செவ்வாய், 29 நவம்பர், 2016

ஆட்டியன்பாற நீர்வீழ்ச்சி.

“தெய்வத்திண்டே ஸ்வந்தம் நாடு” என்று பெருமை பேசும் பலகைகள் எல்லா இடங்களிலும் சுற்றுலாத் துறையினால் பொருத்தப்பட்டிருக்கும் கேரள மாநிலத்தில், மலப்புரம் மாவட்டத்தில் இருக்கும் நிலம்பூரிலிருந்து ஏறக்குறைய 16 கிமீ தூரத்தில் இருக்கும் ஆட்டியன்பாற (ட்டி என்பது ஆங்கில எழுத்தாகிய என்பதன் உச்சரிப்பு)  அருவியை நோக்கி எங்கள் பயணம், இந்த வருடத்து ஜூன் மாதத்தில் என் மகனின் பயணத்திற்கு முன் இருவரும் சேர்ந்து செல்ல வேண்டும் என்று திட்டமிட்டுச் சென்ற பயணம். துளசியின் வீட்டிற்குச் சென்று அவர்களுடன் சென்றோம். அவர்கள் இந்த அருவிக்கு மிக மிக அருகில் இருந்தும் இப்போதுதான் முதல்தடவையாகப் பார்க்கிறார்கள். 

கேரளத்துப் பருவ மழை நேரமாதலால் மஞ்சு தவழும் மலை முகடுகள். கார் மேகங்கள் சூழ்ந்து இதோ மழையைக் கொட்டிவிடுவேன் என்று கண் சிமிட்டிக் கொட்டும் மழை அல்லது தூறிக் கொண்டே இருக்கும் மழைச் சாரல்.




பயணப் பகுதி, கேரளாவின் மலபார் பகுதி என்பதால், பேருந்துப் பயணம்/ கார் பயணம் ரயில் பயணம் என்றாலும் சரி, எங்கெங்குக் காணினும் பசுமையடா, பச்சையைத் தவிர வேறொன்றுமில்லை என்று பறை கொட்டும் அளவிற்குப் பசுமையான மலைகளும், ரப்பர் தோட்டங்களும், பாக்கு மரங்களும், தென்னை மரங்களும், வயல்களும், வாழைத் தோப்பும், காடுகளும் கொஞ்சம் அல்ல நிறையவே மனதை மயக்குகின்றது. இடையிடையே நதிகளும், சிற்றோடைகளும் பருவமழைக்காலம் என்பதால் நீர் நிறைந்து கேரளத்தின் பசுமை வளத்திற்குச் சாட்சிகளாக விளங்குகின்றன.

வழி முழுவதும் இயற்கை அன்னையின் ஆட்சியே. சாலையின் இருமருகிங்கிலும் ரப்பர் தோட்டங்களும், காடுகளும் நம்மைக் கிறங்கடித்து ரசிக்க வைக்கின்றன. சாலை மிக நேர்த்தியாகவும், போக்குவரத்து அதிகம் இல்லாமல் வெறிச்சென்று இருந்தாலும், சாலை வளைந்து, வளைந்து செல்வதால், வளைவில் எதிரில் அதி வேகமாக வரும் வண்டிகள் தெரிவது இல்லை என்பதால், மிகவும் கவனமாகச் செல்ல வேண்டும்.


இந்த இயற்கை நீர்வீழ்ச்சி இருக்கும் கிராமத்தின் பெயர் குரும்பலங்கோடு. மலையின் மேலே ஓடும் கஞ்சிரப்புழா எனும் ஆறு பாறைகளுக்கிடையில் படிப்படியாக வீழ்வதுதான் ஆட்டியன்பாற  நீர்வீழ்ச்சி. மலப்புரம் மாவட்டத்தில் மின்சாரத் தட்டுப்பாடு இருந்ததால், தற்போது கஞ்சிரப்புழா ஆற்றின் ஒரு சிறு பகுதியைத் தடுத்து சிறிய அணை கட்டி அங்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
 

கேரள மாநிலம், சுற்றுலாப்பயணிகளைக் கவர்வதற்காக, சமீபத்திய முயற்சியாகப் பல அணைக்கட்டுகளையும், பவர் ஹவுசையும், அருவிகளையும் இணைத்து  கேரளா ஹைடல் சுற்றுலா மையங்கள் என்ற பெயரில் சுற்றுலாத்தலங்களை உருவாக்கி வருவதால், அதன் கீழ் ஆட்டியன்பாற அருவியையும் 3 கோடி ரூபாய் செலவில் சுற்றுலாத்தலமாக உருவாக்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக 2.5 கிலோமீட்டர் தூரமும், 6 மீட்டர் அகலமும் கொண்ட சாலையை பவர் ஹவுசிலிருந்து மேயின்பள்ளி பகுதிக்கு அதாவது கஞ்சிரபுழா ஆற்றில் கட்டப்பட்டிருக்கும் அணைக்கட்டு வரை அமைத்துள்ளது.


இப்பகுதியில் இந்த நீர்வீழ்ச்சி சுற்றுலாப்பயணிகளைக் கவர்வதாக இருப்பதாலும், இந்த நீர்வீழ்ச்சியில் கோடை காலத்தில் நீர் மிகவும் குறைந்து சுற்றுலாப் பயணிகள் வருவது குறைந்துவிடும் என்பதாலும், சுற்றுலா பயணிகளைக் கவர்வதற்காக, 14 பேர் அமர்ந்து செல்லும் வகையில் பாட்டரியில் இயங்கும் கார் ஒன்று பவர் ஹவுசிலிருந்து அணைக்கட்டு வரைச் செல்ல விடப்பட உள்ளதாக சமீபத்தில் கேரள ஹைடல் சுற்றுலா மையம் அறிவித்துள்ளது. நாங்கள் பார்வையிட முடியவில்லை.

அருவிக்குச் செல்லும் பாதை வரை நாம் வண்டியில் செல்லலாம். அங்கு வண்டிகளை நிறுத்த இடம் உள்ளது. கட்டணம் ரூ 20. அருகில் அல்சனாஹ் எனும் ஒரு சிறிய உணவகம் இருக்கின்றது. ஆனால் நாங்கள் சென்ற சமயம் திறந்திருக்கவில்லை. எனவே நாம் கையில் உணவு கொண்டு செல்வதே நல்லது. அதனை அடுத்து கைவினைப் பொருட்கள் விற்கும் கடையும் உள்ளது.
அருவிக்கு நுழைவுக் கட்டணம் ஒரு நபருக்கு ரூ 10. நுழைந்தால் மிகவும் அழகான பூங்கா, கல்லில் செதுக்கப்பட்ட கொரில்லா சிலை அதைச் சுற்றிலும் பயணிகள் அமர்வதற்கு ஆங்காங்கே பெஞ்சுகளும், அதனை அடுத்து இறங்கினால், இளைப்பாற பெரிய அளவில் ஒரு அறையும், அதிலும் அமர பெஞ்சுகளும் உள்ளது. அதன் வழிதான் அருவிக்குச் செல்ல வேண்டும். 

மீண்டும் படிகள் இறங்கிச் செல்லும் போது நடுவில் போகைன்வில்லா வளைவும், இரு புறமும் அமைக்கப்பட்டப் பூங்காவில் வன்ண வண்ணப் பூக்களும் மனதைக் கவர்கின்றது.
குளுமையான காற்றிற்கிடையில் கண்ணிற்கும், மனதிற்கும் விருந்தும், இதமும் அளிக்கும் இயற்கை எழில் கொஞ்சும் மலைகளுக்கிடையில் இயற்கை அன்னையின் மடியில் படிப்படியாய், அருவிக்கே உரிய இனிய ஓசையுடன் பாறைகளுக்கிடையில் தவழ்ந்து வீழ்கின்றது அருவி. ஆங்காங்கே விழுகின்ற இடத்தில் சுனைகளும்/சிறிய குட்டைகளும் இருக்கின்றன.
இந்த அருவியில் 22 பேர் சறுக்கி விளையாடி பாறைகளில் மோதி இறந்திருப்பதால் எச்சரிக்கை அறிவிப்பு.
தண்ணீர் வரத்து அதிகம் இருக்கும் போது இந்தக் குழிகள் தெரியாது, ஆபத்தானவை என்பதால் தான் எச்சரிக்கை
பல இளைஞர்கள் அருவி விழும் பாறையில் சறுக்கிக் கொண்டு கீழே சுனையில் விழுந்து நீந்துகின்றார்கள். அதிகமாக மழை பெய்யும் காலத்தில் தண்ணீரின் அளவு கட்டுக்கடங்காமல் எல்லா பாறைகளையும் மூழ்கடித்து ஓடும் சமயம் தண்ணீருக்கடியில் இருக்கும் பாறைகளோ, பாறைகளின் குழிகளோ, நீரின் ஆழமோ அறிய முடியாததால், இவ்வாறு சறுக்கி விளையாடுபவர்கள் பாறைகளில் மோதி இது வரை 22 பேர் இறந்துள்ளதால் ஆங்காங்கே இதை அறிவித்து எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றது.

அதன் காரணமாக, பூங்கா வழி செல்லும் போது பிரதான அருவிக்கு அங்கிருந்து பாறைகளில் இறங்கினால் அங்கு கம்பித் தடுப்பும் சிறிய வாயிற்கதவும் இருக்கின்றது. மாலை 5 மணி வரைதான் வாயிற்கதவு திறந்திருக்கும். அதன் பின் அருவிக்குச் செல்ல அனுமதியில்லை. இந்தக் கம்பித் தடுப்பு பாறைகளின் மேல் நீண்ட தூரத்திற்குக் கட்டப்பட்டிருக்கிறது.


நீர் ஓடும் வழியில் தடுப்புக் கம்பி நீண்ட தூரம் வைக்கப்பட்டிருக்கிறது. கம்பி வரை நீர் வந்துவிட்டால் கம்பியைத் தாண்டி அனுமதி இல்லை என்றும் அச்சமயம் அருவியைக் கம்பியின் இப்புறம் இருந்து மட்டுமே காண முடியும் என்றும் சொல்லப்பட்டது.

நாங்கள் சென்றது ஜூன் மாதம் ஆரம்பம் என்பதால் அபாயகரமான அளவிற்கு நீரில்லை. பாறையில் இறங்கி மெயின் அருவிக்குச் செல்லாமல் கீழே பாறைகளில் இறங்கி மீண்டும் மடிந்து விழும் சிறிய சிறிய அருவிகளிலும், சிறிய சுனைகளிலும், ஓடும் நீரிலும் நனைந்து, குளித்து மகிழலாம். எவ்வளவு நேரம் அருவியிலும், ஓடும் நீரிலும் விளையாடி மகிழ்ந்தாலும் கிடைக்கும் இன்பத்திற்கு அளவே இல்லை எனலாம்.  நீர் மிகவும் தெளிவாகவும், சுத்தமாகவும் இருக்கின்றது.

இந்தப் படத்தில் வலது புறம் ஒரு பாதை செல்லுகிறது அல்லவா அது வழிதான் அருவிக்குச் செல்ல வேண்டும். அங்கு சிறிய கம்பிக் கதவு இருக்கிறது. 5 மணிக்கு மூடி விடுகிறார்கள்.
வ்யூ பாயின்ட் செல்லும் வழி
வ்யூ பாயின்ட்

பாறைகளில் இறங்காமல், பூங்காவின் வழி நடந்தால், படிகள் ஏறி, இறங்கிய பின் சரிவான மண் பாதையில், ஆங்காங்கே இருக்கும் பாறையில் ஏறி, கரடு முரடான பாதை வழி ஏறினால் அங்கு மடிந்து விழும் அருவியை மிக உயரத்தில் இருந்து காணும் வ்யூ பாயின்ட் உள்ளது. சுற்றிலும் மலையும், அடர்த்தியான காடும், மலை உச்சியும் மனதைக் கொள்ளை கொள்ளுகின்றது. நம் கண்களுக்கு மட்டுமல்ல விருந்து, மூன்றாவது விழியான புகைப்படக் கருவியின் கண்களுக்கும்தான்.

பேருந்தில்/ரயிலில் பயணம் என்றால், பாலக்காடு அல்லது ஷோர்னூரிலிருந்து நிலம்பூர் சென்ற பிறகு, ஆட்டியன்பாற நீர்வீழ்ச்சிக்கு நிலம்பூரிலிருந்து நாம் பயண ஏற்பாட்டாளர் (ட்ராவல்ஸ்) வண்டி ஏற்பாடு செய்து கொண்டு பயணம் செய்வதே நல்லது. நிலம்பூரிலிருந்து கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 2 கிலோமீட்டர் தூரத்தில் இடது புறம், வெளியந்தோடு எனும் இடத்தில், நிலம்பூர்-ஆட்டியன்பாற சாலையில் திரும்ப வேண்டும்.

அந்தச் சாலையில் மயிலாடி, அகம்பாடம் எனும் இடங்களைக் கடக்கும் போது ஆட்டியன்பாற நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் வழிக்கான அம்புக்குறியும், தூரமும் குறிப்பிடப்பட்டுத் தகவல் பலகை உள்ளதால் வழி அறிவதில் சிரமம் இல்லை. அங்கிருக்கும் மக்களிடம் கேட்டாலும் வழி சொல்லுகின்றனர். நிலம்பூரிலிருந்து பயண நேரம் 30-40 நிமிடங்கள்.

பாலக்காட்டிலிருந்து நிலம்பூர் செல்ல 3 மணி நேரம். பாலக்காட்டிலிருந்துக் கோழிக்கோடு செல்லும் பேருந்தில் ஏறினால் 2 மணி நேரப்பயணத்தில் பெரிந்தல்மன்னா எனும் ஊரில் இறங்க வேண்டும். அங்கிருந்து நிலம்பூர் செல்வதற்குப் பல பேருந்துகள் இருக்கின்றன. 1 மணி நேரப்பயணம்.

பாலக்காடு,  ஷோர்னூரிலிருந்துப் புறப்படும் ரயில் விவரங்கள் :
Dep ↑↑
16349
Thiruvannathapuram -...
Exp
SR
SRR
05:45
NIL*
07:20
56611
Palakkad - Nilambur ...
Pass
SR
SRR
07:05
NIL*
08:40
56613
Shoranur - Nilambur ...
Pass
SR
SRR*
09:20
NIL*
10:55
56362
Ernakulam - Nilambur...
Pass
SR
SRR
11:25
NIL*
13:00
56617
Shoranur - Nilambur ...
Pass
SR
SRR*
15:05
NIL*
16:40
56619
Shoranur - Nilambur ...
Pass
SR
SRR*
17:10
-
NIL*
18:45
56621
Shoranur Nilambur Ro...
Pass
SR
SRR*
19:30
-
NIL*
21:10


நிலம்பூர் ரயில் நிலையத்திலிருந்து நிலம்பூர் டவுண் (Town) 3 கிமீ தூரத்தில் உள்ளது.  நிலம்பூர் டவுணிலேயே நிறைய நல்ல உணவகங்களும், விடுதிகளும், பயண ஏற்பாட்டாளர் (ட்ராவல்ஸ்) வசதிகளும் உள்ளது.. இணையம் வழியாகத் தங்கும் இடமும், ட்ராவல்சும் பதிவு செய்ய முடியும்.


 (KTDC) “டாமரின்ட்” (Tamarindஉணவகம் மற்றும் தங்கும் விடுதி

கேரளா சுற்றுலாத்துறை வளர்ச்சி கார்ப்பரேஷனின் (KTDC) “டாமரின்ட்” (Tamarind) உணவகம் மற்றும் தங்கும் விடுதி, நிலம்பூர் – கூடலூர் செல்லும் சாலையில், நிலம்பூரிலிருந்து 4 கிமீ தூரத்தில் சாலையின் வலது புறத்தில், கரிம்புழா ஆற்றின் கரையில் உள்ளது.

சென்று வருவதும் எளிது என்பதால் மிக மிக அருமையான ஒரு சுற்றுலாத்தலம் என்றால் மிகையல்ல.


------ கீதா

(படங்கள் அதிகமாகக் கொடுத்திருப்பதன் காரணம்,  பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள் படங்களைப் பார்த்து மகிழலாம் என்றும்,   மேற்கொள்ள முடிந்தவர்கள் புகைப்படங்களைப் பார்த்துப் பார்க்க ஆர்வம் ஏற்படுமே என்பதற்காகவும்  கொடுத்திருக்கிறேன்.  அடுத்த முறை டிடி அவர்களின் பாடமான ஸ்லைட் ஷோ முயற்சி செய்ய வேண்டும்.இப்போது நேரம் பற்றாக் குறை!

இப்போதுதான்  நண்பர்களின், சகோதரிகளின் தளங்களுக்கு ஒவ்வொன்றாக வருகை தருகிறோம். வாசிக்கின்றோம். நிறைய இருப்பதால்..  கொஞ்சம் தாமதமாகலாம்.)

வெள்ளி, 11 நவம்பர், 2016

2016, நவம்பர் 8, 9, 10…………………….!!!???

உலகமே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க அதிபர் தேர்தல்; அடுத்த அதிபர் யாராக இருக்கும்? ஹிலாரியா? ட்ரம்பா; முதல் சுற்றில், இனி ஒரு போதும் ஓடி ஹிலாரியைக் கடக்க மாட்டார் ட்ரம்ப் என்று நினைத்திருக்க, தேர்தல் நாள் நெருங்க, நெருங்க ட்ரம்ப் ஆமை ஓடி ஹிலாரி முயலைத் தோற்கடிக்க வாய்ப்பு உள்ளது போல் தோன்றிய அந்த நவம்பர் 8 ஆம் தேதி!!!.....!!!!!

அன்று வழக்கம் போல் ஒவ்வொரு வகுப்பையும் முடித்துவிட்டு இறங்கிய போது ஆசிரியர்கள் அறையிலிருந்து, ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபர் ஆகத் தேவையான 270 எலக்டோரல் காலேஜ் ஓட்டை நெருங்கிக் கொண்டிருப்பதாகச் செய்தி. மதியத்திற்குப் பிறகு ட்ரம்பின் வெற்றி உறுதியாக்கப்பட்டும் விட்டது!

Image result for trump

அப்படியாக, 70 வயதான, உலகளவில் 324வது கோடீசுவரரான, எவருடனும் கை குலுக்கப்பிடிக்காத, (அமெரிக்க அதிபர், ஏறத்தாழ 61/2 லட்டசிற்கும் மேலாகப் பிறருடன் கைகுலுக்க வேண்டுமாம்!!!) குடிக்காத, திரைப்பட நடிகரான, 1987ல் அமெரிக்காவில் அதிகமாக விற்பனையான “ஆர்ட் ஆஃப் தெ டீல்” எனும் தன் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை எழுதிய எழுத்தாளருமான, மும்முறை திருமணம் செய்த ஜான் ட்ரம்ப் அமெரிக்காவின் 45வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எல்லாவற்றிலும் வித்தியாசமாக இருக்கும் அவர் ஒரு வித்தியாசமான அமெரிக்க அதிபராகத்தான் இருப்பார். பொறுத்திருந்துப் பார்ப்போம். அப்படி அமெரிக்கப் பரபரப்பு ஒருவழியாக முடிந்தது.
Image result for pulimurugan

கடந்த ஒரு மாதமாகப் பாலக்காடு ப்ரியா திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் மோஹன்லால் நடித்த புலிமுருகன் படத்தைப் பார்க்க முடியாத பிரச்சனைக்கு அன்று முடிவு கண்டே தீர வேண்டும் என்ற தீர்மானத்துடன் நானும், ஜோஸ் ஐயாவும் 4.45க்குத் திரையரங்கை அடைந்தோம்.  அப்போதும், நீங்கள் இன்றும் பார்க்க முடியாது என்று சொல்வது போல் நீண்ட வரிசை. அங்கிருந்த திரையரங்குக் காவலரிடம் “நின்னா டிக்கெட் கிடைக்குமா?” என்றதும், “தைரியமா நில்லுங்க, உங்களுக்குக் கிடைக்கும்” என்றார். நான் வண்டியை நிறுத்திவிட்டு வருவதற்குச் செல்ல, ஜோஸ் ஐயா பணத்துடன் நுழைவுச் சீட்டு வாங்குமிடத்தில் கையை உள்ளே நுழைக்கும் வரை நுழைவுச்சீட்டு கையில் கிடைக்குமா இல்லையா, கை வெளியே வரும் போது சீட்டு கையில் இருக்குமா? என்று பரபரப்பு. கையில் சீட்டைப் பார்த்ததும் மனசெல்லாம் மத்தாப்பு. உள்ளே சென்றால் திரையரங்கின் திரைக்குச் சற்று தள்ளி இருக்கும் வரிசைதான் இருந்தது. மத்தியில் இருக்கைகள் ஏதேனும் இருக்குமா என்று பார்த்ததில், இரண்டு இருக்கைகள் அருகருகே இல்லாமல் சற்றுத் தள்ளி இருந்தன. அங்குச் சென்று இருக்கையிலிருந்தவரிடம் வேண்டுகோள் விடுக்க அவரும் நல்ல மனதுடன் இருக்கை மாறிச் செல்லவும் நாங்கள் மகிழ்ச்சியுடன் அருகருகே அமர்ந்து கொண்டோம். 25 கோடி ரூபாய் முதலீட்டில், 331 திரையரங்குகளில் வெளியிட்டு, 100 கோடிக்கும் மேல் வசூலில் சாதனை படைத்த மலையாளப் படம். நல்ல திரைக்கதை, வசனம், இயக்கம், லாலேட்டனின் இயல்பான நடிப்பு மற்றும் பீட்டர்ஹெய்னின் அருமையான சண்டைக் காட்சியமைப்புகளும் (ஆக்ஷன் கோரியோக்ராஃபி), தாய்லாந்து புலி, கிராஃபிக்ஸ் புலிக் காட்சிகளும் பார்ப்பவரைப் பிரமிக்க வைக்கும் அளவுக்குச் சிறந்த படமாகப் புலிமுருகனை ஆக்கிவிட்டது எனலாம். (சில மாதங்களுக்கு முன்புப் புலியாய் நடித்த விஜய் புலிமுருகனாய் நடித்திட, இப்படம் தமிழிலும் வர இருக்கிறதாம்!)

அப்படியாக ஒரு மாதம் காத்திருந்துப் புலிமுருகனைப் பார்த்த மகிழ்ச்சியில், வழக்கமாக நாங்கள் செல்லும், கோயம்புத்தூர் சாலையில் உள்ள இந்திய காப்பி உணவகத்திற்குச் சென்று சப்பாத்தி + குருமாவை உண்டுவிட்டுப் பணம் கொடுக்கும் போது அதிர்ச்சி! ரூ 500, 1000 நோட்டுகள் இனி செல்லாது, நாளை வங்கிகள், ஏடிஏம் எதுவும் இயங்காது என்று கணக்காளர் சொல்ல மேலும் அதிர்ச்சி! 8.30 மணிச் செய்தியில் பிரதமர் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் இந்த முயற்சிக்கு மக்களின் ஒத்துழைப்பை வேண்டியிருக்கிறார் என்றும் அவர் சொல்ல, “இது எப்படித் திடீரென்று சாத்தியம்? 15 லட்சக் கோடி ரூபாய், நாட்டிலுள்ள 130 கோடி மக்களோட கையிலிருக்கற ரூ 500, 1000 நோட்டுகள ஒரே ராத்திரியில செல்லாதுனு சொல்ல முடியும்? நடக்கற காரியமா? சும்மா வதந்தியோ?” என்று நாங்கள் சொல்லிக் கொண்டே வண்டியில் ஏற, என் மனைவியிடமிருந்து அழைப்பு.
“நான் அபிராமியின் நடன ஆசிரியருக்குக் கொடுக்க வேண்டி ஏடிஎம்ல ரூ 20000 எடுத்துட்டு வந்தா இப்படி நியூஸ். இனி என்ன செய்ய?” என்று ஒரே புலம்பல். அவர் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே பேசியதால், 10 ஆம் தேதியிலிருந்து வங்கியில் பணத்தை மாற்றி வாங்கலாம், ஒரு வாரம் ரூ 10000, ஒரு மாதத்தில் ரூ 20000 வரை எடுக்கலாம், பேருந்தில் பயணம் செய்யவும், ரயில் சீட்டு எடுக்கவும், பெட்ரோல் பங்கில் பெட்ரோல் அடிக்கவும், மருந்தகத்தில் மருந்து வாங்கவும் பழைய நோட்டுகளைப் பயன்படுத்தலாம் எனவும், இனி என்ன செய்வது என்ற குழப்பம் மாறியது.

வீட்டிற்குப் போகும் வழியில் மருந்தகத்தில் மகன் அருணுக்குத் தேவையான சில மருந்துகளை வாங்கி ரூ 1000த்தைக் கொடுத்து, மீதி ரூ 600 கிடைத்ததும் ஒரு சிறு நிம்மதி பிறந்தது. போகும் வழியில் வழக்கமாகப் பெட்ரோல் பங்கில் நீண்ட வரிசை. பையனிடம் ரூ 500ல் ரூ200க்கு அடித்தால் மீதி கிடைக்குமா என்றதும் காத்திருந்தால் கிடைக்கும் என்று சொன்னாலும், வரிசையில் நின்றவர்கள் ரூ 100க்கு அடிக்க ரூ 500 நீட்டியதால் எல்லோரையும் திரும்ப அனுப்பிவிட்டனர். சில நிமிடங்களுக்குப் பிறகு அந்தப் பையன் பங்கின் அலுவலகத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்ப வரும் போது ரூபாய் 300 கொடுத்தான். அலுவலகத்தில் நான் கொடுத்த ரூ 500 ஐச் சோதித்திருக்க வேண்டும் அல்லது அங்குப் பல 100 ரூபாய் நோட்டுகளை வைத்திருக்க வேண்டும். எப்படியோ என் கையில் 12, 100 ரூபாய் நோட்டுகளும், 3, 50 ரூபாய் நோட்டுகளும், சில 10 ரூபாய் நோட்டுகளும் இருக்க சமாதானமாகத் தூங்கினேன். மறுநாள் பள்ளியில் இந்தச் செய்திதான் ஓடியது. மாலை 6 மணி வரை எஸ்பிஐ, எஸ்பிடி வங்கிகளில் ரூ 4000 வரை மாற்றிக் கொள்ளலாம் என்றும் தகவல் கிடைத்தது. முகநூலைத் திறந்தால், ஆவி ரூ 2000 நோட்டுகளை விரித்துக் காட்டிச் சிரித்துக் கொண்டிருந்தார்! அது போல் ரூ 2000 நோட்டு ஒன்று மாலை 5 மணிக்கு மேல் நமக்கும் கிடைக்கும்தானே என்ற மன மகிழ்வில் வகுப்பிற்குச் சென்றேன்.

இந்த அதிரடி நடவடிக்கையினால் மது விற்கப்படும் லிவரேஜர் கார்ப்பரேஷன் டெப்போக்களில்/கிளைகளில் கூட்டமே இல்லையாம்! 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளைக் கையில் வைத்துக் கொண்டு “க்வாட்டரேனும்” கிடைக்காதா என்று ஏக்கத்துடன் சில குடிமகன்கள் பார்த்துக் கொண்டிருக்க, ரூ 100 நோட்டுகளைக் கையில் வைத்துக் கொண்டு க்வாட்டர் வாங்கி, அந்தக் குடிமகன்களை ஏளனத்துடன் பார்த்துக் கொண்டு வீர நடை போட்டுச் சென்ற காட்சிகளும் நடை பெற்றதாம். அங்கும் சில தந்திரசாலிகள் ரூ 100 நோட்டுகளுடன் ரூ 1000த்திற்கு ரூ 800ம், ரூ 500 க்கு ரூ 400ம் கொடுத்து லாபம் கண்ட காட்சிகளும் அரங்கேறியதாம். பெரிய பெரிய நகைக்கடைவியாபாரிகளும், ஹவாலாக்களும் இப்படியான வியாபாரம் நடத்திய செய்திகளை வாசித்தபோது, இந்தச் சாதாரண மக்கள் நடத்தியது ஒன்றும் பெரிய வியப்பான நிகழ்வு இல்லைதான்.
இந்த அதிரடி நடவடிக்கையால் நிகழ்ந்த சில சுவாரஸ்யங்கள். திருவனந்தபுரத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒருவர் மூன்று கோணிப்பைகளில் ரூ 69,320க்கு நாணயங்களைக் கொடுத்துத் தன் இடத்தைப் பதிவு செய்து வாங்கியிருக்கிறார். கர்நாடகா கோலாரில், ஒரு எம் எல் ஏ, கிராமத்திலுள்ள எல்லோருக்கும் ரூ 3 லட்சம் வீதம் கடனாகப் பொதுக் கூட்டம் கூட்டிக் கொடுத்திருக்கிறாராம். ஊடகங்களில் மேடையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நோட்டுகளின் படங்கள் வெளியானதும், வருமானவரித் துறைக்கு அவரைப் பிடித்து வரி வசூலிக்க எளிதாகிவிட்டது. ஒரு சில அரசியலாளர்களைத் தவிரேல்லோருமே கறுப்புப் பணத்தை ஒழிக்க அரசு எடுத்தைந்த முடிவு நல்லதே என்று சொல்லுவதைக் கேட்கும் போது இந்திய அரசையும், மக்களையும் நினைத்துப் பெருமைப்பட கிடைத்த இந்த அரிய வாய்ப்பை எண்ணி உண்மையிலேயே மகிழ்ச்சியடைந்தேன்.

Image result for rs 2000 note

பள்ளியிலிருந்து மாலைதான் வெளியேற முடிந்தது. வழியில் இருந்த வங்கிகளில் இரும்புக் கதவு பாதிக்குக் கீழ் இறக்கப்பட்டிருக்க, ஒரு வங்கியில் கூட்டம் சற்றுக் குறைவாக இருக்கக் கண்டதும் அங்கு நானும் சென்று எனது ஆதார் அட்டையின் நகல் எடுத்துக் கொடுத்து வங்கியில் தந்த விண்ணப்பத்தை நிரப்பி, நான் வைத்திருந்த பழைய நோட்டுகளின் எண்களை எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்துவிட்டுக் காத்திருந்தேன். வரிசையில் எனக்கு முன்னால் ஒரு முதியவர் ரூ 500 மாற்றிக் கொண்டு சென்றார். இன்றைய செய்தி, தலச்சேரியில் ஒருவர் வரிசையில் நின்றவர் இரண்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்தார் என்றும், மற்றொரு முதியவர் வரிசையில் நின்றவர் மயங்கி விழுந்து இறந்தார் என்றும் கேட்டதும், இப்படி, கையில் அகப்பட்டுப் போன 1000, 500 ஐ மாற்றுவதற்குப் படும் சிரமங்களை நினைக்கையில் வருத்தமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் நாட்டின் பொருளாதார நிலையைச் செம்மைப்படுத்த, கறுப்பு, ஊழல் மற்றும் குழாய்ப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை, நோய் அகல கசப்பான மருந்தை எடுத்துக் கொள்வது போல் எல்லா இந்தியர்களும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால், இந்த நடவடிக்கை இன்னும் பல சட்டத்திட்டங்களோடு அமல்படுத்தபட்டால்தான் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியும். பண ரீதியாக இல்லாமல் எல்லாமே அட்டை அல்லது காசோலை, அல்லது இணையவழியில் சரியான ஆதாரங்களுடன், கணக்குவைத்துக் கொள்ளப்பட்டு நடத்தப்பட வேண்டும் என்ற சட்டம் வலுவாக அமலாக வேண்டும்.

எனது கையிலிருந்த 3 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், 2, 500ரூபாய் நோட்டுகளும் எனக்கு விடை சொல்லிப் பிரிந்தன. 20, 100 ரூபாய் நோட்டுகளும், எலக்ட்ரானிக் நோட் என்று சொல்லப்பட்ட ரூ 2000மும் என் கைக்கு வந்து சேர்ந்தது. ஆனால், 2000 ரூபாய் நோட்டைப் பெற்றதும் அதில் எந்தச் சிப்பும் இல்லாதது சற்று ஏமாற்றத்தைத் தந்தது என்றாலும் புது நோட்டைப் பெற்ற ஆறுதலும், மகிழ்வும் இருந்தது. சிப்புடன் வருவதே அதைக் கள்ள நோட்டாக அடிக்க முடியாமல் என்பதற்காகச் சொல்லப்பட்டது!! 2016, நவம்பர் 8, 9, 10 தேதிகள் “மற்ற சாதாரண நாட்களைப் போல் அல்ல நாங்கள்” என்று மனதில் ஒரு பதிவை ஏற்படுத்திவிட்டுக் கடந்தன!

படங்கள் இணையத்திலிருந்து - நன்றி

(வேலைப்பளு காரணமாக இருவருமே இணையம்பக்கம் வர இயலவில்லை. நண்பர்கள் , சகோதரிகள் எல்லோரது பதிவுகளும் நிறைய இருக்கின்றன.  விரைவில் வந்து விடுபட்ட பதிவுகளை எல்லாம் வாசிக்கின்றோம். நிறைய இருப்பதால் மெதுவாக வாசிக்கிறோம்.)