கலைஞர் அயோத்திக்குச் சென்று, “ஸ்ரீ ராம், ஜெயராம், ஜெய ஜெய
ராம்”, என ராமனைப் போற்றிப் பாடி வணங்கித் தன் பாவங்களுக்குப்
பிராயச்சித்தம் தேட வேண்டுமாம்............
இதைச் சொன்னவர்
திரு. வினோத் பன்சல் எனும் விஎச்பியின் (விஸ்வ ஹிந்து பரிஷத்) ஊடகப் பிரமுகர்களில் ஒருவர். இப்படி, இந்து மதத்தவரை எல்லாம், ஏதோ அவர்கள்
கட்சியில் தொண்டர்கள் என்று பாவித்து இது போன்ற ஜோக்குகளை அள்ளி வீசுபவர்கள் வட
இந்தியாவெங்கும் ஏராளமாக இருக்கிறார்கள்.
இவர்களுக்கு எல்லாம் ஆரிய திராவிட வித்தியாசமோ, சைவ வைஷ்ணவ வித்தியாசமோ,
த்வைத அத்வைத வித்தியாசமோ ஒன்றுமே தெரியாது.
இல்லையேல் தங்களின் சுய லாபத்திற்காகத் தெரிந்தும் தெரியாதது போல்
நடிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் நாவையும், செயல்களையும் கட்டுப்படுத்தாமல்
போகும் போக்கில் விட்டால், நம் நாடு ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் போல் மத
தீவிரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த நாடாகிவிடும்.
இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள், இந்துக்கள் அதிகம் வாழும் இடங்களில், இடம்
வாங்கி வீடு கட்டக் கூடாது என்பவர்கள், இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்குப் போக
வேண்டும் என்று சொல்பவர்கள், ராமனை அங்கீகரிக்காத, இறைவனாய் காணாத திராவிடர்கள்
ராவணனின் தேசமான இலங்கைக்குப் போக வேண்டும் என்று சொல்லவும் தயங்க மாட்டார்கள். அதற்கு முன்னோடிதான் இது போன்ற
பிரச்சாரங்கள்.
ராமனை அரசனாக, எந்த விதத்திலும் ராவணனை விட உயர்ந்த அரசனாகக் (தன் தங்கை சூர்ப்பனகையை அவமானப்படுத்தியதற்காக பழி வாங்கவே சீதையைச் சிறையெடுத்தார் என்பதும், சீதையைத் தொடவே இல்லை என்பதும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்) காணவிரும்பாத கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாடு இது. அப்படிப்பட்டவர்கள், தங்கள் கருத்துக்களைச் சொல்ல வேண்டிய விதத்தில், சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாததால்தான் தனி திராவிட நாட்டிற்காக வாதிக்கும், வள்ளுவனுக்கு சிலையெடுத்த, பெரியாரின் பாசறையில் வளர்ந்த கலைஞருக்கு எதிராகவே இப்படிப்பட்டக் கூச்சல்கள் போடப்படுகின்றன. 25 வருடங்களுக்கு முன்பு வரை, சர்வ சாதாரணமாக எல்லோராலும் மேடையிலும், பட்டிமன்றங்களிலும் பேசப்பட்டவைதான், இப்போது கலைஞரைப் போன்ற மூத்த திராவிடர் சொல்லியும் விவாதமாக்கப்பட்டிருக்கிறது. இனியேனும் இந்துக்களில் ஆத்திகர்களும், நாத்திகர்களும் உண்டு என்றும் (பண்டையகாலங்களில் ஆத்திகர்கள் சார்வாகர்கள் என்றும் அழைக்கப்பட்டிருந்தனர்), ஆத்திகர்களில் ராமனையும், கிருஷ்ணனையும் தெய்வமாகக் காணும் வைஷ்ணவர்களும், சிவன், சக்தி முருகன், பிள்ளையார் போன்றத் தெய்வங்களை வணங்கும் சைவர்களும் உண்டு எனும் உண்மையை நிலை நாட்ட வேண்டும். இல்லையேல், “ராம் ராம்” என்று கையிலோ, மார்பிலோ, முதுகிலோ, நெற்றியிலோ பச்சைக் குத்தாதவர்கள் இந்துக்களாகக் கருதப்படமாட்டார்கள் என்றும், (இப்போதும் பிரச்சினை வந்துவிட்டால் ஆரியசமாஜம் வழங்கும் மதச் சான்றிதழ்கள் இந்துக்கள், தாங்கள் இந்துக்கள்தான் என்று நிரூபிக்கத் தேவையாம்) அவர்கள் இந்துக்கள் அதிகமாக வாழும் பகுதிக்கோ, கோவில்களுக்கு உள்ளிலோ அனுமதிக்கப்படாமல் போகலாம். மதத் தீவிரவாதம் எந்த மதத்தவருக்கு வந்தாலும் நம் நாடு சீரழிந்துவிடும். மத சார்பற்ற இந்தியா என்றென்றும் மத சார்பற்றுத் திகழ, நாம் ஒவ்வொருவரும் நம்மால் இயன்றமட்டும் பேசி, எழுதி, போராடி, அடுத்து வரும் தலைமுறையினர் சமாதானத்துடன் இங்கு வாழ வழி வகை செய்ய வேண்டும்.
படங்கள்: courtesy கூகுள்