புதன், 30 டிசம்பர், 2015

மாறுமா தமிழகத்தின் தலைவிதி?! - 3


இதுதான் இப்போதைய அரசியல்கட்சிகளின் நிலைமை - என் மின் அஞ்சலுக்கு வந்த படம்
முந்தைய பதிவின்  http://thillaiakathuchronicles.blogspot.com/2015/12/Will-The-Fate-Of-TamilNadu-Change.html  தொடர்ச்சி...இந்தப் பொதுச் சுகாதாரச் சுத்தம் என்பது தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் பொருந்தும். இது ஒருபுறம்... மறுபுறம்.......


மற்றொருபுறம் தொலை நோக்குப் பார்வையில் திட்டங்கள். “உங்கள் அரசு தொலைநோக்குப் பார்வையில் என்ன செய்யப் போகின்றது?” இது என்னுடன் பயணித்த வெளிநாட்டுப் பயணி ஒருவர் கேட்ட கேள்வி. வெள்ளத்தின் போது பாண்டிச்சேரியில் இருந்தாராம். நான் மனதிற்குள் சிரித்துக் கொண்டுச் சமாளித்தேன் ஏதோ சொல்லி.  வேறு என்ன சொல்ல? நம்மை விட்டுக் கொடுத்துப் பேசவா முடியும்? என் மனதிற்குள் தோன்றியது இதுதான். 

சென்னையை என்பதைவிட சென்னையின் சுற்றுப்புறத்தையும், கடலூரையும், மற்றும் தமிழகத்தையே மீட்டெடுப்பது என்பது எளிதான காரியம் அல்ல. நல்ல வலுவான தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய, ஆக்கப்பூர்வமான திட்டங்களும் அதைச் செயல்படுத்தும் முறைகளையும் நம் அரசு அதைச் செய்யுமா என்பது சந்தேகமே.  மக்களின் மனதை மாற்றும் பணிகளும், இன்னும் சில மாதங்களில் யார் ஆட்சியைப் பிடிக்கப் போகின்றார்கள் என்பதற்கான செஸ் விளையாட்டுகளும் ஆரம்பித்துவிட்டன.

வழக்கம் போல ஒவ்வொரு கட்சி சார்ந்த ஊடகமும், தொலைக்காட்சிகளும், கட்சிகளையும், அதன் தலைவர்களையும் முன்னிலைப்படுத்தி, விளம்பரங்கள் வெளியிட்டு வருகின்றன. நமது ஆட்சியாளர்கள் கட்சி சார்ந்து, சுயவிளம்பரத்தோடுதான் இருக்கின்றார்களே தவிர மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளவில்லை. அவர்களுக்கென்ன? மழை அடித்துச் சென்றதிலும் அள்ள வேண்டியவை இருக்கின்றதே. விளம்பரத்திற்கு உதவுவது எது தெரியுமா? வெள்ளம்தான்.

இயற்கை அன்னை இப்போது வருந்துகின்றாள். ஏன் புயலாய் வெள்ளமாய் அவதாரம் எடுத்தோம், குறிப்பாகச் சென்னையிலும், கடலூரிலும் என்று. “என்னை இப்படித் தங்கள் விளம்பரத்திற்குச், சுயநலத்திற்கு, ஆட்சியைப் பிடிப்பதற்கு உபயோகப்படுத்துகின்றார்களே என்னைச் சுட்டிக் காட்டி! இதற்கா நான் வெள்ள அவதாரம் எடுத்தேன்? இவர்கள் எல்லோருக்கும் பாடம் புகட்ட அல்லவா எடுத்தேன்! இப்போது நான் பகடைக் காயாகிவிட்டேனே! என்ன மனிதர்கள் இவர்கள்! இனி நான் சென்னைப் பக்கம்....இல்லை தமிழகத்தின் பக்கமே திரும்பிப் பார்க்க மாட்டேன்” என்று வருந்தி சாபமே கூட இட்டுவிடலாம்.

இப்போது கூட இருகோடுகள் தத்துவமும், இதுவும் கடந்து போகும் எனும் தத்துவமும்தான் வீறுநடை போட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. பல ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்காகக் குரல் கொடுத்து, வாதாடி, வலுவான தூணாக இருந்து அரசைச் செயல்படுத்த வைப்பதை விடுத்து, ஊடகங்கள் சில செய்திகளைப் பற்றி மட்டுமே பேசிப் பெரிதாக்கி முக்கியமானவற்றைப் புறம் தள்ளி இந்தச் செய்திகள் முன்னில் நிற்பது அரசியல் விளையாடுவதை ஊர்ஜிதப் படுத்துகின்றது.

திட்டங்கள் எதுவுமே தொடர்வதில்லை என்பதுதான் மிகவும் வேதனை. ஒரு ஆட்சி தொடங்கும் திட்டம், மற்றொரு ஆட்சியால் தொடரப்படாமல் கிடப்பில் இட்டு முந்தைய ஆட்சியைக் குறை சொல்லுவதில் காலத்தைக் கடத்தி, அவர்கள் வேறு திட்டம் என்று ஏதோ ஒன்றைத் தொடங்கி அதுவும் கிடப்பில் இட்டு ஒவ்வொரு கட்சியும், ஆட்சியும் மற்றவர்களைக் கைகாட்டி, இப்படிக் கோடிக் கோடியாகப் பணம் ஏப்பம் விடப்படுகின்றதே அல்லாமல் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. போதாக் குறைக்கு யார் ஆட்சியில் இருக்கின்றார்களோ அவர்களது படங்கள் வேறு.

நம் தமிழகம் எப்படி இருக்கின்றது தெரியுமா? சாலை விபத்துகளில் முதலிடம், நீர்நிலைகளைப் புறக்கணிப்பதில், சுற்றுலாத்துறை வருவாய் குறைவு, (நன்றி கூட்டாஞ்சோறு செந்தில்சகோ) டாஸ்மாக் டார்கெட் வைத்து டாப்பில், ஊழல்களில் இந்தியாவிலுள்ள மாநிலங்களில் முதல் 5 இடங்களுள் என்று விரிகின்றது புகழ்!!!!

எனக்கு அரசியல் சட்டம் பற்றியோ, அரசியல் சாசனம் பற்றியோ தெரியாது. ஆனால், எனது மனதில் நெடுங்காலமாக இருந்துவரும் எண்ணம் ஒன்று.

திரைத்துறை, கட்சி, கொடி, பஞ்ச் அறிக்கைகள், முதல்வர் என்ற அரியாசனத்தின் பாதிப்பு, மாலைகள், தோரணங்கள், பந்தல்கள், சால்வைகள், அல்லக்கைகள், விளம்பரங்கள், விளம்பரப் பதாகைகள், இலவசங்கள் எதுவும் இல்லாத, நேர்மையான, நம்பிக்கைக்குப் பாத்திரமான, நல்ல கல்வியறிவு பெற்ற அதிகாரிகளை வைத்துக் கொண்டு, எப்பேர்ப்பட்ட மக்களும் எளிதில் சந்தித்துத் தங்கள் குறைகளைக் கூறி நிவர்த்தி கேட்க முடிந்த, மக்களோடு மக்களாகக் கலந்து, மக்களின் பார்வையில் தொலை நோக்கில் நல்ல சீரிய வகையில் திட்டங்கள் தீட்டி தமிழகத்தை மேம்படுத்தும் ஒரு நல்ல ஆளுமை நிறைந்த, கேரிஸ்மாட்டிக் தலைமையைக் கொண்டு வருவது இயலாதா?! எந்தக் கரையும் வேண்டாம்! கறையும் வேண்டாம்! இதற்கு ஏற்ற, நேர்மையான அதிகாரிகள் பலர் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, தமிழகத்தை வழிநடத்த முடியாதா?

அரசியலைப் பகிரங்கமாகத் தைரியமாகப் போட்டுத் தாக்கும் மதுரைத் தமிழனும், அதைவிடச் சற்றுக் காரம் குறைவாகத் தாக்கும் இபுஞாவும், விசுவும், மனசு குமாரும், மற்றும் இதன் நுணுக்கங்கள் அறிந்தவர்களும்  இதை வாசிக்க நேர்ந்தால், இது என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கே என்று நினைத்துச் சிரிக்கலாம். அப்படியேனும் புதியதொரு தமிழகம் மலராதா என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான்.  உங்களில் யாரேனும் பதில் தெரிந்தால் பதில் சொல்லுங்களேன்..

ஒன்றுமட்டும் உறுதி. மக்கள் விழிப்புணர்வுடன், தங்கள் உரிமைகளை நிலைநிறுத்த வேண்டும். சாலைவிதிகள், பொதுச்சுகாதாரம், இவற்றில் மக்களும் பொறுப்புடன் ஒருங்கிணைதல், நல்ல சாலைகள், ஊழல் புரையோடிக் கிடக்கும் தொடக்கக் கல்வித்துறையிலிருந்து உயர்கல்வி வரை தரமான கல்வியுடன் அரசு மயமாக்குதல், ஊழலற்றக் காவல்துறை, அரசாங்க மருத்துவமனைகளில் நல்ல மருத்துவம், விலைவாசி, தரமான பொருட்கள் என்று அன்றாட வாழ்வாதாரத் தேவைகள் வரை உரிமைகள் நிலைநாட்டப்படும் விழிப்புணர்வு வேண்டும். மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான, மக்களை நல்ல முறையில் வழிநடத்தும் நல்ல ஆளுமை பொருந்திய ஒரு அரசு அமைந்து, மக்களும் பொறுப்புடன் ஒருங்கிணைந்தால் மட்டுமே தமிழகத்தின் தலைவிதி மாறும்! விதி மாற வழியில்லையெனின் அது தமிழகத்தின் சாபக்கேடு என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை!

(பின்குறிப்பு: எங்கள் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வரவில்லை.  கொஞ்சம் கூட வெள்ளமே வராத பகுதி மக்களுக்கு வந்திருக்கிறது நிவாரணம்!!!)


---------கீதா


செவ்வாய், 29 டிசம்பர், 2015

மாறுமா தமிழகத்தின் தலைவிதி?! - 2 (பொதுச்சுகாதாரம்-சென்னை)

படம் - இணையத்திலிருந்து

வெள்ள நிவாரணப்பணிகள் பல தன்னார்வலர்களின் உதவியுடன் மின்னல் வேகத்துடன் நடைபெற்றுக் கொண்டிருந்தது ஒருபுறம். மறுபக்கம், ஏற்கனவே, குப்பைகள் மண்டிகளாய் பொதுச் சுகாதாரம் துளியும் இல்லாத தமிழ்நாட்டின் தலைநகரில், வெள்ளத்தினால் அடித்து ஒதுக்கப்பட்டக் குப்பைகளும், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததானால் வீணாகிப் போன பொருட்களும் குப்பைகளாய் மலை போல் ஒவ்வொரு தெருவிலும் குவிந்து, மக்கி நாற்றமெடுத்தக் குப்பையும் சேர்ந்து கொண்டு பொதுச்சுகாதாரம் பயமுறுத்தியது. சாதாரண நாட்களிலேயே சென்னையைச் சுத்தப்படுத்தல் என்பது மலையைப் புரட்டும் வேலைதான் எனும் போது இப்போதோ?

சிங்காரச் சென்னையாக்கப் போகின்றோம் என்று சொல்லியவர்கள் எல்லாம் காணாமல் போயிருக்க, அரசும் மெத்தனமாக இருக்க, பொது மக்களும் கூட தங்கள் பகுதியைச் சுத்தப்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளாத போது, சுத்தப்படுத்தலிலும் கூட தன்னார்வலர் குழு ஒன்று இறங்கியது களத்தில்.  அவர்தான் பீட்டர் வான் கெய்ட். சென்னை ட்ரெக்கிங்க் க்ளப் எனும் குழு/தளம் அமைத்து நிறுவி வருபவர். இவரைப் பற்றி எங்கள் ப்ளாகில் பாசிட்டிவ் செய்தியிலும் வந்தது.

படம் இணையத்திலிருந்து 
பீட்டர் குழுவினர் எல்லோருமே இளைஞர்கள், நடுத்தரவயதினர். மட்டுமல்ல நல்ல வேலையில் இருப்பவர்கள். அவர்கள் ஒவ்வொரு பகுதியாகச் சுத்தம் செய்து வந்த வேளையில் சென்ற ஞாயிறு (20/12/2015) அன்று கோட்டூர்புரத்தில், அடையாற்றை ஒட்டினாற் போல் அதன் கரையில் அமைந்திருக்கும் சித்ராநகர் எனும் பகுதியில் சுத்தம் செய்தனர்.

அன்று பீட்டர் குழுவுடன் இணைந்து, நிசப்தம்-வா மணிகண்டனும் கலந்து கொள்ளப்போவதாகவும் ஆர்வம் உள்ளவர்கள் கை கொடுக்கலாம் என்றும் தனது வலைத்தளத்தில் அறிவித்திருந்தபடி, அவரும் அவரது நண்பரும், கலந்து கொண்டனர். நிசப்தம் வாசகர்களில் 2, 3 பேர் கலந்து கொண்டதாக மணிகண்டன் நிசப்தத்தில் எழுதியிருக்கிறார். ஏற்கனவே நான் சிறிய அளவில் செய்துவந்தாலும், இந்தக் குழுவுடனும் கலந்து கொள்ள முடிவு செய்து கலந்து கொண்டேன்.

ஒரு குடும்பமே தாம்பரத்திலிருந்து வந்திருந்தது! குழுவினர் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், ஒரு சிறிய முணுமுணுப்பும் கூட இல்லாமல் சென்னையைச் சுத்தம் செய்து வருபவர்கள். அவர்களை எவ்வளவு பாராட்டினாலும், அகராதியில் கூட அதற்கு வார்த்தைகள் இல்லை எனலாம். ஏனென்றால், அந்தக் குப்பைகளை அள்ளுவது என்பது அத்தனை எளிதல்ல. அருகில் கூடச் செல்ல முடியாத அளவிற்கு நாற்றம்.

எனது இரு அனுபவங்களிலிருந்தும் நான் அறிந்து கொண்டது. நாம் சுத்தம் செய்யும் பகுதியைச் சேர்ந்த மக்கள் (இளைஞர்கள் உட்பட) எல்லோருமே வேடிக்கைப் பார்க்கின்றார்கள், தங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத்தைப் போல, உதவும் மனப்பான்மையற்று இருப்பதைப் பார்க்க முடிந்தது. இதோ இங்கு குப்பை இருக்கிறது, அதோ அங்கு இருக்கிறது என்று கை வேறு காட்டினரே தவிர மிக மிக அலட்சியப் போக்கு. சுத்தம் செய்யப்படும் பகுதியில் அடுத்த நாள், இல்லை, அடுத்த வேளையே அவர்கள் குப்பை போடத்தான் போகின்றார்கள் என்பதும் தெரிந்ததுதான்.

எனக்கு சற்று வேதனையும், கடுப்பும் வரத்தான் செய்தது, இலவசத்திற்கும், தன்னார்வலர்கள் தங்கள் உழைப்பில் கொடுத்த நிவாரணப் பொருட்களுக்கும் ஓடிவரத் தெரிந்தவர்களுக்குத், தங்கள் பகுதியைச் சுத்தம் செய்யும் பொறுப்பற்ற மனதையும், செய்பவர்களுடன் சிறு ஒத்துழைப்பைக் கூட கொடுக்க முன்வரும் எண்ணமுமற்ற, அலட்சிய மனப் போக்கையும் கண்டு. அப்படி ஒரு பொறுப்புணர்வு இருந்திருந்தால் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களே வெள்ளம் வடிந்த உடனேயே சுத்தம் செய்திருப்பார்களே!

எனக்குத் தோன்றியது என்னவென்றால், தன்னார்வலர்களும் சரி, துப்புரவுப் பணியாளர்களும் சரி, ஒவ்வொரு பகுதிக்கும் செல்லும் போது அந்தப் பகுதி மக்களையும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட வைக்கலாமோ என்று. அப்படியாவது மக்களுக்கு ஒரு உணர்வும், பொறுப்பும் வராதோ என்ற ஒரு ஆதங்கம். மேட்டுக் குடி மக்கள் என்றில்லை, சாதாரண மக்களும் அலட்சியமாகப் பொறுப்பற்றுத்தான் இருக்கின்றனர்.
 
என்னுடன் பயணித்த துப்புரவுப் பணியாளப் பெண்மணி ஒருவரிடமிருந்து அறிந்தவை. தற்போது தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் துப்புரவுப் பணியாளர்களும் சென்னையைச் சுத்தம் செய்யும் பணிக்காக வந்துள்ளனர்.  மட்டுமல்ல சென்னையைச் சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சியின் ஒப்பந்த அடிப்படையிலும் மக்கள் சேர்க்கப்பட்டுச் செய்துவருகின்றனர். சென்னையைச் சேர்ந்த துப்புரவு பணியாளர்களில் பலரும் தங்கள் வீடுகளையும், குருவி சேர்ப்பது போல் சேர்த்த பொருட்களையும், நெருங்கிய உயிர்களையும் இழந்தவர்கள். சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்கள். (எனக்கு அப்படி அவர்களை அழைப்பதில் விருப்பம் இல்லாததால் சொல்லவில்லை.  அவர்களும் மனிதர்கள்!)


இந்த மக்களில் பெரும்பான்மையோர், மக்கிய, துர்நாற்றம் வீசும் குப்பைகளை, வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட கழிவறைகளும், மனிதக் கழிவுகளும் அடங்கிய குப்பைகளை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் (கையில் உறையோ, முகத்தில் மாஸ்க்கோ, காலில் பூட்சோ இல்லாமல்) அள்ளுகின்றார்கள். இவர்களுக்கு எந்தவிதத் தொற்றும் தொற்றிக் கொள்ளும் அபாயம் உள்ளது. இவர்களுக்குத் தரப்படும் கூலியோ மிகவும் குறைவு. அரசு எந்தவிதப் பாதுகாப்பும் கொடுக்கவில்லை. எங்கள் பகுதியில் சுத்தம் செய்யும் பெரியவர் உட்பட. சென்னை மக்கள் இந்த மக்களுக்கு நன்றிக்கடன்பட்டவர்கள் மட்டுமல்ல, தங்கள் பொறுப்பற்ற நிலைக்கு வெட்கித் தலைகுனியவும் வேண்டியவர்கள். உண்மையான ஹீரோக்கள் இந்தத் துப்புரவுப் பணியாளர்கள்!

 கோட்டூர்புரம் ஹவுசிங்க் போர்ட் பகுதி - படம் - இணையத்திலிருந்து

இப்போது அள்ளப்படும் குப்பைகளில் ப்ளாஸ்டிக் குப்பைகள் அதிகமாக இருக்கின்றன. சில வருடங்களுக்கு முன்னால், மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தனித்துப் பிரித்து இடும் பழக்கம் கொண்டுவரப்பட்டு இப்போது கிடப்பில். இதுதான் நம்மூர் பழக்கம்.  அரசு குப்பைகள் அள்ளும் தொழில்நுட்பத்தைச் செயல்படுத்த வேண்டும். செய்யுமா? கேள்விக்குறியே! 

எந்தச் சட்டதிட்டமும் வன்மையாகக் கடைபிடிக்கப்படுவதில்லை என்பதுதான் நிசர்சமான உண்மை. அதனால் மக்களும் மெத்தனமாகி அதற்குப் பழகியேவிட்டனர். ஒவ்வொரு பகுதி மக்களும் தங்கள் பகுதியைச் சுத்தமாக வைத்துக் கொள்ளப் பொறுப்புடன் ஒத்துழைக்காவிடில், சென்னையின் சுத்தமும் சிங்காரச் சென்னைக் கனவும் மிகப்பெரிய சவலாகவே இருக்கும். கடலூரிலும் இப்படித்தான் என்று கேள்விப்பட்டேன். இந்தப் பொதுச் சுகாதாரச் சுத்தம் என்பது தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் பொருந்தும். இது ஒருபுறம்... மறுபுறம் ....தொடரும்..நாளை

----கீதா

(ஸ்கூப் ந்யூஸ்! வலைப்பதிவர்கள் எங்களிடமிருந்து வாழ்த்துகள் செந்தில்!! ஐந்து மாநிலங்கள் சேர்ந்து நடத்தவிருக்கும் விவசாயம் சம்பந்தப்பட்ட விழாவில் நம் நண்பர் கூட்டாஞ்சோறு செந்தில் அவர்கள் பரிசு பெறப் போகின்றார், விவசாயத்தைப் பற்றிய பத்திரிகை நடத்துவதற்கு, 103 பேர் பரிசு பெறுவதில் ஒருவராக என்பதை இங்கு மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் விவரங்கள் அவரது தளத்தில் அவர் பரிசு பெற்றதும் பகிரப்படும்.)


வியாழன், 24 டிசம்பர், 2015

உண்மை உறங்காது!...சில நேரங்களில், சிலரை உறங்கவும் விடாது.!!

Image result for truth never sleeps
ரசதந்திரம் எனும் சத்தியன் அந்திக்காடு இயக்கிய, மோஹன்லால், மீராஜாஸ்மின், இன்னெசென்ட் நடித்த, சிலவருடங்களுக்கு முன் வெளியான நல்ல ஒரு திரைப்படம். அதில், மோஹன்லால், மீரா ஜாஸ்மினை ஆண்வேடமிட்டுத் தன்னுடன் தங்க வைத்திருக்கிறார். 
Image result for rasathanthram malayalam movie
நண்பரான இன்னெசெண்டிடம் மட்டும் ஒரு நாள் அவ்வுண்மையைச் சொல்லி யாரிடமும் சொல்லக் கூடாது என்று எச்சரிக்கவும் செய்கிறார். காணாமல் போன மீரா ஜாஸ்மின் கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் பலரையும் கைதுசெய்துத் தீவிரமாக விசாரித்துக் கொண்டுவேறு இருக்கிறார்கள்.  அந்த உண்மையை விழுங்கி ஜீரணிக்க முடியாத பாவம் இன்னெசென்ட் உறக்கமின்றித் தவித்து அன்றிரவே படுக்கையிலிருந்து எழுந்து ஒரு மலையடிவாரத்திற்கு ஓடிச் சென்று யாரும் இல்லை என்ற தைரியத்தில் உறக்க அவ்வுண்மையைச் சொல்லி முடித்து நிம்மதியுடன் திரும்ப, இரவு ரோந்து சுற்றிய இரு காவல்துறையினர் அவரது பின்னால்!...

சில உண்மைகளை அவ்வளவு எளிதாக விழுங்கி ஏப்பம் விட்டுவிட முடியாது.  சினிமாவில் மட்டுமல்ல, நிஜவாழ்விலும் ஏராளமான இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 

Naxal Varghese.jpg
வர்கீஸ்
கேரளாவின் செகுவேரா என்றழைக்கப்படும் வயநாடு நக்சலைட் வர்கீஸ் கொலை சம்பந்தப்பட்ட வழக்கும் அது போலத்தான். காவல்துறையினருக்கும், வயநாடு ஆதிவாசி மக்களுக்காகப் போராடிய வர்கீசுக்கும் 18.02.1970 ல் நடந்த துப்பாக்கி மோதலில் வர்கீஸ் கொல்லப்பட்டார் என்று சொல்லப்பட்டு முடித்த அந்த வழக்கை, இராமச்சந்திரன் எனும் போலீஸ்காரர், 28 ஆண்டுகளுக்குப் பிறகு, தான் இறப்பதற்குச் சிலவருடங்களுக்கு முன், அதாவது 1998 ல், தன்னால் விழுங்கி ஜீரணிக்க முடியாத அந்த உண்மையை வெளிப்படுத்தினார். இறந்த உடலின் மீது துப்பாக்கி ஒன்று வைக்கப்பட்டு, துப்பாக்கி மோதலில்தான் கொல்லப்பட்டதாக ஜோடனை செய்யப்பட்டதாம்.

உண்மை என்னவென்றால், சரணடைந்த வர்கீசை, டிஎஸ்பி இலட்சுமணன் வற்புறுத்தியதால் வேறு வழியின்றி, தான் சுட்டுக் கொன்றேன் என்று கூறி அவ்வழக்கை சிபிஐ மீண்டும் ஏற்றெடுத்து நடத்தச் செய்துவிட்டார் இராமச்சந்திரன். அவ்வாறு நடந்த வழக்கில் 28.10.2010 ல், அதாவது 40 ஆண்டுகளுக்குப்  பிறகு, அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பலரும் 80 வயதைத் தாண்டிய நிலையில் சக்கர நாற்காலியில் நீதிமன்றத்திற்கு விசாரணைக்குக் கொண்டுவரப்பட்டனர். அதில், இலட்சுமணனுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது!

சிலமாதங்களுக்கு முன் இது போல் புத்திசாலித்தனமாய்ப் புதைக்கப்பட்ட ஓர் உண்மை, அவ்வுண்மை அறிந்த ஒருவரை உறங்கவிடாமல் செய்து போலீசாருக்கு அவரைக் கொண்டே ஒரு மொட்டைக் கடிதத்தை எழுத வைத்து அதன் வாயிலாக குற்றவாளிகளைக் கைதுசெய்ய வைத்திருக்கிறது. அக்டோபர் மாதம் 2015 ல் அஞ்சாலுமூடு காவல் நிலையத்திற்கு வந்த ஒரு மொட்டைக் கடிதத்தில், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கொல்லப்பட்ட, வெட்டுவிளை தன்யாநிவாஸ் ஸ்ரீதேவியம்மா (52) என்பவரின் உடல், திருக்கடவூர் குப்பனபொங்கும்தாழத்து எனும் இடத்திலுள்ள, ஆளில்லா வீட்டில், கழிவறைத் தொட்டியில் இருப்பதாகவும், அவரைக் கொன்றவர்களின் ஒருவரான ராஜேஷ் (42) கண்ணூர் முழப்பிலங்ஞாடியில் இருப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது. காவல் துறையினர் கழிவறைத் தொட்டியைப் பரிசோதித்த போது, ஸ்ரீதேவி அம்மாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ராஜேஷைக் கைது செய்து விசாரணை செய்ய, ஒரு வருடத்திற்கு முன் நடந்த கொலையைப் பற்றிய உண்மையும் வெளியானது.

ஸ்ரீதேவி அம்மாவின் வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்த ராஜெஷுக்கும் ஸ்ரீதேவியம்மாவுக்கும் இடையே ஏற்பட்ட நட்பு தகாத உறவு கொள்ளும் வரை சென்றுவிட்டது.  இடையில் வேறு வீட்டிற்கு ராஜேஷ் குடி போன பின்னும் அவர்களது உறவு தொடர்ந்தது. ஒரு நாள், ராஜேஷ் தன் நண்பன் வினோதிடம் குடி போதையில் இருந்த போது இதைப்பற்றிப் பேச, வினோதின் வற்புறுத்தலுக்கு இணங்கி ஸ்ரீதேவியம்மாவை ராஜேஷ் இடையிடையே சந்திக்கும் குப்பனபொங்கும்தாழத்தில் உள்ள அந்த ஆளில்லாவிட்டிற்கு வரச் சொல்ல, ஸ்ரீதேவியம்மாவும் அங்கு வந்திருக்கிறார்.

தகாத உறவு கொள்ளும் ஆணுக்கும், பெண்ணிற்கும் உள்ள வித்தியாசம் இதுதான். பெரும்பான்மையான ஆண்களுக்கு அப்பெண்களிடம் உள்ள ஆர்வம் நாள்பட குறைந்து கொண்டே போகும். ஆனால், பெரும்பான்மையான பெண்களுக்கு அவ் ஆண்களிடம் அன்பு மட்டுமல்ல, அசட்டு நம்பிக்கையும் கூடிக் கொண்டே போகிறது. பெண்கள், ஆண்களைக் கண்மூடித்தனமாக நம்பும் போது ஆண்களோ மனிதாபிமானமே இல்லாமல் இது போல் தங்களது நண்பர்களுக்குத் தங்களை நேசிக்கும், தங்களை நம்பும் பெண்களைத் தானம் செய்து நட்பைப் பலப்படுத்தவோ, பணத்திற்காகவோ முற்படுகின்றார்கள். பெரும்பாலும் இக்கட்டானச் சூழல்களிலும் சிறந்த முடிவெடுக்கும் விவேகசாலிகளான பெண்கள் கூட இது போன்ற சந்தர்ப்பங்களில் விவேகம் இழந்துச் சிந்திக்காமல் செயல்பட்டுத் தங்களது அழிவைத் தாங்களே தேடிக் கொள்கிறார்கள்.

தன் நண்பன் வினோதின் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று சொன்ன ராஜேஷின் சுயரூபத்தைக் கண்ட ஸ்ரீதேவியம்மா கோபத்துடன் அங்கிருந்து போக முயல, வேலியாய் நின்று தன்னை நம்பிவந்த பெண்ணைக் காக்கவேண்டிய ராஜேஷ், பயிரை மேயவந்த காளை முன் வேலியே பயிரைப் பிடுங்கி எறிந்து கொடுப்பதைப் போல் ஸ்ரீதேவியம்மாவை.......உங்களால் யூடிக்க முடியாதா என்ன? கொலை! கூச்சலிட்டு ஆட்களை வரவழைக்காமல் இருக்க ஸ்ரீதேவியம்மாவின் வாயை இருவரும் பொத்திப் பிடிக்க அவரது உயிர் போனதாம். உடனே, இருவரும் ஆளில்லா அவ்வீட்டின் பின்புறமுள்ள கழிவறைத் தொட்டியை மூடியிருந்த சிமென்ட் ஸ்லாபை நகர்த்தி, அதனுள் ஸ்ரீதேவியின் உடலைத் தள்ளியிட்டு அதன் மேல் ஒருசில கற்களையும் போட்டு ஸ்லாபை மூடியிருக்கிறார்கள்.

மூவரது சிம்கார்டுகளையும் ஃபோனிலிருந்து எடுத்து அடுத்துள்ள ஓர் ஏரியில் எறிந்த பின் இருவரும் அங்கிருந்துத் தப்பி ஓடிவிட்டார்கள். வினோத் வளைகுடா நாட்டில் எங்கோ இருக்கிறாராம்.  கைது செய்யப்பட்ட ராஜெஷ் இப்போது சிறையில். வினோதும் விரைவில் பிடிக்கப்படலாம். அப்படி, உண்மை தெரிந்த ஒருவரை உறங்கவிடாமல் நச்சரித்த ஓர் உண்மை ஒரு வருடத்திற்குப் பிறகு, அவரைக் கொண்டு ஒரு மொட்டைக் கடிதம் எழுதவைத்துக் குற்றவாளிகளைக் கண்டுப்பிடிக்க உதவியிருக்கிறது. ஆண், பெண் நட்பில் தவறில்லை.  ஆனால், பெண்கள் ஆண்களுடன் பழகும் சந்தர்ப்பங்களில், கவனத்துடன் இருப்பது மட்டுமல்லாமல், தங்கள் நட்பின் எல்லையைப் புரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியமாகிறது.

படித்தவர்கள் அதிகம் வாழும் மாநிலம் எனச் சொல்லப்படும் கேரளத்திலும் இப்படி. கொலைக்குற்றம் புரிந்த இருவருக்கும் கிடைக்கவிருக்கும் தண்டனையை விட மிகப்பெரிய தண்டனையான மரண தண்டனை ஸ்ரீதேவியம்மாவிற்குக் கிடைத்ததற்குக் காரணம், அவர் ராஜேஷ் போன்ற மனித மிருகத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் போன அவரது அறிவின்மைதான் காரணம் என்பதா? இல்லை இது போன்ற தப்புத் தாளங்களுக்கும் வழி தவறிய பாதங்களுக்கும் இப்படிப்பட்ட முடிவுதான் வேறென்ன? என்பதா?....உங்களுக்கு என்ன தோன்றுகின்றது?... இது போன்ற சம்பவங்களைப் பற்றி எல்லாம் எழுதி வீணாக எங்களிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டாம் நண்பரே என்றும் சொல்லத் தோன்றுகிறதோ?!!!!!!

படங்கள் : இணையத்திலிருந்து



திங்கள், 21 டிசம்பர், 2015

வாழ நினைத்தால் வாழலாம்.... வழியா இல்லை ஊரினில் – 2


பொதுவாக எல்லா விபத்துக்கும் காரணமாவது கவனக் குறைவு, அலட்சியம், தேவையில்லாத, தேவைக்கு அதிகமான தைரியம் காட்டும் மனப்பான்மை இப்படி ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும். அப்படி ஒரு சிறிய கவனக் குறைவு எர்ணாகுளம் சர்ப்பக்காவைச் சேர்ந்த 25 வயதான விஜயகுமாரது வாழ்வில் ஏற்படுத்தியதோ பேரிழப்பு! ஒரு மருந்துக் கம்பெனியில் விற்பனைப் பிரதிநிதியாகப் பணியாற்றிய அவர் எப்போதும் ரயிலில் பயணிப்பவர்.

கடந்த வருடம் ஒரு நாள் இரவு ரயில் பயணத்தின் போது கழிவறைக்குச் சென்ற அவர் இரண்டு கழிவறைகளிலும் ஆட்கள் இருந்ததால் படிக்கட்டின் கதவருகே நின்றிருக்கிறார். வண்டி கோழிக்கோடு ஃபரூக்கைத் தாண்டித் தெற்கே போய்க்கொண்டிருந்தது. பெரிய பெட்டி மற்றும் பைகளுடன் அவர்களது படுக்கும் இடத்தைத் தேடிப்போகும் ஒரு குடும்பத்திற்கு வழி கொடுக்க கொஞ்சம் பின்னால் தள்ளி நின்ற அவர், எப்படியோ ஒரு கை தன் பிடியை விட ரயிலில் இருந்து வெளியே விழுந்துவிட்டார்! 

இருப்பினும் ஒரு கை தன் பிடியை விடவில்லை.  மறு கையையும் சேர்த்து அக்கம்பியைப் பிடித்துத் தொங்கத் தொடங்கியிருக்கிறார்.  உதவிக்காகக் கத்தியும், கதறியும் எவரும் கேட்க வில்லை ரயிலின் சத்தத்தில்.  கடந்து சென்ற குடும்பமும் அவர் விழுந்ததைக் கவனிக்கவே இல்லை.  இடையே அவரது கால்கள் தட்டியும், மோதியும், உராய்ந்தும் அவருக்குத் தாங்கமுடியாத வலியும், மயக்கமும் வந்த போதும், தன் பெற்றோரையும், மனைவி மற்றும் குழந்தையையும் நினைத்து பிடித்த பிடியை விடவே இல்லை.

அப்படி ஒரு மணி நேரம் தொங்கிக் கொண்டுப் பயணித்திருக்கிறார். அதன் பின் முடியாமல் பிடி தளர ஓரிடத்தில் விழுந்தே விட்டார்.  சிறிது நேரத்திற்குப் பிறகு கைககளை ஊன்றி எழ முயன்றிருக்கிறார். ஒரு காலின் முழங்காலுக்குக் கீழ் ஒரு காலைக் காணவில்லை. மறுகாலில் எலும்புகள் வெளியே நீட்டிக் கொண்டிருந்திருக்கின்றன. உதவிக்காக அலறியிருக்கிறார்! பலனில்லை.  அவரை எதிர்ப்பார்த்து வீட்டில் காத்திருக்கும் நான்கு உயிர்களைப் பற்றி எண்ணிய போது அவருக்கு எங்கிருந்துத் தைரியமும், தெம்பும், சக்தியும் வந்தது என்று தெரியவில்லை.  கைகளை ஊன்றி, தரையில் தவழ்ந்தும், ஊர்ந்தும் தண்டவாளத்தின் இடது புறம் செல்லத் தொடங்கியிருக்கிறார். 

சிறிது தூரம் சென்றதும், தூரத்தில் ஒரு ஆட்டோ நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டார்.  அங்குவரைத் தவழ்ந்துச் செல்லும் முன் அந்த ஆட்டோ அங்கிருந்து போய்விட்டால்.....கையில் கிடைத்த ஒரு கல்லை எடுத்து எறிந்தார்.  அடுத்த கல்லை எறியும் முன் யாரோ ஒருவர் தன் அருகே வருவதைக் கண்டார்.....அப்படி அவரது மன உறுதி, அவரை இறுதியில் காக்கும் கரங்களில் ஒப்படைத்திருக்கிறது.  ஏறக்குறைய 5 லட்சம் ரூபாய் செலவானாலும், அவரது இரு கால்களையும் முழங்காலுக்குக் கீழே இழக்க நேர்ந்தாலும், உயிர் பிழைத்துவிட்டார் விஜய குமார். 

பல நல்ல இதயம் படைத்தவர்கள் அவருக்கு உதவுகிறார்கள். விபத்திலிருந்து அவரைக் காப்பாற்றிய அவரது மன உறுதி அவருக்கு இனியும் துணை நின்று அவரது உடல் ஊனத்தையும் மறந்து அவரை வாழ வைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. வாழ நினைத்த அவர் வாழ்கிறார் இப்போதும்.  அவருக்கு ஆதரவாக அவரதுக் குடும்பமும் , குடும்பத்திற்கு ஆதரவாக அவரும் நலமாய் வாழ இறைவன் அருளட்டும்.

விஜயகுமார் உயிர் தப்ப ஆட்டோவில் கல்லெறிந்தது போல், ஒரு 34 வயது பெண் கோழிக்கோடு இறஞ்சிப்பாலத்திலுள்ள ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பிலிருந்த காமவெறியர்களிடமிருந்து உயிர் தப்பி, அருகிலிருந்தக் காவல்நிலையத்திற்கு ஓடி அடைக்கலம் புகுந்தார் சில மாதங்களுக்கு முன். பங்களாதேஷிலுள்ள ஜோஷ்வார் மாவட்டம் ஹானக்கோட்வாலி கிராமத்தைச் சேர்ந்த அவர் தனது 12 வது வயதில் ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கு மனைவியாகி 14 ஆம் வயதில் தாயாகி அடுத்தடுத்து 3 குழந்தைகளைப் பெற்றவர்.

7 ஆம் தரம் வரைப் படித்த அவர் இதனிடையே, தனியார் வழி 10 ஆம் தரம் தேர்வெழுதித் தேர்ச்சியும் பெற்றவர்.  கணவனால் கைவிடப்பட்ட அவர், குழந்தைகளைக் காப்பாற்றத் தையல் தொழில் செய்தும், பொம்மைகள் செய்து விற்றும் தன் மூன்றுக் குழந்தைகளையும் கஷ்டப்பட்டுப் படிக்க வைத்தவர்.  இதனிடையே பங்களாதேஷிலிருந்து வேலை தேடி இங்கு வந்த அவர், செய்த சிறிய தவறு அவரைக் கடலலை இழுத்துச் செல்வது போல் இழுத்துச் சென்று இறுதியில் கோழிக்கோடு கொண்டு வந்து சிலக் காமவெறியர்களுக்கு முன் தள்ளியிருக்கிறது.
Image result for SAYA, ARM OF JOY
Punarjani and Arm of Joy, a voluntary organisation, have sought to tell the world that Saya is not merely another sex racket victim. These organisations showcased her talent in writing poems and in painting. - Thanks to The Hindu for this information

ஆனால், அவரது 3 குழந்தைகளின் முகம் அவரை அங்கிருந்துத் தப்பித் தன் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தந்த தைரியத்தால் காவல்துறையினரை அணுகச் செய்தது. புனர்ஜனி பெண்கள் வழக்கறிஞர்கள் சங்கம் அவருக்கு ஆதரவாகவும் செயல்பட, அப்படிக் காவல் துறையினரால் அரசின் பெண்கள் காப்பகத்தில் பாதுகாப்பாகச் சேர்க்கப்பட்டார்.  அங்கு, அவர் தன் தலைவிதியை நினைத்துக் கண்ணீர் சிந்தாமல், கையில் கிடைத்த டைரியில் கவிதைகளும், கதைகளும் எழுதினார். எழுத முடியாதவைகளைச் சித்திரமாக வரையவும் செய்தார். 
copies of the collection of poems (Njan Enna Murivu), translated from Bangla to Malayalam, and the paintings raked in more than Rs.80,000. will be handed over to her, after going through the formalities required for funds transfer to a foreign national. Thanks  to The Hindu - News Paper for the information

காப்பகத்திற்கு உதவி புரியும் “ஆர்ம் ஆஃப் ஜாய்” (ARM OF JOY) எனும் இயக்கத்தின் மேனேஜிங்க் டரஸ்டியான அனூப் அதைக் காண நேர்ந்தது. பங்களாதேஷிலுள்ள அவரது நண்பரது உதவியால், பங்க்ளா மொழியில் இருந்த அவரது எழுத்துகளை எல்லாம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து, அதன் பின் அதை மலையாளத்திலும் மொழியாக்கம் செய்து, கடந்த மாதம் ஸாயா எனும் புனைபெயர் சூடிய அப்பெண்ணின் “ஞான் எந்ந முறிவு” (நான் எனும் புண்) புத்தகத்தை அனூப் வெளியிட்டேவிட்டார்.

சில நாட்களுக்கு முன் 18 வயதுள்ள மூத்த மகளான ஹீராவுடன் ஸாயா பேசிய போது, தன் தாயின் அன்பையும், திறமையையும், தைரியத்தையும் அறிந்த அவள் “அம்மா முதலில் எனக்கு உங்க ஆட்டோகிராஃப் வேணும்” என்றதும், அத்தாயின் மனம் பூரித்துப் போய் ஆனந்தக் கண்ணீர் வடித்து, தன்னைத் தானாக்கிய நல்ல உள்ளம் படைத்த அனூப் போன்றவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் தத்தளித்தது.  வேதனை மிகுந்த நாட்களைத் தந்த அதே நாட்டில், உயர்ந்து வந்த உதவிக்கரங்களின் உதவியால் விரைவில் தன் நாடு சென்று தன் குழந்தைகளுடன், நடந்தது எல்லாம் ஒரு பேய் கனவாக நினைத்து வாழத் தயாராகிக் கொண்டிருக்கின்றார், ஸாயா எனும் புனைபெயர் கொண்ட அப்பெண்.  பங்களாதேஷ் தேசீய பெண்கள் வழக்குரைஞர்கள் சங்கம் அவரை வரவேற்று, பாதுகாப்பாக அவருக்கு மறுவாழ்வு அமைத்துக் கொடுக்கத் தயாராக உள்ளது என்பதைக் கேட்கவும் மகிழ்ச்சியாக உள்ளது.

ஸாயாவுக்கும் அவரது குழந்தைகளுக்கும் நன்மை பயக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்வாராக.  இப்படி வாழ நினைப்பவர்கள் வாழத் தேவையான வழிகள், அவர்கள் முயன்றால் அவர்களுக்குக் கண்டிப்பா வழிகாட்டும். ஒவ்வொருவரும் அவர்களுக்காக மட்டும் வாழவில்லை.  அவர்களை நம்பி இருக்கும், அன்பு செலுத்த வேண்டிய அவர்கள் குடும்பத்தினருக்காகவும்தான் வாழ்கிறோம் என்று நினைத்தாலே போதும். வெயர் தேர் இஸ் அ வில் தேர் இஸ் அ வே என்பது போல் அத்திடம் கொண்ட மனதிற்குத் தேவையான மார்கங்கள் கண்ணில் தோன்றும்.  எத்தகைய விபத்து நேர்ந்தாலும் அதிலிருந்து எல்லாம் அவர்கள் தப்பி அவர்களது அன்பு உள்ளங்களின் அருகே விஜயகுமாரும், ஸாயாவும் சென்றடைந்தது போல் சென்று மகிழ்ந்து வாழமுடியும். வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில்!

படங்கள் : இணையத்திலிருந்து

(இன்றிலிருந்து சனிக்கிழமை வரை நண்பர்கள்/சகோதரிகளின் தளத்திற்கு வருவதற்குச் சற்று சிரமமாக இருக்கலாம். முடிந்தால் வருகின்றோம். பயணம். கீதாவின் தெனாலி, குண்டூர் பயணக் குறிப்புப் பதிவுகள் வரும். இப்போது பதிவுகள் செட் செய்யப்பட்டு வெளிவரலாம். மீண்டும் ஞாயிறு சந்திப்போம்)