லாதது என்பதை உண்ர வேண்டும்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் இந்த மண்டபத்திலும் அப்படித்தான் குமார். மாடிக்கும், கீழுமாகப் பறந்து கொண்டிருந்தது. நிறைய இன்னும் பல இருக்கின்றன. இங்கு சொன்னது கொஞ்சமே கொஞ்சம் தான் .. கருத்திற்கு மிக்க நன்ற குமார்

   நீக்கு
 8. ஆடம்பர திருமணங்கள் அதிகமாகிவிட்டன. நிறைய வீண் செலவுகள்! தவிர்க்கலாம்! ஆனால் பலரால் தவிர்க்க முடிவதில்லை! நல்லதொரு பகிர்வு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் சுரேஷ். நிச்சயமாகத் தவிர்க்கலாம். கருத்திற்கு மிக்க நன்றி!

   நீக்கு
 9. அன்றைய மூன்று நாள் திருமணங்கள் பற்றி நானும் நீண்ட நாட்களுக்குமுன் எழுதி இருக்கிறேன். ஆனால் அது வேறு ருசியில்! ஆடம்பரங்கள் தேவை இல்லைதான் இவ்வளவு செலவு செய்தபின் நிறையத் திருமணங்கள் ஒரு வருடம் கூடாது தங்குவதில்லை என்பதுவும் வருத்தமான விஷயம். ஹெலிகேம் சுவாரஸ்யமான விஷயம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் ஸ்ரீராம். இப்போதைய போக்கு சரியில்லை என்றே தோன்றுகின்றது. சமூக அந்தஸ்து என்பதால், பல நடுத்தரவர்கத்தினரும் அதற்கு வற்புறுத்தப்ப்டுகிறார்கள். கருத்திற்கு நன்றி

   நீக்கு
 10. நல்ல பதிவு சகோ! ஆனால், ஒரு சிறு குறை.

  ’ஆடம்பரம் தவறு, தவறு’ எனத் தொடக்கம் முதல் வலியுறுத்தினீர்களே தவிர ஏன் தவறு என்று சொல்லவே இல்லையே!

  ஒருவர் எவ்வளவுக்கு எவ்வளவு செலவு செய்கிறாரோ அவ்வளவுக்கு அவ்வளவு நாட்டில் பணப்புழக்கம் உயர்கிறது, பல்வேறு துறையினருக்கும் வருமானம் வருகிறது. ஆனாலும் ஏன் ஆடம்பரம் தவறு எனக் கூறுகிறோம் என்றால் அது மற்றவர்களுக்கும் அப்படிச் செலவு செய்தாக வேண்டிய சமூக அழுத்தத்தை (peer pressure) உண்டாக்குகிறது. முன்பெல்லாம் பெண்ணைப் பெற்றவர்கள் பெண் பிள்ளை பிறந்து விட்டதே எனக் கவலை கொள்ளச் சீரும், நகையும் இன்ன பிற வரதட்சிணை தொடர்பானவையும்தாம் காரணமாக இருந்தன. ஆனால், இப்படிப் புதிது புதிதாக வித விதமாக செலவினங்களைக் கண்டுபிடித்துக் கொண்டே இருந்தால் இவையும் பெண்ணைப் பெற்றவர்கள் தலையில் விழுகின்றன. பெண்கள் வானூர்தியையே இயக்கும் அளவுக்குப் பெண் விடுதலை ஓங்கியுள்ள இதே சமூகத்தில்தான் இன்னும் பெண் சிசுக் கொலையும் நடந்து கொண்டிருக்கிறது என்பதை இப்படிப்பட்ட ஆடம்பர விரும்பிகள் உணர வேண்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இடையில் சொல்லியிருக்கிறேனே சகா. சமூக அந்தஸ்து!

   ஆம் நீங்கள் சொல்லும் அதே கருத்தைத் தான் அந்தஸ்து என்று சொல்லிவிட்டேன். ஆமாம் உங்கள் கருத்து சரிதான். அன்று வரதட்சிணை..இன்று வேறு விதத்தில் தொடர்கின்றது. காய்கறிகள் வீணாகின்றது பாருங்கள். பல செலவுகள் பெண்விட்டார் தலையில்தான் விழுகின்றது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் கல்யாணச் செலவு 20லட்சம் ஆகிறது தர்போது அதாவது ஆடம்பரமாகச் செலவு செய்தால். பலர் கடன் தான் வாங்கிக் கல்யாணம் செய்கின்றார்கள். இன்னும் நிறைய சொல்லலாம் சகா. ஆனால் பதிவு இதுவே பெரிதாகிவிட்டது. அதனால் குறைத்தும் கொண்டேன்.

   மிக்க நன்றி நல்ல கருத்துகளுக்கு அதுவும் இறுதி வரி அருமை!

   நீக்கு
 11. இப்படி ஆடமபரமாக திருமணத்தை நடத்தி வைக்கும் பெற்றோர்கள் விவாகரத்தையும் இப்படி ஆடம்பரமாக நடத்தினால் நன்றாக இருக்கும்தானே ஆனால் அப்படி செய்யாமல் ஏன் பம்முகிறார்கள்

  பதிலளிநீக்கு
 12. எனது திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் ஆறு பேர்கள் மட்டுமே எனக்கு இப்போ இப்படி ஆடம்பரமாக திருமணம் பண்ணிக் கொள்ள ஆசை அதனால் துளசிசாரும் சகோ கீதாவும் எனக்கு ஒரு பொண்ணு பார்த்து இப்படி ஆடமபரமாக கல்யாணம் பண்ணி வையுங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹஹஹ்.....முதலில் உங்கள் 6 நண்பர்களுக்கும் வாழ்த்துகள்! அவர்கள் வாழ்க! இல்லை என்றால் இன்று எங்கள் செல்லப் பிள்ளை மதுரைத் தமிழன் பூரிக்கட்டை அடி வாங்கி தாங்கிக் கொண்டு எங்களை மகிழ்விக்க பதிவுகள் எழுதியிருக்க மாட்டார்!!!

   சரி அடுத்து எல்லாம் ரெடியாகத்தான் இருக்கிறது. அதே சமயம் உங்கள் பின்னாடி பூரிக்கட்டையுடன் உங்காத்து மாமி நிற்பதும் எங்களுக்குத் தெரிகிறது. உங்கள் பின்னாடி என்பதால் உங்களுக்குத் தெரியவில்லை. கொஞ்சம் பின்னாடித் திரும்பிப் பாருங்கள். அந்தப் பூரிக்கட்டை எங்களுக்கா இல்லை உங்களுக்கா என்று கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்கள். ஹிஹிஹி

   இப்படி எல்லாம் சிரிக்கச் சிரிக்கப் பின்னூட்டம் இட்டு எங்களை எல்லாம் மகிழ்விக்கும் மதுரைத் தமிழனுக்கு வாழ்த்துகள்!!! பாராட்டுகள்!!!

   (மதுரைத்தமிழன் புலம்பலஸ்....ஹும் நான் பூரிக்கட்டை அடி வாங்கணுமாம்...இவங்க எல்லாம் சிரிப்பாங்களாம்...என்ன ஒரு மனசு!!! நல்லாருங்கப்பு!!!)

   நீக்கு
 13. சிந்திக்க வேண்டிய நிலையில் நம் திருமணவிழாக்கள் இப்போது .பல ஆடம்பர விழாக்களை கண்டு சலித்துக்கொண்டு இருக்கின்றேன் இப்போது! திருமணத்தின் நெறிமுறையே மாறிக்கொண்டு போகின்றது நவீன காலம் என்ற போர்வையில்! அருமையான பகிர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தனிமரம் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 14. காதல் திருமணங்கள் ஆடம்பரம் இன்றி நடந்து வந்தன.சமீப காலங்களில் காதல் திருமணங்களுக்கு பெற்றோர் எதிர்ப்புதெரிவிப்பதில்லை அதனால் இத் திருமணங்களும் ஆடம்பரமாக மாறிவிட்டன,இருப்பவர்கள் தாரளமாக செலவுசெய்வது தவறல்ல. தகுதிக்கு மீறி கையை சுட்டுக் கொள்வது தவறு. ஞானப் பிரகாசம் அவர்கள் சொல்வது போல பணம் படைத்தவர்கள் செய்வது போலவே நாமு செய்ய வேண்டும் என்ற அழுத்தம் உண்டாவதும் தவறிக்க முடியாததாகி விட்டது.
  முன்பெல்லாம் சினிமாக்களில் பார்த்த காட்சிகள் எல்லாம் நேரில் பார்க்க முடிவது உண்மைதான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி முரளி சகோ தங்களின் கருத்திற்கு. அழுத்தம் உண்டாகத்தான் செய்கிறது சகோ பல குடும்பங்களில் அதைக் காண முடிகின்றது. சமூக அந்தஸ்தையும் பார்க்கின்றார்கள். ஒப்பிடுவதும் நடக்கிறது. ஆம்! சினிமாக் காட்சிகள் பல அரங்கேறுகின்றன.

   நீக்கு
 15. திருமணம் என்பது இருமணம் இணையும் விழா என்பது போய்,
  உறவுகளிடமும் நண்பர்களிடமும் தங்களின் வசதியினை வெளிப்படுத்தும் ஆடம்பர விழாவாக மாறித்தான் போய்விட்டது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கு. உண்மையான கருத்து சகோ.

   நீக்கு
 16. கொஞ்சம் தாமதமாகத்தான் இந்தப் பதிவைப் படிக்கமுடிந்தது. இந்தப் பூனைக்கு யாராவது மணி கட்டக்கூடாதா? ஆடம்பரத் திருமணங்களை நான் வெறுக்கிறேன். கல்யாண போட்டோ ஆல்பம், வீடியோ போன்றவை, நம் வயதான உறவினர்களை எப்போவாவது பார்க்கவேண்டும் என்று தோன்றும்போது பார்க்க வாய்ப்புத் தருவதைவிட வேறு உபயோகமே இல்லை. கல்யாணங்களெல்லாம் மிக மிக ஆடம்பரமாயும் படாடோபமாயும் மாறிவிட்டன. ஒரு சமூகத்தில் 100 பேர் இப்படி இருக்கும்போது, மீதி 10,000 பேருக்கு திருமணச் செலவு என்பது விஷமாக ஆகிவிடுகிறது? ஒரு திருமணத்தில், மருதாணிக் கடை, பானி பூரி கடை, அலங்காரங்கள், பாட்டுக்கச்சேரி, வித வித ஸ்வீட் கடைகள் என்று செலவு எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. இது அர்த்தமே இல்லாதது. என்னைப் பொறுத்தவரையில் கல்யாணத்தில் மிகவும் முக்கியமானது, பெண்ணின் கையைப் பிடித்து மாப்பிள்ளையிடம் ஒப்படைக்கும் சடங்கும், அதற்கு வந்திருக்கிற பெரியவர்களின் வாழ்த்தொலியும் மட்டும்தான். ஆடம்பரக் கல்யாணத்தை, மற்றவர்களுக்கான பிஸினெஸ் வாய்ப்பு என்று சொல்லமுடியாது. அதேபோல் பல்லிருப்பவன் பகோடா சாப்பிடுகிறான் என்று கடந்துசெல்ல முடியாது. 'நம் ஒவ்வொரு செயலும் சமூகத்தைப் பாதிக்கிறது என்ற எண்ணம் இருந்தாலே ஆடம்பரத் திருமணங்கள் மறைந்துவிடும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மன்னிக்கவும் நெல்லைத் தமிழன் நானும் இப்போதுதான் உங்கள் கருத்திற்குப் பதில் கொடுக்க முடிந்தது. என்னையும் உங்கள் பட்டியிலைல் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆம் ஆல்பத்திற்கும், வீடியோவிற்கும் உபயோகமே இல்லை.

   //பெண்ணின் கையைப் பிடித்து மாப்பிள்ளையிடம் ஒப்படைக்கும் சடங்கும், அதற்கு வந்திருக்கிற பெரியவர்களின் வாழ்த்தொலியும் மட்டும்தான்.// இதெ கருத்துதான் எனதும் நெல்லைத் தமிழன். தங்களின் விரிவான கருத்திற்கு மிக்க நன்றி.

   நீக்கு
 17. கூந்தல் இருப்பவள் அள்ளி முடிகின்றாள்!..

  இது எங்கள் ஊரில் வழங்கிவரும் பழமொழிகளுள் ஒன்று..

  அப்படியாக இதையும் நினைத்துக் கொள்ள வேண்டியது தான்!..

  இங்கேயும் (குவைத்தில்)விருந்துகளில் -
  பழங்களையும் காய்களையும் அலங்காரம் என்ற பெயரில் நோண்டி நுங்கெடுத்து வைக்கின்றனர்.. நான் வேலை செய்யும் Catering Co., யிலும் இப்படிப்பட்ட வேலைகள் உண்டு..

  எத்தனை பேர் சாப்பிடலாம் - இந்தக் காய்கனிகளை என்று ஆற்றாமையாக இருக்கும்.. என்ன செய்வது?..

  இன்றைய ஆடம்பரத்தை நிதர்சனமாகக் காட்டுகின்றது - பதிவு!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தப் பழமொழி எங்கள் ஊரிலும் சொல்லப்படுவதுண்டு துரைசெல்வராஜு ஐயா. காய்கள் கனிகள் எல்லாம் வீணாக்கப்படுவதுதான் மனதிற்கு இன்னும் வருத்தம் அளிக்கிறது ஐயா. மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கு.

   நீக்கு
 18. வடநாட்டுத் திருமணங்கள் மிகுந்த ஆடம்பரமாகவே கொண்டாடுகிறார்கள். அவர்களைப் பார்த்து நம் ஊரிலும் இப்போதெல்லாம் மெஹந்தி, லேடி சங்கீத் என வைக்கிறார்கள்... செலவும் அதிகமாகச் செய்கிறார்கள்... அவர்களைப் பார்த்து மற்றவர்களும் கடன் வாங்கியாவது இப்படி செலவு செய்கிறார்கள். என்ன சொல்வது.

  ஹெலிகேம்.... நானும் இங்கே சில விழாக்களில் பார்த்ததுண்டு. உங்களைப் போல அவர்களிடம் என்னால் கேட்கமுடியவில்லை. அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வெங்கட்ஜி ஆம் நீங்கள் கூட வடநாட்டுத் திருமணங்களைக் குறித்துச் சொல்லியிருக்கின்றீர்கள். இப்போதைய கல்யாணங்கள் குறித்து ஒன்றும் சொல்வதற்கில்லை.
   ஹெலிகேம் அதில் பல வகைகள் உள்ளன ஜி. வெறும் புகைப்படங்கள் எடுப்பதற்கும் உள்ளன. விலை குறைவாகத்தான் இருக்கின்றது. ஆனால் Dslr புகைப்படக் கருவிகளை விடக் குறைவாக இருப்பது அதன் ரெசல்யூஷன் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் மலைகளில் பயணம் செய்யும் போது நம்மால் செல்லா முடியாத பகுதிகளைப் படம் பிடிக்கலாம் என்றும் தோன்றியது. இன்னும் பல விவரங்கள் அறிய வேண்டும் ஜி.

   நீக்கு
 19. வணக்கம்.

  ஆடம்பரத்திருமணங்கள் பற்றித் தாங்கள் கூறிய கருத்துக்களோடு உடன்படுகிறேன்.

  உரிய வசதி இல்லாதோரும் இதுபோல நடத்த வேண்டும் என ஆசைப்பட்டுக் கடனாளியாதல் கண்டிருக்கிறேன்.

  புகைப்படப் பெண்ணாளுமை ஒருவரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

  தங்களின் பதிவுகளைப் பின்னோக்கிப் போய்ப்பார்க்கச் சற்று அவகாசம் அளியுங்கள்.

  மீண்டும் வருவேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விஜு சகோ எங்கள் கருத்துகளுடன் தங்கள் கருத்து உடன்படுவதற்கு மிக்க நன்றி. பாருங்கள் எப்போது நேரம் வாய்க்கிறதோ அப்போது மெதுவாகப் பாருங்கள் சகோ. அவசரம் இல்லை.

   மிக்க நன்றி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

   நீக்கு
 20. அண்மையில் உறவினர் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். ஏதோ ஷுட்டிங் சென்றது போலிருந்தது. அவ்வளவு ஆடம்பரம். தடபுடல் ஏற்பாடு. சுழலும் காமரா. மாஜிக் ஷோ, பலூன் மற்றும் அதுபோன்ற விளையாட்டுப் பொருள்கள், எரிந்து மங்கலாகும் விளக்குகள். அங்கு பாசத்தைக் காணமுடியவில்லை. பந்தாவைத்தான் கண்டோம். வேதனையாக இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ ஜம்புலிங்கம் ஐயா உங்களுக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டதா. உங்கள் அனுபவம் வித்தியாசமாக இருக்கிறது. தங்களின் அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ஐயா.

   நீக்கு
 21. இதைக் குறித்து நிறைய எழுதிட்டேன். எங்க வீட்டிலேயே இப்படிப் பல திருமணங்கள் ஆடம்பரமாகவே நடந்தன, நடக்கின்றன, இன்னமும் நடக்கலாம்! என்ன சொல்வது! :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு சில வாசித்த நினைவு. இன்னமும் அதிகமாவதாகத்தான் தெரிகிறது மிக்க நன்றி அக்கா. தங்களின் கருத்திற்கு

   நீக்கு
 22. நமக்கு இது ஆடம்பரம் !அவர்களை கேட்டால், பல்லு இருக்கு பக்கோடா சாப்பிடுகிறோம் ,உங்களுகென்ன என்பார்கள் :)

  பதிலளிநீக்கு
 23. வாழும் சமூகம் எப்படியோ அப்படியே தனிமனிதனும் வாழ்க்கை நடத்துகிறான். அப்படி அவன் செய்யாவிடில் அவனைப் பிறர் ஒதுக்கிவிடுவார்கள். சமூகமே போலியையும் பகட்டையும் சரியென்றுவிட்ட பின்னர் வாதத்துக்கிடமேது? அப்போலியிலும் பகட்டிலும் தொல்லைகள் நேரிடும்போது தொல்லைகளின் காரணங்களை எவரும் சட்டை செய்வதில்லை. அவற்றை மாற்றவும் நினைப்பதில்லை. எல்லாருமே சேர்ந்தே குழிக்குள் போகும் நாமும் போவோம் என்ற நினைப்புத்தான். ஆடம்பரங்கள் நாளொரு மேனிகளும் பொழுதொரு வண்ணங்களுமாகத்தான் வளருமே தவிர குறையா. அளவுக்கதிகமான நிலைவந்து எல்லாரும் அல்லலாடும்போது, ஒரு மஹாத்மா பிறந்து எளிமையே தெய்வம் என்பார். அப்போ பார்த்துக்கொள்ளலாம் என்று எல்லாரும் விட்டுவிட்டார்கள்.

  அது சரி சார். பதிவில் சிரித்துக்கொண்டு பார்க்கும்பெண் திருமணவீடுகளில் போட்டோவெடுக்க வந்தால், மணப்பையன் இவளைத்தான் கட்டுவேன் என்று அடம்பிடித்தால் என்ன செய்வது? நீங்களே வழிகிறீர்களே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் மலரன்பன் சார். வெகு நாட்களாகிவிட்டன.
   உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சார்.

   சார் முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம். எங்கள் தளத்தில் நாங்கள் இருவர் எழுதி வருகிறோம். இந்தக் கட்டுரையை எழுதியது நான் - கீதா. பதிவின் கீழ் பாருங்கள் கீதா என்றிருக்கும். எனவே வழிவது கீதா எனும் பெண். பெண் ஒரு பெண்ணைப் பார்த்து வழிவதில் தவறில்லையே மலரன்பன் சார். தயவாய் கீழே யார் எழுதியிருக்கிறார்கள் என்பதைப் பார்த்துவிட்டுக் கருத்திடுங்கள் சார். நீங்கள் அதை எந்த அர்த்தத்தில் சொல்லியிருக்கின்றீர்கள் என்று தெரியவில்லை. இது வரை அவர் எழுதிய எந்தப் பதிவிலும் தரக் குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தியதும் இல்லை. அதுவும் பெண்கள் குறித்து.

   அந்த இறுதிப் பத்தியில் நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று தெரியவில்லை. பெண்கள் இந்தத் துறையில் வருவதைப் பற்றி மிகவும் பெருமையாக எழுதியுள்ளேன். அதற்கு இப்படியும் ஒரு எதிர்மறை அர்த்தம் இருக்கிறதா என்று வியப்பாக இருக்கிறது சார். பெண்கள் இந்தத் துறைக்கு வரக் கூடாது என்று அர்த்தமா சார் அதற்கு..

   மிக்க நன்றி சார் தங்களின் கருத்திற்கு

   கீதா

   நீக்கு
 24. இப்போதெல்லாம் திருமணங்கள் ஆடம்பரமாகத்தான் நடத்தப்படுகின்றன. ஆறேழு உடன் பிறப்புகளோடு பிறந்து, சாய்ஸ் என்பதே இல்லாமல் வளர்ந்து, திருமணம் செய்து கொண்டு பெற்றோரானவர்கள் அளவோடு பெற்று தங்கள் குழந்தைகள் ஆசைப் படும் எல்லாவற்றையும் நடத்திக் கொடுக்கும்பொழுது திருமணத்தை மட்டும் சிக்கனமாக செய்வார்களா?

  ஆடம்பர திருமணங்கள் பெற்றோர்களின் அந்தஸ்தை காட்டுவதற்காக அல்ல, அவர்கள் தங்கள் குழந்தைகள் மீதுள்ள அன்பை காட்டுவதற்காக என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

  எங்கள் உறவினர் வீட்டு கல்யாணத்தில் பெண் புகைப் படக் காரரை சந்தித்தேன். பெங்களூரில் சாஃப்ட் வேர் இன்ஜினீயராக பனி புரியும் அவருக்கு புகைப் படம் எடுப்பது ஹாபியாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதன் முதலாக எங்கள் தளத்திற்கு வந்துக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி பானுமதி அக்கா. நீங்கள் ஜி எம் பி சார் அவர்களுக்கு உறவு என்று தெரிந்து கொண்டேன்.

   நீங்கள் சொல்லும் கருத்து சரிதான். ஆனால் அன்பிற்கும், ஆடம்பர செலவிற்கும் வித்தியாசம் இருக்கிறதே இல்லையா. எனது உறவினர்கள் பலர் அதுவும் இரு பெண் குழந்தைகள் பெற்றவர்கள் கடன் பட்டு அவதியுறுவதைப் பார்க்க வேதனையாக இருக்கிறது.

   பெண்கள் இந்தத் துறைக்கு வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கும் புகைப்படக் கலையில் மிகவும் ஆர்வம் உண்டு. ஆனால் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு நேரவில்லை. இணையத்தில் கற்றாலும் செய்முறையில் தான் அதிகம் கற்க முடியும். முயற்சி செய்து வருகின்றேன்.

   மிக்க நன்றி அக்கா தங்கள் கருத்திற்கு.

   நீக்கு
 25. சகோ துளசி & கீதா,

  முன்பெல்லாம் திருமண ஆல்பம் என்றால் அதிலுள்ள சடங்குகள், உறவுகள் என அதைப் பார்க்க அவ்வ்வ்வளவு ஆர்வமாக இருக்கும். இப்போதெல்லாம் ஊருக்குப் போகும்போது யாராவது திருமண ஆல்பத்தைப் பார்க்கக் கொடுத்தால் பயந்து ஓட வேண்டியதாய் உள்ளது. ஒவ்வொன்றும் ராட்சஸ சைஸில், பல ஆல்பங்கள், பளிச் மேக்கப்புடன் ! வீடியோ பக்கமே போகமாட்டேன். பின்னாளில் பார்த்து, சந்தோஷப்பட அவர்களுக்கு ஓர் வாய்ப்பு.

  ஆனாலும் புகைப்படத் துறை, அது சார்ந்த வருவாய் எனும்போது சந்தோஷமே ! படங்கள் எல்லாமும் அருமை !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சித்ரா சரியாகச் சொன்னீர்கள்! ஆல்பம் தூக்கவே முடியாமலும் உள்ள்து சித்ரா...மிக்க நன்றி கருத்திற்கு

   நீக்கு
 26. ஆடம்பர திருமணங்கள் சற்று வருத்தமளித்தாலும் ஒரு ஆறுதல் ஜிங்கல் டேபி... பெண்கள் முன்னேற்றம்

  பதிலளிநீக்கு
 27. ஆடம்பரத் திருமணங்கள் உண்மையிலேயே உறவுகளை தூர வைத்துவிடுகின்றன. நீங்கள் சொல்வது போல உறவினர்கள் எல்லோரும் சேர்ந்து தங்களுக்குள் கல்யாண வேலைகளை பங்குபோட்டுக் கொண்டு செய்யும் போது அவர்களுக்கும் கல்யாணத்தில் முழுமையாகப் பங்கு கொண்ட நிறைவு ஏற்படுகிறது. இப்போதெல்லாம் உறவினர்கள் வருவது சாப்பிடுவதற்குத்தான் என்றாகிவிட்டது. இன்னொன்று நீங்கள் சொல்லாதது: காணொளி எடுப்பவர்கள், புகைப்படம் எடுப்பவர்கள் தவிர கல்யாணத்திற்கு வந்திருக்கும் அனைவர் கையிலும் ஸ்மார்ட் போன். அதில் அவர்கள் எல்லோரும் படமெடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

  நாங்கள் சென்ற ஒரு திருமணத்தில் மணமக்களுக்கு போடுவதற்கு அட்சதை கொடுக்க வந்தவருக்கு கோபமோ கோபம்! 'எல்லோரும் அட்சதையை முதலில் வாங்கிக் கொள்ளுங்கள். பிறகு போட்டோ எடுக்கலாம் என்று சத்தம் போட்டார். யாரும் கல்யாணத்தை தங்கள் கண் கொண்டு பார்க்க விரும்பவில்லை. காமிராவின் கண் வழியே தான் பார்க்க விரும்புகிறார்கள்!

  உங்கள் தலைப்பை ரொம்பவும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு