திங்கள், 3 மார்ச், 2025

எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - 28

சென்ற பதிவுகளை எல்லாம் வாசித்துக் கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி. அடுத்த பதிவு எழுத கொஞ்சம் நேரம் எடுக்கிறது. எனவே இடைவெளியில் நாம ஒரு சின்ன பிக்னிக் போய்வரலாம் வாங்க! இப்படித்தான்.

ரயிலில் பயணித்துக் கொண்டே.......காட்சிகளைப் பார்த்துக் கொண்டே ...

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025

கொக்கரேபெல்லூர் - பறவைகளும் மனிதர்களும் இயைந்து வாழும் கிராமம் - 4 - நிறைவுப்பகுதி

சென்ற பதிவின் தொடர்ச்சி - எங்களை ஏற்றிக் கொண்ட புதிய ஆட்டோகாரர், கிராமத்தின் பேருந்து செல்லும் சாலையில் செல்லாமல் வேறொரு வழியில் சென்றார். இந்த வழி வித்தியாசமாக இன்னும் பசுமையாக இருந்திட நான் அவரிடம் கேட்க, இது "பசுலு பசுலு Road" (பசுமையான சாலை) என்றார். அதே ருத்ராக்ஷிப்பூர்-ஹலகுரு சாலை பேருந்து செல்லாத கிராமத்துச் சாலை. ரொம்பவே வேகமாகச் சென்றார். எனக்கு ஃபோட்டோ எடுப்பது சிரமமாக இருந்தது. "ஐயா கொஞ்சம் மெதுவா போங்கய்யா". ஆனால் மனுஷர் கேட்கத் தயாராக இல்லை. ஏற்கனவே அறிமுகமாயிருந்த ஆட்டோ நண்பர் கிரணிற்கு என் விருப்பம் தெரியும் என்பதால் நிதானமாக ஓட்டிக் கொண்டு வருவார்.

வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

கொக்கரேபெல்லூர் - பறவைகளும் மனிதர்களும் இயைந்து வாழும் கிராமம் - 3

முன்பெல்லாம் இரண்டாயிரத்திற்கும் மேலான பறவைகள் வந்து கொண்டிருந்ததாகவும், சமீபகாலங்களில் அலைபேசி கோபுரங்களினால் வரவு குறைந்துவிட்டது என்றும், மேலும் சில பறவைகள் இங்கு வந்து நோய்வாய்ப்பட்டதால் அதன்பின் வருவதில்லை என்றும் வருத்தத்துடன், WWFன் இயற்கை விளக்க மையத்தைப் பார்த்துக் கொள்ளும் திரு கிருஷ்ணா சொன்னார். "பறவைகள் வருவதும் தாமதமாகிவிட்டது, ஜனவரி கடைசி, ஃபெப்ருவரியில் வந்துவிடும், என்னை அழைத்துக் கேட்டுவிட்டு வாங்க" என்று  தன் மொபைல் நம்பரைத் தந்து என் கணவரின் நம்பரையும் பெற்றுக் கொண்டார். பார்வையாளர்களின் பெயர், ஊர், அலைபேசி எண், தேதி, கையெழுத்து இவற்றை வருகைப் பதிவேட்டில் பதிவு செய்யச் சொல்கிறார். 

திங்கள், 17 பிப்ரவரி, 2025

கொக்கரேபெல்லூர் - பறவைகளும் மனிதர்களும் இயைந்து வாழும் கிராமம் - 2

சக்கரே நகராஎன்று அழைக்கப்படும் மாண்டியா மாவட்டத்தில் இருக்கும் இந்த கொக்கரே கிராமத்திற்கு சக்கரே உடம்பாக இருக்கும் நான் இரு முறை சென்று வந்தேன்/தோம்.

வியாழன், 13 பிப்ரவரி, 2025

கொக்கரேபெல்லூர் - பறவைகளும் மனிதர்களும் இயைந்து வாழும் கிராமம் - 1


நெடு நாளைய ஓர் ஆசை நிறைவேறியது. (என்னிடம் இப்படியான ஆசைகளுக்குப் பஞ்சமில்லை. Lord Buddha Please! கண்டுக்காதீங்க!) கொக்கரேபெல்லூர். பெயரே வித்தியாசமாக இருக்கு இல்லையா? முதலில் கிராமத்தைப் பற்றிச் சொல்லிவிட்டு அதன் பின் அனுபவங்களைச் சொல்லலாம் என்று நினைத்ததால் பதிவை இரண்டு அல்லது மூன்று பாகங்களாகப் போட வேண்டி வரும் என்று தோன்றுகிறது.

திங்கள், 10 பிப்ரவரி, 2025

2000-2002 வது Batch மாணவ மாணவியர் சந்திப்பும் அதை ஒட்டிய பயணமும்

பாலக்காட்டில், நான் ஆசிரியராகப் பணியாற்றிய மாத்தூர் CFDVHS பள்ளியில் 2000-2002 ல் வணிகவியல் படித்த மாணவ மாணவியர் ஒரு சந்திப்பு நிகழ்வை, 2025, ஃபெப்ருவரி மாதம் 2 ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்தார்கள். தற்போது பெங்களூரில்  ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் அந்த Batch ல் படித்த  மாணவியான ராதிகா என்னைத் தொடர்பு கொண்டு பங்கெடுக்க வேண்டும் என்று சொன்னார். 

முந்தைய சில சந்திப்புகளுக்குச் செல்ல முடியவில்லை என்பதால் இந்தச் சந்திப்பை ஒட்டி, குடும்பத்துடன் இரு நாட்கள் பயணத்தைத் தீர்மானித்தேன். கோவையில் படிக்கின்ற என் மனைவியின் தங்கையின் மகன் விவேக் படிக்கும் கல்லூரிக்கு இதுவரை செல்ல முடியவில்லை. அங்கும் சென்று அப்படியே மருதமலை முருகனையும் தரிசித்து முருகனின் அருள் பெற்று வரலாம் என்று முடிவு செய்தேன்.

வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

கோபாலசுவாமி பெட்டா

நான்கு மாதங்களுக்கு முன்பு நல்ல குளிர் சமயத்தில் பந்திப்பூரில், தமிழ்நாடு, கேரளா எல்லையின் அருகில், கர்நாடகாவின் எல்லைக்குள், 1450 மீட்டர் உயரத்தில் இருக்கும் ஹிமவத் கோபாலசுவாமி பெட்டா (மலை) எனும் மலைக்கோயிலுக்குச் சென்றோம்.

புதன், 25 டிசம்பர், 2024

ஜோ ஆன் பியர்ட் எழுதிய The Fourth State of Matter

ஜோ ஆன் பியர்ட் - Jo Ann Beard

1955 எல் பிறந்த Jo Ann Beard தன் வாழ்க்கை நிகழ்வுகளை அருமையாகப் பகிரும் ஒரு அமெரிக்கர். புனைவுகள் அல்லாத கதைகள், கட்டுரைகள் எழுதுபவர், பத்திரிகையாளர் என்பதோடு ஒரு சிறந்த நாவலாசிரியரும் கூட. (IOWA) அயோவா பல்கலைகலைக்கழகத்திலுள்ள விண்வெளி-இயற்பியல் துறையிலிருந்து மாதந்தோறும் வெளியாகும் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணிபுரிந்த போதுதான், 1991ல் அந்தத் துப்பாக்கிச் சூடு படுகொலை நிகழ்ந்தது.

1996 ல் "The New Yorker" பத்திரிகையில் வெளிவந்த இவரது கட்டுரையான 'The Fourth State of Matter' ல் 1991 ல் நடந்த அந்தப் படுகொலை சம்பவத்தால் தனக்கு நேர்ந்த அதிர்ச்சி, இழப்பு மற்றும் துயரத்தை, வாசிப்போர் மனதில் ஓர் இனம் புரியாத வேதனையையும் வியப்பையும் தோற்றுவிக்கும் விதத்தில்  எழுதியிருக்கிறார். அத்துடன் கேங்க் லு எனும் இயற்பியல் ஆராய்ச்சி மாணவன் நிகழ்த்திய அந்தப் படுகொலையில் உயிரிழந்த, உடன் பணிபுரிந்தவர்கள் பற்றியும் அப்படுகொலை பற்றியும் அவனது தற்கொலை பற்றியும் விரிவாகச் சொல்கிறார். மட்டுமல்ல, அயனிமம் (Plasma) எனும் மின்மக் கலவை அல்லது மின்மக் கூழ்மம் பற்றியும் அரிய பல தகவல்களையும் தருகிறார்.





திண்மம் (திடப்பொருள்), நீர்மம் (திரவப் பொருள்),  வளிமம் (வாயு) என்ற மூன்று இயல்பான தனிநிலைகளுக்குப் பிறகுள்ள நான்காவது ஒரு தனிநிலைதான் அயனிமம் (ப்ளாஸ்மா). இந்த நான்கு நிலைகளில், வளிமத்தை உயர்வெப்ப நிலையில் சூடாக்கும் போது நியூக்ளியஸிலிருந்து எலக்ட்ரான் மற்றும் அயனும் வெளிப்படுகிறது. அப்படி உருவாகும் ப்ளாஸ்மாவில் (அயனிமத்தில்) நேர்மின்மப் பொருட்களும் (எலக்ட்ரோ பாசிட்டிவ் எனர்ஜி) எதிர் மின்மப் பொருட்களும் (எலக்ட்ரோ நெகட்டிவ் எனர்ஜி) சமமாகக் கலந்த இந்த மின்மக் கலவையை, காந்தப்புலத்தினால் (மேக்னெட்டிக் ஃபீல்ட்) கட்டுப்படுத்தவும் முடியும். அப்படி திண்மம், நீர்மம், வளிமம், அயனிமம் எனும் நான்கு தனி நிலைகள்.

கோலி

அவரது வளர்ப்புச் செல்லமான கோலியைப் பற்றிச் சொல்லும் வரியோடு கட்டுரையைத் தொடங்குகிறார். வயதினால் உடல் நலக்குறைவுள்ள தன் வளர்ப்புச் செல்லமான கோலியை இரவில், சிறுநீர் கழிக்க வீட்டின் வெளியே கொண்டு வரும் பியர்ட், ஆகாயத்தில் மின்னும் செவ்வாய் மற்றும் மறைந்திருக்கும் வியாழன் கிரகங்களைக் காண்கிறார். இவற்றை எல்லாம் அவர் தெரிந்து கொள்ளக் காரணம் அவருடன் பணிபுரியும் இயற்பியல் விஞ்ஞானிகளுடனான தொடர்புதான். கோலியை வீட்டிற்குள் கொண்டு செல்லும் பியர்டிற்குத் தெரியும். மீண்டும் சில மணிநேரங்களுக்குப் பின் கோலியுடன், தான் வெளியில் வர வேண்டியிருக்கும் என்று.

'கோலி' போன்று பியர்டை சிரமப்படுத்தும் வேறு சிலரும் இருக்கிறார்கள்தான். அவர்களில் ஒருவர், கண்ணில் படாமல் மறைந்திருக்கும், ஆனால் ஒரு நாளில் 4, 5 முறை அழைக்கும் அவரது கணவரும், 13 வருடங்களாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கும்  சேகரித்த சில பொருட்கள், சில கோட்டுகள், புள்ளியியல் புத்தகங்கள், Rolling T-shirt கள், ஹாலோவீன் மாஸ்குகள் அடங்கிய பெட்டிகள். பெட்டிகளும், அழைப்புகளும் எப்போது வேண்டுமானாலும் நிலைமையை மாற்றலாம் என்று நினைக்கிறார்.
அணில் குடும்பம் - மாடியில் உள்ள அறை
ஆனால், மேலே உள்ள அந்தப் படுக்கை அறையில், அனுமதி இன்றி புதிதாய்க் குடிவந்திருக்கும் ஒரு அணில் குடும்பமும் அந்த சிரமப்படுத்துபவர்களில் ஒன்று. இதில் அணில் குடும்பத்தைத் தவிர வேறு யாரையும் எதையும் இழக்க பியர்ட் தயாராக இல்லை. ஒரு வழியாய் அவரது தோழி காரலீன் அணில் குடும்பத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த உதவுகிறார்.

                      கிறிஸ்டோஃப் கோயர்ட்ஸ்                   பாப் ஸ்மித்                                          இதைத் தொடர்ந்து, பியர்ட் விண்வெளி-இயற்பியல் டிபார்ட்மென்டில் நடக்கும் நிகழ்வுகளை விவரிக்கிறார். அதிலிருந்து, அங்கு பயிலும் ஆராய்ச்சி மாணவரான கேங்க் லுவிற்குத் தன்னிடம் எப்போதும் சர்வாதிகார மனோபாவத்துடன் நடந்து கொள்ளும் கிறிஸ்டோஃப் கோயர்ட்ஸுடனும், தன்னை எப்போதும் இகழும், அவமானப்படுத்தும் பாப் ஸ்மித்துடனும் உள்ள விரோதமும் டிபார்ட்மெண்டில் செல்லப்பிள்ளையாய் வலம் வரும் சக மாணவனான லிங்வா ஷானின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியும் அறிய முடிகிறது. அத்துடன் கிறிஸ்டோஃப் கோயர்ட்ஸ் மற்றும் பியர்டுக்கும் இடையில் உள்ள உறவு சாதாரண நட்பை விட உயர்வான (Genial Relationship - ஜென்ம பந்தம்) வித்தியாசமான ஒன்று என்பதும் தெரியவருகிறது.

ஆம்பர் கல்

கிறிஸ்டோஃப், காந்தமண்டலங்களைக் குறித்து விரிவுரை ஆற்ற உலகெங்கும் பயணிப்பதுண்டு. அப்படிப் போய்வரும் போதெல்லாம் பியர்டிற்குப் பல பரிசுப் பொருட்கள் வாங்கி வந்து அளிப்பதுண்டு. அவற்றுள் பியர்டிற்கு, கிறிஸ், ஒரு முறை போலந்திலிருந்து கொண்டுவந்த ஈயின் சிறகுகளை உள்ளடக்கிய ஆம்பர் கல்லும், மற்றொரு முறை பரிசளித்த யானைத்தோலால் ஆன பிரேஸ்லெட்டும் தான் மிகவும் பிரியமானவை.

கிறிஸ்ஸும் பியர்டும் வழக்கம் போல் அன்றும் பலவற்றையும் பற்றிப் பேசுகிறார்கள். கிறிஸ் சமீபகாலமாக அதிகம் ஆர்வம் காண்பிக்கும் சனிகிரகத்தைச் சுற்றியுள்ள வளையத்திலிருக்கும் அயனிமம் பற்றியும் அதிலுள்ள தூசுகளைப் பற்றியும், சமீபத்தில் ஜெர்மனியிலிருந்து வந்த 80 வயதான அவரது தாயை பல இடங்களுக்கும் கூட்டிச் சென்றது பற்றியும் பேசுகிறார். அதன் பின் பியர்ட், இயற்பியலில் ஆர்வமில்லாத கேங்க் லு மாலை வேளைகளில் லேபில் கணினியின் முன் தன் நேரத்தைச் செலவிடாமல் துப்பாக்கிப் பயிற்சி செய்யும் ஓரிடத்தில் தான் புதிதாய் வாங்கிய துப்பாக்கியுடன் பயிற்சி செய்வதைப் பற்றியும் சொல்கிறார்.

படுகொலை நிகழும் 1991 ஆம் ஆண்டில் அந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) பியர்ட், தனக்கு வேலை எதுவும் அதிகமாக இல்லை என்பதால் கிறிஸ்ஸின் அனுமதியுடன் மதியமே வீட்டிற்குப் போகிறார். அப்போது அவரெதிரே நடந்து வரும் கேங்க் லு வைக் காணவும் செய்கிறார். ஆனால், கேங்க் லு, தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் அதற்கு முன் சிலரைத் தனக்குத் துணையாக அழைத்துச் செல்லப் போவதாகவும் தன் சகோதரிக்கு எழுதிய கடிதம் அவனது பாக்கெட்டில் இருக்கிறது என்பது தெரியவில்லை. அவன் மறைத்து வைத்திருக்கும் ஷார்ட் கன் மற்றும் ரிவால்வரும் பியர்டின் கண்களில் படவில்லை.  

Gang Lu - கேங்க் லு - துப்பாக்கிச் சூடு நிகழ்த்திய மாணவன்
செமினார் ஹாலில் இருந்து  வெளியே வரும் கேங்க் லு டிபார்ட்மென்ட் தலைவர் ட்வைட் நிக்கோல்ஸன் அவர் அறையில் இருப்பதை உறுதி செய்த பின் மீண்டும் உள்ளே சென்று வாசலருகே அமர்ந்திருக்கும் கிறிஸ்ஸின் பின் தலையில் முதல் குண்டைப் பாய்ச்சுகிறான். அடுத்த குண்டு லிங்னக்வா ஷானின் நெற்றியில் பாய்கிறது. அடுத்த இரண்டு குண்டுகள் பாப் ஸ்மித்தின் உடலில். இடையே குண்டுகளை நிரப்புகிறான். அடுத்து நேராக ட்வைட்டின் அறைக்குச் சென்று மூன்று முறை சுடுகிறான். வெடிச்சத்தமும் புகையும் அலறல்களும் அபாய மணி முழக்கமும் கேட்கிறது. அடுத்த கட்டிடத்திற்குச் சென்று அங்கிருந்த நிர்வாகி ஆன் க்ளியரியையும், அங்கிருந்த வரவேற்பாளர் ஒருவரையும் சுடுகிறான்.

அதன் பின் ஆளில்லாத ஒரு செமினார் ஹாலிற்குச் செல்கிறான் கேங்க் லு. தனது வலது கண்ணுக்கும் காதிற்கும் இடையே ரிவால்வரை வைத்து ட்ரிகரை அழுத்துகிறான். 12 நிமிடங்களில் எல்லாமே நடந்து முடிவடைகிறது. நிலை குலைந்த பியர்டிற்கு ஆறுதல் சொல்ல ஏராளமானோர் வருகிறார்கள். அவர்களில் "Vanished Husband" என்று அழைக்கப்படும் அவரது கணவரும் ஒருவர்.

கணவர் உள்ளிட்ட எல்லோரும் போன பின், இரவில் பியர்ட் கோலியுடன் வீட்டிற்கு வெளியெ வருகிறார். ஆகாயத்தில் ஹீலியம் பலூன் போல் மின்னி இருட்டை அகற்றும்  எல்லா நட்சத்திரங்களும் நம்மை விட்டுப் பிரிந்தவர்கள்தான் என்று நம்புகிறார் பியர்ட். “பூமியின் சக்திகள் சூரியனின் சக்திகளை சந்திக்கும் சமநிலையின் ஒரு இடமான பிளாஸ்மாபாஸில் இருக்கிறார்கள். தூசியின் துகள்கள் சுழல்வதை நிறுத்தி, ஆழமான இடத்தில் அசையாமல் இருக்கும் அமைதியான இடமாக நான் அதை நினைத்துப் பார்க்கிறேன்" என்பவர்...

தன் கழுத்தில் தொங்கும், கிறிஸ் பரிசளித்த அந்த ஆம்பர் கல்லைப் பிடித்தபடி, "இது போலதானே"? என்கிறார். வேறு ஒரு நிலைக்குச் சென்ற கிறிஸ்ஸுடன் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு நிலையில் தொடர்பு கொள்வதாக நினைக்கும் பியர்டிற்கு, "ஆம் அதேதான்" என்று கிறிஸ் சொல்வது போல் தோன்றுகிறது. இப்படி பியர்ட், 'Fourth State of Matter" எனும் அவரது கட்டுரையில் வாழ்க்கை நிகழ்வுத் தொடரை வித்தியாசமாக, வாசிப்போரது சிந்தனையைத் தூண்டும் விதத்தில் முடிக்கிறார்.

(பின்குறிப்பு - இப்படி நம்மால் ஊகிக்கவும் உள்வாங்கவும் முடியாத பலவற்றை நம் வாழ்வில் காண, கேட்க அறிய வேண்டிய நிலை வரும். அவற்றை எல்லாம் நம்மால் இயன்றமட்டும் புரிந்து கொள்ள முயலலாம். அதுமட்டும்தானே நம்மால் செய்ய இயலும்.)

 

------துளசிதரன்

 

ஞாயிறு, 1 டிசம்பர், 2024

சூக்ஷ்ம தர்ஷினி - திரைப்படம் - ஒரு பார்வை

நல்ல கதை, நல்ல திரைக்கதை, நல்ல வசனம், நல்ல நடிப்பு, நல்ல ஒலி அமைப்பு மற்றும் நல்ல ஒளி அமைப்பு. இவை எல்லாம் அமையப்பெற்றால் நல்ல திரைப்படம் உருவாகும். இத்தனை 'நல்ல'துடன் நல்ல ஒரு கருத்தையும் நம்மை சிந்திக்கவைக்கும்படி சொன்னால் அந்தப்படம் எல்லோராலும் எல்லாக்காலத்திலும் பாராட்டப்படும் ஒன்றாகிவிடும். அந்தவிதத்தில் பார்க்கும் போது 'சூக்ஷ்மதர்சினி' எனும் மலையாளப் படம் அப்படி எல்லாவிதத்திலும் ஒரு நல்ல படம்தான். அதைப் பற்றித்தான் இன்று பார்க்கவிருக்கிறோம்

திங்கள், 18 மார்ச், 2024

ஜெயமோகனும் மஞ்ஞும்மல் பாய்ஸும்

 

இதைப் பற்றி ஒன்றும் சொல்லாமலிருக்க என்னால் முடிந்தவரை தாக்குப் பிடித்தேன்.  இனி முடியாது என்பதால்தான் இந்தக் கருத்து.