வியாழன், 28 நவம்பர், 2013

ஜெகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன்(மக்கள்) எந்திரம் சிவ சம்போ!!!!! “Breaking news  என்று ஒரு ஆங்கிலச் சானலில், ஆங்கிலத்தில் செய்தி வாசித்த ஒரு பெண், தமிழ் பெயரை தத்தக்கா பித்தக்கா என்று கடித்துக் குதறி, 2004 ஆம் ஆண்டு, காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதியான காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதியும், அவருக்கு அடுத்து மடாதிபதியாகவிருக்கும் விஜயேந்திர சரஸ்வதியும், சங்கர ராமன் கொலைவழக்கில் சிக்கி, அந்த வழக்கிலிருந்து, இன்று, அந்தக் காஞ்சி காமாட்சியின் கடைக்கண் பார்வை பட்டு, அவளது அருளால் விடுதலையானார் என்று காஞ்சி மடத்து மடாதிபதியின் சிஷ்யகோடிகளுக்குக் காதில் தேன் பாயும் செய்தியைச் சொல்லிக்கொண்டிருந்தார்!  அவர் குற்றவாளியா, இல்லையா என்பதை நான் இங்கு ஆராயவில்லை. அது என் தொழில் அல்ல. ஆனால், ஆன்மீகம் என்ற பெயரில், ஒரு மடாதிபதியாக இருக்கும் ஒருவர் இது போன்ற செய்திகளில் இடம் பெறாமல், தன் எல்லைக் கோட்டுக்குள் இருப்பது அவசியம். நெருப்பில்லாமல் புகையாது என்பர். அவர் தன் எல்லைக் கோட்டைக் கணக்கில் கொண்டு சிவனே என்று, அரசியலில் தலையிடாது, மூக்கை நுழைக்காது, தான் என்ன பொறுப்புள்ள இடத்தில் இருக்கிறோம் என்பதை மனதில் கொண்டு இருந்திருக்க வேண்டும். எப்பொழுது அவர் அந்தக் கோட்டைத் தாண்டினாரோ, அன்றிலிருந்து, அவர் செய்திகளில் வரத் தொடங்கிவிட்டார். அதுவும் பெண்கள் தொடர்பாகவும். அது உண்மையா, பொய்யா என்பதை விட, அது போன்ற ஒரு செய்தி வருவதற்கு இடம் அளித்தது,  ஒரு மடாதிபதிக்குத் தேவையில்லாத ஒன்று.  ஆன்மீகத்திற்கே இழுக்கு.


     ஆன்மீகம் என்ற போர்வையில் உலவும் சாமியார்களும் நம் நாடும் இரண்டறக் கலந்தவை. அதில் நம் நாடு வல்லரசு! பெண்ணரசு, பொன்னரசு, நிதியரசு, காமஅரசர்களைச் சுமக்கும் புண்ணிய பூமி??!!. கேரளாவில், சந்தோஷ் மாதவன் என்னும் ஒரு சாமியார், அமிர்தா சைதன்யா எனும் பெயரில் உலவினார். இவர் கொஞ்சம் இன்டெர்நாஷனல் ஃப்ராட் சாமியார். UAE தேடிய சாமியார்.  இவர் சாந்திதீரம் எனும் ட்ரஸ்டை தன் பெயரிலும், தன் பெற்றோர் பெயரிலும் நடத்தி வந்திருக்கிறார்.  இந்த நூதனச் சாமியார் வயதுக்கு வராதா பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம்(pedophilia or paedophilia) செய்து அதை வீடியோவும் எடுத்துத் தான் கண்டு களிப்பதோடு மட்டுமல்லாமல், வெளிநாட்டவர்களான தன் சீடர்களுக்குக்(?!) கொடுத்தும் இருக்கிறார்.  இப்போது, அவர் சிறையில் கம்பி எண்ணுகிறார்.

     இதைப் போலவே, தினமும்(?!!) ஆனந்தமாக இருக்கும் ஒரு சாமியார், பெண்கள் கேஸில் சிக்கி மாமியார் வீட்டில் இருந்தவர் இப்போது பிறந்த வீட்டுக்கே வந்துவிட்டார். நம்மூர் சாமியார்கள் எல்லாரும் பெண்கள் விஷயத்தில் படு கில்லாடிகளாக  இருப்பார்கள் போல. இதற்கு எதற்கு சாமியார் என்ற போர்வை? இவரை முழுவதுமாக கார்பொரேட் சாமியார் என்று, சகுனி படத்தில் வருவது போல சொல்ல முடியா விட்டாலும், அந்தக் கூட்டத்தில் ஒருவர்தான்.

தினமும் டி.வி. யில் வந்து மானாட மயிலாட போன்று, தனியாகவும், க்ரூப் நடனமும் புரிந்து, மாறுவேஷம் கூட பூண்டு பரவசமாக்கிய அந்தச் சாமியாரை இப்போது காணமுடிவதில்லை. அதே போன்று, விஷ்ணுவின் அவதாரங்கள் என்றுக் கருதப்படும் ஒரு அவாதாரப் பெயரில் தம்பதி சமேதராய், தாயார், பெருமாள் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் ஒரு சாமியார். பல வருடங்களுக்கு முன், இவரது குழுவில் சிஷ்யராய் சென்று ஒரு சில ஆயிரங்களையோ, லட்சங்களையோ இழந்தவரும் உண்டு. இவரைப் பற்றி பெண்கள் சம்பந்தப்பட்டு எதுவும் வரவில்லை.  ஒருவேளை தம்பதி சமேதராக இருப்பதால் இல்லையோ என்னமோ! 

இது போன்ற ஆன்மீகப் போர்வையில், நடமாடும் தெய்வங்களாக, முக்கியமாகப் பெண்களை ஈர்க்கும் சாமியார்களுக்குப் பஞ்சமில்லை.  மூடநம்பிக்கைகளில் மூழ்கியிருக்கும் மக்களை குறிப்பாகப் பெண்களை பேச்சாலும், மந்திரத்தாலும், கட்டுண்டுக் கிடக்கச் செய்யும் சாமியார்கள் கையாள்வதும் கூட ஒருவித மன உளவியலைச் சார்ந்ததுதான்.  அதாவது, ஒருவரது வீக்னஸைப் படித்து குறி வைத்து அடிப்பது, வசியப்படுத்துவது. பெரும்பான்மையாக பெண்கள்தான் இந்த வலையில் விழுகிறார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால், I.T. துறையில் உள்ளவர்களும், பெரிய இடத்தைச் சேர்ந்தவர்களும்,  படித்தவர்களும், பணக்காரர்களும் இது போன்ற சாமியார்களின் காலடிகளில்!! ஆம்! விட்டமின் “M” இல்லை என்றால் இச் சாமியார்கள் எல்லாரும் உயிர் பிழைப்பது கஷ்டம்தான்! எத்தனை ஈ.வே. ராக்களும், விவேகானந்தர்களும் வந்தாலும், இப்படி ஆன்மீகம் என்ற பெயரில், இது போன்ற சாமியார்களின் காலடியில் போய் விழும் மக்களைத் திருத்த முடியுமா என்பது கேள்விக் குறியாகி விட்டது. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலை!

இது போன்ற சம்பவங்கள் மற்ற மதங்களிலும் நடக்கத்தான் செய்கிறது. இப்படிப்பட்ட மத குருமார்களும், மதப் பண்டிதாகளும் மற்ற மதங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். கேரளாவில் உள்ள கோட்டயத்தில், ஸிஸ்டர் அபயாவின் கொலையும், கேரளாவில் மத்திரஸாவுக்குச் செல்லும் சிறுமிகளை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதால் கைது செய்யப்படும், மத்திரஸா ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது போன்ற செய்திகளுக்கும், சம்பவங்களுக்கும் மத பேதம் கிடையாது.!

விவேகானந்தர் என்னும் ஒரு மஹான், எளிய வாழ்கையை மேற்கொண்ட ஒரு துறவி, வாழ்ந்த இந்த பூமியில் இப்படிப்பட்ட சாமியார்களும் வாழ்கிறார்கள் என்று நினைக்கும் போது வெட்கமாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. விவேகானந்தர் அமெரிக்காவிற்குச் சொற்பொழிவு ஆற்றப் போயிருந்த போது, அவரின் பேச்சிலும், அறிவிலும் மயங்கிய ஒரு பெண் அவரிடம் சென்று,

 “எனக்கு உங்களை மணம் செய்ய விருப்பமாக உள்ளது என்றார்.  அதற்கு நம் சுவாமி, எதற்கு? எது உங்களை அப்படி நினைக்க வைத்தது?என்று கெட்க, அவர், “உங்கள் அறிவு. எனவே எனக்கு உங்களைப் போன்ற  அறிவைக் கொண்ட ஒரு குழந்தை வேண்டும் என்று சொல்ல, அதற்கு சுவாமி,

“ உங்கள் ஆசை புரிகிறது.  கல்யாணம் செய்து, நீங்கள் விரும்புவது போன்ற ஒரு குழந்தை இந்த உலகிற்கு வந்து அது ‘அறிவுள்ளதா என்று பார்க்க வெகுநாட்கள் ஆகும்.  அதற்கு உத்தரவாதமும் கிடையாது. அதற்குப் பதிலாக உங்கள் ஆசை எளிதே நிறைவேற உத்தரவாதமுள்ள ஒன்றை பரிந்துரை செய்கிறேன்.  இதோ, என்னை உங்கள் மகனாகப் பாவியுங்கள்.  நீங்கள் என் அம்மா.  நீங்கள் விரும்பிய படியே அறிவுள்ள குழந்தை. உங்கள் எண்ணம் ஈடேறியது.  அந்தப் பெண்மணி வாயடைத்துப் போனார்.

ஒருமுறை, பரமஹம்சரிடம், ஒருவர்,  “ஏன் விவேகானந்தைப் பற்றி மட்டும் மற்றவர்களை விட அதிகமாகப் புகழ்ந்து பேசுகிறீர்கள்.  எந்த வகையில் அவர் எல்லா சீடர்களையும் விட உயர்ந்தவர்? என்றதும்,.

“அவன் (விவேகான்ந்தர்) ‘தீ.  பரிசுத்தமான அக்னி. யாரும் அவனை நெருங்க முடியாது.தகாத எண்ணங்களுடன் நெருங்குபவர்கள் பஸ்பமாக்கப்படுவர் என்றார்.

இத்தகைய, அதிசயிக்க வைக்கும் சிறப்புகளை உடைய விவேகானந்தர் போந்ற ஆன்மீகவாதிகள் வாழ்ந்த நாடு இது. இப்போதும், உலகறியாமல் நூற்றுக்கணக்கான ஆன்மீகத்துறவிகள் உலக நன்மைக்காக தியானத்திலும், பிரார்த்தனயிலும் இமயமலையில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அதே சமயம் நம்மிடையே பல எண்ணற்ற கபட சந்நியாசிகள் பசுத்தோல் போர்த்திய காமப்புலிகளாக, ஆன்மீகம் என்ற பெயரில் ஆட்டம் போடுகிறார்கள்.  அவர்களை அடையாளம் கண்டு அவர்களிடமிருந்து நாம் நம்மைக் காப்பாற்றினால் மட்டும் போதாது, பாமர மக்கள் அவர்களுக்கு பலியாடாகாமல் இருக்க, ஒரு விழிப்புணர்வை உருவாக்க நாம் ஆவன செய்ய வேண்டும்.
13 கருத்துகள்:

 1. வணக்கம்

  பதிவு அருமை தொடரட்டும் விழிப்புணர்வு.... வாழ்த்துக்கள்.....தொடருகிறேன் பதிவை..

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. துண்டறிக்கையாக அனைத்து மக்களுக்கும் வழங்கப்படவேண்டிய மிகத் தரமான பதிவு.

  மனப்பூர்வமான பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக மிக நன்றி! உங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும், மனப்பூர்வமான பாராட்டிற்கும் நன்றி! நன்றி!. உங்களைப் போன்றவர்கள் தரும் ஊக்கம் எங்களுக்கு மிக அவசியம்.

   நன்றி!

   நீக்கு
 3. சீதை என்றால் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்பது சாமியார்களுக்கு தான் முற்றிலும் பொருந்தும் !
  தங்களின் விழிப்புணர்ப்பு பதிவு அருமை ,தொடரட்டும் இந்தப் பணி !
  த.ம 2

  பதிலளிநீக்கு
 4. சீதை என்றால் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்பது சாமியார்களுக்கு தான் முற்றிலும் பொருந்தும் !
  தங்களின் விழிப்புணர்ப்பு பதிவு அருமை ,தொடரட்டும் இந்தப் பணி !
  த.ம 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரொம்ப சரி பகவான்ஜி! அரசியலுக்கும் இது பொருந்தும் என்றாலும் ஆன்மீகம் அதற்கும் பல படிகள் மேலே. ஆன்மீகத் தலைவர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து, மக்களுக்கு உரைக்கும் அறிவுரைகளைத் தாங்களும் தங்கள் வாழ்வில் கடைபிடிக்க வேண்டும்!

   கருத்திற்கும், பாராட்டிற்கும், பிரதி மொய்க்கும் மிக்க நன்றி!

   நீக்கு
 5. விட்டமின் “M” தான் எல்லாமே என்று மக்கள் உணர வேண்டும்... திருந்த வேண்டும்...

  விவேகானந்தர் சிறப்பு அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே! உங்கள் கருத்துக்கு மிக மிக நன்றி! நண்பரே!

   நன்றி!

   நீக்கு
 6. [[அதாவது, ஒருவரது வீக்னஸைப் படித்து குறி வைத்து அடிப்பது, வசியப்படுத்துவது. பெரும்பான்மையாக பெண்கள்தான் இந்த வலையில் விழுகிறார்கள்]]

  ஆண்களும் தான்! அவர்களை வேற மாதிரி விழ வைப்பார்கள்!
  ஏற்கனவே போ!

  பதிலளிநீக்கு
 7. ஆமாம் ரொம்ப கரெக்ட் தான் நீங்க சொன்னது! ஆண்களும் தான்! ஒரு வேளை விட் 'M"?!! வேறு ஏதாவது?!?!??!!.......கருத்திற்கு நன்றி!!

  பதிலளிநீக்கு