மனம் குரங்காய் மாறிய அந்த நிமிடங்கள்
இது இருபதாவது நடை. நான் வீட்டின் உள்ளும் வெளியுமாக நடந்து கொண்டிருக்கின்றேன். கண்கள் வெளியே வாசற்கதவைத்
தாண்டி தெரு முனையையே பார்த்துக் கொண்டிருக்கின்றது. எல்லாம் என் குழந்தையைக் காணாமல்தான். குழந்தை என்றதும், ஏதோ எல்.கே.ஜி படிக்கும்
குழந்தை என்று நினைத்து விடாதீர்கள்.
எட்டாம் வகுப்பு படிக்கும் பதின்மூன்று வயது பையன். அதனால் என்ன?
எத்தனை வயதானாலும் அம்மாவிற்கு குழந்தை, குழந்தை தானே! ஆனால், சைக்கிளில்
சென்றுள்ளதால் இந்தக் கவலை. 4.15 மணிக்கு பள்ளி முடியும்
நேரம். சரியாக 4.45 மணிக்கு அம்மா
என்று அழைத்துக் கொண்டே வந்து நிற்பான்.
ஆனால் இன்று மணி 5.30 ஆகியும் வரவில்லை. நாங்கள் இருப்பது சென்னையின் போக்குவரத்து
நெரிசல் அதிகமான பகுதியில். அவனது
பள்ளியும் அதுபோன்ற பகுதியாதலால் நெரிசலான இடம் வழியாகத்தான் செல்ல வேண்டும். ஒரு பக்கம் உதடுகள் கடவுளைப் பிரார்த்திக்க, மறு பக்கம் மனம் தவிக்க, தெருவைப் பார்த்தபடியே “ அதோ ஸ்கூல் யூனிஃபார்ம்…….சைக்கிள்…..குழந்தையேதான்……தவிப்பு அடங்கும் நேரம்……….அந்த சைக்கிள் அருகில் வர வர…..ஓ….என் பையன் இல்லை……..மனதில் ஏமாற்றம்………மறுபடியும் தவிப்பு………
ட்ரிங்க்…….ட்ரிங்க்…..இது………என்ன………..இந்த நேரத்தில்
டெலிஃபோன் அடிக்கிறது? நம் வீட்டில்தானோ? ஒருவேளை ஸ்கூல் டீச்சர்?
ஹலோ……..இந்த நம்பர்……...தானே……..நான் ஸ்கூலில்
இருந்து உங்கள் மகனின் டீச்சர் பேசறேன்….உங்கள் பையன் அடிபட்டு
ஹாஸ்பிட்டலில்……………
ஐயோ!.......என் குழந்தைக்கு
என்னாயிற்று? ஹாஸ்பிடலுக்கு ஓடுகிறேன். ஹாஸ்பிட்டல் வாசனை…………..நர்சுகள் அங்குமிங்கும் வேக வேகமாக நடக்கின்றார்கள்..... என் பையனுக்கு என்னாயிற்று? யாரும்
ஒழுங்காகப் பதில் சொல்லத் தயங்குகிறார்களே. இது என்னக் கொடுமை?.....இறைவா என் செல்லக் குட்டிக்கு
எதுவும் ஆகியிருக்கக் கூடாது…….யாரிடம் கேட்பது அவனுக்கு என்னாயிற்று என்று…….இறைவா…………………………
அம்மா…….அம்மா……….... ..இதுஇது…….என் செல்லக் குட்டியின் குரல் போன்று உள்ளதே! ஹாஸ்பிட்டலா இல்லை வீடா ஐயோ! எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறதே………………..
ட்ரிங்க்……ட்ரிங்க்……ஓ! இன்னும் டெலிஃபோன் அடிக்கின்றதே…………………எடுக்கின்றேன்…
ஹலோ!..............ஹலோ! நல்லசிவம் வீடுங்களா?.......................இல்லீங்க இது
ராங்க் நம்பருங்க. பெருமூச்சுவிட்டபடி
ஃபோனை வைத்துவிட்டுத் திரும்பும் சமயம்.
“அம்மா. ஸாரிம்மா நான் காலைல சொல்ல மறந்துட்டேன்…இன்னிக்கு
லேட்டாகும்னு. இன்னிக்கு
கேம்ஸ்ல, ரிலே டீமுக்கு செலெக்ஷன் மா……..அதான் லேட்டு”. என் மகனைப் பார்த்ததும் எனக்கு சந்தோஷத்தில் என்ன சொல்வதென்று
தெரியவில்லை.
“என்னம்மா, என்ன இப்படிப் பார்க்கற…….நான் என்ன
சின்னக் குழந்தையா? கேர்ப்ஃபுல்லாதான் வருவேன்மா. பயப்படாதம்மா”
என்ற பதிலில் எனக்கு மன உறுதி வந்தாலும், அந்த சில நிமிடங்களில்……………….தமிழ் படங்களில்
வருவது போல வேக வேகமாக காட்சிகள் மனத்திரையில் விரிந்ததே…………….ஓ! இத்தனையும் நான் டெலிஃபோன் ரிசீவரை எடுக்கும் முன்………………என்னென்ன விபரீதமான
எண்ணங்கள் மனதைக் குரங்காக மாற்றி மரத்துக்கு
மரம் தாவ வைத்தது. எல்லாம் என் செல்லக் குட்டியின் ‘அம்மா’ என்ற வார்த்தையைக்
கேட்டதும் சூரியனைக் கண்ட பனி மூட்டம் போல் மறைந்தே போனது.
அந்த ஒரு சில நிமிடங்களில் என் மனம் எப்படித்
தாவி தாவி அலை பாய்ந்தது? என்னென்ன எதிர்மறையான
எண்ணங்கள் மனதில் தோன்றின என்று இப்போது நினைக்கும் போது சிரிப்புதான் வருகின்றது. இதைத்தான் “மனம் ஒரு குரங்கு”
என்று சொல்லுகிறார்களோ? எப்பொழுதோ ஏதொ ஒரு புத்தகத்தில் பொன்மொழியாகப் படித்த ஞாபகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக