கணக்கு என்பது எல்லோரும் அறிந்ததே! அதென்ன அந்நியன் கணக்கு? அது வேறு ஒன்றுமில்லை. அந்நியன் படத்தில், (அந்த அம்பி அந்நியனாக
மாறும் போது கேட்கும் கணக்கைப் போன்ற ஒன்றுதான் நான் இங்கு பகிர்ந்து
கொள்வது. சுஜாதா அவர்கள் தான் வசனம். எனவே அந்த வசனம் கூட சுஜாதாவின் வசனம்...ஸாரி
கணக்காகத்தான் இருக்குமோ?! அப்படித்தான் இருக்க வேண்டும். அவர்தான் இப்படி எல்லாம்
எழுதக் கூடியவர்!)
‘‘தப்பில்லைங்க’’
“அஞ்சு கோடி பேர் அஞ்சு பைசா திருடினா தப்பா?”
‘‘தப்பு மாதிரிதாங்க தெரியுது...’’
“அஞ்சு கோடி பேர், அஞ்சு கோடி தடவை அஞ்சு பைசா திருடினா தப்பா?”
‘‘அய்யோ... பெரிய தப்புங்க...’’
என் சிறு வயதில், 5 பைசா, 10 பைசா, 20, 25
பைசா இருந்த காலத்தில் எல்லாம், பெட்டிக் கடைக்காரர் கூட நாம் 10 பைசா கொடுத்து 5
பைசாவிற்கு மிட்டாய் வாங்கினால் 5 பைசா மீதி தருவார். ஒரு பைசா கூட மீதி பெற்றது
உண்டு. சில்லறைகள் புழங்கிய காலகட்டம் வரை.
இப்போது 50 பைசா வழக்கில் இருந்தாலும் கூட, அது மதிக்கப்படுவதில்லை. ஏன் 1 ரூபாய்க்கே மதிப்பில்லை என்றாகிப் போனது. பல கடைகளில் மீதம் 1 ருபாய், 2 ரூபாய் மீதி
தரவேண்டும் என்றால் கூட தருவதில்லை. சில
சமயங்களில் 5 ருபாய் கூட தருவதில்லை. அதற்குப்
பதிலாக நமக்கு உபயோகமே இல்லாத, வேண்டாத பொருள் வாங்கச் சொல்லுவார்கள். ஐயையோ
இல்லைங்க ஸாரி.... நம் மீது திணிக்கின்றார்கள்! அந்தப் பொருள் பெரும்பாலும்
சாக்கலேட், மிட்டாய்கள்! இதைப் பற்றி நம் நண்பர் விசு அவர்கள் கூட மிகவும் நகைச்
சுவையாக ஒரு பதிவு போட்டிருந்தார் அவரது வலைத்தளத்தில்.
நான் அந்த மாதிரி மிட்டாய் கொடுத்தால்
வாங்குவதில்லை. நீங்களே வைத்துக்
கொள்ளுங்கள் உங்கள் மிட்டாய்களை. நான்
ஏற்கனவே என் உடம்பில் நிறைய மிட்டாய்கள் வைத்திருக்கின்றேன். உங்களுக்கு வேண்டும் என்றால் எடுத்துக்
கொள்ளுங்கள் என்னிடமிருந்து என்று சொல்லிவிட்டு சில்லறை தரவேண்டும் என்று உறுதியாக
இருப்பேன். அப்படித் தரவில்லை என்றால், தெரிந்த
கடை என்றால், அப்புறம் வந்து வாங்கிக் கொள்கின்றேன் என்று சொல்லி விடுவேன். அப்படி இல்லை என்றால் ஏதாவது வாங்கிய பொருளைக்
குறைத்தால், விலை முழுமையாக வருமா என்று பார்த்துவிட்டு குறைத்து விடுவேன். அப்படியும்
இல்லை என்றால் விட்டுவிடுவேன். வேறு வழி?! ஆனால், அவர்களுக்கு அதனால் ஒன்றும்
மனசாட்சி அவர்களை வறுத்தெடுக்கப் போவதில்லை.
லாபம்தான் அவர்களுக்கு. அப்படிச் சில்லறைகளை நாம் விடுவது தவறு என்பதைச்
சுட்டிக் காட்டி ஒரு அந்நியன் ஸ்டைல் கணக்கு ஒன்று எனது மின் அஞ்சலில் வந்தது.
எனது மனதைப் பிரதிபலிப்பதாக. அதைப்
பாருங்கள் இங்கே அப்போது உங்களுக்கே புரியும்!
(இது வெளி நாடுகளில் நடப்பதில்லை! சரியாக நமக்குச் சில்லறை கிடைத்துவிடும்.
அதனை கில்லர் ஜி அவர்களிடமும் உறுதி செய்து கொண்டேன். இரண்டாவது நாம் இங்கு கார்டு
தேய்த்தால் சரியான பில் தான் கழிக்கப்படும்.
ஆனால் சர்வீஸ் சார்ஜ் என்று பேங்கிற்கு அழ வேண்டுமே!
சரி இப்போது அந்த அந்நியன் கணக்கிற்கு
வருகின்றேன்! ஆங்கிலத்தில் வந்ததை
எனக்குத் தெரிந்த விதத்தில் தமிழில் மொழி பெயர்த்துத் தந்திருக்கின்றேன். நாம் ஏன்
சில்லறைகளையும், ரூ 1 யும் சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து நிச்சயமாகப்
பெறவேண்டும்.
நாள் ஒன்றிற்கு 500 பேர் ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு வருகின்றார்கள்
என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் ஒருவர்
கூட மீதி ரூ 1 ஐ பொருட்படுத்தவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்
500 x 1 = Rs 500
365 நாட்களுக்கு 500 X 365 = Rs. 1, 82,500
இது ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கானது. இப்படி 1500 சூப்பர் மார்க்கெட்டுகள் நமது
நாட்டில் இருக்கின்றன.
Rs. 1, 82,500 x 1500 = Rs. 273,750,000 ஐயோ
இப்படி பெரிய, பார்க்காத நம்பர் எல்லாம் சொன்னா நமக்குப் புரியாதுங்கோ! நாம அப்பாவிங்கோ! அதனால் ஒரு சாமானியனுக்குப் புரியும் வகையில்
சொல்ல வேண்டும் என்றால் 27 கோடி ஒரு வருடத்திற்கு! இது சூப்பர் மார்க்கெட்டுகள்
என்று சொல்லப்படுபவை மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. இதில் மற்ற பெரிய கடைகளும் அடக்கம். உலகமயமாக்கலின்
விளைவினால் முளைத்திருக்கும் பெரிய பெரிய துணிக்கடை ஷோரூம்கள், மால்கள் என்று
சொல்லப்படுபவையும் இதில் அடக்கம்.
வேதனை என்னவென்றால் இதற்கு வரி கிடையாதாம்! (அமெரிக்க கணக்குப்
பிள்ளை! உங்களுக்குப் புரிந்து இருக்குமே! கணக்குப் பிள்ளைகள் இதற்குப் பதில்
சொல்லவும், முடிந்தால்!) ஏனென்றால் விலைச்
சீட்டு இந்த 1 ரூபாயைக் கணக்கில் கொள்ளாதாம். நுகர்வோர்கள் எல்லாரும் பணக்காரர்கள் ஆகிவிட்டதால் அவர்களுக்கு இந்த
சில்லறை, 1 ருபாய் பெரியது அல்ல. அதனால்
தான் பெரும்பான்மையான பொருட்களின் விலை பேட்டா கணக்கு போல (ரூ,100.99) -49, -50,
-69, -99, -999 ஒன்லி என்றிருக்கின்றது! ஆனால்,
நான் பணக்காரி அல்ல. சாதாரண சாமானிய
மக்களில் அடக்கம். யாசிப்பவர்கள்
கூட இப்போதெல்லாம் ரூ 1 ஐ ஏற்றுக் கொள்வதில்லை.
நம்மைத் திட்டுகின்றார்கள். சாதாரண பலசரக்குக் கடைகள், மொத்த வியாபாரக்
கடைகள் இதில் வருவதில்லை.
நுகர்வோர்கள் ராஜாக்கள்! (Consumers are the king! consumer sovereignty) என்று
பொருளாதாரத்தில் சொல்லப்படுவதுண்டு. அதாவது நுகர்வோர்களின் தேவைக்கேற்பதான்
பொருட்களின் உற்பத்தியும், விலையும் நிர்ணயிக்கப்படும். இது மேலை நாடுகளுக்குப்
பொருந்தும். நம் நாட்டிற்குப் பொருந்தாது. ( நுகர்வோர்களில் ஆண்களும், பெண்களும்
தானே அடக்கம்? அது என்ன கிங்க்? அப்போ
க்வீன் இல்லையா? ம்ம் அந்தக் காலத்தில் பெண்கள், ராணிகள் வீட்டை விட்டுச்
செல்லாமல், சமையலறையிலும், அந்தப்புரத்திலுமே இருந்ததால் ஆண்கள் தான் வெளியில்
சென்று பொருட்கள் வாங்கியதால் கிங்க் என்று சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால்
இப்போதெல்லாம் பெண்கள் தான் அதிகமான நுகர்வோர் பட்டியலில் வருகின்றார்கள். பெண்களால்தான், துணிக் கடைகள், நகைக்கடைகள்,
பாத்திரக் கடைகள், ஃபேஷன் கடைகள் எல்லாம் இப்படி அள்ளிக் குவிக்கின்றதாக ஒரு
உபரித் தகவல் கிடைத்தது. அதனால் நுகர்வோர்கள் ராஜா/ராணி. Consumers are the Kings and Queens!
இந்த 1 ரூபாய்க்கு மதிப்பு இல்லை என்றால் ஏன் கடைக்காரர்கள் மட்டும்
நம்மிடம் அந்த 1 ரூபாயைத் தர வேண்டும் என்று நிர்பந்திக்கின்றார்கள்? இல்லை என்றால் நம்மீது ஏதேனும் ஒரு மிட்டாயைத்
திணிக்கின்றார்கள்? அவர்கள்
தருவதில்லை. மதிப்பு என்பது இருவருக்கும்
பொதுதானே! அப்போ இங்கு நுகர்வோர்களுக்கு உரிமை இல்லை என்றாகின்றதல்லவா. மதிப்பு
இல்லாத அந்த 1 ரூபாயை நமது ரிசர்வ் வங்கி இன்னும் ஏன் புழக்கத்தில் வைத்துள்ளது? 1ரூபாய்
மட்டுமல்ல. 2 ரூபாய் கூட. ஏன் சில
சமயங்களில் 5 ரூபாயும். அதுவும் சில்லறைத்தனமாக, கஞ்சத்தனமாக? 50 பைசா இன்னும் ஏன்
புழக்கத்தில் இருக்கின்றது என்று தெரியவில்லை? அதற்கு மதிப்பே இல்லாத போது ஏனென்றால் 1 ரூபாயை இரண்டு 50 பைசாக்ககளாகக்
கொடுத்தால் பெரும்பான்மையோர் வாங்குவதில்லை. விலைப் பட்டியல்கள் ஏன் முழுமையாக
நிர்ணயிக்கப்படுவதில்லை? எங்கு ஊழல்
தொடங்குகின்றது? நண்பர்களே! இது அந்நியன்
கணக்குதானே! உங்களுக்குப் பதில்
தெரிந்தால் என் மனதில் எழும் இந்தக் கேள்விகளுக்கு விடை கொடுங்களேன்! நானும் எனது மிகச் சிறிய அறிவை விரிவாக்கிக் கொள்வேன்!
--கீதா
(பயணக் குறிப்புதான் தொடரும் என துளசி சொல்லி இருந்தார். ஆனால் வேலைப் பளு. அதை இன்னும் எழுதி முடிக்காத காரணத்தால் அடுத்து....அதற்கு முன் இந்தப் பதிவு...)