ஞாயிறு, 9 அக்டோபர், 2016

தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகப் பொழுது போகிறது!!

கட்செவிக் குழுவில் (வாட்சப்பிற்குத் தமிழில் இப்படியான அர்த்தமா? புரியவில்லை) சமீப காலமாக வரும் பல செய்திகள் சிரிப்பை வரவழைக்கும் வகையில் உலா வருகின்றன. 

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் நம் மக்களுக்கு நன்றாகப் பொழுது போகிறது. மெல்லுவதற்கு நல்ல அவல் கிட்டியுள்ளது. மட்டுமல்ல பள்ளியில் படிக்கும் போது கூட வரலாற்றை இப்படிப் படித்திருப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால், இப்போது வரலாறு எல்லாம் பேசப்படுகிறது! 

யார் இப்படி எழுதி உலகம் முழுவதும் கட்செவிக் குழுவில் உலா வர வைக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இதை உருவாக்கியவருக்கு நல்ல கற்பனைவளம். நகைச்சுவை உணர்வு. நல்ல ஆராய்ச்சி. அது மட்டுமல்ல இவ்வளவு பெரிய செய்தியை எப்படி அவர் அலைபேசியில் அடித்தாரோ. நல்ல பொறுமைதான். இதோ அந்தச் செய்தி. கொஞ்சம் சேர்க்கப்பட்டதுடன்…

“கிமு 35 ஆம் ஆண்டு…..இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்…..கிரேக்க பேரரசர் ஜூலியஸ் சீசர் மரணப்படுக்கையில் இருக்க, அவரின் உடல்நலம் பற்றி வெளியே தெரிந்தால் அண்டை நாட்டு மன்னன் கிரேக்கத்தைக் கைப்பற்ற முயலக் கூடும் என்பதால் இரகசியமாக அரண்மனையில் வைத்தியம் நடக்கிறது.

“அரசர் நலம் பெற்று விரைவில் மக்கள் முன் தரிசனம் தருவார்” என அறிவிக்கிறார் பேரரசி கிளியோபாட்ரா.  இருந்தாலும் மக்கள் மத்தியில் கவலை.

மருத்துவக் கடவுளை நோக்கி ஓடுகிறார்கள். ஒலிம்பஸ் குன்றின் அடிவாரத்தில் மக்கள் குவிகிறார்கள். இருந்தாலும் குன்றின் மேல் ஏற மக்களுக்கு அனுமதியில்லை. கீழே இருந்தவாறே சூரியனைத் தொழுகிறார்கள். ஏனென்றால் சூரியனுக்கான கிரேக்கக் கடவுள்தான் மருத்துவத்திற்கும் கடவுள்.

மந்திரி பிரதானிகளுடன், தலைமை மருத்துவக் குரு குன்றின் மேலே ஏறி, மருத்துவக் கடவுளை நோக்கிப் பூசை செய்தார். திடீரென அவர் கண்களில் பிரகாசம். மந்திரிகள் வினா எழுப்ப,

“மருத்துவக் கடவுள் என் கண் முன் தோன்றினார். மன்னர் குணமாவார் எனக் கூறினார்.”

“எங்கள் கண்களுக்குத் தெரியவில்லையே” - மந்திரிகள்

“யாருடைய மனைவி பத்தினியோ அவர்கள் கண்ணுக்கு மட்டுமே தெரிவார்.” எனக் கூறிவிட்டு குரு புறப்பட்டார்.

மந்திரிகள் தங்களுக்குள், “இப்போது நம் கண்களுக்குத் தெரியவில்லை எனக் கூறினால் நம் மனைவி பத்தினி இல்லை என ஆகிவிடுமே. என்ன செய்வது” என்று பயந்துக் குழம்பினர். அதில் அனுபவசாலியான மந்திரி ஒருவர்,

“நாம் எல்லோருமே கடவுளைப் பார்த்துவிட்டதாகக் கீழே சென்று மக்களிடம் சொல்லிவிடுவோம்” என்று சொல்ல, எல்லோரும் கீழே வந்து மக்களிடம்,

“மருத்துவக் கடவுளைக் கண்டோம். மன்னர் விரைவில் குணமாகிவிடுவார் என்று கூறினார்.” என்று தெரிவித்தனர்.

இருந்தாலும் மக்களிடம் குழப்பம் நீடித்தது. தலைமைத் தளபதி வந்து மலையில் ஏறி தானும் கடவுளைக் கண்டதாகக் கூறினார்.

இதுதான் சாக்கு என மன்னனால் ஓரம்கட்டப்பட்டு இருந்தக் குறுநிலமன்னன் தாலாமாவல்ஸ் ஒலிம்பஸ் மலைக்கு வந்தார். மலையின் இரண்டாம் சுற்று வரை சென்றதாகவும், கடவுளைப் பார்த்தவர்கள் மன்னர் குணமாகிவிடுவார் எனக் கூறியதாகவும் சொன்னார்.
மன்னர் குணமானாரா இல்லையா….விரைவில்…

மர்மம் தொடரும்!!!! 

கிரேக்கப் புராணங்களின் படி மருத்துவக் கடவுளின் பெயர் என்ன தெரியுமா….?

“அப்போலோ”!!!!

இதனை மக்கள் எல்லோரும் ஒவ்வொரு குழுவிற்காகச் சொல்லச் சொல்ல இந்தச்செய்தி மீண்டும் எங்கிருந்து தொடங்கியதோ அந்த இடத்திற்கே… மருத்துவக் குருவின் செவிக்கே சென்றதாம்….

சீசரின் காலத்தில் தோன்றிய இச்செய்தி செவி வழியாக, வழி வழியாகச் சொல்லப்பட்டு இப்போது தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் காலகட்டத்தில் கட்செவி வழியாக மீண்டும் முக்கியமானவர்களின் கட்செவியில் வந்து விழ….கவலை தோய்ந்த முகத்தில் கூடச் சிரிப்பு அரும்பியதாம்.!!!!

“தம்பி அந்த சிவகார்த்திகேயன் தம்பிய நர்ஸ் கெட்டப்புல அப்போலோ ரெண்டாவது ஃப்ளோருக்கு அனுப்பி என்னனு பார்க்கச் சொல்வோமா” இது யாருடைய வசனமாக இருக்கும் என்று நீங்களே கண்டுபிடித்துவிடுவீர்கள்!!

“நீண்டகாலம் தங்கியிருக்கணுமா??? அப்போலோக்காரன் சொத்தையே எழுதி வாங்கிருவானே??
ஆனா, அதுல பாருங்க உள்ளார போயிருக்குறது அப்போலோவையே………………….சரி விடுங்க…. செம்ம டிவிஸ்ட்ல..”

எப்படியோ மக்களுக்கு நல்ல பொழுது போக்கு.

(இதன் உரிமையாளருக்கு நன்றி..)

---கீதா





25 கருத்துகள்:

  1. ஆம் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே மக்களுக்கு நல்லாவே பொழுது போகின்றது நானும் இவர்களின் (கட்செவி) கற்பனையை நினைத்து ஆச்சயர்யப்பட்டு இருக்கின்றேன்

    த.ம.1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இதில் வரும் தகவல்கள் எதுவும் நம்ப முடியாது கில்லர்ஜி சகோ. சும்மா சிரித்துவிட்டுப் போகலாம் அவ்வளவே. செய்திகள் என்று வருவதைக் கூட நம்ப முடியாது. ஆதாரமற்றச் செய்திகள் எது உண்மை எது பொய் என்று தெரியாது. யாரேனும் ஒருவர் எங்கிருந்தோ கிளப்பிவிட அது சுற்றுகிறது...

      மிக்க நன்றி

      நீக்கு
  2. இந்த தகவல்களை பேஸ் புக்கில் பார்த்தேன் இப்படியே எல்லாம் சிந்திக்கிறார்கள் ஆனால் பல செய்திகள் வலை தலங்களில் இருந்து திருடப் பட்டு வாட்ஸ் அப்பீல் பகிர படுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ இப்படியும் நடக்கிறதா...மக்கள் பலே கில்லாடிகள்தான் போல..ஆனால் இதில் வரும் எந்தச் செய்தியும் உண்மையாக இல்லை சும்மா ரசிப்பதற்கு மட்டும்தான் என்பது மட்டும் புலனாகிறது

      நீக்கு
  3. சீசரின் கதையைக் கொஞ்சம் உண்மையென்றே நம்பிவிட்டேன்..:)

    கட்செவி.....! வாட்ஸ்ஆப் பிற்குத் தமிழில் பரவலாக்கப்பட்டுள்ள பெயர்.

    ஆனால் தமிழில் கட்செவி என்பது பாம்பினைக் குறிக்கும் பெயர்.

    ஆதாரம் கேட்கமாட்டீர்கள் எனத்தெரியும். இருந்தாலும் இணையத்து இல்லாத பாடல் ஒன்றை இதைச் சாக்கிட்டுப் பதிவேற்றுகிறேன்.

    “திருடர்க்கு விடமெலாங் கையிலே! காமமிகு
          தெரிவைக்கு விட*********!
       தீயபொய்யர்க்கு விடநாவிலே! மதமுடன்
          திரிவோர்க்கு விடநிதியிலே!
    கருதரிய கோளர்க்கு விடமுதடு தன்னிலே!
          காமுகர் விடங்கண்ணிலே!
       கட்செவி விடங்கள்பல் லடியிலே! தேட்கெனின்
          கனவிடங் கடைவாலிலே!
    அரிய துட்டர்க்கென்னில் எட்டிமரமென்னவே
          அங்கமெல்லாம் விடமதாம்!
       அடுத்துக் கெடுத்திடும் பகைவர்விடம் மனதிலே!
          அம்பொன் விலைமாதர்க்கு
    மருவுமிட******** தெரியவச மென்பர்காண்!
          மணவாள நாராயணன்
       மனதிலுறை அலர்மேலு மங்கைமண வாளனே!
          வரதவேங் கடராயனே!”

    தணிக்கை என்னாற் செய்யப்பட்டது.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ வாட்ஸ் ஆப்பில் வரும் செய்திகள் அத்தனையும் இப்படிப்பட்டக் கற்பனைச் செய்திகள் தான். மட்டுமல்ல உண்மையான செய்தி வந்தால் கூட அதை நம்பலாமா இல்லை யாரேனும் கிளப்பிவிட்டச் செய்தியோ என்று நம்பகத்தன்மை இல்லாமல் போகின்றது.

      கட்செவி என்றால் பாம்பு என்ற பொருள் உண்டு என்பது தெரியும் என்றாலும் வாட்ஸ்ஆப்பிற்கு ஏன் தமிழில் இந்தப் பெயரை வைத்தார்கள் என்று தெரியவில்லை. வாட்ஸ் ஆப் என்பது கூகுள் என்பது எப்படியோ அப்படித்தானே. கூகுள் என்பதற்குத் தமிழில் வார்த்தை சொல்ல முடியாது என்பது போல் வாட்ஸ் ஆப்பிற்கும் இருக்க முடியாது தானே. அதனால்தான் எனக்கு இந்தச் சந்தேகம் வந்தது. ஆதாரம்...ஹஹஹ்ஹஹஹ்ஹ்

      கட்செவி எனும் வார்த்தை வரும் பாடலைப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி சகோ. பாடலை இதுவரை வாசித்ததில்லை. பாடலின் அர்த்தம் புரிகின்றது. தங்களால் தணிக்கை செய்யப்பட்ட ஓர் பாடல் அதான் **** இந்தக் குறி வரும் இடத்து வார்த்தைகளை அப்படித்ட் தந்துள்ளீர்கள் இல்லையா..

      புதியதாய் பாடல் ஒன்று பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ. எப்போதுமே தங்கள் கருத்துகள் புதியதாய் ஒரு விடயத்தைத் தாங்கி வரும்! மிக்க நன்றி...

      நீக்கு
  4. சுவாரஸ்யம்தான்! எனக்கும் வந்தது. அப்பல்லோ இனி அம்மலோ என்று அழைக்கப்படும் என்கிற செய்தி உடனே சிரிப்பை வரவழைத்தது. மக்கள் ஜாலியானவர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பலோ - அம்மலோ அஹஹஹ்ஹஹ் நான் இதை வாசித்துச் சிரித்து முடியவில்லை...மாறினாலும் மாறலாம் அந்தக் கவுண்டமணி படமிட்டுச் சொல்லும் நகைச்சுவைக்குச் சொந்தக்காரர் சொல்லியிருப்பது போல்...ஹஹஹ்

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. இவர்களின் கற்பனைத்திறன் அபாரம். நான் ஜூலியஸ் சீஸரின் கதையை உண்மை என்றே நம்பினேன். பலரின் எழுத்துக்கள் நம்மை சிரிக்க வைக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் சம்பத் தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி. உண்மைதான் அப்படி வெளியிடும் சொந்தக்காரர் தன் பெயரை ஏன் குறிப்பிடுவதில்லை என்று தெரியவில்லை. ஒரு வேளை மதுரை சகோ சொன்னது போல் யாரேனும் ஏற்கனவே வேறு தளங்கலில் வெளியிட்டிருப்பதை வெளியிடுவதாலோ என்னவோ. எப்படியோ வாட்ஸ் ஆப்பில் இருப்பவர்களுக்குத் தினம் தோறும் சிரிப்பதற்கு ஏதேனும் கிடைக்கிறது....

      மிக்க நன்றி

      நீக்கு
  6. சரியான நேரத்தில் சரியான பதிவு. அப்போலோ என்றால் கிரேக்க கடவுள் என்று தெரியும். அந்த கடவுளின் பின்னணியிலும் இத்தனை கதைகள் இருப்பது தெரியாது. பகிர்ந்ததற்கு நன்றி!
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ கடவுள் சரியே கதைகளே கற்பனைதான் என்றாலும் இந்தக் கதை வரலாற்றில் இல்லாதகதை சகோ!!!! மிக்க நன்றி

      நீக்கு
  7. உங்கள் வலைத்தள வாயிலாக இப்போது கேள்விப்படுகிறேன் நன்றி

    பதிலளிநீக்கு
  8. எனக்கு ரொம்பக் கொஞ்சமாக வாட்ஸப்பில் இந்த மாதிரி வம்புகள் வரும். படிக்க சுவாரசியமாக இருக்கும்.

    தமிழன் எல்லாவற்றையும் எளிதாக, சிரித்துவிட்டுக் கடந்துவிடுவதால் சமயத்துல சூடு சொரணை வரவேண்டிய நிகழ்வுகளையும் சிரித்தே கந்துவிடுகிறோம். தார்மீகக் கோபமே வரமாட்டேன் என்கிறது.

    பதிலளிநீக்கு
  9. இது உண்மையோ கற்பனையோ ரசிக்க வைக்கிறது !நாடகம் முடிவுக்கு எப்போ வருமோ :)

    பதிலளிநீக்கு
  10. அபாரமான கற்பனை! உண்மை நிலவரமே இதுதான். நான் கொஞ்ச காலமாக வாட்சப் பயன்படுத்துவதில்லை. அதானல் இது என் பார்வைக்கு வரவில்லை. பகிர்ந்ததற்கு நன்றி!

    வாட்சப்புக்குக் ‘கட்செவி’ என்று பெயர் வைத்த அந்தத் தமிழறிஞன் யார் என்று தெரியவில்லை. தெரிந்தால் முதுகிலே இரண்டு போடலாம். காரணம், கட்செவி என்றால் தமிழில் ’பாம்பு’ என்று பொருள். அது கூடத் தெரியாமல் யாரோ ஆர்வக்கோளாற்றுக்காரன் ஒருவன் இப்படிப் பெயர் வைத்திருக்கிறான். இந்தப் பெயரைப் பயன்படுத்த வேண்டா! தவிர, வாட்சப் என்பது குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயர். அதாவது, அது பெயர்ச்சொல். பெயர்ச்சொற்களை ஒலிபெயர்ப்புதான் செய்வார்களே தவிர மொழிபெயர்க்கும் வழக்கம் உலகின் எந்த மொழியிலும் கிடையாது. தமிழ்நாட்டில்தான் புதிதாக அப்படி அறிவாளிகள் சிலர் தோன்றித் தமிழுக்குக் கெட்ட பெயர் வாங்கித் தந்து கொண்டிருக்கிறார்கள். :-(

    பதிலளிநீக்கு
  11. எங்க பொழுது போகிறது...ஒரே எரிச்சலாய் இருக்கிறது..சொன்னதுவையே திரும்ப திரும்ப சொல்லிகிட்டு.........

    பதிலளிநீக்கு
  12. வாட்ஸ்அப் முகநூலில் வரும் செய்திகள் பாதி பொய் என்றாலும் சிலவற்றை ரசிக்கலாம்... ஆனாலும் இதை வாட்ஸ் அப் நண்பர்கள் அனைவரும் மாற்றி மாற்றி அனுப்பும்போது வலிப்போக்கன் அய்யா சொன்னது போல் எரிச்சல் வருகிறது...

    பதிலளிநீக்கு
  13. WhatsAppல் எவருடனும் கூட்டு கிடையாது.. ஆனாலும், விடாது கருப்பு என்று எனது Fbயில் வந்திருக்கின்றன...

    அன்றைக்குப் படித்ததோடு சரி.. இப்போது தங்களால் மறுபடியும் ரசிக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
  14. நானும் இவற்றைப் படித்தேன்.... இன்னும் இதை வைத்து எத்தனை நகைச்சுவை துணுக்குகள் வருமோ....

    பதிலளிநீக்கு
  15. பெரியதம்பி நாடகத்தில் தெருப்புழுதி என்று ஒரு கேரக்டர். அவரது காதலி செத்துப் போயிருப்பாள். அவர் உடனே பெரிய தம்பியிடம்
    "பெரிய தம்பி, என்னோட காதலி இன்னும் என்கூடவே இருக்கா"

    அதுக்கு பெரிய தம்பி "என்ன வீட்டிலேயே பொணத்த வெச்சிருக்கியா"


    பதிலளிநீக்கு
  16. மேடம் நீங்கள் சொல்வது சரிதான். தமிழ்நாட்டு மக்களுக்கு தினமும் ஏதாவது ஒரு பரபரப்பு செய்தி வேண்டும். அந்த வகையில் இந்த மாதிரியான கதைகளால் நன்றாக பொழுது போகத்தான் செய்கிறது.

    கட்செவி என்று கஷ்டப்பட்டுக் கொண்டு இராமல் ’வாட்ஸ்அப்’ என்று சொல்லிச் செல்வதே சரியானது. ஒரு பெயர்ச்சொல்லை அந்த பெயராலேயே அழைப்பதுதான் முறை.

    பதிலளிநீக்கு
  17. வாட்ஸப்பெல்லாம் குழுவோடு இணைந்து கொண்டு பயன்பெறாவிட்டாலும், (!!!!) இம்மாதிரிச் செய்திகள் வரத்தான் செய்கின்றன! :) இதையும் ரசிக்க வேண்டியது தான்!

    பதிலளிநீக்கு