புதன், 15 பிப்ரவரி, 2017

விண்ணிலிருந்து வீழ்ந்த நட்சத்திரம் விண்ணிலே!

விண்ணிலிருந்து 30 வருடங்களுக்கு முன்பு இவ்வுலகில் வீழ்ந்த ஒரு நட்சத்திரம்! அது வீழ்ந்த இடம் தேவகோட்டை! 30 வயதானாலும் குழந்தை! ஆனால் நினைவாற்றல் மிக்க குழந்தை. ஊராருக்குச் செல்லக் குழந்தை. இந்த வயதிலும் தனது பெரிய வீட்டிலே உருண்டு, விளையாடி, வளர்ந்த குழந்தை. அப்பெரிய வீட்டில் தனக்கென ஒரு உலகில் வாழ்ந்த குழந்தை. அவ்வீடுதான் அவள் உலகம்! தன் மனதிற்கினிய சகோதரரின் அன்பினில் வளர்ந்த குழந்தை. தாயுடனேயே இருந்த குழந்தை.

அந்தச் சகோதரர் தன் குழந்தைகளையும் விட இவளைத்தான் அதிகமாக நேசித்தார். வெளிநாட்டிலிருந்தவரை அவர் ஒவ்வொரு முறை ஊருக்குப் பேசும் போதும் எல்லோரையும் விட அதிக முக்கியத்துவம் கொடுத்து தன் தங்கையிடம் பேசும் போது, அவளிடம் என்ன வேண்டும் என்றால் அக்குழந்தை கேட்பது ஒன்றே ஒன்றுதான் “நைட்டி”. அவள் உடுத்துவதற்கு எளிதாக இருந்ததால் வீட்டில் அதை மட்டுமே உடுத்தி வந்ததால் அவளுக்குத் தெரிந்த அதை மட்டுமே சொல்லத் தெரிந்த குழந்தை. அதற்காக, வித விதமாக வாங்கி வந்துக் குவித்தவர் அந்தச் சகோதரர். தனக்குத் தெரிந்த வரையில் வாசலில் ஒரு கோலம் என்று கிறுக்கினாலும், அழகான ஓவியம் என்று ரசிப்பார் அந்த சகோதரர். சகோதரராக, தந்தையாகப் பார்த்துக் கொண்டவர். தனது மனைவி இறந்த பிறகு தன் குழந்தைகளை விட, இக்குழந்தைக்காகவே இரண்டாவது திருமணம் பற்றி யோசிக்காதவர் அந்தச் சகோதரர். தன் தாயின் காலத்திற்குப் பிறகு அக்குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கனவு கண்டிருந்தவர்.


தன் வீடு என்று சொல்லிக் கொண்டு வீட்டில் வளைய வந்தவள். சென்ற 10, 15 நாட்களாக சகோதரரையே சுற்றிச் சுற்றி வந்தவள். அவர் தரையில் அமர்ந்தால் அவர் மடியில் படுத்து விளையாடிவள். அவர் மெத்தையில் அமர்ந்தால் அவர் அருகில் அவருடன் அமர்ந்து விளையாடியவள். இறுதி வரை அவரது கையைப் பற்றிக் கொண்டு “என்னை விட்டுப் போயிடாதண்ணா” என்று சொல்லிக் கொண்டிருந்த அந்த நட்சத்திரம் இறுதியில் ,பாசக்கார அண்ணனாய், தந்தையாய் இருந்தவரின் கையை விட்டுப் பிரிந்து மீண்டும் விண்ணிற்கே சென்று அங்கிருந்து ஒளி வீசத் தொடங்கிவிட்டது!

அவள் ஆசைப்பட்ட சிறு சிறு ஆசைகளைக் கூட ஒவ்வொன்றாக நிறைவேற்ற வேண்டும், காலம் இருக்கிறதே என்று கனவு கண்டு கொண்டிருந்தவர் இதோ இன்று தப்புக் கணக்குப் போட்டு விட்டதாக அழுது கொண்டிருக்கிறார். அவளின் ஆசைகளில் ஒன்றான ரயிலில் செல்லும் ஆசையை இராமேஸ்வரம் வரை அவளை அழைத்துச் சென்று நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்திருந்தது நிறைவேறாமல், எல்லோரையும் விட தன்னிடம் இத்தனை அன்பு கொண்டிருந்தவள் தன் குழந்தைகளின் திருமணத்தைப் பார்க்காமல் போய்விட்டாளே என்று அழுது கொண்டிருக்கிறார். அவள் அவரிடம், "இந்தா  இதை யாரிடமும் கொடுக்காமல் பத்திரமாக வைத்துக் கொள்" என்று கொடுத்த ஊக்கையும்(Pin), அவள் நெற்றியில் வைக்கப்பட்டிருந்த ஒரு ரூபாய் நாணயத்தையும், அவளுடனான ஒவ்வொரு கணப்பொழுதையும், நினைவலைகளையும் தன்னுடன் வைத்துக் கொண்டு மருகிக் கொண்டிருக்கும் அக்குழந்தையின் அன்பு சகோதரர் வேறு யாருமல்ல நம் அன்புப் பதிவர் கில்லர்ஜி.

இறுதிவரை விடை தெரியாமல் வாழ்கிறேன் என்று விழித்துக் கொண்டிருக்கும் கில்லர்ஜிக்கு “விடை” கொடுத்துச் சென்றுவிட்ட அவரது அன்புச் சகோதரியின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்! அவள் விண்ணிலிருந்து நட்சத்திரமாய் ஒளிர்வாள்!

அவர் கொடுத்திருக்கும் "விடை"யில் உங்களுக்கான, உங்கள் வாழ்விற்கான விடை இருக்கிறது கில்லர்ஜி! ஆம்! அவளைப் போன்ற குழந்தைகள் இவ்வுலகில், நம் அருகில் அதுவும் வசதியற்ற, ஆதரவற்ற நிலையில் ஏராளம் பேர், இருக்கின்றனர். அவர்களுடன் நீங்கள் வாழ்வின் ஒரு சிறு பகுதியைச் செலவிடலாம். உங்கள் அன்பை அவர்களுக்கு அளிக்கலாம்! உங்கள் தங்கை, அக்குழந்தை விரும்பிய, நீங்கள் நிறைவேற்றவில்லை என்று மருகும் அவ்வாசைகளில் ஒரு சிலதேனும் இந்த நட்சத்திரக் குழந்தைகளுக்கு நிறைவேற்றலாம். இந்த நட்சத்திரங்களில் உங்கள் தங்கையாகிய அக்குழந்தை நட்சத்திரத்தைக் காணலாம். விண்ணிற்குச் சென்ற அந்த நட்சத்திரம் இந்த நட்சத்திரங்களில் ஒளிர்கிறாள் என்று நீங்கள் கண்டு உணர்ந்து மகிழலாம்! உங்களுக்கும் மன நிறைவு கிட்டும்!

இதற்கு முன் இப்படிப்பட்டக் குழந்தைகளைப் பற்றி நான் இட்ட பதிவுகளில் ஒன்றிலேனும் கில்லர்ஜி இக்குழந்தை பற்றிக் குறிப்பிட்டிருந்தால், அக்குழந்தை இப்பூமியில் இருந்த போதே நான் நேரில் சென்று கண்டிப்பாகச் சந்தித்திருப்பேன். அதுவும் நான் 4 மாதங்களுக்கு முன் அவர் ஊராகிய தேவகோட்டையின் அருகிலிருக்கும் திருப்பத்தூர் வரை சென்றிருந்தேன். ஆனால், கில்லர்ஜியோ, அக்குழந்தையை என்னிடம் நேரில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று மனதில் நினைத்திருந்ததாகச் சொன்ன போது என் மனம் மிகவும் வேதனைப்பட்டது. இப்படிப்பட்டக் குழந்தைகள் என் மனதினை ஈர்ப்பதாலும், பாதிப்பதாலும், அதுவும் நம் அன்பர்களில் ஒருவரின் ரத்தபந்தம் என்பதாலும் விளைந்த ஒன்று!  

---கீதா



செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 6 - பூப்பூவாய்ப் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ!!!!

இந்த அன்புத் திருநாள் மட்டுமின்றி எந்நாளும் எப்போதும் உங்கள் எல்லோருக்கும் அன்பார்ந்த மலர்க்கொத்து
பூப்பூவாய்ப் பூத்திருக்கும் ஆயிரம் பூ 
பூவிலே சிறந்த பூ என்ன பூ
அன்பு!!














                                    மலர்களே! மலர்களே ஏன் இந்த மௌனம்?! 
                                                    அன்பிற்கு மொழி உண்டோ?
                                                                           இல்லை!
                                                   அதனால் தான் இந்த மௌனம்

அன்பெனும் இறைவனிடம் படைக்கையிலும் கூட இயற்கையால் படைக்கப்பட்ட எங்களிடம் சாதி பார்க்கிறார்கள் மனிதர்கள்! ஆனால், ஆர்பாட்டமில்லாத அன்பு! சுயநலமற்ற அன்பு! எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு! கட்டளைகள் இல்லாத அன்பு! உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் அன்பு! என்று அதனைச் சொல்லும் விதமாய் மலர்ந்திட்ட மலர்கள் நாங்கள்! அதுவே இயற்கை படைத்திருக்கும் பூக்களாகிய எங்களின் வாசம்! இயற்கை ஆட்சி செய்யும் இயற்கையால் படைக்கப்பட்ட இவ்வுலகின்  நேசம்! ஆதலால் அன்பு செய்வீர்! இயற்கையையும், இவ்வுலகம் முழுவதையும்!

அன்பெனும் பூவாசம் தொடரும்!

------கீதா


வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

எவர்ரெடி (!?) வண்டி

Image result for ever ready vehicle
படம் இணையத்திலிருந்து

என் மகன், மகனின் அத்தை, நான் மூன்று பேரும் ஸ்கைப்பில் கான்ஃபெரன்ஸ் காலில் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது மகன்,

“ம்மா! வெளிய போக வேண்டிய வேலை இருக்குனு சொன்னியேம்மா, வண்டி எல்லாம் ஒழுங்கா இருக்கா?”

“நல்லா இருக்குடா.”

“ரெண்டு நாள் முன்னாடி பஞ்சர்னு சொன்னியே நேத்து கூட இன்னும் சரியாகலைனு சொன்னியே.. சரி பண்ணிட்டியா?”

“ஐயே அதெல்லாம் ஒன்னுமில்லடா. ஜுஜூபி பஞ்சர்”

“சரி செர்வீஸ் செக் பண்ணியா? மத்த பார்ட்ஸ் எல்லாம்?”

“எல்லாம் ஓகே!”

“ரெண்டு இண்டிகேட்டர் லைட், ஹெட் லைட்?”

“ஆமாம்டா இண்டிகேட்டர் பிரச்சனை இருந்துச்சு! ஹெட்லைட் பிரச்சனை எதுவும் இல்லை..அது வழக்கமான பிரச்சனைதான் எல்லாம் சரியா இருக்குடா.”

“எஞ்சின்ல ஏதோ பிரச்சனை, சத்தம் வித்தியாசமா போடுதுனு சொன்னியேமா…”

“ஆமாண்டா, காலைல ஸ்டார்ட் ஆகக் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. மெதுவா ஓடிச்சு. ஆனா, ஸ்டார்ட் ஆகி ஓட ஆரம்பிசுச்சுனா வேகம் தான்…”

“அம்மா பாத்துமா பெட்ரோல் எல்லாம் பார்த்து போடுமா… கலப்படம்…”

“எல்லாம் பார்த்துதான் போடறேன். எஞ்சினையும் நல்ல செர்வீஸ் பண்ணியாச்சு”

“ம்மா, நான் ஊர்ல வேற இல்லை. நல்லா கவனமா பாத்துக்கமா”

“டேய் கவலையே படாதடா….நம்ம வண்டி எப்பவுமே இளமை ததும்பும் வண்டிடா!! ஓரம் போ ஓரம் போ ருக்குமணி வண்டி இல்லைடா…..கட்டை வண்டி கட்டை வண்டி காப்பாத்த வந்த வண்டிடா!!!!

அவன் அத்தைக்குப் புரியவில்லை…

“அம்மாவும் பையனும் என்ன பேசிக்கறீங்கன்னே புரியல…வண்டி எஞ்சின் சத்தம் போடுதுனா என்ன செலவாகும்னு பார்த்து, மாத்திற வேண்டியதுதானே”

“ஐயோ ராதா எஞ்சின மாத்தறது எல்லாம் ரொம்பக் கஷ்டம்! அது மட்டுமில்லை எஞ்சின் இது வரை நல்லாத்தான் இருக்கு.. எப்பவாச்சும் வரக் கூடியப் பிரச்சனைதான்…….பெரிசா ஒன்னும் இல்லை”

“அண்ணி வண்டி இப்பல்லாம் வெயிட் தாங்கறது இல்லைனு, சொல்லுவீங்களே. அப்ப எப்படி சாமான் எல்லாம் கடைல இருந்து வாங்கி மாட்டி எடுத்துட்டு வருவீங்க?”

“அது பரவாயில்லைப்பா முன்னாடி எல்லாம் 12, 15 கிலோ வரைக்கும் தாங்கிச்சு இப்பல்லாம் 8,9 கிலோ வரைக்கும் தாங்கும் அது போதுமே..இப்ப 12, 15 கிலோ தாங்கி என்ன பண்ணப் போறோம்”

“அண்ணி, வண்டி ரொம்ப பழசாயிருச்சுனா வித்துட்டுப் புது வண்டி வாங்கிட வேண்டியதுதானே..இப்படி எவ்வளவு நாள் ஓட்டுவீங்க”

“ஹஹஹ வண்டிய மாத்த முடியாதே! என் வண்டிய என்னனு நினைச்ச? சும்மா அதிரும்ல!!…….. ஓகே ராதா, சரி குட்டிமா நான் கடைக்குப் போயிட்டு வரேன். அப்புறமா பிஞ்ச் பண்ணறேன்…”

“ஓகேம்மா.. நான் அத்தைட்ட பேசிட்டுக் கட் பண்ணிடறேன்….”

“டேக் கேர் அண்ணி”

“அத்தை, வண்டி வருஷம் ஆனாலும் செம ஸ்பீட்!!!! இந்த வண்டி பல வருஷமா ரொம்ப உழைக்கிற வண்டி. எத்தனை விபத்தைச் சந்திச்சாலும் எப்பவுமே ஒன்னும் ஆகாத, ஜாலியா போற வண்டி. எனக்குப் பொக்கிஷமான வண்டி! இத மாதிரி வேற எதுவும் வராது அத்தை! அத்தை உங்க அண்ணாத்தைக் கிட்ட சொல்லிறாத”

“ஹஹஹஹஹ் ஐயையோ! அவ்வளவுதான். அவர் ஆரம்பிச்சாருன்னா….. சாமி…..விடு ஜூட்”

என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, நான் என் கால்களில் செருப்பணிந்து என் எவரெடி வண்டி “நட(டை)ராஜா/ராணி” மோட்டார் செர்வீசை இயக்கினேன்!!!

நாம் பயன்படுத்தும் அரைப்பான், இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், கணினி, என்று எல்லாவற்றையும் அவ்வப்போது பராமரித்து மிகவும் கருத்தாகக் கவனிக்கிறோம் இல்லையா? ஆனால் இதை எல்லாம் இயக்கவும், இவற்றை விட மிக மிக முக்கியமாக வாழ்க்கையை இயக்கவும் தேவைப்படும் நம் உடலையும், எஞ்சின் போன்ற மூளையையும்/மனதையும் நம்மில் பலரும், கவனித்துப் பராமரிப்பது இல்லை, அது மிகவும் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். பராமரித்தால் செலவுகளும் குறையலாம்!

அப்பொருட்கள் இல்லை என்றாலும் கூட வாழ்ந்து விட முடியும். விற்று மாற்றியும் வாழ முடியும்! ஆனால் நம் உடலும், மனதும் சோர்ந்து போனால்? என்றேனும் ஒரு நாள் இவ்வுலகத்திற்கு விடை கொடுக்கத்தான் போகிறோம். என்றாலும் வாழும்வரை, எப்படி நாம் பொருட்களை அவ்வப்போது பராமரிக்கின்றோமோ அது போன்று நம் உடலையும், மனதையும் புத்துணர்வோடு இருக்கப் பராமரிப்பதற்கான வழிகளை மேற்கொண்டு "எவர் ரெடி" என்று இயக்குவது இன்றியமையாதது. அப்படி இயக்கினால் முடிந்த அளவிற்குப் பிறரைச் சாராமல், பெரிதாய் ஏதும் நிகழாமல் தவிர்த்திடலாம். அப்போதுதான் வாழ்க்கைப் பயணத்தை மகிழ்வுடன் பயணிக்க முடியும்! ஏனென்றால், எதிர்காலத்தில் நம் குழந்தைகளின் சூழல்கள் எப்படி இருக்கும் என்று நம்மால் கணிக்க இயலாது. இதையும் மீறி நடந்தால் நம் கையில் இல்லைதான், ஆனால் நாம் பராமரிக்கவில்லை என்ற குற்றச் சாட்டோ, இல்லை குற்ற உணர்வோ இல்லாமல், நடப்பதுதான் நடக்கும், என்ன செய்ய என்று நினைத்துச் சமாதானம் கொள்ளலாம்! சரிதானே?!

பின் குறிப்பு: நானும், மகனும் இப்படித்தான் பல விசயங்களைப் பேசுவதுண்டு. என் வண்டியைப் பற்றிப் பேசுகிறோம் என்று நினைத்துக் குழம்பிய மகனின் அத்தைக்கு, அது வண்டியைப் பற்றி அல்ல. என்னைப் பற்றித்தான் என்பதை என் மகன் விளக்கியிருப்பான்.

------கீதா


திங்கள், 6 பிப்ரவரி, 2017

அகக்கண் வழியே!

“உலகம் ஜன்னல் வழியாகத்தான் எனக்கு அறிமுகமானது” இதுதான், எழுத்தாளர் எஸ் ரா – எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் புத்தகமான “தேசாந்திரி” யில் முதல் வாக்கியம்.  நம் எல்லோருக்குமே அப்படித்தான் என்றாலும் அதன் வழி நாம் எதைப் பார்த்தோம் என்பது வேறு!! நமது பார்வையிலிருந்து எதைக் கற்றோம் என்பதும் வேறு!

சில மாதங்களுக்கு முன் இரு நபர்களிடம் பேச நேர்ந்தது. இருவரிடமும் ஒரே கேள்விதான் கேட்டேன்.

“தீபாவளி எல்லாம் நல்லாக் கொண்டாடினீங்களா? நல்லபடியாகப் போச்சா?”

ஒருவர், “அதை ஏன் கேக்கறீங்க மேடம், என்னத்த சொல்லறது? நான் எல்லாம் எங்கேங்க தீபாவளி கொண்டாடறது?” என்று மிகவும் சோகத்துடன் பதிலளித்தார்.

மற்றொருவர், “சூப்பரா போச்சு மேடம். நல்லா எஞ்சாய் பண்ணினேன் மேடம்” என்று நிகழ்வைப் பற்றி விவரித்தார். இருவரின் பதில்களிலும் எவ்வளவு வேறுபாடு!

இரண்டாமவர் மிக மிக நேர்மறை எண்ணம் கொண்டவர். எப்போதும் மகிழ்வாக இருப்பவர். தன்னை மகிழ்வாக வைத்துக் கொள்பவரும் கூட. தான் பார்த்த படங்கள், தொலைக்காட்சியில் பார்த்ததானாலும் சரி, திரையரங்கில் பார்த்ததானாலும் சரி அதைக் குறித்து விவரிப்பார். குறும்படம் பற்றி பேசுவார். நீங்கள் இந்தப் படம் பார்த்தீர்களா என்று என்னிடம் கேட்பார்.

நான் மேற்சொன்ன இருவருமே பார்வையற்றவர்கள். ஆனால், இரண்டாமவரின் பதிலைப் பார்த்தீர்கள் அல்லவா??!! அவர், தான் பார்வையற்றவர் என்பதை மறைக்க கண்ணாடி கூட அணிவதில்லை என்பது அவர் தானும் எல்லோரையும் போலத்தான் என்ற அவரது தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு!

இரண்டமவரை நாம் எல்லோரும் அறிவோம். வலைப்பதிவர். அவருக்கு. என் மகனின் வயதுதான் ஆகிறது.

அவர் என்னிடம், தான் படத்தில் ரசித்த காட்சிகள், பயணத்தில் ரசித்த இயற்கைக் காட்சிகள், நிகழ்வுகள் என்று அனைத்தையும் விவரிப்பார். அவரது பயணக் குறிப்புகளை வாசித்தீர்கள் என்றால் ஏதோ அவர் நேரில் கண்டது போலவே இருக்கும். அவர் பார்வையற்றவர் என்பது எனக்கு முதலில் தெரியாது. எனவே எனக்குச் சிறிது கூட ஐயம் ஏற்படவேயில்லை.

அவர் பார்வையற்றவர் என்பதை அறிய நேர்ந்த போது நான் வியப்பின் எல்லைக்கே போய்விட்டேன். அலைபேசியில் பேசிக் கொண்டும், அவரது எழுத்துகளை வாசித்துக் கொண்டும் இருந்த நாங்கள் அவரை முதன் முதலாக விசு அவர்களின் புத்தக வெளியீட்டின் போது வேலூரில் நேரில் சந்திக்க நேர்ந்தது.
துளசிக்கு அடுத்து அமர்ந்திருப்பவர்தான் மகேஷ் அடுத்திருப்பவர் அவரது தம்பி, முத்துநிலவன் அண்ணா
அவர் வேறு யாருமல்ல திருப்பதி மகேஷ். அவர் தனது பெற்றோருடன் திருப்பதியில்தான் வசிக்கிறார். தாய்மொழி தெலுங்கு என்றாலும் பள்ளிப்படிப்பை அவர் சென்னையில், அடையாரில் உள்ள பார்வையற்றோருக்கான பள்ளியில் படித்ததால் தமிழ் நன்றாகவே பேசுவார், எழுதுவார். தமிழில் ஆர்வம் உள்ளவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர். அவரது வலைத்தளம் http://tirupatimahesh.blogspot.com

நேரில் சந்தித்த பின்னர் எங்களது நட்பு இன்னும் விரிந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாங்கள் இருவரும் அலைபேசியில், ஸ்கைப்பில் அளவளாவது உண்டு. அப்படி ஒரு முறை அவரை அழைத்த போது,

“மேடம் ஒரு மணி நேரம் கழித்து பேசட்டுமா? வேற ஒன்னுமில்லை, டிவில ஒரு படம் பார்த்துட்டுருக்கேன், ரொம்ப நல்ல சீன் போய்ட்டுருக்கு என்பார் இல்லையென்றால் டிவியில் மகாபாரதம் பார்த்துட்டுருக்கேன். பார்த்துட்டு வரேன் மேடம்” என்பார். எனக்கு வியப்பு ஏற்பட்டதில்லை. அதுதான் மகேஷின் பார்வை!!!

வலைத்தளங்கள், புத்தகங்கள் வாசிப்பார். அதை விமர்சிப்பார். கணினி தொழில் நுட்பம் குறித்து அவரிடம் தெரிந்து கொள்ளலாம். அத்தனையும் விவரிப்பார். பயணம் செய்வதில் மிகவும் ஆர்வமுடையவர். தான் கேரளாவைப் பார்க்க ஆசைப்படுவதாக என்னிடம் சொல்லி அதற்கான ரயில்கள் அவரது ஊரிலிருந்து என்னென்ன இருக்கின்றன, என்று அனைத்து விவரங்களையும் அட்டவணையைப் பார்க்கவே வேண்டாத அளவிற்கு விரல் நுனியில் வைத்திருந்தார்.

பயணம் மேற்கொண்டு அதனைப் பதிவாகவும் எழுதினார். என்னிடம் அவர் இயற்கைக் காட்சியை விவரித்த போது அசந்து போனேன். அவர் வலை எழுத்தை வாசித்தால் அவர் பார்வையற்றவர் என்பதை அவர் சொல்லவில்லை என்றால் அறியவே முடியாது!

புதுக்கோட்டையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பிற்கு அவர் திருப்பதியிலிருந்து வேலூர் வந்து, வேலூரில் இருக்கும் நம் மற்றொரு வலைப்பதிவர், சிவசக்தி-அன்பேசிவத்தின் துணையுடன் வந்தார். அன்பேசிவம் அவரை அழைத்து வந்தார் என்பதைவிட அன்பேசிவத்தை மகேஷ்தான் அழைத்து வந்தார் என்று சொன்னால் அது மிகையல்ல. திருச்சியில் இறங்கியதும் எந்த நடைமேடைக்குச் சென்று புதுக்கோட்டை ரயிலைப் பிடிக்க வேண்டும் என்ற விவரங்கள் முதல் நிகழ்வு நடக்கும் இடம், முகவரி என்று விவரித்து அழைத்து வந்தது மற்றும் ரயிலில் அவர் பேசிக் கொண்டே வந்த விசயங்களை நாம் கூட அறிந்திருக்க மாட்டோம் அந்த அளவிற்கு அவர் பல விசயங்களை மிகவும் யதார்த்த ரீதியில் பேசிக் கொண்டே வந்தார் என்றும் அன்பேசிவம் என்னிடம் சொல்லிச் சொல்லி வியந்து போனார். நானும் அதை வழிமொழிவேன்.

மகேஷிடம் என்ன துறை பற்றி வேண்டுமானாலும் உரையாடலாம். அவர் அறிந்தும் வைத்திருக்கிறார். அறிந்திராதவற்றை நம்மிடம் கேட்டும் தெரிந்து கொண்டு அடுத்த முறை பேசும் போது கூடுதல் தகவல்கள் தருவார். நமக்கு வியப்பு மேலிடும். புள்ளி விவரக் கில்லாடி அவர்!

நான் அவரிடம் பேசும் போது, “மகேஷ், நீங்கள் இந்தப் படம் பாத்தீங்களா? அந்த இடத்துல இதைப் பாத்தீங்களா?” என்று எல்லோரிடமும் பேசுவதைப் போலத்தான் படங்கள், இடங்கள், புத்தகங்கள் பற்றி எல்லாம் பேசுவேன். மேலும் படியுங்கள் என்று உற்சாகப்படுத்தினால் அவர் அதற்கு மேலும் தன்னை மேம்படுத்திக் கொள்வது குறித்துப் பேசுவார். அவரிடமிருந்து இது வரை எந்த எதிர்மறையான எண்ணமும் வெளிப்பட்டதில்லை. தான் பார்வையற்றவர் என்பதை ஒரு போதும் வெளிப்படுத்திக் கொள்வதில்லை. அசாத்தியத் தன்னம்பிக்கையுடைய இளைஞர்.

தற்போது ஸ்டேட் பேங்கில் வேலை கிடைத்து, பயிற்சியும் முடிந்து, சென்னை வட்டம் என்பதால் திருத்தணி கிளையில் கிடைத்து வேலை செய்கிறார். திருப்பதியிலிருந்து தினமும் காலை 2 மணி நேரப் பயணம், மாலை 2 மணி நேரப்பயணம்.  தனது புது வேலை பற்றி அடுத்த முயற்சி எல்லாமும் அவர் பேசினார். என்னை வியக்க வைக்கும் ஓர் இளைஞர்.

சமீபத்தில் நம் கரந்தை சகோ தன் வலைத்தளத்தில் மகேஷ் போன்ற ஒருவரான வெற்றிவேல் முருகன் என்பவரைப் பற்றி அவரது தன்னம்பிக்கையையும், நேர்மறை எண்ணங்களையும் தொடராக எழுதியதை அறிந்து வியந்தோம். ஹெலன் கெல்லரைப் பற்றி நாம் அறிவோம். இன்னும் பல பார்வையற்ற ஆனால் நேர்மறை எண்ணங்களுடன், தன்னம்பிக்கையுடன் வாழ்ந்தவர்கள் மற்றும் வாழ்ந்து வரும் அனைவருமே இவ்வுலகைத் தங்கள் அகக்கண் எனும் ஜன்னலின் வழியாக நோக்கியதால்/நோக்குவதால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றுச் சாதித்தவர்கள் பட்டியலில் இடம்பெற்றனர்/பெறுகின்றனர். அப்பட்டியலில் நம் மகேஷும் இடம் பெறுவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை!

எல்லாப் புலன்களும் இருந்தும் பல மனக்குறைகளுடன் வாழ்ந்து வரும் நாம், இவரையும், இவர் போன்று வாழ்பவர்களையும் பார்த்து நாம் கற்றுக் கொள்ள நிறையவே இருக்கிறது. மகேஷ் போன்றோரைக் கண்டு உற்சாகமடைந்து, நம்மை நாமே ஊக்குவித்துக் கொண்டு, நேர்மறை எண்ணங்களுடன், தன்னம்பிக்கையுடன் நாமும் ஜன்னல் வழி இவ்வுலகைப் பார்த்தாலும், நம் அகக்கண் வழியாகப் பார்ப்போம்.

Kindness is the language which the deaf can hear and the blind can see - Mark Twain

The only thing worse than being blind is having sight but no vision - Helen Keller


----கீதா