1996 ல் "The New Yorker" பத்திரிகையில் வெளிவந்த இவரது கட்டுரையான 'The Fourth State of Matter' ல் 1991 ல் நடந்த அந்தப் படுகொலை சம்பவத்தால் தனக்கு நேர்ந்த அதிர்ச்சி, இழப்பு மற்றும் துயரத்தை, வாசிப்போர் மனதில் ஓர் இனம் புரியாத வேதனையையும் வியப்பையும் தோற்றுவிக்கும் விதத்தில் எழுதியிருக்கிறார். அத்துடன் கேங்க் லு எனும் இயற்பியல் ஆராய்ச்சி மாணவன் நிகழ்த்திய அந்தப் படுகொலையில் உயிரிழந்த, உடன் பணிபுரிந்தவர்கள் பற்றியும் அப்படுகொலை பற்றியும் அவனது தற்கொலை பற்றியும் விரிவாகச் சொல்கிறார். மட்டுமல்ல, அயனிமம் (Plasma) எனும் மின்மக் கலவை அல்லது மின்மக் கூழ்மம் பற்றியும் அரிய பல தகவல்களையும் தருகிறார்.
கோலி
அவரது வளர்ப்புச் செல்லமான கோலியைப் பற்றிச் சொல்லும் வரியோடு கட்டுரையைத் தொடங்குகிறார். வயதினால் உடல் நலக்குறைவுள்ள தன் வளர்ப்புச் செல்லமான கோலியை இரவில், சிறுநீர் கழிக்க வீட்டின் வெளியே கொண்டு வரும் பியர்ட், ஆகாயத்தில் மின்னும் செவ்வாய் மற்றும் மறைந்திருக்கும் வியாழ கிரகங்களைக் காண்கிறார். இவற்றை எல்லாம் அவர் தெரிந்து கொள்ளக் காரணம் அவருடன் பணிபுரியும் இயற்பியல் விஞ்ஞானிகளுடனான தொடர்புதான். கோலியை வீட்டிற்குள் கொண்டு செல்லும் பியர்டிற்குத் தெரியும். மீண்டும் சில மணிநேரங்களுக்குப் பின் கோலியுடன், தான் வெளியில் வர வேண்டியிருக்கும் என்று.
ஆம்பர் கல்
கிறிஸ்டோஃப், காந்தமண்டலங்களைக் குறித்து விரிவுரை ஆற்ற உலகெங்கும் பயணிப்பதுண்டு. அப்படிப் போய்வரும் போதெல்லாம் பியர்டிற்குப் பல பரிசுப் பொருட்கள் வாங்கி வந்து அளிப்பதுண்டு. அவற்றுள் பியர்டிற்கு, கிறிஸ், ஒரு முறை போலந்திலிருந்து கொண்டுவந்த ஈயின் சிறகுகளை உள்ளடக்கிய ஆம்பர் கல்லும், மற்றொரு முறை பரிசளித்த யானைத்தோலால் ஆன பிரேஸ்லெட்டும் தான் மிகவும் பிரியமானவை.
கிறிஸ்ஸும் பியர்டும் வழக்கம் போல் அன்றும் பலவற்றையும் பற்றிப் பேசுகிறார்கள். கிறிஸ் சமீபகாலமாக அதிகம் ஆர்வம் காண்பிக்கும் சனிகிரகத்தைச் சுற்றியுள்ள வளையத்திலிருக்கும் அயனிமம் பற்றியும் அதிலுள்ள தூசுகளைப் பற்றியும், சமீபத்தில் ஜெர்மனியிலிருந்து வந்த 80 வயதான அவரது தாயை பல இடங்களுக்கும் கூட்டிச் சென்றது பற்றியும் பேசுகிறார். அதன் பின் பியர்ட், இயற்பியலில் ஆர்வமில்லாத கேங்க் லு மாலை வேளைகளில் லேபில் கணினியின் முன் தன் நேரத்தைச் செலவிடாமல் துப்பாக்கிப் பயிற்சி செய்யும் ஓரிடத்தில் தான் புதிதாய் வாங்கிய துப்பாக்கியுடன் பயிற்சி செய்வதைப் பற்றியும் சொல்கிறார்.
படுகொலை நிகழும் 1991 ஆம் ஆண்டில் அந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) பியர்ட், தனக்கு வேலை எதுவும் அதிகமாக இல்லை என்பதால் கிறிஸ்ஸின் அனுமதியுடன் மதியமே வீட்டிற்குப் போகிறார். அப்போது அவரெதிரே நடந்து வரும் கேங்க் லு வைக் காணவும் செய்கிறார். ஆனால், கேங்க் லு, தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் அதற்கு முன் சிலரைத் தனக்குத் துணையாக அழைத்துச் செல்லப் போவதாகவும் தன் சகோதரிக்கு எழுதிய கடிதம் அவனது பாக்கெட்டில் இருக்கிறது என்பது தெரியவில்லை. அவன் மறைத்து வைத்திருக்கும் ஷார்ட் கன் மற்றும் ரிவால்வரும் பியர்டின் கண்களில் படவில்லை.
அதன் பின் ஆளில்லாத ஒரு செமினார் ஹாலிற்குச் செல்கிறான் கேங்க் லு. தனது வலது கண்ணுக்கும் காதிற்கும் இடையே ரிவால்வரை வைத்து ட்ரிகரை அழுத்துகிறான். 12 நிமிடங்களில் எல்லாமே நடந்து முடிவடைகிறது. நிலை குலைந்த பியர்டிற்கு ஆறுதல் சொல்ல ஏராளமானோர் வருகிறார்கள். அவர்களில் "Vanished Husband" என்று அழைக்கப்படும் அவரது கணவரும் ஒருவர்.
கணவர் உள்ளிட்ட எல்லோரும் போன பின், இரவில் பியர்ட் கோலியுடன் வீட்டிற்கு வெளியெ வருகிறார். ஆகாயத்தில் ஹீலியம் பலூன் போல் மின்னி இருட்டை அகற்றும் எல்லா நட்சத்திரங்களும் நம்மை விட்டுப் பிரிந்தவர்கள்தான் என்று நம்புகிறார் பியர்ட். “பூமியின் சக்திகள் சூரியனின் சக்திகளை சந்திக்கும் சமநிலையின் ஒரு இடமான பிளாஸ்மாபாஸில் இருக்கிறார்கள். தூசியின் துகள்கள் சுழல்வதை நிறுத்தி, ஆழமான இடத்தில் அசையாமல் இருக்கும் அமைதியான இடமாக நான் அதை நினைத்துப் பார்க்கிறேன்" என்பவர்....
தன் கழுத்தில் தொங்கும், கிறிஸ் பரிசளித்த அந்த ஆம்பர் கல்லைப் பிடித்தபடி, "இது போலதானே"? என்கிறார். வேறு ஒரு நிலைக்குச் சென்ற கிறிஸ்ஸுடன் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு நிலையில் தொடர்பு கொள்வதாக நினைக்கும் பியர்டிற்கு, "ஆம் அதேதான்" என்று கிறிஸ் சொல்வது போல் தோன்றுகிறது. இப்படி பியர்ட், 'Fourth State of Matter" எனும் அவரது கட்டுரையில் வாழ்க்கை நிகழ்வுத் தொடரை வித்தியாசமாக, வாசிப்போரது சிந்தனையைத் தூண்டும் விதத்தில் முடிக்கிறார்.
(பின்குறிப்பு - இப்படி நம்மால் ஊகிக்கவும் உள்வாங்கவும் முடியாத பலவற்றை நம் வாழ்வில் காண, கேட்க அறிய வேண்டிய நிலை வரும். அவற்றை எல்லாம் நம்மால் இயன்றமட்டும் புரிந்து கொள்ள முயலலாம். அதுமட்டும்தானே நம்மால் செய்ய இயலும்.)
------துளசிதரன்