சில நாட்களுக்கு முன் நான் நடைப் பயிற்சி
செய்து கொண்டிருந்த போது என் அலை பேசி கூவியது. தோழி பத்மா. நேற்றுதானே பேசினோம் என்று நினைத்தவாறே,
“ஹலோ பத்மா வெரி குட் மார்னிங்க்”
“..........(சிறிது நேர அமைதி) ஓ! கீது! நீயா? ஸாரிப்பா...”
“ஹேய்! என்னாச்சு? என் நம்பர கால்
பண்ணிட்டு “கீது நீயான்னா? என்னாச்சுப்பா, உனக்கு?”
“இல்ல கீது, என் சொந்தக்காரப் பொண்ணு
பேரும் கீதா தான். அவ இப்ப +2. ஸோ
அவளுக்கு எக்ஸாம் தொடங்கப் போறதுல்ல, “ஆல் தெ பெஸ்ட்” சொல்லலாம்னு பேர போட்டா அது
உன் நம்பருக்கு கால் வந்துருச்சு...”
“பரவாயில்லை எனக்கும் அந்த “ஆல் தெ பெஸ்ட்”
பொருந்தும். சொன்னா தப்பில்லை.”
“விளையாடறியா கீது?! நீ என்ன பரீட்சை எழுதப்போற?”
“என்னப்பா பரீட்சை எழுதினாத்தான் “ஆல் தெ
பெஸ்ட்” சொல்லுவியா? நான் தினமுமே பரீட்சை
எழுதிக்கிட்டுத்தான் இருக்கேன்.
வாழ்க்கைப் பாடம் படிச்சுக்கிட்டுத்தானே இருக்கேன். வயசு 50 ஆனாலும், மரணம் வரை இந்த வாழ்க்கைப்
பாடம் தொடருமே! இதுதான் கஷ்டமான பாடம்பா....”
“ஆமாம் ல.....அப்ப .என்னையும் அந்த லிஸ்டுல
சேத்துக்க! அப்ப, “ஸேம் டு யூ” னு சொல்லு”
“ஹஹஹ்ஹஹ...சரி, நீ என்ன பண்ணற, அந்த கீதா
பொண்ணுக்கு ஆல் த பெஸ்ட் சொல்லு.
சரிதான். ஆனா அதை விட முக்கியம்
அந்தப் பொண்ணு வாழ்க்கைப் பாடத்தக் கத்துக்கிட்டு, அதைக் கடந்து வரதுதான் ரொம்ப
முக்கியம். அந்த பொண்ணு மட்டும் இல்ல, இப்ப இருக்கற தலைமுறைக்கு...வாழ்க்கைப்
பாடம் ரொம்பவே முக்கியம். அந்தப் பொண்ணுக்குத் தமிழ் தெரியுமா? தமிழ் தெரிஞ்சா, இல்லல்ல அதை விட அந்தப்
பொண்ணோட அப்பா, அம்மாக்குத் தமிழ் தெரியுமானா, அவங்கள் எங்க ப்ளாகர் ஃப்ரென்ட்
“முத்து நிலவன் ஐயா” அவரோட புத்தகம் “முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம், மகளே” http://valarumkavithai.blogspot.com/2014/06/blog-post_16.html
படிக்கச் சொல்லு. புரிஞ்சுக்க “வாசிக்க”
இல்ல “படிக்க” சொல்லு.
“நிச்சயமா...ஓகேப்பா..அப்புறம்
கூப்பிடறேன்.”
உரையாடல்
முடிந்தது. ஆனால், என் சிந்தனைகள்
தொடர்ந்தன. இந்தப் ப்ளஸ் 2 தேர்வுதான் நம்
வாழ்க்கையையே முடிவு செய்வது போல், பல மாணவச் செல்வங்களும், பெற்றோர்களும்
முடிவுக்கு வருகின்றனர்.
+2 என்பது மிகவும் முக்கியம் தான். ஒரு குழந்தையின் எதிர்காலக் கல்வி, தொழில், சமூக அந்தஸ்து, போன்ற பலவற்றை நிர்ணயிக்க. ஏன் அதன் முடிவுகள் நம் வாழ்க்கையை, எதிர்காலத்தையே கூட மாற்றி அமைக்கலாம். என்றாலும் அதுவே முடிவல்ல. தேர்வில் தோல்வி அடைந்தால் தற்கொலை, குறைவான மதிப்பெண்கள் என்றால் தான் விரும்பியத் துறை அல்லது தேவையானத் துறை கிடைக்காமல் போவதனால் ஏற்படும் விரக்தி என்று. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் எண்ணங்களை மனதில் வாங்காமல், தாங்கள் நினைக்கும் துறையைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று குழந்தைகளை வற்புறுத்துதல் என்று ஒவ்வொரு வருடமும் இந்த நேரத்தில் மன உளைச்சல் ஒரு தொடர்கதையாகி வருகின்றது.
மகனுக்கு
அவன் நினைத்தது தற்போது நடக்கவில்லை. நான் அவனுக்குச் சில நட்புடனான அறிவுரைகள் சொல்லி,
மனதை சமநிலையில் வைத்துக் கொள்ளச் சொன்னேன்.
“அம்மா,
டோன்ட் டாக் ஃபிலாசஃபி டு எ பெக்கர்” இதை நீதான் எனக்குச் சொல்லிக்
கொடுத்திருக்கின்றாய். னௌ ஐ யாம் அ பெக்கர்” (Don’t talk
philosophy to a beggar. Now I am a
beggar)
“ஆம்!
பசியோடு இருக்கும் ஒருவரிடம் தத்துவம், அறிவுரைகள் பேசிக்
கொண்டிருந்தால், அவரது அறிவிற்கு எட்டாதுதான். (பள்ளியில் மதிய உணவு இடைவேளைக்கான மணி அடித்த பின்னும் கூட, சில ஆசிரியர்கள் பாடம்/அறிவுரை நடத்திக் கொண்டே போவார்கள், மாணவச் செல்வங்களின் பொறுமையை சோதிக்கும் அளவு. இந்த இடத்தில் வள்ளுவனார்???!!!) அது பல நாட்கள் பட்டினியாக
இருப்பவர்க்குத்தான். நீ இப்போது பெக்கர் அல்ல.
உன் அறிவு மழுங்கிவிட்டதா? இல்லையே.
முயற்சி செய். நீ என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கின்றாயோ அதற்கான
அடித்தளத்தை உருவாக்கிக் கொள். அடித்தளம் உறுதியாக இருந்தால், அதனை மேலே
உயர்த்துவது எளிது. நிச்சயமாக நீ
விரும்புவது கிடைக்கும். மனதை சமநிலையில் வைத்து யோசித்துப் பார். தீர்வுகள் பளிச்சிடும். வாழ்க்கையைக் கடக்க பொறுமை தேவை. உனக்கு அது நிறையவே இருக்கின்றதே. இழந்திடாதே”
நம்
வாழ்க்கை கல்வி சார்ந்ததென்றாலும், தொழில் சார்ந்ததானாலும், தனிப்பட்ட
வாழ்க்கையானாலும் எல்லாம் கலந்தது தானே வாழ்க்கைப் பாடம்! கொடுக்கப்பட்ட ஆறறிவிற்கு
நியாயம் கற்பிக்கும் வகையில், நம்மை முதலில் ஒரு நல்ல மனிதனாக, மனித நேயம் மிக்க
மனிதனாக, நல்ல விதத்திலான ஆளுமைத் திறனை வளர்க்கும் வகையில் உருவாக்கிக்
கொள்ளுவதும், அடுத்தத் தலைமுறையினருக்கும் அதைக் கற்பித்து வழி நடத்துவதும்தானே
நமது தலையாய கடமை!
பெற்றோர்களும்,
பெரியவர்களும், தங்கள் குழந்தைகளைத் தங்களது வாழ்வில் ஏற்படும் சிக்கல்களுக்கும்,
குழப்பங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் அறிவு பூர்வமாகச் சிந்தித்து முடிவு
எடுக்கவும், வாழ்க்கையை எதிர்கொள்ளவும், அந்தத் திறனை வளர்க்கவும் கற்றுக் கொடுத்திடல்
வேண்டும். வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கும் அறிவையும், எண்ணங்களையும் சொல்லிக்
கொடுத்திடல் வேண்டும். ஒரு சிலவற்றைக் கற்றுக் கொடுத்திடலாம். சிலவற்றை பெற்றோர்களும், பெரியவர்களும் மாதிரிகளாக
இருந்து வழி நடத்த வேண்டி வரும்.
சிலவற்றைப் போதிக்க வேண்டிவரும்.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல்
தான் அமைந்துள்ளது நமது பாடத் திட்டங்கள். குழந்தைகளைப் பாட புத்தகப் புழுக்களாகவும்,
ஆமையும், முயலும் கதையில் வருவது போன்ற ஓட்டப்பந்தயம் போன்றும், வெற்றி தோல்விகளை
நிர்ணயிக்கும் ஒன்றாக மட்டுமே அமைந்துள்ளது. சிந்திக்கும் திறனை வளர்ப்பதற்கு
உதவுவதாக இல்லை. வாழ்க்கைப் பாடம் என்பது எளிதல்ல. பல சிக்கல்கள் நிறைந்தது. முள்ளினால் ஆன பாதைகளும் வழியில் உண்டு. அவற்றை எப்படிக் கடந்திட வேண்டும் என்பதுதான்
கற்க வேண்டிய ஒன்று. அனுபவப் பாடம் மிகவும் இன்றியமையாதது. வெற்றி, தோல்விகளுக்கு
நாம் அளவிற்கு மீறிய முக்கியத்துவம்
கொடுத்தால், அவை பொறாமை, ஆணவம், கர்வம், கோபம், பழிவாங்கும் உணர்ச்சி போன்ற, ஒரு
மனிதனின் நல்ல ஆளுமையை வளரவிடாமல் தடுக்கும் குணங்களுக்கு வழி வகுக்கும்.
வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று
பலரும் சொல்லுவதைக் கேட்டிருப்போம்.
வாழ்க்கையில் எதை ஜெயிக்க வேண்டும்? யாருடன் போட்டி போடுகின்றோம்? படிப்பு
என்றால் முதல் மதிப்பெண், இரண்டாம் மதிப்பெண், அவளை/அவனை விட அதிக மதிப்பெண் என்று
போட்டியாகச் சொல்லலாம். பந்தயம் என்றாலும்
ஜெயித்தல் என்பது பற்றிப் பேசலாம்.
அலுவலகம் என்றாலும் கூட ஜெயித்தல் என்பது பதவி உயர்வு என்பதன் அடிப்படையில்
பேசலாம். ஆனால், வாழ்க்கையில்/ தனிப்பட்ட
வாழ்க்கையில், எதை? யரை ஜெயிப்பதற்காக,
இல்லை தோற்கடிப்பதற்காக வாழ்கின்றோம்? நம் பெற்றொருடன்? கணவன், மனைவிக்குள்
போட்டி? இல்லை குழந்தைகளுடன் போட்டியா? வெற்றி, தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லையே!
ஒப்பிட்டுப் பார்த்து வாழ்தல், ஒருவரின் வாழ்க்கையோடு மற்றொருவரின் வாழ்க்கையை
ஒப்பிட்டு பார்த்து வாழ்தல் என்பது மிகவும் கீழ்தரமான ஒன்று. அதை ஒரு அளவு கோலாக
வைத்து வாழ்தல் மிகவும் அறிவிலித்தனமான செயல். எது அளவு கோல்? அதற்கு ஒரு எல்லை
இருக்கின்றதா?
கல்வியானாலும், அலுவலகமானாலும்,
தொழிலானாலும், நாம் மற்றவரை விட உயர்ந்து முன்னே சென்றால், அதனை வெற்றி என்று
சொல்லுகின்றோம். எதை வைத்து அளக்கின்றோம்?
சரி, அந்த வெற்றி நிலையானதா? எவ்வளவு
காலம் நிலைத்திருக்கும்? நிரந்தரமாக? இல்லை.
இல்லவே இல்லை. ஒன்றில் வெற்றி
என்று சொல்லப்படலாம். வேறொன்றில் அது
தோல்வியைத் தழுவலாம். அதாவது சமுதாயத்தின் பார்வையில், அளவு கோலில். வெற்றி என்று
சொல்லி பெறுபவர்கள் எல்லோருமே, என்றுமே முதல் நிலையில் இருப்பதில்லை. சறுக்கல்களும்
நேரிடுவதுண்டு. எத்தனை பேர் இதனால் மன அழுத்தம் என்பதற்கு ஆளாகி, மன நிலை
பிறழ்ந்து போகின்றனர்!
வெற்றி, தோல்விகள் நிரந்தரமானது அல்ல. அவை
காலச்சக்கரத்தில் சுழன்று கொண்டேதான் இருக்கும். இவை நமது தலையில் ஏறாமல் கவனமாக
இருத்தல் வேண்டும். எனவே நாம் நமது மன நிலையை சம நிலையில் வைத்துக் கொண்டு, நமது
வாழ்க்கைக்கான இலட்சியங்கள், கொள்கைகள், என்று நாமே வரையறுத்துக் கொண்டு, அதை
நோக்கிப் பயணிக்கும் சமயம், அன்புடனும், மனித்ததுடனும், நேர்மையுடனும் பயணித்து, மனம்
தளராமல், சோர்வடையாமல் எதிர்வரும் இடர்களை, முட்டுக்கட்டைகளைத் தைரியமாக
எதிர்கொண்டு, தகர்த்து வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொண்டு, எந்தச் சூழலிலும் நீந்தி,
அனுபவித்து, மகிழ்வுடன் வாழக் கற்போம், அடுத்தத் தலைமுறையினருக்கும் கற்றுக்
கொடுப்போம்! வாழ்க்கை வாழ்வதற்கே! ஆல் த பெஸ்ட்! மாணவச் செல்வங்களே! செல்வங்களுக்கு மட்டுமல்ல நம் எல்லோருக்கும்
தான்!! ஆம்! வாழ்க்கைப் பாடங்களைக் கற்று வாழத்தான்!
- கீதா
படங்கள் : courtesy - google images