திங்கள், 18 மார்ச், 2024

ஜெயமோகனும் மஞ்ஞும்மல் பாய்ஸும்

 

இதைப் பற்றி ஒன்றும் சொல்லாமலிருக்க என்னால் முடிந்தவரை தாக்குப் பிடித்தேன்.  இனி முடியாது என்பதால்தான் இந்தக் கருத்து.

செவ்வாய், 12 மார்ச், 2024

துபாய் நாட்கள் – ஐந்தாம் நாள் – 30-10-2023 மற்றும் துபாய்க்கு விடை சொல்லும் நாள் – 31-10-2023

 

முந்தைய பதிவுகளை வாசித்தவர்கள், கருத்திட்ட அனைத்து நட்புகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. என் துபாய் பயணத்தின் ஐந்தாவது நாள் சென்ற இடங்கள் மற்றும் கடைசி நாள். 

துபாய் நாட்கள் – ஐந்தாம் நாள் – 30-10-2023

அன்று நாங்கள் தனியாக மெட்ரோ மற்றும் பஸ் ஏறி மிராக்கிள் கார்டன்  - Miracle Garden – அதிசயப் பூங்கா சென்று பார்க்க வேண்டும். காலை வழக்கம் போல் Baniyas Square லிருந்து மெட்ரோ ரயிலில் ஏறி Mall of Emirates – மால் ஆஃப் எமிரெட்ஸ் நிலையத்திற்குப் பயணித்தோம். போகும் வழியில் துபாய் ஃப்ரேமை – Dubai Frame ஐ மிகவும் அருகில் பார்த்தோம். 1 (காணொளியில்)

வெள்ளி, 8 மார்ச், 2024

சிவராத்திரி

 

ஜோதிர் லிங்கமாய் பிர்பஞ்சத்தில் எங்கும் சிவமயமாகவும் சிவசக்தியாகவும் நிற்கும் பரம் பொருளுக்கான ஒரு ராத்திரி. மாதமிருமுறை அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் முன் வந்து போகும் பிரதோஷம் விரதம் ஆகின்ற சிவராத்திரி வருடத்தில் மாசி மாதம் வரும் அமாவாசைக்கு முன் வரும் போது மகா சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.

முனிகளும் யோகிகளும் பிறப்பறுத்து மோட்சம் பெற அந்நாளை உபயோகிக்கும் போது, சாதாரண மக்கள் வருடத்தில் அந்த ஒரு நாளை அவர்கள் வழிபடும் இறையின் திருநாமத்தை, நமசிவாய மந்திரத்தை இரவெல்லாம் உச்சரித்து அவர்களுக்குள் உறையும் ஆத்மலிங்கத்துடனான தொடர்பை திடப்படுத்தும் நாள் என்று சொல்லலாம். எல்லோரையும் அதில் பக்தியுடன் பங்கெடுக்கச் செய்ய அந்நாள் சிவபெருமான் பார்வதி தேவியை மணந்த தினம் என்றும் மனித குலத்தைக் காக்க சிவபெருமான் ஆலகால விஷமருந்தி நீலகண்டனாய் மாறிய தினமென்றும் சொல்லவும் நம்பவும்படுகிறது.

எல்லா மதங்களிலும் இதுபோன்ற பல சம்பவங்களின் அடிப்படையில்தான் அவரவர்களது பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அதுபோல் இந்து மதத்தில் சைவ நெறியை பின்பற்றுபவர்களின் நம்பிக்கை இது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர்கள் கொண்டாடும் சிவராத்திரி நாட்களில் பல அதிசய சம்பவங்களும் நிகழ்ந்து இருக்கின்றன. அவையெல்லாம் அடுத்த தலைமுறைக்கு இறை உணர்வை வளர்க்க உதவியும் இருக்கிறன.

ஒரு வேடன் புலியிடமிருந்து தப்ப ஒரு வில்வ மரமேறி மரத்திலேயே உறங்கி, விழாமல் இருக்க வில்வ இலைகளைப் பறித்து இறைவனின் நாமம் சொல்லி ஒரு கல்லில் இட அக்கல் சிவலிங்கமாய் மாறி அங்கு இறைவன் தோன்றி அவனுக்கு மோட்சம் அளித்த கதை.

இது போன்ற சம்பவங்களில் எல்லாம் வாய்மொழியாய் பல தலைமுறையைக் கடக்கும் போது அவற்றில் ஏற்படும் கோர்த்தல், களைதல் மற்றும் மாற்றங்களைத் தவிர்க்க முடியாது.

அப்படி கேரளத்தில் 135 ஆண்டுகளுக்கு முன்னும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதைப்பற்றிதான் நான் இங்கு சொல்ல இருக்கிறேன்.

1888 ஆம் ஆண்டு ஒரு சிவராத்திரி நாள். இடம் நெய்யாற்றின் கரை அருகே உள்ள அருவிப்புரம். அன்றெல்லாம் பிற்பட்ட மற்றும் தாழ்ந்த இனமென்று முத்திரை குத்தப்பட்டவர்களுக்குக் கோவிலுக்குள் மட்டுமல்ல அதன் அருகே கூடப் போகக்கூடாது எனும் நிலை. அவர்களுக்கு என ஒரு கோவில் கட்டி வழிபட வசதியும் இல்லை. அனுமதியும் இல்லை.

அன்றைய இஸ்லாம் மற்றும் கிருத்தவர்களின் நம்பிக்கையை பின்பற்றி பலரும் மதம் மாறி இறையருள் பெற்றிருந்தாலும் பலருக்கும் அப்படிச் செய்யத் தயக்கம். பயம். வைகுண்ட சுவாமிகள், அய்யாவு சுவாமிகள் போன்றவர்கள் தந்த ஊக்கம், மதம் மாறாமலேயே மூதாதையர்கள் வழிபட்ட முறையில் நாமும் வழிபடலாம் என்ற சிந்தை வளர உதவியது. மருத்துவா மலையில் தியானத்திலிருந்து இறையை உணர்ந்த ஸ்ரீ நாராயண குரு எனும் இளம் சன்னியாசியிடம் முறையிட்டதன் பலனாக அவர் ஆலோசனைப்படி நெய்யாற்றின் கரையில் நமச்சிவாய மந்திரம் சொல்லி கூடியிருக்கும் மக்கள்.

இரவு 12 மணி அளவில் தன் தியானத்தை முடித்து ஆசிரமத்திற்கு வெளியே வந்த குரு, ஆற்றின் ஆழமான சங்கரன்குழியில் முங்கி நீண்ட நேரத்திற்குப் பின் ஒரு கல்லுடன் வருகிறார். தன் மார்போடு பிடித்தபடி நீண்ட மூன்று மணி நேர தியானம், நின்றபடி செய்கிறார். கண்களில் இருந்து வழியும் கண்ணீரால் அபிஷேகம் செய்யப்பட்ட கல், வேடன் வில்வ இலைகளால் பூஜித்த கல் சிவலிங்கமானது போல், அதுவும் சிவ சைதன்யமுள்ள சிவலிங்கம் ஆகிறது.

பரம்பொருளான ஜோதிர்லிங்கமும் ஆத்ம லிங்கமும் உருகி வழிந்த கண்ணீரும் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் சிவ நாமங்களும் அந்த சிவராத்திரியில் சிவனை சிவசைதன்யத்தை அங்கு  வரவழைத்தது.

அந்த லிங்கம் சிவலிங்கமாக்கப்பட்டு அங்கிருந்த பாறையில் அஷ்டபந்தமின்றி பிரதிஷ்டை செயப்படுகிறது. அப்படி அன்று வேத விதிப்படி அல்லாமல் பிராமணர் அல்லாத ஒருவரால் பிரதிஷ்டை நடத்தியதால் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றம் வரை ஸ்ரீ நாராயண குரு சென்று வாதாடி இது முற்பட்ட வகுப்பினருக்கான சிவன் அல்ல பிற்பட்ட வகுப்பினருக்கான சிவன் என்று சொல்லி வெல்லவும் செய்கிறார்.

அப்படி, கோவிலும் இறைவனும் இல்லை என்றிருந்த அன்றைய திருவிதாங்கூர், கொச்சி, மலபார் வாழ் பிற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மதமாற்றம் செய்யாமலேயே இறைவனும் கோவிலும் கிடைக்கச் செய்ததும் இதுபோன்ற ஒரு சிவராத்திரி நாளில்தான். அது போலவே 1924 ஆம் ஆண்டில், மார்ச் 3, 4 தேதிகளில் ஒரு சிவராத்திரி நாளில்தான் ஸ்ரீ நாராயண குரு ஆலுவாவில் சர்வபத மாநாடு நடத்தி எல்லா மதங்களும் ஒரே ஒரு ரகசியமான பரம்பொருளையே மையமாகக் கொண்டு  இயங்குகின்றன. இறை உணர்வு ஆத்ம சுகம் தரும் ஒன்று. அதுவே எல்லா மதங்களும் கூறுவது. எனவே மனித குலத்திற்கு ஒரு சாதி, ஒரு மதம், ஒரு தெய்வம் தான் என்று சொல்லி மத வேற்றுமை பாராத இறை உணர்வின் முக்கியத்துவத்தையும் இந்த சிவராத்திரி நாளில்தான் விளக்கினார்.  

எதிர்காலத்தில் இந்நிகழ்வுகளும் சிவராத்திரியின் பெருமை பற்றி பேசும்போது பேசப்படும் என்பது உறுதி.

தங்கள் வாழ்வையே சிவபாதத்தில் வைத்து சிவபோகத்தில் திளைத்து சிவலோகம் புகும் சிவனடியார்கள் போல் அல்லாமல் வருடம் ஒரு நாள் மட்டும் இரவு சிவ தலம்/தலங்கள் சென்று இயன்ற மட்டும் சிவ நாமம் சொல்லி இறைவனை வேண்டும் சாதாரண மனிதர்களுக்கும் சிவனருள் இறையருள் உண்டு. ஏனென்றால், நம்முள் உறையும் சிவனும் நாமும் ஒன்றே அதை உணரத்தான் இந்த சிவராத்திரி.

எந்நாட்டவரின் இறையே போற்றி!

தென்னாட்டவரின் சிவனே போற்றி!

சென்ற பதிவுகளை வாசித்துக் கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி. துபாய் பயணத்தின் இறுதிப் பகுதி வெளியிட இருந்த போது, சிவராத்திரி வந்துவிட அதைப் பற்றி ஒரு சொற்பொழிவு கேட்டதும், உற்சாகம் தொற்றிக் கொள்ள ஒரு சின்ன பதிவு எழுதிடலாமே என இப்பதிவு. துபாய் பதிவு தள்ளி வைக்கப்பட்டது. 

பெண்கள் தினமும் கூட. அனைத்து சகோதரிகளுக்கும், நம் எல்லோரது வாழ்விலும் நமக்கு உறுதுணையாய் நிற்கும் பெண்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!


-------துளசிதரன்