குவிகம் பதிப்பகம் -புத்தகத்தின் விலை ரூ 350. புத்தகம் வாங்க விரும்புவோர் 'குவிகம்' கிருபானந்தன் அவர்களை 9791069435 இல் தொடர்பு கொள்ளவும்.
அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி 2025ல் பரிசு பெற்ற கதைகளை, "அன்னை ஸ்வர்ணாம்பாள் இலக்கிய விருதுகள் 2025 பரிசுக் கதைகள்" என்று முழுத்தொகுப்பாக நம் இராய செல்லப்பா சார் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். பரிசு பெற்றவர்களுக்கு மூன்று பிரதிகள் வழங்கப்பட்டதையும் சென்ற பதிவில் சொல்லியிருந்தேன்.
சென்ற வருடம் பரிசு பெற்றக் கதைகளைப் பற்றி என் பார்வையில் சொல்லியிருந்தேன். இந்த வருடம் போட்டியில் நானும் கலந்து கொண்டு பரிசு பெற்றதால் சற்று
கவனத்தோடு கதைத்திருக்கிறேன்.
மொத்தம்
35 கதைகள். அவற்றை நான் ஐந்து ஐந்தாகப் பிரித்து 7 பதிவுகளாகக் கதைகளைப் பற்றி சில வரிகள் கொடுக்க நினைத்து
தொகுப்பில் உள்ள கதைகளின் வரிசையில் இதோ முதல் 4 கதைகளைப் பற்றி... பகுதி ஒன்று 1/7
போட்டியில் வென்றவர்கள் அத்தனை பேரும் பக்கங்கள் கொள்ளாத பல பெருமைகளுக்கும் பரிசுகளுக்கும் சொந்தக்காரர்கள். இன்னும் சாதனைகள் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைச் சொல்லிக் கொண்டு இதோ கதைகளைப் பற்றிக் கதைக்கத் தொடங்கியிருக்கிறேன்.
கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், எனக்கு யாரென்று புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
குணவதியம்மாள்
ஆங்கரை
பைரவி
ஆசிரியரின்
ஊர் ஆங்கரை. இயற்பெயர் ஆர் ரெங்கராஜன். இவரது திறமைகளையும், பரிசுகளையும் பற்றிச் சொல்ல
இப்பக்கம் போதாது. எனவே அவருடைய கதைக்குச் சென்றுவிடுகிறேன்.
முதியோர்கள்
எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று ஆங்காங்கே நாம் அறியும், வாசிக்கும் செய்திகள், நிகழ்வுகளை
ஒட்டிய கதை.
முதியோர்
இல்லத்தில் இருக்கும் மூதாட்டி குணவதியம்மாள் ஒரு வருடத்திற்கு முன்னான தன் கதையை நினைப்பதில்
விரிகிறது கதை. ஒரு முதியவர் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார் என்று அவரது உணர்வுகளைச்
சொல்லும் அழகான கதை.
கீழே
விழுந்ததால் தன் இயற்கை உபாதைகளுக்கு மகன் மருமகளைச் சார்ந்திருப்பதால் மருமகளால் கஷ்டப்படும்
குணவதியம்மாளுக்கு வறட்டு இருமலும் அதை ஒட்டிய சில உபாதைகளும். ஒரு மழை நாளில் இரவில்
வீட்டை விட்டுத் தானாகத் தட்டுத்தடுமாறி வெளியேறும் குணவதியம்மாள் சாலையில் குப்புறவிழுந்து
கிடக்க, தற்செயலாக, அவரை ஒரு முதியோர் இல்லத்தில் பணி செய்யும் கலியமூர்த்தி, குணவதியம்மாளுக்கு
மருத்துவம் பார்த்து முதியோர் இல்லத்திலும் சேர்த்துவிடுகிறார்.
அவரே
குணவதியம்மாளை நன்றாகக் கவனித்து உடற்பயிற்சி எல்லாம் செய்யவைத்து தானாக நடக்கும் அளவிற்குக்
கொண்டு வந்துவிடுகிறார். முதியோர் இல்லத்தின் பாதி வேலைகளை குணவதியம்மாளே செய்யத் தொடங்கிவிட்டாலும்
அவருக்கிருந்த அகோரப் பசிதான் அவரைச் சின்னக் குழந்தை போல் சில சமயங்களில் அழவும் வைக்கிறது.
ஒரு
வருடமாகியும், மகனும் சரி மகளும் சரி தாய் எங்கு போனாள் என்று தேடவும் இல்லை. மகளுக்கு
அவள் கணவனால் பிரச்சனை என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறாள்.
கதையின்
முடிவில் ஒரு சின்ன ட்விஸ்ட். இல்லத்துக்கு ஒரு கார் வருவதைப் பார்த்துக்
கொண்டே தட்டோடு வரிசையில் நிற்கும் முதியவர்கள். அதில் வரும் நபர்/கள் அன்னையின் நினைவாக அன்னதானம் வழங்க வருகிறார்கள்.
"செத்தவங்களுக்கு
அவங்களோட நினைவு நாள்ல காக்காவுக்குச் சோறு வைப்பாங்க. ஆனா காக்காவுக்குப் பதிலா செத்தவங்களுக்கே
போடுறதை இன்னிக்குதான்பா பார்க்கிறேன்" என்று குணவதியம்மாள் சொல்வது கலியமூர்த்திக்குப்
புரியவில்லை.
ஆனால்
உங்களுக்குக் கண்டிப்பாகப் புரிந்துவிடும் அவர் என்ன சொல்கிறார்? யார் அந்த இல்லத்துக்கு அன்னதானம் செய்ய வருகிறார்கள் என்பது.
மிக
யதார்த்தமான உரையாடல்களால், விவரிப்புகளால் அழகாகக் கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார்
ஆசிரியர்.
ஆசிரியர்
ஆங்கரை பைரவி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுகள்!
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து...
பானுமதி.
ந
ஆசிரியர்
பானுமதி ந அவர்களின் எழுத்தை, குவிகம். சொல்வனம் போன்றவற்றில் வாசித்திருக்கிறேன்.
அழகான எழுத்திற்குச் சொந்தக்காரர். இவரும் பல பரிசுகளை வென்றவர். குடும்பமே எழுத்தாளர்கள்
குடும்பம். பின்புலத்தைப் பாருங்கள்! தாய் வழிப் பாட்டனார் திரு ந சுப்ரமண்யன் அவர்கள்
கவிதைகள், கட்டுரைகள், சுகநூல் என்ற பாடப்புத்தகம் ஆகியவற்றை எழுதியுள்ளார். பாரதியாரால்,
'ப்ரும்மராயர்' என்று பட்டம் கொடுத்துச் சிறப்பிக்கப்பட்டவர்.
கதை
- கண்ணனின் மனைவியான ஜெயஸ்ரீக்கான பித்ரு காரிய மந்திரத்தில் தொடங்குகிறது கதை. மந்திரத்திற்கு
இடையிடையே, அந்த மந்திரத்திற்கு ஏற்ப, காரியம் செய்யும் கண்ணனின் உள் மனம் பேசுகிறது.
ஜெயஸ்ரீயை தான் விரும்பியது, திருமணம் நடந்த விதம், திருமணம் நடந்த அன்று மாலை வரவேற்பின்
போது யாரும் எதிர்பாராமல் ஜெயஸ்ரீ கொடுக்கும் அதிர்ச்சி, அடுத்த இரு நாட்களில் அவள்
தற்கொலை செய்து கொள்வது என்பதைக் கண்ணன் நினைத்துப் பார்க்கிறான் ஒவ்வொரு மந்திரத்தின்
இடையிலும். கண்ணன் ஜெயஸ்ரீயை மனைவியாக நினைத்து நினைத்து ஏங்குகிறான், திதியும் கொடுத்து
வருகிறான்.
கதையில்
சப்தபதியின் விளக்கங்களும் வருகின்றன.
வித்தியாசமான கருவைக் கொண்ட கதை. ஜெயஸ்ரீயின் காதலன் அவளைக் கைவிடுகிறான். அவள் பெற்றோர் பார்க்கும் பையனான கண்ணனைத் திருமணம் செய்ய வேண்டிய சூழல். ஜெயஸ்ரீ அப்போதும் கூடத் தன் காதலனிடம் முகூர்த்த நேரத்தில் வந்து தன்னைக் கூட்டிக் கொண்டு போகுமாறு கெஞ்சுகிறாள். அவனுக்குத் தன் சொத்தை விட்டுவிட்டு, தன் பெற்றோரை எதிர்த்து அப்படி வருவதில் விருப்பமில்லை என்று கை கழுவுகிறான். ஜெயஸ்ரீ அவனையும், தன் பெற்றோரையும் பழி வாங்கும் எண்ணத்தில் கண்ணனுடன் திருமணம் ஆனதும் மாலையில் சபையோர் முன் தனக்கு இத்திருமணத்தில் விருப்பமில்லை என்று சொல்வது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. தொடரும் வாக்குவாத உரையாடல்கள்....
ஆசிரியரின் எழுத்து நடை வசீகரம்!
"காலையில் மணம், மாலையில் மணமுறிவு என்பது எந்த சப்தபதியும் சொல்லாதது"
கண்ணனின் மனதில் ஓடும் வரிகளாக வருபவை "அடிப்பாவி, ஒரு காதலன் உனக்கு முன்னாடியே உண்டா? அதை கூட்டம் போட்டுச் சொல்லணுமா? அப்ப நா ஒப்புக்கு மாப்பிள்ளையா?"
"இது என்ன அவலம்? அவன்ட்ட கொஞ்சிக் கெஞ்சிட்டு என்னக் கல்யாணம் ஏன் பண்ணிக்கணும்?"
"அப்ப அவன் விட்டுக் கொடுத்து நீ எனக்கூ மனைவியா வந்திருக்க இது என்ன? கன்யாதானமா? காதலிதானமா?"
ரசித்த வரி.
ஜெயஸ்ரீயின் கேள்வி, "உனக்குன்னு ஆசாபாசம் கூடாது, நாங்க சொல்றபடி நடன்னு சொல்றவா என்னவிட
மேம்பட்டவாளா? நிச்சயமா இல்லை, அப்போ, ஒரு சுயநல கூட்டத்லேந்து இன்னொரு சுயமில்லா
வாழ்க்கைக்கு நா ஏன் போகணும்?"
யோசிக்க வைத்த வரிகள்.
கதையை
வாசிப்போருக்கு இப்படி எல்லாம் நடக்குமா வழக்கத்திற்கு மாறான Bizarre கதையோ என்று தோன்றக்கூடும்,
ஜெயஸ்ரீ செய்வது Weird Behaviour என்று தோன்றக் கூடும். இப்படி எல்லாம் ஒரு பெண் செய்வாளா?
இன்னும் பல கேள்விகள் எழலாம். ஒரு சிலரால் இக்தையை ஏற்க முடியாமல் போகலாம். ஆனால்,
கதையைக் கதையாகப் பார்க்க வேண்டும் என்பதோடு, என் பதில் - இப்படியும் யதார்த்தத்தில்
நடக்கிறது என்பதுதான். இதை விட மோசமாக நடந்த
நிகழ்வுகளும் உண்டு.
அப்பெண்ணின்
கேள்விகள், உரையாடல்கள் என்று ஆசிரியர் எழுதியிருப்பது சில நச். ஆசிரியர் ஜெயஸ்ரீ செய்ததை சரி என்றோ தவறு என்றோ சொல்லாமல் அழகாகக் கதையை நகர்த்தி வாசகர்களின் எண்ணங்களுக்கு விட்டது பிடித்திருந்தது. அழகான நடை, கதையின் முடிவில் கடைசி வரி, எழுத்தின் வசீகரம் எல்லாம் கவர்கின்றன!
ஆசிரியர்
பானுமதி ந. அவர்களுக்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்!
எங்கிருந்தோ வந்தான்
எம்.
ஹாரி கிருஷ்ணா
வயது
20தே ஆன ஹாரி கிருஷ்ணா, என் ஊரான நாரோயிலைச் சேர்ந்தவர் என்பதை மகிழ்ச்சியாகச் சொல்லிக்
கொள்கிறேன். இப்போது சென்னை வாசம். இவரது தாய் திருமதி இரத்னமாலாவும் எழுத்தாளர், இப்போட்டியிலும்
பரிசு பெற்றிருக்கிறார். ஹாரி கிருஷ்ணாவைப் பற்றிச் சொல்ல இப்பக்கம் போதாது. ஏகப்பட்ட
விருதுகள் வாங்கியிருக்கிறார். படைப்புகளும் வெளியிட்டிருக்கிறார் இந்தச் சிறு வயதிலேயே!
கதை
- சென்னைக்குத் தன்மகளைப் பார்க்க வரும் 70 வயதான தந்தை சதாசிவம் பெண்ணிற்குக் கொடுக்கவென்று
பலகாரப் பைகளுடன் கஷ்டப்பட்டு பேருந்திலிருந்து இறங்குகிறார். பேருந்திலிருந்து இறங்கி
ஆட்டோ ஒன்றில் ஏறுகிறார். ஆட்டோ ஓட்டுநர் மதன் அவரிடம் பரிவுடன் நடந்துகொள்கிறார்.
இருவருக்குமான உரையாடலில் கதை நகர்கிறது.
மகள்
வீட்டிற்கு வந்தவரை அவரது மகள், "போன் பண்ணிட்டு வந்திருக்கலாம்ல பா. நாங்கள் வெளிய போகக் கிளம்பியிருக்கோம்" என்று சொல்கிறாள்.
அப்பாவின் முகம் சுருங்குகிறது. மதன் அதைக் கவனித்துவிடுகிறான்.
இது
யதார்த்தமான உரையாடல்தான். 'சொல்லிவிட்டு வந்திருந்தால், மகள் அப்பாவை மறுநாள் வரச்
சொல்லியிருப்பாள் அல்லது அப்பாவிற்காகச் சாப்பிட எல்லாம் ஏற்பாடுகள் செய்திருப்பாளே'
இல்லை என்றால், அப்பாவை "வீட்டில் இருங்க, நாங்க வெளிய போய் வந்துவிடுகிறோம்"
என்று சாப்பாடு கொடுத்து கவனித்திருக்கலாமே என்று எண்ணத் தோன்றுகிறது. அடுத்த வரிகளில் தெரிந்துவிடுகிறது. கார் வெளியில்
செல்கிறது. சதாசிவமும் வெளியில் வருகிறார்.
இந்த
இடத்தில் அப்பா பெண்ணின் உறவு அல்லது பெண்ணின் குணத்தைக் கொஞ்சம் ஒரு சில வரிகளில்
கோடிட்டுக் காட்டியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.
காரணம்....
அப்பா
ஏற்கனவே ஆட்டோவில் வரும் போது மதனிடம் சொல்கிறார் பெண் மிகவும் பிஸி அவளுக்கு நேரமே இல்ல என்று. அப்படிச் சொல்பவர் அவளிடம்
சொல்லாமல் வருகிறாரே என்று தோன்றுகிறது.
அவர்
பேருந்தில் ஏறிய பிறகு மகள் கேட்கிறாள், "அப்பா அவசரத்துல அப்படியே அனுப்பிவிட்டுட்டேன்.
எங்க பஸ் ஏறினீங்க? சாப்டீங்களா? அவருக்கு முக்கியமான ஃபங்ஷன் அதனாலதான் வெளிய அவசரத்துல...இப்ப
எங்க வந்திருக்கீங்க?"
இதுவும்
யதார்த்தமான உரையாடல். அதற்கு அப்பாவின் மனதிலோடும் வரிகள்
"சம்பிரதாயமான
வார்த்தைகளுக்கு மட்டுமே பாத்தியப்பட்ட வயதிற்குள் நான் எப்போதோ வந்துவிட்டேன் அம்மா!"
என்று அவர் மனதில் நினைப்பதை வாசிக்கும் போது,
எனவே மேலே
சொன்னது அதாவது பெண்ணின் கதாபத்திரத்தைக் கொஞ்சம் ஒரு சில வரிகளில் சொல்லியிருக்கலாமோ என்று மனதில் வந்தது.
கதை
இங்கு முடியவில்லை. அதன் பின் சின்ன ட்விஸ்ட்.
சதாசிவத்தைத்
தன் தந்தையாகவே நினைக்கும் ஆட்டோ ஓட்டுநர் மதன், வழக்கமாகக் குடித்துவிட்டு வீடு செல்பவன்,
குடிக்காமல் வீட்டிற்குச் செல்கிறான். இனி குடிப்பதில்லை என்ற முடிவும் செய்கிறான்.
சதாசிவம் சொல்லும் வார்த்தைகள்தான் காரணம் என்று தன் மனைவியிடம் சொல்கிறான்.
"எங்கிருந்தோ
வந்தாரு. கொஞ்ச நேரம் தான்....ஆனா ரொம்ப நாள் கழிச்சு சந்தோசமா இருந்தமாதிரி இருந்தது.
என் அப்பாவை முதல் தடவையா இன்னைக்கு பாத்தேன்!"
கடைசி
பாராக்கள் மிக அருமை. மதனின் மனைவிக்குச் சந்தோஷம் கணவன் மதன் குடியை விட்டதும், இத்தனை வருடங்கள் குழந்தை பிறக்காமல் இப்போது அவளது டெஸ்ட் பாசிட்டிவாக வந்திருப்பதும்...தன் மாமானாரின் படத்தைப் பார்த்து மனதில் சந்தோஷமடைகிறாள்
கதைக்கரு
மிக நல்ல அழகான, உயர்வான கரு. மனிதர்கள் மனிதர்களாவதற்கு ஒரு சில மணித்துளிகள் போதும்
என்று சொல்லும் அருமையான கதை.
கதையை
எழுதியவர் 20 வயதுக்காரரா என்று ஆச்சரியப்படவைக்கும் அளவு நன்றாகப் பக்குவப்பட்ட எழுத்தில்
எழுதியிருக்கிறார் ஹாரி கிருஷ்ணா. வாழ்த்துகள்! பாராட்டுகள்! மேன்மேலும் நிறைய படைப்புகள்
படைத்திடவும் வாழ்த்துகள்!
இலையுதிர் காலம்
லோகு
பிரசாந்த்
28
வயதே ஆன ஆசிரியருக்கு இதுவே முதல் சிறுகதையாம். கண்டிப்பாக முதல் சிறுகதை என்று சொல்ல
முடியாத அளவிற்கு எழுத்து நடை, எழுதியவிதம் மிக நன்றாக இருக்கிறது.
கதை
- உண்மையான நிகழ்வை அடிப்படையாகக் கொண்ட கதை என்று ஆசிரியரே கதையின் கடைசியில் குறிப்பிட்டுள்ளார்.
இதுவும் நிகழ்காலக் கதைதான்.
அம்மா,
மகன் சதீஷ், மருமகள் நித்யா, அம்மா ஜானகி, அவரது மாமியார் விசாலம், அதாவது சதீஷின் பாட்டி இத்தனை பேரும்
ஒரே வீட்டில். நித்யாவிற்கு மாமியார் ஓகே. மாமியாரின் மாமியாரைப் பார்த்துக்கொள்வது
முடியாது, அவரை ஒரு இல்லத்தில் சேர்த்துவிடவேண்டும் என்று தன் கணவன் சதீஷிடம் சொல்லி
அவன் அம்மாவிடம் சொல்லச் சொல்கிறாள்.
சதீஷ்
தயங்குகிறான் ஆனால் கடைசியில் தன் தாயிடம் சொல்லிவிடுகிறான், தன் மனைவிக்குப் பாட்டி கூட இருப்பதில் விருப்பமில்லை என்பதை. காரணம் கேட்கிறாள் தாய்.
தாய் ஒவ்வொன்றாய்க் கேட்கக் கேட்க சதீஷும் சொல்கிறான். இல்லத்திற்கு ஒவ்வொரு மாதமும்
தான் பணம் கட்டிவிடுவதாகவும் சொல்கிறான். சதீஷின் கல்லூரிப் படிப்புக்கான ஃபீஸ் கட்டமுடியாத
சூழலில் பாட்டி தன் நகைகளை விற்றுக் கட்டியதை எல்லாம் எடுத்துச் சொல்கிறாள் ஜானகி,
சதீஷின் அம்மா. ஆனால் சதீஷ் ஏற்கவில்லை.
அவன்
அம்மாவுக்கு அதில் இஷ்டமில்லை. தன்னைப் பெண் போன்று, பிரசவத்துக்குக் கூட தானே கவனித்துக்
கொண்ட மாமியாரின் மீது பாசம். யோசிக்கிறாள் சதீஷிற்கு வேலை கிடைக்கும் வரை நடத்தி வந்த
மெஸ்ஸை மீண்டும் தொடங்கிவிடலாம் என்று கல்லூரி அருகிலேயே அதே மெஸ் வீட்டில் தொடங்க
ஏற்பாடுகள் செய்துவிட்டுத் தன் மாமியாரையும் அழைத்துக் கொண்டு செல்கிறாள். சதீஷிற்கு
அதிர்ச்சியாக இருக்கிறது. பாட்டிக்காகப் பணமும் கட்டியாச்சு, இந்த வயதில் நீ உழைக்க
வேண்டுமா என்றெல்லாம் கேட்பவனுக்கு
ஜானகியின்
பதில் அசத்தல். அவன் பாட்டிக்காகக் கட்டியிருக்கும் பணம் பின்னால் பயன்படும் என்று அதாவது தனக்கும் இதே கதிதான் என்று சொல்லும் வசனம் அருமை. மருமகள் அதிர்ச்சியில் பேசும் வசனம் "அடிப் பாவி" என்று நம்மைச் சொல்லவும் வைக்கும். "திடீர்னு இப்படிக் கிளம்பிட்டா எப்படி? நான் வேலைக்கு வேற ஆள் கூட ஏற்பாடு செய்யலை"
யதார்த்தமான
கதை, உரையாடல்கள் மூலம் கதையைத் தூக்கி நிறுத்துகிறார். எழுத்து உங்கள் வசப்படுகிறது.
இன்னும் நிறைய படைப்புகள் படைத்திடவும். பரிசுகள் பெறவும் வாழ்த்துகள்!
பரிசு
பெற்ற லோகு பிரசாந்திற்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!
என்னுடைய கதைக்கு வந்திருந்த எழுத்தாளர் பானுமதி கண்ணன் அவர்களின் விமர்சனத்தையும், திரு அர்ஜுனன் அவர்களின் கருத்தையும் முந்தைய பதிவில் பகிர்ந்திருந்தேன்.
எனது மெயிலில் வந்திருந்த மற்றும் ஒரு கருத்து இது திரு அனந்த் ரவி அவர்கள் கொடுத்திருந்த கருத்து.
அன்புள்ள எழுத்தாளருக்கு,
வணக்கம். நான் அனந்த் ரவி, சென்னை. என் கதை இரண்டாம் பரிசு
பெற்றது.
உங்களுடைய "குப்பை" படித்தேன். ஆச்சரியமான எழுத்து நடை. கதைக்கரு பல இடங்களிலும் பல வடிவங்களில் படித்ததுதான். இருந்தாலும் நீங்கள் எழுதின விதம் பிரமாதம். படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியவில்லை. கதையை நகர்த்திக் கொண்டு போன விதம் அபாரம். அருமை. அருமை.
மேலும் மேலும் நிறைய வெற்றிகளைப் பெற வாழ்த்துகள்.
அனந்த் ரவி (9444018042)
மிக்க நன்றி அனந்த் ரவி சார். ஊக்கமிகு கருத்திற்கும் பாராட்டிற்கும்.
------கீதா

விமர்சனங்கள் மிகவும் சுருக்கமாக இருப்பதால் கதையையும், அதன் சிறப்பையும் முழுமையாக புரிந்து கொள்ள இயலவில்லை. இன்னும் சற்று விரிவாக எழுதியிருக்கலாம்.
பதிலளிநீக்குஉங்கள் பெயரைச் சொல்லியிருக்கலாமே. கருத்தின் கீழ்.
நீக்குநன்றி, பெயரில்லா, புத்தகமாக வெளி வந்துள்ளதால், கதையைச் சொல்லி எழுதத் தயக்கம். இனி உங்கள் கருத்தை மனதில் கொள்கிறேன்.
மிக்க நன்றி.
கீதா
// இன்னும் சற்று விரிவாக எழுதியிருக்கலாம். //
நீக்குஸ்பாய்லர் போல ஆகிவிடும்! கதையின் மீதான வாசகனின் பார்வையைப் படிப்பவர்களுக்கு அந்தப் புத்தகம் வாங்கவும், அந்தக் கதையைப் படிக்கவும் தோன்ற வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. மேலும் அப்படி விளக்கமாக எழுதிக் கொண்டு போனால் ஏழு பதிவு போதாது! படிப்பவர்களுக்கும் பொறுமை போய்விடும்! இது கச்சிதமாக இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். ஒவ்வொருவருக்கும் பார்வைகள் மாறுபடும்.
படித்த கதைகள் பற்றிய உங்கள் எண்ணங்களை மிகவும் அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள் கீதா. சென்ற வருடமும் இதைச் செய்திருந்தீர்கள். இந்த வருடம் மெருகு கூடி இருக்கிறது. நாளுக்கு நாள் வளர்ச்சி. கீப் இட் அப்!
நீக்குஒரு கதையை நான் படிக்கும்போது எனக்கு தோன்றும் எண்ணங்களுக்கும் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் தோன்றும் எண்ணங்களுக்கும் அவரவர் பார்வை, அனுபவம் காரணமாக வித்தியாசப்படும்.
பாராட்ட வேண்டிய இடத்தில பாராட்டி, நெருடும் இடத்தில் மென்மையாக சுட்டிக் காட்டியும் இருக்கிறீர்கள். பாராட்டுகள்.
நீக்குபெயரில்லா என்று வந்தது பானுக்கா உங்க கருத்து என்று தெரிந்துகொண்டேன். அக்கா இப்ப உரையாடல்கள் சேர்த்திருக்கிறேன். அப்புறமா மெதுவா பார்த்துச் சொல்லுங்க...
நீக்குகீதா
கதையையும் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன், பானுக்கா.
நீக்குகீதா
படித்த கதைகள் பற்றிய உங்கள் எண்ணங்களை மிகவும் அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள் கீதா. சென்ற வருடமும் இதைச் செய்திருந்தீர்கள். இந்த வருடம் மெருகு கூடி இருக்கிறது. நாளுக்கு நாள் வளர்ச்சி. கீப் இட் அப்!//
பதிலளிநீக்குநன்றி நன்றி, ஸ்ரீராம்.
நிச்சயமாக ஒவ்வொருவர் பார்வையும் வேறுபடும். அதைக் கலந்துரையாடும் போது நமக்குப் பல விஷயங்கள் புரியவரும். அந்தக் கோணத்திலும் சிந்திக்கத் தோன்றும்
நன்றி ஸ்ரீராம்
கீதா
பாராட்ட வேண்டிய இடத்தில பாராட்டி, நெருடும் இடத்தில் மென்மையாக சுட்டிக் காட்டியும் இருக்கிறீர்கள். பாராட்டுகள். //
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்
கீதா
கதை விமர்சனம் மிக அருமை கீதா.
பதிலளிநீக்குமூன்றாவது கதை இலையுதிர் காலம் படித்த மாதிரி இருக்கே! எங்கள் ப்ளாக்கில் இடம் பெற்றதோ கதை.
ஹாரி கிருஷ்ணா கதையும் நன்றாக இருக்கிறது.
//மனிதர்கள் மனிதர்களாவதற்கு ஒரு சில மணித்துளிகள் போதும் என்று சொல்லும் அருமையான கதை.//
ஆமாம் , மனிதர்கள் மனிதர்களாக மாற ஒரு மணித்துளிகள் போதும் .
குண்வதி அம்மாள் எழுதிய கதையும் நன்றாக இருக்கிறது.
மூவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
கதை விமர்சனம் மிக அருமை கீதா.//
நீக்குமிக்க நன்றி கோமதிக்கா.
இலையுதிர் காலம் எங்கள் ப்ளாகில் வந்த கதை அல்ல, கோமதிக்கா. இது அவரது முதல் கதையாம் போட்டிக்கு அனுப்பிய கதை.
மிக்க நன்றி கோமதிக்கா ஆமாம் மூன்றுமே நல்ல கதைகள்.
கீதா
கதைகள் விமர்சனம் நன்றாக இருக்கிறது கீதா.
பதிலளிநீக்குநன்றாக படிக்க தூண்டும் விதமாக விமர்சனம் செய்து இருக்கிறீர்கள்.
புத்தகத்தில் இடம் பெற்ற அனைத்து கதைகள் எழுதியவர்களுக்கும் பாராட்டுகளும், வாழ்த்துக்களும்.
நன்றி கோமதிக்கா.
நீக்குகீதா
ஆங்கரை பைரவி அவர்கள் எழுதிய குணவதி அம்மாள் கதை நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்கு//"செத்தவங்களுக்கு அவங்களோட நினைவு நாள்ல காக்காவுக்குச் சோறு வைப்பாங்க. ஆனா காக்காவுக்குப் பதிலா செத்தவங்களுக்கே போடுறதை இன்னிக்குதான்பா பார்க்கிறேன்"//
புரிந்து விட்டது யாரை சொல்கிறார், யார் போட வந்து இருக்கிறார்கள் என்று.
ஆமாம், அதேதான் கோமதிக்கா
நீக்குஉணர்வுபூர்வமான கதை.
மிக்க நன்றி கோமதிக்கா.
கீதா
"அம்மி மிதித்து அருந்ததி பார்த்து" கதை வித்தியாசமான கருவைக் கொண்ட கதைதான், ஆனால் காதலனையும், பெற்றோரையும் பழிவாங்க நினைத்தது சரிதான், ஆனால் நல்ல மனம் கொண்ட கண்ணனை மணக்கும் முன் சொல்லி இருக்கலாம் , திருமணம் ஆன பின் மாலையில் சொல்லி இருக்க வேண்டாம், தற்கொலையும் செய்து இருக்க வேண்டாம்.
பதிலளிநீக்குஆமாம் கோமதிக்கா...நீங்கள் சொல்லியிருக்கும் அக்கேள்விகளும் கதையில் இடம் பெறுகின்றன. ஆசிரியர் எதையும் சரி என்றோ தவறு என்றோ சொல்லாமல் இப்படியும் என்பதான ரீதியில் கதையை கதையாக எழுதியிருக்கிறார். எழுதிய விதமும் நன்று.
நீக்குஅக்கா, நாம் திஜா வின் அம்மா வந்தாள் கதை மற்றும் மோக முள் கதை எல்லாம் வாசித்திருக்கிறோமே. அப்போதைய காலகட்டத்திற்கு அக்கதைகள் வித்தியாசமானவைதானே இல்லையா?
அப்படித்தான் இப்போதைய திருமணங்கள் பல ரொம்பவே அதிர்ச்சிதரும் வகையில் அமைகின்றன.
முகூர்த்தம் நெருங்கி பையன் தாலியை எடுத்துக் கட்டும் முன் ஒரு பெண் தான் விரும்பியவவோடு எல்லோர் முன்னிலும் சென்ற நிகழ்வும் உண்டு....மற்றொன்றில் தாலியைக் கட்டியே விட்டான், பெண் தன்னை அழைத்துச் சென்ற பையனோடு தைரியமாகச் சென்ற நிகழ்வும் உண்டு.
இதில் நிறைய எனக்குச் சொல்ல உண்டு. ஆனால் கருத்து பெரிய அளவில் பதிவு போல ஆகிவிடுமே என்று தவிர்க்கிறேன்.
நன்றி கோமதிக்கா.
கீதா
//மனிதர்கள் மனிதர்களாவதற்கு ஒரு சில மணித்துளிகள் போதும் என்று சொல்லும் அருமையான கதை.//
பதிலளிநீக்குஆமாம், சில மணித்துளிகள் போதும்
எங்கிருந்தோ வந்தான் கதை நீங்கள் சொல்வது போல அருமையான கதைதான்.
இலையுதிர் காலம் கதை நன்றாக இருக்கிறது. முடிவு இப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன் அப்படியே இருந்தது.
//திடீர்னு இப்படிக் கிளம்பிட்டா எப்படி? நான் வேலைக்கு வேற ஆள் கூட ஏற்பாடு செய்யலை"//
பாசம் இல்லாமல் வேலைக்கு உதவும் மாமியார் போய் விட்டால் என்ன செய்வது என்ற ஆங்காரம் மருமகளின் வார்த்தைகளில்.
அன்பில்லாதவருக்கு உழைப்பதை விட தன் மேல் பாசமும் , பரிவும் உள்ள மாமியாருக்கு உழைக்க வெளியேறியது அருமை.
லோகு பிரசாந்த் அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
ஆமாம் அக்கா அதே தான்.
நீக்குஇலையுதிர்காலம் அதான் பாட்டியை இல்லத்தில் சேர்ப்பது குறித்த கதை...அது உண்மை நிகழ்வின் அடிப்படையில் எழுதிய கதை.
நாம் பல செய்திகளைப் பார்க்கிறோமே.
இப்படியும் நடக்குமா என்று நாம் ஆச்சரியப்படலாம் ஆனால் இப்படியும் நடக்கின்றன என்பதுதான் உண்மை.
ஏனென்றால் நாம் அப்படியான சமூகக் கோட்பாடுகளில் வளர்ந்ததால்.
நன்றி கோமதிக்கா
கீதா
மிக சுவாரஸ்யமான அருமையான கருத்துக் கட்டுரை. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். நன்றி
பதிலளிநீக்குமிக்க நன்றி பாலசாண்டில்யன் சார் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குகீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபோட்டிக்கு வந்திருந்த கதைகளை திறம்பட அலசிய தங்களது கதை விமர்சனங்கள் அருமை. ஒவ்வொன்றும் அருமையான கருவுடன் அமைந்த கதைகள். கதாரியர்களின் அருமையான நடை செல்லும் விதத்தில் கதையின் முடிவுகளை நன்றாகவே யூகிக்க முடிந்தது. அத்தனை கதாசிரியர்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள். நீங்கள் கதைகள் ஒவ்வொன்றையும் விமர்சித்த விதமும் மிக அருமை. உங்களின் தங்கு தடங்கல் இல்லாத வார்த்தைகளின் கோர்வை வியப்பூட்டுகிறது. உங்களுககும் , போட்டியில் பங்கேற்று வெற்றி வாகை சூடிய அத்தனை எழுத்தாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளை மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். திறமையுடன் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் என் பணிவான வணக்கங்களும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
போட்டிக்கு வந்திருந்த கதைகளை திறம்பட அலசிய தங்களது கதை விமர்சனங்கள் அருமை. ஒவ்வொன்றும் அருமையான கருவுடன் அமைந்த கதைகள். கதாசிரியர்களின் அருமையான நடை செல்லும் விதத்தில் கதையின் முடிவுகளை நன்றாகவே யூகிக்க முடிந்தது. அத்தனை கதாசிரியர்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள்//
நீக்குநன்றி கமலாக்கா.
//நீங்கள் கதைகள் ஒவ்வொன்றையும் விமர்சித்த விதமும் மிக அருமை. உங்களின் தங்கு தடங்கல் இல்லாத வார்த்தைகளின் கோர்வை வியப்பூட்டுகிறது. //
கமலாக்கா!!! நீங்களா?!!!!!! நீங்க மட்டும் என்னவாம்? உங்களுக்கும் தங்கு தடையில்லாமல் வார்த்தைகள் அதுவும் பக்கா தமிழ் வார்த்தைகள் வந்து கொட்டுமே!!!
உங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி கமலாக்கா
கீதா
வணக்கம் சகோதரி
நீக்கு/நீங்க மட்டும் என்னவாம்? உங்களுக்கும் தங்கு தடையில்லாமல் வார்த்தைகள் அதுவும் பக்கா தமிழ் வார்த்தைகள் வந்து கொட்டுமே!!!/
நன்றி சகோதரி. உங்கள் கருத்து எனக்கு மனதினுள் ஊக்கம் தருகிறது. ஆனாலும் இந்தப் பாராட்டிற்கு நான் தகுதியுடையவள் இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
ஆனாலும் இந்தப் பாராட்டிற்கு நான் தகுதியுடையவள் இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். //
நீக்குஹோ! கமலாக்கா....எங்கள் பாராட்டுகளை ஏத்துக்கோங்க!
நானும் இப்படியான எண்ணங்கள் உடையவள்தான்....இருந்ததுதான். ஆனால் அது நல்லதல்ல. நலல்தல்ல என்று தெரிந்தும் ...அது நம் எழுத்திற்குத் தடையாகும், நம் ஆளுமைத்திறனை பாதிக்கும்... என்று தெரிந்தும் இருந்ததுதான்....ஆனால் அது கூடாது அக்கா. நானும் கற்று வருகிறேன் இப்படியான எண்ணங்கள் வேண்டாம் என்று. பெருமையும் வேண்டாம் நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளவும் வேண்டாம் என்று...
எனவே இப்படி நினைப்பதை விடுங்கள் கமலாக்கா.
கீதா
படித்த கதைகளைப் பற்றிய உங்கள் சுருக்கம் நன்று
பதிலளிநீக்குஒரு கதை அவரவர் பார்வையில் வித்தியாசமான தாக்கங்களை உண்டாக்கும். உங்கள் பார்வையும் ஆவலைத் தூண்டும்படி இருக்கிறது
ஆமாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தாக்கங்களைக் கொடுக்கும்
நீக்குபாருங்க ட்யூட் படம் உங்களுக்கு ஓகேன்னு தோணுது....சிலருக்குப் பலருக்குப் பிடிக்கலை. அப்படித்தான். நான் அந்தப் படம் பார்க்கலை சான்ஸ் கிடைக்கலை.
நன்றி நெல்லை
கீதா
பொதுவா விமர்சனங்களின் குறை கதையை முழுமையாகச் சொல்லமுடியாதது. சொன்னால் படிக்கும் பார்க்கும் ஆர்வம் குறையும்
பதிலளிநீக்குநல்லா விமர்சித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்
ஆமாம் கதையை முழுவதும் சொல்லிட்டா அப்புறம் வாசிக்கத் தோன்றாது. உங்க கருத்தை டிட்டோ செய்கிறேன் நெல்லை.
நீக்குநன்றி நெல்லை பாராட்டிற்கு.
கீதா
வணக்கம்
பதிலளிநீக்குஇதில் முதல் கதை விமர்சனம் "குணவதியம்மாள்" மிகவும் சிறப்பு மனதை கனக்க வைத்தது.
அன்னதானம் வழங்கியவர்கள் யாரென்று புரிந்தது.
கதையை தொடர்ந்து வருகிறேன்....
முதல் கதை மிகவும் மனதை கனக்க வைக்கும் கில்லர்ஜி. அது போல இன்னொரு கதையும் இருக்கு மனதை ரொம்ப உலுக்கி எடுக்கும்....
நீக்குஅன்னதானம் வழங்கியவர்கள் யாரென்று புரிந்தது.//
ஆமாம் புரிந்துவிடும்...
வாங்க கில்லர்ஜி
மிக்க நன்றி
கீதா