செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

நெலப்பட்டு பறவைகள் சரணாலயம்-புலிகாட் ஏரி - 3

மதிய உணவு சாப்பிட்டுவிட்டுப் புறப்படுவோம் என்று சொல்லி முடித்திருந்தேன் சென்ற பதிவை. சாப்பிட்டாச்சு. சாப்பிட்டதும் அந்தத் தெருவில் கொஞ்சம் நடந்துவிட்டு அங்கேயே டீ, காஃபி என்று குடித்துவிட்டுக் கிளம்பினோம் 4.30 மணி அளவில்.

சூளூர்பேட்டை சந்திப்பிலிருந்து நேர் சாலையில் சென்றால் அந்தச் சாலை முடிவதே ஷார் அதாவது ஸ்ரீஹரிகோட்டாவுக்குச் சென்றுவிடலாம். சதிஷ் தவான் ஸ்பேஸ் சென்டரில் தான் போய் முட்டும். 21 கிமீ தூரம்.

சூளூர்ப்பேட்டையிலிருந்து ஷார் சாலையில் கொஞ்சம் தூரம் சென்றதுமே புலிகட் ஏரி தான். முதலில் வலது பக்கம் நீர்ப்பரப்பு. பின்னர் இரு பக்கமும் நீர்ப்பரப்புதான். இரு புறமும் பறவைகளைக் காணலாம் என்றாலும் வலப்புறம் தான் அதிகம் பறவைகள் இருந்தன.


இதுதான் ஷார் செல்லும் சாலை. 

ஏரி தொடங்கும் இடத்தில் சில பறவைகளைக் கண்டதும் உடனே வண்டியை நிறுத்தி கரையில் இறங்கிச் சென்றோம். நான் முடிந்த அளவு படங்களை எடுத்துக் கொண்டுவிட்டேன். ஏரியில் நீர் கரையை விட்டுக் கொஞ்சம் தள்ளித்தான் இருந்தது. சமீபத்தில்தான் தண்ணீர் குறைந்திருப்பது தெரிந்தது. கரையில் காலை கவனமாக வைக்க வேண்டியதாக இருந்தது. இல்லை என்றால் கால்கள் புதைந்துவிடும். அதுவும் நான் ஷூ அணிந்திருந்ததால் ரொம்பவே கவனமாகச் சென்றேன்.

இதோ இந்த இடத்தில் எடுத்த புகைப்படங்கள்.


ஷார் வரை செல்லும் இந்த ஏரி அப்படியே கடலுடன் ஐக்கியமாகிவிடும்.



 சுற்றிலும் உள்ள நீர்ப்பரப்பைக் கிளிக்கினேன். தூரத்தில் பறவைகள். ஜூம் செய்து முடிந்த வரை எடுத்தேன். என் கேமராவின் சக்தி அவ்வளவுதான்.


தூரத்தில் பறவைகள் இருந்தன ஜூம் செய்தாலும் என் கேமராவின் சக்தி என்று முன்னாடி சொன்னதற்கு அத்தாட்சி பாருங்க அங்கிருந்த பறவைகள் பறக்குது…!!!!!!!






பறவைகளைக் கூட்டமாகக் கண்ட போது மனதில் அப்படி ஒரு ஆனந்தம். அதுவும் அவை அவ்வப்போது கூட்டமாகப் பறந்து கொண்டே இருந்ததைக் காணக் கண்கொள்ளாக் காட்சி. ஒரு கூட்டம் எழுந்து பறந்தால் ஏற்கனவே பறந்த கூட்டம் வந்து அமரும். அடுத்து ஒரு கூட்டம் எழும். அப்படிச் சிறகை விரித்து தண்ணீரைத் தேய்த்துக் கொண்டு தண்ணீர்த் துளிகள் தெளித்திடப் பறக்கும் அழகை என்னவென்று வர்ணிக்க! வார்த்தைகளே இல்லை.

மெய்மறந்து பார்த்துக் குதூகலித்தேன். ஒவ்வொரு முறை அவை பறக்கும் போதும் நான் துள்ளி துள்ளிக் குதித்து மகிழ்ந்தேன். வியப்புடம், இயற்கையை நினைத்து சிலிர்த்து இன்னும் என்ன வார்த்தைகள் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். காணக் கண் கோடி வேண்டும்! அதுவும் நிறைய வகை வகையான நாரைகள், நீர்க்காகங்கள், நீர்ப்பறவைகள். அருகே சென்று பார்க்க இயலவில்லை.

இதைப் படமெடுக்க ஆகச் சிறந்த கேமரா வேண்டும். என் கேமராவில் இவ்வளவுதான் முடிந்தது. வெங்கட்ஜி இன்னும் வெகு சிறப்பாக எடுத்திருந்திருப்பார் அவரது கேமராவில். 

ஒரு பக்கம் இருப்பவற்றை எடுத்துக் கொண்டிருக்கும் போது மற்றொரு பக்கம் இருப்பவை பறக்கத் தொடங்கும். ஹையோ அதை மிஸ் செய்துவிட்டோமே என்று அதைப் பார்த்துப் படம் எடுக்கத் தொடங்கும் போது வேறொரு புறம் இருப்பவை உயரே பறக்காமல் நீரின் மேற்பரப்பிலேயே பறக்கும். இப்படி எல்லாவற்றையும் கேமராவுக்குள் சிறைப்பிடிக்க அதுவும் என் கேமரா ஒவ்வொரு படத்தையும் சேமிக்க மிகுந்த நேரம் எடுக்கும். – நிக்கான் கேமரா. இடையில் தகராறு லென்ஸ் எரர் என்று. எப்படியோ முடிந்தவரை ஃபோட்டோ ஷூட் எடுத்துத் தள்ளிவிட்டேன்!! 

 


மீண்டும் ஷார் சாலையில் பயணம். அப்போது எங்கள் வண்டியின் முன்னால் சென்ற ஷேர்ட் ஆட்டோ. (சூளூர்ப்பேட்டையிலிருந்து ஷார் செல்ல ஷேர் ஆட்டோவில் 10ரூ தான். வட்லமுடியில் இருந்தப்பவும் அப்படித்தான் வட்லமுடிலருந்து தெனாலி டவுன் செல்ல ஷேர் ஆட்டோ 10ரூ தான்.)



இன்னும் நிறைய படங்கள் இருக்கின்றன. அடுத்த மூன்று நிமிடத்தில் இதே சாலையில் நாங்கள் அடுத்து இறங்கிய பகுதி மிக அழகான பகுதி. அந்த இடத்திலிருந்து இரு புறமும் நீர்ப்பரப்பு. அங்கிருந்து புறப்படும் போது எங்களில் நாங்கள் நால்வர் என்ன செய்தோம் என்பதையும் சொல்கிறேன் அடுத்த பதிவில். இன்னும் கொஞ்சம் அருகில் இருப்பது போன்ற பறவைகளின் படங்களும் ஒரு சில உண்டு. (ஜூம் செய்து எடுத்தவைதான்!)

--------கீதா



திங்கள், 18 பிப்ரவரி, 2019

நெலப்பட்டு பறவைகள் சரணாலயம்-புலிகாட் ஏரி - 2

நெலப்பட்டு பறவைகள் சரணாலயம் .(Spot billed pelicans) புள்ளியிட்ட அலகு கூழைக்கடாக்களுக்கு இனப்பெருக்கம் செய்ய கொண்டாட்டமான இடம். புலிக்கட் ஏரியில் கடல் நீர் உள்வாங்கி உப்பு நீர்க்காயலாக இருந்தாலும், சரணாலயத்திற்குள் இந்த ஏரியின் நன்னீர் சதுப்புநிலப் பகுதி பரவியிருக்கிறது. 4.5 சதுர கிலோமீட்டர் பரப்பிலமைந்துள்ளது இந்த நீர்ப்பரப்பு.  கருவேல மர இனத்தையொத்த மரங்கள் வளர்ந்துள்ளமையால்  இந்த பெலிக்கன்ஸ்கு கொண்டாட்டம்.

இவ்வகை பெலிக்கன்ஸ் தவிர  மஞ்சள் மூக்கு நாரை, சாம்பல் நாரை, கரண்டிவாயன், பாம்புத் தாரா, சின்ன நீர்க்காகம், கொண்டை நீர்க்காகம், புள்ளியிட்ட அலகு கூழைக்கடா, கருந்தலை கொக்குகள், அன்றில், சிறு வெண் கொக்கு, வெண் கொக்கு, பெருங்கொக்கு, இராக்கொக்கு, குளத்துக் கொக்கு மற்றும் நத்தை குத்தி நாரை. நூற்றுக்கணக்கான நீலச்சிறகி, ஊசிவால் வாத்து, ஆண்டி வாத்து போன்றவைகளும் வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் எங்கள் கண்ணில் ஒரு சில வாத்துகளும், சின்னநீர்க்காகம், கொண்டை நீர்க்காகம் என்று சொல்லப்படுபவையும்  (cormorant) மட்டுமே கண்ணில் பட்டன. இல்லை இல்லை பைனாகுலரில் பட்டன! தூரத்தில் இருந்ததால் என் கேமராவில் ஜூம் செய்தும் எடுக்க முடியவில்லை.

சென்ற பதிவில் வியூ பாயின்ட் செல்லும்வழி படம் போட்டு முடித்திருந்தேன்.அந்த வியூபாயின்ட் பகுதிக்குச் செல்லும் முன் மூன்று பாதைகள் இருந்தன . ஒவ்வொன்றும் ஒவ்வொரு பகுதிக்குச் செல்லும் பாதைகள். இதோ படத்தில் உள்ளது போல். ஒவ்வொரு பாதை தொடங்கும் போதும் அந்தப் பாதையில் என்ன பார்க்கலாம் என்ற தகவல் பலகைகள் இருந்தன. எந்தப் பகுதியில் செல்வது என்று இங்கி பிங்கி பாங்கி போட்டு கடைசியில் இதோ ஆர்ச் தெரிகிறதா ஒரு படத்தில் அவ்வழி சென்றோம். ஏற்கனவே சொல்லியிருந்தபடி மிகப் பெரிய சரணாலயம். பறவைகள் வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்தான். 


அந்தப் பாதையில் கொஞ்சம் நடந்ததும் அதோ ஆர்க் இருக்கின்றது இல்லையா அதற்கு சற்று முன்பு இடப்புறம் இந்தத் தகவல் பலகை இருந்தது. கீதாக்காவின் சுப்புக்குட்டிகள் இங்கு இருக்கின்றன என்று. காட்டிற்குள் இருக்குமாக இருக்கும்.

அங்கு நடுவில் இப்படி ஒரு சின்ன குளம் இடப்புறம் இருந்தது. இதில் ஆமை போன்றவை விடுவதற்காகவோ இல்லை பறவைகளுக்காகவோ இருக்கும். ஏமாற்றமாக இருந்தது. பறவைகள் வந்திருந்தால் இங்கெல்லாம் இருந்திருந்திருக்கும்.

மேலே உள்ள சிறிய குளம் தாண்டியதும் நாங்கள் சென்ற பாதையில் இந்தப் பறவைகள் இங்கு வரும் என்ற அடையாளத்திற்கான அவற்றின் சிலைகள் மற்றும் பறவைகளின் வேண்டுகோள்கள் சொல்லும் பலகை என்று இருந்தன. 


வழியில் இப்படி ஏறிச் செல்லும் பாதை அழகாக இருந்தது.


அவ்வழியே போன போது அழகான பூச்செடிகள் ஆங்காங்கே…

இந்த நான்கு படங்களில் முதல் படம் அடுத்து வரும் படத்தில் உள்ள இரு டவர்களில் இரண்டாவதாக இருக்கும் டவரில் இருந்து எடுத்தேன். இந்தச் சிறிய குளம் வெகு அழகாக இருந்தது மட்டுமல்ல சுற்றிலும் பெஞ்சுகள் இருந்தன. வெகு அழகாக இருந்தது இந்த இடம். இங்கும் குளத்தைச் சுற்றிப் பூச்செடிகள் இருந்தன. அவைதான் மேலே உள்ள அந்த நான்கு படங்கள். இன்னும் உள்ளன. படங்கள் பகுதியில் பகிர்கிறேன்.  

இப்படி ஆங்காங்கே வியூ டவர்கள் இருக்கின்றன!!!!! 


நீண்ட தூரம் நடக்க வேண்டும் என்பதால் ஓய்வு எடுக்க இப்படி நிழலுடன் ஆன இருக்கைகள் கட்டியிருக்காங்க. இந்த நான்கு படங்களில் கீழ் இருக்கும் அந்தக் கூரையின் கீழ் இருகும் இருக்கைகளுக்கு முன்னே இடது புறம் இருக்கும் பகுதியில் நீர் இருந்திருக்கும் போல. கொஞ்சம் நீர் தேங்கியிருந்தது. மீண்டும் வெட்டி சிறிய குளம் போல கொண்டு வருவாங்க போல.
இடப்பக்கம் மரங்களுக்குப் பின்னால் சதுப்பு நில நீர் ஏரி. இந்த இடத்துலதான் நம்மவர்கள். இந்த நண்பர் மட்டும் நம்ப கிட்ட வந்தார். பாருங்க அந்தக் கம்பித் தடுப்பு மேல உட்கார்ந்து எங்கள் குழுவை அங்கு பார்த்துக் கொண்டிருந்தவரை, “ஹலோ கொஞ்சம் என் கேமரா பார்த்து போஸ் கொடுங்க” என்றதும் பாருங்க  அடுத்த படத்துல போஸ் கொடுக்கிறார்.

எங்கள் குழு அல்லாத வேறு சில மக்கள் வந்திருந்தாங்க அவங்கள்ல யாரோ எதையோ போட அவர் கீழே குதித்து அதை எடுக்க வந்தவர் எங்களைப் பார்க்கிறார்…..

இதுதான் சதுப்பு நில ஏரி. பாருங்க கருவேல மர இனத்தையொத்த மரங்கள் வளர்ந்துருக்கா இங்கதான் பெலிக்கன்ஸ், நீர்க்காகம் எல்லாம் குழுமி கும்மி அடிக்கும். எங்கள் கண்ணில் ஒரு சில வாத்துகளும், சின்னநீர்க்காகம், கொண்டை நீர்க்காகம் என்று சொல்லப்படுபவையும்  (cormorant) மட்டுமே கண்ணில் பட்டன. இல்லை இல்லை பைனாகுலரில் பட்டன! தூரத்தில் இருந்ததால் என் கேமராவில் ஜூம் செய்தும் எடுக்க முடியவில்லை.

இன்னும் வழி போய்க் கொண்டே இருந்தது. நேரமாகிடுச்சு. அடுத்து புலிக்கட் போனுமே. ஸோ எல்லாரும் வாங்க வந்த வழியே மீண்டும் போவோம். நெலப்பட்டு ஓவர். வெளியே வந்த பிறகு மீண்டும் அந்த தூசி பறக்கும் சாலையில் வந்து நெடுஞ்சாலையில் இடப்பக்கம் திரும்பி 10 கிமீ சென்றால் (இதுவும் வந்த வழிதான்) இடது புறம் சூளூர்பேட்டை சந்திப்பு.  அங்கிருந்து ஷார் செல்லும் சாலையில் சென்றால் புலிகாட் ஏரி.  இது ஆந்திரா பக்கம் உள்ள பகுதி. தமிழ்நாடு பக்கம் இருக்கும் பகுதி புலிக்கட்/ பழவேற்காடு.

லஞ்ச் சாப்பிடனுமே! சூளூர்பேட்டில் சைவ உணவகங்களைத் தேட வேண்டியதாக இருந்தது.  ஒரு சிறிய மெஸ் இருப்பதாக அறிந்து சந்து பொந்துக்குள் நுழைந்து அந்த மெஸ்ஸை அடைந்தோம். அங்கு நாங்கள் சாப்பிட்ட மீல்ஸ் படம் இதோ. சாப்பாடு நல்லா இருந்தது. சாப்பாட்டின் ருசி, குறிப்புகள் அறிந்து நான் செய்தாலும் நான் சாப்பாடு எப்படி இருந்தாலும் சாப்பிடும் ரகம். எதிர்பார்ப்பு எதுவும் கிடையாது. இதில் சாதம் மட்டும் எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப அதிகம். எனவே முக்கால் பாகத்தை உறவுகள், நட்புகளிடம் (ஆண்களிடம்) கொடுத்துவிட்டேன். சரி சாப்பிட்டுவிட்டு புலிக்கட் செல்வோம். தயரா இருங்க. 



--------கீதா





வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

நெலப்பட்டு பறவைகள் சரணாலயம்-புலிகாட் ஏரி - 1

பயணம் என்பதே மனதிற்கினியது! மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தருவதாகும். அதுவும் இயற்கையுடன் ஒன்றிய சுற்றுலா பயணங்கள் என்பது மனதை ஈர்த்து லயிக்க வைத்து ஒரு வித மோன நிலைக்கே கொண்டு செல்லும். இவ்வுலகின் படைப்பை, இயற்கையின் விந்தையை நினைத்து வியக்க வைக்கும். அருமையாகப் படைக்கப்பட்ட உலகின் அழகை நாம் மனிதர்கள் அலங்கோலமாக்குவதையும் சுட்டிக் காட்டும். இயற்கையுடன் ஒன்றி இயற்கையையும் இவ்வுலகையும் ரசிக்க கற்றுக் கொண்டுவிட்டால் மனதில் தீய எண்ணங்கள் எழுமோ? 

எங்கள் வீட்டு உறவினர், நண்பர்கள் அடங்கிய பயணக் குழு, இருவருடங்களுக்கு முன் நெலப்பட்டு பறவைகள் சரணாலயம் மற்றும் புலிகாட் ஏரி என்று ஒருநாள் பயணமாகச் செல்ல முடிவு செய்தது. எப்போது திட்டம் போட்டாலும் நானும் வர வேண்டும் என்று அன்பான வலியுறுத்தல் இருக்கும். என்றாலும் என்னால் பல பயணங்களில் கலந்து கொள்ள முடியாத சூழலினால் வாய்ப்புகள் தவறிய தருணங்கள் உண்டு. ஆனால், இப்பயணத்தில் நானும் இணைந்து கொள்ள வசதியாகச் சூழல் இருந்திடவே விடுவேனா வாய்ப்பை! ஊசி நுழையும் அளவேயான வாய்ப்பு கிடைத்தால் கூட நுழைந்துவிடுவேன்! அவ்வப்போது கிடைக்கும் இது போன்ற பயணங்கள் என்னை உயிர்ப்பித்து உற்சாகத்துடன் இருந்திட வைக்கிறது எனலாம்.

நெலப்பட்டு சென்னையிலிருந்து 95 கிமீ தூரம். நெல்லூர் மாவட்டத்தில் சென்னைக்கும் நெல்லூருக்கும் சரி பாதி தூரத்தில், நெல்லூர் செல்லும் சாலையில் சூளூர்பேட்டை தாண்டி 10 கிமீ தூரத்தில் இருக்கிறது. 

சீசன் அக்டோபர் முதல் மார்ச் வரை. பலவகை பறவைகள் வந்து குவியும் இடம் நெலப்பட்டு. பறவைகள் அருகில் இருக்கும் புலிகாட் ஏரியில் உணவருந்தி, நெலப்பட்டில் இருக்கும் எப்போதும் பச்சையாய் இருக்கும் குறுங்காட்டிலும், நன்நீர் சதுப்பு நிலக்காட்டிலும் கூடு கட்டி தங்கள் தலைமுறைகளை உருவாக்குகின்றன. பெரிய சரணாலயப்பகுதி. ஒரு நாள் முழுவதும் போதாது சுற்றிப் பார்க்க. 

டிசம்பர், ஜனுவரி மாதங்கள் தான் பெருக்கம் அதிகம் உள்ள மாதங்கள் என்பதால் டிசம்பர் 31 ஆம் தேதியை முடிவு செய்தார்கள் குழுவினர். வார்தா புயல் சென்னையைத் தாக்கி 15 நாட்களே ஆகியிருந்த நேரம். எனக்குள் சிறு சந்தேகம் இருந்தது. பறவைகள் இருக்குமா என்று. ஆனால் நான் வாயைத் திறப்பேனோ? வாய்ப்பு கிடைத்த பயணமாச்சே! நெலப்பட்டில் இல்லாவிட்டால் என்ன புலிக்காட் ஏரியில் இல்லாமலா போகும்? ஒரு நாரையாவது? உங்கள் எல்லோரிடமும் சொல்லிப் பெருமை அடித்துக் கொள்ள!!!!

அன்று காலை 7 மணி அளவில் புறப்பட்டு வழியில் நண்பரையும் அவரது மனைவியையும் (இவரைப் பற்றி பர்வதமலை பயணத்தில் குறிப்பிட்டிருந்தேன்). ஏற்றிக் கொண்டு எங்கள் 16 சீட்டர் வண்டி சென்னை நெல்லூர் நெடுஞ்சாலை NH 16 ல் சுறுசுறுப்பாகச் செல்லத் தொடங்கியது.

இப்படித்தான் நாங்கள் வண்டியில் ஒரு பையைத் தொங்கவிட்டுவிடுவதுண்டு. குப்பையைப் போட.....இது முன்பு. இப்போதுதான் ப்ளாஸ்டிக் கவர்கள் தடையாச்சே!

இந்தப் பயணத்தில் வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துச் செல்லவில்லை என்பதால் காலை உணவு எங்கே என்று பார்த்துக் கொண்டே வந்ததில் வழியில் நல்ல உணவகங்கள் எதுவும் தென்படவில்லை. இருந்தவற்றில் வண்டி நிறுத்த முடியாத அளவிற்கு லாரிகளின் தொடர் போக்குவரத்து மற்றும் பிற வண்டிகளின் போக்குவரத்து நெருக்கியது. சுங்கச் சாவடிகள் இடையில் இரண்டு.

புழல் எல்லாம் தாண்டி கொஞ்ச தூரம் சென்ற பிறகு சாலையில் இருந்து இடதுபுறமாகக் கொஞ்சம் உள்ளே சென்று அங்கிருந்த உணவகத்தில் காலை உணவை முடித்துக் கொண்டு அப்படியே வலப்பக்கம் உள்ள சாலையில் திரும்பி நெடுஞ்சாலைக்கு வந்தோம். அந்த இடத்தின் பெயர் மறந்துவிட்டது. ஆந்திர எல்லை வரும் சமயம் அங்கிருந்த செக் போஸ்டில் வண்டிக்கான விவரங்களைக் காட்டிவிட்டு, செக்போஸ்டில் வரிப்பணம் கட்டிவிட்டு நெலப்பட்டு நோக்கிச் சென்றோம்.

ஆந்திர எல்லையில் செக்போஸ்ட். குப்பம் பகுதி. வரி ரூ.2650.  வண்டியில் ரிஃப்ளெக்டர்ஸ் இல்லை என்று ஃபைன் ரூ.200 கட்டச் சொல்லி மொத்தம் ரூ.2850 கட்ட வேண்டியதானது. பெர்மிட் ஒருவாரத்திற்குக் கொடுக்கப்பட்டாலும் நம் பயணம் என்னவோ ஒரே நாள் பயணம்.           

சூளூர் பேட்டை தாண்டி 10 கீமீ தூரம் நெடுஞ்சாலை மேம்பாலத்தில் சென்று இறங்கியதும் வலது புறம் திரும்பி - யு டர்ன் - சில அடிகள் சென்றதும் இடது பக்கம் வரவேற்கும் பெரிய வளைவு. வளைவிற்குள் தூசு பறக்கும் சாலையில் 2 கிமீ தூரத்தில் இடது புறத்தில் இருக்கிறது நெலப்பட்டு பறவைகள் சரணாலயம்.

இனி படங்களின் மூலம் உள்ளே செல்வோமா? நிறைய படங்கள் இருக்கின்றன. எனவே இரண்டு, மூன்று பதிவாக நெலப்பட்டு சரணாலயத்தின் ஒரு சிறு பகுதியை மட்டும் கொஞ்சமே கொஞ்சம் சுற்றிப் பார்த்துவிட்டு புலிகாட் ஏரிக்குப் போவோம்!


பாருங்க எல்லாரும். நாம நெலப்பட்டு பறவைகள் சரணாலயம் வந்தாச்சு. சத்தம் போடாம உள்ள வாங்க. இருங்க டிக்கெட் வாங்கிட்டுப் போவோம். 

டிக்கெட்  கவுண்டரில் சொன்னார்கள் வார்தா புயலினால் பறவைகள் வராமல் போய்விட்டன என்று.  எல்லோருக்கும் ஏமாற்றமாக இருந்தாலும் சும்மா உள்ளே போய் பார்ப்போமே என்று போனோம்.

இதோ இந்த கேட் வழிதான் உள்ளே போகனும். வாங்க போலாம். நடக்கத் தயார்தானே?! நீளமான பாதை. உள்ளே பறவைகள் எதுவும் இல்லைனா என்னை யாரும் திட்டக் கூடாதாக்கும். மரம், பூக்கள், பறவைகளின் சிலைகள் எல்லாம் பார்த்துட்டே வாங்க!!!

டவருக்கு ஏறும் வழி.  டவரிலிருந்து, பறவைகள் இருந்தால் பார்க்கலாம். சரணாலயம் முழுவதும் தெரியும். வாங்க ஏறுங்க...

டவரில் இருந்து பார்த்தப்ப இப்பகுதியில் தூரத்தில் மான்கள் இருந்தன.  இதோ கீழே கூடியவரை க்ளோஸப்பில் எடுத்தேன் பாருங்க...

இரு மான்கள் தெரிகின்றனவா?

இது சரணாலயத்தின் மறு பகுதி....டவரிலிருந்து...வியூ. இதில் நீங்கள் பார்க்கும் குறுங்காடுகள்/ஸ்கரப்ஸ் தான் சரணாலயத்தின் பெரும்பகுதி. சதுப்பு நிலம் அடுத்த பதிவுகளில் வரும்.  என்னெல்லாம் பறவைகள் வருகின்றன என்பதையும் சொல்கிறேன்.



           
டவரிலிருந்து கீழே இறங்கியதும் இப்படி பார்க் போல கம்பித் தடுப்புகள் இருந்தது. இவை வேறு  மான்கள்.  முதல் படத்திலும் இரண்டாவது படத்திலும்...
         
நான் கூப்பிட்டதும் அருகில் வந்து பார்க்கிறது பாருங்கள் என்ன அழகு இல்லையா?!!!

அடுத்த கம்பித் தடுப்பில் வாத்துகள் பாருங்க...படுத்திருந்தவை எழுந்து நடக்கத் தொடங்கிவிட்டன. 

அந்தக் கம்பித் தடுப்புகள் முடிந்து இரு பக்கமும் காடு. நீ............ண்ட பாதை. இடையில் ஆங்காங்கே பறவைகள் பற்றிய பதாகைகள், அறிவிப்புகள், பறவைகள் பேசுவது போன்ற வசனங்கள்... 


பறவைகள் நம்மிடம் கெஞ்சுகின்றன......பாருங்கள்!

அப்புறம் அந்த நீளமான பாதையில் ஓர் இடத்தில் பறவைக் கூண்டுகள். கூண்டுகள் எதற்கு என்று தெரியவில்லை. சரணாலயம்தானே இது!!!? இந்தக் கூண்டில் பெயர்ப்பலகை மட்டுமே இருந்தது. பறவையைக் காணவில்லை.
ஒரு கூண்டில் இக்கிளி வகை இருந்தது. தூரத்தில் இருந்தது. கம்பி ஓட்டை வழியாக ஜூம் செய்து எடுத்தேன் கேமராவில்.  அப்போது கேமரா பழுதடைந்திருக்கவில்லை. 

இதுவும் கம்பி வலையின் ஓட்டை வழியாக ஜூம் செய்துதான் எடுத்தேன். பாரகீட்...

அந்த நீண்ட பாதை 1/2 கிமீ தூரம்.  அப்பாதை இங்கு வந்து முடிந்து இங்கிருந்துதான் சரணாலயம் தொடங்குகிறது.   இங்கு கழிவறைகள் இருக்கின்றன. நவீனம் என்று சொல்வதற்கில்லை.  ரொம்ப சுமாராகத்தான் இருக்கும்.  

இந்த அரங்கிற்குள் பறவைகள் பற்றிய படம் காட்டப்படும். நாங்கள் நேரப்பற்றாக்குறையால் பறவைகள் ஷோ பார்க்கச் செல்லவில்லை.
முந்தைய தினம் ஏதோ நிகழ்வு நடந்திருக்கிறது.  சாப்பாட்டுக் கடைகளும் இருந்திருக்கிறது. பாருங்கள் எப்படிப் போட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள் என்று..பறவைகள் சரணாலயத்தில். நம் மக்கள் திருந்தவே மாட்டார்கள்.

அடுத்த பதிவில் வ்யூ பாயின்ட் செல்வோம்.  ....ரொம்ப தூரம் நடந்துவிட்டோம். அதனால கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கோங்க. அடுத்த பதிவில் சந்திப்போம்.

-----கீதா