ரௌடி அப்பாவுக்கு சக்தியாய் உடனிருந்து, ரௌடித்தனம் செய்யும் மகன் (வளர்ப்பு மகன்), அப்பாவின் விருப்பத்திற்காக போலீஸில் சேர்ந்து (அஸிஸ்டென்ட் கமிஷனராக!) உண்மையாக போலீஸாய் மாறி அப்பாவை வில்லனிடமிருந்துக் காப்பாற்றி, நல்லவராக்கி, அவரது விருப்பப்படி ஜெயிலுக்கும் அனுப்புவதுதான், டைரக்டர் நேசனின் இந்த “ஜில்லா”.
அப்பாவும் பிள்ளையுமாக, மோஹன்லாலும், விஜய்யும் மிக அருமையாகத் தங்களுடைய கதாபாத்திரங்களைக் கையாண்டிருப்பது படத்திற்கு மெருகேற்றுகிறது.
இண்டெர்வலுக்கு முன்பு வரை படத்தை இழுத்தாலும், இண்டெர்வலுக்கு ஜஸ்ட் முன் அப்பாவும், மகனும் மோதிக் கொள்ளும் (வார்த்தைகளை வீசி) காட்சியில், விஜய்யும், மோஹன்லாலும் அவரவர்களுக்கே உரித்தான ஸ்டைலில் அசத்துகிறார்கள். இரண்டாம் பகுதி இறுதி வரை, விறு விறுப்பாகப் போனாலும், படம் பார்ப்பவர்கள் எளிதாக அடுத்தடுத்தக் காட்சிகளை ஊகிக்க முடிவது, இதே கதையை நாம் பல படங்களில் சிறிய மாற்றங்களுடன் கண்ட ஒன்றானதால்தான்.
புதுமை என்பது விஜய், லாலேட்டன் காம்பினேஷன்தான். அதுதான் “ஜில்லா”. அதுவின்றி வேறொன்றும் “இல்லா” . பாடல்கள் எல்லாம் கேட்கும்படியாக இருக்கின்றன. (வரிகள் தெளிவாகக் காதில் விழுகின்றது).
கண்டாங்கி கண்டாங்கி
விஜய் பாடிய பாடல் நல்லாருக்கு
‘வெரசா போகையிலே, புதுசா போறவளே’யும், ‘கண்டாங்கிக் கட்டி வந்த பொண்ணும்’ மனதில் நிற்கின்றது. விஜய்யின் நண்பனாக வரும் “சூரி” யின் நகைச் சுவை பரவாயில்லை. நாயகி காஜல் அகர்வால் காதலியாகவும், காவல் அதிகாரியாகவும் தன் கதாபாத்திரத்தை நன்றாகவேச் செய்திருக்கின்றார்.
காக்கிச் சட்டையை வெறுக்கும் விஜய் லஞ்சம் வாங்கும் பெண் போலீசாரைக் கை நீட்டி அடித்தப் பெண்ணைக் கண்டதும் காதல் கொண்டு பெண் பார்க்கத் தம்பி, தங்கை மற்றும், ரௌடித் தோழர்களுடன் காஜல் அகர்வால் வீடு சென்று காத்திருக்கும் போது, காக்கி யூனிஃபார்மில் வரும் காஜலைக் கண்டு மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தடுமாறும் இடம் அருமை. அதே போல் உண்மையானப் போலீசாக (மனு நீதிச் சோழனாக) மாறி, தன்னிடம் நீதி கேட்க வந்தப் பெண்ணுக்காகக் காக்கி அணிந்து, தன் அப்பாவின் ரௌடிகளையேத் தாக்கும் இடம் அருமை.
வில்லன் சம்பத்ராஜ், வில்லனாவதற்கு முன்பும், வில்லனான பின்பும் தன் கதா பாத்திரத்தை பாராட்டும் படியாகச் செய்து, படத்தில் வில்லன் இல்லாத குறையைத் தீர்க்கிறார்.
பூர்ணிமா ஜெயராம் அம்மாவின் கதாபாத்திரத்தை அழகாகாகச் செய்து போகிறார். விஜய், தங்கையின் கல்யாணப் பந்தியில் அழையா விருந்தாளியாய் வருமிடத்திலும், தம்பியை வில்லனிடமிருந்துக் காப்பாற்ற முயலும் இடத்திலும், நல்ல ஒரு அண்ணனையும் உருக்கமாகக் காண்பித்து நெஞ்சை நெகிழச் செய்கிறார். ஜில்லா எதிர்பார்த்த மாதிரி (உங்களை யாரு ரொம்பவெல்லாம் அவசியமில்லாம எதிர்பார்க்கச் சொன்னது?) ரொம்ப ரொம்ப நல்லா இல்லனாலும், பார்க்கிற மாதிரி பரவா ‘இல்ல’தான்.
வரி இலாக்காவின் வலையில் விழுந்த மலயாள நடிகர் திலீப்
“இன்று போகட்டும். நாளை வருகிறேன். ஷூட்டிங்க் இருக்கிறது”, என்ற மலையாள நடிகர் திலீப் இன்று வேறு வழியின்றி கொச்சி Central Excise and Customs Office ல் ஆஜராகி இருக்கிறார். தீலீப் “ஜனப்பிரிய நடிகர்” என்ற பெயரில் கேரளாவில் அழைக்கப்படுபவர். செலக்டிவாக படம் செய்து தனக்கென்று ஓரிட்த்தை மலையாள திரை உலகில் தக்க வைத்துக் கொண்ட ஒரு திறமை மிக்க நடிகர்.
இர்ண்டு வருடங்களுக்கு முன் நம் பாக்கியராஜ் அவர்கள் ஜூரியாக வந்த போது முதன் முறையாக மலையாளத் திரை உலகில் சிறந்த நடிகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
(பெரும்பாலும், மோஹன்லால், மம்மூட்டிகள் தான் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்-இருவரும் மிகச் சிறந்த நடிகர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்தானே). திலீப், கதைகளையும் கதா பாத்திரங்களையும் தன்னுடன் நடிக்கும் கதாநாயகிகளையும் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பவர். அது போல பண விஷயத்தில் அதை விட கவனமும் விழிப்புணர்வும் உள்ளவர். சில மாதங்களுக்கு முன் மம்மூட்டி, மோஹன்லால் போன்ற சூப்பர் ஸ்டார்களுக்குக் கிடைத்ததை விட, கணக்கிட்டுப் பார்க்கும் போது இவருக்கு ஊதியம் கூடுதல் என்று பரவலாகப் பேசப்பட்ட்து. இவர் ஊதியத்துடன், ஓரிரு மாவட்டங்களுக்கான வெளியீட்டு உரிமையையும் தயாரிப்பாளரிடமிருந்து பெறுவதுதான் காரணம் என்றும் பேசப்படுகிறது. இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு இவர் மலையாள சூப்பர் ஸ்டார்களை ஓவர்டேக் செய்தாராம். எப்படியோ வரி இலாக்காவிற்கு இந்தச் செய்தி காதில் தேனாய் பாய்ந்திருக்க வேண்டும். “மாயா மோஹினி”, “ஸ்ருங்காரவேலன்” (சிங்காரவேலனைத்தான், ஸ்ருங்கார வேலனாக்கியிருக்கிறார்கள். “ஜொள்ளு” வேலன். கேரளத்தில் மதம் பார்த்து இறைவனைக் கிண்டல் செய்யலாம். அல்லாஹுவை கேலி செய்து கல்லூரி மாணவர்களுக்கு வினாத்தாள் தயாராக்கிய கேரளா, மூவற்றுப்புழையைச் சேர்ந்த ஒரு ப்ரொஃபசரின் கை இனி ஒரு போதும் அந்தக் கை வைத்து எழுத முடியாத அளவிற்கு வெட்டப்பட்டுவிட்டது. இப்போதும் அவர் பெட் ரெஸ்டிலதான்) போன்ற படங்கள் மூலம் அவருக்குக் கிடைத்த அதிக பணத்திற்கான வரி கட்டப்படவில்ல என்று வரி இலாக்கா, அவர் மேல் குற்றம் சாட்டி விசாரணைக்கு அழைத்திருக்கிறது. “நாடோடி மன்னன்” எனும் திரைப்படத்தில் “பத்மநாபதாசனாக”வும் பத்மநாப தாஸர்களின் தானாகவும் நடித்தும், திருஅனந்தபுரியில் அனந்தசயனம் செய்யும் பத்மநாபன் அவரைக் காப்பாற்ற முன் வரவில்லை.
பாவம், அவரே தன் காலடியில், தன் தீவிர பக்தனாக இருந்த மார்த்தாண்ட வர்மாவினால் பதுக்கி வைக்கப்பட்டதெல்லாம் பொதுவுடைமை ஆக்கப்படப் போகிறதே என்ற வருத்தத்தில் இருக்கும் போது இந்த “சுந்தரக் கிலாடி” யை (கிலாடி என்றதும் கில்லாடி என்று தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம். கிணறு வெட்டிகள் தான் கிலாடிகள். ஒரு படத்தில் அவர் செய்த கதாபாத்திரம் தான் இந்த “சுந்தரக் கில்லாடி” ஸாரி “சுந்தரக் கிலாடி) எப்படிக் காப்பாற்றுவார்? இனி எல்லாம் தலைவிதி வசம்.
பின் குறிப்பு: அவருடைய தலைவிதி'வசம்' வேறு ஒரு நல்ல சம்பவம் கூட நடக்க இருக்கிறது. இனி வருவது அவருடைய “’தலைவி’ திவசங்கள்” (நாட்கள்). அவரை மணந்தது முதல் இதுவரை நடிக்காமல் இருந்த அவரது மனைவி மஞ்சுவாரியார் எனும் மிகச் சிறந்த நடிகை மீண்டும் திரையுலகிற்கு வருகிறார்.
------------------------------------------------------------------------------------------------------
‘சொல்ற மாதிரி’ இவன் ‘வேற மாதிரி’ தெரிவது காதல் விஷயத்தில் மட்டும்தான். மற்றபடி சமூகத்தில கொலைகளும், அட்டூழியங்களும் செய்கிற வில்லன்களை தீர்த்துக் கட்டுவதில் ‘சாதாரண மாதிரிதான்’.
“தம்பி உடையோன் படைக்கு அஞ்சான்’ என்கிற மட்டில் அட்டூழியங்கள் மட்டும் செய்கிற அமைச்சர் அண்ணனை, அதே ரௌடித் தம்பியை கருவாக்கி நாயகன் தனி மனிதனாக அழிப்பதுதான் கதை. இதற்கிடையில் ‘வேற மாதிரி’ ஜில்லென ஒரு காதல் கதை. இதை இரண்டையும் நல்ல ஒரு திரைக்கதை மூலமா ப்ளெண்ட் பண்ணி, உட்கார்ந்து பார்க்கறா மாதிரி ஒரு படம் பண்ணி இருக்கிறார் சரவணன். அரசியல்வாதிகளின் ஆதிக்கம் எந்த அளவு மோசமாகக் கல்லூரிகளைப் பாதித்து இருக்கிறது என்பது முதல் காட்சியில் நன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நடவடிக்கை எடுத்த முதல்வரையேக் குத்திக் கொன்றது உண்மையிலேயே நடந்த சம்பவம் தானே.
தற்செயலாக நடக்கும் “யூரின் பாஸிங்க் பந்தம்”, நாயகி சைகை செய்வது போல் கத்தரிக்கப்படாமல், மீன்கள், குழந்தை, “கஞ்சா காணிக்கை குடம்”, என்று பஸ்ஸில் பயணம் செய்து, வளர்ந்து, வீட்டில் உள்ள ஏழாவது படிக்கும் பெரியவர்களின்(??!!!) உதவியால் காதலாவது மிகவும் சுவாரசியமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அறிமுக நடிகை சுரபி அருமையாக நடித்து படம் பார்ப்பவர்களின் நெஞ்சத்தைக் கிள்ளி விட்டார். நாயகன் விக்ரம் பிரபு நன்றாகவே செய்திருக்கிறார். “மறந்தேன்” பாடல் மனதில் நிற்கிறது. ‘லவ்வுல லவ்வுல’ விழுந்துட்டேன் பாடலும் மனதில் விழுந்து இடம் பிடிக்கும் பாடல்தான்.
வில்லனாக வரும் வம்சிக் கிருஷ்ணா நன்றாகச் செய்திருக்கிறார். குறிப்பாக டாய்லெட்டில் கட்டப்பட்டுக் கிடக்கும் காட்சியில். நாயகியின் அம்மாவாக வரும் சார்மிளா மகளுடன் சண்டை போடும் போதும் சரி, (கரண்டியால் மகளின் தலையில் அடிக்கும் அம்மாவுக்கு ஈடுகொடுத்து நடிக்கும் மகளையும் நாம் பாராட்டியேத் தீரவேண்டும்), காணாமல் போன மகளுக்காகக் கதறி அழும் போதும், போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யும் போதும் நம் மனதைத் தொடுகிறார்.
நாயகியைத் தேடி வரும் நாயகனின் புலம்பல்களைக், கேட்கும் தூரத்தில் நிற்கும் நாயகியை, நாயகன் காணாத போதும், நாயகியின் காதிலிருந்து விழும் கம்மல் கீழே நடந்து போகும் நாயகனின் தோளில் விழுந்து, விழுந்தது என்ன என்று பார்க்கும் முன் தண்ணீரில் விழுந்து கவனிக்கப்படாமல் போகும் போதும் உண்டகும் irony, கைக்கெட்டி வாய்க்கு எட்டாமல் போகும் காட்சிகள் அருமையாகக் காண்பிக்கப்பட்டிருக்கிறது. கையில் கொத்தும் காக்கையிடம், நாயகி ‘நாளை வா’ என்று சொல்லுமிடம் கண்களில் நீர் நிறைக்கிறது. வில்லன் நாயகியை மறைத்து வைத்த இடத்தைச் சொல்லவே மாட்டேன் எனும் போது, நாயகியைக் காட்டிக் கொடுக்கும் கண்திருஷ்டி பொம்மையை சுற்றிப் பறக்கும் காக்கைகளுக்குக் கிடைக்கும் கைத்தட்டல்கள் அந்தக் காட்சியை அவ்வளவு அருமையாகக் காண்பித்த இயக்குனர் சரவணன் உட்பட அனைவருக்கும் உரியதே
. போலீஸ் ஆபீசராக வரும் கணேஷ் தன் கதா பாத்திரத்தை நன்றாகவே செய்திருக்கிறார். வில்லனுக்கு ஏவல் செய்யும் போலீஸ் அதிகாரிக்குக் கொடுக்கும் அடி, மிக்சரைத் தின்று கொண்டு மீசையைச் திருகி இப்படம் பார்க்கும் இது போன்ற போலீசாருக்கு விழுந்தால் சரி. (atleast கேட்கும் போது அவர்கள் மனசாட்சியிடம் இருந்தாவது.) பின் அமைச்சர் அண்ணனின் மரணத்தை டயலாக்கில் புதைக்காமல் ஓரிரு ஷாட்டுகளில் காண்பித்து இருக்கலாம். பின் கணேஷ் கடைசி சீனில் நாயகனிடம் ‘இந்த மாதிரி ஹீரோயிசம் காண்பிக்கறவங்க கொஞ்சம் பெருசா மீசையை வைச்சுக்கணும்’ என்று சொல்லும் போது நமக்கும், ‘ஜிம்முக்கு போயி கொஞ்சம் மசில்சும் சேர்த்துக்கணும்’ (அப்பா மாதிரி டாப் டு பாட்டம் வேண்டாம். அவசியமான இடங்களில் மட்டும்) என்று சொல்லத் தோன்றுகிறது. சின்னச்சின்ன விஷயங்களில் கூட ரொம்ப கவனமாக இருந்த்தால் (டயரி, சென்ட், OP ரெஜிஸ்டர் etc) இடையில் எங்கேயும் ஓட்டையும் விழலை. இந்தப் படத்தைப் பற்றி ‘வேற மாதிரி’ சொல்ல ஒன்றும் இல்லை. ‘பார்க்கற மாதிரி’ படம்தான்.
---------------------------------------------------------------------------------------------------------
அறிவாள் எதற்கென்று இல்லாமல் எல்லாவற்றிற்கும், தூக்கிக்கொண்டு ஓடி தகராறு செய்யும் கும்பல், அது போல் அவர்களுக்கும் பின்னே அறிவாளைத் தூக்கிக் கொண்டு வரும் கும்பலுக்கு, பலியாவார்கள் என்ற கசப்பான உண்மையைத்தான் இப்படம் வெளிப்படுத்துகிறது. வாழ்தப்படும் வன்முறையைப் பின்பற்றும் நாயகர்களோ, நாயகிகளோ இப்படத்தில் இல்லை. எல்லோரும் வீழத்தான் செய்கிறார்கள். அந்தச் செய்தி இப்படத்தில் மிகவும் நன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
சிறு வயதிலேயே அனாதைகளாக்கப்ட்ட நால்வர்களின் உண்மையான நட்பும், வழிகாட்ட யாருமின்றி தவறான வழிகளில் வாழும் அவர்கள் வாழ்வில் குறுக்கிடும் ஒரு பெண்ணால் வரும் பிரச்சினையும் தான் இப்படம். அந்தப் பெண்தான் பிரச்சினை என்பதனை இறுதி வரை சஸ்பென்ஸ் உடையாமல் கொண்டு சென்றது பாராட்டிற்கு உரியதுதான். அதுபோல், படம் தொடங்கி சில நிமிடங்களிளேயே நான்கு நண்பர்களில் ஒருவரைக் கொல்லச் செய்து (கொலை செய்யப்படுவதைக் காண்பிக்காமல்) அந்த ஒருவர் யார் என்று அறிய இன்டெர்வல் வரை உட்கார்ந்து flash back பார்க்க வைத்ததும், திரைக்கதையில் செலுத்தப்பட்ட கவனத்தைக் காண்பிக்கிறது. நாயகனிடம், காதல் பைத்தியம் பிடித்து, அவன் பின் மாலையும், தாலியும் கொண்டு ஓடும் நாயகிக்கு, அவனிடம் இந்த அளவுக்குக் காதல் தோன்ற strong ஆன ஓரிரு சம்பவங்களைக் காண்பித்திருக்கலாம். (யோசிக்கும்போது இடுப்பைப் பிடித்து தூக்கியது மட்டும்தான் ஞாபகத்துக்கு வருது. ஒருவேளை இடுப்பு ஒரு மர்ம ஸ்தானமோ?!!)
படத்தில வரும் 2 அழுத்தமான கதாபாத்திரங்களைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை. “சிங்கம் மீசை”யுடன் வரும் போலீஸ் அதிகாரி. “இதுதாண்டா போலீஸ்”னு சொல்லவைக்கும் தைரியமிக்க ஒரு கதா பாத்திரம். ஆத்திரத்தைக் காண்பிக்கிறேன் பேர்வழி என்று முகத்தை என்னென்னவோ பண்ணுவதை அவர் கொஞ்சம் குறைத்திருக்கலாம். பிறகு நெஞ்சில் மிதிபட்டும், காலில் வெட்டுப்பட்டும், செய்நன்றி மறவாத குணத்தால் நால்வரும் (மூவரும்) செய்த குற்றத்தை மறந்து மன்னிக்கும் ரவுடிகளின் மாணிக்காமாகும், மறைந்த நம் வினு சக்கரவர்த்தியை உருவில் மட்டும் நினைவுக்கு கொண்டுவரும் ஒரு கதாபாத்திரம். அழுத்தமான அந்தக் கதாபாத்திரங்களுக்குத் துணை பொவது சராசரியான அவர்களது நடிப்புத்தான் என்றாலும் நினைவில் தங்கி நிற்கும் அளவிற்கு அந்த இரு கதா பாத்திரங்களும் சக்தி வாய்ந்தவையே. நாயகன்-அருள்நிதி, நாயகி-பூர்ணா தங்கள் கதாபத்திரத்தை ஓரளவிற்கு செய்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல முடியும். விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் போன்றவர்களைப்போல் தனக்கென்று உள்ள ஒரு ஸ்டைலில் கவனம் செலுத்தி நடிப்பை ஸீரியஸாக எடுத்தால் ஒரு safe ஆன இடத்தை அருள்நிதி பிடிக்கலாம். இல்லையேல், மு.க. முத்து அங்கிளைப் போல் ஒரு சில படங்கள் மட்டுமே செய்து அருள்நிதியும் காணாமல் போகலாம். மதுரையில் நடக்கின்ற கதைகளில் எல்லாம் வரும் கதா பாத்திரங்கள் அறிவாள்களைத் தூக்கிக் கொண்டு ஓடவேண்டும் என்ற பிடிவாதம் திரையுலகில் இருந்து எப்போது இல்லாது ஆகுமோ? தெரியவில்லை.. படத்திற்குப் போகின்றவர்கள் கவனத்திற்கு. மறந்தும் கூட கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் படம் பார்க்கப் போக்க் கூடாது என்று மட்டுமல்ல, படம் பார்த்த பின்னும் குறைந்தது 3 மணி நேரத்திற்கு அவற்றைக் காணவோ கையில் பிடிக்கவோக் கூடாது. ஒருவேளை அதை விபரீதமாக உபயோகிக்கத் தூண்டுதல் ஏற்பட வாய்ப்புண்டு. ஜாக்கிரதை!! ஆபத்தான ஒரு அறிவாள் நோய் ஒரு வேளை உங்களைத் தாக்கலாம். Be Careful!! தகராறு தகராறுதான்!!
(தகராருக்கு திரை விமர்சனம் எழுத வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், அதில் காண்பிக்கப்படும் ஒரு சில சம்பவங்கள் என்னை எழுதத் தூண்டியது.)
----------------------------------------------------------------------------------------------------
யாகாவாராயினும் uploading ஆசையைக் காக்க, காவாக்கால்!!!....................!!!!
சினிமா நடிகைகளைப் பற்றி ஏதேனும் சூடான நியூஸ் ஏற்றம் செய்யப் போகிறீர்களா?..........ஒரு நிமிஷம்.........இதப் படிச்சுட்டுப் போடுங்க.........
"மலையாள நடிகை காவ்யா மாதவன் (தமிழில், என் மன வானில், காசி, சாது மிரண்டா போன்ற படங்களில் நடித்துள்ளார்) சஞ்ஜீவ் மேனன் என்னும் ஒளிப்பதிவாளரை மணம் முடிக்கப் போகிறார்" என்ற இந்த வதந்தியை நம்பி பொய்யான வார்த்தையை ஃபோட்டோவுடன் இணையதளத்தில் upload செய்த கொச்சி, இடப்பள்ளி குட்டேன் வீட்டில், ஸ்டீஃபன் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கையில் Net Connection உள்ள ஃபோன் உபயோகிப்பவர்கள், தான் தோன்றித்தனமாக இது போல பின் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல் ஏதாவது செய்தால் இதுதான் கதி.!. காளை கன்று போட்டது என்று கேட்டது பாதி, கேட்காதது பாதி என்று கன்றைக் கட்ட கயிறைத் தேடி ஓடுவது போல் முட்டாள்தனம் செய்பவர்களுக்கு இது ஓர் எச்சரிக்கை. (upload ம் பண்ணியாச்சு. எனக்கென்ன பயம்னா "இதை ஏன் போட்டாய்" என்று என்னை.....................கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேனோ?!!!!!!பிறகு........யாகாவாராயினும் uploading ஆசையைக் காக்க, காவாக்கால்!!!....................!!!!
-------------------------------------------------------------------------------------------------------
‘அவதாரின்” பாதிப்பால் (INFLUENCE) எடுக்கப்பட்டு, ஆனால், “அவதார்” எந்த விதத்திலும் இப்படத்தை பாதிக்கவில்லை என்பதை நிரூபிப்பதில் மட்டும் ஓரளவு வெற்றி கண்ட படம். காதலன், காணாமல் போன தன் காதலியைத் தேடி சென்னையிலிருந்து, மும்பை செல்வது போல், இறந்து போன தன் காதலியைத் தேடி (AT LEAST காதலியைப் போல் உருவமுள்ள ஒர்த்தியைத் தேடி) பூமி போல் மனிதர்களைக் கொண்ட (தமிழ் மொழி!!!! பேசும்) ஒரு கிரஹத்துக்குச் செல்லும் (கொண்டு செல்லப்படும்) கதை. இரண்டாம் உலகத்தை “இண்டெர்வெல்லுக்குப் பின் தான் காட்டுவேன்”, என்று அடம் பிடித்து முதல் உலகத்தை ஜவ்வாக இழுத்தது கொஞ்சம் மனிதாபிமானமற்ற (??!!) செயலாகிவிட்டது.
இரண்டாம் உலகில், பூக்கள் விரிய முதல் உலக மது (ஆர்யா) வரும் வரைக் காத்திருந்தது, அது போல் காதல் உணர்வுகளை அறிய இதே மது வரும் வரை (தற்கொலை முயற்சி செய்தும் சாகாமல்!!) இரண்டாம் உலக அனுஷ்கா காத்திருந்தது, இதெல்லாம் கொஞ்சம் உள்வாங்க கடினம் என்றாலும், இரண்டாம் உலகை மிகவும் அருமையாகக் கண் குளிர காட்டியதைப் பாராட்டத்தான் வேண்டும். க்ராஃபிக்ஸ்-GRAPHICS, காஸ்ட்யூம்-COSTUME, ஆர்ட் டைரெக்ஷன்-ART DIRECTION இவை அருமை. இரண்டாம் உலகத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்கள், கதாபாத்திரத் தேர்வு, அவர்களுடைய டயலாக் டெலிவரி இவற்றில் எல்லாம் காண்பித்த கவனத்தையும், ஆர்வத்தையும், ஸ்க்ரீன் ப்ளேயிலும் – SCREEN PLAY – காண்பித்திருந்தால் படத்தில் விழுந்த பல ஓட்டைகளையும், தவிர்த்திருந்திருக்கலாம்.
முதல் உலக அனுஷ்கா, இண்டெர்வெல்லுக்கு முன், ஆர்யாவைக் கட்டிப் பிடிக்கின்ற (ஸிக்னலில் -SIGNAL லில் காத்திருக்கும் வண்டிக்குப் பின்னால் ப்ரேக் – BRAKE பிடிக்காமல் கார் வந்து இடிப்பது போல்) காட்சியிலிருந்த (உட்கார்ந்திருந்த ரோவே – ROW குலுங்கிருச்சு!!!) இனிமையும், ஆவேசமும்,
இரண்டாம் உலக அனுஷ்கா, இரண்டாம் உலக ஆர்யாவிற்கு, கடைசிக் காட்சியில் கொடுக்கும் முத்தத்தில் இல்லை. படத்தில், ஆர்யாவின் நடிப்பு, அதற்காக அவர் போட்ட உழைப்பினால் நன்றாக மிளிர்கிறது. அனுஷ்காவின் நடிப்பும் மிக நன்றாக உள்ளது.
காதல் செய்வதிலும், கட்டிப் பிடிப்பதிலும் கெட்டிக்காரர்கள் முதல் உலகத்தினர்தான் என்பது பிரபஞ்ச சத்தியம் போலத் தெரிகிறது. அதனால் தான் “அந்தத் தெய்வத்தாய்” மதுவை இரண்டாம் உலகத்திற்குக் கொண்டு செல்கிறார் போலும். (காதல் எல்லாம் இல்லாமல், அந்தக் கிரஹத்துல கல்யாணம் முடித்துக் குழந்தைகளும் பெத்துதானிருக்கிறார்கள்). செல்வராகவன் எடுத்த ரிஸ்கிற்காகவும், நம் படங்களிலும் க்ராஃபிக்ஸின் அட்வான்ஸ்டு டெக்னாலஜி – ADVANCED TECHNOLOGY OF GRAPHICS- உபயோகப் படுத்துவதை ஊக்குவிக்கவும் இப்படத்தைப் பார்க்கலாம்.
---------------------------------------------------------------------------------------------------------------------
பாண்டிய நாடு திரை விமர்சனம்
ரௌடிகள் ராஜ்ஜியத்தைத் தனிமனிதனாக நாயகன் தகர்த்தெறிவது தான் கதை என்றாலும் நாயகன் ஒரு சாது இளைஞனாக வருவது, அந்தச் சாது மிரளக் கூடிய அளவுக்குச், சந்தர்ப்பங்களை ஒன்றுக்குப் பின் ஒன்றாக உருவாக்கி நம்மை “சாதுவே பொருத்தது போதும், பொங்கி எழு” என்று குமுற வைத்தது, படத்தின் வெற்றியை உறுதிப் படுத்துகிறது. விஷால் சண்டைக் காட்சிகளில் சாதுவை தொலைக்காமல் கச்சிதமாகச் சண்டை போடுவதைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
நியூஸிலாந்து, மற்றும் மொரிஷியஸ் கடற்கரை இல்லாமல் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குள் ஒரு பாடல். அதுவும் வித்தியாசம்தான். (80-83 என் மதுரைக் கல்லூரி நாட்களை அசை போட்டேன். அதற்கு என் personal thanks. சென்னை வாசிகளுக்கு, பீச் மாதிரிதான் மதுரை வாசிகளுக்கு மீனாட்சி கோயில்). அதுபோல “ஒத்தக்கடை” பாட்டில் இடையே வரும், லக்ஷ்மி மேனனுடைய ஃபோன் கால், கேலிக்கிடமாகி கதிகலங்கி நின்ற விஷாலைத் துள்ளி ஆட வைப்பதும் ரசிக்கும்படியாக இருந்தது. இழவு வீட்டில் ஒப்பாரிக்குப் பதிலாக இறந்தவரைப் போற்றி ஒரு பாடல். அதுவும் கொஞ்சம் வித்தியாசமாக நன்றாகத்தான் இருந்தது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக பாரதிராஜா.
பாரதிராஜா என்ற, சிறந்த இயக்குனரைக் கண்ட நமக்கு பாரதிராஜா என்ற சிறந்த நடிகரை (நல்ல ஒரு அப்பாவை) நமக்கு நம் திரை உலகிற்கு இப்படத்தின் மூலம் தந்ததற்கு இயக்குனர் சுசீந்தரனுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். லக்ஷ்மி மேனனுக்கு நடிக்க வாய்ப்பில்லாமல் போனது வருத்தத்திற்குறியது.
மாட்டுத்தாவணி பஸ்டாண்டில், விஷால் தன் அப்பாதான் ரவுடிகளுக்குப் பணம் கொடுத்து வில்லனைக் கொல்ல முயன்றவர் என்று தெரிந்ததும், அவரைக் கொல்லக் காத்திருக்கும் வில்லன்களின் ஆட்களிடமிருந்துக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்ப்பது ஒரு க்ளமாக்ஸுக்கு சமமான அருமையான காட்சி. இறுதியில் இருவரும் மாறி மாறி “அப்பாவுக்கும், மகனுக்கும் இடையில், மத்தவங்களுக்குத் தெரியாமல் பேசுவதற்கும், செய்வதற்கும், ஆயிரம் இருக்கும்” என்று சொல்லும் காட்சி மிக அருமை.
வில்லனைக் கிணற்றில் தள்ளியபின் ஓடிச் சென்றுக் கல்யாணம் பண்ணுவது, நண்பனின் காதலி இறுதியில் எதிர்பாராமல் திடீரென வந்து, நண்பன் கொல்லப்பட்ட செய்தி சொல்லுவது (கொலை நடந்தது எப்போது? ஒரு வருடத்திற்கு முன்பா?), லக்ஷ்மி மேனனையே படம் பார்ப்பவர்கள் மறந்திருக்கும் போது, திடீரென வந்து நண்பனைப் “போடா வெளியே” என்று சொல்லி, கதவைச் சாத்திவிட்டு,
விஷாலைக் கட்டிப் பிடித்து தேவை இல்லாமல் பாட்டு பாடுவது (அதுவும் தொப்புளை மறைத்துக் கொண்டு.....எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்ல, ஆனால்,என் பின் பக்கம் உட்கார்ந்திருந்த ஒரு ரசிகனின் கமென்ட் காதில் விழுந்தது. “இதென்னப்பா இது, சிமென்ட் லாரிக்கு டார்பாலின் கட்டினது மாதிரி வயித்தச் சுத்தி ஒரு துணி”), இவை எல்லாம் கொஞ்சம் பிசிறினாலும் பாண்டியநாடு காண்போரின் மனதை ஓரளவு சீண்டிய நாடுதான் என்று சொல்லலாம்.
இடுக்கி கோல்ட் - மலையாளத் திரைப்படம் -
சில திரைப்படங்களைப் பார்க்கும் போது நம் மனதிற்கு இனம் புரியாத ஒரு சுகமான அனுபவம் ஏற்படும். நீண்ட நாட்கள் அந்தத் திரைப்படத்தில் வந்த சம்பவங்கள், கதா பாத்திரங்கள், அவர்கள் பேசிய வசனங்கள் எல்லாம் நம் மனதில் தங்கி, நாம் மறந்தேபோன இனிமையான நம் பள்ளிப்பருவ, கல்லூரி நாட்களை நினைவுக்குக் கொண்டு வந்துவிடும். அவற்றை, அந்நாட்களில், நம்முடன் இருந்தவர்களிடம் பகிர்ந்து கொள்ள நம் மனம் துடிக்கும். ஆனால, அவர்கள் எல்லாம் வெகு தொலைவில் இருந்தால் இது போல் அதிகமாக யாருமே கவனிக்காத நம் வலைப்பூவில்/வலைத்தளத்தில் எழுதி “கழுதை கத்தித் தன் ஆசையைத் தீர்த்துக் கொள்ளுமாமே” அதுபோல் தீர்த்துக் கொள்ளத்தானே முடியும். ஆனால், ஒன்றுமட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். உங்கள் வயது 40 க்கு மேல் என்றால், இந்த மலையாளத் திரைப்படம் உங்களை, உங்களுடைய இனிய பள்ளி, கல்லூரி வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும். சந்தேகமே வேண்டாம்.
“இடுக்கி கோல்ட்” என்பது படத்தின் பெயர். மலையாளத் திரை உலகில் நிலை நின்றிருந்த, புளித்துப் புரையோடிப்போன, இப்போது எங்குமே காணமுடியாத இல்லங்கள், தரவாடுகள், மேற்பர்வையாளரான ராமன் நாயர் அல்லது க்ருஷ்ணன் வாரியர், முந்தைய கள்ளு இறக்கும் தொழில் செய்த கோபாலன் மகன், இன்றைய பார் ஹோட்டல் முதலாளியுமான சிவன் குட்டி, மீன்களைத் தலையிலேற்றி விற்று வாழ்ந்த காசிம்மின் மகன், அரபு நாடு சென்றுத் திரும்பிய கோடீஸ்வரன் சித்திக், வறுமையில் வாடும் இல்லத்துப் பருவப் பெண்ணை சொந்தமாக்க இவர்கள் செய்யும் சதி, இப்படிப்பட்டக் கதாபாத்திரங்களின் இடையே நடக்கின்ற சம்பவங்கள் இப்படிப், பல படங்களில் பல முறை வந்தவற்றை மீண்டும் மீண்டும் கண்டு, துவண்டு போன நமக்கு ஒரு வித்தியாசமான கதையுடன் வரும் வித்தியாசமான படம்தான் இந்த “இடுக்கி கோல்ட்.” இயக்கியவர்-ஆஷிக் அபு.
மலையாள சூப்பர் ஸ்டார்களின் காலடியில் மிதிபட்டு சாக இருந்த மலையாளத் திரை உலகைக் காப்பாற்றி கரையேற்றிக் கொண்டிருக்கும் சில இளம் திரையுலக இயக்குனர்களில் இவரும் ஒருவர். தான் இதுவரை உருவாக்கிய திரைப்படங்களில் தன் திறனை நிலை நாட்டியவர்.
செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்து (படித்த வருடம் மற்றும் பெயர்கள் சகிதம் உள்ள விளம்பரம்), தன்னுடன் இடுக்கி பைனாவு ரெசிடென்ஷியல் ஸ்கூலில் படித்த நண்பர்களைக் காண விரும்புவதாகவும், தொடர்பு கொள்ள வேண்டிய ஃபோன் நம்பர் மற்றும் விலாசம் கொடுக்க,
சொந்தமாக ஸ்டுடியோ நடத்தும் ரவியும் (ஒருதலை ராகம் ரவீந்தர்), நர்ஸரி/ஃபார்ம் மற்றும் எஸ்டேட் ஓனர் மதனும் (மணியம்பிள்ளை ராஜு)
விளம்பரத்தைப் படித்து மைக்கேலை நேரில் கண்ட பின், கூடப் படித்த கராத்தே ஆண்டனி(பாபு ஆண்டனி,
இவரது மனைவியாக படத்தில் வருபவர் இவரது நிஜ வாழ்க்கை மனைவியேதான். அவர் குழந்தையாக தோன்றுபவரும் அவரது குழந்தையேதான்) மற்றும் ராஜனையும் (விஜயராகவன்) கண்டுபிடிக்கிறார்கள்.
அதன் பின், இடுக்கி பைனாவுவில் தாங்கள் படித்த பள்ளிக்கும், தங்கிய விடுதிக்கும் வருகிறார்கள். நிகழ்காலமும், கடந்த காலமும், காப்பியில் பாலும் சர்க்கரையும் சேர்வனபோல் சேர்க்கும்போது சொல்லத் தோன்றுமே, ‘ருசியான காபி’ என, அது போல் கலக்கப்பட்டிருப்பது படத்தைச் சிறப்பிக்கிறது.
பள்ளிப் பருவத்திலிருக்கும் ஒவ்வொருவரையும் பார்க்கும் போது, முதிர்ந்தவர்களாக இருக்கும் நாயகர்கள் தங்கள் பள்ளிப் பருவத்தில் இப்படித்தான் இருந்திருப்பார்கள், “அப்பனை உரித்து வைத்தது போல்” என்று சொல்லத் தோன்றுகிறது. கதா பாத்திரங்களின் தேர்வு “Casting” அவ்வளவு அருமை. அதில் ரவீந்தரின் மகன் ப்ரதாப் போத்தனின் இளமைப் பருவத்தைச் செய்வதாக ரவீந்தரே ஒரு பேட்டியில் சொன்னபோதுதான் தெரிய வந்தது. (நிஜ வாழ்கையில் பையன் அப்பன் ரவீந்திரனைத்தான் உரித்து வைக்க வேண்டுமா? அம்மாவை உரித்து வைத்தது போல் இருக்கக் கூடாதா என்ன?. திருச்சூரில் கடந்தவருடம் குழந்தைகளுக்கானத் திரைப்படவிழாவில் (Children's Film Festival)
நான் இயக்கியக் குறும்படம் “பரோல்” (Parole) திரையிடப்பட்டது. அப்போது நல்லத் திரைப்படம் எடுப்பது எப்படி என்று மிக அருமையாக வகுப்பெடுத்து விளக்கிய போதுதான் ரவீந்தரைப் போன்ற நல்ல நடிகர்களுக்கு சினிமா என்பது ரத்தத்தில் ஊறிய ஒன்று என்று புரிந்தது. ரவீந்தர், மலப்புரத்தில் ஒரு திரைப்படக் கல்லூரி (Film Institute) நடத்துகிறார். எல்லாத் திரைப்பட விழாக்களிலும் பங்கெடுக்கவும் செய்கிறார்.)
படத்தில் புகைப்பிடிக்கும், ம்து அருந்தும், ஏன் கஞ்சாவே புகைக்கும் காட்சிகள் (அதுவும் 10ஆம் வகுப்பு மாணவர்கள்!) இருந்தாலும், திரைக்கதையும், வசனமும், நடிப்பும் இணைந்தக் காட்சிகள் படத்துக்கு இன்றியமையாதது என்று நம்மை நம்பச் செய்வதாகவே இருக்கிறது. சில படங்களில் வரும் இது போன்ற சம்பவங்கள் அவற்றைச் செய்யத் தூண்டுபவையாக அமைவதுண்டு. கதாநாயகியே இல்லாத படம் இது. கதாநாயகர்களோ 50 வயதுக்கு மேற்பட்ட தொப்பையோ, சொட்டையோ விழுந்த நாயகர்கள். நகைச்சுவைக்காக இதில் எந்த கதாபாத்திரம்களும் இல்லை. “ஏய் சொட்டைத்தலை அப்பா, பேசாம இரு”, என்றெல்லாம் சொல்லி நம்மைச் சிரிக்கவைக்கும் இக்காலத்தில், நகைச்சுவையாக மாறும் சம்பவங்கள் மட்டுமே இப்படத்தில் உள்ளன. கராத்தே ஆண்டனியைத் தேடி போகும் நண்பர்கள் சரியான விலாசம் இல்லாததால் வழியில் நின்ற ஒருவரிடம் “உயரமுள்ள கராத்தே மாஸ்டர்” (ஆண்டனியும் கராத்தே கற்றதால், கராத்தே மாஸ்டராகி இருப்பான் என்ற ஊகத்தில்) வீடு எங்கே இருக்கிறது என்று விசாரிக்க, “ஐயோ! காலையில் இறந்து போனார். உடல் பக்கத்தில் உள்ள சிமெட்ரியில் அடக்கக் கொண்டுபோய் இருக்கிறார்கள். வாருங்கள் ஒருவேளைப் பார்க்க முடியும்”, என அவர்களை அழைத்துச் சென்று, குழியில் இறக்கி வைக்கப்பட்ட சவப் பெட்டியை, ஃபாதருடன் பேசி வெளியே எடுத்துத் திறந்து பார்க்க அது 65 வயது முதியவராக ஏதோ ஒரு ஆண்டனி என்று தெரிந்ததும், அனைவரும் சமாளிக்கும் காட்சி அழகு.
ஏதோ கஞ்சா விற்கும் ஜான் எப்போதோ விவரித்த “இடுக்கி கோல்ட்” எனும், அதிகாலையில் பொன் கதிர்கள் ஏந்திய கஞ்சா செடிகள் வளர்ந்து நிற்கும் கஞ்சா தோட்டத்தைக் காண, ஏதோ ரப்பர் மற்றும் தேயிலைத் தோட்டத்தைப் பார்க்கப் போவது போல 35 வருடங்களுக்குப் பிறகு போகும் அவர்களுக்குக் காத்திருப்பது என்னவோ அவர்கள் அறியாப் பருவத்தில் செய்த ஒரு தவறுக்கானத் தண்டனை. எப்படியோ, “இடுக்கி கோல்ட்” அதிலிருந்தெல்லாம் காப்பாற்றி அவர்கள் திரும்பிச் செல்ல வழி காண்பிக்கின்ற க்ளைமாக்ஸ் மிக நன்றாக உள்ளது. 15ஆம் வயதில் தனக்கு நடந்தக் கொடுமைக்கு, 55 வயது வரை காத்திருந்து பழிவாங்கும் கதாபாத்திரங்கள் உள்ள படங்களைக் கண்ட நமக்கு, 55ஆம் வயதில் வரும் பக்குவம், எப்படி தனக்கு வருடங்களுக்கு முன்பு இழைக்கப்பட்ட கொடுமைகளை மறந்து மன்னிக்க வைக்கிறது, என்பதை மிக அழகாக விளக்கும் இப்படம் எல்லாவகையிலும் பாராட்டுப் பெறுவதில் அதிசயப்பட ஒன்றுமில்லையே.
ஓநாயும் ஆட்டுக் குட்டியும்
ஒரு காதல், பஞ்ச் டயலாக்கு, அதையும் ஹீரோ நாம் அடுத்த நாளு ஒரு டாக்டரப் போயி பார்க்கற அளவு கத்தணும், மரத்த சசுத்தியோ, இல்ல கண்டிப்பா வெளிநாட்டுல போயி ஒரு 3, 4, பாட்டு,அப்பத்தானே நம்ம மக்கள் பார்க்காத இடம்னு சொல்ல முடியும், ப்ரொட்யூசர் தலைல துண்டப் போட்டுக்கிட முடியும்....ஹீரோயினுக்கு கொஞ்சமாவது வேலை வேணும்ல....அப்புறம்ஒரு 2, 3, ஸீன் செண்டிமென்ட்....கதைல இல்லாத ஒரு காமெடி ட்ராக், வில்லன்...வில்லனோட அல்லக்கைக்கு ஒரு குத்துப்பாட்டு, ஹீரோ ஒரு சோகமா சென்டிமெண்டா ஒரு பாட்டு, அப்புறம் ஹீரோ வில்லனைப் பார்த்து ஒரு பக்க டயலாக்கு, வில்லன் ஹீரோவைப் பார்த்து ஒரு பக்க டயலாக்கு, வில்லனின் ஆட்கள் ‘ஏய். ஏய்’ நு கத்தி, அறுவானு தூக்கிக்கிட்டு கார்லயே கூட ஃபுட்போர்ட் தொங்கிகிட்டு சுத்தணும், அப்புறம் ஹீரோவோடு வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஒண்ணு மொக்கை போட்டுகிட்டு, ஹீரோவோட காதலுக்கு ஹெல்ப் பண்ணுறோமுனு ரவுசு விட்டுகிட்டு...இப்படிப் போனாத்தானேயா ஒரு 2 ¼ மணி நேரத்த ஓட்ட முடியும். அதுக்கு அப்புறம் ஒரு ¼ மணி நேரம்தானேங்க. பெரிய்ய்ய்ய கஷ்டம் பாருங்க..கதை சொல்ல...ஒரு ஒண்ணாங்க்ளாஸ் படிக்கற புள்ளையே சொல்லிடும்க....இதத்தானேயா இத்தன நாளு பொறுத்துக்கிட்டு பார்த்துக்கிட்டுருக்கோம். ஆனா, இடையில நல்ல மனசு உள்ள டைரெக்டர்ஸ் கொஞ்சம் நல்ல படமா எடுக்கத்தான் செய்றாங்க...இருந்தாலும்...
இப்படி நம்ம தமிழ் நாட்டு மக்கள் அல்லல் பட்டுக் கொண்டிருந்த வேளைல, இல்லனா பழக்கப்பட்டு வேறவழி இல்லாம இப்படிப்பட்ட படங்களப் பார்த்துப் பழகி இருக்கும் வேளைல, ஓநாயும் ஆட்டுக்குட்டியும்னு ஒரு படம் வந்தா எப்படி இருக்கும் நம்ம மக்களுக்கு? அதுவும் கால்சட்டை போட்டு, மேல்சட்டை பாதியாவும், தொப்புளும் காட்டர ஹீரோயின் இல்ல, பாட்டே இல்ல அப்படின்னா..ஓ! ஏதோ குழந்தைங்க படம் போல, அம்புலிமாமா படம் போலனுதானே நினைப்பாங்க? போஸ்டர பார்த்துட்டு, ஏதோ இங்கிலீசு படம் போலனு நினைச்சுட்டாங்க போல...நம்ம மக்களுக்கு இப்படி எல்லாம் பேரு போட்டா என்னங்க புரியும்? அதான் முதல்ல படம் பார்க்க ஒரு 10, 15 பேரு இருந்தாலே பெரிய விஷயம் மாதிரி கூட்டமே இல்லாம இருந்துச்சு.
நம.ம மக்கள் இன்னும் இந்த மாதிரி படத்துக்கு எல்லாம் மனதளவில் தயாராகவில்லைனுதாங்க சொல்லணும். இந்த மாதிரியான் ஒரு சூழ்நிலையிலும் இப்படி ஒரு படம் எடுக்கத் துணிந்த டைரக்டர் மிஷ்கின் அவர்களுக்கு சல்யூட் அடித்துப் பாராட்டலாம். அசாத்திய துணிச்சல், மன தைரியம்.
திரு மிஷ்கின் அவர்களுக்கு,
இத இதத்தான்யா நாங்க இவ்வளவு நாளும் எதிர்பார்த்தோம் அப்படினு சொல்ற மாதிரி ஒரு படம் கொடுத்துருக்கீங்க. மிஷ்கின் அவர்களே எப்படிய்யா இப்படி ஒரு வினோதமான, வித்தியாசமான ஒரு பேரு சிந்திக்கத் தோன்றியது உங்களுக்கு? சபாஷ்.!
கதை சொன்ன விதம் மிக அழகு, மட்டுமல்ல தமிழுக்குப் புதிது. ஆரம்பமே நம்மை நிமிர வைக்கிறது. தொய்வில்லாத ஸ்க்ரீன் ப்ளே, அடுத்து என்ன என்றுத் தோன்றும் அளவு, மிக அற்புதம். முழு கதையும் இரவில்தான். ஓநாயும், ஆட்டுக்குட்டியும் ஓடிக் கொண்டே இருக்கின்றன.
ஆட்டுக்குட்டி ஓநாயிடம் சிக்கிவிட்டதோ என்று நினைக்கும் தருவாயில், ஓநாய் ஆட்டுக்குட்டியை ஒன்றும் செய்யாதிருக்க,அந்த ஆட்டுக்குட்டியே ஓநாயைச் சிக்கவைக்க முயலும்போதும் ஓநாய் ஒன்றும் செய்யாது இருக்க, ஆச்சரியம். இது வழக்கமானது இல்லையே. ஓநாய் எதற்காக ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற நினைத்து ஆட்டுக் குட்டியையும் சேர்த்துக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறது? ஒரு வேளை, ஃப்ளாஷ் பாக்காக அந்தக் கதையில் ஹீரோயின், ஹீரோவுடன் ஒரு பாட்டு என்று வருமோ என்றால் அதுவும் இல்லை. ஃப்ளாஷ் பாக் என்பதே இல்லாமல் நேரான கதை அமைப்பு. எதற்காக இந்த ஓட்டம் என்பதற்கானக் கதையை அந்தச் சிறு பெண் கதை சொல்லக் கேட்கும் போது ஓநாய் குழந்தைக்குச் சொல்வது போல பார்வையாளர்களுக்குப் படத்தின் கதையை சொல்லும் இடம் அருமை. கதை, சின்னக் குழந்தைக்குச் சொல்லும் கதைதான் என்றாலும் அதில் இப்படி பெரியவர்க்குப் பொருந்தும் ஒரு கதையாக எடுத்த விதம் வித்தியாசம்தான். படத்தில் பல காட்சிகளின் அமைப்பு இன்றைய வாழ்வின் யதார்த்தத்தைப் பிளந்து வைக்கிறது. அது நக்கல் நகைச்சுவையாகவும் வெளிப்படுகிறது. வசனங்கள் மிகக் குறைவாக, அளவாக இருப்பது மனதுக்கு இதமாக இருக்கிறது. இசைஞானி இளயராஜாவின் BGM பற்றிச் சொல்லி மாள்வதற்கில்லை. அப்படிப்பட்ட உயிர்த் துடிப்பு இந்தப் படத்திற்கு. அதுவும் வெகு நாட்களுக்குப் பிறகு.
இந்தக் காட்டில், ஓநாய், ஆட்டுக்குட்டி, செந்நாய், புலி எல்லாமே சிறந்த, இயல்பான நடிப்பு. சண்டைக் காட்சிகள் எல்லாமே சாதாரணமாக நடப்பது போல இருந்தாலும் இறுதியில் வரும் அந்தச் சண்டைக் காட்சி மட்டும் கொஞ்சம் மிகையாக உள்ளது. லைட்டிங்க் சூப்பர். அதுவும் இரவில் நடக்கும் கதை என்பதால் பல காட்சிகள் தெரு விளக்குகளின் வெளிச்சத்தில் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளன. அதுவும் இறுதியில், பங்களித்தவர்களின் பெயர்கள் வருகிறது பாருங்கள் அதுவும் புதுமை ஏதோ காட்டில் மிருகங்கள் நடித்தது போல, கரடி, செந்நாய், ஓநாய், ஆட்டுக்குட்டி, நீர்யானை, இலைகள் நாம், என்று வித்தியாசமான அறிமுகம்.
நீங்கள் இதுவரை எடுத்தப் படங்களில் முகமூடியைத் தவிர மற்ற படங்கள் நன்றாக இருந்தாலும், இந்தப் படம் உங்களை உலகத் திரையரங்குகளுக்கு உயர்த்தி உள்ளது. உங்களை நோக்கித் திரும்பவும் வாய்ப்புள்ளது. உலகப் படங்களுக்கு இணையாகவும் நிறுத்தி உள்ளது எனலாம்.
எனக்குத் தெரிந்தவரை, பெண்களை அதிகம் திரையரங்குகளில் பார்க்க முடியவில்லை. ஒருவேளை இந்தப் படத்தில் பெண் காரெக்டர்கள் அதிகம் இல்லாததால் அவர்களை இப்படம் அதிகம் ஈர்க்கவில்லையோ என்றும் தோன்றுகிறது. இல்லை, பெண்களுக்கு இந்தப் படம் அவ்வளவாக ரசிக்கவில்லையோ? ஆனால், இந்தப் பதிவை என்னுடன் சேர்ந்து எழுதுவது என் நண்பர், ஒரு பெண்தான், அவர் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுத்தான் இந்தப் பதிவு.
எதுவானாலும், இப்படம் தமிழ் திரையுலகிற்கு ஒரு மைல் கல். நாங்கள் தலையைப் பிய்த்துக் கொண்டு, காதைப் பஞ்சினால் அடைத்துக் கொண்டு, சில சமயம் படம் தொடங்கும் போதே கொட்டாவி விட்டுத் தூங்கி, கொடுத்தக் காசிற்காக உட்கார்ந்து, மூளையைக் கசக்கி கதை என்ன என்று யோசித்து அல்லல் பட்டது போதும். எனவே, மிஷ்கின் அவர்களே, தமிழ்த் திரையுலகின் பழைய பஞ்சாங்கப் பாதையில் செல்லாமல் எங்களைப் போன்ற ரசிகர்களுக்காகவாவது இது போன்ற வித்தியாசமான. நேர்த்தியுடன் நல்லத் திரைப்படங்களைத் தருமாறு, நல்ல திரைப்படம் காண விரும்பும் ரசிகர்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக