Around 45,000 employees in the five associate banks of the SBI were set to go on strike from Tuesday, opposing the government's decision to merge State Bank of Bikaner and Jaipur (SBBJ), State Bank of Travancore (SBT), State Bank of Patiala (SBP), State Bank of Mysore (SBM) and State Bank of Hyderabad (SBH) with the ...SBI (படமும், செய்தியும் இணையத்திலிருந்து)
“பொண்ணு
+2 ல நல்ல மார்க் வாங்கி பாசாயிட்டா! இந்தா ஸ்வீட் எடுத்துக்க”
“அது
சரி. அடுத்து என்ன ப்ளான் பண்ணியிருக்கீங்க? நர்சிங்க் கோர்சுக்கு விடுங்க. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனினு போயி லட்சக்கணக்கா
சம்பாதிச்சு சுகமா வாழட்டும்.”
“அப்படி
எல்லாம் ஆசை இருக்கு. பணத்துக்கு வழி இல்லையே!”
“எஜுகேஷனல்
லோனுக்கு அப்ளை பண்ணுங்க. பிரச்சனை இல்லாம கிடைக்கும். வேலை கிடைச்சப்புறம் சம்பளத்திலிருந்து
கடனை மீட்டிக்கலாம்”
“அதெல்லாம்
நம்மள மாதிரி சாதாரண ஆளுங்களுக்குக் கிடைக்குமா?”
“கிடைக்குமாவா?
சாதாரண நடுத்தரவர்க்கத்துக்காகத்தான் இந்தக் கடனுதவி திட்டத்தையே அரசும் வங்கிகளும்
சேர்ந்து கொண்டு வந்துருக்கு.”
இப்படி
யாரெல்லாமோ சொல்லித்தான் மாவேலிக்கரை அருகே ச்சாருமூடைச் சேர்ந்த மூலம் குழியில் கிருஷணங்குட்டிக்கும்,
தன் மகளை நர்சிங்க் கல்லூரியில் சேர்க்கத் துணிவு வந்திருக்கிறது. ஒரு நர்சிங்க் கல்லூரிக்குச்
சென்று மகளை சேர்க்க ஏற்பாடு செய்தபின், அருகிலிருந்த ஒரு வங்கிக்கும் சென்று கடனுக்கு
விண்ணப்பித்தும் இருக்கிறார். எப்படியோ
2007 ஆம் ஆண்டு, ஸ்டேட் பெங்க் ஆஃப் திருவிதாங்கூர் கடனாய் தந்த ரூ1,80,000 உடன் தன்
கையிலிருந்ததையும் சேர்த்துத் தன் மகளை நர்சிங்க் கல்லூரியில் சேர்த்துப் படிக்கவைத்தார்.
படித்து
முடித்ததும் அவரது மகளுக்கு வேலையும் கிடைத்திருக்கலாம். அவருக்குக் கிடைத்த ஊதியத்திலிருந்து
கடன் தொகையில் சிறிதளவு மீட்டியும் இருக்கலாம். இதனிடையே நர்சிங்க் படித்த மகளுக்கும்,
அவளது தங்கைக்கும் திருமணமும் செய்து வைத்திருந்திருக்கிறார். உடல் ஆரோக்கியம் நலிந்ததால்,
ஒரு சிறிய பெட்டிக் கடை வைத்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்திலும் மனைவியின் தையல்
தொழிலிருந்து கிடைக்கும் வருமானத்திலும் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்.
இடையிடையே
எப்போதாவது தான் வாங்கிய கடனைப் பற்றி நினைக்காமல் இருந்திருக்க வழியில்லை. கல்விக்
கடன் திட்டத்தில் எடுத்ததுதானே. மகளுக்கு வேலை கிடைத்து அவள் திரும்பச் செலுத்தினால்
போதும் என்று நினைத்திருக்கலாம். மகளுக்கும் குழந்தைகள் குடும்பம் என்று வேலைக்குப்
போக முடியாமல் சூழலோ? வேலைக்குப் போய் கிடைத்த ஊதியம் கடனை முழுதுமாக அடைக்கத்துத்
தீர்க்கப் போதுமானதாக இல்லாத சூழலையோ ஏற்படுத்தியிருக்கலாம். எப்படியோ எடுத்தக் கடன்
தொகையில் சிறிதளவுதான் அவர்களால் அடைக்க முடிந்திருக்கிறது.
எதிர்பாராமல்,
திடீரென, சில நாட்களுக்கு முன், வங்கியிலிருந்து கிருஷ்ணன் குட்டிக்கு வந்த பதிவுத்
தபாலில் உடனே ரூ 3, 82,731 செலுத்தி கடனைத் தீர்க்காவிட்டால் வீடு ஜப்தி செய்யப்படும்
என்ற செய்தியைக் கண்டதும் செய்வதறியாது திகைத்தார். அதன்பின் போலீசார்களின் மிரட்டல்.
போதாதற்கு தாலுகா அலுவலகத்திலிருந்து வந்தவர்கள் வீடு பறிமுதல் செய்யப்படப் போவதாகவும்
அறிவித்தனர்.
இதனிடையே
வங்கிக் கடன்களுக்கு உடனடி தீர்வு காணும் அதாலத், மாவேலிக்கரையில் நடப்பதை அறிந்து
அங்கும் போனார். மீட்டப் பெறாமல் இருக்கும் கடன்களை திரும்ப வசூல் செய்யும் நோக்குடன்
நடத்தப்பட்ட அந்த அதாலத்திலும் அவருக்கு ஆறுதல் கிடைக்கவில்லை. பதிலுக்கு தன் வீடும்
இடமும் எல்லாம் பறிமுதல் செய்யப்படத்தான் போகின்றன என்ற அதிர்ச்சி தரும் செய்திதான்
கிடைத்தது. பாவம் கிருஷ்ணன் குட்டியால் விஜய் மல்லையா எல்லாம் ஆக முடியாது.!
கடைசியாக,
கடனை அடைக்க ஏதேனும் வழி உண்டா என்று மகள்களையும், மருமகன்களையும், உறவினர்களையும்,
நண்பர்களையும் கண்டு ஆராய்ந்திருக்கலாம். வழி ஏதும் இல்லை என்றதும் ஒரு வேளை தான் தற்கொலை
செய்து கொண்டால் தன் மனைவி மக்களுக்கு வீடும், இடமும் கைவிட்டுப் போகாது என்று நினைத்திருக்கலாம்.
எல்லோரும் உறங்கிய பின் வீட்டின் பின்புறமிருந்த மாமரத்தின் கிளைகளில் ஒன்றில் கயிற்றைக்
கட்டி தூக்குப் போட்டுத் தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இப்படித்தான் நம் நாட்டிலுள்ள
ஆயிரக்கணக்கான பாவம் விவசாயிகள். விவசாயக் கடனெடுத்து திரும்பச் செலுத்த முடியாமல்
தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
2007
ஆம் ஆண்டு கிருஷ்ணன் குட்டி எடுத்த ரூ 1,80,000 கடனுக்கு 2016 வரை (சிறிய தொகை திரும்ப
அடைத்தும் கூட) முதலும் வட்டியும் சேர்த்து ரூ 3,82,731. 7 ஆண்டுகளில் தனியார் வங்கிகள்
தாங்கள் பெறும் டெப்பாசிட்டுகளை 2 மடங்காக்கித் திரும்பத் தருகின்றன. இங்கு 9 ஆண்டுகளில்
கல்விக் கடனுக்கு எடுத்தத் தொகை 2.1 மடங்கு ஆகியிருக்கிறது. இதை கல்வி கற்க கிடைக்கும்
உதவியாக எப்படிக் கருத முடியும். 12.5% மேல்
வட்டி வசூலிக்கப்படும் இது வங்கிக்கு லாபம் உண்டாக்க உதவும் ஒரு திட்டமே தான். இப்படிப்பட்ட
சதி செய்தபின், அரசும் வங்கிகளும் மாணவர்களுக்கு, அவர்களது பெற்றோர்களுக்கும் ஏதோ பேருதவி
செய்வதாக, பீற்றிக் கொள்ளுதலில் அர்த்தமில்லை.
இதனிடையில்
தான் இது போன்ற லட்சக்கணக்கான சாதாரண மனிதர்கள் வாங்கும் தொகைக்குச் சமமான தொகையை கடனாய்ப்
பெற்று கண்மூடித்தனமாகச் செலவு செய்து கடனைத் திரும்பச் செலுத்தாமல் விஜய் மல்லையா
போன்றவர்கள் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்கிறார்கள்.
அவர்களுக்குக்
கொடுத்த கடனை வசூல் செய்ய முடியாத வங்கிகள், கிருஷ்ணன்குட்டி போன்றவர்களை மிரட்டி அவர்களைத்
தற்கொலை செய்துக் கொள்ளத் தூண்டுகிறார்கள். தற்கொலை செய்துகொண்டாலும் அவர்களது வீட்டை
ஏலம் போட்டு விற்றுக் கடனை வசூலித்துத் தங்கள் திறமையைக் காட்டுகிறாரள். இது போன்ற
அடித்தட்டு அக்ரமங்கள் மட்டுமல்ல மேல்தட்டில் நஷ்டத்தை ஈடுகட்ட SBT போன்ற லாபம் ஏற்படுத்தும்
பல வங்கிகளை விழுங்கத் தேவையான நடவடிக்கைகளை செய்து கொண்டும் இருக்கிறார்கள். இதில்
இவையும் அடக்கம். State Bank of Bikaner and Jaipur and State Bank of Mysore State Bank of Patiala, State
Bank of Hyderabad, SBI யுடன்
ஒன்றாக்கிட/இணைக்கப்பட உள்ளன.
இது
போன்ற பூநாகங்கள் வாழும் பூக்களாம் வங்கிகள் பூத்துக் குலுங்கி நிற்கும் நம் நாட்டில்
சாதாரண மக்கள், மணமில்லா இக் காகிதப்பூக்களை நுகர்கிறேன் பேர்வழி என்று அதனுள் ஒளிந்திருக்கும்
பூநாகத்தை நுகர்ந்து மரணத்தைத் தழுவாமல் விழிப்போடு இருக்க வேண்டும்.
(கீதாவின் பதிவுகள் காத்திருக்கின்றன என்று சொல்லியிருந்தேன். இன்னும் தயாராகவில்லை....வேலைப்பளு காரணமாக....)