தமிழ்நாட்டு
முதல்வர்களிலேயே, இல்லை இந்தியாவிலேயே, ஏன் உலக அளவிலேயே என்று கூடச் சொல்லலாம், பெருந்தலைவர்
காமராஜரைப் போன்ற ஒரு தலைவர் இருந்ததில்லை என்று! மக்களின் நாயகனாக, பொதுமக்களில்
ஒருவராக, முதல்வர் என்ற பதவியின் அர்த்தமாக, பொது மக்களின் பிரதிநிதியாக இருந்தார்
என்றுதான் சொல்ல வேண்டும்! அவரது ராஜினாமாவிற்குப் பின் திரு பக்தவத்சலத்தின்
ஆட்சி. திராவிடக் கட்சிகள் உதயமாகி எழுச்சியில்
இருந்த நேரம். திரு பக்தவத்சலம் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தத் தலைவராக
இருந்த போதிலும், அவரது ஆட்சியிலும் ஊழல்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கு முன்னதாகவே,
1957, சட்டப்பேரவையில் திராவிடக் கட்சி அடியெடுத்து வைத்ததுமே, “பத்துலட்சம்
பக்தவத்சலம்” – நயம்பட, எதுகை மோனையுடன் பேசுவதில் திராவிடக் கட்சிக்குச் சொல்லியா
தர வேண்டும் – என்ற ஒரு ஊழல் குற்றச் சாட்டை அவர்கள் ஊதிப்பார்த்தார்கள். காமராஜர்
ஆட்சியில் அவர்களால் ஊழல் எதையும் சொல்லக் கூட முடியவில்லை. பக்தவத்சலத்தின்
ஆட்சியில் நிரூபிக்க முடியவில்லை! அவர்களது மேடைப் பேச்சுக்கு வேண்டுமானால் அது
துணை போனதாக இருக்கலாம்.
திரு பக்தவத்சலத்தின்
ஆட்சியில் அவர் காங்கிரஸ் என்பதால் அப்போது இருந்த மத்திய ஆட்சியின் படி 3 மொழித்
திட்டத்தைக் கொண்டுவந்தார். ஹிந்தி திணிக்கப்படுகின்றது என்று திராவிடக்
கட்சிகளின் அரசியல் அம்பாக ஹிந்தி எதிர்ப்பு எறியப்பட்டது. அது ஒரு வகையில்
சரிதான் என்றாலும், நமது அண்டை மாநிலங்களான கேராளா, ஆந்திரா, கர்நாடகா இன்றும் கூட
இந்த மூன்று மொழித் திட்டத்தைத்தான் கையாளுகின்றனர். அதனால் அவர்களது தாய்மொழியை அவர்கள்
மறக்கவில்லை! அங்கும் அவர்கள் மொழியில் இலக்கியங்கள் படைக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன!
ஹிந்தி எதிர்ப்பு என்பது தனித் தன்மை உடைய திராவிட மொழியான நம் தமிழைக்
காப்பாற்றத்தான் என்று சொல்லப்பட்டு எதிர்க்கப்பட்டாலும், அதைப் பக்குவமாகக்
கையாண்டிருக்கலாமோ என்றுதான் தோன்றுகின்றது. அதன் தாக்கம் இன்று வெகுஅளவில்
குறைந்திருந்தாலும், இருக்கத்தான் செய்கின்றது. ஹிந்தி என்பது தேசிய மொழியாகிவிட்டது.
நாம் தமிழர்கள் தமிழ் நாட்டைக் கடந்தும் சென்று உழைக்க வேண்டிய கட்டாயம்! அச்சமயம் ஹிந்தி சிறிதளவேனும் தெரிந்து
வைத்திருந்தால் பலவிதங்களில் உபயோகமாக இருக்குமே என்ற நல்லெண்ணத்தில்தான்! அதனை
ஏன் அரசியலாக்க வேண்டும்? நாம் அனைவரும் இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்ளத்தானே
செய்கின்றோம்!
ஆங்கிலத்தை உலக மொழி என்று கற்பது போலத்தான்
இதுவும்! ஆங்கிலப் படங்களைத்தானே பார்த்து, நாம் வியந்து பாராட்டுகின்றோம்! ஹிந்தி
தேசத்தில் வாழ்ந்து கொண்டு, ஏன் உலக நாடுகளில் இருந்து கொண்டும், அந்த தேசத்தின்
மொழியையும் கற்றுக் கொண்டு, தமிழிலும் கோலோச்சத்தானே செய்கின்றார்கள் நம்
தமிழர்கள்! பல மொழிகள் கற்பதனால், அம்மொழி இலக்கியங்கள்
தமிழிலும் மொழிபெயர்ப்படைந்தால், மொழிபெயர்ப்படைவதால் தமிழ் வளருமே அல்லாமல் தமிழ்
ஒரு நாளும் அழியாது! அழிகின்றது என்று சொல்லப்படுவதும், பரப்பப்படுவதும், அரசியல்
பிழைப்பிற்காக அன்றே விதை தூவிப் பரப்பப்பட்ட புற்று நோய்! ஏன் அன்றும், இன்றும் தமிழகக் கட்சிகள் மத்தியக் கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் இல்லையே!
திராவிடக் கட்சிகளின்
ஆட்சி வந்த பிறகு, குறிப்பாக அறிஞர் அண்ணாவுக்குப் பிறகு ஊழலின் வேர் ஊன்றத்
தொடங்கி, பெருகத் தொடங்கியது, புயல்வெள்ள நிவாரணதில். இன்றைய மருத்துவக்
கல்லூரிகள் அடிக்கும் பகல் கொள்ளைகளுக்கும், அதில் நடக்கும் ஊழல்களுக்கும் விதை
அந்தக் காலகட்டத்தில், மருத்துவக் கல்லூரி நடத்த இடம் பெற்றுத் தருவதில்
ஊன்றப்பட்டது! மாபெரும் தலைவர், காமராசர் ஆட்சியில் இருந்த போது கூட தனக்கென்று
ஒரு பைசா சேர்க்காதவர், தனக்கென்று வீடு கூட வைத்துக் கொள்ளாதவர், தன் அன்னையைக்
கூட, சென்னயில் அரசு அளித்த வீட்டில் தன்னுடன் வைத்துக் கொள்ள யோசித்தவர் அத்தகைய
பெருந்தகை வீற்றிருந்த நாற்காலியில் அமர்ந்த, திராவிடக் கட்சித் தலைமை சென்னையில்
வீடு வாங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, அவரது கட்சியிலிருந்து, கருத்து வேறு
பட்டு விலகியவர்களும் உண்டு.
அரசு மின்னுற்பத்தி
நிலையத்தை விற்றவர்கள்! நிலக்கரி ஊழல், வெளிநாடுகளில் சுரங்கங்கள் வாங்குதல், கிரானைட்
கொள்ளைகள், மணல் கொள்ளைகள், அரசு நிலங்கள் எனத் தொடங்கி, கல்லூரிகளும், தொழிற்
கல்லூரிகளும் பினாமிகளின் பெயரில் நிறுவி, பல சொத்துக் குவிப்புகளும் என்று
ஆயிரங்களிலும், லட்சங்களிலும்
அடித்தளமிட்டுத் தொடங்கிய ஊழல்கள் இன்று கோடிக் கணக்கில் வளர்ந்து, தமிழ்
நாட்டு, இந்திய எல்லை தாண்டி, கடல்கடந்தும் பரவி உள்ளது! பல்கலைக்கழங்களின் துணைவேந்தர் ஆவதில் பணம் கரை
புரண்டு விளையாடி ஊழல் பெருக்கெடுத்தது/க்கின்றது. பொறியியல் கல்வித் துறையில்
பரவிக் கிடந்த ஊழல் மருத்துவத் துறைக் கல்வியிலும் ஊடுருவி இன்று கோடிக் கணக்காகியிருக்கின்றது. மக்களுக்காகப் பாடுபட வேண்டிய மத்திய அரசோ,
உச்ச நீதி மன்றமோ இதைக் கண்டு கொள்வதே இல்லை!
இந்த ஊழல்கள் எல்லாம்
திராவிடக் கட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் இரு கட்சிகளுக்குமே பொருந்தும். எம்ஜிஆர்,
திமுக விலிருந்து பிரிந்து அஇதிமுக என்று ஆன பிறகு, இரு கட்சிகளும் மாறி மாறி தமிழகத்தை
ஆண்டு, சில வளர்ச்சிப் பணிகள் என்று சொல்லி பாராட்டும் வகையில் செய்திருப்பதை
மறுக்க முடியாதுதான்! அவர் ஆட்சிக்கு வந்ததும், சமுதாய முன்னேற்றத்திற்குக்
கொடுத்த முக்கியத்துவம், குறிப்பாகக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை
முன்னேற்ற விழைந்ததும், காமாராஜர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டத்தை மீண்டும்
சத்துணவுத் திட்டம் என்றவகையில் கொண்டு வந்ததும், பெண்களுக்கென்று பேருந்துகளும்,
மதுவிலக்கையும், தமிழ்நாட்டு சுற்றுலாத் துறையின் வருவாயைப் பெருக்கியதும்,
திரைப்படத் துறை சார்ந்த ஊழியர்களின் குழந்தைகளுக்கு பள்ளிகளும் என்று எம்ஜிஆர்
மக்கள் திலகமானார்! எம்ஜிஆரின் முதல் ஆட்சி ஊழல் குற்றச் சாட்டுகளுக்கு
அப்பாற்பட்டு இருந்தது. ஆனால் இரண்டாவது
ஆட்சியோ ஊழலுக்கு ராஜபாட்டையே அமைத்தது.
முதல் ஆட்சிக்கும் இரண்டாவது ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்திற்குக்
காரணம் நிதிப்பற்றக்குறை என்று பேசப்பட்டது!
நிதிப்பற்றாக்குறை என்று வரும் போது ஊழல் செய்ய நினைக்காதவர்கள் கூட,
தேர்தல் நிதியிலிருந்து ஊழலுக்குப் பழக்கப்பட்டு விடுவார்கள் போலும்! எம்ஜிஆர்
அவர்கள் மக்களின் மனதில் நீக்கமற இடம் பெற்றதற்கும், இப்போதும் அவரைக் கொண்டாடி வருவதற்கும்
அவர் அந்த நிலையை அடைய எதிர்கொண்ட போராட்டங்களும் எண்ணற்றவைதான்!. ஆனால், அவரும்
ஒரு காலகட்டத்திற்கு மேல் ஊழலை அனுமதிக்கம்படியான சூழலுக்குத் தள்ளப்பட்டார்! ஆனால்
அந்த ஊழல்கள் அதிகம் பேசப்படவில்லை! காரணம் மக்களின் மனதில் நிறைந்திருந்த எம்ஜிஆரின்
கவர்ச்சியும், செல்வாக்கும், ஆளுமையும்!
ஒவ்வொரு தேர்தலின் போதும் மேடைப் பேச்சுகளாலும், காணொளிகள்
காட்டியும், ஒருவரை ஒருவர் பழித்துக் கொண்டும், என்னதான் ஆதரவு தேடிக் கொண்டாலும்
இந்த வளர்ச்சிப் பணிகளின் பின்னால் ஊழல் நிழலாகத் திரைமறைவில் இருந்ததும் பேசப்பட்டுதான்
வருகின்றது! எம்ஜிஆரின் மறைவிற்குப் பிறகு ஜெயலலிதா
அக்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்று (இங்கு இடைப்பட்ட சிறிய காலத்தைப் பற்றிச்
சொல்லவில்லை. அதற்கு அவசியம் இல்லாததால்) முதல்வர்
பதவி அடைந்து, அஇதிமுகவும், திமுக வும் மாறி மாறி தமிழ்நாட்டை ஆண்டு ஊழல் பல
புரிந்து, தமிழகத்தை ஒரு நோயாளி ஆக்கிவிட்டார்கள்! மு.க ஒரு கால கட்டத்தில் மிக
நல்ல முறையில் ஆண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்!
ஆனால், அதன் பிறகு அவரும் ஊழல் வலையில் சிக்கிவிட்டார்! அவரது மிகப் பெரிய
ஒரு சாதனை என்றால் அது வள்ளுவனுக்குக் கன்னியாகுமரியில் சிலை வடித்து
சரித்திரத்தில் பெயர் பதிந்ததைச் சொல்லாமல் இருக்க முடியாது!
வெளிநாட்டு சரக்குகளை விற்க தமிழகம் முழுவதும் 55 ‘எலைட் ஷாப்’!
நிற்க, இரு அரசுகளுமே டாஸ்மாக்கை மிகவும் கடமை உணர்வுடன்(!) வளர்த்துவருகின்றார்கள்!
சாதாரண டாஸ்மாக்குகள் குடிமகன்களை வளர்த்ததோடு மட்டுமல்லாமல், தற்போது, ஒரு சில
இடங்களில் டாஸ்மாக் எலைட் என்று உயர்தர, உயர் ரக திரவங்களை, பணக்காரச் சந்தையில்
விற்கத் தொடங்கி உள்ளார்கள்! அந்தக் கடைகளில் பெண்களையும் காண முடிகின்றது!
இப்போது பெண்களும் குடிக்கத் தொடங்கிவிட்டார்கள்! வளர்க அரசின் வளர்ச்சிப்
பணித்திட்டங்கள்! வாழ்க அரசின் சாதனை!
ஜெஜெ சொத்துக்களைக் குவித்தார் என்றால் மு.க அவரது குடும்பத்திற்காக
நிறையவே செய்தார்! அவர்கள் குடும்பம் கால் பதிக்காத வியாபாரம் இல்லை என்றாகிப்
போனது! விமானம் வரை வந்து விட்டார்கள்! அவர்களது ஊழல்களிலேயே
எல்லா ஊழல்களையும் விழுங்கி விடுவது போல படைத்த சாதனை 2ஜி அலைக்கற்றை
ஊழல்தான்! அதனால் ஆட்சி இழந்தனர், ஜெஜெ அதிகபட்ச வெற்றி பெற்று திமுக வை ஒன்றும்
இல்லாத அளவுக்கு செய்து ஆட்சியை ஜெகஜோதியாக கைப்பற்றினார்! தன்னை
நிரூபித்துக் கொள்ள ஜெஜெ மக்களுக்கு என்று குறைந்த விலையில் பல திட்டங்களை
அறிமுகப்படுத்தினார் “அம்மா” என்ற பெயரில். என்னதான் அவர் தன்னை நிரூபிக்க நல்லது
செய்யத் தொடங்கினாலும், ஜெஜெ யின் சொத்துக் குவிப்பு வழக்கு நிரூபிக்கப்பட்டு, முடிவுக்கு
வந்து இதோ சிறையில்! இலவசங்களை அள்ளிக்
கொடுத்து வளைக்கப் பார்த்தாலும், செய்த தவறுக்குத் தண்டனை கிடைக்காமல் போகுமா என்ன? இந்த
ஊழல்கள் எல்லாமே தமிழக மக்களுக்கு நன்றாகவேத் தெரியும். நம் தமிழ் நாட்டிற்கான
சாபக் கேடு இது! இவ்விரு கட்சிகளைத் தவிர
வேறு யாரும் இல்லை ஒரு நல்ல ஆட்சி அமைக்க! ஊழல்கள் இல்லாத அரசே இல்லை என்றாலும், என்ன வருத்தம் என்றால், இரு அரசுகளுமே
செய்த நல்ல விஷயங்களும், அறிமுகப்படுத்திய நல்ல திட்டங்களும் பின் செல்லும்
அளவுக்கு ஊழல்கள் முந்திக் கொண்டதுதான்!
எப்படி இருந்த தமிழகம்
இப்படி ஆகிப் போனதே என்று மருகும் நிலைமைக்கு ஆளானது தமிழகத்தின் தலைவிதி!
பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு ஆளுமைத் திறனும், செல்வாக்கும் உள்ளத் தலைவர்
இன்னும் கிடைக்கவில்லை! தற்போதைய ஆட்சியில் ஜெஜெ ஒரு சில நல்ல அரசியல் முடிவுகளை
எடுத்தார் என்பதும், அவருக்கு நல்ல ஆளுமைத் திறன் உண்டு என்பதும் மறுக்க முடியாத
உண்மை! என்றாலும் தனது பல தவறான செயல்களால் இன்று சிறையைத் தேடிக் கொண்டிருக்கிறார்!
தமிழகத்து மக்கள் எப்போது சினிமா சார்ந்த கவர்ச்சியும், செல்வாக்கும் உள்ள பிரமுகர்களை ஆதரிக்காமல், அவர்ளை ஆட்சியில் அமர்த்தாமல், அறிவு பூர்வமாகச்
சிந்தித்துத் தேர்தலை எதிர்கொண்டு, இல்லையென்றால் தேர்தலை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து
புரட்சி செய்து நல்ல ஒரு மாற்றுக் கட்சி, கட்சி மட்டுமல்ல, ஒரு நல்ல பண்பட்ட மனிதரைக்
கொண்டு வருகின்றார்களோ, தேர்ந்தெடுக்கின்றார்களோ அப்போதுதான் தமிழகத்திற்கு
விடிவுகாலம்! அப்படியொரு மனிதரோ, கட்சியோ இருக்கிறதா என்று நீங்கள் கேட்பது
கேட்கின்றது! பதில் இல்லை!
இன்று காந்திஜெயந்தி! தமிழகத்தை
வழி நடத்திச் செல்ல, மக்களின் மனதில் மதிப்பும், மரியாதையும் ஏற்பட்டு இடம் பிடிக்கும் அளவு, ஊழலில்லாத,
காந்தியின் தலைமை போன்றோ, காமராஜர், லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி போன்றோ, ஒரு
நல்ல தலைவர் இல்லையே என்ற ஒரு ஆதங்கத்தில்தான் இந்தப் பதிவு! இந்த இடுகையை, ஜெஜெ
குற்றவாளி என்று செய்தி பரவி அவர் கைது செய்யப்பட்டதும் எழுதிய போது அதில் மூழ்கி
விட்டதால், எனது வீட்டு வேலையில் சிறு உதவிகள் செய்யும் அஞ்சலி வரவில்லை என்பது
உரைத்தது! அவருக்குத் தொலைபேசினேன். எதிர்புறம் ஒரே அழுகைக் குரல்! “அக்கா அம்மாவ
இப்படி பண்ணிட்டாங்களே! பண்ணினவங்க உருப்படுவாங்களா?!! நான் இன்னும் வீட்டுல
சமைக்கவே இல்லை. வேலை செய்ய மனசே இல்லக்கா...வேலை ஓடமாட்டேங்குது! மனசு தாங்கலக்கா...அம்மாவ
ஜெயில்ல போட்டது! எவ்வளவு சாமி கும்பிட்டேன் தெரியுமா................................”
தங்களது அன்றாடத் தேவைகள்
பூர்த்தியாகாததைக் கூட புறம் தள்ளி, தங்களது பணம் தான் பறி போய் யாருடைய
சொத்துக்களாகவோ ஆகியுள்ளது என்பதைக் கூட புரிந்து கொள்ளாமல், தலைவர்களுக்காக அழுது
தங்கள் குடும்பங்களை இரண்டாம் பட்சமாக்கும், இப்படி எத்தனை அஞ்சலிகள், அஞ்சான்களோ?!! தலைவர்கள் நாற்காலியில் இருப்பதே இவர்களால்தான்
என்பதைத் தலைவர்களும் உணர்ந்தார்களில்லை! இதுதான் தமிழகத்தின் தலைவிதி! மாறுமோ தமிழகத்தின்
தலைவிதி?!!
பி.கு. நாங்கள் எந்தக் கட்சியையும், தலைவரையும் ஆதரிப்பவர்கள் இல்லை. தமிழகத்திற்கு ஒருநல்ல தலைவர் கிடைக்க மாட்டாரா என்ற ஆதங்கத்தில் தான் இந்தப் பதிவு
-கீதா (நான் முதலில் இன்னும் சிறிது காரசாரமாக எழுதியிருந்தேன். நண்பர் துளசியின் உதவியுடன் கொஞ்சம் காரத்தைக் குறைத்தேன் -நன்றி துளசி)
படங்கள்-இணையம்
படங்கள்-இணையம்
தமிழ் நாட்டு அரசியல், சினிமாவை அடிப்படையாகவே கொண்டிருக்கும் வரை விடிவு பிறப்பது கடினமே ! கனவு காணுவுவோம் காமராஜரை போல் ஒருவர் பிறக்க மாட்டாரா என்று ?
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே! தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும்!
நீக்குசிந்திக்க வைக்கிற பதிவு
பதிலளிநீக்குஇது என்பேன்
நன்றாக அலசி இருக்கின்றீர்கள்
சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்
சகோதரியாரே
பதிலளிநீக்குஅரசு நடத்த வேண்டிய கல்விக் கூடங்களை தனியார் நடத்திக் கொண்டிருக்கின்றனர்
தனியார் நடத்த வேண்டிய சாராயக் கடைகளை அரசு நடத்திக் கொண்டிருக்கிறது
அருமையான வார்த்தை நண்பரே,,,,
நீக்குதேவகோட்டையாரே முந்திவிட்டீர்! அதே அதே வார்த்தைகளைத்தான் சொல்ல நினைத்தோம் சொல்லி விட்டீர்!
நீக்குஉண்மையான வார்த்தைகள் கரந்தையாரே! நச்! மிக்க நன்றி சகோதரரே! தங்கள் கருத்திற்கு!
நீக்குதம 1
பதிலளிநீக்குஇவ்வளவு தீர்க்கமான கட்டுரை சமீபத்தில் வந்ததில்லை.நல்ல சிந்தனை.
பதிலளிநீக்குமிக்க நன்றி! தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும், பாராட்டிற்கும்!
நீக்குதொடர்கின்றோம் நண்பரே!
நீக்குஹிந்தி வேண்டாம் என்று சொன்னவர்கள் வீட்டுப் பிள்ளைகள் ஹிந்தி படித்து ஹிந்தியில் பேசத் தெரிந்தவர்கள். தொண்டர்களுக்குத்தான் அறிவுரை எல்லாம்!
பதிலளிநீக்குகாமாராஜர் ஆட்சியில் ஊழல் குற்றச் சாட்டுச் சொல்ல முடியவில்லை என்பதால் அவர் நிறத்தைச் சொல்லி அசிங்கப் படுத்துவதாய் நினைத்து அசிங்கப் பட்டார்கள்.
தமிழை வலியுறுத்தும் ஒரு ஜாதிக் கட்சியின் தலைவரின் பேரன்கள் பெயர்கள் என்ன என்பதும் அவர்கள் எந்தப் பள்ளியில் படிக்கின்றனர் என்பதும் நமக்குத் தெரியும்.
சினிமாக் கவர்ச்சியைத் தாண்டி நேர்மைக்காக ஒரு கட்சியை, சில தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்தக் காலம் வர வேண்டும். இலவசங்களும் டாஸ்மாக்கும் ஒழிய வேண்டும்.
அழுத அந்தத் தொண்டரின்மேல் தப்பில்லை. அவர்களின் அந்த அப்பாவி நம்பிக்கையை நல்லவிதமாக காப்பாற்றுவது அரசிவாதிகள் கையில் இருக்கிறது.
உங்கள் ஆதங்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.
உண்மை உண்மை அனைத்தும் உண்மையே! மிக்க நன்றி நண்பரே நீங்களும் நம்ம ஆதங்கத்துல சேந்ததற்கு! அரசியல்வாதிகல் ஏமாற்றுவது இந்த அப்பாவிகளுக்குத் தெரியவில்லையே!
நீக்குgood analysis madam!
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே! தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும், பாராட்டிற்கும்!
நீக்குசீரிய சிந்தனை. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு!
நீக்குநமக்குள்ள வாய்ப்பு யார் ரொம்ப நல்லவர்கள் என நல்லவர்களைத் தேர்வது அல்ல,
பதிலளிநீக்குஅது கெட்டவர்களில் யார் கொஞ்சம் குறைவாகச் செய்திருக்கிறார்கள் என்று தேர்தெடுப்பதாய் அமைந்து விட்டது.
திட்டம் போட்டுத் திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது..
மாட்டாத மாதிரி தப்பு செய்யனும் என்று இப்படிப்பட்ட ஓட்டைகளை எப்படித் திறமையாய்ச் சரிசெய்வது என்பதுதான் ஏனையோரின் கவலையாய் இருக்கும்.
நடுநிலையான அக்கறையுள்ள பதிவு!
நன்றி
ஆம்! மிகச் சரியே! சாக்கடையில் எந்தகச் சாக்கடை நல்ல சாக்கடை என்பது போல்!
நீக்குமிக்க நன்றி ஆசானே தங்களின் கருத்திற்கும், பாராட்டிற்கும்!
தேவையான கட்டுரை ....வாழ்த்துகள்
பதிலளிநீக்குமிக்க ந்னறி சகோதரி!
நீக்குஇது உங்களின் ஆதங்கம் மட்டுமல்ல தமிழக மக்களில் பெரும்பாலோனோரின் ஆதங்கமும் கூட !நல்ல வழி பிறக்குமா ..காலம்தான் பதில் சொல்லும் !
பதிலளிநீக்குத ம 5
ஆமாம்! ஜி! நீங்கள் சொல்லுவது போல் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!
நீக்குவணக்கம் நண்பரே,,, கோபமா ? அப்படீனா ? என்ன ? இதன் அர்த்தமும் விளக்கவுரையும் அளிக்கவும், எமது டேஷ்போர்டில் தங்களது பதிவு வரவில்லை தங்களின் அழைப்பு கண்டே வந்தேன் அடுத்து தங்களது லிஸ்டில் எமது பதிவின் பெயர்கூட இருக்கிறதே... என்னுடையது தங்களது டேஷ்போர்டில் வரவில்லையெனில் இது கண்டிப்பாக ஆஸ்திரேலியாக்காரருடைய கண்ணேறாகத்தான் இருக்கவேண்டும். பிறகு விசாரணை நடத்துவோம்.
பதிலளிநீக்குதென்னாட்டு காந்தியைப்பற்றிய பதிவு இவரைப்போலொரு மானிடன் இனி பிறப்பான் அதற்க்கு Mr.T.Sunamy அவர்கள் வரவேண்டும் அதற்க்குப்பிறகே சாத்தியப்படுமென நினைக்கின்றேன் இவருடைய புகைப்படத்தை போட்டுக்கொண்டு ஓட்டுப்பிச்சை கேட்பவர்களை காணும் போது நாமும் ஒரு குத்தியானந்தா ஸுவாமிகளைப்போல பிறக்கவில்லையே என ஏங்கிய துண்டு காரணம் இவர்களை துண்டு துண்டாக வெட்ட முடியவில்லையே என்ற ஆ’’தங்கம் ஒரு தங்க’’மான மனிதரை வைத்துக்கொண்டு இப்படியெல்லாம் என்பதை பார்க்கும்போது தாங்க’’ முடியவில்லை கர்மவீர்ரைப் பற்றிய எமது பதிவின் கண்டிப்பாக படிக்கவும் அவரின் சாதனைகள் பதிவு நீண்டு போனதால் அடுத்தும் வரும் இணைப்பு கீழே
http://www.killergee.blogspot.ae/2014/04/ma-mabl-mcom-bcom-msc.html
ஹிந்தி
வேண்டாம் வேண்டாம் என்று சொன்னார்களே... அரசியல்வாதி’கல்’ மக்க’’லு’க்குதானே… தன்மக்க’’ளு’’க்கு அல்லவே தங்களுக்கே தெரியும் எமது ஹிந்தமிழ் பதிவு அதனால் வேண்டாம் நான் கொதித்தெழுந்தேன் என்றால் ? அரசியல்வாதிகள் வாயில வாக்கரியைத்தான் போடுவேன்.
இன்றைய அரசியல்வாதிகளைப்பற்றி எழுதினால் எமது எழுத்துக்கள் இலக்கணம் மீறிவிடும் நானே இன்றைய ஹீரோ குன்காவின் வேலையால் திரைப்படக்கார்கள் செய்த கேனத்தனமான செயல்களைப்பற்றி ஒரு பதிவு தயார் தற்போது வேண்டாமென இனிய நண்பர் சாம்பசிவமும், CHIVAS REGAL சிவசம்போவும் சொன்னதற்காக நிறுத்தி வைத்துள்ளேன்.
இதில் காரமே இல்லையென்றே சொல்வேன் வேண்டுமானால் ? தங்களின் வேதனையை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
நன்றி For
நண்பர் & நண்பி.
மிக்க நன்றி தேவகோட்டையாரே! ஹப்பா பதிவா போட்டுடலாம் போல! சும்ம உங்கள தமாழ் பண்ணினா...ஸ்ரீபூவு தான் பயிற்சி எல்லம் கொடுத்துருப்பரே கோபம் வராம இருக்க......அப்புறம் என்ன...ஜி...நல்ல பின்னூட்டம் ஜி!
நீக்குபரவாயில்லை ஜி அந்த இடுகையை போட்டுருங்க...அதான் திரைப்படக்காரர்களின் செயல்கள் பற்றி....
அந்த சுட்டிய பார்க்கின்றோம் நிச்சமாக ஜி!
ரொம்ப தாங்க்ஸ்பா
கில்லர்ஜீ, உங்களுடைய கண்ணேறு தான், எனக்கும் துளசி சார்/கீதா சகோதரி அவர்களின் இந்த பதிவு டாஷ்போர்டில் தெரியவில்லை. கண்ணேறு இல்லையென்றால், நீங்கள் தான் என்னுடைய டாஷ்போர்டிலிருந்து அதனை எனக்கு தெரியாமல் சுட்டிருப்பீர்கள்.
நீக்குகில்லர் ஜி! முதலி ரொம்ப காரமாக எழுதியிருந்தேன்...அதான் கடைசில சொல்லியிருக்கேனே....துளசி அந்தக் காரத்தைக் குறைக்கச் சொல்லி உதவினார் என்று!
நீக்குசொக்கன் நண்பரே! இந்த ப்ளாகர் பல சமயங்களில் ரொம்பவே சதி செய்கின்றது! இந்தக் கில்லர்ஜி வலைக்குள் புகுந்து புகுந்து, மாயமாய் போய் அப்படிச் செய்கிறாரோ?!!! ஹஹஹஹ்ஹஹ்.....ஸ்ரீ பூவு என்ன சொல்கிறார்னு பார்ப்போம்....
நீக்குஉங்களோட கண்ணேறுதான்னு ஊர்ஜிதமாயிடுச்சு ஞானி ஸ்ரீபூவு சொல்லிட்டாரு உங்களுக்கு இந்தப்பதில் போதாது ஒரு பதிவே தயார் செய்யிறேன்.
நீக்குநீ கடவுளை பார்த்தது கிடையாது - அவன்
பதிலளிநீக்குகருப்பா சிகப்பா தெரியாது
இறைவன் ஒருவன் இருக்கின்றான் - இந்த
ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்.
அடிமைப் பெண் திரைப் படத்தில் இடம்பெற்ற இந்த பாடலின் வரிகளுக்கு
முற்றிலும் பொறுத்தமான் ஒரே ஒரு தலைவர் கர்மவீரர் காமராஜர் மட்டுமே என்று நான் மார்தட்டி சொல்லுவேன். நிஜமான அரசியலை வெளிச்சம் போட்டு காட்டிய இந்த பதிவினை எனது அறிவு பெட்டகத்துக்குள்பாதுகாத்து வைத்துக் கொண்டேன். நன்றி!
காமராஜர் பற்றி நான் எழுதிய ஒரு சிறு கவிதை இதோ
ஏழைகளின் கல்விக்கு கண் தந்த
கருப்புக் கண்ணன்!
வாழை போல் தம்வாழ்வை மக்களுக்கு
ஈந்த மன்னன்
கூழைக் குடித்து குடிசையில் வாழ்ந்த
ஏழைத் தலைவன்
தாகம் தீர்க்க தண்ணீர் திட்டம் வகுத்த
தங்கத் தமிழன்
இருண்ட தமிழகம்
வறண்ட தமிழகம்
இவரது ஆட்சியில் இல்லை
இருந்தும் மக்கள் தோல்வியை தந்தது
கொடுமையின் எல்லை!
காமாஷி(விளக்கு) இல்லாத
இல்லங்கள் இல்லை!
காமராஜர் இல்லாமல்
கல்வி ராஜ்யம் இல்லை.
தூய்மையும் வாய்மையும்
வகுத்து வாழ்ந்த
தூயவரை வாழ்த்துவோம் வாரீர் வாரீர்!
புதுவை வேலு(kuzhalinnisai.blogspot.com)
அருமையான கவிதையில் பின்னூட்டம் ஐயா! மிக்க நன்றி ஐயா! தங்களது கவித்துவ பின்னூட்டத்திற்கு!
நீக்குஇது எல்லோருடைய ஆதங்கம் தான்.
பதிலளிநீக்குஅனைவருக்கும் பொதுவாய் அலசி ஆராய்ந்து
உண்மைகளைச் சொன்ன விதம் அருமை துளசிதரன் ஐயா.
மிக்க ந்னறி சகோதரி! தங்கள் கருத்திற்கும், பாராட்டிற்கும்!
நீக்குஅப்பா!! இவ்வளவு விரிவான ஒரு கட்டுரையா!!! ஆச்சிரியமாக இருக்கிறது.
பதிலளிநீக்குஉண்மை தான் இந்த மாதிரி அஞ்சலிகள் இருக்கும்வரை தமிழ்நாடு முன்னேறுவது - ?
கரந்தையார் சார் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.
இன்றைய வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் . அந்த அறிமுகம் மூலம்கத்தான் நான் இந்த பதிவை படிக்க முடிந்தது.
மிக்க நன்றி சொக்கன் நண்பரே! என்ன செய்ய தமிழ் நாட்டின் விதி அப்படியாகிப் போனது!
நீக்குஆம் நங்களும் கண்டோம் ! நீங்கள் சொல்லித்தான் வலைச்சரத்தில் எங்கள் தளம் உள்ளதையும், தங்களதையும் கண்டோம். வாழ்த்துக்கள்!
தங்களின் ஆதங்கத்தில் அர்த்தம் இருக்கிறது; நியாயம் இருக்கிறது. இந்த ஆதங்கம் என் போன்ற பலருக்கும் உண்டு.
பதிலளிநீக்குநம்மவரின் நலம் கருதி எழுதப்பட்ட தரமான, பயனுள்ள பதிவு.
மனப்பூர்வ பாராட்டுகள்.
மிக்க நன்றி நண்பரே! தங்கள் மனப்பூர்வமான பாராட்டுகளுக்கு!
நீக்குஉண்மையில் 100 சதவீத நேர்மையாளர்களை மக்கள் விரும்புவதில்லை.
பதிலளிநீக்குஅதென்னவோ உண்மைதான் மிக்க நன்றி! நண்பரே!
நீக்குஉங்கள் ஆதங்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன்! அலசலும் ஆழ்ந்த விளக்கமும் அருமை!தலைவிதி மாறாது!
பதிலளிநீக்குமிக்க நன்றி புலவர் ஐயா! தங்கள் கருத்திற்கு!
நீக்குவலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி! ஜி!
நீக்குஅப்போதைய காலகட்டத்தில் ஹிந்தியை திணிக்க முயன்றதால் தான் தடுத்தோம், எதிர்த்தோம் என்று திராவிட தலைவர்களில் எவரோ ஒருவர் எழுதிய கட்டுரையில் படிக்க நேர்ந்தது. எது எப்படி போனாலும் எங்களுக்கு ஹிந்தி அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டாமல் போனது தான் உச்சம்.
பதிலளிநீக்குஉண்மையில் நிறைய விசயங்களை அலசி இருக்கின்றீர்கள், இரண்டு பதிவாக ;கூட போட்டிருக்கலாம், இன்னும் கொஞ்சம் ஆழமாக சென்றிருந்தால்.
மேலே முரளி சார் சொன்னது போல் 100 சதவீத நேர்மையான நபர்களை எப்போதும் மக்கள் நம்பியதில்லை, விரும்புவதுமில்லை. காலங்கள் அப்படி ...
நேர்த்தியான பதிவுக்கு என் வணக்கங்கள் ....
மிக்க நன்றி அரசன்! இனி இரண்டு பதிவாக இட நேர்ந்தால் அப்படியே செய்கின்றோம். நன்றி அரசன்!
நீக்குமிக்க நன்றி ரூபன் தம்பி! கண்டுவிட்டோம்!
பதிலளிநீக்கு