நம் உரிமையை, கடமையை நிலைநாட்டும் நாளன்று, ஒரு சாதரண இந்திய, தமிழ்க் குடிமகளாகிய நான் எனது அடிப்படை உரிமைக்காகப் போராட வேண்டியிருந்ததை நினைத்து எழுந்த எனது எண்ண அலைகளை இந்தப் பதிவு நீண்டு வருவதால் அடுத்த பதிவில் தொடர்கின்றேன். என்று முடித்திருந்தேன். இதோ தொடர்ச்சி....
நம்மில் எத்தனை பேர் சிறு உடல்நலப் பிரச்சனைகளுக்கேனும் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்கின்றோம்? நம்மில் எத்தனை பேர் அரசு அலுவகங்களில் சேவைக்குண்டான பணம் தவிர கையூட்டு கொடுக்கமாட்டோம் என்ற உறுதியில் இருக்கின்றோம்? நம்மில் எத்தனை பேர் காவல் நிலையத்திற்குத் தைரியமாகச் சென்று புகார் கொடுக்கின்றோம்.
இன்னும் பல அடுக்கலாம்....மனதில் இருக்கும் எனது நெடுநாளைய கேள்வி. இங்கு நாம் அரசு வழங்கும் சேவைகளைப் பயன்படுத்தி, அதில் ஊழல்கள், குறைகள் நேரும் போது, தனியாகவும், ஒட்டு மொத்தமாககவும், குரல் கொடுத்து எதிர்த்து, ஒரு நல்ல எதிர்க்கட்சி போல செயல்பட்டிருந்தால், செயல்பட்டால் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது போல், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைவரும் மக்களின் சக்தி கண்டு மரியாதை வழங்கியிருப்பார்களோ? ஆனால் நாமோ, “சுயமரியாதையை அரசியல்வாதிகளிடமும், அதிகார வர்க்கத்திடமும் அடகுவைத்து விட்டதால்தான், இங்கு இவர்களின் ஆட்டம் கொடி கட்டிப் பறக்கிறது.” என்று முந்தைய பகுதிக்கு நம் நண்பர் உயிர்நேசன் கொடுத்த கருத்தை வழிமொழியத் தோன்றுகின்றது.
அதே சமயம், நமது அரசின் அடிப்படைச் சேவைகளான பள்ளி முதல், கல்லூரிவரை, நுகர்வோர் நியாய விலைக் கடைகள் முதல் மருத்துவம் வரை, நாட்டைப் பாதுக்காக்க வேண்டிய காவல் உட்பட சீராக மக்கள் பயன்படுத்தும் வகையில் இல்லாமல், ஊழல் புரையோடிக் கிடப்பதாலும் அதை மக்கள் எந்தவிதத்திலும் எதிர்க்காத, எதிர்க்க முடியாத காரணங்களினாலும், அரசின் அடிப்படைக் கடமைகள் தனியார்களுக்குத் தாரைவார்க்கப்பட்டு அதில் அதிகாரவர்கமும், அரசியல்வாதிகளும் நேரடியாகவும், மறைமுகமாகவும் கோலோச்சி நிற்கின்றனர்.
குறிப்பாகப் படித்தவர்கள், நடுத்தரவர்க்கத்தினர், குரல் கொடுக்காததன் காரணம், பொது இடத்தில் குரல் எழுப்பினால் நமது கௌரவம் பாதிக்கப்படும் என்று கருதுவதாலும், அரசு அதிகாரிகளின் தவறுகளைச் சுட்டிக்காட்டிக் குரல் கொடுத்து காவல்நிலையம் வரை செல்ல நேர்ந்தால் நமது வேலைக்கு வேட்டு வந்துவிடுமோ என்ற பயத்தினாலும்தான் என்றே தோன்றுகிறது.
அப்படியே குரல் கொடுத்துப் போராட்டங்கள் செய்தாலும் எந்தப் போராட்டமும் இங்கு வலுவாக இல்லை. எல்லாமே அந்தந்த நேரத்திற்கு மட்டுமே. பின்னர் வலுவற்றுப் போய்விடுகின்றன. ஒருவர் குரல் கொடுத்தாலும் அவருடன் சேர்ந்து ஆதரவாகக் குரல் கொடுக்க யாரும் முன்வராததால், பல விஷயங்கள் தனி மனிதப் போராட்டமாக வலுவற்றுப் போகின்றது. (வெங்கட்ஜி அவர்களும் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார் முந்தையப் பதிவில், பின்னூட்டத்தில்.)
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், தேர்தலில் முதலில் எனக்கு வாக்களிக்க விருப்பமில்லைதான். ஏனென்றால், நமது இந்தியக் குடியுரிமை, பிறப்புரிமைக்கான உண்மையான விருப்பத்தை, அடிப்படை உரிமையை, அதாவது எங்களுக்கு நல்ல தலைவர்/ஆட்சி வேண்டும் என்ற உரிமையைப் பதிய முடியவில்லை என்பதால், 100% நல்ல தலைவர் வேண்ட முடியாதுதான் என்றாலும் இருக்கும் தலைவர்களிலேனும் நல்லவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க முடியவில்லையே என்பதால்...
நாம் போராடினாலும் பந்தாடப்படுவதால். பல இடங்களில் பணம் கொடுத்து காரியம் சாதிக்க வேண்டிய நிலைமை இருப்பதால். அப்படிப்பட்ட ஊழலுக்குத் துணை போக வேண்டியுள்ளதே என்ற வருத்தத்தினால், நாம் நமது விருப்பப்படி ஓட்டுப் போட்டாலும் எந்த மாற்றமும் வரப் போவதில்லை, ஒன்று ஜெஜெ இல்லை முக, இவர்களைத் தவிர யாரும் வரப் போவதில்லை என்பதால் என்று பல காரணங்கள்.
இது பொதுவாகச் சென்னையில் வாழும் நடுத்தரவர்க்கத்துச் சிந்தனைதான். எல்லோரும் மாற்றத்தை விரும்பினார்கள். குறிப்பாக வெள்ளத்திற்குப் பிறகு. கட்சிகளின் நிலைப்பாட்டினால், இரு பெரும் கட்சிகளில் ஒன்றுதான் மீண்டும் என்பது ஊகிக்க முடிந்ததால், அட போங்கடா என்று இங்கு ஓட்டுப் பதிவு குறைந்திருக்கலாம்.
எனக்கு நோட்டா ஆர்வம் இருந்தது. நமக்கு எந்த வேட்பாளரும் பிடிக்கவில்லை என்பதை இப்போதைய சூழ்நிலையில், பெரும்பான்மையோர் பதிந்தால், ஒரு வேளை இந்த நோட்டா வாக்குகள், ஓட்டு வாக்குகளை விடக் கணிசமான விகிதத்தில் அதிகமாக இருந்தால், தேர்தல் ஆணையம் பெரும்பான்மையான மக்களின் முடிவை ஏற்று தமிழ்நாட்டை ஆளுனரின் ஆட்சிக்குக் கீழ் கொண்டுவந்தால், அரசியல்வாதிகளுக்கு மக்களிடம் பயமும், மக்களின் மீது மரியாதையும் ஏற்படாதோ, அதனால் நாம் விரும்பும் மாற்றம் படிப்படியாகவேனும் ஏற்படாதோ என்ற ஒரு நப்பாசை மனதில் எழுந்தது. ஆனால் நோட்டாவைப் பற்றிக் கூகுளில் தேடிய போது, அது எத்தனை வருடப் போராட்டத்திற்குப் பிறகு கொண்டுவரப்பட்டுள்ளது என்பதும் தெரிந்தது. மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டிய நோட்டாவிற்கு எந்தவிதப் பவரும் இல்லை, நம் வாக்கை வேறு ஒருவர் போடாமல் இருக்க மட்டுமே உதவும் என்றும் தெரிந்தது.
(நோட்டா பற்றி மூங்கில்காற்று முரளிதரன் மிக விரிவாகப் பதிவுகள் எழுதியுள்ளார்)
நோட்டா அளிக்காதீர்கள் என்று எனக்குப் பலரும் அறிவுரை வழங்கினார்கள். ஏன் பதியக் கூடாது? பின்னர் எப்படி நமக்கு வேட்பாளர் யாரையும் பிடிக்கவில்லை, நம்மை ஆளும் தலைவர்களைப் பிடிக்கவில்லை என்ற நமது உரிமையைப் பதிய முடியும்? மக்கள் நாம் தானே நமது தலைவர்களைத் தேர்ந்தெடுக்கின்றோம் எனும் போது அந்த உரிமை நமக்கு இல்லையா? அதுவும் கடமைதானே? அப்படி இல்லை என்றால் எதற்காக நோட்டா?
தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் நோட்டாவுக்கு வந்த 5 லட்சத்திற்கும் மேலான வாக்குகளைக் கண்டு எனக்குச் சற்று மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்தது. வாக்களித்தவர்கள் பெரும்பாலானோர் இளைஞர்கள். அவர்களுக்கு கட்சிகள், தலைவர்கள் என்பதை விட தாங்கள் நடைமுறையில் சந்திக்கும் ஊழல்களை விரும்பாததால் அதை எதிர்த்துத்தான், மாற்றம் வேண்டும் என்று நோட்டாவிற்கு வாக்கு அளித்திருப்பார்கள் என்று தோன்றுகின்றது. அழகாகத் தெரிவித்துவிட்டார்கள்.
இவ்வளவு ஏன்? இங்கு ஒரு ஓட்டுநர் உரிமம் கூட, நாம் நேரடியாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சென்று, அந்தச் சேவைக்கான பணம் மட்டும் செலுத்தி நேர்மையான முறையில் வாங்க முடிகின்றதா? சொல்லுங்கள் பார்ப்போம்? ஓட்டுநர் பயிற்சிப்பள்ளிகள்/ஏஜண்டுகள் மூலம்தானே வாங்க முடிகின்றது? நான் அமெரிக்காவில் ஓட்டுநர் உரிமம் வாங்கிய போது எந்தவித லஞ்சமும் கொடுக்கவில்லை. நேரடியாக அலுவலகம் சென்று, அதன் சட்டத்தைக் கண்டு, தேர்விற்கு உட்பட்டுப் பெற்றதைக் கண்டு வியந்து போனேன்.
எனக்கே இப்படி இருக்கும் போது, இப்போது பல இளைஞர்களும் வெளிநாடுகளுக்குச் சென்று வருவதால், அவர்களும் அங்கிருக்கும் நல்ல சூழல்களை, மாற்றத்தை இங்கும் விரும்புவார்கள்தானே. அந்த உணர்வில்தான் அவர்கள் நோட்டாவுக்கு வாக்களித்திருக்கலாம் என்றும் தோன்றுகின்றது.
இப்போதைய நோட்டா வாக்குகளைப் பார்த்த போது, நோட்டா வாக்குகள் வேட்பாளர்களின் வாக்குகளையும் விட அதிகமாக இருக்கும் தொகுதியிலேனும் ஆட்சியாளரின் ஆட்சியின் கீழ் அந்தத் தொகுதி வந்தால், நோட்டாவிற்கு இன்னும் பவர் கூடி முக்கியத்துவம் பெறும் அல்லவா? என்ற ஆதங்கம்.
எப்படியோ, நோட்டா வாக்குகளைப் பார்க்கும் போது அதற்கும் மக்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்று தெரியவருவதால், எதற்காக நோட்டா பல கடினமான போராட்டங்களுக்குப் பின் கொண்டுவரப்பட்டதோ, அதற்காக, நோட்டாவின் பவரை வலிமையாக்கி உறுதிப்படுத்தினால் அடுத்த தேர்தலிலேனும் நாம் விரும்பும் மாற்றங்கள் ஏற்படலாமே என்று தோன்றுகின்றது. பார்ப்போம் பொறுத்திருந்து.
-----கீதா
படங்கள்
இணையத்திலிருந்து. (பி கு: இதில் எனது அறியாமை
இருக்கலாம். என் மனதில் தோன்றிய எண்ணங்களைப் பதிந்துள்ளேன்..அவ்வளவே...)