ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

என் கண்ணில் பாவையன்றோ.......

https://engalblog.blogspot.com/2018/06/blog-post_12.html  இக்கதையும் தாத்தா பாட்டி படத்திற்கு எழுதி எபி யில் வெளியானதன் சுட்டிதான் இது. தொடர்ந்து என்னை எழுத வைத்து ஊக்கப்படுத்தி உற்சாகப் படுத்தும் எபி மற்றும் ஸ்ரீராமிற்கு மனமார்ந்த மிக்க நன்றிகள் பல.

“நான் உன் மடில சித்த படுத்துக்கட்டுமாடி கோமளா? நேக்கு ஆசையா இருக்கு!”

“எங்கிட்ட என்ன கேள்வி இது? படுத்துக்கலாமே. ஒங்க மடிதானே இது”

கல்யாணமான புதுசுல பதினஞ்சே வயசான கோமளா எம்புட்டு வெக்கத்தோட பதில் சொல்லிண்டே நான் படுத்துக்கறதுக்கு வாகா மடிய வச்சுண்டு என்னை படுக்க வைச்சுண்டா.

நான் இப்படி எத்தனையோ நாள் மனசு சோர்ந்து போறச்சேயும், களைப்பா இருந்தப்பவும் அவ மடில ஸ்வாதீனமா படுத்துண்டுருக்கேன். அவளும் எத்தனை ஆதுரத்தோட என் தலையை வருடிக் கொடுத்துருக்கா. தாய்க்குப் பின் தாரம் னு சொல்லறது சரிதான் போல. அம்மாவோட மடி எத்தனை சுகமோ அதே போலத்தான் இவளோட மடி. அந்த நாளெல்லாம் நினைச்சுண்டா எம்புட்டு சந்தோஷம் வரது. அப்போ படாத கஷ்டமா? எம்புட்டு கஷ்டம் வந்தாலும் கோமளா இருக்கான்னு ஒரு தைரியம் அந்தத் தைரியத்துல ஒரு மனக்களிப்பு. அதுல எல்லாத்தையும் கடந்து வர முடிஞ்சுதே.
  
அப்படிப்பட்டவள் தனக்குனு ஏதாவது கேட்டுருக்காளோனு நினைச்சுப் பாக்கறேன். ம்ஹூம் என் நினைவுக்குத் தெரிஞ்சு ஒண்ணுமே இல்லை. நானோ, குழந்தைகளோ வாங்கிக் கொடுக்கறதுதான். ஆனா அதை எம்புட்டு சந்தோஷமா வாங்கிப்பள். அந்த முகத்துல நிஸ்சலனமான சந்தோஷத்தப் பாக்கணுமே. ஒரு குத்தம் குறை? சொன்னதே இல்லையே.

பாவம். எத்தனைக் கஷ்டப்பட்டிருக்கா. அந்த நாள்ல பெரிசா இருந்த என் குடும்பத்துல வாக்கப்பட்டு அந்தச் சின்ன வயசுலயும் என் அம்மா, அப்பா, அவா அம்மா அப்பா, என் தங்கை, தமக்கைகள் அவா பிரசவம், ஆதரவு இல்லாத சித்தினு எல்லாரையும் கவனிச்சுண்டு, அரவணைச்சுண்டு, அம்புட்டு வேலையும் பாத்துண்டு, இதுக்கு நடுல நா “நேக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்டி” “டி எனக்கு இன்னிக்கு என்னவோ மனசே சரியில்லை” அப்படி இப்படினு சொல்லிண்டு, அவளை சுகிச்சதுல பொறந்த குழந்தைகளையும் கவனிச்சுண்டு எல்லாரோட ஆசைக்கும் ஏத்தபடி சமைச்சுப் போட்டுண்டு, குழந்தைகள், பெரியவா எல்லாருக்கும் இசைஞ்சுண்டு, மனுஷா இருந்தா பிரச்சனைகள் வருமில்லையோ அதையும் சமாளிச்சுண்டு இருந்தாளே தவிர தனக்குனு ஆசை எதுவும் இருந்ததா கூடக் காட்டிண்டதேயில்லையே..

குழந்தைகள் கூடக் கேட்டா, “ஏம்மா எங்களுக்கெல்லாம் விழுந்து விழுந்து உழைக்கிற. எங்க ஆசை அது இதுனு செஞ்சு கொடுக்கற. உனக்குனு ஏதாவது ஆசை இருக்கா இல்லையா? சொல்லுமா நாங்க அதை நிறைவேத்தறோம்”

“நேக்கு எதுக்கு? நீங்க எல்லாம் இருக்கும் போது நேக்கு என்ன வேணும் சொல்லுங்கோ? இதுவே பரம சொர்க்கம். பகவானுக்கு நான் ரொம்பக் கடமைப்பட்டவளாக்கும்.

ஆர் கண் பட்டுதோ. அப்படி இருந்த எங்க குடும்பத்துல இப்படி ஒரு வேதனை வரணுமா? முதல்ல பெரிய பொண் போய்ச் சேர்ந்தா. அப்புறம் மாப்பிள்ளை. அந்தக் குழந்தைகள் எங்ககிட்ட வளர ஆரம்பிச்சுது. அப்புறம் ரெண்டாவது மாப்பிள்ளை. அப்போ அவா குழந்தைகள் வளர்ந்துட்டா. அப்புறம் ரெண்டாவது பொண்ணும் போய்ச் சேந்ததும் குழந்தைகள் எங்களோட வந்துட்டா. அடுத்தாப்புல மாட்டுப் பொண்ணும் போய்ச் சேர்ந்தா. எல்லாரும் 50 வயசுக்குள்ள போய்ச் சேந்துட்டா. பேரன் பேத்திகளை வளத்து கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சு. பிள்ளை, பிள்ளை வயித்துப் பேரன், மாட்டுப் பொண், குழந்தைகளோட நாங்க இருக்கோம். மத்த பேரன் பேத்தி எல்லாம் அடுத்தாப்புலதான் இருக்குகள்.  

பாட்டிக்கு 80 வயசாம். கொண்டாடணும்னு குழந்தைகள் எல்லாம் வந்துருத்து. அதுகளே கேக் எல்லாம் பண்ணி கோமளவல்லி ஸ்ரீநிவாஸன்னு பேர் எல்லாம் எழுதி வைச்சுதுகள். எங்க ரெண்டு பேரையும் மாலை மாத்திக்கச் சொல்லிக் கொண்டாடி, பாட்டிய எனக்குக் கேக் ஊட்டச் சொல்லி, என்னை பாட்டிக்கு ஊட்டச் சொல்லினு… அப்போ இவ வெக்கத்தைப் பார்க்கணுமே. என் மனசும் அந்தக் காலத்துக்குப் போயிடுத்து. வடை பாயாசத்தோட சாப்பாடு. அமளி துமளி. குழந்தைகள் எல்லாம் ஆர்ப்பரிச்சா. குதூகலிச்சா. அடுத்த தலைமுறை குழந்தைகள்! பாட்டி கிட்ட கேட்டா.

“பாட்டி! நீ உனக்குனு எதுவுமே கேட்டதில்லையாமே. எங்ககிட்டயும் எதுவுமே கேட்டதில்லையே பாட்டி. எங்களுக்கெல்லாம் பாத்து பாத்து செஞ்சுருக்கியே. இன்னிக்கு உனக்கு பர்த்டே. சொல்லு உனக்கு என்ன ரொம்பப் பிடிக்கும்? என்ன ஆசை சொல்லு பாட்டி.”

“உங்க தாத்தாகிட்ட கேளுங்கோ”

“ஓ! பாட்டி நீ தாத்தாக்கு என்னவோ அதுதான் நேக்கும்னு சொல்லுவ! ஒத்துக்கறோம். உனக்கு என்ன வேணும்னு சொல்லு பாட்டினு கேட்டா… இப்பவும் தாத்தாதானா?.”

“நேக்கு ஒண்ணுமே வேண்டாம் கோந்தே. எல்லாம் பகவான் கொடுத்துட்டாரே. உங்களை எல்லாம் விட வேற என்ன வேணும் சொல்லுங்கோ? எங்கிட்ட இத்தனை பாசமான உங்க எல்லாரையும் விட விலை ஒசந்தது என்ன இருக்கு சொல்லுங்கோ இந்த லோகத்துல. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.”

“இல்ல பாட்டி இப்பவாவது உன் ஆசை என்னனு சொல்லு ப்ளீஸ்” 

குழந்தைகளுக்கு நன்னா தெரிஞ்சு போச்சு. பாட்டி எல்லார் முன்னாடியும் சொல்லமாட்டானு. குழந்தைகள் எங்கிட்ட தனியா கேட்டதுகள். அவகிட்ட தனியா கேட்டதுகள்.

நேக்கு சொல்றதுக்கு என்ன வெக்கம்? நான் அதுகள் கிட்ட சொன்னேன். “பாவம் உங்க பாட்டி. அவளை என் மடில படுத்துக்க வைச்சு ஆதுரத்தோட தடவிக் கொடுக்கணும். அவ கைய பிடிச்சுக்கணும். இத்தனை நாள் எம்புட்டு சமாளிச்சுருக்கனு.

இவ என்ன சொல்லப் போறாளோனு நான் பார்த்துண்டே இருந்தேன். இவள் சின்ன வயச நினைச்சுண்டாளாம். “நீங்க எல்லாம் சிரிக்கப்படாது. உங்க தாத்தா மடில நா ஆசையா படுத்துக்கணும்” என்று சொன்னாளாம். நான் பாக்கறேன்னு தெரிஞ்சதும் மொகத்தை வேற மூடிண்டுட்டா. முகத்தைப் பார்க்கணுமே. வெக்கத்துல சேப்பா ஆயிடுத்து.

எல்லாம் சேந்து ஒரே கத்தல். ரெண்டு பேரும் ஒரே மாதிரி சொன்னோமாம். ஹனிமூன் கப்பிள் அட் 80னு வேற பட்டம் சூட்டிடுத்துகள். அவாளுக்கு நன்னா தெரியும் அவா பாட்டி அவா முன்னாடி என் மடில படுத்துக்க மாட்டானு.

பாட்டிக்குத் தாத்தாவோட தனியா போணும்னு ஆசை இருக்கும்னு எல்லாம் சேந்து திருநெல்வேலிக்கு ரயில்ல டிக்கெட் புக் பண்ணி போற இடத்துல எல்லாம் எங்களைக் கூட்டிண்டு போறதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணி, கையில கொடுத்ததுகள்.

“பாட்டி உங்க ரெண்டு பேருக்கும் ரொம்பப் பிடிச்ச ஊர்கள். நீ அடிக்கடி சொல்லுவியே, உனக்கும் தாத்தாவுக்கும் கல்யாணம் ஆன ஊர் திருநாங்கோயில் அதான் மேல திருவேங்கடநாதபுரம்னு……  அந்த ஊருக்கும், தாத்தா ஊரான திருக்குறுங்குடிக்கும்…  உன் ஊரும் தான். ரெண்டு பேரும் கஸின்ஸ் தானே. ரெண்டு பேரும் போயி திருநாங்கோயில்ல தரிசனம் முடிச்சு உன் கல்யாண நாளை நினைச்சுண்டு…  அங்க தாமிரபரணி ஆத்தங்கரை உண்டே  அங்க தாத்தா மடில படுத்துக்கோ. அட! இங்க பாரு பாட்டிக்கு வெக்கத்த…ஹை என்ன சந்தோஷமா?”  

கையில் கேமரா வேற கொடுத்து நாங்க தனியா இருக்கற ஃபோட்டோ வேணும்னு கண்டிஷன் எல்லாம் போட்டு, கட்டிப் பிடிச்சுண்டு, முத்தம் கொடுத்து, “எஞ்சாய் தாத்தா பாட்டி” னு சொல்லி ரயில் ஏத்தி விட்டதுகள். இவள் வெக்கப்பட்டுண்டே என் கையை பிடிச்சுண்டு ரயில்ல ஏறினா.

ஒரு வாரம் ஊர்ல இருந்துண்டு, பகவான் தரிசனம் எல்லாம் நல்லபடியா முடிச்சுண்டு, பழசெல்லாம் நினைச்சுண்டு பேசிண்டு, இதோ திரும்பவும் குழந்தைகள்ட்ட போயிண்டுருக்கோம். இத்தனை வருஷத்துல ஒரு நாளாவது என் மடில அவளா படுத்துண்டுருப்பளோ? இல்லியே. சரி அவதான் படுத்துக்கலை. நானாவது அவளை படுத்துக்கோனு இழுத்துப் படுத்துக்க வைச்சதுண்டோ? வைச்சாலும், அவள் எங்க படுத்துண்டா? என்னைதான் படுத்துக்க வைச்சுப்பள். என்னமோ தெரியலை. எத்தனை உரிமை கொண்டாடியிருக்கேன் நான். ஆனா அவள்? பாவம்!

என்னதான் அவள் சந்தோஷமா இருந்தாலும் குழந்தைகள் எல்லாம் சின்ன வயசுலயே போய்ட்டாளேனு வலியும், வேதனையும் அவ மனசுல வாட்டிண்டுதான் இருக்குன்னு எனக்கு நன்னாவே தெரியுமே. ஆனா, என் மடில படுத்துக்கணும்ன்ற ஆசைய இத்தனை வருஷமா அவ மனசுல பூட்டி வைச்சுருந்துருக்காளே. அவளுக்கு இல்லாத உரிமையா? அதான் இத்தனை வருஷமா என் மடில படுத்துக்காதவள் இன்னிக்கு “உங்க மடில சித்த படுத்துக்கட்டுமா”னு கூடக் கேக்காம அப்படியே படுத்துண்டு அவ ஆசையை நிறைவேத்திண்டுட்டா! எதுக்குக் கேக்கணும்? அத்தனை ஆசை எம்மேல! நீ எழுந்ததும் நிறைய பேசணும்டி கோமு என்று நினைத்தபடியே அவள் மேல் ஆதுரத்துடன் கையை வைத்துத் தடவிவிட்டார், பாட்டியின் உயிர் அவர் மடியிலேயே கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிவதை அறியாமல்.
------கீதா

39 கருத்துகள்:

  1. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  2. மடிமீது படுத்தல் என்பதானது அனுபவத்தவர்களுக்கே தெரியும். ஏதோ பெரிய பாரம் நம்மை விட்டு இறங்கியதைப் போன்ற உணர்வுகூட வருவதுண்டு. நெகிழ்ச்சியான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா உங்கள் கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  3. வணக்கம் சகோதரி

    அருமையான அன்பின் கதை. மனம் நெகிழ்ச்சியுடன் படித்தேன். கதை மிகவும் நன்றாக இருந்தது. தனக்கென எதுவும் கேட்காத, எந்த ஒரு ஆசையும் படாத ஒரு அன்புள்ளம். இந்த மாதிரி ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொருத்தர் இருப்பார்கள் போலும். கடைசி வரிகள் மனம் கனத்தது. கண்ணீரை வரவழைத்தது. இதை எ.பியிலும் படித்து ரசித்துள்ளேன். இங்கும் படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான கதை. ஆனால் தன் குழந்தைகளை எல்லாம் இழந்து பேரன், பேத்திகளை வளர்க்க வேண்டிய கட்டாயம். இம்மாதிரி ஒருத்தரை நானும் பார்த்திருக்கேன். மனசே வேதனையாக ஆகிவிட்டது. எப்படியோ பாட்டி தன் ஆசைப்படியே தாத்தா மடியிலேயே உயிரை விட்டதும் நன்மைக்கே. தாத்தாவும் விரைவில் பாட்டியைத் தேடிப் போயிடுவார். இந்தக் கதையும் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கு. இது எபியில் வந்ததும் நினைவில் இல்லை. படிச்சிருப்பேன். மறந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. இதிலே கொஞ்சம் எடிட் செய்திருக்கீங்க. முக்கியமா அந்தப் "பதிவிரதை" வார்த்தை உள்ள இடத்தை நீக்கி இருக்கீங்கனு நினைக்கிறேன். இதிலே காணோமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். நீங்கள் அங்கு பதிவிரதை என்ற வார்த்தை நெருடல் என்று சொன்னதாக நினைவு. அது நான் தவறான அர்த்ததில் சொல்லவில்லை என்றாலும் நீங்கள் சொல்லியிருந்தது பார்த்து அதை என் வேர்டில் உள்ள கதையில் எடுத்துவிட்டேன் கீதாக்கா.

      மிக்க நன்றி..

      கீதா

      நீக்கு
  6. மடிமீது உயிர் விடுவது திரைப்படங்களில் மட்டுமே பார்க்கிறோம்.

    நிகழ் வாழ்வில் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

    என் மனைவி எனது மடிமீது உயிர் துறப்பது சிலரது சூழ்ச்சியால் தடைபட்டு போனது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனைவியின் இறுதி காலத்தில் அருகில் இருந்தும் ஏன் இப்படி ஜி?
      கேட்கவே கஷ்டமாய் இருக்கிறது.

      நீக்கு
    2. மிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கு

      ஓ! சூழ்ச்சி? வேதனைதான்
      கீதா

      நீக்கு
  7. கதையை மீண்டும் படித்தேன்.
    // நீ எழுந்ததும் நிறைய பேசணும்டி கோமு என்று நினைத்தபடியே அவள் மேல் ஆதுரத்துடன் கையை வைத்துத் தடவிவிட்டார், பாட்டியின் உயிர் அவர் மடியிலேயே கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிவதை அறியாமல்.//

    கண்ணில் நீர் துளி படிக்கும் போது.

    எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த பேறு? உண்மையில் நடக்குதோ இல்லையோ கதையில் இருக்கட்டும். என் சகோதரி அடிக்கடி சொல்வது இரண்டு பேரும் ஒரே சமயத்தில் போக வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் என்று.
    என் மாமியார் காடைசி காலம் வரை கணவரை பார்த்துக் கொள்ள வேண்டும் அப்புறம் தான் போக வேண்டும் என்று நினைத்தார்கள் அது போல் மாமாவை குழந்தையை போல் கண்ணும் கருத்துமாய் பார்த்து அதன் பின் போனார்கள். என் விருப்பம் சொல்லவே தயக்கம் நினைப்பது ஒன்று நடப்பது இல்லை, இறைவன் விட்ட வழி என்று கடமைகளை செய்து கொண்டு இருக்கிறேன்.

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. அன்று நெகிழ்ந்தது போல் இன்றும்... மேலும் சொல்ல வார்த்தைகள் இல்லை...

    பதிலளிநீக்கு
  9. சிறப்பான பதிவு
    உள்ளத்தைத் தொடுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி யாழ்பாவாணன் கருத்திற்கு. ரொம்ப நாளாகிவிட்டதே பார்த்து. மிக்க மகிழ்ச்சி வந்து கருத்து சொன்னமைக்கு..

      கீதா

      நீக்கு
  10. இந்தப் படத்தைப் பார்க்கும் போதெல்லாம் மனம் நோகின்றது....

    எல்லாரும் எழுதுகின்றார்களே.. என்று ஏதாவது எழுத முயற்சித்தால் மனம் இயங்க மறுக்கின்றது....

    எத்தனை அன்பும் பாசமும்... அவர்களிடத்தில்..

    அவர்கள் மீது கற்பனையை ஏற்றுவதா?..
    ஏதோ ஒன்று ...மனம் தடுக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை அண்ணா கருத்திற்கு.

      நேற்று பதில் போட்டு அது போகவே இல்லை என்று இப்போதுதான் தெரிந்தது.

      நீங்களும் எழுதலாம் அண்ணா.

      நீங்கள் நேர்மறையான முடிவுதான் கொடுப்பீர்கள். அதுவும் உணர்வு பூர்வமாகவும் எழுதுவீர்கள். எழுதலாம் அண்ணா.

      கீதா

      நீக்கு
  11. மனம் தொட்ட பதிவு. இங்கே மீண்டும் ஒரு முறை படித்தேன்...

    மடியில் படுத்துக் கொள்வது சுகமானது... எனது சிறு வயதில் அத்தைப் பாட்டி, சித்திப் பாட்டி, பெரியம்மா, அம்மா என வீட்டில் படுத்து உறங்கி மடிசுகம் கண்டவன். தலையைக் கோதி விட்டே தூங்க வைத்து விடுவார்கள்... அது ஒரு கனா காலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்க்ட்ஜி உங்கள் கருத்திற்கு

      நானும் என் பாட்டி மடியில் அத்தை மடியில் எல்லாம் படுத்துக் கொண்டு அனுபவித்திருக்கிரேன். அதேதான் தலையைக் கோதி விட்டே தூங்க வைத்து விடுவார்கள். ஆம் கனா காலம் தான்.

      கீதா

      நீக்கு
  12. ரொம்பவும் நெகிழ்ச்சியா இருக்கு கீதா. உண்மையான தாம்பத்யத்தை அழகா கண்முன் எழுத்தால் காட்டிட்டீங்க.. மனசு கனத்துக்கிடக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கீதா மதிவாணன் கருத்திற்கும் வருகைக்கும்

      கீதா

      நீக்கு
  13. பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  14. அன்பு கீதா,
    பாட்டிக்கு விடுதலை. தாத்தா துடித்திருப்பார்.
    ரொம்ப இயற்கையான கதை.

    எங்கள் சிங்கத்தின் பாட்டியும் 88 வயதில் இரண்டு பிள்ளைகள் ஒரு பேரன் என்று
    இழந்திருக்கிறார்.
    தலை சாய்க்கத் தாத்தா தான் இல்லை.
    நல்ல கதை. வாழ்த்துகள் மா.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வல்லிம்மா.

      சிங்கத்தின் பாட்டியும் பாவம் இல்லையா தாத்தாவும் இல்லாமல்...

      என் பாட்டியும் அப்படித்தான் அம்மா தாத்தா, பெண்கள் மாப்பிள்ளைகள், என் அம்மா அதாவது அவரது மருமகள் எல்லாம் சீக்கிரமே போய்ச் சேர்ந்துவிட அப்பாவும் பாட்டியும் மட்டும் என்றாகி பாட்டி 92 முடிந்து 93 நடந்த போது காலமானார்.

      மிக்க நன்றிமா கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  15. யதார்த்தமான குடும்பக் கதை. இறுதியில் மனம் கனத்துப் போனது..பயணத்தின் மகிழ்வைப் பகிர்ந்து இன்னும் சில நாட்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றியது..தாத்தா பாவம்.

    உங்கள் தாத்தா, பாட்டியின் கதை என்று சொன்ன நினைவு!!


    எபி யாரடா என்று யோசித்துப் பின்னர் கண்டுபிடித்துவிட்டேன் :) நல்ல பெயர் கீதா, எங்கள் பிளாக்கிற்கு :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி க்ரேஸ் கருத்திற்கு..

      தளம் பக்கம் வரவே இல்லையா உங்கள் கருத்தும் மிஸ் ஆகியிருக்கு...

      கீதா

      நீக்கு
  16. எங்கள் பிளாக்கில் வாசித்தது என்றாலும் மீண்டும் வாசித்தேன்.
    அருமை.

    பதிலளிநீக்கு
  17. என்ன இப்பிடி துக்கத்தில் முடிச்சிட்டீங்க.. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா போன தாத்தா பாட்டி கதை சந்தோஷமா முடிஞ்சுருந்திச்சே!!!!!

      ஸாரி தேனு உங்க கருத்தை இன்னிக்குத்தான் பப்ளிஷ் பண்ண முடிந்தது. இத்தனை நாள் தளம் பக்கமே வரலை கை வலி நால.

      மிக்க நன்றி உங்க கருத்துக்கு

      கீதா

      நீக்கு
  18. அன்பின் சகோதரி..

    நீண்ட நாட்கள் ஆகி விட்டன...

    தங்கல் நலம் அறிய ஆவல்... கையில் சோர்வு என்று அறிந்திருந்தேன்..

    விரைவில் நலம் பெறுவதற்கு வேண்டிக் கொள்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை அண்ணா ரொம்ப ரொம்ப ஸாரி.

      நீங்க இங்க சொல்லிருக்கும் கருத்து கூடப் பார்க்கலை. தளம் பக்கம் வராததுனால

      இன்று ஒரு கதை எங்கள் ப்ளாகில் போட்டது இங்கு ஷெட்யூல் செஞ்சது கூடத் தெரியலை...மறந்து போச்சு....திடீர்னு எங்க தளம் வந்து வேறு என்ன பதிவுகள் வந்திருக்குனு பார்க்க வந்தா பதிவு வந்ததும் தெரிந்தது...அப்ப கமென்ட்ஸ் மாடரேஷன் நான் வைச்சதும் தெரிஞ்சு எல்லாம் பப்ளிஷ் செஞ்சேன்...

      மீண்டும் மன்னிப்பு கோருகிறேன் துரை அண்ணா உங்கக் கருத்தைப் பார்த்து பதில் அளிக்காமல் விட்டதற்கு...

      மிக்க மிக்க நன்றி துரை அண்ணா...அன்பிற்கும் நலம் விசாரிப்புக்கும்

      கீதா

      நீக்கு