திங்கள், 14 ஜூலை, 2014

பணம் வெற்றுக் காகிதமாகின்றதோ......???                            
                       
    ஞாயிற்றுக் கிழமை.  அடுத்த ஒரு வாரத்திற்குத் தேவையான காறிகாய்களை வாங்க சந்தைக்குச் செல்லும் நாள். சென்றோம்.  விலையைப் பார்த்ததும் மயக்கம் வராத குறைதான்.  பெரும்பான்மையோர் தினமும் உபயோகிக்கும், இவை இல்லாமல் சமையல் இல்லை என்ற ஆதாரக் காய்களாகிய, வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு இவற்றின் விலை கடந்த இரு வாரங்களுக்கு முன் இருந்ததை விட இரு மடங்கிற்கும் சற்று அதிகமாகவே இருந்தது! மற்ற காய்களின் விலையோ கேட்கவே வேண்டாம்!  விலை உயர்ந்த பெட்ரோலின் வாசம் நன்றாகவே தெரிந்தது! கூடவே விவசாயிகளின் ஒட்டிய வயிறும் கண்களில் விரிந்தது.


பூரிக்கட்டையால் அடாது அடி வாங்கினாலும் விடாது எழுவேன் என்று மனம் தளராமல், தான் வலியால் துடித்தாலும், "துன்பம் வரும் வேளையிலும் சிரிங்க"  அப்படின்னு, நம்மை எல்லாம் தமது நகைச்சுவையால் மகிழ்விக்கும் நம் மதுரைத் தமிழன், கடந்த சில நாட்களுக்கு முன், தனது வலைப்பூவில், "அட போங்கப்பா, இந்தியர்களைப் புரிஞ்சுக்கவே முடியலை" என்று பல கேள்விகள் கேட்டு  அழகான பதிவொன்று எழுதி, நல்ல காலம், அவரது மண்டை வெடிக்கும் முன் முடித்திருந்தார்!  அதில் அவரது ஒரு கேள்வி எங்கள் நினைவுக்கு வந்தது மட்டுமல்ல, மிகவுமே சிந்திக்கவும் வைத்தது!  "என்னாச்சு, விலைவாசி எல்லாம் ஏறிக்கிட்டே இருக்கு.  ஆனா, ஒரு பயபுள்ளங்களும் அதற்கு எதிரா போராட்டம் கூட பண்ணல?" இதுதாங்க அவர் கேட்ட கேள்வி! 


    உண்மைதான்! சந்தையில், அருகில் இருந்த ஒரு பெண், "அம்மாடியோவ் எப்படி விலை ஏறிப் போச்சு, எப்படிக் கட்டுபடியாகும், எப்படிச் சமாளிக்கறதுனு தெரியல" எனச் சொல்லி 1 கிலோ வாங்குபவர் போலும், இப்போது 1/2, 1/4 கிலோ என்று வாங்கிச் சென்றதைக் கண்ட போது, 1/2, 1/4 கிலோவாகக் குறைத்துக் கொள்வார்களே தவிரப் போராடப் போவதில்லை! விலைவாசி ஏற்றம் யார் வீட்டிலும் அடுப்பு எரிவதை முடக்குவதில்லை! காய்களின் விலை மட்டுமல்ல, அன்றாடத் தேவைகளான, அரிசி, பருப்புகள், எண்ணெய், எரிபொருட்கள் போன்றவற்றின் விலையும், ஏதோ அரிய பொருளின் விலை போல எகிறித்தான் உள்ளது.  அதாவது, ஆடம்பரப் பொருட்களும், அன்றாடத் தேவைப் பொருட்களும் ஒரே விலையில் விற்கப்படுவது போலத்தான் உள்ளது.  "இதோ நாமும்தான் சத்தமில்லாமல் மனம் நொந்து கொண்டே வாங்கத் தானே செய்கின்றோம்!" என்று சிந்தித்தவாறே நடந்தோம். பொருளாதாரத்தில் சொல்லப்படும் ஒரு வாக்கு நினைவுக்கு வந்தது.  "கொஞ்சம் பணம்; நிறைய பொருட்கள் அன்று.  இன்று, நிறைய பணம் கொடுத்தாலும் கொஞ்சமே கொஞ்சம் பொருட்கள்"


இந்தியாவில் வாழும் மக்கள் தொகையில் பெரும்பான்மையோர், வறுமைக் கோட்டிற்குக் கீழேயும், வறுமைக் கோட்டிலும், அதற்குச் சற்று மேலேயும், நடுத்தர வர்கத்தினரும்தான்!  மேல்தட்டுவர்கத்தினரும், பணக்காரக் கோடீஸ்வரர்களும் மிச்சம் சொச்சமே! வறுமைக் கோட்டிற்குக் கீழேயும், வறுமைக் கோட்டிலும் வாழ்பவர்களுக்கு விலைவாசி பற்றிக் கவலைப்பட வழியில்லை. முக்கியமாக விலைவாசியால் பாதிக்கப்படுபவர்கள், வறுமைக் கோட்டிற்குச் சற்று மேலாக வாழ்பவர்களும், நடுத்தர வர்கத்தினரும்தான்! இவர்கள்தான் போராட வேண்டியவர்கள் ஆனால், போராடினாலும் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை என்ற எண்ணத்தில் ஒதுங்கிப் போய்விடுவர்.   

      மூச்! "எங்களுக்கு எங்கேங்க இதுக்கெல்லாம் நேரம்?  அவங்கவங்க வீட்டுப் பிரச்சினை, வயத்துப் பொழப்பு பிரச்சினை இதக் கவனிக்கவே நேரம் இல்லை!  குரல் கொடுத்தா மட்டும் அப்படியே விலையைக் குறைச்சுற போறாங்களாக்கும்? வேலையத்த வேலை" என்பதுதான் எந்த ஒரு சராசரி இந்தியனின் எண்ணமும். ஏனென்றால் நம் நாட்டில் எல்லாமே அரசியல் சார்ந்ததாக இருப்பதால்! ஆம், ஒரு பொருளாதார வல்லுனர்தானே இத்தனை காலம் பிரதமராக நம் நாட்டை ஆண்டார்?  என்ன செய்தார்? பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடிந்ததா அந்த வல்லுனரால்?  


    பணவீக்கமும், விலைவாசியும் கண்ணைக் கட்டி, வாயையும், வயிற்றையும் கட்டுதே தவிர, சராசரி பொதுஜனத்தின் பண வரவின் எண் கூடாததால், "விரலுக்கேத்த வீக்கம்" என்று சொல்லப்படும் வாசகத்தைக் கூட சொல்லுவதற்கு யோசிக்கத்தான் வேண்டும்! பண வீக்கத்தினால், விரல் வீக்கம் கூடிப் போய், ஆம்! நோட்டை எண்ணி எண்ணிக் கொடுத்து தேயிந்து காணாமல் போயிருந்தால்.. இல்லையென்றால், அளவுக்கு அதிகமா வீங்கிப் போய் வெடித்துக் காணாமல் போயிருந்தால்?

“By a continuing process of inflation, government can confiscate, secretly and unobserved, an important part of the wealth of their citizens.”  விலை ஏற்றம் என்பது, ஒரு அரசின், வெளியில் தெரியாமல் மறைமுகமாக தனது நாட்டின் மக்களின் சொத்தினை அபகறிக்கும் செயலாகும் என்று சொன்ன மிகப் பெரிய பொருளாதார நிபுணரான கேயினீஷியன் வாக்கும், 

“Inflation is the one form of taxation that can be imposed without legislation.”   விலைவாசி ஏற்றம் என்பது, மக்களின் மேல் விதிக்கப்படும், சட்டத்தில் இல்லாத, வரிவிதிப்பு என்ற மில்டன் ஃப்ரீட்மன் எனும் அமெரிக்கப் பொருளாதார நிபுணரின் வாக்கும், எவ்வளவு உண்மை என்பதை இங்குச் சொல்லாமல் இருக்க முடியவில்லை!.  எப்போதோ சொன்னவை இப்போதும் பொருத்தமாக உள்ளதால்!

எதிர்கட்சிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எப்போதாவது, இது போன்ற காரணங்களுக்காக, பெரும்பாலும், தேர்தலுக்கு முன், பணம் கொடுத்து தொண்டர்கள் திரட்டி பந்தல் போட்டூ உண்ணாவிரதம் இருப்பார்கள்.  இல்லை சாலையை அடைத்துக் கொண்டு, போக்குவரத்திற்கு இடைஞ்சலாகவோ, இல்லை ஒருநாள் பந்த் என்ற பெயரிலோ, போராட்டம் என்று அறிவிப்பார்கள்! எல்லா செய்தித் தாள்களிலும் படங்களுடன் செய்தி வெளியாகும்! அவ்வளவே! போராடுவதற்கும் பணம் கொடுத்தால் போராடுபவர்கள்தான் இருக்கின்றார்களே தவிர, இந்தியர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடுவதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை! அதனால்தான் எந்தப் போராட்டமுமே, உரிமைகள் வெல்லும்வரைத் தொடருவதில்லை! எங்கேயோ நடக்கும் போர்களுக்கும், சாவுகளுக்கும் கண்டித்துப் போராடுபவர்கள், கொடி பிடிப்பவர்கள், தங்கள் தலையாய, அன்றாட வாழ்க்கைக்கு வேண்டிய உரிமைக்காகக் கண்டனமோ, போராட்டமோ செய்வதில்லை! ஒரு நாள் உண்ணாவிரதம், அதுவும் ஒரு நாள் அல்ல, ஒரு சில மணி நேரங்களே உண்ணாவிரதம் இருந்து, எலுமிச்சை ஜீஸ் குடித்து முடிப்பதல்ல போராட்டம்!  நமது உரிமையை நிலைநாட்டவும், நமது கோரிக்கை நிறைவேறும் வரையும் போராடுவதுதான் போராட்டம். 

சந்தையிலுமே நல்ல தரத்தில் இருக்கும் காய்களின் விலையும், மற்ற மளிகைப் பொருட்களின் விலையும் அதிகமாகத்தான் இருக்கின்றது.  ஒரு சில கடைகளில் சற்று விலை குறைவாக இருக்கின்றது என்று பார்த்தால், -அதுவுமே அதிகமான விலைதான் என்றாலும் சந்தைக்குள்ளேயே மற்ற கடைகளோடு ஒப்பிடும்போது குறைவு அவ்வளவே -  தரம் குறைவாகத்தான் இருக்கின்றது.    மொத்த வியாபாரக் கடைகளிலேயே விலை கூடியிருக்கும் போது, கணினியைத் தட்டி விற்பனைச் சீட்டைத் தரும் தனியார், சில்லறை விற்பனைக் கூடங்களில் கேட்கவா வேண்டும்? கண்ணைக் கவரும் விதத்தில், நல்ல தரத்தில்(?) காய்கள், மளிகைப் பொருட்கள்  இருந்தாலும், விலையோ "உள்ளே வராதே! எட்ட நில்" என்று சொல்லித் துரத்துகின்றது!  விலைவாசி ஏற்றத்திற்குப் போராட வேண்டும் என்று சொல்லுவது ஒரு புறம் இருந்தாலும், முதலில் நுகர்வோர் பொருட்கள் அடித்தட்டு வர்கத்தினரும் நுகரும் வண்ணம் தரம் வாய்ந்ததாக, எல்லோரும் நுகரும் விலையில் கிடைக்கின்றதா?  தரமும், பொருளாதாரமும் ஒவ்வொரு இந்தியனின் பிறப்புரிமை அல்லவா? 

தேயிலையிலிருந்து, அரிசி, பருப்புகள் வரை, எல்லாமே 3 வது, 4 வது தரம் தான் இந்தியச் சந்தையில் விற்கப்படுகின்றது.  உயர்தர முதல் தரம், இரண்டாவது தரம் எல்லாம் சராசரி, ஒரு சாதாரண இந்தியக் குடிமகன் நுகரும் விலையில் இல்லை என்பது மட்டுமல்ல அவை எல்லாமே ஏற்றுமதி செய்வதற்கே!  இந்தியாவில் பிறந்து இந்திய அன்னையின் குழந்தைகளாக, சுதந்திர இந்தியாவில் வாழும் சாதாரண மக்களுக்கே நல்ல தரமான பொருட்கள், அவர்கள் விலை கொடுத்து வாங்கி அனுபவிக்கும் விலையில், நிலையில் இல்லை என்பது அவர்களது அடிப்படை உரிமை, பிறப்புரிமையே இல்லை என்ற அர்த்தம்தானே? அடிப்படை உரிமைக்கே குரல் கொடுக்காத இந்தியர்கள் விலைவாசி எகிறுவதற்கா எகிறுவார்கள்? 

உங்களுக்கே உரிமை இல்லன்னா எங்களுக்கு உரிமை உண்டா?  போற போக்க பாத்தா எங்களுக்கும் சாப்பாடு கிடைக்காது போலருக்கே!  ஏற்கனவே எங்க இனம் நிறைய ரோட்டுலதான்...எங்களுக்கும் ரேஷன் கடை உண்டா.....   ரேஷன் கடைகள் என்பவை பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்காகத்தான் அரசு ஏற்படுத்தியுள்ளது. நல்ல விஷயமே!  ஆனால், அதில் தரப்படும் பொருட்கள் தரம் வாய்ந்ததா? இல்லை!  உடல் நலம் பற்றிச் சிந்திக்க வேண்டிய அரசே, உடல் நலத்தைக் கெடுக்கும் கள்ளுக் கடைகளை ஏற்படுத்தி, "மது குடிப்பது நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல" என்று கண்ணுக்குக் கூடத் தெரியாத எழுத்தில் போட்டுவிட்டு, அதிலிருந்து வருமானம் ஈட்டும் போது, அந்தக் கள்ளுக் கடைகளில் குடித்து, தானும் கெட்டு, குடும்பத்தையும் கெடுக்கும் ஆண்களின் மனைவிமார்களும் சரி, மக்களும் சரி இதற்காகக் கூடப் போராடாத போது, விலைவாசிக்காகவா போராடப் போகின்றார்கள்?  யாருக்கு வந்த விருந்தோ! இங்கிருந்து மூலதனமாக வெளிநாடு செல்லும் பொருட்கள், விளை பொருட்களாக உருமாறி இங்கு இறக்குமதியாகி, அதிக விலையில் விற்கப்படும் போது, ஃபாரின் பொருள் என்ற மோகத்தில் அதை மெச்சி, பாராட்டி, அதிக விலை கொடுத்தும் வாங்கி நுகர்கின்றோம்! இந்தியா ஒரு குப்பைக் கிடங்காகவும் மாறி வருவதும் ஒரு காரணம்தான்!   “Price rises in India have ignited student riots, nationwide demonstrations and government collapse,” என்று  நந்தன் நிலேகனி தனது புத்தகமாகிய “Imagining India” ல் குறிப்பிட்டுள்ளார்.  எனவே போராட்டம் வருமோ? நம் வீட்டுக் குழந்தைகளுக்கு நம் வீட்டிலேயே உரிமை இல்லாது போனால்?!  இப்படி உணவுப் பொருட்களின் விலை கூடிக் கொண்டே போனால் நம் நாட்டில் இன்னும் பலரை வறுமைக் கோட்டின் கீழ் தள்ளிவிடுமோ என்ற எண்ணமும் எழத்தான் செய்கின்றது. ஏனென்றால் நம் நாடு மட்டுமல்ல, பொருளாதாரத்தில் பின் தங்கிய ஆசிய நாடுகள் எல்லாவற்றிலுமே மக்கள் இன்னும் வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளப்படுவார்கள் என்றுதான் புள்ளிவிவரம் கூறுகின்றது. தனியொரு மனிதனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்! என்று பாடிய பாரதியின் வரிகள் உண்மையாகிவிடுமோ? வறுமை தலைக்கு மிஞ்சி ஒரு போருக்கு வழி வகுத்து விடுமோ? 

இதற்கு முக்கியக் காரணம் நமது நாட்டில் விலை/தர நிர்ணயம் இல்லாததுதான். விலைவாசி ஏற்றத்திற்குப் பல காரணங்கள் சொல்லலாம் இருந்தாலும், காரணங்களை அலசி ஆராய்ந்து, வியாபாரிகளுக்கும், உழவர்களுக்கும்,  எல்லாத் தர மக்களுக்கும் ஏற்ப விலைவாசியை நம் அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவருவது இல்லை! இடைத்தரகர்கள் அதிகமாக இருப்பதும், அந்த இடைத் தரகர்கள் அரசியல்வாதிகளாகவோ, அவர்கள் சம்பந்தப்பட்டவர்களாகவோ இருப்பதால்!  அரசன் எவ்வழி அப்படித்தானே மக்களும் இருப்பார்கள்! நம்மை ஆளும் தலைவர்களும் நம்மைக் கண்டு கொள்வதில்லை!  மக்களும் இது போன்ற பிரச்சினைகளைக் கண்டு கொள்வதில்லை!  இரு கோடுகள் தத்துவத்தில் வாழ்பவர்களாகத்தான் இருக்கின்றார்கள் இந்தியர்கள்! 

நாம் வாயைப் பிளந்து பார்க்கும் மேலை நாடுகளை எடுத்துக் கொண்டால் அங்கு நுகர்வோர்கள் ராஜாக்கள்.  "Consumers are the King".  பொருட்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டால், உடன் அதன் காரணத்தை அறிந்து ஆராய்ந்து, அதன் தரம் உயர்த்தப்படும். இல்லையென்றால் நுகர்வோருக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்படும். அதே போன்று இன்றியமையாத வேளாண்மைப் பொருட்களின் விலை அதிகமானால், உடனே அரசு அதற்கான நடவடிக்கைகள் எடுத்து, (இது பொருளாதாரம் சம்பந்தப்பட்டது!  இடுகை இன்னும் நீண்டுவிடும். அதனால் தவிர்க்கின்றோம்) விலையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிடும்.  அதே போன்றுதான் விலை குறைதலும்.  ஒரு அளவுக்கு மேல் குறையவும் குறையாது!  அங்கு உழவர்கள் என்பவர்கள் ராஜாக்களாகத்தான் இருக்கின்றார்கள்.  


    நமது தமிழ்நாட்டில் உழவர்சந்தை என்ற ஒன்று இடையில் பேசப்பட்டது.  ஆனால் அது இப்போது காணாமல் போய்விட்டதோ என்று தோன்றுகின்றது!  எல்லா மாநிலங்களிலும் இருக்கின்றது ஆனால் அவை அரசின் கண்காணிப்பில் இல்லாமல், அந்தந்தப் பகுதி பெரிய வியாபாரிகள், இடைத்தரகர்கள், அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் ஆதிக்கத்தில், இருப்பதால் கானல் நீரே!  உழவர் சந்தை என்ற ஒன்று நிரந்தரமாக, ஒவ்வொரு பகுதியிலும், இடைத்தரகர்கள் இல்லாத ஒரு சந்தையாக, உழவர்களும், பொது மக்களும் பயன் பெறும் வகையில் விலையும், தரமும் அரசால் நிர்ணயிக்கப்பட்டுக் கொண்டுவரப்பட்டால் உழவர்களும், பொதுமக்களும் பயனடைவார்கள். 

இதையெல்லாம் பார்க்கும் போது, இந்த விலைவாசி ஏற்றத்தையும் விட, நாம் இவற்றை எல்லாம் அடையத் தேவையான பொருளாதாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள மிகவும் பிரயத்தனப்பட்டு, உழைத்து, நம்மை வருத்திக் கொண்டு நமது குடும்பத்தை நிர்வகிக்க நாம் படும் அல்லல்களுக்குக் கொடுக்கும் விலை, மிகப் பெரிய உண்மையான விலையோ என்று தோன்றுகின்றது!  காந்தித்தாத்தா சிரித்துக் கொண்டிருக்கின்றார் மதிப்பை இழக்கும் இந்தக் "காகித நோட்டில்"  தன் தலை இன்னும் இருக்கின்றதே என்று!
படங்கள் courtesy இணையம்

30 கருத்துகள்:

 1. இதற்கல்லாம் காரணம் யார் ? ஏமாற்றும் அரசியல்வாதிகளா ? இல்லை ஏமாறும் மக்களா ? என்னை பொருத்தவரை இருவருக்குமே இறைவன் மூளையை கொடுத்தான். முடிந்தவன் கரை ஏறுகிறான். முடியாதவன் ? ? ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் சொல்லுவது சரிதான் கில்லர் ஜி ஆனால் அரசியல்வாதிகள் நம்மை ஏமாற்றுவது வெட்ட வெளிச்சத்தில்தானே. இருட்டில் அல்லவே! எல்லமே அரசியல் எனும் போது, போராடாமல் இருப்பது பொது மக்கள்தான் எங்களையும் சேத்துத்தான்....

   கருத்திற்கு நன்றி!

   நீக்கு
 2. சிறந்த ஆய்வுப் பதிவு

  காய்கறி விலையேற்றம் ஏனடா
  டொலரின் பெறுமதி கூடிப்போச்சடா
  அப்ப நம்ம காசு பெறுமதி குறைஞ்சு போச்சடா
  அங்காடியில் இப்படிப் பேசுறாங்கோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாங்க நம்ம காசு மதிப்பை இழந்து....வரவு எட்டணா செலவு பத்தணா என்றாகிப் போனது!

   கருத்திற்கு மிக்க நன்றி

   நீக்கு
 3. ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டேதான் செல்கிறது நண்பரே
  இது எங்கே போய் முடியுமோ?
  தம 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே! இன்னும் வறுமை கூடிவிடுமோ என்ற ஆதங்கமும் வருகின்றது!

   கருத்திற்கு மிக்க நன்றி!

   நீக்கு
 4. விலை வாசியையைப் பற்றிய இந்த ஆய்வு அருமை. சிந்திக்க கூடிய கருத்துக்கள் ஏராளம்.

  கடைசிப் பத்தி அனைவரையும் யோசிக்க வைக்கிறது.

  "//"விலை உயர்ந்த பெட்ரோலின் வாசம் நன்றாகவே தெரிந்தது! கூடவே விவசாயிகளின் ஒட்டிய வயிறும் கண்களில் விரிந்தது.//"
  உண்மை தான், விவசாயிகளுக்கு, இந்த விலை ஏற்றத்தினால் ஒரு பயனும் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விவசாயிகளுக்கு இங்கு வாழ்க்கை இல்லை என்பதுதான் மிகவும் வருத்தமான ஒன்று! அவர்களது நிலம் எல்லாம் காங்க்ரீட் காடுகளாகி வருகின்ற அவல நிலை!

   தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சொக்கன் சார்!

   நீக்கு
 5. //குரல் கொடுத்தா மட்டும் அப்படியே விலையைக் குறைச்சுற போறாங்களாக்கும்? வேலையத்த வேலை" என்பதுதான் எந்த ஒரு சராசரி இந்தியனின் எண்ணமும்//

  உண்மை, உண்மை, உண்மை.

  ஒரு காலத்தில் அரிசித் தட்டுப்பாடு அப்போதைய ஆட்சியையே கைழ்த்தது. வெங்காய விலையேற்றம் சமீபத்தில் இன்னொரு ஆட்சியை அசைத்துப் பார்த்தது.

  ஒரு பழைய பாடல் நினைவுக்கு வருகிறது. "ஏறுதம்மா... ஏறுதம்மா ரெக்கை கட்டி ஓடுதம்மா விலைகள்... ஆஹா விலைகள்... ஏழை பாடுங்க... என்ன ஆகுமோ ஏதும் புரியல்ல..." என்று டி எம் எஸ் ஏ வி எம் ராஜனுக்குக் குரல் கொடுப்பார் ஒரு படத்தில். படம் முருகன் காட்டிய வழி என்று நினைவு. அப்போதே அப்படிப் பாடிய கவிஞர் இப்போது பார்த்தால் எப்படிப் பாடுவாரோ?

  அந்தப் பாடலின் இணைப்பு இங்கே...

  http://www.youtube.com/watch?v=6mlV-tvAmvM
  தட்டுகளோடு காத்திருக்கும் நாலுகால் நண்பர்களின் புகைப்படம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சார் உங்கள் கருத்தும் அதனுடன் வந்த தகவலும்....சே இந்தப் பாட்டு இந்தப் பதிவ எழுதும் போது இருவருக்குமே நினைவுக்கு வராமல் போச்சே...வரவு எட்டணா...செலவு பத்தணாவும் நினைவுக்கு வராமப் போச்சு......

   அந்தக் கவிஞர் , பாரதியார் எல்லோருமே நம்க்கு மூதாதையர் ஆகிப் போனவர்கள் இப்ப இருந்துருந்தா....நிஜமாவே ஜகத்தினை அழித்திடுவோம்னு பாரதி சொன்னத அவர் புரட்சியாவே கிளப்பிருப்பாரு நொந்து போய்.....

   ரொம்ப நன்றி சார்!

   நீக்கு
 6. வெங்காயத்தின் விலையை உயர்த்தி, பா.ஜ.க.அரசை வீழ்த்துவதற்காக, சரத் பவார், மகாராஷ்டிரத்தில் தன் கட்சியினரின் ஆதிக்கத்தில் உள்ள கூட்டுறவுக் கொள்முதல் நிலையங்களின் மூலம் சதி செய்துவருவதைக் கடந்த சில நாட்களாகத் தொலைக்காட்சிகள் வெளியிட்டு வருகின்றன. விளைச்சல் பலமாக இருந்தும், கொள்முதல் செய்த வெங்காயம் பதுக்கிவைக்கப்படுகிறதாம். அதனால் வெங்காயத்தின் விலை தாறுமாறாக ஏறிக்கொண்டிருக்கிறது. (2) மழை இந்த வருடம் குறைவாக இருக்கும் என்று தினசரி செய்திகள் வருவதால், எண்ணெய் வித்துக்கள் பதுக்கப்பட்டு வருகின்றன. எண்ணெயின் விலை எந்த அளவுக்கு ஏறும் என்பது எந்த சோதிடராலும் கணிக்க முடியாதநிலையில் உள்ளது. (3) மழையும் மின்சாரமும் இல்லாத தமிழகத்தில், காய்கறி விலை எப்போதுமே ஏறிக்கொண்டுதான் இருக்கிறது. (4) ஏழைகளுக்கு வேண்டிய உணவுப்பொருட்கள் கடையில் கிடைத்துவிடுகிறது. ஒரே வீட்டில் இரண்டும் மூன்று ரேஷன்கார்டுகள் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பாதிப்பில்லை. (5) நீங்கள் படம் வெளியிட்டிருப்பதுபோல், நாய்களும் நடுத்தர மக்களும்தான் பரிதாபத்துக்குரியவர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சார் நாங்களும் இந்தச் செய்தி அறிந்தோம்...அதையும் பதிவுல சேர்க்கலாமானு கூட நினைச்சோம்...ஆனா அப்புறம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நீண்டுவிடும்னு நிறைய கட் ஷார்ட் பண்ணிட்டோம் சார். நிறைய பொருளாதார விஷயங்கள் சொல்ல நினைத்து, எழுதி கட் பண்ணி ,,,இப்படி....இனி படங்கள் ரொம்ப கொடுக்கறதுக்கு பதில எழுதிடலாம்னு தோணுது....

   ஆமாம் சார் அந்த நியூஸ் பாத்தப்ப எங்களுக்குத் தோணிச்சு அரிசிய பதுக்குவாங்க....ஓரளவு பதுக்கலாம் அதுவே பூச்சி அரிச்சு ஏதோ ஒரு வாடையுடன் பழைய அரிசியாத்தான் வரும் பதுக்கப்பட்டால்....அப்படி இருக்கும் போது வெங்காயத்தபதுக்கினா அது நாறிடாது?

   மிக்க நன்றி தங்கள் கருத்திற்கும், தகவலுக்கும்!

   நீக்கு
 7. நம்ம ஆளுங்க ரொம்ப பிரக்டிகல்னு தோணுது சகா! நம்ம நாட்டில் போரட்டம்கிறதே ஒரு அரசில் தான். உண்மையான போராட்டத்திற்கு எங்க மதிப்பு இருக்கு. ஐரோமும், உதயகுமாரும் பண்ணாத போராட்டமா? நெட் ரிசல்ட் ஜீரோ:(( மக்களுக்கு புரிஞ்சுடிச்சு. இவனுங்கல்ட்ட கத்தி சாவுறதுக்கு, நாமளா பொழச்சுக்கலாம்னு நினைக்கிறாங்க :((
  தம 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியாகச் சொன்னீர்கள் சகோதரி! படு ப்ராக்டிக்கல்.....

   ரொம்ப யதார்த்தமான கருத்திற்கு மிக்க நன்றி

   நீக்கு
 8. வணக்கம்
  அண்ணா
  வாழும் மக்களின் வாழ்க்கை நிலையையும் அவர்களின் துன்பங்களையும் மிக அருமையாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் காலம் உணர்ந்து பதிவாகிய விதம் நன்று. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
  த.ம3வது வாக்கு
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பேனாமுனைப்போராளி:

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரிதான் நண்பரே! அங்கு மலேசியாவில் எப்படி? நிலவரம்?

   பேனாமுனைப் போராளி பார்த்து பின்னூட்டமும் இட்டாயிற்று! தம்பி!

   நீக்கு
 9. உழவர் சந்தையும் சிறக்க வேண்டும்... உழவர்களும் சிறக்க வேண்டும்... அது ஒன்றே சிறந்த முதல் வழி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்!DD! உழவர்கள் வாழணும்! உழவர்கள் வாழ்ந்தாதான் நாமும் வாழ முடியும்...இந்த உலகமே! ஆனால் மேல நாடுகளில் உழவர்கள் நன்றாக உள்ளார்கள்! இங்குதான் நாம் வேளாண்மை சார்ந்த நாடாக இருந்தாலும் நலிந்த நிலையில் உழவர்கள்....

   நீக்கு
 10. உங்களுக்கே உரிமை இல்லன்னா எங்களுக்கு உரிமை உண்டா? போற போக்க பாத்தா எங்களுக்கும் சாப்பாடு கிடைக்காது போலருக்கே! ஏற்கனவே எங்க இனம் நிறைய ரோட்டுலதான்...எங்களுக்கும் ரேஷன் கடை உண்டா.....தங்களின் இப்பதிவில் வரும் நாய்களின் கேள்வி நியாயமானதே........நாளை நமக்கும் இந்த நிலை வரலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போற போக்க பாத்தா சம்பளம் ஏறாம விலைவாசி மட்டும் ஏறிச்சுனா? என்னங்க பண்ணறது!

   மிக்க் நன்றி!

   நீக்கு
 11. மிகவும் அவசியமான ஒரு பதிவு! இப்போதெல்லாம் கடைக்கு போகவே பயமாக இருக்கிறது! இரண்டு மூன்று மளிகைப் பொருள் வாங்கினால் சாதாரணமாக ஐநூறு ரூபாயைத் தாண்டிவிடுகிறது! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதச் சொல்லுங்க...எவ்வளவு பணம் கொண்டு போனாலும், வரும் பொது பென்னிலெஸ்ஸாகத்தான் வர வேண்டி உள்ளது! இத்தனைக்கும் ஆடம்பரப் பொருட்கள் வாங்காமலேயே!

   நன்றி சுரேஷ்!

   நீக்கு
 12. நிதர்சனமான உண்மைகள்!
  சமுதாய அவலங்கள் , அதற்கான காரணங்களை அலசும் அற்புதமான பதிவு அய்யா!
  அந்த முதியவளின் படம்தான் என்னவோ செய்து விட்டது......!
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிதர்சனமான உண்மைகள் தான் என்ன செய்ய கசக்கின்றதே! ஆம் அந்த முதியவளின் படம் மனதைப் பிசைகின்றது! போகிற போக்கைப் பார்த்தால் அப்படிப்பட்ட நிலைக்கு இன்னும் பலர் தள்ளப்படுவார்கள் என்ற புள்ளிவிவரம் பயமுறுத்துகின்றது! தலைவர்கள் என்ன செய்யப்போகின்றார்கள்?

   மிக்க நன்றி!

   நீக்கு

 13. வணக்கம்!

  தில்லையகம் கண்டேன்! செழுந்தமிழ் தந்தரும்
  முல்லையகம் கொண்டேன் முகிழ்த்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் ஐயா! வணக்கம்! தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி! நாங்களும் தொடர்கின்றோம் தங்களை!

   நீக்கு
 14. வணக்கம் சகோதரரே!

  வலைச்சரத்தில் இன்று உங்களைக் கண்டு தொடர வந்தேன்...

  விலைவாசி உயர்வு!
  வீழ்ச்சிகண்ட மக்கள் வாழ்வு!

  சமுதாயச் சீர்கேடு வரை செல்லும்.
  அறியவேண்டிய அழுத்தமான பதிவு சகோதரரே!

  நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் சகோதரி! வணக்கம்! தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி! தங்கலையும் தொடர்கின்றோம்!

   நீக்கு
 15. சகா! தங்கள் பதிவை இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன். நேரம் வாய்க்கும்போது பார்க்கவும்//http://blogintamil.blogspot.in/2014/07/depth-in-writing-big-b.html?showComment=1405525733281#c2746730877402195880

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி! எங்களையும் ஒரு பொருட்டாக மதித்து, தில்லைஅகத்தின் கிறுக்கல்களை அறிமுகப் படுத்தியதற்கு! பார்த்தோம், களித்தோம். கருத்தும் இட்டோம்....கூச்சத்தில்!

   தங்கள் அருமையான வலைச்சர பதிவுகள் எல்லாம் வாசித்தோம்! மிக்க நன்றி சகோதரி!

   நீக்கு