எனது சமீபத்திய
அனுபவம் இந்தப் பதிவை எழுதத் தூண்டி, ஆரம்பித்து, பல நாட்களாக எழுதி முடித்துப்
பதிவிட வேண்டும் என்று நினைத்து, பாதியில் தடைபட்டு நிற்க, இன்று எப்படியேனும் எழுதி முடித்துப் பதிவிட வேண்டும் என்ற
ஆர்வம் உந்தக் காரணமாயிருந்த டாக்டர் பழனி.கந்தசாமி ஐயா அவர்களுக்கு http://swamysmusings.blogspot.com/2015/04/blog-post_26.html எங்கள்
முதற்கண் நன்றி.
தோழியைப்
பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டதே என்ற ஆர்வத்திலும், காணப் போகின்றோம் என்ற
மகிழ்விலும், எனக்குச் சற்று நேரம் கிடைத்தக் காரணத்தால் பார்க்கச் சென்றேன். காலை 11 மணிக்கு. போன நேரம் ராகு/எமகண்டம்
போலும். ஏதோ ஒரு தொடரில் அர்த்தமற்ற, அநாகரீகமான வசனங்கள், காதைப் பிளக்கும்
சப்தங்கள் என்று தொடர் ஒன்று ஓடிக் கொண்டிருக்க, நான் வாயிலில் சென்று நின்றது கூடத்
தெரியாமல் எனது தோழி தொடரில் ஆழ்ந்திருக்க, நான் அப்படியே திரும்பி விடலாமா என்று
நினைத்தேன். அப்பொது அவர் அருகில் இருந்த
ஃபோன் ஒலிப்பது திரை ஒளிர்ந்ததில் தெரிந்தது. அவர் அதைக் கூட கவனிக்கவில்லை.
நான்
திறந்திருந்த கதவைத் (க்ரில்லுடன் கூடிய கதவு) தட்டியதும், என் தோழி அந்தப்
ஃபோனைக் கட் செய்துவிட்டு, என்னைத் தலையால் அசைத்து வா என்று சொல்லி விட்டு
மீண்டும் தொடரில் ஆழ்ந்துவிட்டார். இடைவேளையின் போது, தொடரப் பற்றிப் பேசத்
தொடங்கினார். நான் செய்த தவறு அவரைத்
தொலைபேசியில் அழைத்து அப்பாயின்மென்ட் வாங்கிக் கொண்டுச் செல்லாதது. ஆனால்,
அதுவும் பயன் இல்லை என்பது அப்போதுதான் தெரிந்தது. காலை 10 மணிக்கு ஆரம்பித்தால் மதியம் 2.30 மணி
வரையாம். பின்னர் மாலை 5 மணிக்கோ இல்லை
5.30 க்கோ ஆரம்பித்தால் இரவு 11 மணி வரையாம்.
எனக்கு இருப்புக் கொள்ள வில்லை. சரி
கிளம்புகின்றேன் என்று நான் சொன்னதும், அவரும், “சரி அப்புறம் எப்போ டைம்
கிடைக்குதோ வா” என்று சொல்ல நான் மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். எனக்குத்
தொடர்கள் என்றாலே அலர்ஜி. டீவி பார்ப்பது வெகு அபூர்வம். இப்போது எங்கள் வீட்டில் கேபிளும் கிடையாது. நானும்
எனது மகனும் பார்க்க விரும்புவதை இணையத்தில் பார்த்துக் கொள்கின்றோம். எங்கள் வீட்டிற்கு
வரும் விருந்தினர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்.
பெண்கள் ஆண்களை
விட மிகவும் புத்திசாலிகள் என்று பொதுவாகச் சொல்லப்படுவது உண்டு. அதனால்தான் பல
குடும்பங்களில் பெண்கள்தான் அதாவது, அம்மாக்கள்/மனைவிகள்
தான் நிதி மந்திரிகளாக இருப்பதுண்டு.
சேமிப்பிலும் சரி, குடும்பத்தை அழகாக நிர்வகித்துக் கொண்டு செல்வதிலும் சரி.
பெண்கள்
போற்றப்பட வேண்டியவர்கள் என்று பேசும் இதே சமூகத்தில், பெண்களைத் தற்போது வரும்
தொலைக்காட்சித் தொடர்கள் வில்லிகளாகவோ இல்லை என்றால் அடிமைகளாகவோ, தியாகச்
சுடர்களாகவோ மிகைப்படுத்திக் காட்சிப்படுத்தியும் வருகின்றன. அதுவும் பெரும்பான்மையான
தொடர்கள் பெண்களை மையமாகக் கொண்ட தொடர்கள் என்பதால், அதில் பெரும்பான்மையான ஆண்களையும்
மோசமானவர்களாகக் காட்சிப்படுத்துகின்றன. அர்த்தமற்ற, அநாகரீகமான வசனங்கள்
பெரும்பான்மையான வீடுகளின் வரவேற்பரையில் அனுமதி இல்லாமலேயே நுழைந்துவிட்டன. வாயிலில் வருவோர் யார் என்பது கூடத் தெரியாமல்,
வந்தவர்களிடம் நாலு நல்ல வார்த்தைகள் பேசுவதைக் கூட மறந்து, அப்படியே பேசினாலும்
அந்தத் தொடரில் அப்போது நடந்த நிகழ்வையும், கதையையும் பேசும் அளவிற்கு இந்தத்
தொடர்களும் பெண்களின் மனதை வசப்படுத்தி வைத்துள்ளன என்றால் மிகையல்ல.
எனக்கு என்ன
ஆச்சரியம் என்றால், பெண்களைக் கேவலமாக உருவகப்படுத்திக் காட்டும் தொலைக்காட்சித்
தொடர்களுக்குப் பரம ரசிகைகளாகி இருப்பதும் பெண்களே. இந்தத் தொலைக்காட்சித்
தொடர்களால் பல குடும்பங்களில் மன உளைச்சல்கள் ஏற்படுவதும், அதில் பேசப்படும் வசனங்கள்
பல குடும்ப பெண்களாலும், குழந்தைகளாலும் பேசப்படுவது பற்றியும் பல குரல்கள் எழும்
வேளையில், நானும் அதை நேரடியாகவும் காண நேர்ந்தது. அதில் வரும் கதாபாத்திரங்களையும்,
நிகழ்வுகளையும், கதையையும் கூட தங்கள் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்
நிலைமை. இது தானே ஒவ்வொரு வீட்டிலும் நடக்கின்றது என்று வேறு பேசப்படுகின்றது.
அப்படியென்றால்
பெண்கள் தாங்கள் அப்படித்தான் என்பதை ஒப்புக் கொள்கின்றார்களா? இந்தத் தொடர்களைக்
காணும் பெண்கள் - மாமியார்கள்,
மருமகள்கள், நாத்தனார்கள், மகள்கள் எல்லோருமே அந்த இடத்தில் தங்களை நிறுத்திப்
பார்க்கின்றார்களா? அதைச் சரி என்கின்றார்களா? பெண்களே தங்களை இது போன்று
வில்லிகளாகவும், காட்டுவதை ஏற்றுக் கொண்டு, நாங்கள் அப்படித்தான் என்று ஒத்துக்
கொள்கின்றார்களா? எனக்கு அப்படித்தான் என்று தோன்றுகின்றது. அதைச் சற்று விரிவாக,
உளவியல் ரீதியாகச் சிந்தித்துப் பார்த்தால் பெண்கள் ஏன் இதை விழுந்து விழுந்து
பார்க்கின்றார்கள் என்ற காரணம் என்னவென்றால், ஃபேண்டசி! அதாவது பெண்கள் தங்கள் யதார்த்த
வாழ்க்கையில் செய்ய நினைத்துச் செய்ய இயலாததை அந்தத் தொடர்களில் வரும் பெண்கள்
செய்வது போல் காட்டப்படுவதால் அந்த ஃபேண்டசி/கற்பனை உலகிற்குள் சென்று மனது
லயித்து, அந்தக் கதாபாத்திரத்தில் தங்களை உட்படுத்தி ஒரு திருப்தி அடைகின்றார்க்ளோ?.
கற்பனை உலகிற்கு அழைத்துச் சென்று விடுகின்றதால், பெண்கள் அதனை அப்படி ஆழ்ந்து
பார்க்கின்றதாகத்தான் தோன்றுகின்றது.
உதாரணமாக, ஒரு
பெண் தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது அவளது கைப்பையை ஒருவன் அடித்துச்
சென்றுவிடுகின்றான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
யதார்த்த வாழ்க்கையில் எத்தனைப் பெண்கள் அவனைத் துரத்திச் சென்று,
பிடித்தும் அடித்து மீட்டுக் கொண்டு வருவார்கள்? அதையே தொடரில் அந்தப் பெண் செய்வது
போல் காட்டும் போது, அதைப் பார்க்கும் பெண்களுக்கு ஒரு மனத் திருப்தி. தாங்கள்
செய்ய முடியாததை அந்தப் பெண் செய்கின்றாள் என்று.
ஒரு ஹீரோயிசம் போன்று. என்றாலும்......
அதில் வரும்
வசனங்கள் பல மிகைப்படுத்தப் பட்டவையாகத் தெரியவில்லையா? அநாகரீகமான வசனங்கள். அறிவிற்கு
அப்பாற்பட்ட வசனங்கள். அப்படியே நடைமுறையில் கூட அது போன்று பேசப் பட்டாலும்,
அதற்குத் தீர்வு நாம் காண மாட்டோமா நம் குடும்பங்களில்? தொடர்களில் அந்த வசனங்கள் பேசப்பட்டு அது
மேலும் மேலும் குடும்பங்களில் குழப்பங்களையும், பிரச்சினைகளையும் வளர்ப்பது போல்
தான் காட்டுகின்றார்களே தவிர அதற்கு அறிவு பூர்வமான தீர்வுகள் உண்டு என்பதை
ஆராய்வதாகத் தெரியவில்லையே. பெண்கள் எப்போதுமே உணர்வு பூர்வமாகத்தான்
சிந்திப்பார்களா? அறிவாளிகள் இல்லையா? ஒன்று
அழுகை, தியாகம், பொறுமை, இல்லை என்றால், அல்லக்கை, வில்லித்தனம், இவைதான்
பெண்களின் அடையாளங்களா? அறிவு பூர்வமாக, சுயமாகச் சிந்தித்தால் பிரச்சனைக்களுக்குத் தீர்வு
எளிதாகக் கிடைக்குமே
இப்படிப்
பிரச்சனைகளை ஒரு குடும்பத்திற்குள் அர்த்தமற்று வளர்ந்து கொண்டு போவது போல,
வளர்த்துக் கொண்டே பல ஆண்டுகள் தொடரும் இந்தத் தொடர்கள் வியாபாரத்திற்காக என்பது
ஏன் பெண்களுக்குத் தெரியவில்லை? என்றாலும்,
இந்த
அழுவாச்சித் தொடர்களைப் பார்ப்பதற்குப் பதிலாகத் தங்கள் பொன்னான நேரத்தை எவ்வளவு
ஆக்கப்பூர்வமாக்கிக் கொள்ளலாம்? பொழுது போவதற்காக என்று சொல்லும் சப்பைக் கட்டுகளைக்
காரணங்களாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
பொழுது போவதற்கு எத்தனையோ நல்ல விசயங்கள் இருக்கின்றன. இந்த அழுவாச்சித் தொடர்களைக் கண்டு அவர்களின்
வியாபாரத்தைப் பெருக்குவதை விட உங்கள் குடும்ப நிதியைப் பெருக்கிக் கொள்ள வழி
தேடலாமே பெண்களே! உங்களை அறிவு பூர்வமாக உயர்த்திக் கொள்ளுங்களேன்!
பெண்ணீயம்
பேசும் பெண்கள் குழுக்கள், சங்கங்கள், இயக்கங்கள் எல்லாம் பெண்கள் தினத்தைக்
கொண்டாடுவதில் காட்டும் ஆர்வத்தையும், பெண்களுக்காகப் போராட்டங்கள் நடத்துவதில்
காட்டுவதையும் ஏன் இதைப் பற்றிப் பேசுவதில் காட்டுவதில்லை? குரல் கொடுப்பதில்லை
என்பது ஆச்சரியமாக இருக்கின்றது. அவர்களும் இதை ஆமோதிப்பது போல் தான்
இருக்கின்றது. மொத்தத்தில் சமுதாய
உறவுகள், நட்புகள், குடும்பங்கள் கெட்டு வருவது நிதர்சனமாகத் தெரிகின்றது.
இதற்கு யார்
முற்றுப் புள்ளி வைப்பார்கள்? பெண்கள்தான் வைக்க வேண்டும். அறிவை மழுங்கவைக்கும் இந்தத் தொடர்களைப் புறக்கணிப்பதன் மூலம். பெண்களே சற்று சிந்தியுங்கள்! சுயமாகத் சிந்திக்கும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்! உங்களுடைய வாழ்க்கையை அடுத்த வீட்டாருடனோ, தொலைக்காட்சித் தொடருடனோ ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அவை எல்லாமே மிகைப்படுத்தப்பட்டவை என்பதை உணருங்கள்! சிந்தியுங்கள் அறிவுபூர்வமாக!
ஆக்கப்பூர்வமாக!
நம் ஆண்
பதிவர்கள் கூட இதைப் பற்றி எழுதித்தான் வருகின்றார்கள். மதுரைத் தமிழன் கூட
எழுதியிருந்தார் கந்தசாமி ஐயாவின் பதிவில் பின்னூட்டத்தில்
“இப்படி
பெண்கள் அதிகம் சீரியல்கள் பார்ப்பதால்தான் நம்மால் அந்த நேரங்களில் பதிவுகள் எழுத
முடிகிறது என்பதை சொல்ல மறந்துட்டீங்களே ஐயா”.
என்று. ஹ்ஹ்ஹ் சரிதான். (பெண்கள் திரண்டு எழுந்து, சீரியல் நின்று விட்டால், ஐயோ! தமிழா,
ஆண்களால் எழுத முடியாமல் ஆகிவிடுமோ!!!!!) திரு.
அமுதவன் அவர்களும், திரு இக்பால் செல்வன் அவர்களும் மிக அழகான கருத்துகளைச் சொல்லி
இருந்தார்கள். கந்தசாமி ஐயா அவர்கள் ஒரு சங்கம் ஆரம்பிக்க வேண்டும் போல
உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். வைகோ
சாரும், மதுரைத் தமிழனும் அதில் துண்டு போட்டு விட்டார்கள். இடம் இன்னும்
இருக்கும் என்று நினைக்கின்றேன்! வேறு
ஒன்றும் இல்லை எங்களையும் அந்தச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளத்தான். பெண்களுக்கு
இடம் உண்டு அல்லவா?!
பெண்களே சற்று சிந்தியுங்கள்!
பின் குறிப்பு: தமிழ் சீரியல்கள் என்று கூகுள் செய்து இமேஜஸ் சென்றேன் ஏதேனும் ஒரு படத்தை எடுத்துப் போட......அம்மாடியோவ்! இத்தனை சீரியல்களா!? நான் "ஆ" என்று பிளந்த வாய்தான்! எப்படி பொன்னான நேரம் கொல்லப்படுகின்றது. அன் ப்ரொடக்டிவாகிக் கொண்டிருக்கின்றது என்று வேதனையாகவும் இருக்கின்றது. படம் போடும் எண்ணத்தைக் கைவிட்டேன்.
---கீதா (மீண்டும் கந்தசாமி ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி. நான் இதை எழுதி முடித்துப் பதிவிட உந்துதலாக இருந்தமைக்கு)
படங்கள் : கூகுள்