வெள்ளி, 11 நவம்பர், 2016

2016, நவம்பர் 8, 9, 10…………………….!!!???

உலகமே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க அதிபர் தேர்தல்; அடுத்த அதிபர் யாராக இருக்கும்? ஹிலாரியா? ட்ரம்பா; முதல் சுற்றில், இனி ஒரு போதும் ஓடி ஹிலாரியைக் கடக்க மாட்டார் ட்ரம்ப் என்று நினைத்திருக்க, தேர்தல் நாள் நெருங்க, நெருங்க ட்ரம்ப் ஆமை ஓடி ஹிலாரி முயலைத் தோற்கடிக்க வாய்ப்பு உள்ளது போல் தோன்றிய அந்த நவம்பர் 8 ஆம் தேதி!!!.....!!!!!

அன்று வழக்கம் போல் ஒவ்வொரு வகுப்பையும் முடித்துவிட்டு இறங்கிய போது ஆசிரியர்கள் அறையிலிருந்து, ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபர் ஆகத் தேவையான 270 எலக்டோரல் காலேஜ் ஓட்டை நெருங்கிக் கொண்டிருப்பதாகச் செய்தி. மதியத்திற்குப் பிறகு ட்ரம்பின் வெற்றி உறுதியாக்கப்பட்டும் விட்டது!

Image result for trump

அப்படியாக, 70 வயதான, உலகளவில் 324வது கோடீசுவரரான, எவருடனும் கை குலுக்கப்பிடிக்காத, (அமெரிக்க அதிபர், ஏறத்தாழ 61/2 லட்டசிற்கும் மேலாகப் பிறருடன் கைகுலுக்க வேண்டுமாம்!!!) குடிக்காத, திரைப்பட நடிகரான, 1987ல் அமெரிக்காவில் அதிகமாக விற்பனையான “ஆர்ட் ஆஃப் தெ டீல்” எனும் தன் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை எழுதிய எழுத்தாளருமான, மும்முறை திருமணம் செய்த ஜான் ட்ரம்ப் அமெரிக்காவின் 45வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எல்லாவற்றிலும் வித்தியாசமாக இருக்கும் அவர் ஒரு வித்தியாசமான அமெரிக்க அதிபராகத்தான் இருப்பார். பொறுத்திருந்துப் பார்ப்போம். அப்படி அமெரிக்கப் பரபரப்பு ஒருவழியாக முடிந்தது.
Image result for pulimurugan

கடந்த ஒரு மாதமாகப் பாலக்காடு ப்ரியா திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் மோஹன்லால் நடித்த புலிமுருகன் படத்தைப் பார்க்க முடியாத பிரச்சனைக்கு அன்று முடிவு கண்டே தீர வேண்டும் என்ற தீர்மானத்துடன் நானும், ஜோஸ் ஐயாவும் 4.45க்குத் திரையரங்கை அடைந்தோம்.  அப்போதும், நீங்கள் இன்றும் பார்க்க முடியாது என்று சொல்வது போல் நீண்ட வரிசை. அங்கிருந்த திரையரங்குக் காவலரிடம் “நின்னா டிக்கெட் கிடைக்குமா?” என்றதும், “தைரியமா நில்லுங்க, உங்களுக்குக் கிடைக்கும்” என்றார். நான் வண்டியை நிறுத்திவிட்டு வருவதற்குச் செல்ல, ஜோஸ் ஐயா பணத்துடன் நுழைவுச் சீட்டு வாங்குமிடத்தில் கையை உள்ளே நுழைக்கும் வரை நுழைவுச்சீட்டு கையில் கிடைக்குமா இல்லையா, கை வெளியே வரும் போது சீட்டு கையில் இருக்குமா? என்று பரபரப்பு. கையில் சீட்டைப் பார்த்ததும் மனசெல்லாம் மத்தாப்பு. உள்ளே சென்றால் திரையரங்கின் திரைக்குச் சற்று தள்ளி இருக்கும் வரிசைதான் இருந்தது. மத்தியில் இருக்கைகள் ஏதேனும் இருக்குமா என்று பார்த்ததில், இரண்டு இருக்கைகள் அருகருகே இல்லாமல் சற்றுத் தள்ளி இருந்தன. அங்குச் சென்று இருக்கையிலிருந்தவரிடம் வேண்டுகோள் விடுக்க அவரும் நல்ல மனதுடன் இருக்கை மாறிச் செல்லவும் நாங்கள் மகிழ்ச்சியுடன் அருகருகே அமர்ந்து கொண்டோம். 25 கோடி ரூபாய் முதலீட்டில், 331 திரையரங்குகளில் வெளியிட்டு, 100 கோடிக்கும் மேல் வசூலில் சாதனை படைத்த மலையாளப் படம். நல்ல திரைக்கதை, வசனம், இயக்கம், லாலேட்டனின் இயல்பான நடிப்பு மற்றும் பீட்டர்ஹெய்னின் அருமையான சண்டைக் காட்சியமைப்புகளும் (ஆக்ஷன் கோரியோக்ராஃபி), தாய்லாந்து புலி, கிராஃபிக்ஸ் புலிக் காட்சிகளும் பார்ப்பவரைப் பிரமிக்க வைக்கும் அளவுக்குச் சிறந்த படமாகப் புலிமுருகனை ஆக்கிவிட்டது எனலாம். (சில மாதங்களுக்கு முன்புப் புலியாய் நடித்த விஜய் புலிமுருகனாய் நடித்திட, இப்படம் தமிழிலும் வர இருக்கிறதாம்!)

அப்படியாக ஒரு மாதம் காத்திருந்துப் புலிமுருகனைப் பார்த்த மகிழ்ச்சியில், வழக்கமாக நாங்கள் செல்லும், கோயம்புத்தூர் சாலையில் உள்ள இந்திய காப்பி உணவகத்திற்குச் சென்று சப்பாத்தி + குருமாவை உண்டுவிட்டுப் பணம் கொடுக்கும் போது அதிர்ச்சி! ரூ 500, 1000 நோட்டுகள் இனி செல்லாது, நாளை வங்கிகள், ஏடிஏம் எதுவும் இயங்காது என்று கணக்காளர் சொல்ல மேலும் அதிர்ச்சி! 8.30 மணிச் செய்தியில் பிரதமர் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் இந்த முயற்சிக்கு மக்களின் ஒத்துழைப்பை வேண்டியிருக்கிறார் என்றும் அவர் சொல்ல, “இது எப்படித் திடீரென்று சாத்தியம்? 15 லட்சக் கோடி ரூபாய், நாட்டிலுள்ள 130 கோடி மக்களோட கையிலிருக்கற ரூ 500, 1000 நோட்டுகள ஒரே ராத்திரியில செல்லாதுனு சொல்ல முடியும்? நடக்கற காரியமா? சும்மா வதந்தியோ?” என்று நாங்கள் சொல்லிக் கொண்டே வண்டியில் ஏற, என் மனைவியிடமிருந்து அழைப்பு.
“நான் அபிராமியின் நடன ஆசிரியருக்குக் கொடுக்க வேண்டி ஏடிஎம்ல ரூ 20000 எடுத்துட்டு வந்தா இப்படி நியூஸ். இனி என்ன செய்ய?” என்று ஒரே புலம்பல். அவர் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே பேசியதால், 10 ஆம் தேதியிலிருந்து வங்கியில் பணத்தை மாற்றி வாங்கலாம், ஒரு வாரம் ரூ 10000, ஒரு மாதத்தில் ரூ 20000 வரை எடுக்கலாம், பேருந்தில் பயணம் செய்யவும், ரயில் சீட்டு எடுக்கவும், பெட்ரோல் பங்கில் பெட்ரோல் அடிக்கவும், மருந்தகத்தில் மருந்து வாங்கவும் பழைய நோட்டுகளைப் பயன்படுத்தலாம் எனவும், இனி என்ன செய்வது என்ற குழப்பம் மாறியது.

வீட்டிற்குப் போகும் வழியில் மருந்தகத்தில் மகன் அருணுக்குத் தேவையான சில மருந்துகளை வாங்கி ரூ 1000த்தைக் கொடுத்து, மீதி ரூ 600 கிடைத்ததும் ஒரு சிறு நிம்மதி பிறந்தது. போகும் வழியில் வழக்கமாகப் பெட்ரோல் பங்கில் நீண்ட வரிசை. பையனிடம் ரூ 500ல் ரூ200க்கு அடித்தால் மீதி கிடைக்குமா என்றதும் காத்திருந்தால் கிடைக்கும் என்று சொன்னாலும், வரிசையில் நின்றவர்கள் ரூ 100க்கு அடிக்க ரூ 500 நீட்டியதால் எல்லோரையும் திரும்ப அனுப்பிவிட்டனர். சில நிமிடங்களுக்குப் பிறகு அந்தப் பையன் பங்கின் அலுவலகத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்ப வரும் போது ரூபாய் 300 கொடுத்தான். அலுவலகத்தில் நான் கொடுத்த ரூ 500 ஐச் சோதித்திருக்க வேண்டும் அல்லது அங்குப் பல 100 ரூபாய் நோட்டுகளை வைத்திருக்க வேண்டும். எப்படியோ என் கையில் 12, 100 ரூபாய் நோட்டுகளும், 3, 50 ரூபாய் நோட்டுகளும், சில 10 ரூபாய் நோட்டுகளும் இருக்க சமாதானமாகத் தூங்கினேன். மறுநாள் பள்ளியில் இந்தச் செய்திதான் ஓடியது. மாலை 6 மணி வரை எஸ்பிஐ, எஸ்பிடி வங்கிகளில் ரூ 4000 வரை மாற்றிக் கொள்ளலாம் என்றும் தகவல் கிடைத்தது. முகநூலைத் திறந்தால், ஆவி ரூ 2000 நோட்டுகளை விரித்துக் காட்டிச் சிரித்துக் கொண்டிருந்தார்! அது போல் ரூ 2000 நோட்டு ஒன்று மாலை 5 மணிக்கு மேல் நமக்கும் கிடைக்கும்தானே என்ற மன மகிழ்வில் வகுப்பிற்குச் சென்றேன்.

இந்த அதிரடி நடவடிக்கையினால் மது விற்கப்படும் லிவரேஜர் கார்ப்பரேஷன் டெப்போக்களில்/கிளைகளில் கூட்டமே இல்லையாம்! 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளைக் கையில் வைத்துக் கொண்டு “க்வாட்டரேனும்” கிடைக்காதா என்று ஏக்கத்துடன் சில குடிமகன்கள் பார்த்துக் கொண்டிருக்க, ரூ 100 நோட்டுகளைக் கையில் வைத்துக் கொண்டு க்வாட்டர் வாங்கி, அந்தக் குடிமகன்களை ஏளனத்துடன் பார்த்துக் கொண்டு வீர நடை போட்டுச் சென்ற காட்சிகளும் நடை பெற்றதாம். அங்கும் சில தந்திரசாலிகள் ரூ 100 நோட்டுகளுடன் ரூ 1000த்திற்கு ரூ 800ம், ரூ 500 க்கு ரூ 400ம் கொடுத்து லாபம் கண்ட காட்சிகளும் அரங்கேறியதாம். பெரிய பெரிய நகைக்கடைவியாபாரிகளும், ஹவாலாக்களும் இப்படியான வியாபாரம் நடத்திய செய்திகளை வாசித்தபோது, இந்தச் சாதாரண மக்கள் நடத்தியது ஒன்றும் பெரிய வியப்பான நிகழ்வு இல்லைதான்.
இந்த அதிரடி நடவடிக்கையால் நிகழ்ந்த சில சுவாரஸ்யங்கள். திருவனந்தபுரத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒருவர் மூன்று கோணிப்பைகளில் ரூ 69,320க்கு நாணயங்களைக் கொடுத்துத் தன் இடத்தைப் பதிவு செய்து வாங்கியிருக்கிறார். கர்நாடகா கோலாரில், ஒரு எம் எல் ஏ, கிராமத்திலுள்ள எல்லோருக்கும் ரூ 3 லட்சம் வீதம் கடனாகப் பொதுக் கூட்டம் கூட்டிக் கொடுத்திருக்கிறாராம். ஊடகங்களில் மேடையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நோட்டுகளின் படங்கள் வெளியானதும், வருமானவரித் துறைக்கு அவரைப் பிடித்து வரி வசூலிக்க எளிதாகிவிட்டது. ஒரு சில அரசியலாளர்களைத் தவிரேல்லோருமே கறுப்புப் பணத்தை ஒழிக்க அரசு எடுத்தைந்த முடிவு நல்லதே என்று சொல்லுவதைக் கேட்கும் போது இந்திய அரசையும், மக்களையும் நினைத்துப் பெருமைப்பட கிடைத்த இந்த அரிய வாய்ப்பை எண்ணி உண்மையிலேயே மகிழ்ச்சியடைந்தேன்.

Image result for rs 2000 note

பள்ளியிலிருந்து மாலைதான் வெளியேற முடிந்தது. வழியில் இருந்த வங்கிகளில் இரும்புக் கதவு பாதிக்குக் கீழ் இறக்கப்பட்டிருக்க, ஒரு வங்கியில் கூட்டம் சற்றுக் குறைவாக இருக்கக் கண்டதும் அங்கு நானும் சென்று எனது ஆதார் அட்டையின் நகல் எடுத்துக் கொடுத்து வங்கியில் தந்த விண்ணப்பத்தை நிரப்பி, நான் வைத்திருந்த பழைய நோட்டுகளின் எண்களை எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்துவிட்டுக் காத்திருந்தேன். வரிசையில் எனக்கு முன்னால் ஒரு முதியவர் ரூ 500 மாற்றிக் கொண்டு சென்றார். இன்றைய செய்தி, தலச்சேரியில் ஒருவர் வரிசையில் நின்றவர் இரண்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்தார் என்றும், மற்றொரு முதியவர் வரிசையில் நின்றவர் மயங்கி விழுந்து இறந்தார் என்றும் கேட்டதும், இப்படி, கையில் அகப்பட்டுப் போன 1000, 500 ஐ மாற்றுவதற்குப் படும் சிரமங்களை நினைக்கையில் வருத்தமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் நாட்டின் பொருளாதார நிலையைச் செம்மைப்படுத்த, கறுப்பு, ஊழல் மற்றும் குழாய்ப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை, நோய் அகல கசப்பான மருந்தை எடுத்துக் கொள்வது போல் எல்லா இந்தியர்களும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால், இந்த நடவடிக்கை இன்னும் பல சட்டத்திட்டங்களோடு அமல்படுத்தபட்டால்தான் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியும். பண ரீதியாக இல்லாமல் எல்லாமே அட்டை அல்லது காசோலை, அல்லது இணையவழியில் சரியான ஆதாரங்களுடன், கணக்குவைத்துக் கொள்ளப்பட்டு நடத்தப்பட வேண்டும் என்ற சட்டம் வலுவாக அமலாக வேண்டும்.

எனது கையிலிருந்த 3 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், 2, 500ரூபாய் நோட்டுகளும் எனக்கு விடை சொல்லிப் பிரிந்தன. 20, 100 ரூபாய் நோட்டுகளும், எலக்ட்ரானிக் நோட் என்று சொல்லப்பட்ட ரூ 2000மும் என் கைக்கு வந்து சேர்ந்தது. ஆனால், 2000 ரூபாய் நோட்டைப் பெற்றதும் அதில் எந்தச் சிப்பும் இல்லாதது சற்று ஏமாற்றத்தைத் தந்தது என்றாலும் புது நோட்டைப் பெற்ற ஆறுதலும், மகிழ்வும் இருந்தது. சிப்புடன் வருவதே அதைக் கள்ள நோட்டாக அடிக்க முடியாமல் என்பதற்காகச் சொல்லப்பட்டது!! 2016, நவம்பர் 8, 9, 10 தேதிகள் “மற்ற சாதாரண நாட்களைப் போல் அல்ல நாங்கள்” என்று மனதில் ஒரு பதிவை ஏற்படுத்திவிட்டுக் கடந்தன!

படங்கள் இணையத்திலிருந்து - நன்றி

(வேலைப்பளு காரணமாக இருவருமே இணையம்பக்கம் வர இயலவில்லை. நண்பர்கள் , சகோதரிகள் எல்லோரது பதிவுகளும் நிறைய இருக்கின்றன.  விரைவில் வந்து விடுபட்ட பதிவுகளை எல்லாம் வாசிக்கின்றோம். நிறைய இருப்பதால் மெதுவாக வாசிக்கிறோம்.)






29 கருத்துகள்:

  1. ஹலோ இவ்வளவு பெரிய பதிவா நான் மீண்டும் வருகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ் ரொம்ப நாளாகிவிட்டதே நான் எழுதி! கீதாதான் இடையில் எழுதிக் கொண்டிருந்தார் இப்போது அவருக்கும் நேர நெருக்கடி. வாருங்கள் தமிழன்..

      நீக்கு
  2. இவ்வளவு பேரின் சிரமத்துக்கு உண்மையில் பலன் கிடைத்தால் மகிழ்ச்சியே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பகவான் ஜீ! ஆமாம் பலன் கிடைத்தால் நல்லதே!

      நீக்கு
  3. புலி வருது... புலி வருது...

    வந்தே விட்டது...! (500/1000)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹஹ் அட இந்தக் கருத்து எல்லாவற்றிற்கும் பொருந்திப் போகுதோ!! டிடி!! தாங்களும் பலநாட்கள் கழித்துத்தான் வந்திருக்கிறீர்கள் இல்லையா என்னைப் போல்!!!

      நீக்கு


  4. எனது புதிய பதிவில் : உங்களின் கருத்துரை எதிர்பார்ப்பில்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகிறோம் டிடி...இன்னும் ஒரு நாள்....வந்துவிடுகிறோம்...உங்கள் பதிவு எங்கள் பெட்டிக்கு வந்துவிட்டது.

      நீக்கு
  5. இரண்டு நாட்களாய் வங்கியின் வாசலைக் கூட மிதிக்க முடியவில்லை! அவ்வளவு கூட்டம்! பெட்ரொல் பங்கில் 500க்கு பெட்ரோல் போட்டேன். தெரிந்த மளிகை கடையில்450க்கு 500 ரூபாய் கொடுத்து மளிகை வாங்க முடிந்தது. தினக்கூலிகள் பாடுதான் ரொம்பவும் சிரமம். ஆனாலும் தைரியமான நடவடிக்கை! அரசை பாராட்டித்தான் ஆக வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் தளிர்! ஆமாம் கூட்டம்தான். என்னைப் போல நீங்களும் கடைகளில் அங்கிங்கு மாற்றியிருக்கிறீர்கள்!! ஆம் அதிரடி என்றும் சொல்லலாம் தான்..

      நன்றி சுரேஷ்

      நீக்கு
  6. ஐநூறும் ஆயிரமும் வைத்துக் கொண்டு ..காசில்லாமல் நீங்களும் கஷ்டப்பட்டீங்களா?சினிமா பாத்த சந்தோசம் போயே போச்சோ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஹ்ஹஹ ஆமாம் எல்லோருமே கஷ்டப்பட்டார்கள் தான் இல்லையா....அடுத்து ஒரு பதிவு வரும் கீதாவிடமிருந்து.

      முதலில் போச்சு அப்புறம் பணம் மாற்ற முடிந்ததால் நிம்மதியாகிவிட்டது. மிக்க நன்றி சகோ அபயா அருணா..

      நீக்கு
  7. 2016, நவம்பர் 8, 9, 10…………………….!!!???

    என்ற தலைப்பினில் தங்களின் இந்தப் பதிவின் மூலம்
    ஆண், பெண், இளைஞர்கள், முதியவர்கள் என பலருக்கும் ஏற்பட்டுள்ள

    ’அந்த மூன்று நாட்கள்’

    கஷ்டத்தினை உணர முடிந்தது.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "அந்த மூன்று நாட்கள்" ஹஹஹஹ்..மிக்க நன்றி வைகோ ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்.

      நீக்கு
  8. மளிகை கடைக்காரர் எனது பால்ய சிநேகிதர்..
    எனவே பெரிதும் பிரச்னை இல்லாமல் ஓடுகிறது வண்டி
    மற்றபடி வருத்தம்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! பரவாயில்லையே மது! ஆனால் பலருக்கும் நடைமுறையில் கடினமாகத்தான் இருக்கிறது. எல்லா இடங்களிலும் கூட்டம் வரிசை என்று அவதிதான்.

      மிக்க நன்றி கஸ்தூரி கருத்திற்கு

      நீக்கு
  9. புலி முருகன் இன்று பார்க்க எண்ணம்...
    ட்ரம்ப் வெற்றி மூன்றாம் உலகப் போரை கொண்டு வருமாமே..
    ரூபாய் நோட்டு அதிரடி நல்ல திட்டம்தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புலிமுருகன் நன்றாக இருக்கிறது குமார். பார்த்துவிட்டு உங்கள் விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
      ட்ரம்ப் வந்தது குறித்து அப்படித்தான் பலரும் சொல்கிறார்கள். அங்கும் கூட பல விண்ணப்பங்கள் ஹிலாரி வரவேண்டும் என்று. பார்ப்போம் அவர் எப்படி ஆட்சி செய்கிறார் என்று. மிக்க நன்றி குமார் கருத்திற்கு.

      நீக்கு
  10. பசங்களுக்கு ஆசிர்வதித்துக் பணத்தைப் பத்திரமாகப் கொண்டுவந்தேன்... ஹ்ம்ம்...

    பதிலளிநீக்கு
  11. நானும் இரண்டு நாளாகத்தான்
    இங்கு வலம் வருகிறேன்....
    தையல் கடை ஆரம்பித்ததிலிருந்து
    வலைத்தளம் வர நேரமில்லை...

    500,1000 ஒழிந்து 2000 வந்தது
    இனி சிறிய பெட்டிகளில் பதுக்கலாம் இல்ல....

    பதிலளிநீக்கு
  12. அரசாங்கத்தின் தைரியமான நடவடிக்கை. பாராட்டத் தக்கது. எல்லோருமே சிரமப் பட்டோம். இன்னும் பட்டுக்கொண்டுமிருக்கிறோம்! ஆனால் இது ஒரு வரலாற்று நிகழ்வுதான்.

    இந்த நோட்டை லாட்டரி சீட்டு என்று எண்ணி பாட்டி கிழித்து விட்டதாக, 8 மணி நேரம் சார்ஜில் போட்டால்தான் சிப் வேலை செய்யத் தொடங்கும் என்று சார்ஜில் போட்டிருப்பது போல (ஆனால் இந்த சிப் எனும் தகவல் உடான்ஸ்) இன்னும் என்னென்னவோ ஜோக்ஸ் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  13. நடப்பு விஷயங்களை தங்கள் அனுபவத்துடன் இணைத்து அழகான பதிவாக வெளியிட்டிருக்கிறீர்கள் துளசி சார்.
    மகிழ்ச்சி.
    த ம 5

    பதிலளிநீக்கு
  14. வாங்க, வாங்க விரிவாக அலசி புலியை அனுப்பி விட்டீர்கள் ஜப்பானுக்கு.....
    த.ம.6

    பதிலளிநீக்கு
  15. பலரும் பணமிருந்தும் இல்லாதவர்கள். இன்னும் எவ்வளவு நாட்களோ. ஏடிஎம்மில் பணம் இல்லை அல்லது செர்வீசில் இல்லை என்னும் செய்திதான்

    பதிலளிநீக்கு
  16. மிக நீண்ட ஆனால் விபரமான பதிவு பட விமரிசனமும் அருமை. தமிழில் இப்படி எல்லாம் எப்போது படம் வரும் என எதிர்பார்க்க வைக்கிறது!

    பதிலளிநீக்கு
  17. அருமையான கண்ணோட்டம்
    பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  18. இப்பொழுதுதான் ...மனசு தளத்தில் பட விமர்சனம் வாசித்தேன்...இங்கையும் ..பார்க்கும் ஆவலை தூண்டுகிறது..

    பணம் இருக்கு ஆனா இல்ல...இன்றைய நிலை பலருக்கு..

    பதிலளிநீக்கு
  19. ட்ரம்ப், புலி முருகன், ரூபாய் நோட்டு மகாத்மியம் அருமை. ரொம்ப சுவாரசியமா கொடுத்திருக்கீங்க. நாங்களும் வெளியூரில் மாட்டி சிரமப்பட்டோம். பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைக்கும் மானிடரே என்ற வார்த்தை ஞாபகம் வந்துச்சு. இனி நோ சிறுவாடு.. எல்லாம் கருவாடா ஆயிடும்போல. :)

    பதிலளிநீக்கு
  20. துளசி ஐயா! ஆழ்ந்த சிந்தனையாளரான நீங்கள் கூட மோடி வித்தையில் மயங்கி விட்டதைப் பார்க்க வியப்பாகத்தான் இருக்கிறது. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டா! எனக்கும் இது சரியா தவறா என்பதில் ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு விதக் கருத்துக்கள் மாறி மாறித் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. அதனாலேயே இதை எதிர்த்து எழுத எல்லாவிதக் கருத்து ஏவுகணைகளும் கைவசம் இருந்தும் எதுவுமே எழுதாமல் தவிர்த்து விட்டேன்.

    நீங்கள் நல்லது என்கிறீர்கள். எப்படியோ உங்களைப் போன்றவர்களின் நல்லெண்ணம் பலித்தால் அஃது எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் கூட மகிழ்ச்சியே! செல்லாக்காசு விவகாரம் பற்றி இருவேறு துருவங்களிலிருந்து எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகளான நம் ஐயா திரு முத்து நிலவன் அவர்களின் கட்டுரையையும், எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் கட்டுரையையும் படித்துக் குழம்புமாறு கேட்டுக் கொள்கிறேன்!

    நன்றி!

    பதிலளிநீக்கு