கடந்த சனியன்று (27-01-18), மாலை
6.45. இடம்: எர்ணாகுளம் பத்மா தியேட்டர் சந்திப்பு. நண்பரின் வீட்டுக் கல்யாண வரவேற்பில்
பங்கெடுக்க மகள் விஷ்ணுப்ரியாவுடன் வேகமாக நடந்து கொண்டிருந்தார் ரஞ்சனி. மகளைக் கையில்
பிடித்தபடி, வளைந்தும், நெளிந்தும் மனிதர்களுக்கிடையே கிடைத்த இடைவெளிகளில் பாய்ந்து
செல்லும் அவரது குறிக்கோள் அடுத்துள்ள மெட்ரோ ஸ்டெஷன்தான். திடீரென ஒரு நல்ல இடைவெளி
தென்படவே, “ஹப்பாடா” என்று அதில் நான்கு அடி எடுத்து வைத்ததும், வழியில், தலையிலிருந்து ரத்தம் வழிந்திடக் கிடக்கும் ஒரு மனிதர்!
இந்தக் காணொளியில் அந்த மனிதர் விழுவதிலிருந்து முழு நிகழ்வும் இருக்கிறது!!!
“அய்யோ” என்று பதறி மகளைப் பிடித்திருந்த
கையை உதறி இரு புறமும் திரும்பிப் பார்த்த அவருக்குத் தன் கண்களை நம்பவே முடியவில்லை!
இருபதுக்கும் மேற்பட்ட மனிதர்கள் சுற்றி நின்று பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டும்,
அடுத்து நிற்பவர்களிடம் ஏதேதோ சொல்லிக் கொண்டும் இருந்தனரே ஒழிய ஒருவரும் அம்மனிதரின்
அருகே சென்று அவரைத் தொடவோ, தூக்கவோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவோ முயலவில்லை.
“ரத்தம் கையில் படும்!....ஆடைகளிலும்
ரத்தம் படும்! ஏன் வம்பு. யாராவது வந்து தூக்குவார்கள்” என்ற எதிர்பார்ப்பில் எல்லோரும்
நின்று கொண்டிருந்தார்கள். பைக்கில் போகிறவர்கள் பைக்கை நிறுத்தி பைக்கில் உட்கார்ந்தபடி
வருத்தத்துடன் பார்த்து, பின்னால் வருவோருக்கும் காண வசதி செய்து கொடுத்துப் போய்க்
கொண்டிருந்தார்கள். கொச்சி உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞரான ரஞ்சனிக்கு ஏனோ அவர்களைப்
போல் ஒருவராக மாறி விஷ்ணுப்ரியாவின் கைகளைப் பற்றி மெட்ரோ ரயிலைப் பிடித்து கல்யாண
வரவேற்பிற்குப் போகத் தோன்றவில்லை.
“யாராவது வாங்களேன்! பிடிங்க,
ஹாஸ்பிட்டலுக்குக் கொண்டு போவோம்” என்றபடி உட்கார்ந்து செத்துக் கொண்டிருந்த அந்த மனிதரை
தன் கைகளால் பிடித்துத் தூக்கினார். கூடி நின்றவர்களில் செய்தவதறியாது திகைத்து நின்ற
சிலருக்கு ரஞ்சனியின் அந்த மனிதநேயத் துணிச்சல் தொற்றிக் கொண்டதாலோ என்னவோ, ஓடி வந்து
அம்மனிதரைப் பிடித்து ஒரு ஆட்டோவில் ஏற்ற ரஞ்சனியின் முயற்சிக்கு உதவினார்கள். ஆட்டோவில்
வளைந்தபடி ஏறி உட்கார மட்டுமே முடியும் என்பதால், படுகாயமடைந்த அவரை ஏற்ற முடியவில்லை.
எப்படியோ ஒரு காரில் வந்தவர்,
தன் கார் இருக்கைகளில் ரத்தமானாலும் பரவாயில்லை, இம்மனிதனின் உயிரைக் காப்பாற்ற வேண்டும்
என்ற எண்ணத்துடன், காயமடைந்தவரைத் தன் காரில் ஏற்றி, அங்குக் கூடியிருந்த நூற்றுக்கணக்கானவர்களில்
இரண்டு பெண்கள், மூன்று ஆண்கள் மட்டுமல்ல, நானும் மனிதன் தான் என்று நிரூபித்து அடுத்துள்ள
மருத்துவமனைக்குப் பறந்தார்.
காரில் ஏற இடமில்லாததால், ஒரு
ஆட்டோ பிடித்து ரஞ்சனியும் விஷ்ணுப்ரியாவும் மருத்துவமனைக்குச் சென்று அவருக்குத் தாமதியாமல்
அவசரச் சிகிச்சை கிடைக்கத் தேவையானவற்றை எல்லாம் செய்தார்.
விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து
தலை சுற்றி விழுந்த திருச்சூர் ஆவினிச்சேரியைச் சேர்ந்த கல்லுவெட்டுக் குழியில் சஜி
மாலை 6.40 முதல் 6.55 வரை 15 நிமிடங்கள், ரஞ்சனியும் விஷ்ணுப்ரியாவும் வந்து உதவும்
வரை விழுந்த இடத்திலேயே கிடந்திருக்கிறார். நூற்றுக் கணக்கான மனிதர்கள்
போல் வேடமிட்டவர்கள் அங்கிருந்தாலும் அவர்களில் யாரும் சஜிக்கு உதவிக்கரம் நீட்டவே
இல்லை.
“..........ஒரு மேதை, பகல் வேளை, கையில்
விளக்குடன்
சென்றாராம்……….மனிதனெங்கே காணவில்லை தேடுகிறேன் நான்
என்றாராம்."
Ranjini pleading for help from passers-by to save the life of the man, who fell down from the third floor of a lodge
ஆம்! இப்போதெல்லாம் மனிதர்களை
மனிதர்கள் போல் உள்ளவர்களிடையே தேடத்தான் வேண்டியிருக்கிறது. எப்படியோ தாய்மை குடி
கொண்டிருக்கும் பெண்மை, இங்கு மனிதர்கள் போல் உள்ளவர்களிடையே நான்குபேரை மனிதர்களாக
மாற்றுவதில் வெற்றி கண்டுவிட்டது. “இப்படித்தான் இருக்க வேண்டும் பெண்கள்!” என்று நிரூபித்த
ரஞ்சனியையும் விஷ்ணுப்ரியாவையும் வாழ்த்துவோம்! போற்றுவோம்! வணங்குவோம்!
படங்களும், காணொளியும் இணையத்திலிருந்து. நன்றி கூகுள்
.
------துளசிதரன்