இம்முறை குறும்படத்தின் வேலைகளின்
தொடக்கமே சற்று பரபரப்புடன் தான் தொடங்கியது. படப்பிடிப்பிற்கான தேதி பெரும்பாலும்
ஏப்ரல்மாதம் இறுதி வாரத்தில் இருக்கும். இம்முறை, தவிர்க்க முடியாத, என் நெருங்கிய
உறவினர் கல்யாணம் இருந்ததால் படப் பிடிப்புத் தேதி மே மாதம் 6, 7, 8 என்று துளசி முடிவு
செய்தார். ஆங்கிலத்தில் எடுப்பதால், பெரும்பாலும் தேதி முடிவு செய்தவுடன், 2 மாதங்கள்
அல்லது 1 ½ மாதத்திற்கு முன் கதை, வசனம் எழுதி முடித்து, பிரதி எடுத்து முக்கிய கதாபாத்திரங்கள்
அனைவருக்கும் கொடுத்துவிடுவது வழக்கம்.
விவேகானந்தரின் கேரள வருகை பற்றி,
குறிப்பாக அவர் கேரளத்தைப் பற்றிச் சொன்ன, “கேரளா ஒரு பிராந்தாலயம்” என்ற கருத்துதான் இக்குறும்படத்தின்
மையக்கருத்து. என்றாலும் சம்பவங்களை மட்டும் எடுத்துக் கொண்டு கதாபாத்திரங்களின் பெயர்களை
மாற்றித்தான் எடுத்திருக்கிறார். (இது வரை எடுத்த வரலாறு சார்ந்தவை எல்லாம் அப்படித்தான்
எடுத்துள்ளார்) அப்படித்தான் இப்படத்திலும் ஸ்வாமி சதாநந்தா.
வரலாற்று நிகழ்வுகளை இருவருமாகச்
சேகரித்து, அதைப் பற்றிக் கலந்தாலோசித்துக் கதையை 10 தினங்கள் முன் தான் எழுதி முடித்தார்.
கதையை எழுதி முடிக்க முடியாமல் அவருக்கு வீட்டு வேலைகளின் பணி அழுத்தியது ஒருபுறம்
என்றால் தேர்வுப் பணிகள் மறுபுறம். அதன் பின் கதையை எழுதி முடித்துவிட்டு என்னுடன்
கலந்துரையாடினாலும், முன்பு போல் என்னால் பல திருத்தங்கள் நேரமின்மை காரணமாகச் சொல்ல
இயலவில்லை. எல்லோருக்கும் மின் அஞ்சல் மூலம் நான் அனுப்பிவிட விடுமுறையில் சுற்றுலா
செல்ல அவர் குடும்பத்தினர் திட்டமிட்டாலும் இறுதிவரை அது நடக்குமா என்ற உறுதியின்மையும்
இருந்து வந்தது. இறுதியில் துளசி தன் குடும்பத்துடன் ஏப்ரல் 29 ஆம் தேதி தில்லிப் பயணம்
மேற்கொண்டார்.
பயணம் முடிந்து ஷொர்னூர் வந்து
சேர்ந்தனர். நான் சென்னையிலிருந்து ஷொர்னூர் சென்றேன். அன்றே படப்பிடிப்பு என்பதால்,
நான் ஏற்கனவே ரயில் நிலையத்தில் துளசியின் குடும்பத்திற்கான பயணிகள் அறை பதிவு செய்திருந்ததால்,
அங்குக் குளித்துவிட்டு, அன்றைய காட்சி கொடுங்கல்லூர் பகவதி அம்பலத்தில் என்பதால்,
படப்பிடிப்பிற்குக் கொடுங்கல்லூர் நோக்கி அக் காட்சியில் இடம் பெறுவோர் மட்டும் பயணம்
செய்தோம். 2 1/2 மணி நேரப் பயணம்.
எனக்கு இப்படத்தில், ஸ்வாமியைப்
பற்றிய ஒரு கட்டுரை எழுதுவதற்கானத் தகவல்களைத் திரட்டும் எழுத்தாளராக, பாலமீனாட்சி
எனும் கதாபாத்திரம். முதலில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்த என்னை துளசி
சம்மதிக்க வைத்துவிட்டார். வேறு வழியில்லை. பள்ளி, கல்லூரியில் எவ்வளவோ நாடகங்கள்,
போட்டிகளில் கலந்து கொண்டிருந்தாலும் ஒளிப்படக் கருவி முன் நிற்பது, அதுவும் 30 வருடங்களுக்குப்
பிறகு, இதுவே முதல் முறை. எப்படியோ சமாளித்துவிட்டேன். (அப்படினா, உங்கள் கல்யாணத்தில்
வீடியோ முன் நிற்கவில்லையா? என்று ஸ்ரீராம் கேட்பது கேட்கிறது. என் கல்யாணத்தில் வீடியோ
கிடையாது. எடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டேன்! சரி போகட்டும், நீங்கள் கல்யாணங்களில்
எடுக்கப்படும் வீடியோவின் முன்? என்று அடுத்த கொக்கி போடுகிறார்கள் இரண்டுத் தமிழன்கள்-மதுரை
மட்டும் நெல்லை…!!!)
குறும்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த நண்பர் ஆவியின் ஒப்பனையைப் பார்வையிடும் துளசி - கூடவே ஒப்பனைக் கலைஞர்கள் தாஸ் சேட்டன், சந்திரன் சேட்டன் (கண்ணாடி அணிந்திருப்பவர்)
மருத்துவராக, பல வருடங்களுக்கு முன் துளசி முதலில் வேலை பார்த்த க்ளாசிக் கல்லூரியின் முதல்வர் சோனி சார், , மற்றும் உதவி ஒப்பனைக் கலைஞர் திரு சந்திரன் சேட்டன்
சுகப்பா கதாபாத்திரத்தில் நடித்த நண்பர் குடந்தை ஆர் வி சரவணன் மற்றும் ஒப்பனைக் கலைஞர் தாஸேட்டன். (முகம் மறைந்து விட்டது.
துளசியின் பெரியப்பா மகன்-துளசியின்
சகோதரருக்கு, சுகப்பாவின் கொள்ளுப் பேரன் கதாபாத்திரம். அவர்கள் வீட்டில் தான் நாங்கள்
தங்கியிருந்தோம். படப்பிடிப்பும் அங்குதான். சரி நான் எழுதுவதை விட குறுந்திரைக்குப்
பின்னான காட்சிகள் சுவாரஸ்யம்தானே! என் கேமராவில் க்ளிக்கியவை….
திருநள்ளாயி அக்ரஹாரம், பாலக்காடு இங்கு சில காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன
அக்ரஹாரத்தில் வீடுகள்
அழகான வேலைப்பாடுடன் கூடிய தூண்கள்
ஒளிப்பதிவாளர் பிஜு - துளசியின் சகோதரியின் மகன்
கீழே உள்ள படங்களில்.....படத்திற்கான வசனங்களைப் படிக்கும் மாணவர்கள்!!! பரீட்சைக்குப் படிப்பது போல!!!
ஆசிரியர் பாடம் நடத்துகிறார்!!!
இந்தப் புகைப்படத்தில் வலது புறத்தில் கண்ணாடி அணிந்திருப்பவர் திரு கோபாலகிருஷ்ணன் துளசியின் நண்பர், ஆசிரியர். அவரும் படத்தில் நடித்துள்ளார். ஒப்பனையில் திரு பாலகிருஷ்ணன் அவரும் ஆசிரியராக வேலை செய்தவர். 
ஆசிரியரும் மனனம் செய்கிறார்!!!!
ஒப்பனை
ஒப்பனைக் கலைஞர் சந்திரன் சேட்டன் - இவர் உதவியாளர்
ஒப்பனைக் கலைஞர் தாஸ் சேட்டன் - இவர்தான் துளசியின் படங்களுக்கு ஆஸ்தான ஒப்பனைக் கலைஞர் தமிழ் ஓரளவு பேசுவார்.
கொடுங்கல்லூர் காட்சிகள் சில அஞ்சு மூர்த்திக் கோயில், ஆனிக்கோடு, மாத்தூர் அருகில் படம் பிடிக்கப்பட்டது, அங்கிருந்த ஆற்றங்கரையில் எடுத்த சில இயற்கைக் காட்சிகள்
ஜிஎம்பி சார் வீட்டு அபூர்வமான பூ-இதைப் பற்றி அவரது தளத்திலும் எழுதியிருந்தார்.
.....கீதா
(பங்களூரில் எடுத்த காட்சிகளை நான் எனது நிழற்படக் கருவியில் படம் பிடிக்கவில்லை. எனவே இங்கு தர இயலவில்லை.)