கோடை காலத்தில் மரக்கிளைகளின் இடையே எங்கே இருக்கிறது என்று அறிய முடியாமல் கூ என்று வரும் குயிலின் இனிய நாதம்
மழை பெய்யும் நாட்களில் இரவில் அரங்கேறும் தவளைகளின் கச்சேரி
தினமும் காலையில் எழும் போது கேட்கும் குருவிகளின், கிளிகளின் அன்றைய தினத்தின் கீச் சத்தம்.
காக்கைகள் சரியான நேரத்திற்கு ஜன்னலின் ஓரம் வந்து அமர்ந்து தங்கள் தினப்படியான கப்பத்தினைக் கேட்டுக் கொடுக்கும் குரல்
இரவின் அமைதியில் கேட்கும் சுவர்க்கோழிகளின் ரீங்காரம்
அடர்த்தியான காடுகளின் இடையே கேட்கும் விதம் விதமான இயற்கை ஒலிகள் என்று
நம்மைச் சுற்றி எத்தனையோ இயற்கையின் ஒலிகள் கேட்கத்தான் செய்கின்றன. ஆனால் நகரத்து வாழ் மக்கள் விரைந்தோடும் வண்டிகளின் சத்தத்தில், வீட்டினுள் இருக்கும் முட்டாள் பெட்டிகளுல் மூழ்கிக் கிடத்தலில் இந்த இயற்கை ஒலியினைத் தொலைத்துவிட்டு...
பல கிராமத்து வாழ் மக்களோ வீட்டினுள் இருக்கும் முட்டாள் பெட்டியின் சத்தத்தில் தொலைத்தோ, அல்லது கிராமத்து இயற்கை வளம் அழிந்து வருவதாலோ, இந்த இயற்கையின் இனிய ஒலிகளை அனுபவிக்க முடியாத ஒரு நிலைக்குத் தங்களைத் தள்ளிக் கொண்டு……இப்படியாக
மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான தொடர்பும், தகவல் பரிமாற்றமும் மெதுவாக இற்றுப் போய் அற்றுப் போகும் நிலையிலான ஒரு வாழ்வு.
ஒவ்வொரு விலங்கினமும் எழுப்பும் ஒலி, தங்களுக்குள்ளும், மனிதனுடனும் தொடர்பு கொள்ள/தகவல் மரிமாறிக் கொள்ள எழுப்பும் ஒலியே. ஆனால், அதனை மனிதன் படித்தானில்லை. விலங்குகளுக்கு மொழி உண்டா? விடை கொடுக்க முடியாத கேள்விதான் என்றாலும், விஞ்ஞானிகள் மொழிக்குக் கொடுக்கும் வரையறை, மொழி என்பது அடையாளக் குறியீடுகளுடன் ஆக்கப்பூர்வமான தொடர்பு என்பதே. ஆனால்
விலங்கினங்கள் பொதுவாக மனிதனைப் போன்றில்லாமல் குறிப்பிட்ட மூன்று விதமானச் சூழ்நிலைகளில் மட்டுமே தொடர்பு கொள்ளுகின்றன.
1. உணவு பற்றிய தகவலைப் பரிமாறிக் கொள்ள
2. இனப்பெருக்கக் காலத்தில் தங்கள் இணையுடனான உறவை வலுவாக்கிக் கொள்ள அல்லது
3. ஆபத்தான காலக்கட்டத்தில்/ஆபத்தில் சிக்கிக் கொண்டால்
ஒரு சில விலங்கினங்களின் தகவல் பரிமாற்றங்கள் மிகவும் மதிநுட்பமான முறையில் இருப்பதால், விஞ்ஞானிகள் அதனை விலங்குகளின் மொழி என்றே முடிவு செய்ய வேண்டியதானது. உதாரணத்திற்குத் தேனீக்களின் இனத்தில் ஒரு தேனீ உணவைக் கண்டுபிடித்துவிட்டால் உடன் தனது கூட்டிற்கு வந்து, ஆட்டல் நடனம் செய்து – இதில் இந்த ஆட்டல், எண் 8 வடிவத்தில் நிறைய நேரம் என்றால் உணவு தூரத்தில் உள்ளது என்று அர்த்தம். ஆட்டல் நடனம் வட்ட வடிவில் சிறிது நேரம் என்றால் உணவுக் கூட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில்/அருகில் என்ற அர்த்தத்தில் அங்கிருக்கும் தனது சகாக்களான உழைப்பாளித் தேனீக்களுக்குத் தகவலைப் பரிமாறுகின்றன.
How can honeybees communicate the locations of new food sources? Austrian biologist, Karl Von Frisch, devised an experiment to find out! By pairing the direction of the sun with the flow of gravity, honeybees are able to explain the distant locations of food by dancing. "The Waggle Dance of the Honeybee" details the design of Von Frisch's famous experiment and explains the precise grammar of the honeybees dance
வேகமும், சுற்றுகளின் எண்ணிக்கையும் தூர அளவைக் குறிக்கின்றன. 40 சுற்றுகள் என்றால் உணவு 100 மீ தூரத்தில் என்றும் 24 சுற்றுகள் என்றால் 500 மீ ருக்கும் அதிகம் என்று அர்த்தம். நடனத்தின் நோக்கு நிலை (Orientation) உணவு இருக்கும் இடத்தின் அறிகுறியாகும். நடனத்தின் தீவிரமும், கால அளவும் உணவின் செழுமையைக் குறிக்கும்.
இந்த நடனமாடும் தேனீ உணவின் தரத்தைத் தனது சக உழைப்பாளித் தேனீக்களிடம் எப்படி அறிவிக்கின்றன என்றால், அந்தத் தேனீக்கள் இந்த நடனமாடும் தேனீயை முகர்ந்துப் பார்த்து பூக்களின் மணத்தை அறிந்து கொள்கின்றன. உடன் அந்தத் தேனீக்கள் புறப்பட்டுவிடும். இப்படித் தேன் எடுக்கப் புறப்படும் புதிய குழு தேனீக்கள் இந்த முக்கியமானத் தகவலைப் பரப்புகின்றன. ஒரு மணி நேரத்திற்குள் 10,000 தேனீக்கள் அந்த இடத்திற்கு வந்து விடும் என்ற தகவல், தேனீக்களின் இந்த வகையான மிக நுட்பமானத் தகவல் பரிமாற்றத்திலிருந்து அறிய முடிகிறது.
ரகசியங்கள் தொடரும்..
------கீதா
காணொளி - நன்றி யுட்யூப்