ஞாயிறு, 28 ஜூலை, 2019

காசு வரை பிள்ளை


https://engalblog.blogspot.com/2018/07/blog-post_10.html அருமையான தலைப்பிற்கும், கேவாபோக பகுதியில் அங்கு வெளியிட்டமைக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் மற்றும் எபிக்கு. 

இங்கு எங்கள் தளத்திலும் இது ஒரு சேமிப்பாக......


“அப்பா! அம்மாவை இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. எல்லாமே நார்மல். பெரிசா ஒன்னுமில்லை. ஹார்ட்தான் கொஞ்சம் வீக்கா இருக்கு. ட்யூ டு ஏஜ் னு டாக்டர் சொல்லிட்டார்”

“இறைவா!” என்று கண்ணை மூடிக் கொண்டு கையை நெஞ்சில் வைத்துக் கொண்டார் வேதமூர்த்தி. “கணேசன், ராஜா, லலிதா எல்லார்க்கிட்டயும் சொல்லிட்டியா சுந்தர்!? அம்மா மூணு நாளா சரியா பேசமுடிலைல. அதனால எல்லாரையும் பாத்து பேச ஆசைப்படுவா”

“சொல்லியாச்சுப்பா. எல்லாரும் ஈவ்னிங்க் வீட்டுக்கு வந்துருவோம்னிருக்காங்க”

மாலை அம்மாவை வீட்டிற்கு அழைத்து வந்ததும் எல்லோரையும் பார்த்து சந்தோஷப்பட்டார். உள் ரூமில் படுக்க வைத்து மீனாட்சி உறங்கியதும், தான் வருவதாக வேதமூர்த்தி சொல்லவும் கதவை மூடி வைத்துவிட்டு எல்லாரும் ஹாலில் கூடினர். எல்லோரும் என்றால் வேதமூர்த்தியின் மூன்று பிள்ளைகள், மருமகள்கள், மகள், மாப்பிள்ளை. அங்கு ஒரு மயான அமைதி நிலவியது. எப்படித் தொடங்குவது? யார் தொடங்குவது என்று இருக்கலாம்.

முதலில் மூத்தவன் சுந்தர்தான் தொடங்கினான். “இந்த 3 நாள் அம்மா ஆஸ்பத்திரியில இருந்ததுக்கு 2 லட்சம் செலவாகியிருக்கு. இதோ மெடிக்கல் பில் எல்லாம்.”

மீண்டும் அமைதி. “சரி இப்ப என்ன சொல்ல வர? நாங்க மூணு பேரும் ஷேர் பண்ணிக்கணும்னு சொல்ல வரியா?” பெண் லலிதா அமைதியைக் கலைத்தாள்.

“எங்களால இப்ப முடியாது. குழந்தைங்க படிப்பு அது இதுனு. நிறைய செலவு இருக்கு” – மூன்றாவது மருமகள்

“எங்களாலயும் இப்ப முடியாது.” இது இரண்டாவது மருமகள், மகன்.

“அப்ப நாங்க இப்ப 2 லட்சம் செலவு செஞ்சுருக்கோமே அதுக்கு என்ன சொல்லறீங்க? எங்களுக்கு மட்டும் செலவு இல்லையாக்கும்? பெரிய பையன் இன்னும் செட்டில் ஆகலை. அவன் படிப்பு செலவே ஒரு தொகை ஆகிருச்சு. அடுத்து ரெண்டு பேரு. ஏங்க சும்மா வாய மூடிட்டுருக்கீங்க. சொல்ல வேண்டியதுதானே." – இது மூத்த மருமகள் சுந்தரின் மனைவி.

“அண்ணி. அப்பாகிட்டயே சொல்லிடலாம். இத்தனை செலவாச்சுனு”

மீனாட்சியின் தேவைகளைக் கவனித்துவிட்டு எழுந்து வந்தவரின் காதில் இந்த உரையாடல்கள் விழவும், மீண்டும் உள்ளே சென்றார்.  பண விஷயம் பற்றிப் பேசப்பட்டது மீனாட்சியின் காதில் விழவில்லை என்பதை அறிந்து அவர் மனதில் ஒரு சமாதானம். நல்லகாலம் மருந்துகள் அவளை அசத்தியிருக்கிறது.

“சரி..பணத்தைப் பத்தி அவர்கிட்ட சொல்லிடலாம்.….அப்புறம்? இப்ப ரெகுலர் செக்கப்னு சொல்லிருக்காங்கல்ல. யாரு இவங்களை இங்க வைச்சுக்கறதாம்?”

மீண்டும் அமைதி.

“இப்படி இருந்தா எப்படி? ஏதாவது ஒரு முடிவு எடுத்துதானே ஆகணும்.” என்று லலிதா சொல்லவும் பெரிய மருமகள் முந்திக் கொண்டாள். 

“நான் வேலைக்குப் போயிட்டிருக்கேன். அதனால…..” என்று இழுத்தாள்.

இரண்டாவது மருமகளும், மூன்றாவது மருமகளும் அதே காரணத்தையும் இன்னும் ஏதோ பல காரணங்களையும் எல்லோரும் சொன்னார்கள்.

“அண்ணா, அப்ப யாரு பாத்துக்குவாங்க? பாவமில்லை?” - இது லலிதா.

“ஏன் நீ தான் கொண்டு வைச்சுக்கயேன்”

“என்ன அண்ணா இப்படிச் சொல்லற. நீங்க மூணு பேரும் இருக்கறப்ப பொண்ணு நான் கொண்டு வைச்சுக்கிட்டா நல்லாருக்காது. என் அத்தையும், மாமாவும் எங்கூடத்தானே இருக்காங்க”

“பொண்ணுனா அம்மா அப்பாவை பாத்துக்கக் கூடாதாக்கும்? மாப்பிள்ளை நீங்க இதுக்குப் பதில் சொல்லுங்க. நாங்க இப்ப எங்க பொண்டாட்டிங்களோட அம்மா அப்பாவை பார்த்துக்கலை?”

பதிலில்லை.

“அண்ணா ஊர்ல இருக்கற வீட்டை வித்துட்டு, இங்க நல்லதா நம்ம வீட்டுப் பக்கத்துலயே ஒரு வீடு பார்த்து வைச்சா?”

“இங்க வீட்டு விலையும் சரி, வீட்டு வாடகையும் சரி…உள்ள ரூபாய் அத்தனையும் போகும். கைவிட்டுப் போட வேண்டி வரும். அப்புறம் ஹாஸ்பிட்டல் செலவு யாரு பாப்பாங்க.? நீ கொடுப்பியா? உங்களுக்குத்தான் இன்னொரு வீடு இருக்குதே அதைக் கொடேன்”

உள்ளே சென்றிருந்த சுந்தரின் மனைவி, “ஏங்க கொஞ்சம் இங்க வரீங்களா? காப்பி கலந்திருக்கேன் எல்லாருக்கும்…” என்று கூப்பிட்டாள். கூப்பிட்டது காபி எடுத்துக் போக அல்ல என்பதும் சுந்தருக்குத் தெரியாதா என்ன?

“அத்தையையும் மாமாவையும் நாம பாத்துக்கிட்டா நாளைக்கு நாமதான் பாத்துக்கிட்டோம்னு ஊர்ல உள்ள வீட்டை நம்ம பேருக்கு மாத்திக்கலாம்ல. அதையும் இப்ப சொல்லிடுங்க …அப்படி இல்லைனா உயில் எழுதச் சொல்லுங்க”

“ம்”

சுந்தர் ஸ்னாக்ஸுடன் ஹாலுக்கு வந்தான். “நாங்க அம்மா அப்பாவை பாத்துக்கிட்டா அவங்க காலத்துக்குப் பிறகு அவங்க வீட்டை நாங்க எடுத்துக்குவோம்.”

மற்ற இரு மருமகள்களும், “அதெப்படி? எங்களுக்கும் அதுல பங்கு உண்டுல்ல?”

சுந்தரின் மனைவி காபியுடன் வந்தாள், “அத்தைக்குத்தான் ஒன்னுமில்லைல. அவங்க ஊர்லயே இருக்கட்டும்”

இப்படிப் பணம்தான் பேசப்பட்டதே ஒழிய அங்கு அம்மா அப்பா என்ற நேயம் எதுவும் பேசப்படவில்லை.

இன்று இவர்கள் அனைவரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் வேதமூர்த்தியும், மீனாட்சியும்தான். பிள்ளைகள் எது கேட்டாலும் பணத்தினால் மட்டுமின்றி உடல் உழைப்பாலும் செய்து கொடுத்துவந்தனர்.

இப்போதும் கூட மீனாட்சிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட போது ஊரில் உள்ள மருத்துவரின் பரிந்துரையின் பேரில்தான் பெரிய மகனுடன் பேசி இங்கு வந்தனர். பில் பற்றி பேசியது மட்டுமே அவர் கேட்டது. அவர் உள்ளே சென்றுவிட்டதால் நல்லகாலம் இவர்களை வைத்துக் கொள்வதைப் பற்றி பேசியது வேதமூர்த்தியின் காதில் விழுந்திருக்கவில்லை.

பில் பற்றி பேசப்பட்டது கேட்காதது போல் ஹாலுக்கு வந்தார் வேதமூர்த்தி. 

“சுந்தர்! நான் கேக்கணும்னு நினைச்சேன். டென்ஷன்ல கேக்க விட்டுப் போச்சு. மெடிக்கல் பில் எவ்வளவு ஆச்சு?” வேதமூர்த்தி கேட்டதும் அனைவரும் ஸ்தம்பித்தனர்.

“எங்கிட்ட அமௌன்ட் பத்தி சொல்ல உங்களுக்கு மனசு ரொம்பக் கஷ்டப்படும்னு எனக்குத் தெரியும். உங்களுக்கும் எவ்வளவோ செலவு இருக்கும். இந்தக்காலத்துல ஒவ்வொண்ணும் எவ்வளவு செலவாகுது. அதனால எவ்வளவு ஆச்சுனு சொல்லுப்பா”

சுந்தருக்கு கொஞ்சம் குற்ற உணர்வு வந்ததுதான். ஆனால் தனது மனைவியை மீறி அவனால் எதுவும் செய்ய முடியாது. மெடிக்கல் பில்லை நீட்டியதும் வேதமூர்த்தி அதற்குச் செக் எழுதிக் கொடுத்தார்.

“அடுத்த செக்கப் தேதி டாக்டர் எழுதிக் கொடுத்துருக்காரா?”

“ஆமாப்பா. இதே தேதி அடுத்த மாசம்.”

“ஆனா, நான் பிள்ளைங்க எல்லாரும் ஊருக்குப் போறோம்.” இது சுந்தரின் மனைவி. முந்திக் கொண்டாள்.

“அதனாலென்னம்மா. நீங்க போய்ட்டு வாங்க”

“அப்பா நாங்களும் வெக்கேஷனுக்கு பிள்ளைங்கள கூட்டிட்டு ஊருக்குப் போறோம்பா.”

“இந்தச் சின்ன வயசுலதான் ஊருக்கு எல்லாம் போய்ட்டு வரமுடியும் போய்ட்டு வாங்கப்பா சந்தோஷமா”

இதென்ன இவர் நாம் சொல்வதைப் புரிந்து கொண்டாரா? இல்ல புரிஞ்சும் புரியாத மாதிரி பேசுகிறாரா? என்று எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“அம்மாக்குத்தான் ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டாங்களேப்பா. ஊர்லயே பாத்துக்கலாம். அப்புறம்….அப்பா அந்த வீடு அம்மா பேர்லதான் இருக்குல்ல? அம்மாக்கு ஒன்னுமில்லைதான்….இருந்தாலும்… உயில் எழுதிரலாமாப்பா?”

“……………………………………………………………..   எழுதிடலாம்.. நாளைக்கு ஊருக்குப் போக டிக்கெட் புக் பண்ணனுமே கிடைக்குமா”

“டிக்கெட் புக் பண்ணியாச்சுப்பா தத்கல்ல. நாளைக்குக் காலைல ட்ரெயின்…”

“…………………………………………………………………..”
ரயிலில் வேதமூர்த்தியின் மடியில் மீனாட்சி படுத்திருக்க, வேதமூர்த்தி முந்தைய நாள் நடந்த இத்தனையையும் வேதனையுடன் நினைத்தார். ‘நல்ல காலம் மீனாட்சிக்கு நேத்து பிள்ளைங்க பேசினது எதுவுமே தெரியாது. பாவம். மருந்து சாப்பிட்டதுல நல்ல தூக்கம்” மீனாட்சியின் தலையை வருடிக் கொடுத்தார்.

“எதுக்கு இப்பவே ஊருக்குப் போகணும். இங்க எல்லாரும் இருக்காங்கல்ல…மனசு தெம்பாயிடும்” என்று சொன்னவளை, “ஊர்ல வேலை இருக்குதுனு” சொல்லி எப்படியோ சமாளிச்சுக் கூட்டி வந்தாச்சு. இதோ இப்பவும் நல்ல தூக்கம் தான். எப்படி ஒரு நிம்மதியான தூக்கம்! தெரியாமலே போகட்டும். வேதனை என்னோடயே போகட்டும். இறைவா! எங்க குழந்தைங்கள தண்டிச்சுராதப்பா! அவங்க எல்லாருக்கும் நல்ல மனசைக் கொடு.. எனக்கு முன்னாடி மீனாட்சிய கூப்பிட்டுரு. அவளால இந்த வேதனை எல்லாம் தாங்கிட்டு தனியா இருக்க முடியாது. இல்லைனா எங்க ரெண்டு பேரையும் ஒரே சமயத்துல அழைச்சிடு.” வேதமூர்த்தி கண்ணை மூடிக் கொண்டு மீனாட்சியின் கைகளுடன் தன் கைகளைக் கோர்த்துக் கொண்டார்.

வேதமூர்த்தியின் மொபைல் அடிக்கவும் பார்த்தால் பெரிய பேரன். 

“ஹை! தாத்தா! எப்படி இருக்கீங்க? பாட்டி எப்படி இருக்காங்க?”

“பரவால்லடா என் பேராண்டி... செல்லம். நீ எப்படி இருக்கடா?”

“நான் நல்லாருக்கேன் தாத்தா. நீங்க ஊருக்குப் போயிட்டுருக்கீங்கனு தம்பியும் தங்கச்சியும் அங்க நடந்ததெல்லாம் சொல்லிட்டாங்க. கவலைப்படாதீங்க. என் படிப்பு ஓவர். அடுத்த வாரம் லேண்டிங்க். நான் உங்க கூடத்தான் இருக்கப் போறேன். எனக்கு வேலை கிடைச்சதும் எங்கூடத்தான் நீங்க ரெண்டு பேரும் இருக்கப் போறீங்க. ஓகே? மற்றவை நேரில்! டேக் கேர் தாத்தா…”

வேதமூர்த்திக்கு மனமும் உடலும் பரவசமாகி பல வருடங்கள் குறைந்து இளமையானது போல் துள்ளியது. "இறைவா!" என்றவரின் கண்களில் நீர் பனித்தது.. சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள மீனாட்சி எழுவதற்குக் காத்திருந்தார்.

----------கீதா

46 கருத்துகள்:

  1. //வேதமூர்த்திக்கு மனமும் உடலும் பரவசமாகி பல வருடங்கள் குறைந்து இளமையானது போல் துள்ளியது. "இறைவா!" என்றவரின் கண்களில் நீர் பனித்தது.. சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள மீனாட்சி எழுவதற்குக் காத்திருந்தார்.//

    என் கண்களிலும் நீர் வருவதை தடுக்க முடியவில்லை.
    அன்பு வென்று விட்டது. பேரன் வைத்து கொள்ள முடியாவிட்டாலும் அந்த நான் இருக்கிறேன் என்ற வார்த்தை சந்தோஷத்தை கொடுக்கும். உடல் நலம், மனநலத்தை காக்கும் டானிக்.
    அங்கு என்ன கருத்து சொன்னேன் என்று தெரியவில்லை.
    இன்று தோன்றிய கருத்து.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலை, இரவு நேரம் ஆனால் நெட் மயங்கிவிடுகிறது...இத்தனை நேரம் முயற்சி செய்து...இப்ப வரும் போது பதில் கொடுத்துவிடுகிறேன்.

      கோமதிக்கா கிட்டத்தட்ட இதே கருத்துதான் நீங்கள் அப்போதுகொடுத்திருந்ததும்.

      கண்டிப்பாக நடக்கும் கோமதிக்கா. //பேரன் வைத்து கொள்ள முடியாவிட்டாலும் அந்த நான் இருக்கிறேன் என்ற வார்த்தை சந்தோஷத்தை கொடுக்கும். உடல் நலம், மனநலத்தை காக்கும் டானிக். //

      அதே அதே கோமதிக்கா...அப்படியான வார்த்தைகளே தெம்புதான். இப்படி எங்கள் வீட்டிலும் பேரன் பேத்திகள் சொல்வதுண்டு..

      மிக்க நன்றி கோமதிக்கா அழகான கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  2. //மாப்பிள்ளை நீங்க இதுக்குப் பதில் சொல்லுங்க. நாங்க இப்ப எங்க பொண்டாட்டிங்களோட அம்மா அப்பாவை பார்த்துக்கலை ?//

    இந்த சோகத்தில் இது நல்ல நகைச்சுவையாக இருந்தது

    பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நான் எழுதும் போது என் மனதில் இது தோன்றியதும் நானும் சிரித்துவிட்டேன்....

      எல்லாப் பிள்ளைகளின் மனமும் கல்லு அல்ல கில்லர்ஜி. நல்லதையே நினைப்போம். நடக்கிறதா இல்லையா என்ற கேள்வியைத் தவிர்த்து....அப்படி நல்லதை நினைக்கும் போது நம் மனம் இருக்கும் வரையிலேனும் சந்தோஷமாக இருக்குமல்லவா...

      கீதா

      நீக்கு
    2. மிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  3. நல்ல கதை. பாசிட்டிவ் ஆன முடிவு பிடித்திருந்தது. இங்கேயும் படிக்கத் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி கருத்திற்கு...

      வெங்கட்ஜி நான் முதலில் பேரன் சொல்வதைச் சொல்லாமல் முதல் முடிவாக வைத்திருந்தேன். இரண்டாவது முடிவாகப் பேரன் சொல்லுவதை பாசிட்டிவாக முடித்திருந்தேன். எனக்கும் இதுதான் பிடித்திருந்தது. ஏனென்றால் எங்கள் வீட்டில் இதெல்லாம் சர்வ சகஜம். பேரன் பேத்திகள் என்றில்லை அம்மா அப்பாவே பெரியவர்களைப் பார்த்துக் கொள்ளுவார்கள். கொள்கிறார்கள். எனவே பேரன் பேத்திகளும் அப்படியே...

      ஸ்ரீராமிற்கு இரு முடிவுகளையும் அனுப்பிருந்தேன் ஸ்ரீராமும் இரண்டாவது முடிவைத்தான் சூஸ் செய்தார்..ஸோ பேரன் பேசுவது சேர்ட்து கதை...

      மிக்க நன்றி வெங்கட்ஜி

      கீதா

      நீக்கு
  4. மிக மிக அருமை .கீதா மா.
    பயந்து கொண்டு வந்தேன் .நல்லபடியாக
    வேண்டாத பிள்ளைகளைவி வேண்டும் என்கிற பேரன் கிடைத்தானே.
    அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.
    நன்றி மா வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிம்மா கண்டிப்பாக ஒன்று மட்டும் உறுதி. நாம் எப்படி இருக்கிறோமோ அப்படி நம் குழந்தைகள்....கண்டிப்பாக நம் மனம் போல் அமையும் என்பதை நீங்கள் உங்கள் நெருங்கிய உறவுகள் பற்றிச் சொல்லி எழுதும் கதைகளிலும் அறிவதுண்டு.

      நான் பார்க்கும் குடும்பங்களில் அம்மா அப்பா தவறு செய்தால் பிள்ளைஅள் கேள்வி கேட்டுத் திருத்தி அல்லது தாங்கள் நல்ல முடிவு எடுப்பதையும் பார்க்கிறேன்.

      மிக்க நன்றி வல்லிம்மா பாராட்டியமைக்கு

      கீதா

      நீக்கு
  5. தாத்தாவுடன் பேரன் இணைவது மகிழ்ச்சிதான். இக்காலகட்டத்தில் இவ்வாறு நடப்பது சாத்தியமா என்று யோசிக்கவேண்டியுள்ளது. தற்போதுள்ள பெற்றோர் தம் பிள்ளைகளின்மீது தம் குணங்களைத் திணித்துவிடுகின்றனர். குழந்தைகளும் பெற்றோரைப் போலவே (பெரும்பாலும்) எதிர்மறை எண்ணங்களைக் கொண்டு வளர ஆரம்பிக்கின்றன. அவரவர்க்கு தான், தன் குடும்பம் அதாவது மனைவி பிள்ளைகள் நன்றாக இருந்தால் போதும். தன் பெற்றோரைப் பற்றி நினைக்க அவர்களுக்கு நேரமில்லை. பொருள்சார்ந்த உலகமாக ஆகிவிட்ட இவ்வுலகில் இவ்வாறான நிகழ்வுகள்தான் நடக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கதையை படித்து முடித்தது நான் என்ன எழுத வேண்டும் என்று நினைத்தேனோ அதை அப்படி மிக அழகாக ஜம்புலிங்கம் சார் ஏற்கனவே சொல்லி சென்று இருக்கிறார் எங்கள் இருவரின் எண்ணமும் இங்கே 100% ஒன்றாக இருக்கிறது

      நீக்கு
    2. முனைவர் ஐயா அண்ட் மதுரை சகோ,

      நீங்கள் சொல்லியிருப்பது போல் மக்கள் இருக்கிறார்கள் தான். ஆனால் எல்லோரும் அப்படியில்லை. நம்மிடையே நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அது போல அடுத்த தலைமுறை வித்தியாசமாகச் சிந்திக்கிறார்கள் அதுவும் என் குடும்ப வட்டத்திலும் சரி நட்பு வட்டத்திலும் சரி. நான் பல இளையதலைமுறையினரைக் கண்டு வியக்கிறேன்.

      என் அம்மா அப்பா தவறு செய்த போது தட்டிக் கேட்டுச் சண்டையிட்டதுண்டு. அவ்வளவு ஏன் என் பாட்டிகள் தவறு செய்த போதும் சண்டை போட்டதுண்டு. அதே போன்று என் மகனுக்கும் என்னைத் தட்டிக் கேட்க உரிமை உண்டு. அவனிடம் நான் சொல்வதும் அதே. அம்மா சொல்வது எல்லாமே வேத வாக்கு என்று எடுத்துக் கொள்ளக் கூடாது நானும் மனுஷிதான் தவறு செய்வதுண்டு. எனவே நான் செய்வது தவறு என்று உனக்குத் தோன்றினால் என்னைத் திருத்த வேண்டும் என்று. இது சிறு வயதிலிருந்தே...

      வைஸ்வெர்சாதான். வேலைக்குப் போகும் பெற்றோர்கள் கூட வயதானவர்களைப் பார்த்துக் கொள்வதும், பெற்றோர் வெளியிலோ ஊருக்கோ சென்றால் பேரன் பேத்திகள் பாட்டி தாத்தாவை மிக அருமையாகக் கவனித்துக் கொள்வதையும் பார்க்கிறேன்.

      எனவே கெட்டதின் மத்தியில் நல்லதையும் பார்க்கலாமே இல்லையா..

      மிக்க நன்றி ஐயா மற்றும் மதுரை உங்களின் கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  6. வருகிறேன் நட்புகளே...மாலை வந்து பதில் தருகிறென்....இன்று கொஞ்சம் பிஸி....மகனின் தோழி வீட்டிற்குச் செல்வதால்...

    கீதா

    பதிலளிநீக்கு
  7. ஒரு கதவு மூடினால் திறக்குமாம் ​மறு கதவு. பேரனின் வார்த்தைகள் நம் எல்லோருக்குமே சந்தோஷம் தருகிறது. நமக்கும் வயதாகும். பயம் வருகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் கண்டிப்பாக மற்றொரு கதவு திறக்கும். மற்றொன்று நம்பிக்கை...

      பேரனின் வார்த்தைகள் மிகவும் சந்தோஷம் தருவதுதான்...பார்த்தும் வருகிறேன் அப்படியான நிகழ்வுகளை. ஒரு பேரன் தன் பாட்டி தாத்தாவை வைத்துக் கொண்டு இருக்கிறான் அதுவும் தன் அப்பாவின் பெற்றோரை..அவன் பெற்றோர் மறைந்த பிறகும்...

      ஸ்ரீராம் பயம் வேண்டாம். நல்லதே நடக்கும்.

      மிக்க நன்றி கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  8. லக்ஷ்மி, ரமணி சந்திரன் எல்லாம் உணர்வுபூர்வமான கதைகள் எழுதுவார்கள். ரமணி சந்திரன் நான் படித்ததில்லை. அப்பாவி தங்கமணி ரமணி சந்திரனின் பரமரசிகை. அதனால் தெரியும். ஆனால் கீதா... உங்கள் கதைகளில் யாரும் உணர்வு வெள்ளம்... அபாரமாக எழுத்துகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் என் கல்லூரிக்காலத்திலேயே ரமணிச் சந்திரனுக்கு விசிறிகள் அதிகம். மதியம் சாப்பாட்டு வேளையில் மில்ஸ் அன் பூன் ரமணிச் சந்திரன் இருவரைப் பற்றியும் தான் பேச்சு ந்டக்கும். அவர்கள் சொல்லி ஓரிரு கதைகள் வாசித்திருக்கிறேன் அவர்கள் தயவில் கல்லூரியில் இருக்கும் போது. மற்றபடி கதைப்புத்தகங்கள் அனுமதி கிடையாதே வீட்டில். ஆனால் அக்கதைகள் நினைவு இல்லை. அப்புறம் தோழிகள் கொடுத்தும் நான் விரும்பி வாசிக்கவில்லை ஏன் என்று தெரியவில்லை.

      ஓ அப்பவி தங்கமணி ரமணிச் சந்திரனின் பரமரசிகையா...

      //ஆனால் கீதா... உங்கள் கதைகளில் யாரும் உணர்வு வெள்ளம்... அபாரமாக எழுத்துகிறீர்கள்.//

      ஆ!! ஸ்ரீராம் மிக்க மிக்க நன்றி...அதற்கு உங்கள் ஊக்கமும் எபியில் வெளியிட்டு பலரும் சொல்லும் கருத்துகள் ஊக்கம் அளிப்பதும் காரணம் என்றால் மிகையல்ல ஸ்ரீராம் மிக்க நன்றி...

      கீதா

      நீக்கு
  9. நான் காலையிலேயே கதை படித்து விட்டேன்...

    கதை என்றெல்லாம் இல்லை....

    பற்பல குடும்பங்களில் சர்வ சாதாரணமாக நிகழ்கின்ற விஷயமாகி விட்ட ஒன்று..

    ஸ்ரீராம் அவர்கள் - முந்தைய தலைமுறையின் லக்ஷ்மி, ரமணிச்சந்திரன் ஆகிய பெருமக்களை நினைவு கூர்ந்திருக்கிறார்....

    பெண்களுக்கு கதை எழுதுதற்குத் தனியாக சொல்லித் தரவேண்டியதில்லை..

    எப்படியோ கதையில்
    கதவுகள் இறுக மூடிக் கொண்டாலும்
    ஜன்னல் ஒன்று திறந்து கொள்கிறதே...

    அதுவே மகிழ்ச்சி...

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை அண்ணா மிக்க நன்றி கருத்திற்கு. நீங்களும் மிகவும் பாசிட்டிவாகத்தானே எழுதுகின்றீர்கள்!! அது மனதிற்கு எத்தனை இதமாக இருக்கிறது இல்லையா!

      அது போல இதிலும் ஒரு ஜன்னல் திறக்கிறது. கண்டிப்பாக இப்படியும் நடக்கிறது...பெண்களுக்கு என்றில்லை அண்ணா, உங்களைப் போன்றோருக்கும் மிக உணர்வுபூர்வமாகக் கதை சொல்ல வருகிறது...

      மிக்க நன்றி அண்ணா கருத்திற்கு.

      கீதா

      நீக்கு
  10. எங்கள் ப்ளாகில் எப்போ வந்ததுனு தெரியலை. ஆனால் இங்கே படித்தேன். நல்ல முடிவு. இப்படி நடக்குமா என்பவர்களுக்கு என் உறவினர்கள் கணவன், மனைவி இருவரும் கணவனின் தந்தை, தாயைப் பார்த்துக்கொள்ளவில்லை. ஆசிரமத்தில் இருந்தனர். நல்லவேளையாய்க் கணவனுக்கு ஓய்வூதியம் வந்தது. அவங்க பெரிய பேரன் அப்பா, அம்மாவிடம் நேரிடியாகவே நீங்க இரண்டு பேரும் தாத்தா, பாட்டியைப் பார்த்துக்கொள்ளாமல் ஆசிரமத்தில் விட்டுட்டீங்க! ஆகவே நான் உங்களைப் பார்த்துக்கொள்ள மாட்டேன் என்று சொல்லி விட்டார். இப்படியும் நடக்கும் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் நடக்கும்..ஆனால் அந்தப் பையன், தனக்கும் நாளை அதே கதிதான் என்று தெரிந்துகொண்டிருப்பார் என்று தோன்றுகிறது.

      நீக்கு
    2. கீதாக்கா மிக்க நன்றி அக்கா கருத்திற்கு.

      நீங்கள் சொல்லியிருப்பது போலவும் நடக்கிறதுதான்.

      மிக்க நன்றி அக்கா கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  11. தி/கீதாவுக்குச் சுருக்கமாக எழுத வரும் என்பதும் இன்னிக்குத் தான் தெரிஞ்சது! :P :P :P :P

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹிஹி....கீதாக்கா எபியிலும் சரி இங்கும் இந்தத் தளத்திலும் சரி சுருக்காகவும் எழுதியிருக்கிறேன் அக்கா. அது கதைக் கருவைப் பொருத்து, மனதில் தோன்றும் அதில் வரும் நிகழ்வுகள் எப்படி மனதில் விழுகிறதோ அந்தப் போக்கில் போகும் கதை...

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  12. //எனக்கு வேலை கிடைச்சதும் எங்கூடத்தான் நீங்க ரெண்டு பேரும் இருக்கப் போறீங்க// - ரொம்ப பாசிடிவ் முடிவு. இந்த மாதிரி பேரன் இருக்க சாத்தியமா? அப்படி இருக்குங்கால், அவனுடைய அப்பா அம்மாவே தன் அப்பாவைப் பார்த்துப்பாங்களே..பையனின் அழுத்தத்தால்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கிறார்கள் நெல்லை. நான் கண் கூடாகக் காண்கிறேன்.

      அவர்கள் அழுத்தம் கொடுத்தும் பார்க்கும் பெற்றோரும் இருக்கிறார்கள். அப்படிக் கேள்வி கேட்டும் பெற்றோரில் யாரேனும் ஒருவர் விரும்பவில்லை என்றால் பேரனே தன் பொறுப்பில் எடுப்பதையும் காண்கிறேன்.

      மேலே முனைவர் ஐயாவும் மதுரையும் பெற்றோர் வளர்ப்பில் என்று சொல்லியிருப்பதும் ந்டக்கிறது என்றாலும் பெற்றோர் செய்வது தவறு என்றால் கேள்வி கேட்கும் இளையதலைமுறையினரும் இருக்கிறார்கள். கேள்வி கேட்பதோடு அல்லாமல் தாங்களே பொறுப்பெடுத்துச் செய்வதும் நிகழ்கிறது.

      மிக்க நன்றி நெல்லை கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  13. கதையை சொல்லி சென்ற விதமும் எழுதியவிதமும் மிக அருமை பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மதுரை தமிழன் கருத்திற்கும் பாராட்டிற்கும்...

      கீதா

      நீக்கு
  14. அங்கு வாசித்ததுதான் என்றாலும் இங்கும் வாசித்தேன்.

    பதிலளிநீக்கு
  15. நல்ல கதை
    அங்கும் வாசித்தேன் நண்பரே
    நன்றி

    பதிலளிநீக்கு
  16. வேதமூர்த்தி தாத்தா : // எங்க குழந்தைங்கள தண்டிச்சுராதப்பா! அவங்க எல்லாருக்கும் நல்ல மனசைக் கொடு... //

    நம்ம தாத்தா : ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்மையான சொத்து, அவர்களின் குழந்தைகளே... ஆனால் அந்த குழந்தைகளின் செல்வமானது, அவரவர் செய்யும் நற்செயல்களைப் பொறுத்தே...! (செல்வம் என்பது : பணம் பொருள் மட்டும் அல்ல, வாழ்வின் அனைத்தும்...!)

    63. தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
    தம்தம் வினையான் வரும்

    சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள மீனாட்சி எழுவதற்குக் காத்திருந்த அவருக்கு, மனதில் ஒரு பாட்டு :
    தென்னைய பெத்தா இளநீரு... பிள்ளைய பெத்தா கண்ணீரு...(2) பெத்தவன் மனமே பித்தம்மா... பிள்ளை மனமே கல்லம்மா... பானையிலே சோறிருந்தா - பூனைகளும் சொந்தமடா... சோதனையை பங்கு வச்சா - சொந்தமில்லே பந்தமில்லே...

    யாரை நம்பி நான் பொறந்தேன்...? போங்கடா போங்க... என் பேரன் வருவான், வந்தபின்னே வாங்கடா வாங்க...

    நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக... நெஞ்சமிருக்கு துணிவாக... நேரமிருக்கு தெளிவாக... நினைத்தால் முடிப்பேன் சரியாக... நீ யார் நான் யார் போடா போ... ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்... தேடி வரும் பேரன் வந்தா - செல்வமெல்லாம் ஓடி வரும்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      கதைக்கேற்ற நல்ல பொருத்தமான பாட்டு. டி.எம்.எஸின் குரல் வளத்தில் இந்த பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு பாராவுக்கும், கடைசியில் மிக பொருத்தமான வரிகளிட்டு பாடலை பூர்த்தியாக்கி கதைக்கு உவமானமாக அசத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. டிடி அசத்திட்டீங்க போங்க!

      அருமையா சொன்னீங்க திருக்குறள் கருத்துடன். அருமை பொருத்தமான பாட்டுகள்.

      யாரை நம்பி நான் பொறந்தேன்...? போங்கடா போங்க... என் பேரன் வருவான், வந்தபின்னே வாங்கடா வாங்க...//

      ஹா ஹா ஹா அப்படிப் போடுங்க டிடி!! தாத்தாவின் வாய்ஸில் பார்த்துக் கொண்டேன்!!! காட்சியாய்...

      //ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்... தேடி வரும் பேரன் வந்தா - செல்வமெல்லாம் ஓடி வரும்...!//

      செம!! அதானே பேரன் எனும் செல்வம் வரும் போது வேறு என்ன வேண்டும்?! அன்பும் கருணையும் பாசமும்!! அதுதான் மிகப் பெரிய செல்வம்...!!

      சூப்பர் டிடி.

      மிக்க மிக்க நன்றி அழகான பாடல்களுடன் கருத்து சொன்னமைக்கு...

      கீதா

      நீக்கு
  17. கதை நன்றாக இருக்கிறது கீதா! இனிய பாராட்டுக்கள்! இன்றைய நிதர்சனத்தை அழகாய் எழுதியிருக்கிறீர்கள். விசாலமான, கடமையுணர்வு மிக்க இதயங்கள் இப்போதெல்லாம் குறைந்து வ‌ருகிறது! இதில் வரும் பேரனைப்போன்ற அத்திப்பூக்கள் மிகவும் குறைவு!

    அந்த புகைப்படத்தை எங்கேயிருந்து பிடித்தீர்கள்? மிகவும் தத்ரூபமான, மன உணர்வுகளை பிரதிபலிக்கும் இந்த புகைப்படத்தை வெளியிட்டதற்கு மீண்டும் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மனோ அக்கா தங்களின் விரிவான கருத்திற்கு

      இந்தப் புகைப்படத்திற்கு எபியில் கதை எழுத போட்டிருந்த நினைவு அக்கா.

      உண்மைய சொல்ல வேண்டும் என்றால் இந்தப் படம் அப்படியே என் அப்பா வழி தாத்தா பாட்டி போலா அப்படியே நகல் எடுத்தது போல. இப்படம் எபி வாட்சப்பில் வந்ததும் நான் எங்கள் வீட்டு வாட்சப் குழுவில் பகிர்ந்திட அத்தனை பேரும் அவரவர் உறவு முறைகளைச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தனர். எனக்கு போன் போட்டும் பேசினர் எப்படி சித்தி சித்தப்பா/அத்தை படம் கிடைத்தது யார் எடுத்தது எப்போ என்று..

      ஆனால் எனக்குத்தான் இன்னும் விடை கிடைக்கவில்லை. என் அப்பா இதைப் பார்த்துவிட்டு தாத்தா பாட்டி போலவெ இருந்தாலும் அவர்கள் இல்லை என்று சொன்னது எனக்குப் பெருத்த ஏமாற்றம். இருந்தாலும் நான் இப்போதும் என் தாத்தா பாட்டி என்றே மனதுள் நினைத்துக் கொண்டிருக்கிறேன்...

      மிக்க நன்றி மனோ அக்கா

      கீதா

      நீக்கு
  18. அங்கு வாசிக்க வில்லை ..

    இங்கு வாசித்தேன் ...கொஞ்சம் பயமாவே போச்சு ..அசோ என்னடா இப்படி இருகாங்களே ன்னு ...

    நல்லவேளை குட்டி பிள்ளை வந்து மனசை லேசாக்கி ...

    வாழ்த்துகள் கீதாக்கா ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அனு கருத்திற்கு. மேலே இங்கு முடிவு பற்றியும் சொல்லியிருக்கிறேன் ...

      கீதா

      நீக்கு
  19. வணக்கம் சகோதரி

    கதை மனதை மிக பாதித்தது. பெற்றோர்கள் வளர்ப்பிலே உருவான குழந்தைகள் அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், அம்மாவின் ஆஸ்பத்திரி செலவுக்கென்று வரும் போது, என்னிடம் இல்லை என ஒதுங்கிப் போவதுடன், கூட இருந்து கவனித்துக் கொள்ளவும் தயக்கம் காட்டுவதும்,மிக கொடுமை. இப்படியான யதார்த்தமான உண்மைகளை நீங்கள் கதையில் சுட்டிக் காட்டியதை பார்க்கும் போது நாளை நம் நிலை எப்படியோ என்ற பயம் மனதை கவ்வுகிறது.இந்த கதை எ.பி யில் படித்துள்ளேன் என நினைக்கிறேன். கதையை நன்றாக படைத்துள்ளீர்கள் . முடிவு பேரனால் சுபமாக முடிந்தது. இல்லையென்றால் மனது இன்னமும் வலித்திருக்கும். பாஸிடிவாக கதையின் முடிவை தந்தமைக்கு பாராட்டுக்கள். இன்னமும் நிறைய கதைகளை படிக்கத் தாருங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது பொதுவாகவே நடக்கிறதுதான் என்றாலும் என் மனதில் தோன்றுவது இன்னும் மக்களின் மனதில் ஈரம் காயாமல் இருக்கிறது என்று. என்னைச் சுற்றி உள்ளவர்கள் நெருங்கிய வட்டத்த்தில் நல்லதே நடக்கிறது.

      பயப்படத் தேவையில்லை கமலாக்கா. நாம் நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும் கமலாக்கா.

      மிக்க நன்றி கமலாக்கா கருத்திற்கும் பாராட்டிற்கும்

      கீதா

      நீக்கு
  20. இதைக் கதையென்று சொல்லி ஏமாற்றாதீர்கள். எங்கோ யார் வாழ்விலோ நிஜமாக நடந்தது தானே!

    -இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா செல்லப்பா சார் எத்தனை நாட்களாயிற்று? உங்கள் வருகை மிகவும் மகிழ்ச்சி தருகிறது.

      இது பொதுவாக நடப்பதுதான். பெற்றோரைப் பார்த்துக் கொள்ளாமல் போவது என்பது. பேரன் பேத்திகள் தாத்தா பாட்டியுடன் (தாத்தா பாட்டி எப்படி அவர்களுடன் அன்பு செலுத்துகிறார்கள் என்பதைப் பொருத்து!!) இருப்பது கூடுதல் ஆவதால் அந்தப் பிணைப்பும் அவர்களைப் பார்த்துக் கொள்ளும் ஓரிரு சம்பவங்கள் கேள்விப்பட்டதால் அதையும் சொல்லி முடித்திருந்தேன்.

      மிக்க நன்றி சார். அப்ப கதை போல் இல்லையோ? சார்? என்னை மேம்படுத்திக் கொள்ளத்தான் இந்தக் கேள்வி. மிக மிக அருமையான எழுத்தாளர் நீங்கள் அதனால்...

      கீதா

      நீக்கு
  21. இம்மாதிரி நடப்பது உண்மை தானே, வேதனை தான் கீதா. சிலநேரங்களில் முன்போல் குறுகிய இடத்திற்குள்ளேயே மக்கள் வாழ்ந்திருக்கலாமோ என்று தோன்றும்.
    உணர்வுப்பூர்வமான கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க க்ரேஸ்! உங்களைக் காண்பது மகிழ்ச்சி.

      ஹைஃபைவ் க்ரேஸ்! எதற்குத் தெரியுமா முன்போல் குறுகிய இடத்திற்குள்ளேயே//

      யெஸ் யெஸ்...எனக்கும் தோன்றுவதுண்டு.

      மிக்க நன்றி க்ரேஸ் கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  22. வீடு வரை உறவு
    வீதி வரை மனைவி
    காடு வரை பிள்ளை
    கடைசி வரை யாரோ
    என்பதில்
    காடு வரை பிள்ளை
    போய்
    காசு வரை பிள்ளை
    வந்தாச்சோ!

    பதிலளிநீக்கு