ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

பண்பாட்டுத் தூதுவர்கள் – வெ. இறையன்பு

Image result for tamilnadu tourism symbol

courtesy - google

பதிவுகள் பல, அதுவும் அறிவியல் பதிவுகள், பொது அறிவுப் பதிவுகள் பல பாதி எழுதப்பட்டு இருக்கின்றன. எதையும் மனம் ஒருமித்து எழுதி முடித்துப் பதிவிட முடியாத சூழல். எனவே, இன்று நான் வாசிக்க நேர்ந்த, என்னக் கவர்ந்த ஒரு நல்ல தொகுப்பின் சிறு பகுதியை பதிகின்றேன். இந்தப் பகுதியை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் முன்னாள் மாணவர் சங்கமும், பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கமும் சேர்ந்து வெளியிட்டுள்ளது.

திருமிகு வெ இறையன்பு அவர்கள் தமிழ்நாடு சுற்றுலாத்துறை செயலாளராக இருந்த போது ஆற்றிய பல சொற்பொழிவுகளின் ஒரு பகுதி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் அவர்களைப் “பண்பாட்டுத் தூதுவர்கள்” எனச் சொல்லி, சுற்றுலாத்துறைக்கு அவர்கள் எவ்விதம் உதவ  முடியும் என்று அவர்களின் மீது நம்பிக்கை வைத்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சொன்னதின் சுருக்கத்தை இங்குப் பகிர்கின்றேன்.

இறையன்பு அவர்கள் சுய முன்னேற்றம், ஆளுமையை மேம்படுத்தல் பற்றி மிகவும் நேர்மறைக் கருத்துகளைப் பேசியும், எழுதியும் வருபவர். இதனை நான் ஒரு வின் வின் சிச்சுவேஷனாக, நேர்மறை எண்ணமாகவே பார்க்கின்றேன். மிக அருமையானச் சொற்பொழிவு. இதோ அவரது வார்த்தைகளில்....

புதிதாக வருகிற பயணிகள், மாநகரங்களிலும், நகரங்களிலும் கட்டடக் காடுகளில் காணாமல் போய்விடாமல் வர்கள் அடைய வேண்டிய விலாசத்திற்குப் பத்திரமாக அழைத்துச் செல்பவர்கள் நீங்கள். இரவானாலும், பகலானாலும், மழையானாலும், வெயிலானாலும், பசியையும் மறந்து, தூக்கத்தையும் தொலைத்து அடுத்தவர்களுக்காக உழைக்கும் உத்தமர்கள் நீங்கள். உயிரையும் பொருட்படுத்தாமல் பெரிய வாகன்ங்கள் செல்ல மறுக்கின்ற சந்துகளில் எல்லாம் பயணித்துச் சவாரியை உரிய இடத்திற்குச் சென்று சேர்ப்பிக்கிறவர்கள் நீங்கள்.

எதிர்பார்க்கிற சவாரி சிலநேரம் கிடைக்காமலும், சரியான வாடிக்கையாளர் அமையாமலும் அவதிப்படுகிறவர்கள் நீங்கள். எத்தனையோ இடங்களில் பணத்தைத் தவற விட்டவர்களும் கறாராகப் பேரம் பேசுவது உங்களிடம்தான். அவசரத்தில் பயணிகள் தவறவிட்ட பணத்தை அப்படியே எடுத்துச் சென்று சேர்க்கின்ற பெருந்தன்மை உங்களிலும் பலருக்கு உண்டென்பதை நான் அறிவேன். (எங்கள் ப்ளாக் பாசிட்டிவ் செய்திகளில் பெரும்பாலும் தவறாது இடம் பெறும் ஒன்று). நேர்மை தவறாமல், அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் வாய்மையுடன் உழைப்பவர்கள் நீங்கள்.
உங்களை வாழ்த்துவதோடு உங்கள் பணியை இன்னும் செம்மைப்படுத்த வேண்டும் என்பதையே என் வேண்டுகோளாக வைக்க எண்ணுகிறேன்.

மகத்தானப்பணி: எத்தனையோ இடங்களிலிருந்துத் தமிழகத்திற்குச் சுற்றுலா வரும் பயணிகளை அழைக்கும் திருமுகமே உங்களதுதான். நீங்கள் நடந்து கொள்ளும் வித்த்தைப் பார்த்துதான் தமிழ்நாட்டைப் பற்றிய மதிப்பீட்டை அவர்கள் மனதில் வரைகிறார்கள். புன்னகையுடன் நீங்கள் வரவேற்று, அன்புடன் உபசரித்து, ஆதரவாக அமர வைத்து, நயமாகப் பொருட்களை வாகனத்தில் வைத்து, நேர்த்தியுடன் அவர்களை அழைத்துச் சென்றால் நம் மாநிலம் சிறந்த மாநிலம் எங்கிற எண்ணம் அவர்கள் உள்ளத்தில் ஏற்படும். அரசு வகுத்துள்ள கட்டணத்தை மட்டும் நீங்கள் வசூலித்தால் அவர்கள் அடுத்த பயணத்தையும் உங்கள் வண்டியிலேயே தொடர விரும்புவார்கள். ஒரு மாநிலத்தைப் பற்றிய மிக்ச் சிறந்த விளம்பரம் இங்கு வந்தவர்கள் வாய்மொழி மூலம் மற்றவர்களிடம் எடுத்துச் சொல்லும் அபிப்ராயங்கள், அவற்றைக் கட்டமைக்கும் மகத்தான பணி உங்களிடம் இருக்கிறது.

தூய்மையும், வாய்மையும்: தோற்றத்தில் பொலிவு, உடையில் தூய்மை, சுத்தமான ஆட்டோ, மணம் வீசும் சூழல் என்று அவர்களை வசீகரிக்கும் வகையில் நீங்கள் இருந்தால் அவர்கள் மகிழ்ச்சியடைவதோடு நம் மாநிலத்தில் தங்கும் நாட்களும் அதிகரிக்கும். உங்கள் நாகரிகம், அன்பான சொற்கள், பண்பாடு உங்களை நம் மாநிலத்தின் தூதுவர்களாக, தமிழக்ச் சுற்றுலாவுக்கே நல்ல முகமும் கிடைக்கும், முகவரியும் கிடைக்கும்.

பழகுவதில் இனிமை: உங்கள் ஆட்டோவில் பலவித காரணங்களுக்காக ஏறுபவர்களிடம் எரிச்சலைக் காட்டினால் கூட அது அபசகுனமாகப்படும். அன்புதான் துன்பத்தைக் குறைக்கும் நிவாரணம். நெர்மையோடு நடப்பது தொடக்கத்தில் சிரமங்களைத் தரும். பண இழப்பு ஏற்படும். அடுத்தவர்களைப் பார்த்து நாமும் வரம்பு மீறலாம் எங்கிற ஆசையைத் தூண்டும். ஆனால், நாளாக நாளாக வேலை செய்யும் சஞ்சீவினியப் போன்றது நேர்மை. உங்கள் வாகனம்தான் சிறந்த முறையில் செலுத்தப்படுகின்ற ஆட்டோ என்பதை அறிந்து ஒரு முறை வந்தவர்கல் திரும்பத் திரும்ப அழைப்பார்கள். காட்டுகிற கரிசனம் அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்க வேண்டும். வாகனத்தில் அமர்வோர் நம்மை மறக்கக் கூடாது எங்கிற திடமான உள்ளத்துடன் நாம் அவர்களிடம் பழக வேண்டும்.

உடலை உறுதியாக்குவோம்: நல்ல பழக்கங்களாலும், வியர்வை வடிய வடிய சேர்க்கிற பணத்தைத் தீயப்பழக்கங்களான மது, புகை போன்றவற்றில் செலவழித்து உடலை பலவீனப்படுத்திக் கொள்ளக் கூடாது. இல்லத்து இனிமை மறைகிறது. குழந்தைகளோடு இருக்கிற நெருக்கமோ குறைகிறது. அத்தனை நலன்களையும் உறிஞ்சி விடுகிறது. எனவே உங்களை பலவீனப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

சேமிக்கப் பழகுவோம்: பணத்திற்கு ஒரு குணம் உண்டு. அது எப்போதும் வந்து கொண்டே இருப்பதில்லை. வருகிற நேரத்தில் சேமித்து வைக்காவிட்டால் வராமலேயே போய்விடுகிற இயல்பு அதற்கு உண்டு. அதனை மதிக்கிறவர்களிடம்தான் அதுவும் சேருகிறது. எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகள் நல்ல கல்வியை பயில்வதற்கும், உயர்ந்த பணிகளில் அமர்வதற்கும் உறுதுணையாய் இருக்கும். எனக்குத் தெரிந்து இது போன்று சேமித்த ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் குழந்தைகளை மருத்துவம், பொற்யியல் கல்லூரிகளில் படிக்க வைப்பதை அறிவேன். நம் அடுத்த தலைமுறை நம்மை விஞ்சிச் செல்வதுதான் முன்னேற்றம். அதற்கு சுஉயக்கட்டுப்பாடும், ஒழுக்கமும் அவசியம்.

வாகனத்தைச் செலுத்துவது விழிப்புணர்வோடு கையாளப்பட வேண்டிய ஒன்று. வாக்கையை ஆயுள் காப்பீடு செய்து கொள்வது அவசியம். மருத்துவக் காப்பிடும் அவசியம். குழந்தைகளின் படிப்புக்கு ஏற்ப சேகரிப்பதற்கும் ஊக்கத் தொகையுடன் கூடிய ஆயுள் காப்பீடுகள் உள்ளன. இவை எல்லாம் மறைமுகமாகச் சேமிக்க உதவுகின்றன.
குடும்பத்தைக் கொண்டாடுவோம்: நம் வாழ்க்கை காலனேரத்தைத் தாண்டியதாக இருந்தாலும் குடும்பத்திற்காக்க் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது அவசியம். உங்கள் மேற்பார்வை இருந்தால்தான் குழந்தைகள் நன்றாகப் படித்து, ஒழுக்கத்துடன் வளர்வார்கள். அவர்களுக்கும் உங்கள் மீதான பிடிப்பு ஏற்படும். சீட்டு விளையாடுதல், தேவையற்ற செயல்கள், அதிகமாக சினிமா பார்ப்பது போன்றவை இல்லாமல், நேர மேலாண்மை உங்களை நெறிப்படுத்தும்.

ஆண்டுக்கிற்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் குறைந்த செலவில் ஒட்டு மொத்த உடற்பரிசோதனை செய்யப்படுகின்றது. ஆண்டிற்கொரு முறை கண்களையும் பரிசோதனை செய்து தேவைப்பட்டால் மூக்குக் கண்ணாடியை அணிவது அவசியம். சத்தான உணவு, பழங்கள், காய்கள் என்று சமச்சீர் உணவை உட்கொள்வது அவசியம். ஆட்டோ ஓட்டுவதால் வெயிற்காலங்களில் உஷ்ணம் தாக்காமல் இருக்க மோர், நுங்கு போன்றவற்றை ஆட்டோவில் எப்போதும் வைத்திருப்பது காப்பாற்றும்.

ஆங்கிலமும் அறிவோம்: தமிழத்திற்குப் பல்வேறு மாநிலங்களிலிருந்து பயணிகள் வருவதால் அவர்களிடம் உரையாட குறைந்த்து முக்கியமான 100 வாக்கியங்களையாவது ஆங்கிலத்தில் கற்றுக் கொள்ள வேண்டும். ஹில இடங்களில் பேச்சுமுறை ஆங்கிலம் பயிர்றுவிக்கப்படுகிறது.  உங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகம் கிடைப்பார்கள்.

சுற்றுலா வழிகாட்டியாய் இருப்போம்: ஆட்டோ ஓட்டுநர்கள் சுர்றுலா வழிகாட்டியாகவும் செயல்படுகிறார்கள். நம் பகுதியைப் பற்றிய முழு விவரங்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்தைப் பற்றியும் சுற்றுலா கையேடு தமிழக அரசால் வெளியிடப்பட்டிருக்கிறது. ஓய்வு நேரங்களில் இவற்றை எல்லாம் வாசித்து எந்த இட்த்திற்கு என்ன முக்கியத்துவம், எந்தச் சாலையின் வழியாகச் செல்ல வேண்டும் என்றெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டால், பலரும் நாடி வருவார்கள். பிறகு நம்மைப் பற்றிய தகவல்களை ஆட்டோ ஓட்டுநர்கள் குழுவாகச் சேர்ந்து இணையத்திலும் இடம்பெறச் செய்யலாம். வெளிநாட்டுப் பயணிகளுக்கும் உதவியாக இருக்கும்.

ஆட்டொவில் செல்லும் போது அலைபேசியில் பேசுவதையோ, மோத வருகிற மற்ற வாகங்களோடு சண்டை போடுவதையோ, கோபமான சொற்களைச் சாலைகளில் செல்பவர்கள் மீது பிரயோகிப்பதையோ ஒரு போதும் செய்யக் கூடாது, அவை வண்டியில் இருப்பவர்களுக்குத் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்.

பல பணியைச் செம்மையாக வழிபாட்டுடன் செய்தால், மதிப்புடன், பெருமையுடன், தமிழக ஆட்டோ ஓட்டுநர்கள் தரணியிலேயே தன்னிகரற்றவர்கள் என்கிற நிலையை அடைய இன்றிலிருந்து இன்னும் தீவிரமாகப் பாடுபடுவோம்.

இப்போது அவர் சுற்றுல்லாத்துறைச் செயலராக இல்லாவிட்டாலும் அவர் பல இடங்களிலும் சொற்பொழிவாற்றுவது மட்டுமின்றித் தன் நண்பர்களுடன் ஓட்டுநர்களுக்குப் பயிற்சியும் கொடுக்கின்றார். (தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவை உட்பட) இன்று, இந்தச் சங்கம் ஏற்பாடு செய்த விழாவில் பேசிய உரை இது. இதனை சிறிய புத்தகவடிவமாக அங்கு வந்திருந்த ஓட்டுநர்களுக்கு ஒரு ஜோடி உடையும், இந்தப் புத்தகமும் கொடுத்து ஊக்குவித்திருக்கிறார்கள். 

-----கீதா 

(இனி புதனன்று சந்திப்போம்.  பயணம் மேற்கொள்வதால்...)



புதன், 24 பிப்ரவரி, 2016

ஆக்ஷன் ஹீரோ பிஜு – ஒரு காவல் அதிகாரியின் கதை

Image result for action hero biju
courtesy - google

மலையாளத் திரையுலகில் இப்போது வலம் வரும் இளைய தலைமுறை சூப்பர்ஸ்டார்கள் யாருமே முந்தைய சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி மோகன்லால் போன்றவர்களைக் கீழே தள்ளி அவர்கள் இருந்த இடத்தைப் பிடித்தவர்கள் அல்ல. பதிலாகத் தங்களுக்கான ஓர் இருப்பிடத்தை அதன் அருகே இட்டு அது அவர்களுக்கு நட்டமாகிவிடக் கூடாது என்று மிகவும் கவனமாக திரைப்படங்களைத் தேர்ந்தெடுப்பதுடன் அதில் மிகவும் சிரத்தையோடுக் கவனம் செலுத்தி நடித்துக் கொண்டிருப்பவர்கள். அதனால்தான் அப்படிப்பட்டவர்களின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி காண்கின்றது.

அவர்களில் ஒருவரான நிவின் பாலி நடித்த, தயாரித்த (வேறு இருவர்களுடன் சேர்ந்து) எஃப்ரிட் ஷைன் இயக்கிய “ஆக்ஷன் ஹீரோ பிஜு” ஒரு யதார்த்தமான காவல் உதவி ஆய்வாளரின் கதையைச் சொல்லி எல்லோரதுக் கைத்தட்டல்களையும் பெற்றிருக்கிறது.

கல்லூரி ஆசிரியராகத் தகுதி பெற்ற, வாய்ப்பும் கிடைக்கப்பெற்ற பிஜு பௌலோஸ் எனும் இளைஞர் காவல் உதவி ஆய்வாளராக ஆர்வம் கொண்டு அதற்கானத் தேர்வெழுதி அதில் முதலிடம் பெற்று உதவி ஆய்வாளராகி சமூகத்தில் தன்னால் இயன்ற மட்டும் மக்களுக்கும், சட்டத்திற்கும் பாதுகாப்பாக இருக்க எடுக்கும் முயற்சிகள்தான் இப்படம். இதனிடையே தற்காலிக வேலை நீக்கம், கல்யாண நிச்சயம், ஒரு கத்திக் குத்து, கல்யாணம், முதல் குழந்தைப் பிறப்பு இப்படி எல்லா நிகழ்வுகளும் நடக்கின்றது. இதற்கிடையே தன் கடமைகளைச் செய்யும் பிஜுவைக் காணும் போது இது போன்ற சிலரேனும் காவல்துறையில் உள்ளதால்தானே காவல்நிலையத்திற்குச் சாதாரண மக்கள் தங்கள் குறைகளைத் தீர்க்கச் செல்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது.

ஒரு பெரிய வீட்டில் கொத்துக் கொத்தாய்த் தொங்கும் மாங்காய்களில் ஒன்றைத் திங்க ஆசைப்படும் குழந்தை அதில் கல்லெறிய, அதைக் கண்ட வீட்டுக்காரர் தன் நாயை அவிழ்த்துவிட, அது குழந்தையை விரட்டிக் கடித்து விழுந்த குழந்தையின் கையொடிந்து மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறது.  அச்செய்தி காவல் நிலையத்திற்கு வர, குழந்தையையும், பெற்றோரையும் மருத்துவரையும் கண்ட பின், நாய் வளர்ப்பவரின் வீட்டிற்குச் செல்ல, வீட்டுக்காரர் பங்களூரு போய்விட்டதாக மனைவியும், ஒரு அரசியல் பிரமுகரும் சொல்ல, பிஜு அவருடன் மொபைலில் தொடர்பு கொண்டு, அவர் இருக்கும் இடத்தை அறிந்து அவரைக் கையோடுப் பிடித்து நீதிபதி முன் கொண்டு சென்று ஜாமின் கிடைக்காத வழக்கில் பதிவு செய்து சிறைச்சாலைக்கு அனுப்புகிறார்.

தன் மனைவி குழந்தையுடன் தன் நண்பனுடன் ஓடிவிட்டதாகப் புகார் கொடுக்கும் கணவனிடம் அவரது மனைவியின் அலை பேசி எண்ணை வாங்கி, அவருடன் பேசி காவல்நிலையத்திற்கு வரவழைத்து அவர்களை ஒன்று சேர்க்க முயலும் போதும், ஒன்று சேர தயாராகாத மனைவியிடம் கோபப்படும் போதும் நிதினின் நடிப்பு அபாரம்.

மனைவியால் கைவிடப்பட்ட கணவனாக வரும் சுராஜ் வெஞ்சாரமூடு தன் குழந்தையைத் தனக்கு வேண்டும் எனும் போது அவரது மனைவி குழந்தை அவருக்குப் பிறந்ததல்ல, அவரது நண்பனுக்குப் பிறந்தது எனும் போது, பதறி அக்குழந்தையைப் பிடித்து முத்தமிட்டு, “என்னுடன் வாழப்பிடிக்கவில்லை என்பதற்காக இப்படி எல்லாம் சொல்ல வேண்டாம் என்று அவளிடம் சொல்லுங்க சார்” என்று சொல்லும் போது கைதட்டல் பெறுகின்றார்.

கஞ்சாவுக்கு அடிமையான மகனால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் தாய் தன்னை ஒரு திருடன் தாக்கியதாகச் சொல்லுவதை நம்பாத பிஜு அவரது வீட்டைச் சோதனை போட்டு அங்கு பள்ளி மாணவனான மகனால் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கஞ்சாவை எடுத்து அவன் தாயிடம் காட்டுகின்றார்.  அப்போது தாய், “என் மகனை ஒன்றும் செய்யாதீங்க” என்று சொல்வதும், அதன் பின் அப்பையனைப் பள்ளியில் சென்று கண்டு நடந்ததைக் கூறும் போது அவன் கதறி அழுவதும், பிஜு அவனைத் தேற்றுவதும் அருமையான இடம். 

அவனிடமிருந்துக் கஞ்சா பள்ளிக்கு வரும் விதத்தையும், பள்ளியில் அதை உபயோகிக்கும் மாணவர்களையும் பற்றித் தெரிந்தபின் அவர்களை எல்லாம் காவல்நிலையத்திற்குக் கொண்டு வந்து, மாணவர்களின் வீட்டார்களை வரவழைத்து அறிவுரை வழங்கி அவர்களைத் திருப்பி அனுப்பும் இடம் மனதை நெகிழச் செய்கிறது. காவல்துறை அதிகாரிகளால் இது போல் சாதிக்க முடிகின்ற காரியங்களை எண்ணி நாம் வியந்தே போகின்றோம்.

இப்படிப் பல சம்பவங்கள் வாயிலாகக் காவல்துறையினர் சமூகத்திற்கு எவ்வளவு இன்றியமையாதவர்கள் என்பதை இப்படம் உணர்த்துகிறது. இதனிடையே காணாமல் போகும் காவலதிகாரியின் வயர்லெஸ், எதிர்பாராமல் திடீரென வெடிக்கும் ரிவால்வர் போன்ற சம்பவங்களினால் ஏற்படும் பிரச்சனைகளும் கடந்த நாட்களில் நடந்த உண்மைச் சம்பவங்களை நினைவுக்குக் கொண்டுவருகிறது.

சாலையில், குடித்துவிட்டுத் தன் கைலியை அவிழ்த்துக் காட்டி ஆடிக் கொண்டிருக்கும் மனிதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் மக்கள்.  அப்போது அங்கு வரும் பிஜுவும் போலீசாரும் அவனிடம் நெருங்க அப்போதும் பயமின்றி அவன் ஆடிப்பாடிக் கொண்டு கைலியை அவிழ்த்துக் காட்ட, பிஜு அருகிலிருந்த நாயுருவிச் செடியை ஒடித்தெடுத்து அம்மனிதன் கைலியை அவிழ்க்கும் போது, அதனுள்ளே வைத்துக் கைலியை மடித்துப் பின்புறமாய்ச் சொருகிக் கையில் விலங்கிட்டுக் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லும் போது நெளியும் சுரேஷின் நடிப்பும் அபாரம். (உண்மையிலேயே அவரதுக் கால்களுக்கிடையில் நாயுருவிச் செடியைச் சொருகியிருப்பார்களோ??!!). 

500க்கும் மேற்பட்ட நாட்டுப்புறப்பாடல்கள் எழுதிய சுரேஷ் காவல்நிலையத்தில் “முத்தே....பொன்னே” எனும் பாடலையும் பாடிக் கைத்தட்டல் பெறுகிறார். இது போன்ற ஒரு காவல்நிலையத்திற்கு வரும் புகார்களும், அவற்றைப் பரிசீலித்துக் காலதாமதமின்றி ஒரு காவல் அதிகாரி எடுக்கும் நடவடிக்கைகளையும் காணும் போது, சாதாரணமாக நாம் திரைப்படங்களில் காணும் காவல் நிலையங்களில் காட்டப்படும் மிகைப்படுத்தல்கள் இல்லாத இந்தப் படம் அதன் காரணமாகவே நமக்குப் பிடிக்கும் ஒரு படமாகிறதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. 

பூக்கள் பனிநீர் பூக்கள் - ஜேசுதாஸ், வாணி ஜெயராம் - courtesy youtube

ஜெரி அமல்தேவின் இசையமைப்பில், ஜேசுதாசும், வாணி ஜெயராமும் பாடும் “பூக்கள்......பனிநீர் பூக்கள்” எனும் இனிமையான பாடல் மனதைத் தொடுகின்றது. அலெக்ஸ் புளிக்கலின் காமேரா நன்றாகவே இயக்கப்பட்டிருக்கிறது.

எப்படியோ கேரளா காவல்துறைக்கும், உள்துறை அமைச்சரான ரமேஷ் சென்னித்தலைக்கும் படம் மிகவும் பிடித்துப் போனது. சட்ட சபையிலுள்ள அமைச்சரது அலுவலகத்திற்கு நிவின்பாலி அழைக்கப்பட்டுப் பாராட்டப்பட்டிருக்கிறார். அப்போது, எல்லோரும் எதிர்பார்த்தது போல் ஆக்ஷன் ஹீரோ பிஜுவாகப் போலீஸ் யூனிஃபார்மில் போகாமல்,  நீல நிறச் சட்டையும், ஜீன்சும் அணிந்து நிவின்பாலியாகச் சென்றுத் தனக்குக் காக்கிச் சட்டை மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் உள்ளதால்தான் அதை அணியாமல் வந்தேன் என்று சொல்லி அங்கும் கைதட்டல்களைப் பெற்றிருக்கிறார். மென்பொருள் பொறியியலாளரான அவர் நடிப்பார்வத்தில் தன் வேலையை உதறி விட்டு நடித்த முதல்படமான "மலர்வாடி ஆர்ட்ஸ் க்ளப்" அவருக்கு எதிர்பார்த்த அளவு அடுத்தடுத்துப் படங்களைத் தரத் தவறினாலும், "தட்டத்தின் மறையத்து"க்குப் பின் எல்லாம் அவரது "நேரம்"தான். எல்லோருக்கும் அவருடன் "ப்ரேமம்" (காதல்!!!) தான். 


செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

அஹிம்சையின் அளவுகோல்???!!!

அஹிம்சாவாதி காந்தி பிறந்த மண் என்று போற்றப்படுகின்ற நம் நாட்டில் அஹிம்சை பின்பற்றப்படுகின்றதா? அஹிம்சையின் அளவு கோல் என்ன? இந்தக் கேள்விகளுக்கானக் காரணங்கள், நம் நாட்டில் நடந்த, நடக்கின்ற பல நிகழ்வுகளும், எனக்கு நேர்ந்தச் சில நிகழ்வுகளும்.

இன்று காலையில் இரு சக்கர வாகனத்தில் மகனை அவனது கிளினிக்கில் விட்டு வருவதற்கு, டைடைல் பார்க் சிக்னலில், பழைய மகாபலிபுரச் சாலையில் வலது பக்கம் திரும்ப வேண்டி நின்று கொண்டிருந்தேன். பச்சையும் வந்தது. திரும்பும் போது பழைய மகாபலிபுரச் சாலையிலிருந்து ஒரு சைலோ வண்டி – கால் டாக்சி - வேகமாக வந்து அவனது வலதுபுறம் திருவான்மியூர் சாலையில் திரும்ப சொடக்கு போடும் நொடிதான், நான் சமாளித்துத் தப்பினேன்.

வண்டியை ஓட்டியவன் வண்டியை நிறுத்தி என்னைத் திட்டினான். என் மீது தவறு இல்லாததால் கோபம் வந்தது. நான் வண்டியை ஓரமாக நிறுத்தினேன் என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள. அவனுடன் நான் சண்டை போடத்தான் வண்டியை ஓரம் கட்டியிருக்கின்றேன் என்று நினைத்து அவனும் வண்டியை ஓதுக்கிவிட்டு மீண்டும் என்னிடம் வந்து, “வண்டி ஓட்டத் தெரியாம ஏம்மா நீயெல்லாம் ரோட்டுல வர????!!!!” என்று சண்டைக்கு வந்தான். என் கோபம் மீண்டும் தலைக்கேறியது. “யாருங்க மோத வந்தது ரோட் ரூல்ஸ் ஃபாலோ பண்ணாம? நானா, நீங்களா” என்று நான் சத்தம் போட ஆரம்பித்தேன்.

விபத்து நடந்திருந்தால் எதிர்காலக் கனவுகளுடன் இருக்கும் ஒரு கால்நடை மருத்துவனும், நானும் எங்கேனும் ஓரு மருத்துவ மனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்திருப்போம். இல்லை எல்லோரும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்திருப்பார்கள். இதோ இப்போது இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருந்திருப்பேனா?

மகனுக்கு கிளினிக்கிலிருந்து அழைப்பு. சாலை விபத்தில், ஒரு நாலுகால் செல்லம் அடிபட்டு வந்திருந்தது என்று. அந்த நாலுகால் பாவம். வண்டி ஓட்டுநரின் கத்தலைப் புறம்தள்ளி, வண்டியை எடுத்தான் மகன்.

சிக்னலில் நிற்கும் போது, வேகமாக வந்து வண்டியை பின்புறம் இடித்து நம்மைத் தடுமாற வைத்தலும் நடக்கிறது. சரி இரு சக்கர வாகனத்தை விடுங்கள். நாலு சக்கர வாகனத்தில் சென்ற போது சிக்னலில் பச்சை விழுந்ததும், முன்னால் ஏகப்பட்ட வண்டிகள் மெதுவாக நகர, நான் வண்டியை மெதுவாக நகர்த்திய போது, பின்னால் ஒரு சுமோ வண்டி - இதுவும் கால் டாக்சிதான் - வேகமாக வந்து, இடது புறமாக முந்திச் செல்ல விழைந்தபோது  என் வண்டியின் பின்புறம் இடிக்க, என் வண்டி அதிர்ந்தது, என் கால் க்ளச்சிலிருந்து விடுபட்டுவிட்டதால்.

நான் எப்போதுமே என் முன்னால் நிற்கும் வண்டியிலிருந்து இடைவெளி விட்டு நகர்வதால் நல்ல காலம் முன்னால் செல்லும் வண்டியின் மீது இடிக்கவில்லை. உடன் சமாளித்துவிட்டேன். அந்த வண்டிக்காரன் என்னைத் தாண்டி வண்டியின் இடது புறப்பக்கவாட்டுக் கண்ணாடியையும் தட்டி உடைத்துவிட்டுச் சென்றதும் மட்டுமின்றி என்னை முறைத்துவிட்டுத் திட்டினான். “சிக்னல் விழுந்து வண்டிய எடுக்காம...நீயெல்லாம் காரோட்ட வந்துட்ட”????!!!!! என்று சொல்லிவிட்டு நகர, வன்முறை?! எனக்கு வந்தக் கோபத்தில் அவனை அடிக்க வேண்டும் போல் இருந்தது.

இப்படி இடிப்பவர்கள் “மன்னிப்பு” என்ற வார்த்தை தமிழில் இருப்பதைக் கூட மறந்து விட்டார்கள் போலும். ஒருவேளை காப்டனின் வசனம், “தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு” என்பது அவர்கள் மனதில் பதிந்திருக்கும் போல!

என்னைப் பொருத்தவரை, இது போன்று சாலை விதிகளை மீறுவதும் – (VIOLATING THE RULES – VIOLENCE) வன்முறையே. பலரும் மீறுகின்றனர். பலருக்கும் விபத்து தினமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. நாம் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும், நம்மீது தவறே இல்லாத போது, நம்மையும் மீறிக் கோபப்பட வைக்கும் நிகழ்வுகள்.

சரி, இருசக்கரமும் வேண்டாம், நான்குசக்கரமும் வேண்டாம், நம் சொந்தக்காலில் நடக்கலாம் என்று நடைபாதையில் நடந்தால், அங்கும் வாகனங்கள். அசிங்கமான வார்த்தைகளைக் கேட்கும் சூழல்.

சிறிய வயதில் ஏற்பட்ட பாலியல் வன்முறைகள் அறியா பருவம் என்பதால் கடந்து சென்றுவிட்டன. பலவருடங்களுக்கு முன் சாலையோரம் நடந்து சென்ற போது, சைக்கிளில் கடந்து சென்ற ஒருவன் என்மீது தகாக இடத்தில் கைவைத்து.....நான் உடன் அவன் சைக்கிளைப் பிடித்து நிறுத்தி, அவன் கன்னத்தில் அறைந்தேன்.

அவன் என் வீட்டு வாசலில் குடித்துவிட்டு வந்து நின்று கொண்டுக் கத்தினான். நான் செய்தது வன்முறை என்று சொல்லப்பட்டது. “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு” என்பது போல் அந்நிகழ்விலும் நான் செய்திருக்க வேண்டுமா?
  
இப்படிப் பல பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும், நிகழும் இது போன்றவையும் வன்முறைதானே! ஆண்களுக்கும், ஆண் குழந்தைகளுக்கும் வேறு விதமாக வன்முறைகள் நிகழத்தான் செய்கின்றன. குழந்தைத் தொழிலாளிகள் என்ற பெயரில். சமூகம் மட்டுமின்றி, பெற்றோரும் கூட குழந்தை வளர்ப்பு என்ற பெயரில் வன்முறைகளைக் கையாளத்தான் செய்கின்றார்கள். ஆயுதம் எடுத்தலோ, அடித்தலோ மட்டுமே வன்முறையல்ல. வார்த்தைகளால் சுடுவதும் வன்முறைதான். Sorry cannot make a dead man alive. 

குற்றம் இழைத்தவர்களைக் காக்க வேண்டி, குற்றம் செய்யாதவர்களைச் சிறையில் அடைத்துக் குற்றம் செய்தது போல் ஜோடித்து ஒத்துக் கொள்ள வைக்க, மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையே  கையாளும் முறைகளும் வன்முறைதானே! என்கௌண்டர் என்று சொல்லிச் சுடுவதும், சர்வசாதரணமாகப் பட்டப்பகலில் நடக்கும் கொலைகளும் கூட வன்முறைதான்.

நேர்மையாக இருக்கும் பேராசிரியர், வகுப்பில் தவறு செய்த மாணவனைத் திருத்த முனைந்த போது, அந்த மாணவன் பெரிய இடத்துப் பிள்ளை என்பதால் அதிகாரம் விளையாடி, அந்தப் பேராசிரியர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். இந்தப் பேராசிரியருக்கு அவர் நேர்மையாக இருப்பதால் நிகழ்ந்த விளைவுகள் ஒன்றல்ல இரண்டல்ல. குடும்பம் மிகவும் கஷ்டப்பட்ட நாட்களே அதிகம்.

நாம் நம்மைக் காத்துக் கொள்ள சில கேடயங்களைக் கையாளும் நிலை ஏற்பட்டாலும், நேர்மையற்ற அதிகாரத்திற்கும், ஊழலுக்கும் துணை போகாமல் தவறுகளைத் தட்டிக் கேட்டாலும் நாம் வன்முறையாளர்கள்! முறையான சட்டத்தைப் பின்பற்றினாலும் நீதி கிடைக்காத சமூகத்தின் மீது கோபம் கொண்டு தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்தவோ, நீதியோ கேட்டால் அந்நியர் அல்லது வன்முறையாளர் என்று சொல்லப்பட்டு மெய்யாகவே அந்நியர்களாகிப் போவதும் நடக்கத்தான் செய்கின்றது. அதிகாரத்திற்கும், ஊழலுக்கும் துணை போனால் நாம் அஹிம்சைவாதிகள்!

மேலே சொன்னவை ஒரு புறம் இருக்கட்டும். இயற்கை நமக்கு நன்மைதானே செய்கின்றது? அப்படியிருக்க நாம் இயற்கைக்கும் எதிராகத்தானே செயல்படுகின்றோம். நாம் நமது சுயநலத்திற்காக, அறிவியல் வளர்ச்சி, முன்னேற்றம் என்று சொல்லிக் கொண்டு, மனிதன் மட்டுமே இந்த உலகில் வாழும் உயிர்  என்று எண்ணிக் கொண்டு, சாலையோர மரங்களை வெட்டுதல், காடுகளை அழித்தல், சுற்றுப்புறத்தை மாசுபடுத்தல், பிற உயிரினங்களை வாழ விடாமல் செய்தல் என்பதும் கொலைக்குச் சமம்தானே? வன்முறைதானே!

எதிர்காலத்தில் உணவிற்கும், தண்ணீருக்கும், நல்ல காற்றிற்கும் வழியின்றி, உணவிற்காக, தண்ணீருக்காக மனிதனை மனிதனே அடித்துக் கொல்லும் போர்க்களமாக்கியும், நம் சந்ததியினருக்கு சவக்குழிகளையும் தோண்டிக் கொண்டிருக்கின்றோமோ என்றும் தோன்றுகின்றது. இதுவும் வன்முறைதானே!

சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதித்தேர்தல் வேட்பாளராக நிற்கும் டொனால்ட் ட்ரம்ப் கூட ஒரு குறிப்பிட்ட மதத்தவர்களை பயங்கரவாதிகள் என்று உளறினார். 

தினமும் நமக்கு நடக்கும் பல சம்பவங்களும் வன்முறை, பயங்கரவாதம் என்பவற்றின் விளிம்பை ஒட்டித்தான் நடக்கின்றன. மேலே சொன்ன நிகழ்வுகளுக்குச் சொந்தக்காரர்கள் என்று எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும்தான் இருக்கின்றோம். அப்படியிருக்க, குண்டு வெடிப்பும், துப்பாக்கியால் மனிதர்களைச் சுடுவதும் மட்டும்தான் பயங்கரவாதம், வன்முறை என்று, நாம் குறிப்பிட்ட மக்களை மட்டுமே தீவிரவாதிகள், வன்முறையாளர்கள் என்று சொல்லி வருவது ஏனோ?

நாம் எல்லோருமே மறைமுகமான வன்முறையாளர்கள். இல்லையெனில் வன்முறைக்குத் தள்ளப்படுகின்றோம், ஏதேனும் ஒரு விதத்தில், என்பதுதான் நிதர்சனம். அப்படியென்றால் அஹிம்சை என்றால் என்ன? நம் நாட்டில் இருக்கின்றதா? எங்கிருக்கின்றது?

---கீதா

(கீதா இந்த வாரம் முழுவதும் பிசி. கல்யாணங்கள், உறவுகாரர்கள் வருகை என்பதால் இணையம் பக்கம் வருவது சற்று கடினம். நேரம் கிடைக்கும் போது வருகின்றோம்.)


செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

தனியொருவன்

எங்கள் பேட்டையின் தலைவன் அவன். வயதானவன்தான். தனியொருவனாய் ஆள்கின்றவன். பல பேட்டைகளில் இரண்டு, மூன்று தலைவர்கள், தலைவிகள் தங்களுக்குள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருப்பதும் உண்டு. ஆனால், எங்கள் பேட்டையின் தலைவன் இவன் மட்டுமே! அதனால் தனியொருவன்.

அவன் உரக்கக் குரல் எழுப்பினால் கூடவே மற்ற அல்லக்கைகளும் கத்திக் கொண்டு வருவார்கள் அன்றி அவன் அமைதியாய் இருந்தால் அல்லக்கைகளும் அமைதி காப்பார்கள். அல்லக்கைகளில் ஏதேனும் ஒருவன், இவன் அனுமதியின்றிக் குரல் கொடுத்தால், இவன், அவனை முறைத்துப் பார்த்துத் தன் குரலால் அடக்கிவிடுவான். பெண்கள் பொதுவாகக் குரல் கொடுப்பதில்லை. பிரசவம் முடிந்தபின் 3 அல்லது 4 மாதங்களுக்குக் குரல் கொடுப்பார்கள். அப்புறம் எப்போதேனும்.

தலைவனுக்கு வலதுகையாய் ஒருவன் உண்டு. என்றாலும் அவனும் இவனது ஆட்சிக்குக் கீழ்தான். எங்கள் பேட்டைத் தலைவனும், அவன் கூட்டமும் எல்லா பேட்டைத் தலைவர்கள் அவர்களின் கூட்டம் போலத் தங்கள் எல்லையை நிர்ணயித்துள்ளார்கள். ஆனால், அதை மீறி இவர்களும் செல்வதில்லை மற்ற பேட்டைக்காரர்களையும் அனுமதிப்பதில்லை. தலைவன் சற்று நேர்மையானவன்!? எனலாம். ஏனென்றால் மற்ற பேட்டைக்காரர்கள் அடிக்கடி நுழைவார்கள், எங்கள் பேட்டையில் பெண்கள் அதிகம் என்பதால்.

சிலசமயங்களில் அடுத்த பேட்டையிலிருந்து அந்தப் பேட்டைத் தலைவனோ, அவனது அல்லகைகளில் ஏதேனும் ஒருவனோ எங்கள் பேட்டையில் பெண் பார்க்க வந்தால் சண்டை தீவிரமாகும். ஆனால், அடுத்த பேட்டைப் பெண்கள் குறிப்பிட்ட காலத்தில் எங்கள் பேட்டைக்குள் நுழையலாம், தலைவனின் அனுமதியுடன்! அந்தப் பேட்டைத் தலைவனுக்குத் தெரிந்தால் சண்டைதான். 

அவனோ, அவளோ கொஞ்சம் அப்பாவியாக இருந்துவிட்டால் அல்லது சிறியவர்களாக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம், அவர்களைக் குரல் எழுப்பித் துரத்துவதிலும், அவர்கள் எழுப்பும் தீனக்குரலிலும் எங்கள் பேட்டையே அல்லோகலப்படும். அவர்களின் உலகமே தனிதான். சுவாரஸ்யமிக்க ஒன்று. பல சமயங்களில் அப்பாவியாகப் படுத்துக் கிடப்பார்கள்.

நான் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது எங்கள் பேட்டையின் தனியொருவன் குரல் எழுப்புவான். என்னுடன் கண்ணழகியும் வருவாளே! அவன் குரலெழுப்பியவுடன், எப்பொழுதேனும் அல்லக்கைகளும் இணைந்து கொள்வார்கள். சும்மாவேனும். என் பெண்ணை அவர்களின் கூட்டத்தில் பதிவு செய்யவில்லை என்பது ஒரு புறம், மறுபுறம் அவன் அருகில் விடவில்லை என்ற கோபம்.

இப்படிக் குரலெழுப்பினால் முன்பெல்லாம் தனியொருவனுக்கு லஞ்சம் கொடுத்து அடக்கிவிடுவேன்! போகப் போக, அவன் கத்தினால் அன்று லஞ்சம் கிடையாது. கத்தாமல் இருந்தால் பரிசு உண்டு! இதைத் தெரிந்து கொண்டுவிட்டான். பரிசு வேண்டும் என்றால் கத்தாமல் இருப்பான். இல்லை என்றால் பெருங்குரல்தான்.

அப்படித்தான் இன்றும் கண்ணழகியுடன் சென்ற போது குரல் எழுப்பவில்லை. ஒரு வேளை இன்னும் ஆழ்ந்த துயிலில் இருக்கின்றான் போலும் இல்லை அவனுக்கு இன்று லஞ்சம் வேண்டும் போல என்று நினைத்துக் கொண்டு, வரும் போது கொடுக்கலாம் என்று என் நடையைத் தொடர்ந்தேன். பேட்டையே மிகவும் அமைதியாக இருந்தது போல் தோன்றியது. கண்ணழகி மிகவும் பரபரப்பாக என்னைச் சாலை ஓரம் இழுத்துச் சென்றாள். அப்போதுதான் கவனித்தேன் சாலையின் ஓரத்தில் ஒருவன் அடிபட்டுக் கிடந்ததை.

தேநீர்க்கடைக்காரர், “உங்க ஆளுதான் அவன். இப்பத்தான் நீங்க வரதுக்கு ஒரு 15 நிமிஷம் முன்னாடிதான் நான் கடையத் திறக்கற சமயம், திறக்கறது கூடத் தெரியாம அவன் இங்க ஓரமாத்தான் நல்ல உறக்கம். ஒரு வண்டிக்காரன் வேகமா வந்தவன் அடிச்சுத் தள்ளிட்டுப் போய்ட்டான். நான்தான் அந்தண்டைத் தள்ளிப் போட்டேன். இன்னும் லேசா உசுரு இருக்கு போல. போயிருச்சுனா குப்பைத் தொட்டியில போடணும்” என்றார்.
தனியொருவனுக்கு இன்னும் சுவாசம் இருப்பது தெரிந்தது. ஆனால், நல்ல அடி வாங்கியிருந்தான். உடல் பாகங்கள் வெளியில். இருந்தாலும் மகனை அழைத்தேன்.

மகன் வருவதற்குள், கண்ணழகியைச் சற்று அருகில் கொண்டு சென்றேன். ஒன்றுமில்லை ஒரு நப்பாசைதான். நம் தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகன் அடிபட்டுக் கிடக்க, கதாநாயகி அருகில் வரும் போது கதாநாயகனின் அனைத்துச் செல்களும் துடித்திட உயிர்த்தெழுந்துவிடுவானே! அது போல் கண்ணழகியைக் கண்டால் அவன் எழுந்துவிடமாட்டானா என்ற எண்ணத்தில்.

மகனும் வந்தான். பார்த்தான். திரைப்பட மருத்துவர்கள் போல மகன் கண்ணாடி அணிவதில்லையாதலால், தன் ஸ்டெதஸ்கோப்பைக் கழுத்திலிருந்து எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு, “நோ யூஸ்” என்று சோகத்துடன் சொல்லிவிட்டு, நம்மூர் வண்டிக்காரர்களைத் திட்டி ஆதங்கத்தை வெளியிட, நானும் வேறு வழியின்றி நடையைத் தொடர்ந்தேன்.

மனதில் தனியொருவனின் சேட்டைகள் எல்லாம் நிழலாடி மனதை என்னவோ செய்தது. அவனை நினைத்துக் கொண்டே திரும்பி வருகையில், கண்ணழகி மீண்டும் பரபரத்தாள்.

திரும்பிப் பார்த்தால் பிறந்து ஓராண்டு நிறையும் தருவாயில் இருக்கும் ஒருவன் அடித்தொண்டையில் சப்தம் எழுப்பிக் கொண்டு ஓடி வந்தான். வயதிற்கு வந்தவனாயிற்றே! பெரியவர்கள் எல்லோரும் அமைதியாய் அவனைத் தொடர, கூடவே இளம் குரல்கள். பார்த்தால் மூன்று மாதமே நிறைந்த 6 நண்டு சிண்டுகள் குரல் கொடுத்துக் கொண்டே புதியவனின் அல்லக்கைகளாக நாலாபுறமும் இருந்து பாய்ந்து ஓடி வந்தன. கண்கொள்ளா காட்சி. பெரியவர்கள், இளம் ரத்தம் என்று இவனைத் தலைவனாகத் தேர்ந்தெடுத்துவிட்டார்கள் போலும்!

கண்ணழகியும் பதிலுக்கு அடித் தொண்டையில் குரல் கொடுத்தாள். புதியவன் அருகிலேயே குரல் கொடுத்துக் கொண்டு வந்துவிட்டான். எங்கள் பேட்டையின் அடுத்த தனியொருவன், இளவரசன் தயாராகிவிட்டான்.

“அடுத்து உங்க ஆளு ரெடியாகிட்டான் போல. சரி அப்ப நாளைலருந்து ரஸ்க்/பிஸ்கட் ரெடியா வைச்சுடறேன்” என்றார் தேநீர் கடைக்காரர்.

-----கீதா


வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

பார்வதி அக்கா - நிறைவுப்பகுதி


யாரோ என் தோளில் கை வைக்கத் திரும்பினேன். கோபி அண்ணன்!! அவரும் அக்காவின் நினைவில் மூழ்கியிருந்திருக்க வேண்டும். பார்வதி அக்காவின் இளைய தம்பியான அவர் 1980ல் தன் பழைய அம்பாசிடர் சீருந்தை மாற்றி, புதிய “மார்க் 4” சீருந்தை வாங்க முடிவு செய்த போது பலவந்தமாக அவரிடமிருந்து அப்பணத்தை எடுத்துச் சென்று, தனது மற்றும் தனது மற்றொரு தம்பியான விஜயனின் கையிலிருந்த பணத்தையும் சேர்த்து, அணைக்கரையில் 5 ஏக்கர் இடம் அவர் பெயரில் வாங்கிக் கொடுத்தார். இதை எல்லாம் சொல்லியதைக் கேட்டபோது, சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கும் கோபி அண்ணன், பார்வதி அக்கா அவருக்கு இது போன்ற தேவையான உதவிகளைத் தக்க தருணத்தில் அவரது சம்மதத்திற்குக் கூடக் காத்திருக்காமல் செய்ததை அசைபோட்டுக் கொண்டிருந்திருக்க வேண்டும் என நினைத்தேன்.

நோய்வாய்ப்பட்டு பிறர் உதவியின்றி எங்கும் செல்ல முடியாது எனும் நிலை வந்ததும் பார்வதி அக்கா தன் சொத்துக்களை எல்லாம் விற்று, தம்பி, தங்கைகளுக்கும் அவரது பிள்ளைகளுக்கும் கொடுத்து மீதம் வந்த 15 லட்சம் ரூபாயை தன் பெயரில் வங்கியில் போட்டு வைத்திருந்திருக்கின்றார். எனவே அவரைத் தங்களுடன் வைத்துக் கொள்ள யாருக்கும் தயக்கம் இருந்திருக்கவில்லை போலும். மட்டுமல்ல அவருக்குத் தேவையான மருத்துவ செலவுகளுக்கு வேறு யாரையும் நாட வேண்டிய அவசியமும் இல்லாமலேயே போனது. அப்படி 84 ஆண்டுகள் வாழ்ந்து, எல்லோருக்கும் தன்னால் ஆன உதவிகளைச் செய்து மறைந்த பார்வதி அக்காவின் உடலை எரிக்கத் தேவையான பொருட்களுடன் ஒரு சிறிய வண்டி வந்து நின்றது. ஒருவேளை பணம் இல்லாதிருந்திருந்தால்? என்ற எண்ணமும் கூடவே வரத்தான் செய்தது. உலகம் அப்படித்தானே இயங்குகின்றது! நல்ல காலம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அக்காவை புறம்தள்ளிவிடாமல் பாதுகாத்தது மனதிற்குச் சற்று ஆறுதலாகவும் இருந்தது.

என் மனதிலும் பார்வதி அக்காவின் பேச்சுகளும், செயல்களும், சிரிப்பும் மாறி மாறி வந்தாலும், விடை கிடைக்காத ஒரு சம்பவம் என்னை வருத்தியது. பெரியப்பா (என் அப்பாவின் அண்ணன், பார்வதி அக்காவின் அப்பா) நான் 5 ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த போது ராசிங்கபுரத்தில் எங்களுடன் தங்கியிருந்த வேளையில்தான் இறந்தார். அவரது உடல்நிலை மோசமானதை உணர்ந்த அப்பா அவர் இறப்பதற்குச் சிலநாட்களுக்கு முன் அவரிடம், “அண்ணா வீட்டுக்குப் போய் கொஞ்ச நாள் தங்கினால் தெம்பாயிடுவீங்க” என்றதும், “உனக்கு நான் பாரமா? சொல்லு. நான் எங்கேயாவது போய்க்கிறேன். ஆனா, அங்கே மட்டும் போக மாட்டேன்”, என்று சொன்னது என் காதில் மீண்டும் ஒலித்தது. 

வேலையும், சம்பளமும் உள்ள அக்காவுக்கும் அவரைச் சார்ந்து வாழ்ந்த பெரியப்பாவுக்கும் இடையே அந்த நாட்களில் எப்போதோ ஏற்பட்ட வாக்குவாதத்தில் வேதனை தரக்கூடிய வார்த்தைகளை அக்கா பெரியப்பாவிடம் சொல்லியிருக்கலாம். அதற்கான காரணம் என்னவானாலும், அப்படிச் சொன்னதற்காக, பெரியப்பாவின் மரணத்திற்குப் பின் அக்கா எவ்வளவோ வருந்தியிருக்கலாம். எப்போதுமே உயிருடன் இருக்கும் வரை ஒருவரது மதிப்பு, சிறப்புகள், நல்லவை தெரிவதில்லை. அவர்களைப் பற்றிய மனவருத்தங்கள் மட்டுமே தலை தூக்கி நின்று, பேச்சு வார்த்தைகள் கூட இல்லாமல் இருக்கின்றோம்.  ஆனால், அவ்வுயிர் மறைந்ததும் பல சமயங்களில் அதன் மதிப்பு தெரிந்து, நாம் உதாசீனப் படுத்தியது நினைவில் வந்து மோதிட மனம் வேதனை அடையும்.

“தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.”

என்ற வாக்கின் பொருளறிந்த நாமெல்லாம் நாவை அடக்கத் தவறி இது போல் தவறு செய்தவர்களோ, செய்யப் போகிறவர்களோதானே. அது போல் அக்கா “எங்களுக்குத் தந்தது போதாது என்றோ ஒன்றும் தரவில்லை என்றோ சொல்லி அங்குக் கூடியிருக்கும் பலரும் நாவினால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுட்டதாகப் பலரும் சொல்லக் கேட்டேன். அவர்களும் அப்போது அங்கு நின்று, “அன்றைக்குப் பார்வதி அம்மாகிட்ட-அக்காகிட்ட அப்படிப் பேசாம இருந்திருக்கலாம்!” என்று வருந்திக் கொண்டும், மன்னிக்க வேண்டிக் கொண்டும் நின்று கொண்டிருந்திருப்பார்களோ என்று தோன்றியது.
 
3 மணிக்கு இறுதிச் சடங்குகள் தொடங்கி 3.30 மணிக்கு உடல் எரிக்கப்பட்டது. இனி பார்வதி அக்கா நினைவுகளில் மட்டும் வாழ்வார் – அதுவும் அவரை நினைப்பவர்கள் வாழ்ந்திருக்கும் வரை மட்டும்! அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டிக் கொண்டு அண்ணஞ்சி செல்லும் நந்தகுமார் அண்ணனின் வண்டியில் தேனி வரை சென்று அங்கிருந்துப் பேருந்தில்  பொள்ளாச்சி வழி பாலக்காடு செல்லப் பயணித்தேன். 5.30 மணிக்குத் தேனி பேருந்து நிலையத்தில் வண்டி நின்றதும் நன்றி கூறி இறங்கினேன்.


முல்லைப் பெரியார் அணை கட்டி 4 மாவட்டங்களுக்கு குடிக்க, மற்றும் விவசாயம் செய்யத் தேவையான தண்ணீர் தந்த மனிதருள் மாணிக்கமான பென்னிக்விக்கின் நினைவாக நிறுவப்படும் அப்பேருந்துநிலையத்தைப் பார்க்கவே பெருமையாக இருந்தது. உயிர் பிரிந்தால், உடலுக்குத்தான் அழிவு, உயிரோடு இருந்த போது நாம் செய்யும் நற்செயல் ஒவ்வொன்றும் அதன் தகுதிக்கேற்ப இது போல் வரலாற்றின் பாகமாய் மாறி சாகாவரம் பெற்று நிற்கும்தானே! நாம் சாதனைகள் எதுவும் புரியவில்லை என்றாலும், வரலாற்றில் இடம்பெறவில்லை என்றாலும், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் மனதில், நம் இறப்பிற்குப் பிறகும் வாழ்ந்திடவேனும் எல்லோரிடமும் அன்பு செலுத்தி வாழ்ந்திடுவோம்!


வியாழன், 4 பிப்ரவரி, 2016

பார்வதி அக்கா


வழக்கமாக சுதந்திர தினம், குடியரசு தினங்களில் எங்கள் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களில், தொலைவில் இருந்து வரும் என் போன்ற சில ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல் அதை விடுமுறையாகப் பாவித்து அதன் முந்தைய தினமே வீட்டை அடைவது வழக்கம். சிறிது குற்ற உணர்வுடன் அத்தினத்தை விடுமுறை நாள் போல் அனுபவிக்க முடியாமல் சிரமப்பட்டு அந்த நாளை நகர்த்திக் கொண்டிருக்கும் போது, “அப்ப இன்னிக்கு ஸ்கூலுக்குப் போக வேண்டாமா?” என்று சிலர் கேட்கும் போது, இஞ்சித் தின்னக் குரங்கு போல் முகத்தை வைத்துக் கொண்டு ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லித் தப்பித்தாலும், “இனி இந்நாட்களில் பள்ளிக்குப் போய்விட வேண்டும்”, என்று முடிவு எடுப்பதுண்டு. ஆனால், அம் முடிவுக்கு அற்ப ஆயுள்தான்.

அடுத்த சுதந்திர மற்றும் குடியரசு தினத்திற்கு முன்பு அம்முடிவு அகால மரணம் அடைந்துவிடுவதுண்டு. ஆனால், இவ்வருடம், ஏதோ ஒரு பொதுநலவிரும்பி கொடுத்த மனுவைப் பரிசீலித்த நீதிமன்றம், அத்தினத்தை விடுமுறையாக்க அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்ததும், கேரள அரசும் கல்வி இலாகாவும், அத்தினத்தில் எல்லோரும் அவரவர்களது அலுவலத்திலும், பள்ளியிலும் அத்தினங்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டாட வேண்டும் என ஆணை பிறப்பித்ததால், நான் கடந்த 25.01.16 அன்று நிலம்பூர் செல்லாமல் பாலக்காடில் தங்கிவிட்டேன்.

அன்று மாலை அதர்வா நடித்த ஈட்டி திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த போது, (ஏனோ டிக்கெட் எடுக்கக் காத்திருந்த போதிலிருந்தே 46 வயதில் மறைந்த அதர்வாவின் அப்பா முரளியைப் பற்றியும், அது போல் மறைந்த பாண்டியன் போன்றவர்களையும் அவர்களதுத் திரைப்படங்களையும் சுற்றிப் பறந்து கொண்டிருந்தது மனது.) அலைபேசியில் நோக்கியா இசை அடித்தது.  எடுத்துப் பார்க்க, அதில், “சுரேஷ் 6 மைல்” (6 மைல் என்பது ஒர் இடத்தின் பெயர்) என்று காண்பித்தது. அலைபேசியுடன் வெளியே போய் “ஹலோ” என்றதும், நளினா சேச்சி அக்கா மகன் சுரேஷ், “பார்வதி அம்மா நம்மை விட்டுப் போய்ட்டாங்க” என்றதும் அதிர்ந்தேன்.

பார்வதி அக்காவுடனான பல நிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக மனதில் தோன்றி மறைந்தன. கடந்த மாதம் கிறித்துமஸ் விடுமுறையின் போது, மனைவி, குழந்தைகளுடன் நோய்வாய்ப்பட்டிருந்த பார்வதி அக்காவைக் காணச் சென்றிருந்தேன்.  ஓரிரவு அங்கு தங்கவும் செய்தேன். ஏராளமான மகன்களையும், மகள்களையும் பெற்று, சிரமப்பட்டு வளர்த்த தாய்மார்கள், அவர்களது இறுதிக் காலத்தில், அவர்களைப் பாதுகாக்கத் தவறும் அவர்களது பிள்ளைகள், முதியோர் இல்லங்களில் சேர்க்கும் சம்பவங்களைப் பற்றி வாசித்தும், நேரில் கண்டும் பல முறை வருந்தியுள்ள எனக்கு, குழந்தைகள் இல்லாத பார்வதி அக்காவுக்கு உண்மையான அன்புடனும், பாசத்துடனும் பணிவிடை செய்த அவரது தம்பி மற்றும் தங்கைகளின் மகள்கள் மற்றும் மகன்கள் அவர்களது மனைவிகளைக் கண்டதும் வியப்பு.

என் அப்பாவுக்கு 15 வயதாயிருந்த போது அவரது மூத்த அண்ணனுக்குப் பிறந்த  மூத்த மகள்தான் பார்வதி. நான்கு சித்தப்பாக்களுக்கும், ஒரு அத்தைக்கும் அன்பு முத்தங்கள் பதிக்கக் கிடைத்த ஆசைக் குழைந்தை. அடுத்தடுத்துவந்த பல அழைப்புகள், மறுநாள் மாலை மூன்று மணிக்கு உடல் தகனம் செய்யப்பட இருக்கும் செய்தியைத் தந்தது.  8 மணிநேரப்பயணம் தேவைப்படும் குமுளிக்கு எப்படிப் போவது? அதிகாலை எனது இருசக்கர வாகனத்தைப் பாலக்காட்டில் வைத்துவிட்டுப் பேருந்தில் போகலாம் என முடிவு செய்தேன். வண்டித்தாவளத்தில் இருந்து பார்வதி அக்காவின் தம்பி விஜயன் அண்ணனின் மகன் பிஜு எனை அழைத்து, “அதிகாலை 4 மணிக்கு அம்மாவுடன் கிளம்புகிறேன். எங்களுடன் வருகின்றீர்களா”, என்றதும், “சரி” என்றேன்.

பாலக்காட்டிலிருந்து அதிகாலை 4 மணிக்குப் பேருந்து ஏறி பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் 20 நிமிடம் காத்திருந்ததும், பிஜு வர அவர்களுடன் மகிழ்வுந்தில் பயணித்தேன். வழியில் அதிகம் வாகனங்கள் இல்லை. ஆனால், பழனிக்கு, தைப்பூசத் திருநாள் பாதயாத்திரைச் செய்வோர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று கொண்டிருந்தனர். வேகமாகப், பணத்திற்காகப் பாயும் உலகில் இறையருள் பெற தன் மெய் வருத்தி செல்வோரைப் பார்த்ததே புண்ணியமாகத் தோன்றியது. செம்பட்டியைத் தாண்டியதும் விசாலமான நெடுஞ்சாலையில் அதுவரைச் திக்குமுக்காடிய வண்டி விரைந்தது. வழியருகே இருந்த உணவகத்தில் காலை உணவு உண்டோம். வழியெல்லாம் பார்வதி அக்காவைப் பற்றிய பேச்சுதான்.

10 ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தப் பார்வதி அக்காவுக்குப் பாடம் சொல்லித்தர வந்த இளைஞனான ஒரு முஸ்லிம் ஆசிரியருக்கும், அக்காவுக்கும் இடையே எப்படியோ வளர்ந்த காதல் மதக் காற்றால் நிலைகுலைந்தாலும், 20 ஆண்டுகள் பிரிக்கப்பட்டப் பின்னும் இருவரது மனதிலும் வாழ்ந்திருந்ததாம். அதன் பின் அவ்வாசிரியர் வேறு வழியின்றி அவரது பெற்றோர்கள் பார்த்த ஒரு பெண்ணை மணந்திருக்கின்றார். ஆனால், பார்வதி அக்கா, “எனக்கு மண வாழ்க்கை வேண்டவே வேண்டாம்” என்று தீர்மானித்தே விட்டார்.

இதனிடையே, அக்காவுக்கு ஆசிரியையாக குமுளி அருகே பணி கிடைக்க பெரியப்பாவும் குடும்பமும் குமுளிக்கு அருகே குடியேறிவிட்டார்கள். பெற்றோர்களும், சித்தப்பாக்களும் கட்டாயப்படுத்தி அக்காவை ஒருவழியாய் சம்மதிக்க வைத்து, வடசேரிக்கரைக்காரரான ஒருவரை மணமுடித்துவிட்டார்கள்.  அதன் பின் அவர்களுக்குப் பிறந்த ஒரு குழந்தை பிறந்ததும் இறக்காமல் இருந்திருந்தால், அக்கா அவரது இறுதி நாட்களில் தம்பி, தங்கைகளின் மக்களுடன் இது போல் வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்திருக்காது. அதே போல் அவரது கணவரையும் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்திருக்காது. “நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே. நடந்ததை எல்லாம் நினைத்து வருந்திப் பயனில்லையே!”

11 மணி அளவில் நாங்கள் குமுளி 6 ஆம் மைலை அடைந்தோம். பல இடங்களில், “மறைந்த பார்வதி டீச்சருக்கு அஞ்சலி” என்ற பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. பார்வதி அக்காவின் தங்கை ஆனந்தவல்லியின் மகன் அனில்குமாரது வீட்டில்தான் உடல் வைக்கப்பட்டிருந்தது. அங்குதான் சடங்குகளும் நடைபெற்றன. அவ்விடத்தை அடைந்த போது, முற்றத்தில் இடப்பட்டப் பந்தலில் உயிரற்ற பார்வதி அக்காவின் உடல். குருதேவ பிரார்த்தனை கீதங்களைப் பெண்கள் பாடிக் கொண்டிருந்தனர். உடலருகே வைக்கப்பட்ட மலர்வளையங்களில், ஒன்றில், “மலநாடு மகளிர் சங்கம்” என்று எழுதியிருந்தது. பெண்கள் அவர்களுக்கென வருமானம் தேட வேண்டும் என்ற நோக்கத்துடன் பார்வதி அக்காவின் முயற்சியால் உருவான சங்கம் அது. தையல், ஊறுகாய், பலகாரங்கள் என்று பல வழிகளில் பெண்கள் பணம் ஈட்ட உதவிய அச்சங்கத்தின் தலைவியாக நீண்டகாலம் பணியாற்றிய அவரது நினைவுகள் என்னில் மட்டுமல்ல அங்கு கூடி இருந்த பலரது மனதிலும் அப்போது ஓடிக் கொண்டிருந்திருக்க வேண்டும்.

அனிலின் தங்கை அனிதா, பார்வதி அக்கா இறக்கும் தருவாயில், தானும் அம்மாவும் அக்காவுக்குப் பால் கொடுத்ததை அழுதுகொண்டே சொன்ன போது, என் கண்களிலும் நீர் நிறைந்தது. ஒருமகளாக, ஒரு செவிலியாக இறுதிக்காலத்தில் அக்காவுக்குப் பணிவிடை செய்த அனிதாவின் மனதிலும் அக்காவைப் பற்றிய பல சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்திருக்க வேண்டும்.  பி.டி உஷாவைப் போல் அனிதாவை ஓட்ட வீராங்கனையாக்க பார்வதி அக்கா அவளைத் தயார்ப்படுத்த தன்னுடன் தங்க வைத்திருந்த போது, கிறித்தவ மத்ததைச் சேர்ந்த அவரது நண்பரின் மகனுக்கும், அனிதாவுக்கும் ஏற்பட்டக் காதலை எல்லோரும் எதிர்த்த போதும் அக்காதலுக்கு மரியாதை செய்து, அவர்களுக்கு மணம் முடித்து வைத்தவர் பார்வதி அக்கா.

யாரோ என் தோளில் கை வைக்கத் திரும்பினேன்.

தொடரும்......