திங்கள், 13 ஆகஸ்ட், 2018

மனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி!......அரவிந்தனின் பார்வை - கா செ கோ


முதலில் ஒரு சிறு அறிமுகம்.

எனது நாவல் காலம் செய்த கோலமடி அறிமுகம் ஆனதும், நம் நண்பர், பதிவர் திருப்பதி மகேஷ் தனக்கு ஒரு புத்தகம் வேண்டும் என வாங்கிக் கொண்டார். வாசித்து என்னை அலைபேசியில் அழைத்து ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பற்றி விரிவாகக் கூறி, கதையையும் விமர்சித்து நன்றாக இருந்ததாகச் சொன்னார். இதை எதிர்பாராத எனக்கு அவர் விவரித்திட விவரித்திட மகிழ்ச்சி மேலிட்டது ஆனால் பதில் அளிக்க வார்த்தைகள் வரவில்லை. அதுவே மிகப்பெரிய மகிழ்ச்சியாக நினைத்திருந்த வேளை, மகேஷ் 4 புத்தகங்கள் வாங்கி தன் நண்பர்களுக்கும் அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறார். அவரது நண்பர்களில் ஒருவரான, திரு அரவிந்தன் புத்தக விமர்சனத்தை ஆடியோ ஃபைலாக அனுப்பியிருந்தார். சற்றும் எதிர்பார்க்கவில்லை. திக்குமுக்காடிப் போனேன். என் உணர்வுகளைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. அரவிந்தன் அவர்களுக்கும் பார்வைத் திறன் இல்லை என்பதை அறிய நேர்ந்ததும் வியப்பு இன்னும் கூடியது. நிறைய புத்தகங்கள் வாசிப்பதாகத் தெரிகிறது. என் மகிழ்ச்சியை இங்கு விவரித்திட வார்த்தைகள் இல்லை. கதையில் நல்ல அம்சங்களையும், குறைகளையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இதோ அவரது விமர்சனத்தை எழுத்து வடிவமாக்கி இங்கு எல்லோரது பார்வைக்கும் கொடுக்கிறேன். மகேஷிற்கும் அரவிந்தன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல. வாழ்த்துகளையும் சொல்லிக் கொள்கிறேன். என் மகிழ்ச்சியைச் சொல்லிட முடியாமல் வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

------துளசிதரன்

வணக்கம் துளசிதரன் சார்,

நான் அரவிந்தன். சென்னையிலிருந்து பேசுகிறேன். மகேஷின் நண்பர். மகேஷ் தான் எனக்கு உங்களின் புத்தகத்தை அறிமுகப்படுத்தினார். இந்தப் புத்தகத்தை படித்து அதனால் ஏற்பட்ட உணர்வுகளைப் பகிரலாம் என்று நினைத்து இந்த ஆடியோவை அனுப்புகிறேன். முதலில் என்னை மன்னிக்கணும் துளசிதரன் சார். உங்கள் ப்ளாகை நான் ரெகுலராக ஃபாலோ செய்வதில்லை. இரண்டு, மூன்று பதிவுகள் தான் படித்திருக்கிறேன். ஆனால் ஸ்ட்ரெயிட்டா உங்கள் நாவலான காலம் செய்த கோலமடி வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ரொம்ப சிம்பிளான நாவல். 32 வருடங்கள் காத்திருந்து அந்தந்தக் கதாபாத்திரங்கள் வயதாகும் போது கதாபாத்திரங்களின் உணர்வுகளை, உணர்வு பூர்வமாகப் புரிந்து எழுதியிருக்கீங்க. அருமையான ஒரு நாவலை கொடுத்திருக்கீங்க சார். இந்த நாவலை வாசிக்கும் போது எனக்கு எந்த மாதிரி உணர்வுகள் ஏற்பட்டது என்றால், தி.ஜா அவர்களின் மோகமுள் மற்றும் ஜெயமோகன் அவர்களின் அனல்காற்று. விஷ்ணுபுரம் இதெல்லாம் வாசித்த போது, மிகப் பெரிய நாவலின் அடையாளம்னு சொல்லுவாங்க அதாவது மனிதர்களின்  மனங்களைக் கிழித்து-உள் சென்று பார்க்கிற யுத்தி.

எல்லார் மனசுலயும் இந்த சமூகக்கட்டுப்பாடுகளை மீறலாமா என்ற ஆசை இருக்கத்தான் செய்யும்அதையும் நீங்க ஓரளவு நல்லா காட்டியிருக்கீங்கஅப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் என்னோட நிலையை அப்படியே சொல்றா மாதிரியே இருந்துச்சுஅப்படியே ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் பக்கத்துலயே நான் இருக்கேன்ற ஒரு எண்ணம் தோணிச்சுஅது ஒரு புத்தகத்தோட மிகப் பெரிய சக்ஸஸ்ஒவ்வொரு கதாபாத்திரமும் வாசிக்கிறவரின் மனநிலைக்குள்ள போய் நம்மளும் இந்த நிலையில் இருந்திருந்தா நம்மளும் இப்படித்தான் செயல்பட்டிருப்போம் அப்படினு தோண வைக்குதுஅது ரொம்ப மிகப் பெரிய சக்ஸஸ்இந்த நாவலின் எழுத்து பிடிச்சதுக்கும்வாசித்ததுக்கும் காரணம் இதுதான்.

மனிதன் வெளில ஒரு வேஷம் போடுவான், சமுதாயத்துல எல்லார் முன்னாடியும் ஒரு ப்ரெஸண்டபிளா, நல்லவிதமா தன்னை காட்டிக்க. அப்படி அனைத்து நாவல்களிலும் உள்ள கதாபாத்திரங்களின் ஆழ்மனதைக் கிழித்துப் பார்ப்பார்கள் அவர்கள். மனிதன் ஆயிரம்தான் மாடெர்னைஸ்டா ஆகியிருந்தாலும், என்னதான் கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் இவற்றில் முன்னேறியிருந்தாலும் அடிப்படையில விலங்குனுதான் சொல்லுவாங்க. சமுதாய விலங்கு. அவனுக்கு எல்லா விலங்குகளுக்கும் இருக்கிற அடிப்படை ஆசைகள், பசிஉணவுப் பசியிலிருந்து எல்லாப் புலன்களுக்கும் இருக்கற பசிஇருக்கிறது. சமுதாய முன்னேற்றம் கருதி, விதிக்கப்பட்டிருக்கும்  சமூகக்கட்டுபாடுகள், விதிகள் எல்லாவற்றையும் மனிதன் பின்பற்ற வேண்டும் என்பதற்காகக் கஷ்டப்பட்டு, பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்ததிலிருந்தே அவ்விதிகளைப் போதித்து, ஆசிரியர்களும் கற்பித்து வளர்க்கிறார்கள். ஆனால், என்னதான் இருந்தாலும் அந்தச் சமூகக் கட்டுப்பாடுகளை மீறத் துடிக்கும், அந்த ஆதிகால மனித உணர்வு, விலங்கியல் உணர்வு எப்படிச் செயல்படுகிறது என்பதை மிகவும் தத்ரூபமாகக் காட்டியிருந்தீங்க. அதுவும் அந்த கோபால் என்கிற கேரக்டர் மூலமா.

இயல்பா அவன் மனசு எப்படிச் செயல்படுது, அவன் சின்ன வயசுலருந்து வளர்ந்த முறை, அவன் எதனால அந்த உணர்வுகளுக்கு ஆளாகிறான் எல்லாம் வருது. எனக்கு இந்தக் கதையைப் படிக்கும் போது யாரும் கெட்டவங்கனு ஒரு முடிவுக்கு வரவே முடியலை. எல்லா சைடுலயும் அவங்க சைட எடுத்து சொல்லியிருக்கீங்க. முப்பரிமாணம்/த்ரீ டைமென்ஷனல் ஸ்டோரினு உங்க உரையிலேயே சொல்லியிருந்தது சம்பவங்களை அந்த மூன்று ஆட்கள் அவங்களுடைய கோணத்தில சொல்லியிருப்பது ரொம்ப அருமையா இருந்தது.

கோபாலின் மனநிலைஅவன் எவ்வளவு தூரம் விலகிப் போக விலகிப் போக முயற்சி பண்றான்பட் அவனுடைய இயற்கையான ஆசை ப்ளஸ் அவன் நண்பர்கள்ல அவனை அட்ராக்ட் பண்ணின போஸ் கதாபாத்திரம் அவனை போக விடலைஇருந்தாலும் அவன் கடைசிவரைக்கும் அந்த எம் ஏ படிப்பைநாம வந்ததன் நோக்கம் அதுதான் என்று அவன் மனது திரும்ப திரும்பச் சொன்னாலும்அவனால் அவனை கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை என்பதை சொன்ன விதங்கள் அதெல்லாம் ரொம்ப இயல்பா இருந்துச்சுநான் அந்த இடத்துல இருந்திருந்தாலும் நானும் அப்படித்தான் செயல்பட்டிருப்பேன்னு தோணிச்சுஅதனால அவனை என்னால கெட்டவனா நினைக்கவே முடியலை.

ஒரு காலத்துல நாம ஒரு சிலரை எதிரியா நினைச்சுருப்போம்ஆனா அதுவே கொஞ்ச நாள் பிரிஞ்சு வாழ்ந்து அப்புறம் யாரை எதிரியா நினைச்சோமோ அவங்க மேலேயே ஒரு அன்புபாசம்நாம செஞ்சது ஏதோ தப்போனு தோணும்எனக்கே கூட அப்படியான அனுபவம் ஏற்பட்டிருக்குநான் ஆபீஸ்ல சில பேரோடு சண்டை போட்டுருக்கேன்அவங்க ட்ரான்ஸ்ஃபர் ஆகி போனப்புறம்ஏண்டா சண்டை போட்டோம் என்று தோன்றும்அதுக்கு முன்னாடி அவங்க செஞ்ச நல்லதெல்லாம் அவங்க இல்லாதப்பதான் தோணும்அதெல்லாம் அப்படியே வாழ்க்கைல நடக்கற யதார்த்தத்தை அப்படியே காட்டியிருக்கீங்க


படம் : ஓவியர் தமிழ்ச்செல்வன் – மிக்க நன்றி தமிழ்.

அதே போல லதா கதாபாத்திரம். அவங்களுக்குச் சில பாதிப்புகள் ஏற்பட்ட போதும், ஹஸ்பண்டோட இயல்பா வாழ முயற்சி பண்ணுவது,  ஒரு சாதாரண, சராசரி குடும்பப் பெண்ணுக்கு என்னென்ன உணர்வுகள் எல்லாம் இருக்குமோ வெளியாட்களைப் பார்த்தா, சொந்த கணவனை பார்த்தா எல்லாம் கம்பேரிஸன் பண்ணி பண்ணி எப்படி எப்படி அவங்க உணர்வுகள் எல்லாம் மாறுமோ, “எனக்குக் கிடைச்சது பாக்கியம், இந்த வாழ்க்கையை விட்டுவிடக் கூடாது என்றெல்லாம் அவங்க உணர்வுகளை வெளிப்படுத்துவது ஒரு பக்கம். மற்றொரு பக்கம் மனசுக்குள்ள ஒரு போராட்டம்நிறைய வெளி ஆட்கள் செய்யும் தந்திரங்களைக் கவனித்ததின் விளைவு, அவங்க வீட்டுல பிச்சையம்மாவே வாழ்க்கைல ஒரு கட்டத்தில தப்பு செஞ்சது அவங்களுக்குத் தெரிய வந்தது தவறான நடத்தை கொண்ட பக்கத்து வீட்டுக்காரி அவள் தவறை மறைக்க லதாவிடம் பிச்சையம்மாவை கோள் சொல்லியதின் மூலமா……..எல்லாம் இயல்பா இருக்குது. சாதாரண மனிதன் என்னதான் வெளிப்படையா நல்லவன் மாதிரி காட்டிக்கிட்டாலும் அவன் மனசுக்குள்ள நினைக்கறதெல்லாம் ஓரளவு நீங்க வெளிப்படுத்தியிருக்கீங்க.

லதாவுடைய கதாபாத்திரம். அவங்க சின்ன வயசுலருந்தே ஆரம்பத்திலிருந்தே துணிச்சல். அந்த தியேட்டர்ல அவன் கை பட்டப்ப நான் ஏன் அந்த அளவு ரியாக்ட் பண்ணினேன்? நான் பதினொண்ணாம் வகுப்பு படிக்கும் போது ஒரு பையன் என்னை தொடலையா?’ அப்படி எல்லாம் நினைப்பது இயல்பாவே நடக்கும் விஷயங்களை சர்வசாதாரணமா எடுத்துக் காட்டியிருந்தீங்க. கொஞ்சம் கொஞ்சமா அந்த நாவல்ல ரொம்பச் சிக்கலான சப்ஜெக்டை எடுத்து அருமையா கையாண்டிருக்கீங்க. படிக்கறவங்க யாருக்கும் முகம் சுளிக்காதபடி எல்லாரும் உணர்ந்து படிக்கறபடி வெற்றிகரமா ப்ரெசன்ட் பண்ணியிருக்கீங்க.

துரைராஜ் கதாபாத்திரம். துரைராஜ் பத்தி வாசிக்கும் போது அவர் எப்படி காலேஜ்ல பேராசிரியராக, காலேஜில் நடக்கும் தினசரி சம்பவங்களை அவர் விவரிப்பது எல்லாமே ரொம்பவே இயல்பா தத்ரூபமா இருந்துச்சு. கதையில் 83ல் நடந்திருந்தாலும், நான் 2005-2008 வரை லயோலா காலேஜில் படிச்சேன். அந்த அனுபவத்துக்கும், 83ல் நடந்ததற்கும் ரொம்ப வித்தியாசம் எதுவும் இல்லை. நான் படிச்சப்பவும் போர்ட்லதான் எழுதி பாடம் நடத்தினாங்க. பவர் பாயின்ட் எல்லாம் அப்பதான் ஆரம்பக்கட்டத்துல இருந்தது. மிஞ்சினா பெரிய “OMR” ஷீட்டை தொங்கப் போட்டு பாடம் எடுப்பாங்க. ஸிஸ்டம்ல ப்ரின்ட் எடுத்துட்டு வந்து நோட்ஸ் போட்டு பாடம் எடுப்பாங்க. பெரிய இன்ட்ரெஸ்ட் எல்லாம் இருக்காது. லயோலா காலேஜ்ல படிச்சப்ப எனக்குத் தோணும் ஏண்டா இவ்வளவு கேவலமா இருக்கு சொல்லித்தர விதம் எல்லாம். இதெல்லாம் வைச்சுப் படிச்சு என்ன யூஸ் அப்படினு எல்லாம் தோணும்.

அதெல்லாம் பேராசிரியர் மனசுல இருக்காதானு தோணிச்சு. அதே விஷயங்கள் எல்லாம் துரைராஜ் மனசுலயும் இருக்கு. என்ன பாடம் எடுத்து சாதிக்கறோம். என்ன எஜுகேஷன் சிஸ்டம் இது. சும்மா கடமைக்காகப் பாடம் எடுத்துட்டுப் போறோம். குருகுலம் மாதிரி அனுபவப் பூர்வமா யாருமே பாடம் எடுக்க மாட்டேன்றோம். விடைத்தாளும் கடமைக்குத் திருத்தறோம். அங்கங்க ரெண்டு மூணு பாயின்ட்ஸ் மட்டும் இருக்கானு பார்த்து மார்க் போடறோம். அந்த மார்க்கிங்க் மெத்தட்லயும்….டார்கெட்இத்தனை மார்க் போட்டு இத்தனை ஸ்டூடன்ஸை பாஸ் பண்ணனும். இப்படிப் பாடம் எடுத்து என்ன யூஸ். மாணவர்களுக்கு என் மேல என்ன மதிப்பு வரும். எனக்கு மாணவர்கள் மேல என்ன மதிப்பு வரும் அப்படின்ற எண்ணங்கள் எல்லாம் இருக்கு. இருந்தாலும் அவங்களாலயும் மாத்த முடியாதுன்ற அளவுக்கு சிஸ்டம் இருக்கு. எல்லாருக்குமே மாத்தணும்ன்ற ஆசை இருக்கு ஆனால் மாத்த முடியாத அளவுக்குதான் ஸிஸ்டம் இருக்கு. என்ன சேஞ்சஸ் வரணும்ன்றதையும் அருமையா சொல்லிருக்கீங்க.

படம் : ஓவியர் தமிழ்ச்செல்வன் – மிக்க நன்றி தமிழ்.

இங்க்லிஷ் லிட்ரேச்சர் ஆசிரியரா அந்த எடிபஸ் கதையை நடத்தும் போது இருந்த மன நிலை… ‘அதை சாதரணமா மாத்தவே முடியாது, விதி என்ற பேராசிரியர், அதைப் பாடமா நடத்தும் போது சர்வசாதாரணமாகக் கடந்து போக முடிந்த அவரால் நிஜவாழ்க்கையில் நடப்பதைக் கடந்து போக முடியலை. அப்போது நிகழும் நிகழ்வுகள் எல்லாமே சீர்ணடையாந   கதையாகக் கையான்டுருக்கீங்க. இயல்பா இருந்துச்சு.

எனக்கு இன்னும் சில விஷயங்களை விவரிச்சு எழுதியிருக்கலாம்னு தோணிச்சு. என்னன்னு சொல்லனும்னா துரைராஜ், லதா, கோபால் கேரக்டர்கள் இவர்களுக்கிடையில் நடக்கும் சம்பவங்கள் முதலில் விரிவாகச் சொல்லப்பட்ட அளவு, அவர்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும் போது அதன் பின் நடப்பவை விளக்கமாகச் சொல்லப்படவில்லை என்று தோன்றியது.  அதே போல ஜெயலட்சுமி கதாபாத்திரம். அவர் துரைராஜுவின் வாழ்வில் மாணவி நிலையிலிருந்து எப்படி மாறுகிறார் என்பதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகவும் தெளிவாகவும்  சொல்லியிருக்கலாமோனு தோணிச்சு.

இன்னொன்னு கோபால் அப்புறம் அவன் எம் ஏ படிப்பைத் தொடர்ந்தானா? இல்லை வேற என்ன ஆகிறான் என்ற குழப்பங்கள் எல்லாம் இருக்கும் போது அதைப்பத்தி எதுவுமே சொல்லாம, திடீர்னு அவன் டிஎஸ்பியா வந்து நிக்கறான், போஸ் காட்டுலாகா அதிகாரியாக வரான். போஸுக்கு ஒரு சின்ன லாஜிக் சொல்லிருக்கீங்க. கோபால் அப்புறம் என்ன பண்ணினான்? எப்படி போலீஸானான்எப்படி அவன் வாழ்க்கை மாறிச்சு? அதுக்கு அப்புறம் அவன் வாழ்க்கைல நடந்த மாற்றங்கள் என்னனு தெளிவா சொல்லாத மாதிரி இருந்துச்சு. இந்த இரண்டு விஷயங்கள் மட்டும் கொஞ்சம் நெருடலா இருந்துச்சு.

நிறைய காரணங்கள், ஒருவேளை நாவல் ஏற்கனவே ரொம்ப லெங்க்தா போயிடுச்சுனு போட வேண்டாம்னு நினைச்சீங்களா. இல்லைனா துரைராஜ்ன்றவர் புத்தகத்தை எழுதினவரின் பிரதிபலிப்பு மாதிரி இருக்கு. ஏன்னா அவரும் ஒர் ஆங்கில ஆசிரியர் துரைராஜும் ஆங்கிலப் பேராசிரியர். அதனால இந்த ரிலேஷன்ஷிப்பை கொஞ்சம் விலாவாரியா எழுதியிருந்தா இது இவர் வாழ்க்கைல நடந்த சம்பவத்தை எழுதறாரோனு தோணிடுமோனு நினைச்சு எழுதாம விட்டுட்டாறானு…..சும்மா விளையாட்டுக்குத்தான் சொல்லறேன்….அப்படி எல்லாம் தோணிச்சு.

மத்தபடி புத்தகம் சூப்பர். என் மனதை பாதித்த புத்தகம். இப்படி ஒரு அருமையான புத்தகத்தை 32 வருஷம் கஷ்டப்பட்டு எழுதிருக்கீங்க….இது போன்ற புத்தகங்களை இனியும் நீங்க கொடுக்கணும். வாழ்த்துகள், நன்றி ஸார்.

------அரவிந்த் (பதிவர், நண்பர் திருப்பதி மகேஷின் நண்பர்)

(அசிஸ்டென்ட் மேனேஜர், டிப்பார்ட்மென்ட் ஆஃப் சேல்ஸ், பேங்க் ஆஃப் பரோடா ஸ்பெஷலைஸ்ட் மார்ட்கேஜ் ஸ்டோர், சென்னை)

ஸ்ரீ பாலகங்கை பப்ளிகேஷன்ஸ்
32/1, கங்கையம்மன் கோயில் தெரு
வடபழனி, சென்னை26


புத்தகத்தின் விலை ரூ 200/ ஆனால் தரப்படுவது ரூ 150 க்கு. புத்தகத்தின் பக்கங்கள் 303

contact number and email id to get the book : 9940094630 
thulasithillaiakathu@gmail.com